Search This Blog

2.12.09

அய்யப்பனும் - அயோக்கியத்தனமும்!அய்யப்பனுக்கு அபார சக்தியிருக்கிறது என்றும், அய்யப்பனுக்காக விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலை சென்று வந்தால் தீராத நோய்கள் எல்லாம் தீருமென்றும், தீவினைகள் எல்லாம் அகலும் என்றும், சதா பிரச்சாரம் செய்தும் குறுந்தகடுகளை வெளியிட்டுக் கொண்டும் இருக்கின்றனர்.

ஆனால், நடப்பது என்ன? அய்யப்பப் பக்தர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி மரணம் என்கிற பரிதாப செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மாரடைப்பு ஏற்பட்டு பக்தர்கள் சபரிமலையிலேயே மரணம் என்றும் ஏடுகள் செய்திகளைப் போடுகின்றன. போதும் போதாதற்கு அய்யப்பன் கோயிலில், பிரத்தியேகமாக உள்ள மருத்துவர்கள் இப்பொழுது அறிக்கையினைக் கொடுத்துள்ளனர்.

இதய நோயாளிகள், ரத்த அழுத்தம், கொழுப்பு (கொலஸ்ட்ரால்) பாரம்பரிய இதயநோய் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், 55 வயதுக்குமேல் ஆனவர்கள், சபரிமலை ஏறும்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

பயணத்திற்குமுன் மருத்துவரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளவேண்டும். இதயத்தின் செயல்பாட்டைத் தெரிந்துகொண்ட பின்னரே பயணம்பற்றி முடிவெடுக்கவேண்டும்.

அவ்வாறு வரும்போது, வியாதிபற்றிய குறிப்புகளும், சாப்பிடும் மருந்துபற்றிய குறிப்புகளும் டைரியில் எழுதிக்கொண்டு வரவேண்டும்.

மலை ஏறுவதற்கு முன்னர் பம்பையில் அதிக உணவு சாப்பிடக் கூடாது. லேசாக சாப்பிட்டுவிட்டு மலையேறவேண்டும். வயிறு நிறைய சாப்பிட்டால் இதயத்தின் வேலைப் பளுவும் கூடும். மலை ஏறும்போது நெஞ்சு வலியோ, மூச்சுத் திணறலோ, அசாதாரண நிலையோ ஏற்பட்டால், உடனடியாக மலை ஏறுவதை நிறுத்தி, மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறவேண்டும். ஏறும்போது நாடித் துடிப்பு நிமிடத்துக்கு 140 க்குமேல் இருக்கக்கூடாது.

மலையேறும்போது அய்கோர்டின் மாத்திரையை அதிகமாக நாக்குக்கு அடியில் வைப்பதால் ரத்த அழுத்தம் குறைந்து தலை சுற்றல் போன்றவை ஏற்படும்.

மேலும் வழக்கமாக மருந்து சாப்பிடுபவர்கள் மலையேறும்போது ரத்தத்தில் சர்க்கரை குறைந்து உடல் தளர்ச்சி ஏற்படலாம். இதற்காக அவர்கள் கையில் குளுகோஸ் வைத்துக் கொள்ளவேண்டும்!

இவ்வாறு அய்யப்பன் கோயில் சன்னிதான மருத்துவர் ஹரீந்திரபாபு கூறியுள்ளதாக தினமலரே (1.12.2009) கூறியுள்ளது.

இது முழுக்க முழுக்க அய்யப்பன் சக்தியைக் கேலி செய்வதாக இல்லையா? தன்னை நாடிவரும் பக்தர்களின் உயிரைக் கூடக் காப்பாற்ற முடியாத கடவுள் அய்யப்பன், சக்தி வாய்ந்தவன் என்றும், பக்தர்களின் குறைகளை, கஷ்டங்களை, நோய் நொடிகளை, பாவங்களைப் போக்குபவன் என்றும் சொல்லுவதெல்லாம் பச்சையான பித்தலாட்டம் அல்லவா?

வில்லாளி வீரனே

வீரமணி கண்டனே,

தாங்கி விடப்பா

ஏந்தி விடப்பா

தூக்கி விடப்பா

ஏற்றி விடப்பா

என்று அய்யப்ப சரணம் பாடிச் செல்லும் பக்தர்களைக் காப்பாற்றும் சக்தி அய்யப்பனுக்கு இல்லை என்பதைத்தானே சன்னிதான மருத்துவரின் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

எந்தப் பக்தராவது இது கடவுளை அவமதிக்கும் செயல் என்று சொல்லவில்லையே, ஏன்?

இவற்றையெல்லாம்விட மிகக் கேவலமானது அய்யப்பன் பெயரால் நடத்தும் மகரஜோதி பித்தலாட்டம்!

கேரள மின் வாரியத்தைச் சேர்ந்த ஊழியர்கள் செயற்கையாக சூடத்தைக் கொளுத்திக் காட்டுகின்றனர் என்பதை கேரள மாநில முதலமைச்சர், இந்து அறநிலையத் துறை அமைச்சர், அறக்கட்டளைத் தலைவர், கோயில் தலைமை அர்ச்சகர் வரை ஒப்புக்கொண்ட பிறகும் மகரஜோதியை அனுமதிப்பது எந்த வகையில் சரி?

பக்தியின் பெயரால் எந்தப் பித்தலாட்டத்தையும் அரசு அங்கீகாரத்தோடு அரங்கேற்றலாம் என்றால், பக்தியின் யோக்கியதையையும், அரசின் தன்மையையும் தெரிந்துகொள்ளவேண்டாமா?

கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன் என்று தந்தை பெரியார் ஏன் சொன்னார் என்பது இப்பொழுது விளங்குகிறதா?

-----------------------" விடுதலை" தலையங்கம் 2-12-2009

1 comments:

மணிகண்டன் said...

ஐயப்பன் மருத்தவர் ரூபத்தில் வந்து இந்த வார்னிங் கொடுத்துள்ளார். ஆதலால் தான் இதை யாரும் பித்தலாட்டம் என்று கூறவில்லை.