Search This Blog

22.12.09

பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும்

சிங்கப்பூரில் ஒரு பெண்மணிக்கு பெரியார் விருது:
பாராட்டுகிறேன்- பெருமைப்படுகிறேன்-தமிழர் தலைவர் விளக்கவுரை


சிங்கப்பூரில் பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பில் பெரியார் விருது கொடுக்கப்பட்டதை பாராட்டுகிறேன், பெருமைப்படுகிறேன் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர்தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சிங்கப்பூர் நாட்டில் 8.11.2009 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர்தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

புரட்சிக் கவிஞர் பாடலுக்கேற்ப

மிகுந்த எழுச்சியோடு சிங்கப்பூர் நாட்டில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பாடிய பாட்டுக்கு இலக்கணத்திற்கேற்ப இலக்கியங்கள் இருப்பதைப் போல சிறப்பான வகையிலே,

‘‘தொண்டு செய்து பழுத்தபழம்
தூயதாடி மார்பில் விழும்

மண்டைச் சுரப்பை உலகுதொழும்

மனக்குகையில் சிறுத்தை எழும்

அவர்தாம் பெரியார்!’’

என்றார் புரட்சிக் கவிஞர். தந்தை பெரியார் அவர்களுடைய மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்ற சிறப்பான சொல்லாட்சியை புரட்சிக் கவிஞர் அவர்கள் தந்திருக்கிறார்கள்.

தந்தை பெரியாரின் மண்டைச் சுரப்பு சுரந்து கொண்டேயிருக்கும். அதுவும் இறைக்க இறைக்க அவருடைய அறிவு சுரந்து கொண்டேயிருக்கும். அதனால்தான் தந்தை பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று சொன்னார்கள்.

இன்றைக்கு சிங்கப்பூர் நாடு தந்தை பெரியாருக்கு எடுத்திருக்கின்ற விழா புரட்சிக் கவிஞரின் வரிகள் உண்மையாக ஆகியிருக்கின்றன என்பதை எல்லோருக்கும் தெளிவுபடுத்தக் கூடிய இந்த விழாவிற்கு, மாட்சிமையோடு நடைபெறக்கூடிய இந்த விழாவிற்குத் தலைமை ஏற்றியிருக்கக் கூடிய சிங்கப்பூர் சமூக சேவை மன்றத்தினுடைய ஆற்றல் மிகு தலைவர் அன்புச் சகோதரர் மானமிகு, மதிப்புமிகு வீ.கலைச்செலவம் அவர்களே!

இதுவரையிலே ஒவ்வொரு முறையும் இணைப்புரை என்று வழங்கக்கூடியவர்கள் தமிழ்நாட்டிலே வந்தாலே இது பற்றிய அனுபவம் பல கூட்டங்களில் எங்களுக்கு உண்டு. இவர் ஏன் இவ்வளவு நீளம் பேசிக்கொண்டிருக்கிறார் என்று கூட்டத்திலே இருக்கிற சிலர் முணுமுணுப்பதுண்டு.

மேடையிலே இருக்கக்கூடிய நாங்களும் சில நேரங்களில் நெளிவதுண்டு. ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக இணைப்புரையே எவ்வளவு சிறப்புரையாக இருக்கும் என்பதற்கு அழகாக நம்முடைய ஆற்றல் மிகு பகுத்தறிவுக் கவிஞர், சிறந்த எழுத்தாளர், சிறந்த சிந்தனையாளர், எல்லாவற்றிற்கும் மேலாக தலைசிறந்த பகுத்தறிவாளர் அன்பு சகோதரர் மானமிகு மா.அன்பழகன் புதுமைத்தேனீ அவர்களே!

தேனீக்கள் சில நேரங்களிலே தேன் சேர்ப்பதோடு நின்று விடாது, கொட்டவும் செய்யும். எப்பொழுது? அதனிடம் குறும்பு செய்தால். அவ்வளவு தானே தவிர வேறு கிடையாது.கொள்கையோடு அவர்கள் இருப்பார்கள், பாராட்டத் தகுந்த வகையிலே.

செம்மொழி மாநாட்டிற்கு சில கோரிக்கைகள்

சிங்கப்பூரில் இலக்கியச் செம்மல் என்று எங்களாலே எப்பொழுதும் மதிக்கப் பெற்றவர். சிங்கப்பூரிலே சிறப்பான விழாக்கள் என்று சொன்னால் அங்கே இலியாஸ் அவர்களுடைய உரை நிச்சயம் இடம்பெறும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, சிறப்பான ஒரு வரலாற்று உரை இருக்கும் அமைச்சர்கள், அரசாங்கத்தவர்களிடத்திலே எங்கள் நாட்டிலே கோரிக்கைகள் வைப்பதுண்டு. ஆனால் கடல் கடந்து வந்த நிலையிலே, தமிழ்நாடு அரசுக்கு எங்கள் மூலமாகக் கோரிக்கை வையுங்கள்; செம்மொழி மாநாட்டிலே இதையொட்டி சில கருத்துகளை எல்லாம் செய்ய வேண்டும் என்று கூறிய அருமை இலியாஸ் அவர்களே!

இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு சிறப்பாக இந்த மலரை வெளியிட்டிருக்கக்கூடிய பெரியார் பன்னாட்டமைப்பைச் சார்ந்த இயக்குநர்களில் ஒருவரான அருமை டாக்டர் இலக்குவன்தமிழ் அவர்களே! டெக்சஸ் மாநிலத்திலே இருக்கக் கூடிய டெக்சஸ் பல்கலைக் கழகத்திலே டெலசிலே மிகப்பெரிய பொறியாளராக இருக்கக் கூடியவர் அவர். அவர்களுடைய கண்டுபிடிப்புகள் (பேட்டர்ன்) பதிவு செய்யப்பட்ட கண்டு பிடிப்புகளாக இருக்கின்றன. அதைப் பார்த்து நாம் மிகுந்த பெருமையடைய வேண்டும். அத்தகைய பெருமைக்குரிய இலக்குவன் தமிழ் அவர்களே!

அமெரிக்க பரந்தநாடு என்று சொன்னாலும் கூட, அய்க்கிய அமெரிக்காவிலே கனடா உள்பட எல்லா இடங்களிலும் நன்றாகத் தெரிந்த ஒரு சமூக சேவையாளர், ஒருவர் உண்டு என்று சொன்னால், மனித உரிமைகள் எங்கெல்லாம் பறிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் தன்னை முன்னிறுத்திக் கொள்ளக் கூடியவர்; அமைப்புகள் உருவாகும் பொழுது பதவிகளிலே பொறுப்புகளிலே அமராது, பின்னாலே இருந்து கொண்டு மற்றவர்களை சிறப்பாக இயக்கக்கூடிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் நிறுவன இயக்குநர்களிலே ஒருவரான அன்பு சகோதரர் குறிப்பாக என்னுடைய வாழ்வை நீட்டித் தந்திருக்கக் கூடிய அன்பு சகோதரர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் ஆவார்கள்.

நம்முடைய பெருங்கவி சிங்கப்பூரின் சிறப்புகளிலே ஒருவராகத் திகழக் கூடிய முதுபெரும் வெண்பா பாவலர் இக்குவனம் அவர்கள் நான் நல்ல உடல்நலத்துடன் வாழ வேண்டும் என்று வெண்பா பாடினார்.

18 ஆண்டுகளுக்கு முன்பே

அந்த உடல்நலத்தை 18 ஆண்டுகளுக்கு முன்னாலேயே, முடிந்திருக்கக் கூடிய என்னுடைய வாழ்வைப் பாதுகாத்துத் தந்த பெருமை அமெரிக்க சிகாகோ டாக்டர் இளங்கோவன் அவர்களுக்கு உண்டு என்பதை மிகுந்த நன்றி உணர்ச்சியோடு நான் இந்தநேரத்திலே பதிவு செய்கின்றேன். அதுவும் இந்த அவையை சாதாரண அவையாக நான் கருதவில்லை. சிங்கப்பூரின் மொத்த வடிவமும் இங்கே எழுத்தாளர்களாக, ஆசிரியர்களாக, பேச்சாளர்களாக, கவிஞர்களாக, வணிகப்பெருமக்களாக, பேராசிரியர்களாக, சிந்தனையாளர்களாக இருக்கக் கூடிய அவையாக இருக்கிறது இந்த அவை.

பதிவு செய்ய விரும்புகிறேன்

இதை நான் பெருமையாகப் பதிவு செய்ய விரும்புகின்றேன். அது போலவே ஒரு சிறப்பு. இந்த நிகழ்ச்சிக்கே மகுடம் வைத்ததைப் போன்று ஒரு நிகழ்ச்சி என்று சொன்னால், அருமைச் சகோதரியார் சிங்கப்பூர் தேசிய வாரிய நூலக மூத்த அதிகாரி திருமதி புஷ்பலதா அவர்களுக்கு பெரியார் விருது அளித்தது தான் இந்த நிகழ்ச்சியின் மகுடம் என்று நான் கருதுகின்றேன். (கைதட்டல்). அது மட்டுமல்ல; இதில் என்ன சிறப்பு என்றால், சிங்கப்பூரில் முதல் பெரியார் விருது மகளிருக்குத் தரப்படுகிறது என்பதுதான் பெரியார் கண்ட கனவை சிங்கப்பூரில் நனவாக்கியிருக்கின்றார்கள்.

இந்த இலட்சியத்தினுடைய வெற்றி மலரை எல்லா மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு புரிந்திருக்கிறார்கள் என்கிற அளவுக்குப் பெருமைமிகு அம்மையார் புஷ்பலதா அவர்களே! அவர்களைப் பொறுத்தவரையிலே ஒன்று வெறும் பெண்மணி என்பதற்காக இந்த விருது கொடுக்கப்படவில்லை. மாறாக அவர்கள் ஆற்றல் வாய்ந்த ஒரு மேலாண்மையர், நிருவாகி.

என்சைக்ளோபீடியா போல

எந்தப் பொறுப்பை எடுத்தாலும் சிறப்பாகச் செய்யக் கூடியவர். எங்களுக்கு ஒரு சில ஆண்டுகளாகத்தான் சிறப்பான அறிமுகம் உண்டு. தேனீயை மிஞ்சக்கூடிய சுறுசுறுப்பு அவர்களிடத்திலே உண்டு. அதே போல எதைக் கேட்டாலும், ஒரு என்சைக்ளோபீடியா மாதிரி உடனடியாக நூலகத்திலே தகவல்களைச் சொல்லுவார்கள்.

நான் இங்கே வரும்பொழுது பெரும்பாலும் செல்லுகின்ற ஓர் இடம் உண்டென்றால், அது தேசிய நூலகம்தான். அங்கே போகும்பொழுது இன்முகத்தோடு வரவேற்பவர்.

சிங்கப்பூரின் பெருமைகளிலே ஒன்று. சிங்கப்பூர் தேசிய நூலகம். அந்த நூலகத்தை சிறப்பாக வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியவர்.

நூலகங்கள் என்றால் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பது மட்டுமல்ல; புத்தகம் என்பது ‘‘புத்த அகத்தை’’ உண்டாக்குவது, புதுமையான அகத்தை தமிழர்களுக்கு உருவாக்குவது என்று சொல்லக்கூடிய ஒரு புத்தகப் பரப்பாளர். புத்தகத்தை உருவாக்கக் கூடியவர், எழுத வேண்டிய அவசியமில்லை. அப்படிப்பட்ட அருமையான ஒருவருக்கு பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பில் அருமையான பெரியார் விருதை அளித்திருக்கிறீர்கள்.

உங்களுக்கு அதற்காகவே வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

‘‘இதனை இதனால் இவன் முடிப்பான் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்’’

என்று வள்ளுவர் அவர்கள் சொன்னாலும் கூட அதிலே கூட எங்கேயோ ஒரு மூலையில் ஆதங்கம்.

இதனை இதனால் இவன் முடிப்பனென்று இருக்கிறது.

அய்யா பேராசிரியர் திண்ணப்பன் போன்றவர்கள் நம்முடைய தமிழறிஞர் கேசவன் போன்றவர்கள் எனக்குத் தெளிவூட்டுவார்கள்.

அது அப்படி அல்ல; அவன் என்று சொன்னாலும் அவளையும் குறிக்கும் என்று சொல்லி வள்ளுவரைக் காப்பாற்றுவார்கள். வாழ்க வள்ளுவர்! அரங்கம் நிரம்பி வழியக் கூடிய இந்த நிகழ்ச்சியிலே பங்கேற்றிருக்கின்ற சமூக சேவையாளர்களுக்கு நன்றி.

அது போலவே இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பாக ஏராளமான நண்பர்கள் வந்திருக்கின்றார்கள். அருமைச் சான்றோர்களே வந்திருக்கிறார்கள். பேசுவதைவிட உங்களுடைய அன்பில் மிதந்து கொண்டிருக்கக் கூடிய வாய்ப்பை நான் பெற்றிருக்கின்றேன். இதை எண்ணி, எண்ணிப் பூரிப்படைகின்றேன். என்னுடைய உடல் நலம் பற்றி சிங்கப்பூர் கவிஞர் அய்யா இக்குவனம் அவர்கள் சொன்னார்கள். உடல்நலம் என்பது உள்ள நலத்தைப் பொறுத்தது.

இப்படிப்பட்ட ஆர்வமானவர்களைப் பார்க்கும்பொழுது உங்களைத் தான் சிறந்த மருந்தாக நான் கருதுகின்றேன். அந்த வகையிலே உங்கள் எல்லோருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். தனித்தனியாக நன்றி சொல்லுவதற்குப் பதிலாக எல்லோருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

----------------------------தொடரும் . “விடுதலை” 21-12-2009

1 comments:

அஹோரி said...

கலி காலம். என்ன கொடுமை சாமி இது ?