Search This Blog

2.12.09

வீரமணி - பெரியாரின் வளர்ப்பு மகனா?

பெரியாரின் வளர்ப்பு மகனா? எஸ்.வி.அய்யர் கேள்வி

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரச் சிறப்புப் பட்ட வகுப்பு (பி.ஏ.ஆனர்ஸ்) இறுதி ஆண்டில் பயிலும்போது, எனது பெருவிருப்பம் நிறைவேறியது. அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களை நான் பல்கலைக்கழகத்தினை விட்டு வெளியேறுமுன் எப்படியாவது அழைத்து வந்து அண்ணாமலை நகர்க் குளக்கரையிலாவது பேச வைத்துவிட வேண்டும் என்பதே அது.

அய்யாவை அணுகி நாங்கள் மாணவர்கள் தேதி கேட்டோம். கொடுத்துவிட்டார்கள். அப்போது தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் பற்றிய அனைத்துக் கட்சிப் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பிய நேரம். முதலில் தந்தை பெரியார் அவர்களுடன் இணைந்து போராடுவதற்கு ஒப்புக் கொண்ட தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் ஏதேதோ சாக்குகள் கூறிப் பிறகு மறுத்துவிட்டார். அதுபற்றி எல்லாம் தந்தை பெரியார் அவர்கள் அப்போது அண்ணாமலை நகர் திருவேட்களக் குளக்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். அந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியவன் நான், திராவிட மாணவர் கழகத் தோழர்கள் ஓரளவு கணிசமாகச் சேர்ந்துவிட்டனர்.

அப்பல்கலைக்கழகத்தில் நான் முதல் ஆண்டில் அடியெடுத்து வைத்தபோது, தி.க.மாணவர் யாருமே இல்லை என்பது போன்றதொரு நிலை. நான் அதை மாற்றிட உறுதி பூண்டு உழைத்தேன். நண்பர்கள் சி.வெள்ளையன் (பேராசிரியர்) செங்குட்டுவன் என்ற பூவராகவன், (இவர் தி.மு.க.விலிருந்து மாறியவர்), சக்ரபாணி, எம்.கே.சுப்ரமணியம், தங்கவேலு, சிவசுப்ரமணியம், நடராசன் (பொறியாளர்), பாலசுப்ரமணியம் இப்படிப் பலரும் பெருகிய நிலையில், மற்றப் பொது மாணவர்களின் பேராதரவுடன் கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அய்யா அவர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் கணீர் கணீர் எனப் பேசினார்கள்.

மாணவர்களை நான் எப்போதும் நம்புவதே இல்லை. நீங்கள் எல்லாம் ஏதோ ஒரு பருவத்தில் தீவிரமாகப் பேசுவீர்கள். பிறகு உங்களுக்கு இறக்கை முளைத்தவுடன் வாழ்க்கை, கல்யாணம், பிள்ளைகுட்டி, பதவி, பிரமோஷன் என்று போய்விடுவீர்கள். உங்கள் பல பேருக்குச் சமுதாயத் தொண்டு ஆற்ற வேண்டும் என்ற எண்ணமே வராது. அதையும் தாண்டிப் பொது வாழ்க்கைக்கு வந்தால், ஏதோ அரசியலில் பதவிபெற்று பொறுக்கித் தின்கிற ஆசைக்கு தீனி போடும் அளவுக்குத்தான் உங்கள் பொது வாழ்வு இருக்குமே தவிர, நமது சமுதாயத்தில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகக் கவ்வியுள்ள சாதி இழிவை, மடமையை ஒழிப்பதைப் பெரிய தொண்டாகக் கொண்டு இருப்பீர்களா என்பதில் எனக்கு மிகவும் சந்தேகம்தான். ஆனால் இங்கே நீங்கள் காட்டியுள்ள உற்சாகம், கொடுத்த வரவேற்பு இவைகள் எல்லாம் என்னை மிகவும் தெம்பூட்டி நம்பிக்கை வைக்கச் செய்கின்றன. பொதுவாக நான் அவ்வளவு எளிதாக இளைஞர்கள் எவரையும் நம்பி விடுவதில்லை என்று தனது மனதில் பட்டதை ஒளிவுமறைவு இன்றி அப்பட்டமாக அய்யா பேசினார்.

மாணவர் உலகம் அதனை ஒருகணம் அன்று திகைத்துப் போய்க் கேட்டது என்றாலும், தத்துவத்தில் தந்தை பெரியார் அவர்கள் சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்? அவர் எதை எப்படிப் பார்க்கிறாரோ அதை அப்படியே ஒளிவு மறைவு இன்றிக் கூறி விடுகிறார். இப்படிப்பட்ட தலைவர் ஒருவரை எங்கே காண முடியும் என்றெல்லாம் கூட்டத்தைக் கேட்ட எங்கள் பேராசிரியர்கள் கூறினர். தந்தை பெரியார் பல்வேறு செய்திகளை விளக்கியதைப் பேராசிரியர்கள் சுவைத்துக் கேட்டனர். மாணவர்கள் சிந்தனையை நன்றாகத் தூண்டும் சுடராக அவரது பேச்சு கிளறிவிட்டது என்பது பொதுவானவர்களது கருத்து. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினால் எப்படித் தமிழர், குறிப்பாக ஒடுக்கப்பட்ட, ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தபட்டவர்கள் கல்வி வாய்ப்பினைப் பெற முடிகிறது என்பதை விளக்கிவிட்டு, எங்கே நீங்கள் ஸ்டிரைக் செய்தாலும் இந்தச் சிதம்பரம் அண்ணாமலை சர்வகலாசாலையில் மட்டும் செய்யாதீர்கள். அது உங்கள் கண்ணில் கொள்ளிக்கட்டையை எடுத்து நீங்களே குத்திக் கொண்டதாகும் என்று ஒரு தகப்பனார் குழந்தைகளுக்குச் சொல்லும் அறிவுரையாகவே அதனைக் கூறினார்.

கூட்டம் இரவு முடிந்து அய்யாவை மிகுந்த மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தோம். அடுத்த நாள் திங்கள் கிழமையன்று என் பேராசிரியர் எஸ்.வி.அய்யர் அவர்களிடமிருந்து எனக்குத் தனி அழைப்பு சந்திக்குமாறு ஓலை வந்தது. மற்றவர்கள் ஏதோ தண்டனைக்கு வீரமணி ஆளாகப் போகிறான் என்றுதான் எதிர்பார்த்தார்கள். நான் உள்ளே நுழைந்தவுடன் என் பேராசிரியர் எஸ்.வி.அய்யர் என்னை அமரச் சொல்லிவிட்டு, முதல் கேள்வியே, நேற்று நீ ராமசாமி பெரியார் நாயக்கர் கூட்டத்திற்குத் தலைமை வகித்தாயா? என்றார்.

ஆம் என்றேன்.

அவருக்கு வளர்ப்பு மகன் நீ என்று சிலர் என்னிடம் சொன்னார்களே, அது உண்மையா? அவர் மிகப்பெரிய தலைவர். பெரிய சீர்திருத்தக்காரர். எதிர்நீச்சல் போடுபவர் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று கேட்டவுடன்,

நான், இல்லை, உங்களிடம் யாரோ தவறான தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். அவருடைய வளர்ப்பு மகன் அல்ல நான். அவரது கொள்கையால் ஈர்க்கப்பட்டு, அவரது இயக்கத்தில் எனது 10 வயது முதலே ஈடுபாடு கொண்டு உழைப்பவன். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறைகளில் நான் வெளியூர்களுக்குச் சென்று பொதுக்கூட்டங்களில் கூடப் பேசித் திரும்புவது உண்டு என்று ஒளிவுமறைவு ஏதும் இன்றி வெளிப்படையாகவே என்னைப் பற்றிச் சொல்லிவிட்டு, அவர் யாரையும் வளர்ப்பு மகனாக எடுக்க மாட்டார். எல்லோரையும் அவர் நேசிப்பவர் என்று கூறியவுடன் அதை அவர் பாராட்டி, நீங்கள் நன்றாகப் படிக்கும் முதல் மாணவர். உங்கள் கவனம் இப்போது கட்சி அரசியலில் அதிகமாக இருந்தால் படிப்பின் உத்வேகம் குறையக்கூடும். அதற்கு இடம் தராமல் நீங்கள் உங்கள் பணிகளைச் செவ்வனே செய்யுங்கள் என்றெல்லாம் அறிவுரை சொல்லி அனுப்பினார்.

தந்தை பெரியார் மாணவர்களுக்கு நல்லொழுக்கத் தினையும் கட்டுப்பாட்டினையும் போதித்துப் பேசியதைப் பல வட்டாரங்களிலும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பேசி மகிழ்ந்தனர். அது என் பேராசிரியர் எஸ்.வி.அய்யர் காதுக்கும் எட்டியதால் அவர் ஆவல் மிகுதியோடு என்னை அழைத்துப் பாராட்டிப் பேசினார்.

0 comments: