Search This Blog

14.12.09

தொழிலாளர் இயக்கத்தில் ஜாதி, மதம்
இந்தியாவில் ஜாதி, மதத் தாக்கம் இன்றி எதுவுமே இருக்காது போல் இருக்கிறது. நடப்பு நிகழ்ச்சிகளும் நடந்த சம்பவங்களும் அதை உறுதிப்படுத்துகின்றன. “போராடும் தொழிலாளிக்கு ஜாதி இல்லை _ மதம் இல்லை கோஷம் உண்டு _ கொள்கை உண்டு’’ என்பது உழைக்கும் வர்க்கத்தின் முழக்கம். ஆனால், ஜாதி, மத ஆதிக்கம் தொழிலாளர் வர்க்கத்தினரிடையே ஊறிப்போய் இருக்கிறது என்பதனை இன்று நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். ஜாதி அடிப்படையில் தொழிற் சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ள அவலம் “வர்க்கம்’’ எனும் சித்தாந்தத்திற்கு விடப்பட்ட அசிங்கமான அறைகூவல். மதரீதியாக இந்தியாவின் பெரும்பான்மை மதமாக இருக்கக்கூடிய இந்துமதப் பெருமைகளைப் பீற்றிக் கொள்ளும் பிற்போக்குவாதிகள் கூட ஒரு சங்கம் வைத்து உழைப்பாளர்களைக் கூறுபோட்டுள்ளனர்.

இது எதனால் ஏற்பட்டது? மற்ற நாடுகளைப் போல இரண்டு வர்க்கம் என்பது இந்தியாவில் இல்லாமல் இருப்பது ஒரு காரணம். அப்படிப்பட்ட வர்க்க உணர்வை வளர்ப்பதில் கட்டிக் காப்பதில் தொழிற்சங்கங்கள் தவறிவிட்டன. என்றாலும், மற்ற நாடு-களுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பெருத்த வேறுபாடு ஒன்றைக் கவனிக்க மறந்திடலாகாது. இந்தியாவில் பல மதங்கள் உண்டு, மதவேறுபாடுகள் உண்டு. மத அடிப்படையில் பிரிந்து வாழும் தன்மையும் உண்டு. அதைவிடக் கேவலமாக, வேறெங்கும் இல்லாத ஜாதிகள் இங்குண்டு. ஜாதி வேற்றுமைகள் உண்டு, பிளவுகள் உண்டு, மேல், கீழ் எனும் பேதங்கள் உண்டு. ஒருவரை ஒருவர் தொடக்கூடாது, பார்க்கக் கூடாது எனும் நிலையும் உண்டு. பிறகு எல்லாரையும் போல முதலாளி _ தொழிலாளி பேதம் உண்டு. வேறு நாடுகளில் இல்லாத மாதிரியில் இங்கு பிறவி முதலாளிகள் உண்டு. அவை கடவுள்கள் என்று அழைக்கப்படும். அவற்றின் அமைப்பை, ஆதிக்கத்தை எதிர்த்துக் குரல்கொடுக்கக்கூட தொழிற்சங்கங்கள் அஞ்சுவது உண்டு. “தொழிற்சங்க முதலாளி’’களுடன் பிறவி முதலாளிகளுக்குக் கூட்டுறவு உண்டு.

மூன்று பேதங்கள்

அதனால்தான் சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் சொன்னார், “இந்தியாவில் மதபேதம், ஜாதிபேதம் பொருளாதார பேதம் என மூன்று பேதங்கள் உண்டு. ஒரு கம்யூனிஸ்ட் இந்த மூன்றையும் எதிர்க்கவேண்டும் என்றார். செய்யவில்லையே! இந்தக் காரியத்தைப் பெரியார்தான் செய்தார்!

தொழிலாளர்களைத் திரட்டிப் போராடத் தயாரிக்கும் பணியில் ஜாதி முக்கிய பங்கு ஆற்றியது எனும் வரலாற்று வரிகளைப் படிக்கும் போது, எவரும் வெட்கப்படாமல் இருக்க முடியாது. தொழிற்புரட்சி உருவான இங்கிலாந்து நாட்டில் புதிதாகத் தொழிலாளர் எனும் பிரிவு தோன்றியது. இவர்களின் பாதுகாப்பிற்காகத் தொழிற்சங்கங்கள் 1830ஆம் ஆண்டில் உருவாகின. நான்கு ஆண்டுகளில் ராபார்ட் ஓவன் தொழிலாளர்களின் முதல் மாநாட்டைக் கூட்டித் தொழிற்சங்கம் ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவில் 1874_இல் “இந்தியத் தொழிலாளி’’ (பாரத் சிரமஜீவி) எனும் வங்க மாத இதழ் தொடங்கப்பட்டது. நடத்தியவர் பிரம்ம சமாஜத்தின் சசிபாத பேனர்ஜி என்பவர். அவரே 1870இல் “தொழிலாளர்களின் குழு’’ என்பதாக ஓர் அமைப்பை உருவாக்கியிருந்தார். பிரம்ம சமாஜ இயக்கம் 1878 இல் தொழிலாளர்கள் மத்தியில் மதரீதியான நெறிமுறைகளைப் பரப்பும் நோக்குடன் “தொழிலாளர்களுக்கான இயக்கம்’’ ஒன்றை ஏற்படுத்தியது. உழைக்கும் வர்க்கத்தின் முதல் மத வித்து இதுவே!

ஜாதி உணர்வு

தொழிலாளிகள் வேலை கிடைக்க மேஸ்திரிகளையே நம்பி இருந்தனர். இன்றைய கட்டடத் தொழிலாளர்களைப் போல! நிரந்தரமான வேலை வாய்ப்பு என்பதெல்லாம் அப்போது கிடையாது. இந்த மேஸ்திரிகள் எல்லாம் யாரை வேலைக்குச் சேர்த்து விடுவார்கள் என்றால், தங்கள் ஊரைச் சேர்ந்தவர்களாகவும், தங்கள் ஜாதியைச் சேர்ந்தவர்களாகவும் பார்த்து வேலைக்கு எடுத்தார்கள். மண் அபிமானமும் ஜாதிப்பற்றும் நிலை கொண்டன.

1906 ஜூன் மாதத்தில் கல்கத்தாவில் அச்சகத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் செய்யப்பட்டது. வந்தேமாதர முழக்கத்துடன்தான் தொழிலாளர் மத்தியில் எழுப்பப்பட்டது என்பதிலிருந்தே இதன் வெறுப்பு யார் மீது என்பதைப் புரிந்து கொள்ளலாம். வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களிடையே “சிறப்புரை’’ நிகழ்த்திட திலகர் அழைக்கப்பட்டிருந்தார். பம்பாய்க்காரரான அவர், அச்சகக்காரர் என்பதால் போராடும் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவன் எனக் கூறிக்கொண்டு, காலங்காலமாக நீடித்துவரும் மதம், ஜாதி நடைமுறைகள் ஆகியவற்றை தொழிலாளர் சங்கங்களுக்காக எந்த முறையில் சாதகமாக ஆக்கிக் கொள்வது’’ என்பது பற்றித்தான் விரிவுரை நிகழ்த்தியதாக “பெங்காலி’’ எனும் வார ஏடு 9-.6.1906, 13.6.1906 ஆகிய இதழ்களில் செய்தி வெளியிட்டது.

“ஜாதி அடிப்படையில் திலகரும் அவரது வாரிசுகளும் பிராமணர்களாக இருந்த நிலையில், கீழ் ஜாதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் இயற்கையாகவே அவர்கள்மீது மிகுந்த மரியாதை கொண்ட போக்கினைக் கொண்டிருந்தனர். அவர்களை அணிதிரட்டும் நடவடிக்கைகளில் இந்த ஜாதிப் பெருமையை திலகரின் ஆதரவாளர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

பார்ப்பனர் போக்கு

இதைப் போலவே, வங்காளத்திலும் கூட அரவிந்த கோஷ் (பிற்காலத்தில் பண்டாரமாகிவிட்டவர்) பிபின் சந்திரபால் மற்றும் இதர தீவிரவாத தேசியவாதிகள் மதரீதியான வேண்டுகோள்களுடன்தான் தொழிலாளர்களையும் பொது மக்களையும் அணுகி வந்தனர். (பார்க்க: இந்தியத் தொழிலாளி வர்க்கம் ஆசிரியர் சுகுமால் சென்_பக்கம் 177). இந்துமத , ஜாதிவெறி மதரீதியான மூட நம்பிக்கைப் பழக்க வழக்கங்கள் தொழிலாளர் வர்க்கத்தின் மீது வலுப்படுத்தப்பட்டு விஷத்தன்மையை வளர்த்து விட்டன. இந்தியாவின் முதல்பெரு நகரம் கல்கத்தாவும் இரண்டாம் பெரு நகரம் பம்பாயும் போட்டி போட்டுக் கொண்டு விஷ வித்துக்களைத் தொழிலாளர் வர்க்கத்தில் ஊன்றினர். வங்காளத்தில் காளிமாதா, துர்க்கா பூஜை பிரபலப்படுத்தப்பட்டு இதற்குப் பயன்படுத்தப்பட்டது. பம்பாயில், சிவாஜி விழா, கணபதி விழா பிரபலப்படுத்தப்பட்டது பால கங்காதர திலகரால். இதேநபர்தான் “பசு பாதுகாப்புக் கழகம்’’ என்பதைத் தொடங்கி இந்து கலாச்சாரம் எனும் பெயரில் ஆரிய கலாச்சாரத்தைப் பரப்பினார்.

உணவு தீட்டாயிடுத்து

இவர்கள் ஊன்றிய விஷவித்து “விஷ விருட்சகமாக’’ வளர்ந்துவிட்ட கொடுமையை பம்பாயில் நடந்த வேலை நிறுத்தச் சம்பவம் காண்பிக்கிறது. 1907 மே மாதத்தில் பரேல் ரயில்வே பணிமனைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. மொத்தம் 3500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட மகத்தான வேலை நிறுத்தம். தொழிற் சங்கங்களின் சார்பாக நடத்தப்படும் வேலை நிறுத்தங்களுக்கான வழக்கமான காரணங்களோடு சிறப்புக் காரணம் ஒன்றை அப்போது வெளிவந்த “டைம்ஸ் ஆஃப் இந்தியா’’ நாளேடு 4.5.1907 இல் சுட்டிக்காட்டியது. ரயில்வே பணிமனைத் தொழிலாளர்கள் பணிக்கு வருவதற்கும், வந்ததைப் பதிவு செய்வதற்கும் வழங்கப்பட்ட டிக்கெட்களைப் பெற்றுக் கொள்ளத் தொழிலாளர்கள் கூடினர். வரிசையில் நின்று செல்வது எனும் (க்யு) பழக்கம் இன்றைய இந்தியர்களிடையே கூட இல்லாத நிலையில் 1907 இல் நிலை எப்படி இருந்திருக்கும்? ஆடு, மாடுகளைப் போலவே கூடி நின்று கொண்டிருந்தனர். அதில் வந்தது விளைவு. பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக நிற்க வேண்டிய நிலையில், அவர்கள் கொண்டு வந்திருந்த உணவு (டிபன்பாக்ஸ்) மனிதர்களின் உடலில் பட்டுவிட்டதால், தீட்டுப்பட்டுப் போய்விட்டது எனப் புகார் எழுந்தது. சேர்ந்து சாப்பிட மறுக்கும் ஜாதிக் காரர்களான பார்ப்பனர்கள் தான் இந்தப் பிரச்சினைக்குக் காரணம். அதுவே, வேலைநிறுத்தத்திற்கான பெருங்காரணமாக அமைந்தது என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு!

இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், காந்தியாரின் பிரவேசம் அமைந்தது. தொழிற் சங்கங்களில் தொழிலாளர் வர்க்கம் சேர்வதையே அவர் எதிர்த்தார். முதலாளிகளை “தர்ம கர்த்தாக்கள்’’ ஆகப் பாவிக்க வேண்டும் என்ற உபதேசத்தைச் செய்தார். எந்திரங்களை அவர் எந்த அளவுக்கு வெறுத்து எதிர்த்தார் என்பதை நாம் அறிவோம். தக்ளியும் ராட்டையும் போதும் அந்நிய ஏகாதிபத்யத்தை எதிர்த்து விரட்டுவதற்கு என்று கருதிப் பேசிவந்தவர். எல்லாத் தீமைகளுக்கும் எந்திரங்களே காரணம் எனக் கூறி வந்தவர், இந்து வர்ணாசிரம முறை பழங்காலத்தில் இருப்பது போல மீண்டும் வரவேண்டும் என்று விரும்பியவர். அந்த முறைப்படி சூத்திரன் பிறவித் தொழிலாளி; கூலியை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியவன்; கொடுப்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். கூலி உயர்வு என்ற சொற்களே அவன் அறியாதவையாக இருக்க வேண்டும் என்பதுதானே வர்ணாசிரம முறை? அவர் போன்ற சனாதனிகள்தான் இந்தியத் தொழிற்சங்க இயக்கத்தின் தொடக்ககாலத் தலைவர்கள்; வழிகாட்டிகள். அதன் தாக்கம்தான் இன்னமும் நீடித்துக் கொண்டிருக்கிறதோ?

திலகரின் மோசடி

இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். அரசியலில் மதத்தைக் கலந்து குழப்பிக் குளிர்காய்ந்த முதல் நபர் பாலகங்காதர திலக் எனும் மாராட்டிப் பார்ப்பனர். இங்கிலாந்துக்குப் போய்த் திரும்பிவந்த திலக் 1919 நவம்பர் 29 ஆம் தேதியன்று பம்பாயில் தொழிலாளர்களின் கூட்டத்தில் பேசுமாறு அழைக்கப்பட்டார். “இந்தியாவில் அனைவருமே தொழிலாளிகள்தான். கிறித்துவமதம் உழைப்பை சாபமாகக் கருதுகிறது. இந்துமதமோ அதனை வரமாகக் கருதுகிறது. மனிதர்களுக்கிடையே தொழிலாளர்கள் என்றும் எஜமானர்கள் என்றும் பேறுபடுத்திப்பார்ப்பது தவறு’’. என்று பேசியிருக்கிறார். (தரவு: இந்தியத் தொழிலாளிவர்க்கம் நூலின் பக்கம் 247) இந்த லட்சணத்தில் தொழிலாளர்க்கு “மதம் இல்லை, ஜாதியில்லை’’எனும் முழக்கம் வரும் என எதிர்பாக்கமுடியும்?

உழைப்பை வரமாக இந்துமதம் கருதிய காரணத்தால்தானோ என்னவோ, எல்லா நாடுகளுக்கும் எட்டு மணிநேர வேலை எனக் கூறிய உலகத் தொழிலாளர் அமைப்பு (அய்.எல்.ஓ.) இந்தியாவுக்கு இதனை நிர்ணயிக்கவில்லை. ஆனால் இந்தியத் தொழிலாளர்கள் 1862 ஆம் ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் நடத்திய அவுரா ரயில் நிலைய வேலை நிறுத்தத்தின் முக்கிய கோரிக்கையே 8 மணிநேர வேலை என்பதுதான். 1866 ஆம் ஆண்டில்தான் 8 மணிநேர வேலை என்பதை ஜினிவாவில் கூடிய அனைத்துலக தொழிலாளர் காங்கிரசு முடிவு எடுத்தது. அதற்கும் முன்பாகவே இந்தியத் தொழிலாளர்கள் இந்தக் கோரிக்கையை வைத்துப் போராடி உள்ளனர். உழைப்பது வரமா, சாபமா என்பதைத் திலக்தான் கூறவேண்டும்.

எப்படியோ, பிறந்து வளர்ந்து செல்வாக்கு பெற்றிருந்த தொழிலாளர் சங்கங்கள் இன்று பலவாகப் பிரிந்து பலகீனமாகிவிட்டதை வருத்தத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றாகி விட்டது.

எனவே, வருண பேதம் வர்க்க பேதம் இரண்டையுமே எதிர்த்தால்தான் உரிமையும் உடைமையும் பொதுவாக முடியும். பெரியார் வழியில் போராடினால்தான் இந்த இலக்கை அடைய முடியும்.


------------------சு.அறிவுக்கரசு அவர்கள் எழுதிய கட்டுரை -”விடுதலை” 12-12-2009


0 comments: