Search This Blog

13.12.09

துன்பங்கள், துயரங்கள் ஏற்படும் போது மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?


பட்டமரங்கள்துளிர்க்கும்!

வாழ்க்கையில் துன்பங்கள், துயரங்கள் ஏற்படுவதுதான் ‘‘கடினமான நேரம்.’’

அத்தகைய நேரங்களில் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி, எப்படி முடியும் என்று கேட்கிறீர்களா?

அப்போதுதான் பகுத்தறிவு நம் துணைக்கு வந்து நிற்கவேண்டும்; துயர் துடைக்கப் பெரிதும் உதவும் துணைவனாக வேண்டும்.

நாம் மிகவும் நேசித்த, மதித்த ஒருவர் திடீரென்று ஒரு விபத்துமூலம் இறந்துவிடுகிறார்; அல்லது நமக்கே திடீரென்று வேலை போய்விடுகிறது.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவால் (Depression) கைநிறைய சம்பளம் வாங்கியவர்கள் திடீரென்று வீட்டு வாடகை கட்டுவதற்குக்கூட வசதியற்று, வேதனையின் உச்சத்திற்குச் சென்று, தற்கொலைகூட செய்துகொண்டு, தங்களது துன்பத்தைப் போக்கிட அதுதான் ஒரே வழி என்று தவறாக, அவசரப்பட்டு முடிவுக்கு வந்த செய்திகள் ஏராளம் வருகின்றன!

அவர்கள் யோக்கியர்கள், துன்பங்களைத் தாங்கத் தெரியாது வளர்ந்த பெருமரங்கள்.

ஆனால், நெடுமரமாக, வளையத் தெரியாமல் நின்று கொண்டவைதாம், புயலின்போது வீழ்த்தப்பட்டு வேரோடு சாய்வனவாக இருக்கின்றன!

மூங்கில், நாணல்களைப்போல வளைந்து கொடுத்து இருப்பவற்றை காற்று எவ்வளவு வேகமாக அடித்தாலும், எவ்வகையிலும் வீழ்த்தவே முடியாது.

நமது வாழ்க்கையும் அப்படித்தான். எப்போதும் உணர்ச்சிகளுக்கே முன்னுரிமை, முதலிடம் தந்து, புலம்பிக்கொண்டே இருப்பதனால் எவ்விதப் பலனும் கிடையாது.

சிலர் ‘எனக்கு ஏன் இப்படி நேரிட்டது? நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்தவன் அல்லவே; எப்படி நான் இதைத் தாங்கிக் கொள்வேன்?’ என்று கிளிப்பிள்ளையைப் போல் சொன்னதையே திரும்பத் திரும்பக் கூறி, தங்களைப் பலவீனப்படுத்தி, வாழ்க்கையையும் தாங்களே சுருக்கிக் கொள்கிறார்கள்; அல்லது முடித்துக் கொள்கிறார்கள்.

துன்பம், துயரம், இழப்பு இவை வந்துவிட்ட பிறகு, அழுது புரண்டால் அவற்றிலிருந்து வெளியேறிடும் வாய்ப்பு கிடைத்துவிடுமா? ஒருபோதும் கிடைக்காது! கிடைக்கவே கிடைக்காது!

அதுவே மிகப்பெரிய மன இறுக்கமாக (stress) ஆட்கொல்லியாகி, ‘உயிர்க்கிறுதி’ செய்துவிடக் கூடும்.

“மிகப்பெரிய ‘கஷ்டம்’ நோய் என் வாழ்வில் ஏற்பட்டுவிட்டதே, இனி நான் பிழைப்பதேகூட அரிது என்று எண்ணாமல், என்னால் இதிலிருந்து வெளியேறி, மீண்டும் நலத்துடன் வாழ்ந்திட முடியும் என்கிற வைராக்கியத்தினால், மனதுக்குள் என்னால் முடியும், முடியும், முடியும்’’ என்று (Auto Suggestion) இடைவிடாமல் சொல்லிக் கொண்டே இருங்கள்.

எந்தத் துன்பத்தினையும் எதிர்கொள்வதுதான் ஏற்றுக்கொண்டு, ‘இது நிரந்தரமானதல்ல; இது தற்காலிகம்தான்.’ ஆண்டுக்கு எப்படி 365 நாள்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையானது. ‘ஒரு நாள்’ இருப்பதுபோல், ‘அடுத்த நாள்’ இருப்பதில்லை என்று எண்ணுங்கள்.

சில நாள்களில் நாம் படுக்கையைவிட்டு எழும்போதே ஒரு வகை நம்பிக்கையோடு, மகிழ்ச்சியடைத்தக்க நாளாக இந்த நாள் அமைவது வேறு யார் கையிலும் இல்லை; நம் கைகளில்தான் இருக்கிறது.

எந்தத் துன்பம், துயரமாக இருந்தாலும், பருவ நிலை மாறுவதுபோல் மாறியே தீரும்.

ஒரு நாளைக்கு 24 மணிநேரம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட மணிநேரத்தின்-போது உள்ள நமது மனநிலைதான், இறுதிவரை நீடிக்கிறது என்று சொல்ல முடியுமா? சொல்ல முடியாதே!

காரணம் தெரியாமலேயே நமக்கு வருத்தம் ஒரு நேரத்தில்,

காரணம் புரியாமலேயே ஒரு திடீர் ஊற்று போன்ற மகிழ்ச்சி பொங்கும் உணர்வுகளைப் பெறுகிறோம்.

எனவே, எப்போது, இதுதான் கடைசிவரை இனி என் வாழ்க்கை தேறவே தேறாது; அவ்வளவுதான் என்ற அவசரப்பட்ட முடிவுக்கு வந்துவிடாதீர்கள்.

கடும் நோய்களால், புற்றுநோய் போன்றவை அதைவிட நாளும் உறுப்புகள் செயலிழந்துவரும் ஒரு வகை நோய்தான் என்று நன்கு தெரிந்துகொண்ட போதும், சிலர் தன்னம்பிக்கை இழக்காமல், மகிழ்ச்சியோடு இருக்கின்றார்கள்; அது எப்படி அவர்களால் முடிகிறது?

மிகப்பெரும் இழப்புகளைச் சந்தித்தாலும், நிதானம் குலையாத நம்பிக்கையுடன் இருக்கிறார்களே, அது எப்படி அவர்களுக்குச் சாத்தியமாகிறது என்பது நம்மில் பலருக்குப் புரியாத புதிராக இருக்கிறதா?

அதில் பெரிய ரகசியம் ஒன்றுமில்லை. வந்த துன்பம், கொடிய நோய், இழப்புகள் இவற்றை அவர்கள் ஏற்றுக்கொண்டு, (Accept) அடுத்து சரியான தீர்வு எதை நோக்கிச் சென்றால், கிடைக்கும் என்று வாழ்வதும், அவர்களுக்கு இதிலிருந்து மீள நம்மால் முடியும் என்கிற நன்னம்-பிக்கையும் ‘மீண்டும் வாழ்வோம்’, ‘மீண்டு வாழ்வோம்’ என்ற மன உறுதியும்தான் தொல்லைகள், துன்பங்களை விரட்டும்.

புழுதிப் புயல்கள் நிரந்தரமா? பூகம்பங்கள் எப்போதுமா? அதனால் பாதிக்கப்பட்டவர்கள், திடீரென்று மாட மாளிகை, கூட கோபுரங்களை, செல்வங்களை இழந்து தெருவிலே நிற்கிறவர்கள், புதுவாழ்வு பெற்று வாழ்வதில்லையா?

எனவே, எதையும் ஏற்றுப் பழகுவோம்; எதிர்கொள்வோம். என் கையில், உள்ளத்தில், எனது மன நிலையைப் பொறுத்தே இன்பம்_ மகிழ்ச்சி (Happiness) உள்ளது.

இதைத்தான் வள்ளுவர் ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்றார்! அதற்கு முழுப் பொருள் மேலே சுட்டிக்காட்டியபடி, ஏற்றுப் பழகி, எதிர்காலத்தைப்பற்றி திட்டமிடும் துணிவின் துணைகொண்டு, பருவ நிலை மாறிடும் என்ற நன்னம்பிக்கை.

இலையுதிர் காலத்தோடு மரங்கள் அழிந்துவிடுவதில்லை; வசந்த காலத்தில் உடனே துளிர்விட்டு, பட்ட மரங்கள் பசுமையாகி மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தருவது இயல்புதான் என்பதை ஏனோ நம்மில் பலர் மறந்தோம்?

----------------கி.வீரமணி அவர்கள் எழுதி வரும் 'வாழ்வியல் சிந்தனை'க் கட்டுரை- “விடுதலை” 12-12-2009

0 comments: