Search This Blog

5.12.09

வீரமணியைப் பிரமிப்பாய்ப் பார்க்கிறேன்! வியந்து நிற்கிறேன்!


வியந்துபார்க்கிறேன்..........


எழுபத்தேழாவது வயதில் பம்பர வேகப் பணிகளா? நம்ப முடியவில்லை. அவரது சுற்றுப்பயண வேகம், நமக்கு தலை சுற்றுகிறது.

ஜலதோஷம் பிடித்தாலே சுருண்டு கிடக்-கின்ற மனிதர்களுக்கு மத்தியில், இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில்லாமல் அலையும் உழைப்பாளியைக் கண்டு வியந்து நிற்கிறேன்.

மண விழாக்களில் வழங்கப்படும் தாம்பூலப் பைகளில் இருக்கும் தேங்காயைக்கூட பைக்குள் பத்திரப்படுத்தி வீட்டில் சேர்க்கும் மனிதர்களுக்கு மத்தியில், தமக்கு வழங்கப்பட்ட எடைக்கு எடை தங்கத்தை எந்தவித சபலமுமின்றி இயக்கத்திற்கு வழங்கிய தியாகச் செம்மலை எப்போதும் வியந்து பார்க்கிறேன்.

தமிழர் தலைவர் அவர்களின் எளிமை இந்திய அரசியல் வாதிகள் பின்பற்ற வேண்டிய பாடம். லட்சக்கணக்கானத் தொண்டர்கள் பிறந்தநாள் விழா கொண்டாடத் துடித்த போதும் தடுத்தவர். தன் வாகனத்திற்கு முன்னாலும் பின்னாலும் வாகன அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதை வெறுத்தவர்.

தமிழர் தலைவர் வீரமணி அவர்களின் பணிவு அனைவரும் நெகிழச் செய்து விடுகிறது. எல்லோருக்கும் மரியாதை கொடுத்து பேசுவது அவரது பண்பு. வணக்கம் செய்வோருக்கு முகம் மலர்ந்து இருகரம் கூப்பி புன்சிரிப்போடு பதில் வணக்கம் செய்கின்ற முறை நெஞ்சத்தை விட்டு நீங்காத காட்சியாகும்.

வாகனத்தில் தனித்து பயணம் செய்வது பெருமை என்று நினைக்கும் பெரிய மனிதர்களுக்கு மத்தியில் தமிழர் தலைவர் அவர்கள், இடமிருக்கிறது, வாங்க ... வாங்க... என்று வேனை நிறைத்துக்கொண்டு பயணம் செய்யும் தோழமை உணர்வைக் கண்டு பூரித்திருக்கிறேன்.

ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிக்கு வராமல் தவிர்க்கின்ற பழக்கம் வீரமணி வரலாற்றிலே இல்லை. கூட்டத்திற்குக் காலம் தாழ்த்தி வருவதுதான் பெருமை என்று நினைத்துக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் முன்கூட்டியே வந்திருந்து காத்திருக்கும் தலைவரைக் கண்டு வியந்திருக்கிறேன்.

மாநாட்டு மேடைகளில் சிம்மாசனங்களில் அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்ப்பது தலைவர்களின் வாடிக்கை. ஆனால் வீரமணி மாநாட்டுப் பந்தலில் குழுமியிருக்கும் கூட்டத்தின் நடுவே சென்று கழகக்குடும்பங்களுடன் கலந்துறவாடி மகிழும் காட்சியினைக் கண்டு மெய்சிலிர்த்திருக்கிறேன். பொய் சொல்லாத மெய்ப்பொருளாக, தீயப் பழக்கங்கள் தீண்டாதப் புனிதராக, கேளிக்கையில் நாட்டமில்லாத நல்லவராகத் திகழும் வீரமணியைக் கண்டு மகிழ்கிறேன்.

முதிர்ந்த வயதினரும் இளைய வயதினரும் நிறைந்திருக்கின்ற இயக்கத்தில் தலைமுறை இடைவெளி இல்லாமல் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தலைமைப் பண்பைக் கண்டு வியந்து போகிறேன்.

மணவிழா அழைப்பிதழை நீட்டுவோரிடம் திருமணத்தை சிக்கனமாக நடத்துங்கள் என்று அறிவுரை வழங்க வீரமணி தவறுவதே இல்லை. இயக்கத் தோழர்கள் அன்பின் மிகுதியால் உணவை அதிகமாகப் பரிமாறிவிடுகிறபோது அருகில் உள்ள நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு விரயமாக்காமல் உண்கின்ற பண்பு அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று.

வீரமணி அவர்களின் பரந்துபட்ட பழக்க வழக்கத்தினால் நண்பர்கள் வட்டம் உலகளாவிய அளவில் விரிந்து நிற்கிறது. ஒரு முறை சந்தித்து உரையாடினாலே ஈர்த்து விடுகின்ற வீரமணியின் காந்த சக்தியைக் கண்டு வியந்து நிற்கிறேன்.

வயது முதிர்ந்த பெரியார் தொண்டர்களை மேடையில் ஏற்றி கவுரவிப்பதும், உடல் நலம் குன்றிய கழகத் தோழர்களை மருத்துவமனையிலும், அவர்களது இல்லத்திலும் கண்டு தைரியம் கூறுவதும், கழகக் குடும்பத்தினர் மறைவுற்றால் பல்வேறு பணிகளுக்கிடையிலும் அவர்கள் இல்லம் சென்று மரியாதை செய்வதும், ஆறுதல் சொல்வதும் வீரமணியின் பண்பாகும். தமிழ் நாட்டில் உள்ள லட்சக்கணக்கானக் கழகக் குடும்பத்தினர் வீரமணி எங்கள் குடும்பத் தலைவர் என்று பாசம் பொங்க அழைப்பது நியாயம்தானே!

தோழர்களிடம் வீரமணி உரையாடும் போது ஏராளமான செய்திகளை, வரலாற்று நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டே போவார். அற்புதமானக் கருத்துகள் சரளமாக வந்து விழும். நகைச்சுவைக்கும் பஞ்சமிருக்காது. கேட்டுக்கொண்டே இருக்கலாம். நடமாடும் தகவல் களஞ்சியத்தை வியப்போடு பார்த்துக்கொண்டேயிருப்பேன்.

கொள்கை முழக்கத்திற்கிடையில் உடல் நலம் பற்றியும், உடற்பயிற்சிப்பற்றியும், உணவு முறைகள் குறித்தும் பழகுவது எப்படி? நேரத்தை மிச்சப்படுத்துவது எப்படி? உழைப்பின் சிறப்பு என்ன? என்று வாழ்வியலுக்குத் தேவையான கட்டுரைகளை வழங்கி சுகவாழ்விற்கு வழி-காட்டும் கனிந்த உள்ளத்தைக் கண்டு நெகிழ்ந்திருக்-கிறேன். நள்ளிரவு ஒரு மணிக்கு மாநாடு முடியும் போது இரவுப்பயணத்தைத் தவிர்ப்பீர் என்று அக்கறையுடன் தோழர்களுக்கு வேண்டுகோள் விடுவது கண்டு சிலிர்த்திருக்கிறேன்.

அய்யாவின் கருத்துகளை வீரமணியின் குரலில் கேட்பதே தனி சுகம். திரிபு வாதிகளால் அய்யா கருத்துகளுக்கு ஆபத்து வந்துவிடாமல் பெரியாரியல் தொடர் சொற்பொழிவு மூலம் பதிவு செய்து காக்கின்ற அற்புத முயற்சியும்,

இயக்கத்தின் பெரும் சொத்தாகிய குடிஅரசு விடுதலை ஆகிய இதழ்களை காலத்தால் அழியாத குறுந்தகடுகளாகப் பதித்து வைக்கின்ற பெரும் பணியும், விழிப்புணர்வை உருவாக்கிட நாடு முழுவதும் பெரியார் படிப்பகங்களை ஏற்படுத்துவதும், அய்யாவின் கருத்துகளைப் பல்வேறு தலைப்புகளில் களஞ்சியமாய் அச்சிட்டு பொதுமக்கள் கைகளில் தவழவிடுவதும் வீரமணி நிகழ்த்தி வரும் அமைதிப் புரட்சியாகும்.

வீரமணியின் சொற்பொழிவுத்திறன் உலகறிந்த ஒன்று. அவரது பேச்சில் நாகரிகமும் பண்பாடும் மிளிரும். கருத்து வெள்ளம் கரைபுரண்டோடும். பேச எடுத்துக்கொண்ட தலைப்பு தொடர்பான செய்திகளைப் பல இடங்களிலிருந்து திரட்டி வரலாற்றுக் குறிப்பு-கள், எடுத்துக்காட்டுகள், மேற்கோள்கள், புள்ளிவிவரங்கள் மூலம் தமது கருத்தைத் தெரிவிக்கும் மறுக்க இயலாத வகையில் ஆணித்தரமாக நிறுவுகின்ற ஆற்றலைக் கண்டு வியந்து நிற்கிறேன்.

ஆய்வுக் கட்டுரை எழுதுவதற்கு மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் பேராசிரியர்களுக்கு மத்தியில், பல்வேறு சமூகப்பணிகளுக்கிடையிலும் அருமையான ஆய்வு நூல்களை அடுக்கடுக்-காக எழுதிக்குவிக்கின்ற வீரமணியின் ஆற்றலை பிரமிப்போடு பார்க்கிறேன்.

திராவிடர் கழகத்தின் சாதனைகளுக்கும் வெற்றிகளுக்கும் கூட்டுப்பணிதான் காரணம் என்று தலைவர் தன்னடக்கத்துடன் கூறினாலும், வீரமணியின் அணுகுமுறை, அறிவாற்றல், ஆளுமைத் திறன்தான் அடிப்படை என்பது வெளிப்படை. வீரமணியைப் பிரமிப்பாய்ப் பார்க்கிறேன்! வியந்து நிற்கிறேன்!


--------------------பேரா.நம்.சீனிவாசன் -டிசம்பர் 01-15_2009 "உண்மை" இதழில் எழுதிய கட்டுரை

0 comments: