Search This Blog

19.12.09

கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றிய சர்ச்சை


ஜோசப்பும் - மேரியும் படுக்கையில்
இருப்பது போன்ற விளம்பரப் பலகை
நியூசிலாந்து தேவாலயத்தில் கடும் எதிர்ப்பு

வெல்லிங்டன், டிச. 18 - உள்ளூர் ஆங்கிலிகன் தேவாலயத்தால் வைக்கப்பட்டிருந்த, ஜோசப்பும் மேரியும் படுக்கையில் இருப்பது போன்ற ஒரு விளம்பரப் பலகை கத்தோலிக்க கிறித்துவ தேவாலயத்தின் கடுமையான கண்டனத்தைப் பெற்றுள்ளது.

யேசுவை ஈன்ற மேரி, ஆணின் உடலுறவு இன்றி கன்னியாகவே இருந்து யேசுவைப் பெற்றெடுத்தார் என்பது கத்தோக்க கிறித்துவ மதத்தின் நம்பிக்கை. இதைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஜோசப்பும் மேரியும் படுக்கையில் இருப்பது போன்ற ஒரு விளம்பரப் பலகை வைக்கப்பட்டதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஆக்லாந்தின் புனித மாத்யூ நகர தேவாலயத்தால் இந்தப்பலகை வைக்கப்பட்டிருக்கிறது. வெறுப்பு கொண்டிருந்த ஜோசப், சோகமாக இருக்கும் மேரியுடன் படுக்கையில் போர்வைக்குள் இருப்பது போன்று அப்படத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது. ‘‘பரிதாபத்திற்குரிய ஜோசப்! கடவுளாக நடிப்பது என்பது எளிதில் மற்றவர்களால் பின்பற்ற முடியாதது’’ என்ற அதில் வாசகம் எழுதப்பட்டிருக்கிறது.

கிறிஸ்துமஸ் விழா ஏன் கொண்டாடப்படுகிறது என்று வழக்கமாகக் கூறப்படும் காரணத்தைக் கேலி செய்வது, விழாவின் உண்மையான முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவது என்ற நோக்கங்களுடன்தான் இந்த பலகை வைக்கப்பட்டுள்ளது என்று ஆங்கிலிகன் தேவாலயத்தின் பிஷப்புக்கு அடுத்த நிலையில் உள்ள பாதிரியார் கிளின் கார்டி கூறினார்.

‘‘கிறிஸ்துமஸ் என்றால் என்ன என்பதை முழுவதுமாக மக்களை எண்ணிப் பார்க்கச் செய்யவே நாங்கள் முயற்சித்துள்ளோம் ’’ என்று செய்தியாளர்களிடையே அவர் கூறினார். ‘‘ஒரு குழந்தை பிறப்பதற்காக ஒரு ஆன்மிகக் கடவுள் தனது விந்துவை அளித்தாரா அல்லது ஜோசப்பிடம் காணப்படுவது போன்ற அன்பின் ஆற்றல் நம்மிடம் இருக்கிறதா என்பது பற்றியதுதான் இந்த பலகை.’’

தேவையற்றது, பொறுப்பற்றது, மரியாதைக் குறைவானது என்று இந்தப் பலகை வைக்கப்பட்டது பற்றி நியூசிலாந்தின் கிறித்துவ தேவலாயம் கண்டித்து உள்ளது. குடும்பத்திற்கே முதலிடம் அளிக்கும் குடும்ப மதிப்பீட்டுக் குழுவும் இதனைக் கண்டித்துள்ளது. கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றியும் அதன் ஆன்மிக முக்கியத்தைப் பற்றியும் தேவாலயக் கட்டடத்திற்குள்ளேயே அவர்கள் விவாதிக்க முடியும். ஆனால், இவ்வாறு தெருவில் ஒரு பலகையை வைத்து குடும்பங்களையும், குழந்தைகளையும் அதிர்ச்சி அடையச் செய்வது மிகவும் பொறுப்பற்ற, தேவையற்ற செயல் என்று அந்த குழுவின் இயக்குநர் பாப் மெகோஸ்கிரி கூறினார்.

(ஒரே மதத்தின் இரு பிரிவுகள் இவ்வாறு மோதிக் கொள்வது நல்ல நகைச்சுவை. நம்மூர் சைவ, வைணவத் தகராறு கிறித்துவ மதத்தையும் பிடித்துக் கொண்டது போலும்!)

-------------------------நன்றி:- " விடுதலை” 18-12-2009 பக்கம்- 3

0 comments: