Search This Blog

22.12.09

இரட்டைச் சகோதரிகளாக மறுபிறவி எடுத்த இரண்டு சகோதரிகள்



நம்ப முடியாத அதிசயக் கதைகளை வெளியிடுவது என்றால் உலகம் முழுவதிலும் உள்ள ஞாயிறு மலர்களுக்கு அலாதி ஆர்வம். ஆவிகள், மறுபிறப்புகள், பேயோட்டல்கள், அருள்வாக்குகள் முதலியவை பற்றிய ‘‘நடந்த நிகழ்ச்சிகள்’’ அவற்றுக்கு ருசிகர செய்திகளாக இருக்கின்றன.

1965 ஏப்ரல் 4ஆம் தேதிய ‘சிலோன் அப்சர்வர்’ இதழ் ஜான் மக்ளின் என்பவரின் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. வைட்லி குடாவைச் சேர்ந்த ஜான் போலக்குக்கும் அவரது மனைவி பிளாரன்சுக்கும் பிறந்த இரட்டைப் பெண்களின் மறுபிறப்பு பற்றிய கட்டுரையாகும் அது. போலக்கின் இரட்டைக் குழந்தைகளான கிலியன், ஜெனிபர் ஆகியோரின் கதை, ‘மறுபிறப்புக் கோட்பாட்டை ஆதரிக்கும் தொடர்ச்சியான ஆதாரங்களின் வலுவான இணைப்புக் கண்ணியாகும்’ என்று அதில் எழுதி இருந்தது.

‘‘11 வயது நிரம்பிய ஜோனா போலக்கும் 6 வயது நிரம்பிய அவளது தங்கை ஜாக்குலினும் பூசைக்கு போய்க் கொண்டிருந்தார்கள். அன்று 1957 மே மாதத்தில் ஒரு ஞாயிறு...’’ ஒரு கார் ஒரு மூலையில் வளையும்போது குழந்தைகள் மேல் ஏறிவிட்டது. இருவரும் இறந்து போனார்கள்.

‘‘இந்த சோக நிகழ்ச்சி நடந்து 17 மாதங்களுக்குப் பிறகு கிலியனும் ஜெனிபரும் பிறந்தார்கள். ஜோனாவும் ஜாக்குலினும் தான் மீண்டும் தம்மிடம் கிலியனாகவும் ஜெனிபராகவும் திரும்பி வந்திருக்கிறார்கள் என்றே போலக்கு தம்பதிகள் உறுதியாக நம்பினார்கள்.’’

இந்த முட்டாள் பெற்றோர்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இப்படி நம்பினார்கள்? பின்வரும் காரணங்களைத் தருகிறார்கள் அவர்கள்:

‘‘5 வயதான இரட்டையரில் 10 நிமிடம் இளையவளான (கழித்துப்பிறந்த) ஜெனிபர், ஜாக்குலினின் சாயலோடே இருக்கிறாள். அந்த உருவ ஒற்றுமையை ஒளி (புகை)ப்படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. இரவில் ஜெனிபர் பிறந்ததில் இருந்து அவள் நெற்றியில் ஓர் அசாதாரணமான தழும்பு காணப்பட்டது. ஜாக்குலினுக்கும் அப்படி ஒரு தழும்பு அவள் கீழே விழுந்ததால் ஏற்பட்டிருந்தது. இன்னும் சில அதிகமான ஒப்புமைகளும் உள்ளன: ஜெனிபரின் இடுப்பில் ஒரு நாணயத்தின் அளவுக்கு செம்பழுப்பு நிறத்தில் ஒரு மச்சம் உள்ளது. அதே மாதிரி ஒன்று ஜாக்குலினுக்கும் இருந்தது.’’

‘‘ஜாக்குலின் போலவே ஜெனிபருக்கும் எழுதுவது என்றால் பிடிக்கும். யாரும் சொல்லித் தராமலே பென்சிலை வலது கையின் நடு விரல்களுக்கு இடையில் பிடிக்கும் விசித்திர பழக்கம் அவளுக்கு ஏற்பட்டுள்ளது. ஜாக்குலினும் அப்படித்தான் பிடித்தாள்.’’

‘‘கிலியனும் பல வகைகளில் ஜோனாவைப் போலவே நடந்து கொள்கிறாள். அவளது பல வெளிப்பாடுகள், நடை யாவும் அதேபோலவே உள்ளன. அவளிடம் யாரும் ஒருபோதும் தெரிவித்திராதபோது அந்த விபத்துபற்றி அடிக்கடி விலாவாரியாக பேசுகிறாள்.’’

‘‘‘..க்கு என்ன ஆனது? விபத்தைப் பற்றி இன்னமும் அவர் கவலைப்பட்ட படியேதான் இருக்கிறாரா?’ என்று ஒரு தடவை ஜெனிபர் தன் தாயிடம் கேட்டாள்! அவள் கேட்டது காரை ஓட்டி வந்தவரைப் பற்றி அவர் வசித்து வந்த இடம், அவர் ஓட்டிய காரின் பெயர் எல்லாம் அவளுக்கு தெரிந்திருந்தது.’’

மேற்சொன்ன கதையை கவனமாக வாசிக்கும் எவரும், புத்தகங்கள் பத்திரிகைகள் செய்தித்தாள்களில் நாம் வாசிக்கும் கணக்கற்ற சந்தேகத்துக்கிடமான மறுபிறவிக் கதைகளில் இருந்து இது எவ்வகையிலும் வேறுபட்டில்லை என்பதை காண முடியும். அந்த அப்பாவிப் பெற்றோரின் ஆதாரத்தை ஏற்பதைத் தவிர வேறெந்த நடுநிலையான அறிவியல் ஆய்வு நடத்தவும் இதில் இடமில்லை. இறந்து போன இரண்டு மகள்கள் பற்றி அவர்களின் தாயும் தந்தையும் கூறுவதை பேசாமல் கேட்டுக் கொள்ள வேண்டியது தான். மேலே சொன்ன மேலோட்டமான ஆதாரத்தைக் கொண்டு அந்த இரட்டைக் குழந்தைகள் மறுபிறவிகள் தான் என கண்மூடித்தனமாக நம்பும் பெற்றோர்களின் சாட்சியத்துக்கு வேறு என்ன மதிப்பு தர முடியும்?

முந்திய பிறவியில் இருந்த அதே உடலும் மனமும் அப்படியே திரும்ப வந்துள்ளதாக உரிமை கோரப்பட்ட முதல் சம்பவம் இது. இந்த கோரிக்கை சரியானால் பின் ஓர் உயிரி இறந்தபின் வேறொரு உயிரினத்தில் போய் பிறக்கும் என்று பரவலாக புழக்கத்தில் உள்ள நம்பிக்கைக்கு அடிப்படை இல்லாமல் போகிறது. பிறந்தபோதும் பின் வளரும்போதும் தம் உடலில் ஏற்படும்வந்துசேரும் எல்லா அடையாளங்களோடும்தான் உயிரிகள் மறுபடியும் பிறக்கும் என்றால், தலவாகலியைச் சேர்ந்த பையன் தில்லகரத்னே, கொத்மலயில் ஞானதில்லகி என்ற பெண்ணாக பிறந்தபோது பால் உறுப்புகள் மட்டும் எப்படி மாறியது? கடந்தகால பதிவுகளில் இதுபோல் இல்லை என்றாலும் இந்த புதிய கோரிக்கை உண்மையானால், மாந்த இனம் போலவே ஒரு சிறுத்தையும் தன் அடுத்தடுத்த பிறவிகளில் தன் அத்தனை புள்ளிகளும் மாறாமல் பிறப்பது முடியுமா? இரட்டைக் குழந்தைகள் தம் முற்பிறவி நிகழ்ச்சிகளை அப்படியே நினைவில் வைத்துள்ள அற்புதத்தை யாராவது சந்தேகிக்க முடியுமா? ஏனெனில் இறந்து சிதைந்த பிறகும் இரண்டு சகோதரிகளின் முற்பிறவி உடல்கள் அப்படியே மீண்டும் வந்து தோன்ற முடியும் என்றால், அவர்களுடைய மூளை சிதைந்த பிறகும் அவர்களின் நினைவுகள் சாகாமல் பிழைக்க முடியும் என்பதை ஏற்பதில் என்ன சிரமம் இருக்க முடியும்?

சாவை எதிர்கொண்ட நிலையிலும்கூட ஒரு ஆறு வயது சிறுமிக்கு இருந்த அவதான திறன் அபாரம்! மற்ற குழந்தைகள் போல் அஞ்சி அலறி ஓடுவதற்குப் பதில், மூலையில் கார் வளைந்து வரும்போதே அதைப் பார்த்து பதறாமல் ஓட்டுநரையும் வாகனத்தின் பெயரையும் கூர்ந்து கவனித்திருக்கிறாள் ஜாக்குலின்! காரின் பதிவு எண்ணை நினைவில் கொள்ள அவள் தவறிவிட்டாலும், ஓட்டுநரின் பெயரையும் அவர் வசித்த ஊரையும் அவளால் நினைவில் வைக்க முடிந்திருக்கிறது. எத்தகைய ஒரு அசாதாரண குழந்தையாக அவள் இருந்திருக்க வேண்டும்!

ஜோனாவும் ஜாக்குலினுமாக இருந்தவர்கள்தான் மறுபடியும் பிறந்துள்ளோம் என்று குழந்தைகள் கூறிக் கொள்ளாவிட்டாலும், அவர்கள்தான் நீங்கள் என அவர்களுக்கு கூறுவதில் தகப்பனார் குறியாக இருக்கிறார். அவர் கூறுகிறார்: ‘‘உண்மையாகவே மீண்டும் பூமிக்கு வந்துள்ள அவர்களின் இரு சகோதரிகள்தான் அவர்கள் என்னும் என் நம்பிக்கையை அவர்களிடம் நான் தெரிவிப்பேன். அப்போது ஒருவித வசிய நிலைக்கு அவர்கள் தம்மைத்தாமே உட்படுத்திக் கொள்வதன்மூலம், தம் முந்திய பிறவிகள் பற்றி இன்னும் அதிகமாய் வெளிப்படுத்த வரலாம்.’’

அறிவியில் முறையில் மூளைச் சலவை செய்வதன் மூலம் ஒரு மறுபிறவிக் கதையை உருவாக்கும் உத்தியில்லையா இது?

--------------- நூல்: டாக்டர் கோவூரின்"ஆவி_ஆன்மா_மறுபிறப்பு"

0 comments: