Search This Blog

13.12.09

பட்டறிவு, உலகறிவு, சுயசிந்தனை = தந்தைபெரியார்


‘பயணம்’

தந்தை பெரியார் அவர்கள் இதே டிசம்பர் 13 இல் தான் (1931) மேல்நாட்டுச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்.

‘அப்போசா’ என்ற பிரஞ்சுக் கப்பலில் நான்காவது வகுப்பில் (டெக்கில்) எஸ். ராமநாதன், ஈரோடு ராமு ஆகியோருடன் பயணம் மேற்கொண்டார்.

எகிப்து, கிரீஸ், துருக்கி, ருசியா, ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், பிரான்சு, போர்ச்சுக்கல், இலங்கை முதலிய நாடுகளுக்குச் சென்று 8.11.1932 இல் தூத்துக்குடி துறைமுகம் வந்து சேர்ந்தார்.

தந்தை பெரியார் மிக அதிக நாள்கள் தங்கியிருந்தது ருசியாவில்தான் (கிட்டதட்ட 3 மாதங்கள்), முக்கிய நகரங்கள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், நாடக அரங்குகள், சுவடி நிலையங்கள், படிப்பிடங்கள், தொழிலாளர் சங்கங்கள், விவசாயப் பண்ணைகள் முதலிய இடங்களை நேரில் பார்த்து அவற்றின் நடப்புகளையும், மக்கள் வாழ்க்கை முறைகளையும் அறிந்து கொண்டார்.

அரசு விருந்தினராகவே ருசிய அரசு தந்தை பெரியாரை அறிவித்தது. ஜீனா பிலிகினா (Jina Pilikina) என்ற பெண் மொழி பெயர்ப்பாளரை அரசே தந்தை பெரியாருக்கு அளித்தது.

சோவியத் ஒன்றியத்தின் ஜனாதிபதி காலினின் அவர்களால் வரவேற்கப்பட்டு, அவருடன் பல மணி நேரம் தந்தை பெரியார் உரையாடினார்.

ஸ்டாலின் முன்னிலையில் நடந்த மே தின விழாவிலும் தந்தை பெரியார் கலந்து கொண்டார். இந்தியாவிலிருந்து வந்துள்ள நாத்திகத் தலைவர் என்று தந்தை பெரியார் ஸ்டாலினுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

மே தினப் பொதுக் கூட்டம் ஒன்றிலும் தந்தை பெரியார் உரையாற்றினார். இந்தியாவின் கீழ் நிலையையும், வறுமையையும் எடுத்துக் கூறினார்.

ருசியா செல்லும் முன்பே, காரல்மார்க்ஸ் _ ஏஞ்சல்ஸ் அறிக்கையை தமிழில் மொழி பெயர்த்து குடிஅரசில் வெளியிட்டவர் (4.10.1931) தந்தை பெரியார். தனது எண்ணங்கள் ருசியாவில் செயல்பாட்டில் இருப்பதை உறுதிபடுத்திக் கொண்டதாகவும் கூறியிருக்கிறார். ருசியா சென்று வந்தபின் நான் கற்றது ஒன்றும் இல்லை என்று கூட விருதுநகரில் பேசியிருக்கிறார் (“குடிஅரசு’’ 12.3.1933)

வரும் வழியில் இங்கிலாந்துக்கும் சென்றார். பிரபல தொழிலாளர் சங்கத் தலைவர் சக்வத்வாலாவைச் சந்தித்து உரையாடினார். மேக்ஸ்பரோ லேக்பார்க்கில் நடைபெற்ற 50 ஆயிரம் தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றிய தந்தை பெரியார், பிரிட்டிஷ் தொழிற்கட்சி அரசு இந்தியாவில் கடைப்பிடிக்கும் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்தார்.

பட்டறிவு, உலகறிவு, சுயசிந்தனை இவற்றின் ஒட்டு மொத்த வடிவம்தானே தந்தை பெரியார்! வசதிகள் மிகவும் குறைவான அந்தக் காலத்தில் கப்பலில் பயணம் செய்வது என்பது அசாத்தியத் துணிவுதான். அறிவும், துணிவும் சேர்ந்த மானுடச் செவ்வியர் தந்தை பெரியாரின் ஒவ்வொரு செயல்பாடும் அசாதாரணமாகவே உள்ளது.

--------------- மயிலாடன் அவர்கள் 13-12-2009 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: