Search This Blog

8.12.09

ஈழப் பிரச்சினையும், எஸ்.எம். கிருஷ்ணாவின் கருத்தும்!



நாடாளுமன்ற, மாநிலங்களவையில் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து நேற்று விவாதம் நடந்துள்ளது. எதிர்க்கட்சியினர் ஆக்கப்பூர்வமான வகையில் பல கருத்துகளை எடுத்து வைத்துள்ளனர்; இந்திய அரசின் அணுகுமுறைகளைக் கண்டனம் செய்துள்ளனர்.

அவற்றுக்கெல்லாம் பதிலளித்த இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் பதிலிலிருந்தே இந்திய அரசு எந்தெந்த தவறுகளை எல்லாம் செய்திருக்கிறது என்பதை உணர முடிகிறது.

‘‘இலங்கை நமது நட்பு நாடு. இந்தியாவின் பாதுகாப்புக்காக இலங்கையுடன் சுமூக உறவைக் கடைப்பிடித்து வருகிறோம். நாட்டு நலனுக்காக இலங்கையுடன் ராணுவ ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளோம்’’ என்று பேசியிருக்கிறார்.

இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் தமிழர்களின் தொப்புள்கொடி உறவுக்குச் சொந்தமான ஈழத் தமிழர்களை முற்றிலும் ஒழித்துக்கட்டும் ஒரு பாசிசப் பணியில் ஓர் அண்டை நாடு ஈடுபட்டு வருகிறது. அது ஓர் இனப்படுகொலைதான் என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியே வெளிப்படையாக நாடாளுமன்றத்திலேயே கூறியிருக்கிறார் (16.8.1983).

இலங்கையில் தமிழினம் என்ற ஒன்று அடையாளமில்லாமல், மிச்ச சொச்சமின்றி முற்றிலுமாக அழித்து ஒழிக்கும் வேலையில், அரச பயங்கரவாதம் என்பதன் முழு அர்த்தத்தையும் வெளிப்படுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கே தெரிந்திருக்கிறது.

இந்த நிலையில், இலங்கை நட்பு நாடு என்றும், இந்தியாவின் பாதுகாப்புக் கருதி இந்தியா நடந்துகொண்டு வருகிறது என்று சொல்லுவதெல்லாம் எவ்வளவு பெரிய கொடுமை!

இந்தியாவின் பாதுகாப்புக் கருதி ஓர் இனத்தையே பலி கொடுக்கும் நிபந்தனையை இந்தியா ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதுதானே இதன் திரண்ட பொருள்.

எப்பொழுதாவது இலங்கை, இந்தியாவின் நட்பு நாடாக, இந்தியாவின் பாதுகாப்புக்கு நேசக்கரம் நீட்டியதாக நடந்துகொண்டு இருக்கிறதா? சீன ஆக்கிரமிப்பின்போதும் சரி, இந்தியா பாகிஸ்தான் சண்டையின் போதும் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விட்டதே!

இப்பொழுதுகூட, இலங்கையில் சீனாவுக்குக் கிடைத்திருக்கும் இடம் எத்தகையது என்பது கண்ணும், கருத்தும் உள்ளவர்கள் எவரும் எளிதில் அறிந்துகொள்வார்கள். பாதுகாப்பு என்ற கண்ணோட்டத்தில் பார்த்தாலும், இந்தியா நடந்து கொண்டிருக்கும் முறை புத்திசாலித்தனமானதல்ல.

தமிழர்கள் அழிப்புக்கு இந்தியா துணை போகவில்லை என்று சொல்வதை உலகத் தமிழர்களும், மனிதநேயவாதிகளும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

இலங்கை அதிபரைப் போர்க் குற்றவாளியாக உலக நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கைக்கு இந்தியா அய்.நா.வில் எந்தப் பக்கம் நின்றது?

இலங்கை இராணுவம் கைது செய்யப்பட்ட தமிழர்களை எப்படியெல்லாம் சித்திரவதை செய்து கொன்றது என்பதை இங்கிலாந்து நாட்டின் அலைவரிசை 4 (சேனல்_4) அம்பலப்படுத்தவில்லையா?

உடலில் ஒரு கையளவு துணிகூட இல்லாமல் நிர்வாணப்படுத்தப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு, பூட்சு காலால் உதைக்கப்பட்டு, அதன்பின் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற கோரக்காட்சிகளை அது வெளிச்சத்துக்குக் கொண்டுவரவில்லையா?

அதனை வீடியோவாக எடுத்து பரப்பிய அமைப்பு எது தெரியுமா? இலங்கையில் உள்ள ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் (Journalists of Democracy in Srilankaீ) அம்பலப்படுத்தினார்களே!

இவற்றையெல்லாம் அறிந்து வைத்திருந்தபோதிலும், அய்.நா.வில் இலங்கைக்குப் பச்சைக் கொடியை இந்தியா அசைத்ததை உலகத் தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.

இந்தியா தன் பக்கம் நியாயம் உள்ளது என்று நிரூபிக்க முயலும்போதெல்லாம் மேலும் மோசமான நிலையை அடைகிறது. அதைவிட எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு உருப்படியாக எதையாவது செய்யும் வேலையில் இறங்குவதுதான் இன்றைய காலகட்டத்தில் புத்திசாலித்தனமானதாகும்.

-------------------"விடுதலை" தலையங்கம் 8-12-2009

0 comments: