ஈழத் தமிழர் பிரச்சினை: ‘‘அம்மா’’வுக்குப் பயந்து முடிவுகளை மாற்றியவர்கள் யார்?
நானும் பா.ம.க., நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களும் சென்னையில் பெரியார் திடலில் ஆசிரியர் அவர்களைச் சந்தித்தோம். ஈழத் தமிழர்களுக்காக ஒரு பொதுவான இயக்கத்தை உருவாக்கலாம் என்று முடிவெடுத்தோம்.
சனவரி 10ஆம் தேதி (2009) பெரியார் திடலில் அதற்கான ஒரு கூட்டத்தைக் கூட்டிட ஆசிரியர் அவர்களே அனைவருக்கும் கடிதம் எழுதினார்.
அங்கு நடந்தால் சிறப்பாக இருக்கும் என்பது தான் எங்களின் எண்ணமாகவும் இருந்தது. ஆனால் பெரியார் திடலில் வேண்டாம் என்று சில தலைவர்கள் நினைத்தார்கள். பெரியார் திடலில் கூட்டம் நடத்துவதில் என்ன சிக்கல்? எல்லோருக்கும் பொதுவான இடம் பெரியார் திடல்தானே என்று மருத்துவரிடம் நான் கேட்டேன்.
சிலர் அப்படி நினைக்கிறார்கள் சரி, எங்கு நடந்தால் என்ன? நமக்குக் காரியம்தான் முக்கியம் என்றார்.
பெரியார் திடலில் கூட்டம் என்று அறிவித்துவிட்டு அதனை ரத்து செய்வது சங்கடமான ஒன்று. ஆசிரியரைச் சந்தித்து சமாதானம் சொல்லுவோம் வாருங்கள் என்று டாக்டர் அவர்களை அழைத்துக் கொண்டு பெரியார் திடலுக்குச் சென்றோம்.
தமிழர் தலைவரின் பெருந்தன்மை
ஆசிரியர் அவர்கள் மிகவும் பெருந்தன்மையாகவே நடந்து கொண்டார். அதே நேரத்தில் சகோதரர் வைகோவுக்கோ, தோழர் தா.பாண்டியனுக்கோ, நண்பர் நெடுமாறனுக்கோ பெரியார் திடலுக்கு வருவதற்கு என்ன சங்கடம் தயக்கம்? அவர்கள் எல்லாம் இங்கு வருபவர்கள்தானே என்ற கேள்வியைக் கேட்டார். நியாயமான கேள்வி அது என்பதில் அய்யமில்லை.
பெரியார் திடலில் நடத்தக்கூடாது என்பதற்குக் காரணம், அங்கு நடந்தால் அம்மா கோபித்துக் கொள்வார் என்பதுதானாம். தமிழர்கள் ஒன்றுபட முடியாத சிக்கல் எங்கே இருக்கிறது என்று இதன்மூலம் தெரிகிறது.
12ஆம் தேதி வேறு ஓரிடத்தில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்துக்கு நீங்கள் அவசியம் வரவேண்டும் என்று டாக்டர் அவர்களும், நானும் ஆசிரியரிடம் மிகவும் வற்புறுத்தினோம். ஈழத் தமிழர் நலன் கருதி ஆசிரியர் அவர்களும் மிகவும் பெருந்தன்மையோடு கூட்டத்தில் பங்கேற்க ஒப்புதல் தந்தார். பிரச்சினைமீது அக்கறை என்பதால் அந்தப் பெருந்தன்மையை தமிழர் தலைவரிடம் காணமுடிந்தது.
முதலமைச்சருடன் சந்திப்பு
இதற்கிடையே ஆசிரியர் அவர்கள் ஒரு கருத்தினை எங்களிடம் கூறினார். ஈழப் பிரச்சினை என்பது எப்படியாக இருந்தாலும் அரசு மூலம் தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. நாம் வீதிகளில் என்னதான் கத்தினாலும், நாம் கோரிக்கை வைப்பதும் அரசிடத்தில்தான். எனவே 12ஆம் தேதி கூட்டத்துக்கு முன் முதலமைச்சரிடம் இதுகுறித்து பேசுவோம் என்றார் தமிழர் தலைவர். அது சரியாகத்தான் பட்டது. பா.ம.க. தலைவர் கோ.க.மணி முதல்வரைச் சந்திக்க நேரத்தையும் பெற்றார். அதன்படி 12 ஆம் தேதி காலை 9 மணிக்கு முதலமைச்சர் அவர்களை சந்தித்தோம். நாற்பது நிமிடங்கள் பேசினோம். எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தாகி விட்டது. வேண்டுமானால் நான் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்றார் முதலமைச்சர்.
உங்கள் வயதுக்கு உண்ணாவிரதம் என்பதெல்லாம் தவறு. அதுவும் கொள்கைக்கு முரண்பாடானது என்று கூறினார் ஆசிரியர்.
அம்மா வருத்தப்படுவார்களாம்!
அதன்பின் ஒரு தகவல் வருகிறது. அன்று மாலை நடக்க இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது என்று அறிவித்தார்கள். என்ன காரணமாம்? மருத்துவர் ராமதாசு அவர்களைச் சந்தித்துக் கேட்டபோது அவர் கூறினார், முதலமைச்சரைச் சந்தித்துவிட்டு வந்தால் அம்மா வருத்தப்படுவார்கள் என்கிறார்கள் என்று கூறினார்.
ஈழம் போய் இலங்கை வந்தது ஏன்?
சில நாள்கள் கழித்து தோழர் தா.பாண்டியன் அவர்கள் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அது பொங்கு தமிழர் அறக்கட்டளை அலுவலகத்தில் நடக்க இருந்தது. எனக்கு அழைப்பு இல்லை. இருந்தாலும் பிரச்சினையின் முக்கியத்துவத்தைக் கருதி மருத்துவர் ராமதாசு அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டேன்.
சிறிது நேரம் கழித்துத் தொடர்பு கொள்வதாகக் கூறினார். பிறகு சரி, நீங்கள் கூட்டத்துக்கு வாருங்கள் என்றார். நானும் கூட்டத்துக்குச் சென்றேன். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற ஒன்று உருவாக்கப்பட்டது. ஈழம் போய் இலங்கை வந்தது எப்படி என்று கேட்டதற்கு கம்யூனிஸ்ட்களுக்கு ஈழம் என்பதில் உடன்பாடில்லையாம்.
இத்தனை லட்சம் ஈழத் தமிழர்கள் அழிக்கப்பட்ட பிறகு கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடு சிங்களர்களின் ஒற்றை ஆட்சியின் கீழ் தமிழர்களுக்கான உரிமை என்பதுதானாம்.
ஈழத் தமிழர் பிரச்சினையில், ஈழத் தமிழர்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் எதிர்நிலையில் இருந்து வரும் செல்வி ஜெயலலிதா அம்மாவின் விருப்பம்கோபதாபம் இவற்றைப் பொறுத்து முடிவு எடுக்கும் நிலையில் யார் யார் இருந்தார்கள் என்பதை தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணியில் இருந்தாலும் ஈழத் தமிழர் பிரச்சினையைப் பொறுத்த வரையில் கலைஞர் அவர்களுக்கு எதிரான அணியினரிடம் உறவு வைத்துக் கொண்டிருந்தேன்.
இந்தப் பிரச்சினைக்காக திமுக கூட்டணியிலிருந்து என்னை வெளியேற்றினாலும் சரி, அது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு வரை கூட எதிர் அணியில் தானிருந்தேன்.
இரண்டு சீட்டுக்காக திருமாவளவன் காங்கிரசுக்கு அடிமையாகி விட்டான் என்றெல்லாம் அவதூறு செய்தனர். எங்களைப் பொறுத்தவரை திமுகவோடு தான் கூட்டு என்பதில் தெளிவாகவேயிருந்தோம்.
கொள்கை ரீதியான கூட்டு
முதலமைச்சர் கலைஞரிடம் செய்தியாளர்கள் கேட்டனர், விடுதலைச் சிறுத்தைகள் திமுக கூட்டணியில் இருக்கிறார்களா என்று கேட்டனர். விடுதலைச் சிறுத்தைகளுடன் திமுவுக்கும் உள்ள உறவு வெறும் தேர்தல் கூட்டணி உறவல்ல. கொள்கை உறவு. பெரியாரியல் சிந்தனை என்ற அடிப்படையிலும், ஜாதி ஒழிப்புக் கொள்கை அடிப்படையிலும் உள்ள கொள்கை உணர்வு என முதலமைச்சர் பதிலளித்தார்.
இது விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைக்குக் கிடைத்த அங்கீகாரமாகும். தேர்தல் கூட்டணியைக் கொள்கைக் கூட்டணி என்று அறிவித்தது விடுதலைச் சிறுத்தைகளுக்கு மட்டுமே என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.
ஈழத் தமிழர் பிரச்சினை போன்றவற்றில் திராவிடர் கழகத்தையோ, தமிழர் தலைவர் வீரமணி அவர்களையோ முன்னிலைப்படுத்தாமல் வேறு யாரை முன்னிலைப்படுத்த முடியும்?
கலைஞர் அவர்களுடன் திராவிடர் கழகத்துக்கு நெருக்கமான உறவு இருந்தாலும், காங்கிரசைக் கண்டிப்பதிலோ, எதிர்ப்பதிலோ, போராட்டம் நடத்துவதிலோ தமிழர் தலைவர் பின்வாங்குவதில்லையே!
பொதுப் பிரச்சினையிலும், தமிழர்கள் மத்தியிலே ஏற்பட வேண்டிய நல்லிணக்கம் என்பதிலும் தமிழர் தலைவர் மேற்கொள்ளும் அணுகுமுறை என்பது மிகவும் சிறப்பானதாகும்.
-------------------------- சென்னை மந்தவெளி பொதுக் கூட்டத்தில் தொல்.திருமாவளவன்,2.12.2009
---------------தொகுப்பு:-மின்சாரம்- "விடுதலை" 4-12-2009
3 comments:
he he comedy panrare
good story and good story telling technique by the author.
என்னது .... கேப்பையில நெய் வடியுதா ?
Post a Comment