Search This Blog

19.12.09

பெரியாரின் இறுதி முழக்கத்திலிருந்து


இறுதி முழக்கம்!

இதே நாளில், டிசம்பர் 19 இல் தான் (1973) தந்தை பெரியார் இறுதி முழக்கத்தை வழங்கினார். அதுவும் பார்ப்பனர் அல்லாதார் இயக்கமான தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் என்னும் நீதிக்கட்சியின் முக்கிய தோற்றுநர்களுள் ஒருவரான தியாகராயர் பெயரில் வழங்கும் சென்னை தியாகராயர் நகரில் அந்த இறுதி முழக்கத்தை, மரண சாசனத்தை அளித்தார்.

‘மரண சாசனம்’ என்று குறிப்பிடுவது ஏதோ சம்பிரதாயமான தன்மையில் அல்ல; அந்தவுரையை இப்பொழுது படித்தாலும், நாளை சாகப் போகும் மனிதன் கடுமையாகச் சிந்தித்து தயாரித்த ஆவணம்போல் இருப்பதை அறிய முடியும். ஒவ்வொரு சொல்லும், கருத்தும், தகவலும் அப்படி ஒளிவீசுகின்றன.

இன்றைக்கு இராமனைப்பற்றிப் பேசவேண்டிய அவசியம், தன்மான இயக்கத்தை, ‘திராவிட இயக்கத்தைத்’ தாண்டிய மற்றவர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

2400 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்ட, மக்கள் வளர்ச்சிக்கு, பொருளாதார உயர்வுக்கு, வேலை வாய்ப்புக்குப் பெரிதும் உதவிடும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை, தொழில்நுட்ப விற்பன்னர்கள் ஆய்வு செய்து கொடுத்த அறிக்கையின் அடிப்படையிலான ஒரு திட்டத்தை 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ராமன் என்றவன் குதிரைக்கும், பெண்ணுக்கும் பிறந்தான்; அவன் குரங்குகள், அணில்கள் உதவியால் ஒரு பாலம் கட்டினான்; அந்தப் பாலத்தை இடித்துவிட்டு சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று சந்து முனைகளில் மட்டுமல்ல; உச்சநீதிமன்றம்வரை சென்று வழக்குத் தொடுக்கிறார்கள்; உச்சநீதிமன்றமும் அதனைப் பரி-சீலிக்கிறது என்றால், இன்றைக்கு 36 ஆண்டுகளுக்குமுன் தந்தை பெரியார் கொடுத்த அந்த இறுதி முழக்கத்தின் அருமையை அவசியத்தை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

அந்த உரையின் ஒரு பகுதி இதோ:

‘‘ராமாயணத்தைப்பற்றி, ராமனைப்பற்றி இன்று எல்லோரும் சிந்திக்கிறார்கள்; கடவுள் என்று நினைக்கிறார்கள். அந்த ராமாயணத்திலே எழுதியிருக் கிறான். ராமன் யாருக்கடா பிறந்தான்? அந்த அப்பனுக்கு பிள்ளை இல்லாமல் போய் ராமனுடைய அப்பன் தசரதன், அவனது பெண்டாட்டியைப் பார்ப்பனர்கள் மட்டுமல்ல; முதலில் குதிரையைவிட்டு, அவளுக்கு உணர்ச்சியை உண்டாக்கிப் பிறகு பார்ப்பனர்களை விட்டான். அவன் கலவி செய்தான். பாலகாண்டத்தில் பாருங்கள். யாகம் செய்த உடனே அந்தப் பொம்பளையிடம் குதிரையை விட்டான். உயிருள்ள குதிரையாய் இருந்தால், ஏதாவது வம்பு செய்யும் என்று குதிரையைச் சாகடித்து, பிறகு குதிரையினுடைய குறியை எடுத்து அவளிடம் பொருத்தி உணர்ச்சி உண்டாக்கினான் என்று எழுதி வைத்திருக் கிறான். “ஞானசூரியன்’’ என்ற புத்தகம் இருக்கிறது. அதை வாங்கிப் படியுங்கள். பிறகு பார்ப்பானைக் கலவி செய்ய அனுமதித்தான்.

இதைப்பற்றி சொல்லவேண்டியிருக்கிறது. ராமனுடைய மனைவியை என்ன செய்தான்? ராவணன் அவளை கர்ப்பமாக்கி அனுப்பினான். அதைப் புருஷன் ஒத்துக்கொண்டான். அவளும் ஒத்துக்கொண்டாள். இதிலே ரகசியம் ஒன்றுமே இல்லையே. சாமி பெண்டாட்டியைப் பற்றித்தானே இப்படி எழுதியிருக்கிறான். மற்ற மற்ற கடவுள்களைப்பற்றிச் சொல்ல வேண்டுமா? ஆகவே, நாங்கள் சொல்வது சுயநலத் துக்காகச் சொல்லவில்லை; உங்களை ஏய்ப்பதற்காகப் பொய்யும், பித்தலாட்டமும் இட்டுக்கட்டிக் கூறவில்லை. எல்லா ஆதாரங்களையும் கையில் வைத்துக்கொண்டு தான் பேசுகிறோம். உள்ளபடியே அவர்கள் 2000 வருடத்திற்குமுன்பு மடையராக இருந்தார்கள். சிந்திக்க வாய்ப்பு இல்லை, அன்றைக்கு, உண்டாக்கினான் இந்தக் கதையை! அன்றைக்கு அவனுக்கு அக்காள், தங்கை இல்லை; இந்த சிந்தனை இல்லை; அதற்கு ஏற்றாற்போலக் கடவுளையும் உண்டாக்கினான். பிரம்மாவை உண்டாக்கியவன் என்ன நினைத் திருப்பான்?’’

என்று பேசினார் அய்யா.

மீண்டும் தந்தை பெரியார் அவர்களின் இறுதி முழக்கத்தில் ஒளிவிடும் கருத்து விளக்கங்களை ஆளுக்கொரு மெழுகு வத்தியாக ஒவ்வொரு தமிழரும் ஏந்திச் சென்று, கடைகோடி மனிதனின் அறியாமை இருளை அலறியடித்து ஓடச் செய்யவேண்டாமா?

இன்னும் அதைவிடக் கூடுதலாக, வட இந்திய மக்கள் மத்தியிலே, மதச் சார்பற்ற சக்திகள், இடதுசாரிகள் எடுத்துச் சென்று கொடுக்கவேண்டாமா?

எதை எடுத்தாலும் ஆன்மிக, மதச் சிந்தனையோடு பிரச்சினையை அணுகினால் நாடு எந்த யுகத்தில் உருப்பட்டு முன்னேறுவது?

மதமும், கடவுளும், வழிபாடும் அவரவர் பூஜையறையில் எப்படியோ இருந்துவிட்டுப் போய்த் தொலையட்டும்!

அது மக்களின் வாழ்க்கை ஆதாரப் பகுதிகளில், முன்னேற்ற திசையில் முட்டுக்கட்டை போடுமேயானால், “மூர்க்கத்தனமாக’’ அதனை நொறுக்கித் தள்ளி முன்னேற வேண்டாமா?

தந்தை பெரியார் அவர்களின் அந்த இறுதி முழக்கம், மரண சாசனம் அதைத்தான் நமக்குச் சொல்கிறது. இன்னும் ஒருமுறை, ஒருமுறை ஏற்கெனவே அதனைப் படித்தவர்கள்கூட படிக்கவேண்டும்; ஒவ்வொரு முறையும் அதனைப் படிக்கும் பொழுதெல்லாம் நமது அறிவுப் பக்குவத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப, மேலும் கூர்மையாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

வாழ்க பெரியார்!
------------------ “விடுதலை” தலையங்கம் 19-12-2009

3 comments:

KULIR NILA said...

Periyar Mulangunathellam irukkattum

Indraya pengala pathi ippo periyar irunthal enna solli iruppar endru oru pathivu podunga

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

KULIR NILA

நம்பி said...

//Indraya pengala pathi ippo periyar irunthal enna solli iruppar endru oru pathivu podunga//

பெண்கள் எவ்வளவோ முன்னேறிட்டாங்க!.... ஆண்கள் இன்னும் திருந்தமாட்டேங்கறாங்களே! என்று சொல்லியிருப்பார்.