Search This Blog

13.12.09

சும்மா ஆடுமா பார்ப்பனக் குடுமி?


அய்.ஏ.எஸ். தேர்வில் ஓர் சூழ்ச்சிப் பொறி!

உயர்ஜாதி ஆதிக்கக்காரர்களின் சூழ்ச்சியைப் புரிந்துகொள்வது எளிதானதல்ல; அது சன்னமாக வாழைப் பழத்தில் ஊசியை ஏற்றுவது போலிருக்கும்.

இட ஒதுக்கீடு என்று வந்துவிட்டால், என்ன சொல்லுவார்கள் ஏழைகளுக்கு உதவவேண்டாமா? என்ற கேள்வியைத் தூக்கிக் கொண்டு வருவார்கள். கேட்பவர்களுக்கும் ‘இது நியாயந்தானே!’ என்று நினைக்கத் தோன்றும். ‘தகுதிக்கு முன்னுரிமை வேண்டாமா?’ என்று இன்னொரு கேள்வியையும் எழுப்புவார்கள்.

‘அதுவும் நியாயந்தானே?’ நல்லா படிக்கிற மாணவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கத்தானே வேண்டும் என்று பாதிப்புக்கு ஆளானவர்களையே பேச வைப்பார்கள்.

இந்தக் கண்ணி வெடிகளையெல்லாம் தாண்டி இப்பொழுதுதான் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களும், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களும் கொஞ்சம் படிக்க ஆரம்பித்துள்ளனர். உத்தியோகப் படிக்கட்டுகளையும் மிதிக்கத் தொடங்கியுள்ளனர்.

பொறுக்குமா ஆதிக்கபுரியினருக்கு? இதோ ஒரு சதித் திட்டப் பின்னல்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (upsc) என்று ஒன்று இருக்கிறது மாநிலத்தில் தேர்வாணையம் இருப்பதுபோல.

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்றவற்றிற்கு, சிவில் பதவிகளுக்கு இந்த ஆணையத்தால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். இரண்டு தேர்வுகளை நடத்துவார்கள். முதல் நிலைத் தேர்வு அதற்கடுத்து முதன்மைத் (மெயின்) தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு இறுதியாக நேர்முகத் தேர்வும் நடைபெறும்.

இப்பொழுது இந்த முறையில் ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர். முதல்நிலைத் தேர்வில் இரு தாள்கள் உண்டு. பொதுப்பாடம் மற்றும் விருப்பப் பாடம் என்பவைதாம் இவை.

முதல் தாள் அனைவருக்கும் பொதுவானவையே! இரண்டாவது தாள் விருப்பப்பாடமாகும். இப்பொழுது இந்த இரண்டாவது தாளான விருப்பப்பாடம் என்பதை நீக்கிவிட்டு செயல்திறன் தேர்வு என்ற ஒன்றைக் கொண்டுவரத் திட்டமிட்டு அதற்கான கருத்துருவை மத்திய அரசிடம் அளித்துள்ளனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்புகூட இப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு கடும் எதிர்ப்பின் காரணமாக அது பின்வாங்கிக் கொள்ளப்பட்டது.

இந்தச் செயல்திறன் தேர்வு என்பது பொதுவாக வங்கிப் பணிகளுக்குத்தான் வைக்கப்படுவது வழக்கமாகும்.

இதனை ஏன் இந்த அய்.ஏ.எஸ். தேர்வுக்குள் புகுத்துகின்றனர்? சும்மா ஆடுமா பார்ப்பனக் குடுமி? விருப்பப்பாடம் இரண்டாம் தாளில் கிராமப்புற மாணவர்கள் உள்பட சிறப்பாக மதிப்பெண் பெற்று விடுகிறார்கள். தமிழ் இலக்கியம் உள்பட தேர்வு செய்துகொள்ளலாம். இந்த வாய்ப்புக் காரணமாக கிராமப்புற மாணவர்கள், ஒடுக்கப்பட்ட மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறும் வாய்ப்பு இருக்கிறது.

இதனைப் பொறுத்துக் கொள்ள முடியுமா? இதனை முறியடிப்பதுதானே உயர்ஜாதி ஆதிக்கவாதிகளின் எண்ணமும், செயல்பாடும்?

நேரிடையாக இதனைத் தெரிவிக்கவும் முடியாதே! இதனைக் கொல்லைப்புற வழியாக முறியடித்தாக வேண்டுமே! அந்த அடிப்படையில் எழுந்ததுதான் விருப்பப்பாடம் என்பதை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக செயல்திறன் தேர்வு என்பதாகும்.

தேர்வாணையத்தின் தலைவராக இருக்கக்கூடிய டி.பி. அகர்வால் கூறியிருப்பதைக் கவனிக்கவேண்டும்.

“அய்.ஏ.எஸ்., மற்றும் அய்.பி.எஸ். உள்ளிட்ட மிக உயரிய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் முக்கியமான மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்பதை யுபிஎஸ்சி ஒப்புக்கொள்கிறது. தற்போதுள்ள தொடக்கக் கட்டத் தேர்வுக்குப் பதிலாக செயல்திறன் தேர்வைக் (Aptitude) கொண்டுவரவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளோம். அளிக்கப்படும் வாய்ப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது’’ என்று கூறியுள்ளார் (14.11.2009).

கோணிப் பைக்குள்ளிருந்த பூனை வெளியில் வந்துவிட்டது என்பதற்கு இது ஒரு சரியான எடுத்துக்காட்டாகும்.

பொதுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு (Forward Community) நான்கு முறைகளும், பிற்படுத்தப்பட்டோருக்கு ஏழு வாய்ப்புகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு வாய்ப்புக்கான வரம்பு இன்றியும் தேர்வு எழுதும் நிலை இப்பொழுது உள்ளது.

இதனைக் குறைக்கப் போவதாக அகர்வால் கூறுவது ஏன்?

கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறும் வாய்ப்புக்குக் கதவடைப்பதுதான் இதில் உள்ள சூழ்ச்சிப் பொறியாகும்.

சன்னமாக நடைபெறும் இத்தகைய சூழ்ச்சிகள் வெளிச்சத்துக்கு வராமலே வெற்றி பெற்றுவிடும். இதனை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.

நாடாளுமன்றத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இதுகுறித்து கடுமையான எதிர்ப்புப் புயலைக் கிளப்பவேண்டும். மக்கள் மத்தியில் நாம் கொண்டு செல்லுவோம்.

------------------நன்றி:- “விடுதலை” தலையங்கம் 12-12-2009

0 comments: