திருவாளர்
சோவின் துக்ளக் - அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அதிகாரமே தன் சுட்டு விரலில்
வைத்திருப்பது போல ஆண வத்துடன் திமிர் முறித்து நடைபோடுகிறது!
பொங்கலன்று சென்னையில் அவர் பேசிய
பேச்சும், உடல் நளினங்கள் (Body Language) அத்தன்மையில் எகிறி இருந்ததைப்
பார்வையாளர்கள் உணர்ந்திருந்தனர்; - பலரும் இந்த வகையில் நம்மிடம்
கருத்துத் தெரிவித்தனர். (அவருக்கே உரித்தான கோமாளித்தனத்துக்குப்
பஞ்சமில்லை, மேடையில் சட்டையைக் கழற்றி விகடக் கச்சேரியும் நடத்தியுள்ளார்)
16.1.2013 நாளிட்ட ஒரே ஒரு துக்ளக் இதழை எடுத்துக் கொள்ளலாம்.
1. ஆளும் கட்சி எடுத்துள்ள முடிவின்
பின்னணி - எனும் தலைப்பில் ஒரு கட்டுரை. நடக்க இருக்கும் மக்களவைத்
தேர்தலில் தமிழ்நாடு - புதுச்சேரியையும் சேர்ந்து அ.இ.அ.தி.மு.க. வெற்றி
பெற்று, செல்வி ஜெயலலிதா இந்தியாவின் பிரதமர் ஆகப் போகிறாராம்.
போகட்டும் போகட்டும்.
எந்தக் கட்சியுடனும் கூட்டணியின்றி அ.இ.அ.தி.மு.க. அறிவித்திருப்பது சரியில்லையாம். என்ன செய்ய வேண்டுமாம்?
கருத்துத்தானம் செய்கிறது துக்ளக்.
இடதுசாரிகள் மற்றும் சில சிறிய கட்சி களுக்கு அதிமுக அணியில் நிச்சயம் இடம்
இருக்கும் என்றே பத்திரிகையாளர்கள் பலரும் இடது கட்சிகளைச் சேர்ந்தவர்
களும் நினைக்கிறார்கள் - என்கிறது துக்ளக்
நேரிடையாகச் சொல்வது போல் இருக்கக்
கூடாது; அதே நேரத்தில் இந்தக் கருத்தையும் சொல்ல வேண்டும் - அதற்காக யாரோ
சிலர் நினைக்கிறார்கள் - என்பதை எவ்வளவு தளுக்காக தந்திரமாக சோ சொல்லுவதைக்
கவனிக்க வேண்டும்.
இது திருவாளர் சோவின் பாணி. பிஜேபி அதிமுக
பற்றி சில நேரங்களில் குறை சொல்வதுபோல எழுதும்போதுகூட, அக் கட்சி எப்படி
நடந்து கொண்டால் நல்லது என்கிற உள்ளடக்கம் கொண்ட வாசகங் களும் இடம்
பெற்றிருக்கும் - அவ்வளவு அக்கறை துள்ளிக் குதிக்கும்; ஆசாபாசம் அத்தகையது!
2. கேள்வி: கர்நாடக துணை முதல்வர் ஈஸ்வரப்பா வீட்டிலிருந்து பணத்தை எண்ணும் இயந்திரம் கைப்பற்றப்பட்டுள்ளது பற்றி...?
பதில்: அவர் வீட்டிலிருந்து கைப்பற்றப்
பட்ட மற்ற விஷயங்கள்தான் பெரும் மதிப்புடையனவே தவிர, இந்த மிஷின் விவகாரம்
பெரிதல்ல. இது சாதாரணமாகக் கடைகளிலேயே கிடைக்கிற விஷயம். 2000, 3000
ரூபாய்க்கு இந்த மாதிரி மிஷின்கள் கிடைக்கின்றன. ஓரளவு சுமாராகப் பணத்தைக்
கையாளும் நிலையில் இருப்பவர்கள்கூட, இவற்றை வாங்கி வைத்துக் கொண்டு பணத்தை
எண்ணுகிறார்கள். ஆகையால், இது ஏதோ விபரீதமான விஷயம் என்பது போல நினைத்துக்
கொண்டு, பணம் எண்ணுகிற மிஷன் கைப்பற்றப்பட்டது - என்பதை ஒரு பரபரப்புச்
செய்தியாகப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. - இப்படி ஒரு துக்ளக்கில்
பதில்!
எப்படிப்பட்ட சாமர்த்தியமான பதில்!
சம்பந்தப்பட்டவர் பிஜேபியைப் சேர்ந்தவர், - ஒரு மாநிலத்தின் துணை அமைச்சர்
என்று வரும் பொழுது எவ்வளவு வக்கணையாக எழுதுகிறார்.
பணத்தை எண்ணும் அளவுக்கு மெஷின்
வைத்திருந்தார் _ ஒரு துணை முதல் அமைச்சர் என்றால், அது சாதாரணமா? இந்த
மெஷின் வீட்டுக்கு வீடு இருக்கிறது என்கிறார். (சோகூட வாங்கி வைத்துள்ளாரா
என்று தெரியவில்லை)
அமைச்சராக இருக்கக் கூடியவருக்கு மாதச்
சம்பளம் மட்டும் தானே இருக்க முடியும்; மெஷின் வைத்து எண்ணும் அளவுக்கு
வருமானம் இருக்க முடியாதே - கூடாதே! _ படிப்பவர்களின் காதில் பூ சுற்றப்
பார்க்கிறார். இந்தப் பார்ப்பனர்.
வருமான வரித்துறை - வேறு ஒரு
கட்சிக்காரரின் வீட்டில் சோதனை செய்தபோது, பணம் எண்ணும் மெஷினைப் பறி முதல்
செய்தால், இந்தக் கண்ணோட்டத்தோடு எழுதுவாரா சோ? சோவின் (வி)வாத முறை
எப்படிப்பட்டது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!)
3. கேள்வி: சேது சமுத்திரத் திட்டம்
நிறைவேறினால், தமிழகத்தின் வாணிபம் செழிக்கும். வெளிநாட்டுத் தொடர்புகள்
அதிகரிக்கும். அதன் மூலம் தமிழகப் பொருளாதாரம் வளரும். இந்தத் திட்டத்தை
நிறைவேற்ற ப. சிதம்பரம் முயற்சிக்க வேண்டும். அவரது பிறந்த நாள் பரிசாக
இந்த வேலையை அவருக்கு நான் அளிக் கிறேன் - என்று கருணாநிதி பேசியுள்
ளாரே..?
பதில்: சேது சமுத்திரத் திட்டம் பொருளாதார
ரீதியாக எந்த நன்மையையும் தரப் போவதில்லை. அதை முடிப்பது தண்டச் செலவு.
ஏற்கெனவே பணம் வீணாகியிருக்கிறது. இன்னமும் அங்கே கொண்டு போய் பணத்தைக்
கொட்டினால், மேலும் பணம்தான் வீணாகுமே தவிர, அதனால் தமிழகத்திற்கு எந்தப்
பெரிய நன்மையும் கிடைக்காது என்பதெல்லாம் பொருளாதார நிபுணர்களால் விளக்கிச்
சொல்லப்பட்டிருக்கின்றன. இதைத் தவிர, ஒரு புராதனச் சின்னத்தை, ஹிந்துக்கள்
புனிதமாகக் கருதுகிற இடத்தை, வேண்டு மென்றே சிதைக்க வேண்டும் என்ற கெட்ட
நோக்கமும் இதில் இருக்கிறது என்ற சந்தேகத்திற்கும் இந்தத் திட்டம் இட
மளித்து விட்டது. இந்தக் காரணங் களினால் மத்திய அரசேகூட, இதை நிறை
வேற்றுவதில் ஆர்வம் காட்டாமல்தான் இருக்கிறது.
ஆகையால், இதை மத்திய அரசு நிறை வேற்றும்
என்ற நம்பிக்கையில், கலைஞர் நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி பேசவில்லை.
எதிர்காலத்தில் ஒரு வேளை காங்கி ரஸுடன் உறவு வைத்துக் கொள்ள முடியாமல்
போனால், அப்போது அதற்குச் சில காரணங்களைக் காட்ட வேண்டும். இலங்கை தமிழர்
பிரச்சினையை ஒரு காரணமாகக் காட்டலாம்; அது அவ் வளவாக எடுபடாது. ஏனென்றால்,
அதில் கலைஞரே பத்துப் பதினைந்து நிலைகளை எடுத்திருக்கிறார். அத்துடன்கூட
சேது சமுத்திரத்தையும் ஒரு காரணமாகக் காட்டினால், தான் காங்கிரஸ்
கூட்டணியைக் கை விட்டதற்குக் கொள்கைதான் காரணமே தவிர, குடும்பப் பிரச்சினை
காரண மல்ல என்று வாதிடலாம் என்பதுதான் அவருடைய திட்டமாக இருக்கும்.
அதனால்தான் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி பேசியிருக்கிறார். (துக்ளக்
16.1.2013).
150 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசப்படும்
திட்டம் இது. இந்தத் திட்டத்தினால் ஏற்படும் நலன்கள், வளங்கள் குறித்து ஏதோ
கலைஞர் அவர்கள் கற்பனையாகச் சொல்வதுபோல் எழுதுவது திருவாளர் சோவின் வழக்க
மான நரித்தன வார்த்தைகள்; பொருளாதார நிபுணர்கள், பல்வேறு ஆய்வுக்குழுக்கள்
தான் அறிக்கைகளாகக் கொடுத்துள்ளன.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 9 குழுக்கள்
அதன்பின் இந்திய ஆட்சியில் மூன்று குழுக்கள், நிபுணர்களைக் கொண்ட 12
குழுக்கள் இந்தத் திட்டத்தின் அரு மையை - நலனை விரிவாக எடுத்துக் கூறி
யுள்ளன.
1) மேற்குக் கடற்கரையிலிருந்து கிழக்குக் கடற்கரைக்கு கப்பல்களின் பயண தூரம் 480 முதல் 840 கிலோ மீட்டர் குறையும்.
2) இலங்கையைச் சுற்றிச் செல்லாமல்
கப்பல்கள் குறுக்கு வழியில் வருவதால் 12 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை
கப்பல் பயண நேரம் குறையும். ஒரு மணி நேர கப்பல் பயணத்திற்கு ஆகும் செலவு
தோராயமாக ரூ.50,000/-
3) சேது சமுத்திரத் திட்டத்தில் போடப்
படும் முதலுக்கு இத்திட்டம் முடிந்த முதலாண்டில் நாலரை சதவிகித வருமானம்
கிடைக்கும் 11ஆவது ஆண்டில் இந்த வருவாய் 7 சதவிகிதமாகவும், 15ஆவது ஆண்டில்
இது எட்டரை சதவிகிதமாகவும் உயரும் 30 அடி ஆழ கால்வாய் 16ஆம்
ஆண்டிலிருந்தும் 31 அடி ஆழ கால்வாய் 17ஆவது ஆண்டிலிருந்தும் 35 அடி ஆழ
கால்வாய் 24 ஆவது ஆண்டிலிருந்தும் லாபத்தில் இயங்கும்.
4) மிகக் குறைந்த செலவில் சேது கால்வாயைப்
பராமரிக்க முடியும். கால்வாய் துவக்கப்பட்ட ஆண்டில் ஆண்டிற்கு ரூ.13.80
கோடி வருமானமும், ரூ.4.30 கோடி ரூபாய் பராமரிப்பு செலவும் ஏற்படும்.
5) சேதுக் கால்வாயில் செல்லும் கப்பல் களின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 80 சதவிகிதம் அன்னியச் செலாவணி கிடைக்கும்.
6) இக்கால்வாய் வெட்டப்பட்டு பயனுக்கு வருமானால் தூத்துக்குடி துறைமுகம் பெரிய வளர்ச்சி அடையும்.
7) தூத்துக்குடி துறைமுகமும் சேதுக்
கால்வாயும் சேர்ந்து இந்திய நாட்டிற்கும் குறிப்பாக தென்
மாவட்டங்களிலிருந்து மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும்.
8) ஏற்றுமதி, இறக்குமதி பெருகும், வாணிபமும் வளரும். இப்பகுதியில் புதிய தொழில்கள் தோன்றும். மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.
9) பயணிகள் - கப்பல்களுக்கும், வணிகக் கப்பல்களுக்கும் பாதுகாப்பான கால்வாயாக சேதுக் கால்வாய் விளங்கும்.
10) புயல் அபாயமுள்ள இலங்கைக் கடற்கரையைச்
சுற்றிக் கொண்டு செல்வது கப்பல்களுக்கு ஆபத்தை விளைவித்துக்
கொண்டிருக்கிறது. இது தவிர்க்கப்படும்.
11) சேதுக் கால்வாயின் இருபுறமும் உள்ள
துறைமுகங்கள் இதன் மூலம் வளர்ச்சி அடையும் எண்ணூர். பாம்பன், வலிநோக்கம்,
குளச்சல், தூத்துக்குடி, ராமேசுவரம், நாகப்பட்டினம், கன்னியாகுமரி,
புன்னைக் காயல், வேம்பார், திருக்கடையூர், புதுச்சேரி, சென்னை ஆகிய தமிழ்
நாட்டுத் துறை முகங்கள் மிகுந்த வளர்ச்சியை அடையும்.
12) இந்தியாவில் தமிழ்நாடு, இலங்கையில்
தமிழர் வாழும் ஈழப் பகுதியும் அனைத் துலகச் சுற்றுலாப் பயணிகளை அதிகமாகக்
கவரும் பகுதிகளாக மாறும்.
13) நிலக்கரி, உப்பு, சிமெண்ட் போன்ற
பெருமளவில் கொண்டு செல்லப்படும் பொருள்கள் கடல் மார்க்கமாக இக்கால் வாய்
மூலம் குறைந்த செலவில் கொண்டு செல்ல வழியேற்படும். தற்போது ஆண்டு தோறும்
கிழக்குக் கடற்கரையோரமாக 25 லட்சம் டன் நிலக்கரியும் 30 லட்சம் டன்
உப்பும், 20 லட்சம் டன் பிற சரக்குகளும் கொண்டு செல்லப்படுகின்றன.
14) இதன் மூலம் தென் மாவட்டக் கடற்கரைப் பகுதிகள் பொருளாதார ரீதியில் வளம் பெறும்.
15) கரையோர வர்த்தகம் பெருகி, 2000 முதல் 3000 டன் எடையுள்ள கப்பல்களின் போக்குவரத்து அதிகமாகும்.
16) மீன்பிடிக்கும் தோணிகள், கப்பல்கள் அதிக அளவில் தொழில் செய்ய பயன ளிக்கும்.
இவ்வளவு அருமையான திட்டம் தொடர்ந்து கிடப்பில் போடப்படுகிறது என்றால் இதற்குக் காரணம் என்ன? சிந்திக்க வேண்டிய நேரம் இது!
இப்படியெல்லாம் தெரிவித்திருப்பது நிச்சயமாக மானமிகு கலைஞர் அவர்களோ; மானமிகு கி.வீரமணி அவர்களோ அல்ல.
இந்த நிபுணர்களைவிட மே(ல்)தாவியா திருவாளர் சோ?
பாரதீய ஜனதாவைத் தோளில் தூக்கி வைத்துக்
கொண்டு கூத்தாடுகிறாரே திருவாளர் சோ, அந்த ஆட்சிக் காலத்தில்தானே
இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கான வரைபடம்
உள்படத் தயாரித்துக் கொடுத்ததும் வாஜ்பேயி பிரதமராக இருந்த ஆட்சிக்
காலத்தில்தானே?
அதிமுகவின் இரண்டு தேர்தல் அறிக் கையிலும் இத்திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தவில்லையா - செல்வி ஜெயலலிதா?
அப்பொழுதெல்லாம் கனவில் வராத ராமபிரான்
இப்பொழுதுதான் சோ கூட்டத் தின் முன் தோன்றி என்னைக் காப்பாற் றுங்கள்,
காப்பாற்றுங்கள்! என்று அப()யக் குரல் கொடுத்தாரா?
ஓர் அறிவியல் திட்டத்தில் புராணக்
குப்பையைக் கொண்டு வந்து போட்டுக் குறுக்குச் சால் ஓட்டுபவர்கள், வேறு
எந்தப் பிரச்சினையிலும்கூட கருத்துகள் கூறத் தகுதி படைத்தவர்கள்தானா என்பது
அறிவுக்கு விருந்தளிக்கும் வினாவே!
4. கேள்வி: வெறும் இரண்டு, மூன்று
மணி நேர மின்வெட்டிற்கே தி.மு.க.வை மக்கள் தோல்வியுறச் செய்தார்களே! தற்போது 18,19 மணி நேர மின்வெட்டு நிலவும் போது, அ.தி.மு.க.வை மக்கள் எப்படி
தண் டிக்கப் போகிறார்களோ தெரியவில்லையே...? என்று மு.க. ஸ்டாலின்
பேசியுள்ளாரே?
பதில்: ஒருவன் மற்றொருவனைக் கத்தியால்
குத்தி விடுகிறான். அப்படி சீரியஸாகக் காயப்பட்ட மனிதன். ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப்படுகிறான். ஆஸ்பத்திரியில் டாக்டர், அவனுக்கு ரண சிகிச்சை
செய்கிறார். அதற்காக கத்தியை பல இடங்களில் அவர் பயன்படுத்த வேண்டி
இருக்கிறது. அப்பொழுது அந்த நபரைக் கத்தியால் குத்தியவன் அநியாயம், நான்
ஒரு முறை குத்தியதற்கே என்னைக் கைது செய்து விட்டார்கள்; வழக்குப்
போட்டிருக்கிறார்கள். நான் பெரிய குற்றம் செய்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
அந்த டாக்டரோ பலமுறை கத்தியால் அவனைக் குத்துகிறார். குத்தி விட்டு ஊசி
கொண்டு தையல் வேறு போடுகிறார். பிறகு மீண்டும் குத்துகிறார், அறுக்கிறார்.
என்னென்னவோ செய்கிறார். அதெல்லாம் பரவாயில்லை. நான் குத்தியதுதான் தவறா?
இதை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்று கூறினால் எப்படி இருக்குமோ,
அப்படி இருக்கிறது ஸ்டாலினுடைய பேச்சு.
இப்படி ஒரு கேள்வி பதில் துக்ளக்கில் (16.1.2013 பக்கம் 31)
கேட்ட கேள்விக்கு நேரிடையாகப் பதில்
உண்டா? பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு கிலோ இன்ன விலை
என்று கூறுவதுதான் அக்ரகார அறிவாளி சோவின் பாணி.
நான் ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதத்தில் மின்வெட்டை வெட்டி வீழ்த்திடுவேன் என்ற வீராப்புப்பற்றி சோவின் பேனா வாய் திறக்காதது ஏன்?
திமுக ஆட்சிக் காலத்தில் மேற்கொள் ளப்பட்ட மின் திட்டங்களை விரைந்து முடிக்காததற்குக் காரணம் என்ன?
மின்சாரத்தில்கூட திமுக மின்சாரம் என்று தரம் பிரித்து விட்டனரா?
ஆசை வெட்கம் அறியாது என்பார் கள்;
அக்கிரகார அம்பிகளுக்கோ இனப் பற்று என்று வந்து விட்டால் கண் மண் தெரியாமல்
அம்மணமாக ஓடக் கூடத் தயா ராக இருக்கக் கூடியவர்கள்தான் போலும்!
அறுவை சிகிச்சை செய்யக் கூடிய மருத்துவர்
சிலர் அறுவை சிகிச்சை செய் யும் கத்தியையே உள்ளே வைத்து விட்டு மேலே தையல்
போட்டு விடுகிறார்களே _- அப்படிப்பட்டவர்களும் டாக்டர்கள் தானே! திருவாளர்
சோ கூறும் டாக்டர் இந்தப் பட்டியலைச் சேர்ந்தவராக இருக் கிறாரே என்பதுதான்
பிரச்சனையே! (சோவுக்குத் தான் எழுதத் தெரியுமா? இடக்கு முடக்காக
மற்றவர்களாலும் எழுத முடியும் என்பதை முதலில் சோ அய்யர் உணரட்டும்!)
ஒரே ஒரு துக்ளக் இதழில் குடிநீரில் நஞ்சு
கலப்பதுபோல தமிழர்களுக்கு எதிராக சோ கூட்டம் எழுத்துக்களைக் கொட்டித்
தீர்க்கும் என்பதைத் தமிழர்கள் அறிய வேண்டாமா?
பாழாய்ப் போன அரசியலுக்காக பாஷாணத்தைப்
பாயசம் என்று பருகலாமா? இந்த 2013லும் பார்ப்பனர்கள் எத்தகைய பயங்கரவாதிகள்
என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
துக்ளக்கில் சொட்டும் ஒவ்வொரு துளியும்
ஆரியத்திற்கு ஆரிரரோ! திராவிடத்திற்கோ தீங்கானது என்பது நினைவிருக்கட்டும்!
நினைவிருக்கட்டும்!!
நீஷப்பாஷை!
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்
ஒருவர் தமிழில் வாதிட்டாராம். துக்ளக் குடுமிக்கு எரிச்சல் வியாதி வந்து
விட்டது. இந்தத் தமிழ் உளறலுக்கு மருந்து தேவை என்று ஒரு துர்வாசர் கிளம்பி
விட்டார். தமிழ்நாட்டில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவது
என்பது பஞ்சமா பாதகமா? ஏன் தாண்டிக் குதிக்கிறது துக்ளக்?
தமிழ் என்றால் அப்படி ஒரு வெறுப்பு! நீஷப்பாஷை என்று தானே அவாளின் பெரிய வாள் கருதுகிறார்.
தமிழ்நாட்டை விட்டுத் தள்ளுங்கள்.
வடமாநிலத்தில் உயர்நீதிமன்றத்தில் தாய் மொழியில் வாதிடும் நிலை
இருக்கத்தானே செய்கிறது - அதுபற்றியெல்லாம் எழுதுவதில்லையே -_ ஏன்?
இப்படி எழுதுகிற இந்தக் கூட்டத்துக்கு அவாளின் தாய் மொழியான சமஸ்கிருதத்தின்மீது பாசம் இல்லையா _ பற்று இல்லையா? ஏன் வெறி இல்லையா?
கோயில்களில் ஏன் சமஸ்கிருதம்? என்று
கேட்டுப் பாருங்கள்.
தாண்டிதோண்டியில் குதிப்பார்கள். செத்த மொழிமீதே
அவ்வளவு வெறி என்றால் உயிரோட்டம் உள்ள தமிழ்மீது தமிழர்கள்பற்றுக் கொள்ளக்
கூடாதா? செத்துச் சுண்ணாம் பாகிப் போன சமஸ்கிருதத்துக்கு என்றே அவாள்
ஆட்சிக் காலத்தில் ஓர் ஆண்டை அறிவித்து கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை வாரி
இறைக்கவில்லையா?
******************************************
ஆங்கிலேயருக்குவக்காலத்தா?
வழக்கமாக
ஒரு பல்லவியைப் ப டுவது பார்ப்பனர்களின் வழக்கம்! ஆங்கிலேயருக்கு
வக்காலத்து வாங்கிய ஈ.வெ.ரா. என்று ஒரு சுப்பு எழுதுகிறது (துக்ளக்
16.1.2013 பக்கம் 9)
எங்கே வாங்கினார்? எப்பொழுது வாங்கினார்? எப்படி வாங்கினார்?
என்ற கேள்விகளையெல்லாம் கேட்கக் கூடாது.
அக்னியைக் கையில் வைத்துக் கொண்டல்லவா எழுதுகின்றனர்? எதிர்க்கேள்வி
கேட்கலாமா?
இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்? என்று குடிஅரசில் (29.12.1933)
தலையங்கம் தீட்டியதற்காக வெள்ளையர் ஆட்சியால் 124ஆ அரச வெறுப்புக்
குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் தந்தை
பெரியார்; வழக்கின் முடிவில் ரூ.300 அபராதமும் 9 மாதத் தண்டனையும்
அளிக்கப்பட்டார் பெரியார் கோவை மாவட்ட ஆட்சியர் (வெள்ளைக்காரர்) ஜீ.
டபுள்யூ வெல்ஸ் அய்.சி.எஸ். என்பவரால் என்ற வரலாறு எல்லாம் தெரியாமல்
பார்ப்பனக் கொழுப்பெடுத்து எழுதலாமா?
தந்தை பெரியாரின் தங்கை எஸ்.ஆர்.
கண்ணம்மாள் அவர்களும் தண்டனைக்கு உள்ளானாரே!
அதே நேரத்தில் அவாளின்
ஆச்சாரியார் (ராஜாஜி) 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது அண்டர்
கிரவுண்ட் ஆனாரே அதையெல்லாம் வசதியாக மறந்து விடுவார்கள். மறையவர்கள்
அல்லவா!
இந்தியரில் முதல் நீதிபதி என்று ஏற்றிப்
போற்றுகின்றனரே, அந்த ஜஸ்டிஸ் முத்துசாமி அய்யர் சென்னை பட்டதாரிகளுக்குக்
கூறிய அறிவுரையையும் அய்யன்மார்களே கேண்மின் கேண்மின்!!
நமது மாட்சிமை மிக்க அரசுக்கும்,
பிரிட்டானியா நாட்டிற்கும் ஆழ்ந்த விசுவாசம் காட்டும் வகையில் உங்கள்
எண்ணமும், செயலும் அமையட்டும். எக்காலத்தும் போதிய அளவில் திரும்பச்
செலுத்த முடியாத வகையில் நாம் அவர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆரிய
இனத்தில் இரு பிரிவுகளும் கடவுளின் விதிப்படி இந்தியாவில் ஒன்று
சேர்ந்திருக்கின்றன. அதனுடைய பெருங் கடமையை இந்தியாவிற்கு ஆற்ற பிரிட்டானிய
ஆட்சிக்குத் திறமை இருக்கிறது என்று துக்ளக்கின் முன்னோரான அக்ரகாரத்து
நீதிபதி முத்துசாமி அய்யர் பேசினாரா இல்லையா? (Politics and Nationalist
Awakening in South India) தமிழில் மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய
அடையாளம் பக்கம் 44 -_ பேராசிரியர் கு.வெ.கி. ஆசான்).
ஆரியர்களும் வெள்ளைக்காரர்களும்
ஓரினத்தவர்களாம்; கடவுளின் விதிப்படி அவர்கள் ஒன்று
சேர்ந்திருக்கிறார்களாம். இந்த யோக்கிய சிகாமணிகள் தான் தியாகத்
திருவுருவமாம் தந்தை பெரியார்மீது சேற்றைவாரி இறைக்கத் துடிக்கிறார்கள்!
வெட்கக் கேடு!
பார்ப்பனரைப் புரிந்து கொள்வீர்!
------------------- மின்சாரம் அவர்கள் 19-1-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை