Search This Blog
11.12.09
பெரியார் பார்வையில் சமூக -பொருளாதார சமதர்மம்!
சமூக சமதர்மமும், பொருளாதார சமதர்மமும்!
இந்தியாவில் "உழைப்பாளி - சுகபோகி" என்கிற இரண்டு வகுப்புகள் இருக்கின்றன. இந்த இரண்டு வகுப்புகளுமே பெரிதும் ஏழை என்பதாகவும், பணக்காரன் என்பதாகவும் சமுதாயப் பிரிவுகளைப் பரிணமிக்கச் செய்கின்றன.
எனவே, உண்மையான சமதர்மம் இந்தியாவில் நிலைநாட்டப்பட வேண்டும் என்று விரும்புகின்றவன் மேற்கூறப்பட்ட நிலையை மறக்காமல், நினைவில் இருந்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது.
ஒருவன் சமதர்மத்துக்கு உழைப்பதானால் அவன் முதலில் ஒரு உண்மையை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். உழைப்பதற்கென்றே பிறந்திருக்கும் வகுப்பு ஒன்று. இவர்களது உழைப்பின் பயனை அனுபவித்துக் கொண்டு சுகபோகியாய் வாழ்வதற்கென்றே பிறந்திருக்கும் வகுப்பு ஒன்று என்று இருப்பதை ஒழிக்க வேண்டும். கிள்ளி எரிய வேண்டும் என்பதே அந்த அடிப்படை நிலை இதைச் செய்யும் வரையில் எவ்வித பொருளாதார சமதர்மத் திட்டமும் இந்த நாட்டில் அரை வினாடி நேரமும் நிலைத்து நிற்காது என்பதைச் சமதர்மம் பற்றி பேசுவோர் நினைப்போர் ஆசைப்படுவோர் மனதில் கொள்ள வேண்டும்.
நம் நாட்டின் சமூக பொருளாதார நிலையை நன்றாக அறிந்த பின்னும் பணக்காரனை மட்டுமே குறை கூறும் சமதர்மம் வெறும் பொறாமைச் சமதர்மமேயாகும்.
ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், இந்த நாட்டின் சமுதாய அமைப்பானது, பிறவியின் காரணமாகவே, ஏழையையும், பணக்காரனையும் அதாவது, உழைப்பாளியையும், சகபோகியையும் உண்டாக்கி இருக்கிறது.
உதாரணமாக, இன்றைய சுகபோகிகள் பெரும்பாலும் மேல் ஜாதிக்காரர்களாகவும், பாட்டாளிகள் அல்லது உழைப்பாளிகள் அனைவரும் கீழ் ஜாதிக்காரர்களாகவும் இருப்பதைக் காணலாம்.
இன்றைய தினம் ஏதோ ஒரு புரட்சி மூலமோ, ஒரு சர்வாதிகாரி மூலமோ இந்த நாட்டில் பொருளாதார சமதர்மப் பிரகடனம் ஏற்பட்டு விட்டதாகவே வைத்துக் கொள்வோம். அந்தப் பிரகடனத்தின்படி இந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் இந்த நாட்டில் உள்ள பொருள்கள் அனைத்தையும் பங்கிட்டுக் கொடுத்து விட்டதாகவே வைத்துக் கொள்வோம்.
பிறகு நடப்பது என்ன என்பதை யோசித்துப் பார்த்தால், என்ன விளங்கும்? மறுபடியும் பழைய நிலையே ஏற்படுவதற்கு ஆன காரியங்கள் நிகழ்ந்து கொண்டே போய் ஒரு சில ஆண்டுகளுக்குள் பொருளாதார உயர்வு தாழ்வுகள் தாமாகவே பழையபடி ஏற்பட்டு விடும் என்பதில் சிறிதும் ஆட்சேபனை இருக்காது.
ஏனெனில், பிரகடனத்தால் பொருளாதார சமதர்மம்தான் ஏற்படுமே ஒழிய அதுவும் தற்கால சாந்தியாய் அல்லாமல், சமூக சமுதாய சமதர்மம் ஏற்பட இடமில்லை. அது பிறவியின் பேராலேயே தளுங்கி விடும்; அது தனது காரியத்தை எப்படிப்பட்ட பொருளாதார சமதர்மத்திலும் செய்து கொண்டு தான் இருக்கும்.
அதுவும் மதத்துக்கும், ஜாதிக்கும் பெயர் போன இந்த நாட்டு மக்களுக்குள் கல்வி அறிவற்று மூட நம்பிக்கையில் ஆழ்த்தி வைக்கப்பட்டிருக்கும் இந்த நாட்டு பாமர மக்களுக்குள் பிறவி பேதம் நீக்கப்படாதவரை எப்படிப்பட்ட பொருளாதார சமதர்மமும் கடுகளவு மாற்றத்தையும் உண்டாக்கி விடாது.
மற்றும் பார்ப்பனரல்லாத சமூகத்தில் கீழ் ஜாதிக்காரர்கள் என்பவர்கள் எவ்வளவு செல்வம் தேடிய போதிலும் ஜாதி மத சம்பிரதாயம் காரணமாக அடிக்கடி சறுக்கி விழுந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவ்வளவோடு மாத்திரமல்லாமல் சமுகத்தில் தாழ்ந்த நிலையில்தான் இருக்கிறார்கள். ஒரு சிலர் செல்வவான்களாய், கோடீஸ்வரர்களாய் இருந்தாலும் கூட, சமூகத்தில் கீழ் ஜாதிக்காரர்களாய்த்தான் இருந்து வருகிறார்கள்.
சமதர்ம வாசனையே சிறிதும் இல்லாதவர்களும் சமதர்மத்துக்குப்
பார்ப்பனர்கள் எவ்வளவு ஏழைகளாகவும், எவ்வளவு "பாப்பர்"களாகவும் இருந்தாலும், எவ்வளவு சோம்பேறிகளாகவும், எவ்வளவு உழைக்காதவர்களாகவும் இருந்தாலும் மக்களின் சராசரி வாழ்க்கையை விட மேலாகவும் மனித சமூகத்தில் மேல் நிலையை உடையவர்களாகவும் தானே இருந்து வருகிறார்கள்.
இதனால்தான், பார்ப்பனர்கள் சமுதாய சமதர்மக்காரர்களைக் கண்டால் காய்ந்து விழுவதும், சமுதாய சமதர்ம இயக்கங்களைக் கண்டால் அவற்றை ஒழிக்க சூழ்ச்சி செய்வதுமாய் இருப்பதோடு பொருளாதார சமதர்மக்காரர்கள் என்பவர்களை வரவேற்பது போலவும், பொருளாதார சமதர்ம ஸ்தாபனங்களை ஆதரிப்பது போலவும் காட்டிக் கொள்கிறார்கள்.
ஏனெனில், வெறும் பொருளாதார சமதர்மம் பார்ப்பனரை ஒன்றும் செய்துவிடாது. மேலும் பார்ப்பனருக்குப் பொருளாதார சமதர்மம் அனுகூலமானதேயாகும். எப்படி என்றால் இப்போது அவர்களால் பிச்சை வாங்கப்படும் நபர்கள் ஒரு பங்காய் இருந்தால் பொருளாதார சமதர்மத்தில் பார்ப்பனருக்குப் பிச்சை கொடுக்கும் நபர்கள் 10-பங்காக ஆகிவிடுவார்கள்.
அப்போது அவர்களுக்கு (பார்ப்பனர்களுக்கு) சமதர்மத்தில் பகிர்ந்து கொடுக்கப்படும் சொத்துகள் தவிர மற்றும் ஜாதி, மத சடங்குகள் காரணமாக அதிகப் பிச்சையும் சேர்ந்து ஒவ்வொரு பார்ப்பனரும் ஒவ்வொரு சங்கராச்சாரி, மடாதிபதி ஆக சுலபத்தில் மார்க்கம் ஏற்பட்டு விடும். இந்த நிலை மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலை அதாவது இன்றைய நிலையை உண்டாக்கி விடும்.
இந்த நாட்டில் ஜாதியும், மதமும், சிறப்பாக ஜாதி ஒரு கடுகளவு மீதியிருந்தாலும், எப்படிப்பட்ட சமதர்மமும் ஒரு நிமிட நேரத்தில் கவிழ்ந்து போகும் என்பதை சமதர்மிகள் என்பவர்கள் கருத்திலிருத்த வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.
மற்றும், சமுதாய சமதர்மத்துக்கு அதாவது ஜாதிகளை ஒழிப்பதற்கு என்றால், பணக்காரன் சேருவான். ஏனெனில், எவ்வளவு பணக்காரனாய் இருந்தாலும், 100-க்கு 97பேர் இன்றைக்கு "கீழ் ஜாதிக்காரர்"களாகவே இருக்கிறார்கள். ஆதலால், அவர்கள் சேருவார்கள். ஆனால், பணக்காரனை ஒழிக்க பார்ப்பனர் சேர மாட்டார்கள். சேர்வதாய் இருந்தாலும், ஜாதி இருப்பதன் பலனாய் மீண்டும் பணக்காரனை உண்டாக்கிக் கொள்ளலாம் என்று கருதியே சூழ்ச்சித் திறமாய்ச் சேருவான்.
இந்த நாட்டு மக்களுக்கு நன்மை வேண்டும் என்று கருதுகிறவர்கள் இந்த நாட்டின் நிலை என்ன என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றபடி நடக்க வேண்டுமே ஒழிய மேல் நாட்டைப் பற்றி படித்துவிட்டு, புத்தகப் பூச்சியாய் இருப்பது வீண் பிரயாசையே ஆகும்.
இன்று சமதர்மம் பேசுகிறவர்கள் தயவு செய்து கொஞ்ச நாளைக்காவது பணக்காரர்களை மட்டுமே வைது கொண்டிருப்பதை மறந்துவிட்டு, ஜாதியை ஒழிக்கும் வேலையில் ஈடுபட்டு சமுதாய சமதர்மத்தை உண்டாக்கவும், சமுதாயப் புரட்சிகளை உண்டாக்கவும் பாடுபடுவார்களாக. எதிர்பாராத சம்பவங்களால் நிலைமை அனுகூலமாய் இருக்கும் சமயம் பொருளாதாரத்தைப் பற்றி தாராளமாக யோசிக்கலாம். ஜாதியை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு ஜாதி முறையின் ஆணிவேராக இருக்கும் பார்ப்பானை ஒழிக்கும் முயற்சியே சமதர்மவாதிகளின் முதற்கடமை என்பது நமது அபிப்பிராயமாகும்.
------------------- தந்தைபெரியார் -"உண்மை" 14.03.1973
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment