Search This Blog

10.12.09

தமிழக மீனவர்களின் வாழ்வுரிமைப் போராட்டமும்-கச்சத்தீவும்



ஈழத் தமிழர்கள் பிரச்சினையாக இருந்தாலும் சரி, தமிழக மீனவர்கள் பிரச்சினையாக இருந்தாலும் சரி, பாதிக்கப்படுவது மட்டும் கண்டிப்பாக தமிழர்களாகவே இருப்பார்கள் என்பது உறுதி.

இரண்டு பிரச்சினையிலும் இந்தியா இலங்கையின் பக்கமே! காங்கிரஸ் தமிழ்நாட்டில் வேர்ப் பிடிக்க முடியாமைக்கும், தமிழர்களின் கடும் வெறுப்புக்கும் ஆளாகியிருப்பது இதுபோன்ற தமிழ் விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதுதான்; தப்பித் தவறி தேர்தல்களில் வெற்றி பெறுவதுகூட இங்குள்ள திராவிட அரசியல் கட்சிகளின் தோளில் ஏறிக் கொள்வதால்தான்.

ஈழத் தமிழர்கள் தொடர்ந்து இலங்கையில் நசுக்கப்பட்ட அதே காலகட்டத்தில் தமிழக மீனவர்களும், சிங்களக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும், அவர்களின் உடைமைகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதானிருக்கின்றன.

தமிழ்நாடு அரசு அவ்வப்போது குரல் கொடுத்துக்கொண்டுதானிருக்கிறது. இந்திய அரசுக்கு அழுத்தத்தைக் கொடுத்துக்கொண்டுதான் வருகிறது.

அந்த சமயங்களில் எல்லாம் இந்திய அரசு தனது வருத்தத்தை இலங்கைக்குத் தெரிவித்துக்கொண்டுவிடும். இது ஒரு விஷ வட்டம்போல, சம்பிரதாயச் சடங்குபோல கேட்டுக் கேட்டு புளித்துப்போய்விட்டது ஏன் மரத்தும் போய்விட்டது.

சிங்களக் கடற்படையில் இப்பொழுது சீனர்களும் சேர்ந்துகொண்டு தாக்குதல் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். (‘வாழ்க! கம்யூனிச சித்தாந்தம்!’).

இப்படி தமிழக மீனவர்கள் ஏன் தாக்கப்படுகின்றனர்? இதற்கு என்னதான் முடிவு என்பது அருத்தம் நிறைந்த கேள்வியாகும். தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத் தீவினை இந்திய அரசு தமிழ்நாட்டு அரசின் ஒப்புதல் இல்லாமலேயே இலங்கைக்குத் தூக்கிக் கொடுத்துவிட்டது.

அது தொடர்பான ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு பகுதிகளில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமையுண்டு. கச்சத்தீவிலுள்ள அந்தோணியார் கோயில் திருவிழாவில் பங்கேற்பது, கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் ஓய்வு எடுப்பது, வலைகளை உலர்த்துவது போன்ற உரிமைகள் ஒப்பந்தத்தில் இருந்தன. பின்னர் நெருக்கடி நிலை காலத்தில் அந்த உரிமைகள் தமிழர்களுக்குப் பறிபோகும் நிலையில், இந்திய அரசு நடந்துகொண்டிருக்கிறது என்பது பிறகே தெரிய வந்தது.

அந்த அடிப்படையில்தான் சிங்களக் கடற்டை தமிழக மீனவர்களை வேட்டையாடுகிறது.

தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு நிவாரணம் தேடவேண்டிய இந்திய அரசு இலங்கை அரசுக்குச் சாதகமாக, தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளது. அதன்படி தமிழக மீனவர்கள் 12 மைல் தொலைவுவரை தான் கடலில் மீன்பிடிக்கச் செல்ல முடியும்; மீறினால், அபராதம், சிறைத் தண்டனை; அதிகாரிகளைத் தட்டிக்கேட்டால் ரூபாய் 10 லட்சம் அபராதமாம்!

தமிழனுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்குத் தூக்கிக் கொடுத்த இந்திய அரசு என்னும் குதிரை தமிழர்களைக் கீழே தள்ளியதோடு அல்லாமல், அவர்களுக்குக் குழியும் பறிக்கும் ஒரு வேலையில் இறங்கியுள்ளது.

தமிழக அரசு இந்திய அரசின் சட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை; தனது மாறுபாடான கருத்தினை முதலமைச்சர், மத்திய அரசுக்கு எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவப் பெருமக்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். வாழையடி வாழையாகத் தங்களிடம் இருந்த உரிமை பறிக்கப்படும்போது, அதுவும் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கே சவால் ஏற்பட்டுள்ள ஒரு தருணத்தில் அவர்கள் போராடத்தான் செய்வார்கள்.

தமிழக அரசு மற்றும் தமிழக மீனவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மத்திய அரசு சட்டத்தை விலக்கிக் கொண்டு, தமிழக மீனவர்களுக்கு இருந்து வந்த உரிமைகளை மீட்டுத்தர ஆவன செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறோம்

-------------------நன்றி:-"விடுதலை" தலையங்கம்

5 comments:

bandhu said...

அது எப்படிய்யா? மத்திய அரசுக்கு ஆதரவு கொடுத்துக்கிட்டே அதை எதிர்த்து போராட்டமும் நடத்தறீங்க? உங்களுக்கெல்லாம் வெக்கமே இல்லையா?

Dr.தமிழ் said...

திரு ஓவியா அவர்களுக்கு வணக்கம்
உங்கள் கட்டுரை தொகுப்புகள் மிகவும் அருமையாக உள்ளன..அவற்றை எனது தமிழ் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்..உங்கள் அனுமதியோடு.
drtamil123@gmail.com

தமிழ் ஓவியா said...

//உங்கள் கட்டுரை தொகுப்புகள் மிகவும் அருமையாக உள்ளன..அவற்றை எனது தமிழ் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்..உங்கள் அனுமதியோடு.
drtamil123@gmail.com//

தாராளமாகச் செய்யுங்கள் அய்யா.

இந்த வலைப்பதின் நோக்கமே பெரியார் கொள்கை பரப்பத்தான்.

நீங்களும் பங்கேற்பது எனக்கு எங்களுக்கு மிக்க மகிச்சி.
நன்றி

தமிழ் ஓவியா said...

ஆதரிக்க வேண்டியதை ஆதரிப்பதும் எதிர்க்க வேண்டியதை எதிர்ப்பதும் தான் சரியான நிலைப்பாடு Ravi

இதில் வெக்கப்பட ஏதும் இல்லை.
உங்களின் புரிதலில்தான் கோளாறு. முதலில் அதைச் சரிப்படுத்துங்கள். பின்பு தெளிவு கிடைக்கும்

Dr.தமிழ் said...

நன்றி ஐயா..
ஈழத்தமிழர் பிரச்சினையிலும்,தமிழக மீனவர் பிரச்சினையிலும் தமிழக அரசு தனது வருத்தத்தை மத்திய அரசுக்கு பதிவு செய்கிறது..அவ்வப்போது குரல் கொடுக்கிறது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்..ஆனால் அது பலன் தந்ததா என்பதுதான் நமது கேள்வி..தமிழக அரசு சம்பிரதாயத்துக்கு மட்டுமே எதிர்ப்பை பதிவு செய்கிறது..