Search This Blog

21.12.09

கொத்துகிறது பார்ப்பனப் பாம்புதிருவாளர் வைத்தியநாதய்யர் என்ற ‘சோ’ தயாரிப்புப் பானம் ஆர்.எஸ்.எஸ். பேர் வழி “தினமணி”யின் ஆசிரியராக வந்த நிலையில், பார்ப்பனியப் பாம்பு ஆயிரந்தலைகளைக் கடன் வாங்கித் தமிழர்களைக் கொத்தித் தீர்க்கிறது!


27.11.2009 நாளிட்ட “தினமணி”யின் வெள்ளி மணி தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் வெறிமணியாக ஒலிக்கிறது.


“அருமறையின் உட்பொருளே அண்ணாமலை’’ என்ற கட்டுரை ஒரு முழுப்பக்கத்திற்கு வெளியிடப்பட்டுள்ளது.


தமிழர்களின் சமய வழிபாடு மற்றும் தமிழகத்திருமுறைகள் மூலம் வழிபாடு நடத்தும் தமிழர்களுக்கு அக்கட்டுரை பல நாம கரணங்களைச் சூட்டியிருக்கிறது:


நவீன பண்டிதர்
துன்மார்க்கர்
கீழோர்
பொறாமைக்காரர்
குரு துரோகி
மரண தண்டனைபெறுவர்
நரகம் போவார்கள்


கோபமும், சாபமும் கொந்தளிக்கிறது. மரத்துப் போன தோலை உடைய தமிழர்களுக்கும்கூட கொஞ்சம் சொரணையை ஊட்டும் தார்க்குச்சிகள் அவை.
பக்திப் போதை ஏறிக் கிடப்பவர்கள் தானே இந்தச் சூத்திரஆசாமிகள் எப்படி எழுதினால் என்ன? ஏறி மிதித்தால் என்ன ‘ரோஷம்’ பொத்துக் கொண்டா கிளம்பப் போகிறது என்கிற பொல்லா நினைப்பு இந்தப் புரோகிதக் கூட்டத்துக்கு!
அதனால்தான் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழால் பிழைத்துக் கொண்டே தமிழ்மீது சாணி வாரி இறைக்கிறார்கள்.


வேதத்தின் இருகண்கள் சைவம், வைணவம் என்று நிலை நிறுத்த வருகின்றனர். எல்லாவற்றிற்கும் மூலம் வேதம் என்பதுதான் இவர்கள் நிரூபிக்க முயலும் விவகாரம்.


சிவன்தான் எல்லோருக்கும் மூலக்கடவுள் அந்த வேதக்கடவுள்தான் திருமுறைகள் கூறும் சிவனும் என்று சாதிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கம். தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் போன்றவர்கள் கால்களால் இடறித் தள்ளிய குப்பையைக் கும்பத்தில் வைத்துகும்பிடச் சொல்லுகிறது இந்தக் குடுமிகள் கூட்டம்.


தாருகாவனத்து ரிஷிப் பத்தினிப் பெண்களின் கற்பைச் சூறையாடினான் சிவன் என்று ஆரியம் கூறும் அந்த வேதியச் சரக்கை, வேதத்தின்மூலத்தை சைவம் ஏற்றுக் கொள்கிறதா?


“நம்முடைய சநாதன தருமத்துக்கு வேதங்களே அடிப்படை. இன்று நவீனப் பண்டிதர்களாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் சிலர், ‘மறைகளே தேவை யில்லை’ என்று கூறிக் கொண்டு, ஆனால் வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள சில கிரியை களை சைவத் திருமுறைகளின் மூலம் ஆற்றி, அதன் மூலம் வாழ்ந்து வருகின்றனர். இது சைவ சமயக் குரவர்கள் நால்வரும், ஏனைய சைவப் பெரியோர்களும் காட்டி யருளாததால் துன்மார்க்கம்’’ என்று இவ்வளவு பச்சையாகச் சாடுகின்றது அந்தக் கட்டுரை.


சைவ சமயக் குரவர்களும் சேர்த்துத்தான் சாடப்பட்டுள்ளனர்.
நமது தமிழன்பர்கள், சைவப் பெருமக்கள், சைவப் பக்தர்கள், நமது ஆதீன கர்த்தர்கள் “சிவசிவ’’ என்று கூறி, தீயவற்றைக் கேட்கக் கூடாது என்று கண்களை மூடிக் கொள்ளப் போகிறார்களா என்று தெரியவில்லை.


மூலம் என்று இவர்கள் சொல்லுகிற வேதங்களின் யோக்கியதை என்ன? தந்தை பெரியாரும் திராவிடர் இயக்கமும் அவற்றை நார் நாராகக் கிழித்து எறிந்திருக்கின்றனவே!


சோமபானம் குடித்து கும்மாளம் போடும் தேவர்கள், தேவாதி தேவனான இந்திரன் இவர்களின் யோக்கியதைகளை வேதங்கள் நிர்வாணமாகக் காட்டவில்லையா?


“அக்னியே! ஒரு தேரிலோ அல்லது பல தேர்களிலோ ஏறி எங்கள் முன்னே வரவும், உன் குதிரைகள் மிக்க ஆற்றல் உள்ளவை. வேள்வியில் சமைத்த சமையல் உணவுக்காக முப்பத்து முக்கோடி தேவர்களுடனும், அவர் களுடைய மனைவியர்களுடனும் நேரில் வரவும். சோமபானத்தால் முப்பத்து முக்கோடி தேவர்களையும், அவர்களின் மனைவி களையும் போதை ஏற்றவும்’’


_ (ரிக் வேதம்: 2515)


இந்திரனே, குதிரைகளின் தலைவனே!, இதைக் குடி, அன்றும் சரி, இன்றும் சரி, சோமக்குடிக்கு முதன்மையான ஆதர வாளன்தானே! உனது உணவே சோம ரசந்தானே’’-_ (ரிக் வேதம்: 4737)


வேதத்தின் யோக்கியதைக்கு வேறு என்ன எடுத்துக்காட்டு தேவை?


எப்படி பசுக்கள் தமக்கு வேண்டிய நேரத்தில் தகுந்த மாதிரியாக உயிர்ப் பிராணிகளை சந்தோஷப்படுத்துகிறதோ, அப்படியே நல்ல ஸ்திரீகள் ஒவ்வொரு நேரத்திலும் தங்கள் கணவன்மார்களையும், மற்ற ஆண்களையும் சந்தோஷப்படுத்து வார்களாக!

--(யஜுர்வேதம்: 17 _ -3)


ஆடு, மாடு போல உறவுகளைப் பற்றிக்கூட கவலைப்படாமல், கலவி விஷயத்தில் பெண்கள் நடந்து கொள்ள வேண்டுமாம். தங்கள் கணவன்களை மாத்திரம் அல்ல; எந்த ஆண்களையும் சந்தோஷப்படுத்த வேண்டுமாம். அப்படி சந்தோஷப்பமித்துகிற பெண்கள்தாம் நல்ல பெண்களாம் (ஸ்திரீகள்)
இந்த யோக்கியதையில் உள்ள வேதத்தை அடேயப்பா, ‘தினமணி’ எப்படி எல்லாம் உச்சிமோந்து சப்புக் கொட்டுகிறது.


ஆரிய மொழி தமிழகக் கோயில்களில் குடி புகுந்தது எப்போது? ராஜராஜசோழன் காலத்தில்தானே! அது பத்து நூற்றாண்டுகளுக்கு முன்புதானே! அதற்குமுன் தமிழ்நாட்டில் கோயில்கள் இல்லையா? வழிபாடு கிடையாதா? அந்த வழிபாடு தமிழில்தானே நடந்தது? வேதம் வந்துதான் கிழித்தது என்பதெல்லாம் யார் காதில் பூ சுற்ற?


தமிழ்மொழி என்றாலே பார்ப்பனர்களுக்கு ஒரு “இனம் தெரியாத’’ வெறுப்பு. ‘‘தமிழை நீசப் பாஷை’’ என்று சொன்னவர்தானே சங்கராச்சாரியார். பூஜை வேலைகளில் இப்பொழுதுகூட அவர்கள் தமிழில் பேசுவது கிடையாதே!


“சது மறை ஆரியம் வருமுன்
சகம் முழுதும்
நின தாயின்,
முதுமொழி நீ அநாதி என
மொழிவதும் ஓர் வியப்பாமோ!’’


என்று தமிழைப் பற்றிக் கூறுகிறார் மனோன்மணீயம் சுந்தரனார்.


அவரையும் “தினமணி”யின் வெள்ளிமணி துன்மார்க்கர் பட்டியலில் சேர்த்து விட்டதே!


வெள்ளிமணி கட்டுரையில் சிவனைத் தூக்கி வைத்துக் கூத்தாட வேண்டும் என்பதற்காக வைணவத்தையும் வம்புக்கு இழுத்துள்ளது.


பஸ்ம ஜாபால உபநிடதத்தில் காசியின் பெருமையைக் கூறும் சிவபொருளாகிய விசுவநாதர், “இம் மாநகரில் கிழக்கில் கூப்பிய கரங்களோடு அல்லும் பகலும் பிரம்மா என்னைத் தியானிக்கின்றார். மேற்கில் இந்திரன் என்னை வழிபட்டுக் கொண் டிருக்கிறார்! தெற்கில் தலையின்மீது தனது கரங்களைக் கூப்பிய வண்ணம் திருமால் “என்னைத் தியானம் செய்து கொண்டிருக் கிறார்’’ என்று விளக்கியருளியுள்ளார் என்கிறது “தினமணி’’க் கட்டுரை.


இதன் மூலம் பிர்ம்மா, விஷ்ணு இவர்களுக்கு மேலாக உயர்ந்த பீடத்தில் உள்ள கடவுள் சிவபெருமானே என்பதுதான் “தினமணி’யின் கருத்து


ஒரு 17ஆண்டு 8 மாதங்களுக்கு முன் பயணம் செய்வோம். ‘கல்கி’ இதழை (11.4.1982) கொஞ்சம் புரட்டுவோம்.


அகோபில மடத்து ஜீயரின் (இவர்தான் வைஷ்ணவர்களுக்கான மடாதிபதி ஸ்மார்த்தர்களுக்கு சங்கராச்சாரியார்போல) பேட்டி ஒன்று அதில் வெளியாகியிருக்கிறது.


“நான்சிவன் கோயில்களுக்கு உதவி செய்ய மாட்டேன். ஏன்னு கேட்டா.. ஸ்ரீமத் நாராயணன் தான் (திருமால் என்னும் விஷ்ணுதான்) எல்லா தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம்னு என்னோட சித்தாந்தம். பிரம்மாவை நாராயணன் (விஷ்ணு) தன் நாபியிலிருந்து (தொப்பூழ்) படைத்தான். அந்தப் பிரம்மா சங்கரனைப் (சிவனை) படைத்தான். என்ற கதை இருக்கு. அதுபடி பார்த்தா சங்கரனுக்கு (சிவனுக்கு) நாராயணன் பாட்டன் ஆகிறார். பிரம்மா பிள்ளைஆகணும். அவங்களும் தெய்வம் தான். தபஸ்பண்ணி தெய்வத்தன்மைக்கு உயர்ந்தவர்கள். ஆனால் நாராயணன் எப்போதும் உள்ளவர். பாக்கிப் பேருக்கு பலன் கொடுக்கிறவர். அவரை வழிபடற நாங்கள் வேறு தெய்வத்தை வழிபட மாட்டோம். நாராயணனைத் தெய்வமாகக் கொண்டு வழிபட்டு மோட்சத்துக்கு போக வழி செய்து கொண்டவர்கள், நான்தான் தெய்வம் என்று சொல்லிக் கொள்கிற வேறு தெய்வத்தை வணங்கக் கூடாது. அப்படி எங்களுக்குச் சட்டம் இருக்கு. ஏன்னா அங்கே போனா புத்தி கெட்டுப் போகும். அதனாலே சிவன் கோயில் திருப்பணிக்கு பணம் இருந்தாலும் தர மாட்டோம்’’ என்று ஜீயர் வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக வெட்டித் தள்ளிவிட்டார்.


“தினமணி’’ வெள்ளிமணி கட்டுரையாளரைவிட அகோபிலமட ஜீயர் தகுதி குறைந்தவராக இருக்க முடியாது.


தலையின்மீது திருமாலாகிய விஷ்ணு கரங்களைக் கூப்பிய வண்ணம் சிவனைத் தியானித்துக் கொண்டு இருப்பதாக தினமணி கூறுகிறது ஜீயரோ, சிவனா? அவன் பொடியன்; எங்கள் விஷ்ணுவுக்குப் பேரன்; அவனைக் கும்பிட்டால் புத்தி கெட்டுப் போகும் என்கிறார்.


‘தினமணி’யார் ‘கல்கி’யாருக்குப் பதில் சொல்லிவிட்டு எங்கள் தமிழர்மீது, தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என்று கூறுகிற சைவ அன்பர்கள்மீது ஆக்ரோசமாகப் பாயட்டும்!


அதுசரி, தமிழர்கள் என்ற முறையில் நாத்திகர்களாகிய நாங்கள் தமிழர்கள்மீது விழுந்து பிராண்டும் தினமணிக்குச் சூடு கொடுக்கிறோம்.


சைவ மெய்யன்பர்களே, தமிழ்க் கீர்த்திகளே, சைவ மடாதிபதிகளே! நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?


------------------------மின்சாரம் அவர்கள் 19-12-2009 ”விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை


0 comments: