Search This Blog

16.12.09

தன்னை ஓர் இந்து என்று கூறிக் கொள்ள மனம் இடம் தருமா?


அம்பலம்

“கரசேவை தொடர்பாக தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவில் ஜெயலலிதா பேசியது ஏதோ கட்டட இடிப்புக்கு ஆதரவு தந்ததுபோல திரித்துப் பேசுகின்றனர். அன்று அவர் பேசியது சத்தியத்தை தைரியமாகப் பேசிய ஒரு தேசப் பக்தி உணர்வு; அந்தப் பேச்சு நாடு முழுவதும் உள்ள இந்துக்களை அ.தி.மு.க.மீது ஓர் ஈர்ப்புக் கொள்ளச் செய்துள்ளது’’ என்று தமிழக பா.ஜ.க. தலைவர் திருவாளர் இல. கணேசன் கூறியுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவை தமது இந்துத்துவா கண்ணோட்டத்தில் இப்படி படம் பிடித்துக் காட்டி ஆனந்தப் பைரவி பாடியிருக்கிறார்.

இன்னொரு கண்ணோட்டத்தில் இதனைப் பார்த்தால், அண்ணாவின் பெயரையும், ‘திராவிட’ என்ற வரலாற்றுச் சொல்லையும் பயன்படுத்திக் கொண்டுள்ள அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர், அதன் அடிப்படைக் கருத்துகளிலிருந்தும், கொள்கைகளிலிருந்தும் எப்படி வேறுபட்டு நிற்கிறார் என்பதை அம்பலப்படுத்தியுள்ளார்.

அறிஞர் அண்ணா அவர்கள் தீட்டிய வரலாற்று ஆவணங்களின் அரும்பெரும் தொகுப்பு நூலாகிய ‘ஆரிய மாயை’ என்னும் நூலில் ‘‘இந்து’’ என்பதுபற்றி என்ன கூறுகிறார்?

அண்ணா நூற்றாண்டில் இல. கணேசன்களும், ஜெயலலிதாக்களும், அண்ணா தி.மு.க.வில் உள்ள தொண்டர்களும், ஏன் தமிழர்களும்கூட ஒட்டுமொத்தமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய கருவூலங்கள் அவை.

“இந்த இந்துஸ்தானம், இந்து, இந்து மதம் ஆகியவற்றிற்கும், திராவிட நாடு, திராவிடர், திராவிடர் சமயம் ஆகியவற்றிற்கும் அடிப்படையான வேறுபாடுகள் உள்ளன. நில வளம் முதற்கொண்டு, மக்கள் மன வளம் வரை வேறுபாடுகள் உண்டு. வேறுபாடுகள் இருப்பி னும் கேடொன்றும் நேரி டாது என்றிருக்கலாம். முரண்பாடுகள் உள்ளன. அவைகளை மறைத்துப் பயனில்லை. மூடி வைத்து ஆகப் போவதும் ஒன்றுமில்லை!

இந்து மதம் என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாய முறை, மதக்கதை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவைகளை அலசிப் பார்த்த பிறகு, யாருக்குத் தன்னை ஓர் “இந்து’’ என்று கூறிக் கொள்ள மனம் இடம் தரும்? பாம்பை எடுத்துப் படுக்கையில் விட்டுக் கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா?’’ ‘ஆரிய மாயை’ எனும் நூலில் அண்ணா எழுதிய ஆய்வு முத்துகள் இவை.

அண்ணா தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவோ, அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்துக்கொண்டு அண்ணாவின் கொள்கைக்கே குழி வெட்டுகிறார்.

பா.ஜ.க. தமிழகத் தலைவர் இல. கணேசன் ஏதோ ஒரு வகையில் அம்மையாரை அம்பலப்படுத்திவிட்டாரா, இல்லையா?

----------------- மயிலாடன் அவர்கள் 16-12-2009 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: