Search This Blog

16.12.09

சேது சமுத்திரத் திட்டம் கைவிடப்படுகிறதா?ஒன்றரை நூற்றாண்டுக்கு மேலாக எதிர்பார்க்கப்பட்ட சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் இதோ நிறைவேற்றப்பட இருக்கிறது என்கிற ஆர்வம் தமிழ்நாடு மக்கள் மத்தியிலே பொங்கிப் பிரவாகித்தது.

மத்தியில் தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் டி.ஆர். பாலு அவர்கள் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், இத்திட்டத்தினை நிறைவேற்றிட அவர் காட்டிய ஆர்வம் தமிழர்கள் மத்தியிலே உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.

ரூபாய் 2000 கோடி முதலீட்டில் தீட்டப்படும் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் அந்நிய செலாவணியைத் திரட்டித் தரும் என்று கூறப்பட்டது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், 36 மணிநேரக் கடல் பயணம் மிச்சம்; சுமார் 555 கி.மீட்டர் தூரம் மிச்சம்; எரிபொருள் மிச்சம்; அந்நியச் செலாவணி மிச்சம்; தூத்துக்குடி அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி விரைவாக வந்து சேரும்; இதனால் தமிழ்நாட்டு மின் வாரியத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.24 கோடி மிச்சம்; ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு ரூ.700 கோடி மிச்சம்.

சென்னை, தூத்துக்குடி, குளச்சல், நாகப்பட்டினம் துறைமுகங்கள் பன்னாட்டுத் துறைமுகங்களாகும். எண்ணூர் முதல் குளச்சல் வரை உள்ள பெருந்-துறைமுகங்கள், சிறுதுறைமுகங்கள் வளர்ச்சி ஏற்பட வாய்ப்பு ஏற்படும். புதிதாகவும் சிறு துறைமுகங்களும், மீன் பிடி துறைமுகங்களும் உண்டாகும். கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், தொண்டி, கோடியக்கரை, இராமேசுவரம், தனுஷ்கோடி, குளச்சல் ஆகிய இடங்களில் மீன் பிடி துறைமுகங்கள் விரிவாக்கம் பெற வழி பிறக்கும். துறைமுகங்களை முக்கியமாகக் கொண்டு சிறிய, பெரிய தொழிற்சாலைகள் வளரும். இதன் காரணமாக, ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்புக் கிட்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட திட்டம் இது.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் குறைந்தபட்சத் திட்டத்திலும் இது இடம்பெற்றது. குடியரசுத் தலைவர் உரையிலும்கூட முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இவ்வளவுக்கும் பிறகு இந்தத் திட்டம் முடக்கப்பட்டுக் கிடக்கிறது என்றால், இதன் பொருள் என்ன?

தமிழர்களுக்கு நல்லது நடந்துவிடக்கூடாது என்றே இந்த நாட்டில் ஒரு கூட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுதான் பார்ப்பனர்கள் கூட்டம்; சுப்பிரமணியசாமி, சோ. ராமசாமி போன்றவர்கள் கண்களுக்குத் தென்பட்டாலும், ஒட்டுமொத்தமாக எல்லாப் பார்ப்பனர்களுக்கும் தமிழர் முன்னேற்றத்திற்கு மறைமுகமாகவேனும் முட்டுக்கட்டை போடுபவர்களே!

ரூபாய் 2000 கோடியில் உருவாகும் ஒரு விஞ்ஞானபூர்வமான திட்டத்தை 17 லட்சத்து 25,000 ஆண்டுகளுக்குமுன் ராமன் கட்டிய பாலம் என்ற ஒரு புராண புளுகு மூட்டையைக் கொண்டு வந்து இந்த நாட்டில் முடக்கப்படுகிறது என்றால், 21 ஆம் நூற்றாண்டில்தான் இந்தியா இருக்கிறதா என்கிற கேள்விக்குறிதான் எழும்.

அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது.

ஆனால், இராமன் என்ற புராணக் கற்பனைப் பாத்திரத்தைக் காட்டி தடைகோரும் ஒரு மனுவை இந்தியாவின் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இடைக்காலத் தடையும் விதிக்கிறது என்றால், இந்த நாட்டில் அரசியல்வாதிகளும், நீதிமன்றமும் அரசமைப்புச் சட்டத்தில் கூறப்படும் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கக் கூடியவர்கள்தானா என்ற கேள்வி எழாமல் போகாது.

ஏற்கெனவே பல நிபுணர் குழுக்களின் அறிக்கைகள் பெறப்பட்டுதான் ஆறாவது தடத்தில் கால்வாய் வெட்டும் பணி தொடங்கப்பட்டது.

இப்பொழுது உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதுக்கரடி ஒன்றை அவிழ்த்துவிட்டுள்ளது. சுற்றுச்சூழல்பற்றி ஆய்வு நடத்திட மேற்கொண்டு 18 மாதங்கள் தேவைப்படும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சொல்கிறது என்றால், இதன் பொருள் என்ன?

சு.சாமி, ஜெயலலிதா, சோ. ராமசாமி வகையறாக்களுக்கு ஏதோ ஒரு வகையில் மத்திய அரசு துணை போகிறது என்றுதான் கருதவேண்டியுள்ளது.

உரிமைப் பிரச்சினை என்று வருகிறபோது பக்கத்தில் உள்ள ஆந்திர மாநிலத்தைப் பார்த்தாவது தமிழர்களுக்குப் புத்தி வரவேண்டாமா? மயிலே, மயிலே என்றால் இறகு போடாது என்பது அனுபவ உண்மை. தமிழர்கள் உரத்த முறையில் சிந்திப்பார்களாக!

------------------------"விடுதலை” தலையங்கம் 16-12-2009

2 comments:

nimmie said...

we can request Thiru Veeramani to undertake fast unto death for this issue.,instead of asking others to follow Andhra model.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி nimmie