அரியானா மாநிலத்தின் ரோடக் நகரில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியில் முதுகலைப் பட்ட வகுப்பில் சேர இடம் மறுக்கப்பட்ட மாணவர் குல்ஷன் பிரகாஷும் வேறு சிலரும் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்ற பெஞ்ச் ஒரு தீர்ப்பை செவ்வாய்க்கிழமை வழங்கியது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் நீதிபதிகள் பி. சதாசிவம், ஜே.எம். பஞ்சால் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. பல்கலைக்கழகத்தின் பட்ட வகுப்பில் இட ஒதுக்கீடு மூலம் சேர்ந்து பட்டம் பெற்ற எங்களுக்கு முதுகலைப் பட்ட வகுப்பிலும் அதே அடிப்படையில் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று பல்கலைக்கழகத்துக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் வழக்கு தொடுத்தனர்.
2007_ 08ஆம் கல்வி ஆண்டில் முதுகலை மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காததால் அவர்கள் வழக்கு தொடுத்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்த கருத்துகள் வருமாறு:
அரசியல் சட்டத்தின் 15 (4) வது பிரிவு, 16 (4) வது பிரிவு ஆகியவற்றை மனுதாரர்கள் மேற்கோள் காட்டி இட ஒதுக்கீட்டுச் சலுகை கோருகின்றனர். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களைக் கைதூக்கிவிட தேவைப்படும் சமயங்களில் சலுகைகளை அளிக்க அரசுக்கு அதிகாரம் அளிப்பவைதான் அந்தப் பிரிவுகளே தவிர கட்டாயம் இடங்களைத் தந்தே தீர வேண்டும் என்கிற வகையிலான நிரந்தர ஏற்பாடுகள் அல்ல. அந்தந்த மாநிலங்களின் சமூகச் சூழலுக்கு ஏற்ப மாநில அரசுகள் இந்தப் பிரிவுகளை இட ஒதுக்கீட்டுச் சலுகைகள் வழங்க பயன்படுத்திக்கொள்ளலாம். அரியானா மாநில அரசுகூட எதிர்காலத்தில் முதுகலை பட்டப்படிப்புகளில் தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.) பழங்குடி (எஸ்.-டி.) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட (ஓ.பி.சி.) வகுப்பு மாணவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க அவசியம் என்று கருதினால் இட ஒதுக்கீட்டு முறையை ஏதேனும் ஒரு வகையில் அமலுக்குக் கொண்டு வரலாம் என்று விளக்கிய நீதிபதிகள், இந்த வழக்கில் மனுதாரர்களின் கோரிக்கைகளை நிராகரித்து உத்தரவிட்டனர்.
இந்தத் தீர்ப்பு உண்மையிலே அதிர்ச்சி அளிக்கக் கூடிய ஒன்று என்பதில் அய்யமில்லை.
சென்னை மாநிலத்தில் நடைமுறையில் இருந்து வந்த இட ஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடே கொந்தளித்து எழுந்தது. அந்த நிலையில்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தமே (1951) மேற்கொள்ளப்பட்டு இன்றுவரையில் கல்வியில் இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது 15(4); வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு 16(4) என்பது அரசமைப்புச் சட்டத்தில் ஏற்கெனவே இடம் பெற்ற ஒன்று.
அத்தகைய சட்டங்களின் வலிமையைப் பலகீனப்படுத்தும் வகையில் உச்சநீதிமன்றம் கருத்துக் கூறியிருப்பது மறுபரிசீலனை செய்யப்படவேண்டியதாகும்.
இந்த இரு பிரிவுகளின் அடிப்படையில்தான் இதுவரை உச்சநீதிமன்றமேகூட பல தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது.-அப்பொழுதெல்லாம் சொல்லப்படாத ஒரு கருத்து இப்பொழுது உச்சநீதிமன்றத்திலிருந்து வெளிவந்திருப்பது ஏன் என்று தெரியவில்லை.
இட ஒதுக்கீடுகள் அமல்படுத்தப்படும் காலகட்டத்தில்கூட தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் உரிய விகிதாச்சார இடங்கள் கிடைத்தபாடில்லை.
கீழ்மட்டப் பதவிகளில்தான் இட ஒதுக்கீடு முழுமையான அளவில் செயல்படுத்தப்படுகிறதே தவிர, மேலே போகப் போக சதவிகிதங்களின் அளவு கீழ்நோக்கிப் போகிறது.
அதுவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலையில் இட ஒதுக்கீடு என்பது 1990 ஆம் ஆண்டிலிருந்து, சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது செயல்பாட்டுக்கு வந்தது என்றாலும், உச்சநீதிமன்ற முட்டுக்கட்டையின் காரணமாக 1992 ஆம் ஆண்டிலிருந்துதான் செயல்படுத்தப்படுகிறது. கல்வியில் இன்னும் கிடைத்தபாடில்லை.
இந்த நிலையில், தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் தட்டுத் தடுமாறி நடை எடுத்து வைக்கும் நேரத்தில், இதுபோன்ற தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கலாமா?
“பாரத தேசத்தை, மதச்சார்பற்ற சமதர்மக் குடியரசாக அமைப்பதற்கு இந்திய மக்களாகிய நாங்கள் உறுதி பூண்டு, இந்திய மக்கள் அனைவருக்கும் சமூக, பொருளா தார, அரசியல் நீதி, எண்ண, எழுத, எடுத்துச் சொல்ல, நம்பிக்கை வைக்க, வழிபாடு செய்ய, சுதந்திரம், தரத்திலும், தகுதியிலும், வாய்ப்பிலும் சமத்துவம் ஆகிய வற்றை அளிப்பதற்கும் எங்களிடையே தனி மனிதனின் கவுரவம் மற்றும் தேசிய ஒற்றுமையையும், ஒருமைப் பாட்டையும் உறுதியளிக்கத்தக்க சகோதரத்துவத்தை வளர்க்கவும் உறுதி எடுத்துக்கொண்டிருக்கிறோம்!’’ என்றுதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தொடங்கப்படுகிறது.
இதில் எடுத்த எடுப்பிலேயே சமூகநீதி என்பதுதான் முன்னுரிமையாகக் குறிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த சமூகநீதியை இரண்டாம் இடத்தில் தள்ளுவது அதற்கு வேறு வகையில் வியாக்கியானம் செய்யலாம் என்று நினைப்பது பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு எதிரானதாகும்.
தமிழ்நாடு போன்ற சமூகநீதி செழித்த மண்ணிலே அரசுகளின் செயல்பாடுகள் பெரும்பாலும் இட ஒதுக்கீடுக்கு அனுசரணையாக இருக்கக் கூடும். மற்ற மற்ற மாநிலங்களில் நிலைமை என்ன?
அரியானா மாநில அரசில் சமூகநீதி கிடைக்காத காரணத்தால்தானே உச்சநீதிமன்றத்தைத் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இருவர் அணுகியிருக்கின்றனர்!
உச்சநீதிமன்றத்தில் தீர்ப்புக் குறித்து சமூகநீதியாளர்களும், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களும், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தப் பிரச்சினையைப் பெரிதுபடுத்தி, மக்கள் மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெருங்குரல் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
-------------------"விடுதலை" தலையங்கம் 4-12-2009
0 comments:
Post a Comment