Search This Blog

18.12.09

வாழ்வில் சலிப்புகள் ஏன்? தொல்லைகள் ஏன்?

அறிஞர் அண்ணாவின் சிந்தனை ஊற்றுப் பெருக்கம் இதோ!

முல்லை இலக்கியக் களஞ்சியத்திலிருந்து தருகிறோம். படித்துச் சுவைப்போம்:

‘‘வாழ்க்கை; அதில் பல தொல்லைகள்!’’ ஏன்? அதைத் தீர்ப்பது எப்படி என்ற ஏக்கம். ஏன் வந்தது இப்படி?

நாம் வாழ்கிறோம். எதற்கு என்று சிந்தியாது, ஏன் வாழ்கிறோம் என்ற கவலையின்றி, எப்படி வாழ்கிறோம் என்று எண்ணிப் பாராமல் வாழ்கிறோம். ஏனோ வாழ்கிறோம், எதற்கோ வாழ்கிறோம், எப்படியோ வாழ்கிறோம், யாருக்காகவோ வாழ்கிறோம். பிறந்தோம், அதனால் வாழ்கிறோம். சாவதற்கு வாழ்கிறோம். இது வாழ்க்கையா? இல்லை. நாம் கேட்கிறோம் பலர் ‘வாழ்வதை விட சாவதே மேல்’ என்று கூறுவதை! வாழ்வில் இத்தகைய சலிப்புகள் ஏன்? தொல்லைகள்தான் ஏன்? எப்படி வருகிறது, வராதிருக்க வழி என்ன?

இன்று இந்நாட்டில் வாழ்பவர்களில் பெரும் பகுதியினர் வாழ்க்கையில் சலிப்புள்ளவர்களே. பாட்டாளிகள், பஞ்சாலைத் தொழிலாளிகள், அன்றாடக் கூலிகள், நெசவுக்காரர்கள், நிலத்தில் உழைக்கும் உழவர்கள் முதலிய எல்லோரும் ‘‘வாழ்வதை விடச் சாவதே மேல்’’ என்கிறார்கள். ஏன்?

ஒரு குமாஸ்தா இரவு ஒன்பது அல்லது பத்து மணிவரை கடையில் உழைத்துவிட்டு வீடு திரும்புகிறார். இல்லக்கிழத்தி வீட்டில் இல்லாத சாமான்கள் ஏதாவது கொண்டு வந்தாரா என்று கேட்கிறாள். குழந்தை பட்டுச் சொக்காய் கேட்கிறது. பையன், பள்ளிச் சம்பளத் தேதி கடந்து போனதைக் கவனமூட்டுகிறான். இந்த நிலையில் அவருக்குப் போதிய வருமானம் இல்லை வேண்டியதை வாங்க. அவர் இரவு தலையை முழங்கை மேல் வைத்து அதைக் கண்ணீரால் நனைப்பார். ‘சே, வாழ்வதைவிட சாவதே மேல்’ என நினைக்கிறார். இது போன்ற வாழ்க்கையில் பல கட்டங்களில் பலர் எண்ணுகின்றனர். சிலர் துணிந்து செயலிலும் காட்டுகின்றனர்.

இந்தச் சலிப்பு ‘வாழ்வதைவிட சாவது மேல்’ என்ற எண்ணம் இந்த நாட்டைத் தவிர வேறு எங்கும் இல்லை. மேனாட்டவர்கள் திருப்தியோடு வாழ்கின்றனர்; வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்கள் ஏன் வாழ்கிறோம் என்பதை அறிந்திருக்கின்றனர். எதற்கு வாழ்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எப்படி வாழ்கிறோம். வாழவேண்டுமென்பதற்குச் சிறந்த இலட்சியமுண்டு. யாருக்காக வாழ்கிறோம் என்பதைத் தெரிந்திருக்கிறார்கள். இங்கு?

சோமசுந்தரம் வாழ்கிறார். நல்ல கனவான்தான்; கவலைக்கு இடமில்லை. அவரைக் கேளுங்கள், ‘‘நீ ஏனப்பா வாழ்கிறாய்; என்ன இலட்சியம்?’’ என்று. அவர் கூறுவார் : என்னவோ நம்மைப் பற்றிக் கவலை இல்லை. அக்கடான்னு போயிடலாம். ஆனால் நம்ப பெண் கமலா இருக்கிறதே, அதற்கு 12 வயசு ஆகிறது. அதுக்கு எங்காவது நல்ல இடத்திலே ஒரு மூணு முடி போட்டு வைச்சுட்டு, ஏதோ நம்ப பையன் முருகேசனையும் ஒழுங்காப் பண்ணிவிட்டா, எனக்கு வாழ்றதைப் பற்றிக் கவலையே இல்லை. பேசாம எப்ப வேணுமானாலும் சாகலாம். நான் கண் மூடறதுக்குள்ளே நம்ம பசங்க கல்யாணத்தைக் கண்ணாலே பார்த்துடணும்’’ என்று. இது அவருடைய வாழ்க்கை. அவர் மனைவியைக் கேட்டால், ‘‘என்னவோ அம்மா. இப்பல்லாம் வரவர காலமே கெட்டுப் போறது. எது எப்படியானாலும் நான் அவர் இருக்கும்போதே மஞ்சள் குங்குமத்தோடே போயிட்டேனா ரொம்ப நிம்மதி. இந்த வாழ்வு என்றைக்குத்தான் சதம்?’’ என்ற முறையிலே மாறும். இது இவருடைய வாழ்க்கையின் இலட்சியம்.

சோமசுந்தரத்தின் மகன் முருகேசனைப் பார்த்து ‘‘ஏனப்பா, முருகேசா, உனக்கு வாழ்வில் விருப்பமா? எதற்காக நீ வாழ்கிறாய்?’’ என்று கேளுங்கள். அவன் பள்ளியில் ஒரு வகுப்பில் இரண்டு தடவை தேறி இருக்கமாட்டான். ‘சே என்ன வாழ்வு! என்னமோ படிக்கவில்லையாம், பாஸ் பண்ணலையாம். குடி முழுகிப் போச்சாம். அப்பப்பா! எங்க அப்பன் படுத்தற பாட்டைப் பார்த்தால் எங்காவது பேசாமல் குளம் குட்டையிலே விழுந்து சாகலாம் போல இருக்கிறது’ என்றுதான் கூறுவான். இவன் வாழ்க்கையின் போக்கு இப்படி!

இதுபோலத்தான் இங்கு வாழ்க்கை. அதன் இலட்சியம் ஆளுக்கு ஆள், நேரத்திற்கு நேரம், வேளைக்கு வேளை மாறுகிறது; மாறிக்கொண்டே இருக்கிறது.

நான் இந்தக் குறிப்பிட்ட இலட்சியங்களுக்காக வாழ்கிறேன். அவர் அந்தக் குறிப்பிட்ட இலட்சியங்களுக்காக வாழ்கிறார் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறமுடியவில்லை எவராலும். காரணம்? நாம் ஏன் வாழ்கிறோம்? எதற்கு வாழ்கிறோம்? எப்படி வாழ்கிறோம்? யாருக்காக வாழ்கிறோம்? என்ற நிர்ணயமில்லை. அது மட்டுமல்ல வேடிக்கை! நாம் ‘‘வாழ்க்கை’’ என்றால் என்ன என்றே நிர்ணயம் செய்யாமல் இருக்கிறோம். ‘இதுதான் வாழ்வு, இப்படி வாழ்வதுதான் வாழ்க்கை’ என்ற தீர்மானமில்லை நம்மிடம். இது மிக மிக வேடிக்கை. ‘வாழ்க்கை’ பற்றி சரியான விளக்கம் தெரியாமலே, தெரிந்து கொள்ளாமலேயே வாழ்வது தவறு. மேல்நாடுகளில் அவ்விதமில்லை.

நம் நாட்டில் வாழ்வு என்பது பற்றி கூறப்படும் விளக்கங்களைக் கேட்டாலே மிக வேடிக்கையாக இருக்கும்.

வேதாந்தி, ‘‘வாழ்வாவது மாயம், இது மண்ணாவது திண்ணம்; காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா’’ என்று கூறுகிறான்.

சித்தாந்தி, ‘‘வாழ்க்கை ஒரு ஆட்டம் ஆடும் வரையில்தான் ஆடும். பின் விழும். பம்பரத்தைக் கயிற்றால் ஆட்டினால் ஆடுகிறது. அது போல் நாமும் வாழ்வில் ஆடுகிறோம்’’ இது திடீரென்று நின்றுவிடும் என்று சொல்கிறான்.

மிதவாதியோ, ‘‘ஆண்டவன் ஆட்டி வைப்பது போல் நாம் ஆடுகிறோம்’’ என்று விளக்கம் தருவான். தேசியவாதி, ‘‘அன்னியன் நம்மை ஆட்டுகிறான்’’ என்று புகல்வான். ஆனால் என் போன்ற பகுத்தறிவுவாதிகள், ‘‘நம்முடைய பழங்கால சமயங்கள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள், கோட்பாடுகள் முதலியவைதான் நம்மை, நம் வாழ்வை, வாழ்க்கையின் இலட்சியத்தை, வாழ்க்கை முறையை ஆட்டுகின்றன’’ என்று கூறுவர்.

‘‘வாழ்க்கை என்றால் என்ன என்று நிர்ணயிக்கப்படவில்லை. சர்க்கரை இனிக்கும், வேம்பு கசக்கும், மா பிஞ்சில் துவர்க்கும், காயில் சில புளிக்கும், கனியில் இனிக்கும்’’ என்று நிர்ணயித்துக் கூறுவோம். அது போலவே ‘‘வாழ்க்கை’’ என்றால் என்ன என்று நிர்ணயிக்கப்படவில்லை. நிர்ணயிக்க நம்மிடம் உரைகல்லும் இல்லை. இந்த நிலையில் நாம் இன்று வாழ்கிறோம். ‘‘வாழ்வு’’ பற்றி ‘‘நிர்ணயமில்லாமல் வாழ்வது முறையா? அது வாழ்க்கையா?’’

அண்ணாவின் இந்தச் சிந்தனை ஊற்றுப் பெருக்கத்தில் குளியுங்கள் -சிந்தியுங்கள் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற முடிவுக்கு வாருங்கள். கவலையின்றி மகிழ்ச்சியோடு வாழுங்கள்.

---------------18-12-2009 “விடுதலை” யில் கி.வீரமணி அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள்

0 comments: