Search This Blog

21.12.09

தாழ்த்தப்பட்ட சமூக நீதிபதி என்றால் சேற்றை வாரி இறைத்து மகிழலாம் என்ற நினைப்பா?

‘‘லஞ்சம் வாங்கினார்; திறமையற்றவர்’’ என்று நீதியரசர் பி.டி. தினகரன் நிரூபிக்கப்பட்டாரா?
திட்டமிட்டு அவமதிக்கும் பார்ப்பன சக்திகள், ஊடகங்கள்
தாழ்த்தப்பட்டோர், சமூகநீதிப் போராளிகள் வேடிக்கை பார்க்கக் கூடாது

.தமிழர் தலைவர் அறிக்கை


தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதி பி.டி. தினகரன்மீது பழி சுமத்தும் சக்திகளை அடையாளம் காட்டி அறிக்கை விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலை வர் கி. வீரமணி. அறிக்கை வருமாறு:-

கருநாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, ஜஸ்டீஸ் பி.டி. தினகரன் அவர்களது பெயர் உச்சநீதிமன்றத்திற்குப் பரிந்துரை உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளைக் கொண்ட ‘கொலிஜியத்தால்’ செய்யப்பட்டது என்று அறிந்தவுடன்,

இங்குள்ள பார்ப்பனர்களும், பார்ப்பன ஏடுகளும், மீடியாக்கள் என்பதில் உள்ள பூணூல்கள் கூட்டமும் அவரைப் போகவிடாமல் எப்படியாவது தடுத்துவிடவேண்டும் என்பதற்காக, அவரது பூர்வீக அல்லது அவர் வழக்குரைஞராக இருந்து சம்பாதித்த சொத்துகளைக் காரணம் காட்டி, அவர் ஏதோ அரசு நிலத்தை ஆக்கிரமித்துவிட்டார் என்று ஒரு அவதூறு பிரச்சாரத்தை அடைமழைபோல் பெய்ய வைத்தனர்.

‘தாழ்த்தப்பட்டவர் உச்சநீதிமன்றத்திற்கு வருவதா?’

சில உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களும் இப்படி ஒரு தாழ்த்தப்பட்ட(கிறித்துவர்)வர் நீதிபதியாக வருகிறாரே என்ற ஆத்திரத்தினாலோ, அல்லது வேறு தனிப்பட்ட காரணத்தினாலோ இதற்கு எதிராக ஒரு முயற்சிகளை மேற்கொண்டு, கூச்சல்களைப் போட்டு, தங்கள் இஷ்டம்போல் தவறான தகவல்களை ‘முறையாக’ தந்து நாடாளுமன்றத்தில் சில கட்சி எம்.பி.,க்கள் (பாரதீய ஜனதா, இடதுசாரிகள் என்ற விசித்திர கூட்டணி) ‘இம்பீச்மெண்ட்’ என்ற குற்றம் சுமத்திடும் நிலையை உருவாக்கியுள்ளனர். அதை மாநிலங்களவைத் தலைவர் அனுமதித்துள்ளார்; விசாரணை, பிறகு ஒருவேளை நடைபெறக்கூடும்.

திருமதி தினகரனின் கேள்விக்குப் பதிலில்லையே!

இதுபற்றி முக்கியமாக இரண்டு பதில்களைத் திருமதி தினகரன் அவர்கள் தந்துள்ளார்.

1. அவர் (பி.டி. தினகரன்) நீதிபதியான பிறகோ, தலைமை நீதிபதியான பிறகோ ஏதாவது சொத்து வாங்கி சேர்த்துள்ளாரா, இல்லையே. ஆதாரம் உண்டா? எனக் கேட்டிருக்கிறார். அதற்குரிய பதில் இல்லை.

2. அவர் சொந்த சொத்துள்ளவர் என்பதை அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தபோது இவர்கள் அறியமாட்டார்களா? பெங்களூருவுக்குத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்று சென்ற பிறகாவது இவர்மீது யாராவது இப்படிப்பட்ட “நில அபகரிப்பு’’ குற்றத்தைச் சாற்றியது உண்டா?

இவ்வளவும் இவர் பெயர் உச்சநீதிமன்ற நீதிபதியாகும் பட்டியலில் இடம்பெற்ற பிறகுதானே கிளப்பப்படுகிறது, அது ஏன்?

இந்தக் கேள்விகளுக்கு முறையான, சரியான பதில் எதுவும் எந்தத் தரப்பிலும் தரப்படவில்லை.

எப்படி இம்பீச்மெண்ட்?

நிலத்தை அளந்து பார்த்திட, பத்திரங்கள், ஆதாரங்களை ஆய்ந்து பார்த்திட சர்வேயர் ஜெனரல் அலுவலகத்திலிருந்தும் அதிகாரிகள் வரும் நிலைவரை அதாவது முறையான விசாரணை முழுமை பெறும் முன்பே, “இம்பீச்மெண்ட்’’ என்றெல்லாம் கூச்சல் போடுவது எவ்வகையில் நியாயமாகும்?

தாழ்த்தப்பட்ட சமூக நீதிபதி என்றால், எந்த உயர்ஜாதிக்காரரும் அவர்மீது ஆளுக்கொரு பிடி சேற்றை வாரி இறைத்து மகிழலாம் என்ற நினைப்பா?

இதற்கு முன்புள்ள நீதிபதிகளின் நிலை

இதற்குமுன் ஊழல் குற்றச்சாற்றுக்கு ஆளான உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பல்வேறு புகார்களுக்கு ஆளாகியும் பதவிப் பொறுப்பேற்கத் தயங்காதவர்கள்பற்றியும் பற்றி இந்த “நீதிமான்கள்’’ கண்டனம் தெரிவித்ததுண்டா?

ஆங்கில நாளேடுகள், எலக்ட்டிரானிக் மீடியாக்கள், பார்ப்பன தமிழ் ஏடுகள் ஒவ்வொரு நாளும் இவரைப்பற்றி தவறான தகவல்களைப் பரப்புவதை தமது அன்றாட “திருப்’’பணியாக அல்லவா கொண்டு அலைகின்றன!

தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் வேடிக்கை பார்க்கலாமா?

இன உணர்வும், நியாய உணர்வும் உள்ள சமூகநீதிப் போராளிகள் வாய் பொத்தி, கைகட்டிக் கொண்டிருக்கலாமா? குறிப்பாக தாழ்த்தப்பட்ட, மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தவர் கைபிசைந்து வேடிக்கைப் பார்த்து நிற்கலாமா?

பார்ப்பன பெண் நீதிபதிக்காக ‘பகீரத’ முயற்சி

இவருக்கு வாய்ப்பு இல்லை என்றால், பெண் நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் இல்லை என்ற ஒரு சாக்கைக் காரணம் காட்டி, உச்சநீதிமன்ற பார்ப்பன நீதிபதி ஒருவர் தம் முயற்சியினால், சீனியாரிட்டிபடி 5 ஆவது, 6 ஆவது இடத்தில் உள்ள, சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள ஒரு பார்ப்பனப் பெண் நீதிபதியை அங்கே கொண்டு போய் அமர்த்திவிட, “பகீரத பிரயத்தனம்’’ நடைபெறுவதாகத் தெரிகிறது.

அகில இந்திய அளவில் இவரைவிட. பணிமூப்பில் அதிகமான பெண் நீதிபதிகள் சுமார் 3 அல்லது 4 பேர்கள் இருக்கிறார்கள்.

பாலியியல் நீதி என்ற போர்வையில் ‘மனுதர்மவாதிகளால்’ எவ்வளவு லாவகமாக உள்ளே நுழைக்க ஏற்பாடுகள் “துரித கதியில்’’ நடைபெறுகின்றனவென்று தெரிய வருகிறது.

அரசியல் சட்ட விரோதம்

‘இம்பீச்மெண்ட்’ தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதே அரசியல் சட்ட விரோதம் ஆகும். அரசியல் சட்டப்படி, இந்திய அரசியல் சட்டப் பிரிவு 124(4) ஆவது துணைப் பிரிவுப்படி என்ன காரணத்திற்காக ஒரு நீதிபதியை அகற்ற முடியும் என்றால்,

‘‘...for such removal on the ground of proved mis behaviour or incapacity’’

ஒரு நீதிபதியை (உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றம்) இரு அவைகளிலும் விவாதித்து, மொத்த உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் ஆதரித்த பின்பேஎன்பதெல்லாம் உள்ளடக்கம் அப்பிரிவில் என்றாலும், காரணம் பொருந்தக் கூடியதாக இருக்கவேண்டாமா?

நீக்கிவிட முடியாது

இவரது நடத்தை என்பது எவ்வகையில் தவறானது? இவர் லஞ்சம் வாங்கினார் என்றோ, மற்றபடி ஒழுக்கக்கேடாக நடந்துகொண்டார் என்றோ இதுவரை குற்றச்சாற்றுபவர்களில்கூட எவராவது சொன்னதுண்டா?

அதுபோலவே, ‘திறமையற்றவர்’ என்று யாராவது கூறி, ஆதாரங்களைக் காட்டி, குற்றம் சுமத்தியதுண்டா?

மேற்கண்ட இரண்டு காரணங்களைக்கூட, ‘வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ’ என்று குற்றம் கூறி, நீக்கிவிட முடியாது.

On the ground of proved misbehaviour or incapacity என்பதின்படி, சந்தேகமற நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இது இவரைப் பொறுத்தவரை உண்டா? இத்தீர்மானம் நிறைவேறாது என்று தெரியும் கொணர்ந்தவர்களுக்கு; அசிங்கப்படுத்துவதே இவர்களது உள்நோக்கம்!

அவரைப் பொறுத்தவரை, அவரிடம் அவரது நிலை, தன்னிலை விளக்கம்பற்றி கேட்டுத் தெரிந்துகொள்ள அவகாசம் உள்ள நிலையில், ‘‘அவர் பெயர் பட்டியலில் நீக்கப்பட்டது’’ என்று அவசர கதியில் செய்தி வெளியிட்டு, அப்படி இல்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறி, இவர்களது மூக்கறுபட்ட நிலையில், இவர்கள் இப்போது ‘தகிடுதத்தம்’ செய்கிறார்கள்.

மத்திய சட்ட அமைச்சரையும் வளைத்து வளைத்துக் கேட்டும் அவர் பிடி கொடுக்காது நியாயத்தின் நிலைப்படி பதில் கூறியுள்ளார்.

நீதி வெல்வது உறுதி!

எனவே, இப்படி ஒருவரைப்பற்றி எழுதியே தடுத்துவிடலாம் என்றால், இது யாருக்கு வேண்டுமானாலும், தொடர் நடவடிக்கையாக நாளை ஆகலாமே!

ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் அரைக்கால் சட்டையோடும், தடியோடும் ஊர்வலம் போன பார்ப்பனர் கூட நீதிபதியாகி அமர்ந்துள்ளார் அதுவும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் என்ற நிலை ஒருபுறம்; மறுபுறம் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் உச்சநீதிமன்ற நீதிபதியாவதென்றால், அவர்மீது செயற்கையாக “சுனாமி’’யை உருவாக்கி, மத்திய அரசையும், உச்சநீதிமன்றத்தையும் பணிய வைக்க பார்ப்பன ஆதிக்கச் சக்திகள் முயலுகின்றன என்றால், மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பதா?

நல்வாய்ப்பாக காங்கிரஸ், தி.மு.க. போன்ற கட்சிகளின் எம்.பி.,க்கள் அத்தீர்மானத்தில் கையொப்பமிடாதது குறிப்பிடத் தகுந்ததாகும்நியாயமானதும்கூட!

இறுதியில் நீதி வெல்லுவது உறுதி! உறுதி!!

--------------- கி. வீரமணி ,தலைவர்,
திராவிடர் கழகம். "விடுதலை” 21-12-2009

0 comments: