Search This Blog

29.12.09

உலகில் பெரியார் ஒருவரே!

இந்நாள்

1938 ஆம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர் 29) தான் தந்தை பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுவும் எந்த நிலையில்?

தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் காரணமாக சிறையில் இருந்த காலகட்டத்தில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கமான நீதிக்கட்சியின் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரை எல்லாப் பொறுப்புகளும் (பதவிகள் அல்ல) அவரைத் தேடி சென்றுள்ளனவே தவிர, அவர் அவற்றை நோக்கிக் காலடி எடுத்து வைத்தவர் அல்லர். அவர் ஏற்ற பொறுப்புகள் அவரால் பெருமை பெற்றுக் குலுங்கின என்பதுதான் வரலாறு.

1938 டிசம்பர் 29, 30, 31 ஆகிய நாள்களில் சென்னையில் நீதிக்கட்சியின் 14 ஆவது மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் தலைவராக தந்தை பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், தந்தை பெரியாரோ சிறைக் கொட்டடியில் இருக்கிறார்.

50 ஆயிரம் மக்கள் மாநாட்டில் கூடியிருந்தனர். மாநாட்டுக்குத் தலைமை தாங்கவேண்டிய தந்தை பெரியார் சிறையில் இருக்கிறாரே என்ற உணர்ச்சி எரிமலையாகத் தகித்துக் கொண்டிருந்தது தமிழர்கள் மத்தியில்.

தந்தை பெரியார் அவர்களின் உருவச் சிலையைத் தேரில் வைத்து சிறையில் உறைவதுபோல ஒப்பனை செய்து, ஊர்வலமாக மாநாட்டுப் பந்தலுக்குக் கொண்டு வரப்பட்டது. தந்தை பெரியார் அவர்களின் உருவம் நாற்காலியில் வைக்கப்பட்டு இருந்தது.

மாநாட்டுக்குத் தலைவராக சர் ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் அறிவிக்கப்பட்டார்.

மாநாட்டுத் தலைவருக்குப் போடப்பட்ட மாலையை நாற்காலியில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின் உருவத்திற்கு அணிவித்தனர்.

தம் தோளுக்குப் போட்ட மாலையைத் தந்தை பெரியாரின் தாளுக்கு அணிவித்து பேச முடியாமல் நா தழு தழுத்தார்.

தந்தை பெரியார் எழுதியிருந்த மாநாட்டுத் தலைமை உரையை ஏ.டி. பன்னீர்செல்வம் படித்தார்.

மாநாட்டில் கூடியிருந்த 50 ஆயிரம் மக்களும் ஒரு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

“எங்கள் மாபெரும் தலைவரே! உங்கள் உடல் சிறைப்படுத்தப்பட்டிருந் தாலும், உங்கள் வீரத் திருவுருவத்தின் முன் நாங்கள் அனைவரும் எழுந்து நின்று ஒன்றுபட்டிருக்கி றோம். உங்கள் தலைமை யில் நாங்கள் அனைவரும் சொல்வழி நின்று, கடைசி வரை, நோக்கம் நிறைவேற ஓயாது உழைத்து வெற்றி பெறுவோம் என்று உறுதி கூறுகிறோம்’’ தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் இவ்வாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதுபோன்ற சிறப்புகள் எல்லாம் உலக வரலாற்றில் தந்தை பெரியாரை நோக்கி பாய்ந்து வந்ததுபோல வேறு யாருக்காவது வந்ததுண்டா?

ஆம் உலகில் பெரியார் ஒருவரே!

--------------- மயிலாடன் அவர்கள் 29-12-2009 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: