Search This Blog

24.1.13

ஜாதியற்ற சமூகம் படைத்திட ஜாதி மறுப்புத் திருமணங்கள் ஊக்குவிக்கப்படும்!

ஜாதி - தீண்டாமை ஒழிப்பு

திராவிடர் கழகம் மேற்கொள்ளவிருக்கும் தொடர் பிரச்சாரப் பயணத் திட்டத்தில் ஜாதி - தீண்டாமை ஒழிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை ஜாதி ஒழிப்பு என்பதுதான் அடிப்படைக் கொள்கை. மனித சமூகத்தில் பேதம் இருக்கக்கூடாது; அதுவும் பார்ப்பனீயத்தால் திராவிடர் சமுதாயத்தில் திணிக்கப்பட்ட வருணாசிரம அமைப்பு முறை - ஜாதி அமைப்பு முறை என்பது பிறவியிலேயே பேதத்தைத் திணிக்கக் கூடியதாகும்.

இது மனித சமூகத்தில்  சகித்துக் கொள்ளவே முடியாத புற்றுநோயாகும். எந்த விலை கொடுத் தேனும் ஒழிக்கப்பட வேண்டியதாகும்.

1924 ஆம் ஆண்டில் வைக்கம் வரை சென்று போராடியவர் தந்தை பெரியார். காங்கிரசை விட்டு தந்தை பெரியார் வெளியேறுவதற்குக் காரணமாக இருந்தவைகளுள் ஒன்று சேரன்மாதேவி குருகுல நடப்பாகும்; காங்கிரஸ் நிதியில் நடத்தப்பட்ட அந்தக் குருகுலத்தில் மாணவர்களிடையே பிராமணன் - சூத்திரன் என்று காட்டப்பட்ட பிளவும் ஒன்றாகும்.

தந்தை பெரியார் மேற்கொண்ட கடவுள் எதிர்ப்பு - மத எதிர்ப்பு, வேத எதிர்ப்பு, சாஸ்திர எதிர்ப்பு, இதிகாசங்கள் எதிர்ப்பு - புராணங்கள் எரிப்பு - ஏன் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவு எரிப்பு என்று எடுத்துக் கொண்டாலும், இவற்றிற்கெல்லாம் அடிப்படை ஜாதி ஒழிப்பாகும்.

இதனைப் புரிந்துகொள்ளாமலோ, புரிந்து கொண்டு வேண்டுமென்றே ஜாதிக்குக் கைலாகு கொடுப்போர் யாராக இருந்தாலும், தந்தை பெரியார் பெயரை உச்சரிக்கக் கூட தகுதியற்றவர்கள் ஆவார்கள்.

அரசியலில் நுழைந்து அதில் தாம் ஆசைப்பட்டதை நிறைவேற்றிக் கொள்ள முடியாதவர்கள் எந்தவித மான தெளிவான கொள்கைக் கோட்பாடு இல்லாத வர்கள், எளிதாகப் பற்றக் கூடிய ஜாதித் தீயை மூட்டி குளிர்காய ஆசைப்படுகிறார்கள்.

ஒரு முக்கால் நூற்றாண்டு காலம் தந்தை பெரியார் அவர்களாலும், அவர்தம் இயக்கத்தாலும் பக்குவப்படுத்தப்பட்ட தமிழ் மண்ணில் அத்தகைய நச்சு விதைகள் முளைக்க முடியாது - தமிழ்நாடு அதனை உதறித் தள்ளும்.
தமிழ்நாட்டைத் தாண்டி வேறு மாநிலங்களுக்குச் சென்று சம்பந்தப்பட்டவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

பிள்ளைகளிடம் ஜாதியைப் பற்றிச் சொல்லிக் கொடுங்கள் என்று சொல்லும் சிலரின் மனங்கள் சொத்தையாகப் போய்விட்டன.

ஜாதியை ஒழித்தே தமிழின ஒற்றுமையை - ஓரினக் கோட்பாட்டை உருவாக்கியவர் தந்தை பெரியார்; மீண்டும் ஜாதியைச் சொல்லி தமிழன் என்ற இன உணர்வை மழுங்கடிக்க முயலுவதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் தங்களைத் தாங்களே அம்பலப்படுத்திக் கொண்டுவிட்டனர்.

இதில் தமிழ்த் தேசியம் பற்றிய பேச்சு வேறு! ஜாதியை வளர்க்க ஆசைப்படுபவர்கள், எப்படி தமிழ்த் தேசிய உணர்வை வளர்க்க முடியும்? இது ஒரு கடைந்தெடுத்த தன் முரண்பாடு அல்லவா!

தலித் மக்கள் அல்லாதவர்கள்தான் தமிழர்கள் என்று சொல்லப் போகிறார்களா? அவர்கள் கூறும் தமிழ்த் தேசியத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் அடங்க மாட்டார்களா?

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்லிப் புறப்பட்டவர்கள் இந்த இடத்தில் தங்களுக்குத் தாங்களே புதைச் சேற்றில் சிக்கிக் கொள்ள வில்லையா?
தமிழ்த்தேசியம் என்றால் ஜாதி ஆதரிப்பு! திராவிடம் என்றால் ஜாதி ஒழிப்பு என்று மிக எளிதாகப் புரியும்படி விளங்கும்படிச் செய்துவிட்ட னரா இல்லையா?

கழகம் மேற்கொள்ளும் தொடர் பிரச்சாரத்தில் இவை எல்லாம் அம்பலப்படுத்தப்படும். திராவிடத்தின் அருமை விளக்கிக் கூறப்படும்!

ஜாதி மறுப்புத் திருமணங்கள் ஊக்குவிக்கப்படும். ஜாதியற்ற சமூகம் படைத்திட திராவிடர் கழகத்தின் இந்தப் பிரச்சாரம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதில் அய்யமில்லை.
               ------------------------"விடுதலை” தலையங்கம் 24-1-2013

17 comments:

தமிழ் ஓவியா said...


ஒழிய வேண்டும்!


பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள் களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூடநம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை.

- (விடுதலை, 22.6.191973)

தமிழ் ஓவியா said...


நண்பர் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படப் பிரச்சினை:


இரு சாராருக்கும் நமது அன்பு வேண்டுகோள்!

போக்குவரத்து நெரிசல் குறைந்து பத்திரமாகப் பயணம் செய்யலாம் வெளிநாடுகளில், வடமாநிலங்களிலும் இம்முறை பின்பற்றப்படுகிறதே!

அனைவராலும் உலக நாயகன் என்றழைக்கப் படும் பெருமைமிகு நடிப்புத் துறை கலைஞர் திரு. கமலஹாசன் அவர்கள், தமிழ்நாட்டின் அரிய கலைச்செல்வம் ஆவார்.

சிறுவயதிலிருந்து இன்று வரை வளர்ந்துள்ள ஒப்பற்ற கலைத்துறை மாற்றுச் சிந்தனையாளர், மனிதநேயர், பகுத்தறிவாளர்.

அவர் பல வகையில் புதுமையைப் புகுத்த எண் ணுபவர்; எனவே, எதிர்ப்புக் காட்டுவது பழைமை யையே கெட்டியாய்ப் பிடித்துள்ள நம் நாட்டவருக்கு இயல்பேயாகும்.

அவரது விஸ்வரூபம் என்ற திரைப்படத்திற்கு, இஸ்லாமிய சகோதரர்களையும், அவர்களது உணர்வுகளை சங்கடப்படுத்துவதுமான காட்சிகள் இருப்பதாகக் கூறி, ஆங்காங்கு இஸ்லாமிய சகோ தரர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது சம்பந்தமாக நமது அன்பான வேண்டுகோள்:

இரு சாராரும் சந்தித்து தங்களது உணர்வுகளை ஒருவருக்கொருவர் பரிமாறி, புரிந்துகொண்டு, நட்புறவும், பல்வேறு சமூகத்தவர்கள், கலைஞர்களுக் கிடையே நல்லிணக்கமும் ஏற்படும்படிச் செய்வது தான் சரியானதாக இருக்க முடியும்.

அடிப்படையில் நண்பர் கமலஹாசன் அவர்கள் ஒரு முற்போக்குச் சிந்தனையாளர்; யார்மீதும் வெறுப்பு கொள்பவர் அல்லர்.

எனவே, அவரது திரைப்படத்தில் தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தோ, புரியாமலோ இடம்பெற் றுள்ளதாக குற்றச்சாற்று கூறப்படும் நிலையில், இஸ்லாமிய சகோதரர்கள் மட்டுமல்ல, அவர் ஈடு பட்டுள்ள கலைத்துறை, திரையரங்க உரிமை யாளர்கள் அனைவரது நல்லெண்ணத்தையும், பேராதரவினையும் பெறவேண்டியவர். இன்று அவர் விடுத்துள்ள உருக்க மான அறிக்கைபற்றியும் இஸ்லாமிய சகோதரர்கள் சிந்திக்கவேண்டும்.

பேசித் தீர்வு காண முடியாத பிரச்சினையாக இது ஆகக்கூடாது.

பல கோடி ரூபாய் முதலீடு என்பதைவிட முக்கியம், பல தரப்பு மக்களின் ஆதரவு என்ற முதலீடும் முக்கியம்.

எனவே, இஸ்லாமிய சகோதரர்கள் உடனே உணர்ச்சிவயப்பட்டு, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடாமல், பிரச்சினையை ஒருவருக்கொருவர் பேசித் தீர்ப்ப தோடு, சமூகத்திலும், சட்டம் ஒழுங்குப் பிரச் சினைக்கு இடமின்றி நடந்துகொள்வதே அவசர அவசியம்!

இரு தரப்பினருக்கும் நமது அன்பு வேண்டு கோள் இது.


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 24.1.2012

தமிழ் ஓவியா said...


கருத்துரிமைப் போரின் மற்றொரு வெற்றி வாகை!


நீதியரசர் ஜஸ்டீஸ் கே. சந்துருவின் வரலாறு போற்றும் தீர்ப்பு

நாடகத் தணிக்கைச் சட்டம் ரத்து!

கருத்துரிமைப் போரின் மற்றொரு வெற்றி வாகை!

போக்குவரத்து நெரிசல் குறைந்து பத்திரமாகப் பயணம் செய்யலாம் வெளிநாடுகளில், வடமாநிலங்களிலும் இம்முறை பின்பற்றப்படுகிறதே!

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், திரு. சி. சுப்பிரமணியம் அவர்களால் கொண்டுவரப்பட்டு அமுலாகிய நாடகத் தடைச் சட்டம் - நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களால், (திருவாரூர் தங்கராசு வசனம்) தந்தை பெரியார் அவர்கள் கருத்தை அடிப்படையாக வைத்து, எழுதி நடிக்கப்பட்ட உண்மை - இராமாயணம் என்ற நாடகத்தினைத் தடை செய்யவேண்டும் என்பதற்காகவே கொண்டுவரப் பட்டது; திராவிடர் இயக்கம் கலைத் துறையில் நாடகங்கள்மூலம் எழுச்சி, இன உணர்வு, மறுமலர்ச் சியை ஏற்படுத்த முனைவதைத் தடுக்கவே அப்போது கொண்டுவரப்பட்ட கருத்துரிமை மறுப்புச் சட்டம் இது!

இது சட்ட விரோதம்; அரசியல் சட்டப் பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிரானது. எனவே, செல்லாது என்ற தீர்ப்பினை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. கே. சந்துரு அவர்கள் தந்துள்ளது என்பது மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்!இராமாயணமாகட்டும், வேறு கதையாகட்டும், எந்தக் கருத்தானாலும் அறிவு யுகத்தில் 21 ஆம் நூற்றாண்டில் அது ஆய்வுக்குரியதாக்கப்படல் வேண்டாமா? ஆளுங்கட்சியால், தங்களுக்குப் பிடிக்காதவர்கள் நாடகங்கள் என்றால் தொல்லை தர, தடுக்க இச்சட்டம் ஒரு ஏவுகணைபோல் பயன்படுத்தப்பட்டது.

இந்தத் தீர்ப்பு கருத்துச் சுதந்திர வரலாற்றில் ஒரு அருமையான மைல்கல்!

இந்த மாதிரித் தீர்ப்புகள் மனிதகுலத்தினை பகுத்தறிவு, அறிவியல் யுகத்திற்கு வேகமாக அழைத்துச் சென்று, அறிவை விரிவு செய்து, அகண்ட மாக்கி, அகிலத்தின் மாந்தர்களாகிய நம்மை சுதந்திர சிந்தனைக் களத்தில் பீடுநடை போட வைக்கும் பெரிய அறிவாயுதங்களின் திறவுகோல் என்றால் அது மிகையல்ல!

அத்தீர்ப்பு வழங்கிய நீதியரசரைப் பாராட்டுகிறோம்!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்24.1.2012
சென்னை

தமிழ் ஓவியா said...


பிப்ரவரி 4: டெசோ கூட்டம்


தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் 4.2.2013 திங்கள்கிழமை அன்று மாலை 5 மணியளவில் தமிழ்ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) கலந் துரையாடல் கூட்டம், சென்னை அண்ணா அறிவால யத்தில் நடைபெறும் என்றும், அக் கலந்துரையாடலில் டெசோ அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள் என்று டெசோ அமைப்பின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க.வின் கூடாரத்திற்குள்ளே குத்து-வெட்டு?


- ஊசி மிளகாய்

எங்கள் பாரதீய ஜனதா கட்சி முற்றிலும் வித்தியாசமானதொரு கட்சி; மிகவும் தனித்தன்மை வாய்ந்த ஒன்று என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்.

முன்பு வாஜ்பேயி அவர்கள் தலைமையில் 13 நாள்களே ஆட்சியிலிருந்து, தாமே, நம் பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு அஞ்சி கடைசி நேரத்தில் அவர் ராஜினாமா செய்து விட்டுச் சென்ற கட்சி இது!

அடுத்து மற்ற இந்திய மாநிலக் கட்சி களோடும் கூட்டுச் சேர்ந்து ஆட்சியைப் பிடித்து, ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்த கட்சி!

அதன் பிறகு முந்தைய படிப்பினையை யொட்டி, சுமார் 23 கட்சிகளை இணைத்து, தேசிய ஜனநாயக முன்னணி (National Democratic Alliance-NDA) என்ற பெயரில் ஆட்சி செய்து, இதற்கு முந்தைய இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ் தலைமையில் உள்ள அய்க்கிய முற்போக்கு முன்னணியிடம் தோற்று, எதிர்க்கட்சியாக இருந்துவரும் கட்சியாகும்.

முதுமை, உடல்நிலை காரணமாக திரு. அடல்பிகாரி வாஜ்பேயி (வாஜ்பேயம் என்ற யாகப் பிரிவைச் செய்யும் உரிமை படைத்த உயர் பார்ப்பன வகுப்பினர் என்பதன் அடையாளமே வாஜ்பேயி என்ற ஜாதிப்பட்டம்).

அத்வானி, எப்படியும் பிரதமராக வேண்டுமென்ற கனவு நிறைவேறவில்லை - இனியும் வாய்ப்பு கிட்டுமா என்பது சந்தேகம்தான்!

மோடி தன்னை பிரதமர் பதவி ஈர்க்கும் என்ற பேராசையுடன் முனைகிறார்; இதற்கு அவர்களுடைய கூட்டணியிலும் எதிர்ப்பு உண்டு. பா.ஜ.க.,விலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதரவு இல்லாத நிலை.

ஆர்.எஸ்.எஸ். தயவின்றி பா.ஜ.க. அரசியல் நடத்துவது இயலாத ஒன்றாகும்.

கட்கரியைக் கடைசி நேரத்தில் கவிழ்த்து விட்டது - பா.ஜ.க.வில் உள்ள அவரது ஆர்.எஸ்.எஸ். பிடியிலிருந்து தங்களை விடு வித்துக் கொள்ள முயன்ற அத்வானி அணி!

திடீரென்று உ.பி.யின் ராஜ்நாத் சிங்கிற்கே திடீர் யோகம் அடித்து, யானை கழுத்தில் போட்ட மாலை போல் அவருக்கு விழுந்தது!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு மகா எரிச்சல்! அதனை வைத்தியா என்ற மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் வெளியே கொட்டி யுள்ளார்!

குழப்பவாதிகள் கையில் பா.ஜ.க. சிக்கிவிட்டது என்று கூறியுள்ளார் அவர்!

அந்தக் குழப்பவாதிகள் பட்டியலில் யார் யாரோ? லால்கிஷன் அத்வானி, யஷ்வந்த் சின்கா, ராம்ஜெத்மலானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி இவர்களா? வைத்தியாக்களுக்கே வெளிச்சம்!

காவிகளுக்கே புரியாத கோஷ்டிப் பூசல் உச்சக்கட்டத்தில். இதில் மோடி எந்தப் பக்கமோ!
கையில் இருந்த பா.ஜ.க. மாநில அரசு களோ, வெடிக்கும் பலூன்கள் போல, திடீர் திடீரென காணாமற் போகின்றன!

ஜார்க்கண்ட் மாநில அரசு காணோம் - தேர்தல்மூலம் இமாச்சலப் பிரதேச பா.ஜ.க. ஆட்சி தோல்வி!

கருநாடக அரசு இப்போது வெண்டி லேட்டர்மூலம் செயற்கை சுவாசம் தரப்பட்டு இழுத்துக் கிடக்கிறது!

கருநாடகப் பேரவைத் தலைவர் காணா மற்போய் இரண்டொரு நாள் அதைக் காப்பாற்றுகிறார்!

ராஜஸ்தானிலும் சிந்தியா மகராணி முன்னாள் முதல்வர், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர் கோஷ்டிச் சண்டை உச்சத்தில், நிலைமை இன்னும் மோசமாகி விட்டது; 2014 இல் பா.ஜ.க.வின் நிலை நாடாளுமன்றத் தேர்தலில் மிகவும் பலவீனமாகிவிடக் கூடும் என்பதால்தான், எப்படியாவது நாடாளுமன் றத்திற்கு முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வர முடியாதா? என்று தவமாய் தவமிருக்கின்றனர் காவிக் கட்சியினர்!

காங்கிரஸ் கூர்ந்து கவனித்துக்கொண்டு, ராகுல்மூலம் முண்டாதட்டிப் பார்க்க களத்தில் இறங்கத் தயாராகிறது!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெறாத முக்கிய தலைவர்கள் எவருமே பா.ஜ.க.வில் இல்லை என்றாலும், ராஜ்நாத் சிங்கும் 13 வயதிலேயே அதில் சேர்ந்து ஷாகாவில் நின்றவர்தான் என்ற போதிலும்கூட, ஆர்.எஸ்.எஸ். திருப்தி அடையவில்லை போலும்; காரணம், அது யாரை நிறுத்தி, அல்ல கைகாட்டுகிறதோ அவர்தான் பா.ஜ.க. வின் தலைவராக, பிரதமராக, எந்த முக்கியப் பொறுப்பிற்கும் வர முடியும்.

முன்பு அமைந்த பா.ஜ.க. அமைச்சரவை களில்கூட, யாருக்கு எந்த இலாகா என்பதை ஆர்.எஸ்.எஸ். தான் தீர்மானிக்கும். ஆட்சி பா.ஜ.க.விடம் என்ற நிலையில்கூட, மூக் கணாங்கயிறு ஆர்.எஸ்.எஸ். கையில்தான் இருக்கும்! வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் குழுவில் ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவர் கண்டிப் பாக இருந்தே தீரவேண்டும். ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பெற்ற ஒருவர்தான் பி.ஜே.பி.யின் அகில இந்தியப் பொதுச்செயலாளராக வர முடியும் என்ற நிலை உண்டு.

அந்த நிலை மாறிவிடுமோ என்பதால், கூடாரம் - முன்பு கோட்டை இப்போது ஓட்டை - என்பதாக ஆகி நிற்கும் நிலை!

இதனால்தானே பிரதமர் யார் என்பதற்கு முன்னாலேயே, கட்சியின் தலைவர் தேர்வே குழப்பவாதிகளால் நடத்தப்பட்டது என்று அதன் தாய் மூல அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைவர்களே, மனம் நொந்து கூறும் அளவுக்கு வந்தனர்!

மற்றவர்களை - மற்ற கட்சிகளைக் குறை கூறுவதற்குமுன், உங்கள் கூடாரத்தினை நீங்கள் சரியாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பரிவாரங்களுக்குப் பலர் கூறும் நிலையே இன்று! வேடிக்கை விசித்திரம்! 24-1-2013

தமிழ் ஓவியா said...


நாடகத்துக்கு முன் அனுமதி சட்டப்பிரிவு செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு


சென்னை, ஜன.24 - நாடக நிகழ்ச்சிகளை நடத்தும் முன் நாடகத்தின் கதைக்கு மாநகர காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டும் என்ற சட்ட பிரிவுகள், அரசியல் சாசனத்துக்கு எதிரானவை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் மற்றும் பரிக்ஷா நாடக குழு நிறுவனர் ஞானி தாக்கல் செய்தன் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:சென்னையில் நாடக நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன்பு, தமிழ்நாடு நாடக அரங்கேற்ற சட்டத்தின் சில பிரிவுகளின்படி, காவல்துறை ஆணையரிடம் நாடகத்தின் கதைக்கு அனுமதி பெற வேண்டும். நாடகத்தை போடுவதற்கு 3 வாரங்களுக்கு முன்பு நாடக கதையின் பிரதியை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.நாடகத்தின் கதையை ஆய்வு செய்வதற்கு கலை சார்ந்த தொழில்முறையும், நிபுணத்துவமும் இருப்பது அவசியம். அப்படிப் பட்டவரால்தான் ஆட்சேபனை பகுதி பற்றி முடிவு செய்ய முடியும்.

ஆனால் அவற்றை ஆய்வு செய்து தணிக்கை செய்யும் காவல் துறையி னருக்கு இந்த தகுதிகள் இருப்ப தில்லை. நிபுணத்துவம் இல்லாத காவல் துறை அதிகாரியின் அனுமதிக்கு பிறகுதான் சென்னையில் நாடகங் களை நடத்த முடியும் என்பது கடினமானதாக உள்ளது. நாடக கலைஞர்களின் சுதந்திரத்தை பறிப்பதாக அந்த சட்டத்தின் சில பிரிவுகள் உள்ளன.எனவே நாடகத் துக்கு காவல்துறை அனுமதி பெறு வதை வலியுறுத்தும் தமிழ்நாடு நாடக அரங்கேற்ற சட்டத்தின் அந்த பிரிவுகள், அரசியல் சாசனத்துக்கு எதிரானவை என்று அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதி கே.சந்துரு விசாரித்தார். அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் வாதாடுகையில், சட்டம் ஒழுங்கு, பொதுஅமைதி ஆகியவற்றை பராமரிப்பதற்காக, நாடக கதைகளை ஆய்வுசெய்து, ஆட்சேபனைக்கு உரிய பகுதிகளை இனம் காண்பதற்கு காவல்துறைக்கு அதிகாரம் அவசியம் தேவை என்று குறிப்பிட்டார்.மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் ஆர்.யசோத் வரதன், சுந்தர் நாராயணன் ஆகி யோர் வாதிட்டனர். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி கே.சந்துரு பிறப்பித்த உத்தரவு வருமாறு:

நெறிமுறைகள் இல்லை

சினிமாக்களை திரையிடும் முன்பு அவற்றுக்கு ஒருமுறை தணிக் கை சான்று வழங்கப்படுகிறது. ஆனால் நாடகங்களின் நிலை அப்படி இருக்கவில்லை. நாடகங் களை நடத்தும் ஒவ்வொரு முறையும் காவல்துறையின் அனு மதியை பெற வேண்டியது கட் டாயமாக உள்ளது.ஒரு நாடகத் துக்கு ஒரு மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தார் என்றால், அதே நாடகத்துக்கு மற்றொரு மாவட்டத்தில் ஆட்சியர் அனுமதி மறுக்கும் நிலையும் எழுந்துள்ளது. அதன்படி பார்க்கும்போது, நாடக கதைகளை தணிக்கை செய்வதற் கான வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் தமிழ்நாடு நாடக அரங் கேற்ற சட்டத்தில் வகுக்கப்பட வில்லை என்பது தெரிகிறது.

கருத்து சுதந்திரம்

சென்னையில் நடந்த இசை விழா தொடக்க நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் பேசியபோது, சென் னையை, உலகக்கலை நிகழ்ச்சிகள் நடக்கும் மய்யமாக உருவாக்க வேண்டும் என்று கூறினார். அவர் குறிப்பிடும் சூழ்நிலை அமைவதற்கு, கருத்து சுதந்திரம் அவசியம் தேவை. நாடக கலைஞர்களுக்கு கருத்து சுதந்திரம் இருப்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டில் நாடக கலை வளர்ச்சி பெற முடியும். அதற்கு இதுபோன்ற சட்டங்கள் தடையாக இருந்துவிட கூடாது. இதன்படி பார்க்கும்போது, நடத்தப்பட உள்ள நாடகத்துக்கான கதையை ஆட்சியர்கள், மாநகர காவல்துறையிடம் காட்டி அவர் களின் முன்அனுமதி பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் தமிழ்நாடு நாடக அரங்கேற்றச் சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவுகள், அரசியல் சாசனங்களுக்கு முரணாகவே உள்ளன என்று அறிவிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


தி.மு.க. ஆட்சியில் தமிழ் வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட அருஞ்செயல்கள்


தி.மு.க. தலைவர் கலைஞர் பட்டியல்

சென்னை, ஜன.24- தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழ் வளர்ச்சிக்காக - மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப் பட்டவற்றை பட்டியலிட்டு கலைஞர் முரசொலியில் இன்று அவர் எழுதியுள்ளார்.

கேள்வி: செம்மொழியாம் தமிழுக்கு விரோதமாக ஜெயலலிதா செயல்படுவதைத் தாங்கள் ஆதாரப் பூர்வமாக விளக்கியதும், தமிழின்பால் தனக்கும் அக்கறை இருக்கிறது என்பதைக் காட்டிக் கொள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் சிலையை கன்னியாகுமரியில் நிறுவ 10.80 லட்சம் ரூபாய் நிதியை முதல் அமைச்சர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய் துள்ளாரே; கழக ஆட்சியில் தமிழ்ச் சான்றோர்களுக்கு செய்யப்பட்ட சிறப்பினை விளக்குவீர்களா?

கலைஞர்: இருந்தாலும் உடனடியாக நினைவில் உள்ளதைச் சொல்ல முயற்சி செய்கிறேன். தி.மு.கழக ஆட்சியில், தமிழுக்காக செய்யப்பட்ட சாதனைகள்:-

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்களின் நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் பாடலை 1970இல் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலாக ஆக்கியது.

தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறைக்காக தனி அமைச்சகம்.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம் நியமித்தல்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைத்தது.

தமிழக வரலாறு எழுத தமிழறிஞர்கள் குழு நிய மனம்.

திராவிடப் பல்கலைக் கழகத்திற்கு 75 லட்ச ரூபாய் நன்கொடை

தமிழக வரலாறுகள் நூல்களாக வெளியிடப் பட்டன.

மலேயா பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 50 லட்சம் ரூபாய்.

தமிழறிஞர்களான இ.ம.சுப்பிரமணியன் பிள்ளை, மே.வி.வேணுகோபால்பிள்ளை, மங்கலங்கிழார், மனோன்மணியம் சுந்தரனார், ராய சொக்கலிங்கம், கி.ஆ.பெ. விசுவநாதன் ஆகியோரின் நூற்றாண்டு விழாக்கள்.

தமிழறிஞர்கள் தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகளார், திரு.வி.க., பேராசிரியர் கல்கி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, பா.ஜீவானந்தம், நாமக்கல் கவிஞர், வ.உ.சி., சுத்தானந்த பாரதியார், ஏ.எஸ்.கே. அய்யங்கார், வ.ரா., கவி கா.மு. ஷெரீப், நாவலர் சோமசுந்தர பாரதியார், பரலி நெல்லையப்பர், வ.வே.சு. அய்யர், காரைக்குடி சா.கணேசன், எஸ்.டி.எஸ். யோகி மற்றும் ஏராளமானவர்களின் நூல்கள் அரசுடைமை யாக்கப்பட்டு, அவர்களின் மரபுரிமையினருக்கு அரசின் சார்பில் நிதி வழங்கப்பட்டது. அந்த வரிசையில் தற்போது அம்மையார் சிலை எழுப்புவதாக அறிவித்துள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் நூல்களை 1998ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சியிலேயே நாட்டுடைமையாக்கி, அவருடைய குடும்பத்தினருக்கு நிதி உதவி செய்யப்பட்டது.

நூற்றாண்டுக் கனவான தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.

செம்மொழிப் பூங்கா.

பரிதிமாற் கலைஞர் அவர்கள் பிறந்த வீடு நினைவில்லமாக ஆக்கப்பட்டது.

சிறந்த மென்பொருள் உருவாக்கு பவருக்கு கணியன் பூங்குன்றனார் விருது.

கணினியில் தமிழ் முதன்மை இடத்தைப் பெறுவதற்குத் தேவையான பல முயற்சிகள்.

திருவள்ளுவருக்கு குமரியில் 133 அடி உயரத்தில் சிலை - சென்னையில் வள்ளுவர் கோட்டம்.

தமிழில் பெயரிடப்படும் திரைப்படங்களுக்கு வரி விலக்கு.

கேள்வி: வனச் சரகர் பதவிக்கான நேர்முக தேர்வு பட்டியலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை அ.தி.மு.க. அரசுக்கு குட்டு வைத்துள்ளதே?

கலைஞர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 80 வனச்சரகர் பதவிக்கு எழுத்து தேர்வு நடத்தியது. இதில் மகளிருக்கும், தமிழ் வழி படித்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில்,
உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு எஸ். நாகமுத்து அவர்கள், சிறப்பு இட ஒதுக்கீட்டு முறையை தேர்வாணையம் முறையாகப் பின்பற்றவில்லை. எனவே தேர்வாணையம் அறிவித்துள்ள நேர்முகத் தேர்வு பட்டியலை ரத்து செய்கிறேன் என்று தீர்ப்பு கூறியிருக்கிறார். இந்த லட்சணத்தில் தான் தேர் வாணையக் கழகம் தற்போது சிறப்பாக நடை பெறுகிறது என்று தினமணி பாராட்டியுள்ளது!

தமிழ் ஓவியா said...


சூரிய கிரகணம்

பூரண சூரிய கிரகணம் நம்மை பிரமிக்க வைக்கிற இயற்கை அதிசயம். சில நிமிடங்கள் சூரியன் முற்றிலுமாக மறைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை எவ்வளவு தடவை பார்த்தாலும் சலிப்புத் தட்டாது.

சர்வதேச வானவியல் சங்கத்தில் சூரிய கிரகண ஆராய்ச்சிக் கென தனி பிரிவு உள்ளது. சூரியனின் உட்புறத்தில் வெப்பம் 15 மிலியன் டிகிரி செண்டிகிரேட். ஆனால் அதன் வெளிப்புற வெப்பம் 6000 டிகிரி (செண்டிகிரேட்) தான். எனினும் சூரியனைச் சுற்றி அமைந்த சூரிய ஜோதி ஒரு மிலியன் டிகிரி வெப்பம் கொண்டதாக உள்ளது.

இது ஏன் என்பதை அறிவதற்காகத் தான் சூரிய கிரகணத்தின் போது ஆராய்ச்சி நடத்துகின்றனர். சூரிய ஜோதி இவ்வளவு வெப்பம் கொண்டதாக இருப்பதற்கான காரணம் இன்னும் முற்றிலுமாகக் கண்டறியப்படவில்லை. சூரிய ஜோதி எல்லா சமயத்திலும் ஒரே மாதிரி இருப்பது இல்லை.

இந்த சூரிய ஜோதி பிரம்மாண் டமானது. சூரியனின் மேற்பரப்பிலிருந்து இது பல லட்சம் கிலோ மீட்டர் தூரம் வியாபித்து நிற்கிறது. இது சூரியனின் வளி மண்டலம் போன்றது. சூரியனின் பிரகாசம் காரணமாக சூரிய ஜோதியை மற்ற நாட்களில் காண முடியாது.

சூரியனின் ஒளித் தட்டை முற்றிலுமாக மறைத்தால் தான் சூரியனைச் சுற்றியுள்ள சூரிய ஜோதி தென்படும். சூரியனை சந்திரன் முற்றிலுமாக மறைக்கின்ற நேரம் இயற்கையின் விதிகளின்படி ஒரு போதும் ஏழு நிமிடம் 31 நொடிக்கு மேல் நீடிக்க முடியாது. அந்த இரண்டு நிமிட நேரத்தில் சூரிய ஜோதியை பல்வேறு கருவிகளைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் ஆராய்வர்.

தமிழ் ஓவியா said...


கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் என்பது என்ன?

ராக்கெட்டும் ஒரு வாகனமே. அது செயற்கைக் கோளை சுமந்து உயரே கொண்டு சேர்க்கிறது. ஆகவே செயறகைக் கோளைச் செலுத்தும் ராக்கெட்டுகளுக்கு செயற்கைக்கோள் செலுத்து வாகனம் என்ற பொதுப் பெயர் உண்டு.

ராக்கெட்டுக்குள் வைக்கப்படுகின்ற எரிபொருள் பயங்கர வேகத்தில் பின்புறம் வழியே தீப்பிழமபை பீச்சிடுவதால் முன் நோக்கி அதாவது உயரே பாய்கிறது. எந்த எரிபொருளானாலும் அது எரிவதற்கு ஆக்சிஜன் தேவை. கார், லாரி போன்று தரையில் செல்கின்ற வாகனங்களுக்கும் சரி, வானில் செல்லும் விமானங்களுக்கும் சரி, காற்று மண்டலத்திலிருந்து ஆக்சிஜன் இயற்கையாகக் கிடைக்கிறது.

ஆனால் ராக்கெட்டானது மிக உயரே செல்வதாகும். அந்த உயரத்தில் காற்று (ஆக்சிஜன்) அனேகமாக இராது. ஆகவே ராக்கெட்டில் உள்ள எரிபொருள் எரிவதற்கு உதவக்கூடிய ஆக்சிஜன் அடங்கிய பொருளையும் சேர்த்து ராக்கெட்டில் வைக்க வேண்டியுள்ளது. பல வேதியல் பொருட்கள் இவ்விதம் ஆக்சிஜனை அளிக்கக்கூடியவை.

செயற்கைக்கோளைச் செலுத்துகின்ற ராக்கெட்டில் ஆக்சிஜனும் அடங்கிய திட எரிபொருளை மட்டும் வைக்கலாம். அல்லது திரவ எரிபொருளையும் அது எரிவதற்கு உதவும் ஆக்சிஜன் அடங்கிய பொருளையும் வைக்கலாம். ஹைட்ரஜன் வாயுவையும், ஆக்சிஜன் வாயுவையும் பயன்படுத்துகின்ற ராக்கெட்டாக இருந்தால் அது அதிக உந்து விசையை அளிக்கும்.

ஆகவே அதிக எடை கொண்ட செயறகைக்கோளை சுமந்து செல்ல முடியும். ஆனால் ராக்கெட்டில் தனித்தனி டாங்கிகளில் ஹைடரஜன் வாயுவையும் ஆக்சிஜன் வாயுவையும் எடுத்துச் செல்வதானால் பெரிய பெரிய டாங்கிகள் தேவைப்படும். அப்படியான டாங்கிகளைக் கொண்ட ராக்கெட்டை உயரே கிளம்பச் செய்வதே கடினம்.

எனினும் ஹைடரஜன் வாயுவை மைனஸ் 253 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குளிர்வித்தால் அது திரவமாகி விடும். அதே போல ஆக்சிஜன் வாயுவை மைனஸ் 184 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குளிர்வித்தால் அதுவும் திரவமாகி விடும். ராக்கெட்டின் முன்புறத்தில் தனித்தனி டாங்கிகளில் இந்த திரவங்களை சேமித்து வைக்க முடியும்.

ராக்கெட் உயரே செல்கையில் இந்த இரண்டும் ராக்கெட்டின் கீழ்ப்புறமுள்ள எஞ்சின் அறையில் வாயுவாக மாறி ஒன்று சேர்ந்து எரிந்து நல்ல உந்து விசையை அளிக்கும்.

கடும் குளிர் நிலையில் உள்ள திரவங்களைப் பயன்படுத்தும் துறைக்கு கிரையோஜெனிக்ஸ் என்று பெயர். இது கிரேக்க மொழிச் சொல். எனவே இவ்விதமான குளிர் நிலை திரவங்களைப் பயன்படுத்தும் ராக்கெட் எஞ்சினுக்கு கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் என்று பெயர்.

தமிழ் ஓவியா said...


சந்திரன் தோன்றியது எப்படி?

சந்திரன் தோன்றியது எப்படி? விஞ்ஞானிகள் இக்கேள்விக்கு விடை காண இன்னமும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். செவ்வாய் கிரகம் சைஸில் ஒரு கிரகம் பூமியின் மீது மோதியிருக்க வேண்டும். அந்த மோதலின் விளைவாக ஏற்பட்ட சிதறல்களே ஒன்று திரண்டு சந்திரனாக உருவெடுத்திருக்க வேண்டும்.

பூமியின் மீது மெதுவாக வந்து மோதியதாகக் கருதப்படும் கிரகத்துக்கு விஞ்ஞானிகள் தைய்யா என்று பெயர் வைத்தனர். இந்த கொள்கைக்குத் தான் இப்போது ஓரளவுக்கு ஆதரவு உள்ளது.

ஆனாலும் பூமியின் மீது வந்து மோதிய அக்கிரகம் எவ்வளவு பெரியதாக இருந்திருக்கும் என்பது குறித்தும் அது எந்த வேகத்தில் மோதியிருக்கும் என்பது பற்றியும் விஞ்ஞானிகளிடையே கருத்து வேற்றுமை இருந்து வருகிறது.

இப்போது சுவிட்சர்லாந்தில் பெர்ன் நகரில் உள்ள ஒரு அமைப்பைச் சேர்ந்த ஆண்டிரியாஸ் ரைபர் என்ற விஞ்ஞானியும் அவரது சகாக்களும் சந்திரன் எப்படி உருவாகியிருக்கலாம் என்பது பற்றி கம்ப்யூட்டரில் பாவனையாக வெவ்வேறு நிலைமைகளை தோற்றுவித்து ஆராய்ந்தனர்.

இவற்றை வைத்து அவர்கள் பூமியின் மோதிய கிரகம் தைய்யாவை விடப் பெரிதாக இருந்திருக்க வேண்டும் என்றும் தவிர, அது மிக வேகத்தில் வந்து மோதியிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். இவ்விதம் மோதிய கிரகம் குறைவான பொருளை மட்டும் இழந்து தன் வழியே சென்றிருக்க வேண்டும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

இந்த மோதலின் விளைவாக மிகுந்த வெப்பம் கொண்ட ஒரு வட்டு தோன்றி அதுவே பின்னர் உருண்டு திரண்டு சந்திரனாக உருவெடுத்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். மோதலின் போது தூக்கியெறியப்பட்ட பொருளில் பெரும் பகுதி பூமியிலிருந்து பிய்த்துக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இப்படியான கொள்கைக்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் தேவை. அதாவது பூமியின் மேற்புறம் பற்றியும் பூமியில் உள்ள தனிமங்கள் அவற்றின் அய்சடோப்புகள் பற்றியும் நமக்கு நன்கு தெரியும். இந்த விஷயங்களில் பூமிக்கும் சந்திரனுக்கும் சில ஒற்றுமைகளும் சில வேற்றுமைகளும் உள்ளன.சந்திரனிலிருந்து 1969 முதல் 1972 வரை ஆறு தடவைகளில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் கொண்டுவந்த கற்கள், மண் ஆகியவை விரிவாக ஆராயப்பட்டு சந்திரன் பற்றி மேலும் தகவல்கள் அறியப்பட்டு வருகின்றன்.

எந்த விதமான முறையில் மோதல் ஏற்பட்டிருந்தால் பூமி, சந்திரன் இடையே இப்படி ஒற்றுமைகளும் அத்துடன் வேற்றுமைகளும் இருக்கும் என்று கண்டறிவதில் தான் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.இறுதியில் ஏற்கத்தக்க விடை கிடைக்க சந்திரனின் கற்கள் மேலும் விரிவாக ஆராயப்பட்டு அதே நேரத்தில் கம்ப்யூட்டரில் பாவனையாக மேலும் பல .மோதல்களை நடத்த வேண்டியிருக்கும் என்று கருதப்படுகிறது.இதன் மூலம் சந்திரன் எப்படித் தோன்றியது என்பதற்கு விடை காணலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

தமிழ் ஓவியா said...

பக்தி - மூட நம்பிக்கைகளின் முகவரிகள் இதோ!


கலசங்களில் இருப்பது இரிடியம் அல்ல: இந்து சமய அறநிலைய துறை விளக்கம்

"பெரும்பாலான கோவில் கலசங்களில் உள்ளது, இரிடியம்' அல்ல; செம்பு' என, இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. விருத்தாசலத் தை அடுத்த மங்கலம்பேட்டை, எடைச்சித்தூரில், நூற்றாண்டு பழைமை வாய்ந்த கேசவ பெருமாள் கோவிலில், கோபுர கலசத்தை திருடுவதற்காகச் சென்ற, சென்னை இணையர் கைது செய்யப் பட்டனர்.விசாரணையில், கலசத்தில் இரிடியம் இருக்கும் என நம்பி, திருட வந்ததாகக் கூறினர். இந்நிலையில், "பெரும்பாலான கோவில் கலசங் களில் இருப்பது இரிடியம் அல்ல; செம்பு' என, இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

மேலும், இரிடியம் இருப்பதாகக் கூறி, கோவில் கலசங்களை திருட முயற்சிப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் எனவும் எச்சரித்துள்ளது.இது குறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதி காரிகள் கூறியதாவது:பல இடங்களில் கோவில் களில் உள்ள கலசங்களில், இரிடியம் இருப்பதாக நினைத்து திருடும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

கலசங்கள் செம்பால் செய்யப்பட்டவை; அதில், கம்பு, கேழ்வரகு, அரிசி, எள், கொள் போன்ற தானியங்கள் வைக்கப்படுகின்றன.

இதில், வரகு மின் கடத்தியாகச் செயல்படும். கோவிலுக்கு அருகில் இடி விழுந்தால், இடியை உள்வாங்கிக் கொண்டு, மண்ணுக்கு அனுப்பி விடும். இது அனைத்து செம்புக்கும் உரிய பண்பு.இந்த உண்மை அறியாமல், சில சோதிடர்கள் கூறியதை கேட்டு, கலசங்களை திருட முயற்சி செய்கின்றனர். கோவில் சொத்தை அபகரிக்க முயற்சி செய்கிற வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். - இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுற்றுலா பயணியிடம் தாலி பறிப்பு

சிதம்பரம் சிறீநடராஜர் கோயில் திருவண்ணா மலை மாவட்டத்திலிருந்து வந்த பெண்ணிடம் 11 பவுன் தாலிச் சங்கிலி சில ஆசாமிகளால் பறிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் , போளூர் வட்டம், காந்தப்பாளையத்தைச் சேர்ந்த சுப்பராயன். இவர் தனது தம்பி மூர்த்தியின் 60ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குடும்பத்துடன் திருக்கடையூர் கோயிலுக்கு சென்று சிதம்பரம் வழியாக திரும்பினர்.

தமிழ் ஓவியா said...

அப்போது சிதம்பரம் சிறீநடராஜர் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர். தில்லைக்கோவிந் தராஜப் பெருமாள் சந்நிதி அருகே சுப்பராயன் மனைவி சுந்தரியின் (65) 11 பவுன் தாலிச் சங்கிலியை சில ஆசாமிகள் பறித்துச் சென்றனர். இதுகுறித்து சுப்பராயன் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் மூழ்கி மாணவன் சாவு

மதுரை, திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை குளத்தில் மூழ்கி, ப்ளஸ் டூ மாணவர் இறந்தார்.

மதுரை பழங்கானத்தம் பகுதியைச் சேர்ந்தவர் போஸ் எனபவரின் மகன் வெங்கடேஷ் (17). ப்ளஸ் டூ மாணவரான இவர், தன் நண்பரான வசந்த் நகர் பகுதியைச் சேர்ந்த கணேஷுடன் சரவணப் பொய்கையில் குளிப்பதற்காக வந்தவர்கள் குளத்தின் ஆழப் பகுதிக்குச் சென்றுவிட்டனர்.

அப்போது இருவரும் உயிருக்குப் போராடிய நிலையில், அருகில் இருந்தவர்கள் உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து, கணேஷை மட்டும் காப்பாற்றினர். வெங்கடேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது இந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கால்நடைகளுக்கு நோய் வராமலிருக்க கால்நடைகளை சாகடித்த கொடுமை!

கால்நடைகளுக்கு நோய் வராமலிருக்க, தேனம்பாக்கம் கிராம மக்கள், கால்நடைகளை கொன்றனர். காஞ்சிபுரம் அடுத்துள்ளது தேனம்பாக்கம். இங்கு, 3,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியுள்ளனர். சிலர் மாட்டு வண்டி வைத்துள்ளனர்.

வீடுகளில், ஆடு, மாடு, கோழி போன் றவற்றை வளர்த்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக, கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவி வருகிறது. நோய் காரணமாக, கால்நடைகள் உணவு சாப்பிட முடியாமல் தவித்து வந்தன.தகவல் அறிந்து, காஞ்சிபுரம் கால்நடை மருத்துவர்கள், தேனம்பாக்கத்தில் முகாமிட்டு, நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

அதன்பிறகும் நிறைவு பெறாத கிராம மக்கள், பழைய முறைப்படி"கழிப்பு' எடுக்க முடிவு செய் தனர். இதற்காக கால்நடைகளை வைத்திருப் போரிடமிருந்து, நன்கொடையாக, 7,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

கழுத்தை அறுத்து சாகடிப்பு

ஞாயிற்றுக்கிழமையன்று, பன்றி, ஆடு, சேவல் ஆகியவற்றை வாங்கி வந்து, அவற்றின் மீது மஞ்சள் நீர் தெளித்து, நெற்றியில் திலகமிட்டு, கழுத்தில் மாலை அணிவித்து, கிராமத்தின் நுழைவு வாயிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு, பொரிகடலை, அய்ந்து வண்ணத்தில் சோறு, கருப்பு, சிவப்பு நிற கயிறுகள், ஆகியவற்றை வைத்து படையலிட்டனர்.

நண்பகல், 12 மணிக்கு, பன்றி, ஆடு, கோழி ஆகிவற்றை கொன்றனர். அதன்பின் சாகடிக்கப் பட்ட பன்றி, ஆடு, கோழி, ஆகியவற்றின் தலைகளை கூடைகளில் வைத்து, கிராமத்தின் மூன்று திசைகளுக்கும் கொண்டு சென்று, எல்லையில் கற்பூரம் ஏற்றினராம்.

இறுதியாக கிராமத்தின் கிழக்குப் பகுதி எல் லைக்கு சென்று, தலைகளை வைத்துவிட்டு திரும்பி னராம். இவ்வாறு செய்தால் கால்நடைகளுக்கு நோய் வராது என்பது, அப்பகுதி மக்களின் நம்பிக்கையாம்.

தமிழ் ஓவியா said...


நாத்திகனாக இருப்பதால் சாரணர் இயக்கத்தில் இடமில்லையா?


ஒரு 11 வயது சிறுவன் சாரணர் இயக்கத்தில் சேருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளான். காரணம், அவன் கடவுள் நம்பிக்கை இல் லாதவன்!

இங்கிலாந்து நாட்டில் உள்ள சாமர்செட் என்ற ஊரில் உள்ள ஜார்ஜ் பிராட் உள்ளூர் சாரண இயக்கத்தில் கடந்த 10 மாதங்களாக பங்கு கொண்டிருந்தான்.

சாரண இயக்கத்தின் முழுமையான உறுப்பினராவதற்கு, சாரணர்களுக்கான உறுதிமொழி ஏற்க வேண்டும்.

என்னுடைய கவுரவத்தின் பேரில், நான், என்னால் முடிந்தவற்றைச் செய்வேன் சென்று உறுதியளிக்கிறேன். அதன்படி, கடவுளுக்கும் ராணிக்கும் உண்டான என் கடமையையும், மற்ற மனிதர்களுக்கு உதவி செய்வதையும், சாரணர் சட்டத்தின்படி நிறை வேற்றுவேன் என்பதுதான் அந்த உறுதிமொழி.

ஒவ்வொரு மதத்துக்கும் தக்கவாறு, உறுதிமொழியில் சிறுமாற்றங்கள் செய் யப்பட்டுள்ளன இஸ்லாமியர்களுக்கு கடவுள் என்ற சொல்லுக்குப் பதிலாக அல்லா என்று குறிப்பிடலாம்.

ஜார்ஜ் பிராட்டின் தந்தையான நிக் (45 வயது) மிகவும் கோபப்பட்டு உள்ளார். கிறித்துவ இயக்கம் மிகவும் பொதுமை யற்றதாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். கிருத்துவம், பொறுமை, மன்னிப்பு, புரிந்து கொள்ளுதல் ஆகிய பண்புகளுக்காக உள்ளது. நீங்கள் கிறிஸ்துவராகவோ, இஸ்லாமியராகவோ இருந்தால், சாரண இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப் படுகிறீர்கள்.

ஆனால் கடவுளை நம்பாமல் இருக்கக் கூடாது. இது, உணர்ச்சியுள்ளவராக, பெருந்தன்மை யுள்ளவராக, அன்புள்ளவராக, உண்மையிலேயே நல்ல மனிதராக இருப்பதைப் புறந்தள்ளி விடுகிறது. பல கிறித்துவ அமைப்புகள் யாரையும் வெளியேற்றுவது இல்லை. ஆனால், இந்தப் பகுதி சாரணர் இயக்கம் மட்டும் அவ்வாறு இல்லை என்று தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட ஜார்ஜ், நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன். தொடர்ந்து நான் அங்கு செல்ல முடியாததற்கு நான் கடவுளை நம்பாததைக் காரணம் காட்டுகிறார்கள். சாரண இயக்கத் தலைவருடன் நாங்கள் பேசிப் பார்த்து விட்டோம். அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. இது நியாயமானது அல்ல.

மற்ற எல்லோரும், நான் பார்த்து இராத ஓரிடத்துக்குப் போக இருக் கிறார்கள். நானும் ஆசைப்படுகிறேன். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறேன். அதற்காக, நான் என் முடிவை மாற்றிக் கொள்வதாக இல்லை என்று சொல்கிறான்.

சாரண இயக்கம் 1907ஆம் ஆண்டில் ராபர்ட் பேடன், பவ்வல் என்பவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. பியர் கிரிலிஸ் என்ற சாகச வீரர்தான் பிரிட்டனின் இன்றைய சாரண இயக்கத் தலைவர் அவர், தனது கிருத்துவ உணர்வுகளைப் பற்றி முன்பு நிறைய பேசி இருக்கிறார்.

சாரண இயக்கத்தைச் சார்ந்த சைமன் கார்ட்டர் என்பவர் சிறு வர்கள் அனைவரும் சாரணராக வேண்டுமென்றால் அதற்கான உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்.

அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பிறகு சில இளைஞர்கள் சிந்தனை வளர்ந்த பிறகு கடவுள் இருப்பதை கேள்வி கேட்கவோ சந்தேகப்படவோ செய்யலாம். இதை சாரணர் இயக்கம் ஒப்புக் கொள்ளுகிறது என்று சொன்னார். இந்த முறைப்படி சாரண இயக்கத்தில் இணைந்தவர்கள், எப்பொழுதும் சாரணராகவே இருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

தமிழ் ஓவியா said...


கடவுள் பக்திக்காரனே! மானம் வேண்டாமா!


நான் ஒருவன்தான் மனிதத் தொண்டு என்றால், மனித சமுதாயத் திலுள்ள இழிவைப் போக்குவதும் மக்களுக்கு அறிவை ஏற்படுத்துவ துமே உண்மை யான தொண்டாகும் என்று கருதி அதில் ஈடுபட்டேன். அதற்காகவே சுய மரியாதை இயக்கத்தை ஆரம்பித்தேன்.

அந்த இயக்கத்தின் கொள்கை மனித சமுதாய இழிவிற்கும் அறிவற்ற தன்மைக்கும் அடிப்படைக் காரண மான கடவுள், -- மதம் - சாஸ்திரம் ஆகியவை ஒழிக்கப்பட வேண்டும்.

இவற்றைப் பரப்பி மக்களை மடையர்களாக்கி வரும் காங்கிரஸ், - காந்தி,- பார்ப்பான் ஆகியவைகளை ஒழிக்க வேண்டுமென்பதுமாகும்.

இக்கொள்கையோடு தொண் டாற்ற ஆரம்பித்த நான் பலமுறை செருப்படி பட்டிருக்கிறேன்.

மிக இழிவாக எல்லாம் என்னைப் பேசினார்கள். அதைப்பற்றி எல்லாம் இலட்சியம் செய்யாமல் தொண் டாற்றிக் கொண்டு வருகின்றேன்.

இப்போதுகூட என்னை நேரில் அடிக்கவில்லையென்றாலும் எனது சிலையை, படத்தை செருப்பாலடித் தார்கள்; இழிவுபடுத்தினார்கள்.

நான் அவற்றையெல்லாம் இலட் சியம் செய்யாமல்தான் இப்பணி யினை ஆற்றிக் கொண்டு வரு கின்றேன்.

நமது இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட போது என்ன நிலை இருந்த தென்றால் பறையன் சக்கிலியன் ரோடுகளில் நடக்க முடியாது. பொதுக் கிணற்றில், குளத்தில் தண்ணீர் எடுக்க முடியாது.

பள்ளிக்கூடத்தில் அவர்கள் வெளியில்தான் உட்கார வேண்டும்.

பஞ்சாயத்து, முனிசிபாலிட்டி மெம்பர்களாக இருப்பவர்கள் மீட்டிங் ஹாலுக்கு வெளியேதான் இருக்க வேண்டும். பியூன் போய் அவர்களிடம் கையெழுத்து வாங்கி வருவான்.

பெரும் பதவி உத்தியோகங்கள் எல்லாம் பார்ப்பானுக்கே ஏகபோக உரிமையாக இருந்தது.

அய்ந்து வயது பார்ப்பனச் சிறுவன் முதற்கொண்டு, நம்மில் எவ் வளவு பெரியவர்களாக இருந்தாலும் அவர்களை டேய் என்றுதான் கூப்பிடுவான்; நம்மவன் அவனைச் சாமி என்றுதான் அழைப்பான்.

நம் இயக்கத் தொண்டின் காரண மாக இன்றைக்கு இந்த நிலை அடியோடு மாறிவிட்டதே!

நாங்கள் ஆட்சிக்குப் போய் இதனை மாற்றவில்லை; வெளியி லிருந்து கொண்டு போராடித்தானே மாற்றி னோம். இன்றைக்கு பொது வாழ்க் கையில் பெயர் சொல்லக் கூட ஒரு பார்ப்பான் இல்லையே!

இராஜாஜி இருக்கிறாரென்றால், பத்திரிகைகள் விளம்பரத்தால் பெரிய மனிதராக இருக்கிறாரே ஒழிய வேறு எதனாலும் இல்லையே!

இப்போது பார்ப்பனர்கள் எப்படி யாவது நம்மை நசுக்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டு இருக்கின் றார்கள்.

இனி நாம் சிக்க மாட்டோம்.

நாம் அடைய வேண்டிய அளவு வெற்றி பெறவில்லை என்றாலும் நல்ல அளவிற்கு வளர்ச்சி பெற்றிருக் கின்றோம். கடவுள் நம்பிக்கைக் காரனுக்கு மானமிருக்காது. தன்னை சூத்திரன் என்பதை ஒப்புக் கொண் டவனே ஆவான்.

நம்மோடு சேர்ந்தவன்தான் சூத்திரன் என்றால் ஆத்திரப்படு வானே தவிர, பக்தன். கடவுள் நம்பிக்கைகாரன் தன்னை சூத்திரன் என்பதை ஒப்புக் கொண்டுதான் அதற்கு அடையாளமாக மதக்குறி களை (நாமம் - விபூதி) அணிந்து கொள்கின்றான்.

- தந்தை பெரியார்
அய்யாவின் அடிச்சுவட்டில்.. பாகம் 2 145 ஆம் பக்கத்தில் இருப்பது...

க. பழநிசாமி, தெ.புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...

பெரியார் பெருந்தொண்டரின் இறுதி விருப்பம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் வட்டம் மணிகண்டம் ஒன்றியம் கே. கள்ளிக்குடி கிராமம்2/328 வடக்கு தெருவில் வசிக்கும் தீத்தான் மகன் தையல் (எ) நாத்திகன் வயது 81. பிறப்பு 25.10.1929 பொன் மலை ரயில்வே பணிமனை ஓய்வு 31.10.1989 பெரியார் பெருந் தொண்டராகிய நாத்திகன். தையல் அன்று எழுதிய விருப்ப மடல்

என்னுடைய 18ஆவது வயதில் தோழர் ஆண்டி (30) அவர்களோடு அய்யா பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கருப்பு சட்டை அணிந்து ஆரம்பித்த தன்மானம், சுயமரியாதை, கடவுள் மறுப்பு, சாதி மத வேறுபாடு, சமுதாய சீர்திருத்தம், மூடநம்பிக்கை ஒழிப்பு, அறிவியல் சார்ந்த பகுத்தறிவு சமூக நீதியுடன் கூடிய அரசியல், பதவி பககம் போகாத பகுத்தறிவு சமூக தொண்டு போன்ற அய்யாவின் அடிப் படை கொள்கைகளை விட்டுக் கொடுக்காத சாமானியனாக வாழ்ந் தாலும், இவற்றைத் தன் வாழ்நாளில் வாழ்க்கை நெறியாகவே பின்பற்றி வந்துள்ளேன்.

என்னுடைய இரண்டு மகன்கள் அம்பேத்கர் (1960) காமராஜர் (1966) இருவருக்கும் அய்யா அவர்கள்தான் பெயர் சூட்டினார்கள். என்னுடைய பணி (ரயில்வே) காலத்தில் சந்தித்த அனைவருக்கும் என்னைவிட என் கொள்கையைப் பற்றியே அதிகம் தெரிந்திருக்கும். பணிக் காலத்தில் ஷி. யிஷீலீஸீ கினீதீறீணீஸீநீமீ சேர்ந்து மருத்துவம் பற்றியவற்றை அறிந்து அதன் மூலம் என்னால் இயன்ற அளவு சேவைகள் செய்துள்ளேன். உடல் கொடை வழங்குவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.. பணி நிறைவிற்குப்பின் முழுமையான அய்யாவின் கொள்கை வெளிப்பாடாம். கருப்பு சட்டையைத் தவிர எந்த சட்டையையும் அணிவதில்லை என்று தொடர்ந்து பின்பற்றி வருகின்றேன். குடும்பத்தில் என மனைவி இறப்பு, இல்ல அறிமுக தலைமை (கோ. சாமிதுரை) 1992 தை. அம்பேத்கர் தங்கமணி திருமணம் (தலைமை: ஆசிரியர் கி.வீரமணி) 1985 இளைய மகன் தெ. காமராஜ் - தங்கமணி திருமணம் (தலைமை பொருளாளர் கா.மா. குப்புசாமி) மற்றும் பேர்த்திகள் கனிமொழி, கவி எழில், பேரன் முகிலன் ஆகியோரோடு சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என வாழ்ந்து வருகிறோம்.

ஒவ்வொரு மனிதனின் இறப்பிற்கு பிறகு, தேவையில்லா சடங்குகள் சம்பிரதாயங்கள், மறுபிறப்பு என்ற மூடநம்பிக்கை இவற்றையெல்லாம் முறியடிக்கின்ற வகையில் அய்யா பெரியாரின் பகுத்தறிவு கொண்டு பார்க்கையில் இறப்பிற்குப் பிறகு உடல் கொடை என்பது மிகவும் உன்னதம் என்று என்னுடைய இறப்பிற்கு பிறகு உடலை கொடையாக வழங்கிட முடிவு செய்து எனது உடலை கி.ஆ.பெ. விசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மெய்யியல் துறைக்கு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மருத்துவப் படிப்பிற்கு பயன்படத்தக்க வகையில் 22.1.2010-ல் உடல் கொடை அளிக்க பதிவு செய்துள்ளேன். உடல் கொடையினை நிறைவேற்றுபவராக எனது மனைவியில்லாததால் எனது மூத்தமகன் தை. அம்பேத்கர், இளைய மகன் தை காமராஜ் ஆகிய இருவரும் என்னுடைய இறுதி விருப்பத்தை நிறைவேற்ற ஒப்புதல் அளித்துள் ளார்கள். இதை மாற்ற வேறு யாருக்கும் உரிமையில்லை என்பதுடன் எந்தவித மத, சாதி, சமய சடங்குகள் நடத்தக் கூடாது. அன்பு உள்ளம் கொண்ட உறவினர் நட்பினர்க்கு தெரிவித்து உடன் சரியான நேரத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இது எனது சுய சிந்தனையுடன் எழுதப்பட்ட விருப்பம்.

இவண்

வேறுபட்ட சமுதாயத்தில் மாறுபட்ட சிந்தனைகளைக் கொண்டு என்னை செதுக்கிய சீர்திருத்தச் செம்மல் பெரியாரின் வழி வந்த நாத்திகன். விடுதலையும் உண்மையும் பிரிக்க முடியாத சொந்தங்கள்.

தமிழ் ஓவியா said...


பெரியாரின் அறிவுக் கூர்மை!

பெரியார்தான் திருக்குறளின் புகழ்ப ரப்பப்
பெரியதொரு மாநாட்டை முதலில் கூட்டி,
இருக்கின்ற இலக்கியத்துள் நான்ம திக்கும்
ஈடில்லா நூல்குறளே! என்று சொன்னார்!
ஒருநண்பர் அவரிடத்தில் கேட்டார்: நீங்கள்
ஒப்பாத இறைவாழ்த்தை ஏற்கின் றீரா?
திருக்குறளார் பலசரக்குக் கடைவைத் துள்ளார்;
தேவைகளை வாங்குகிறேன்! பெரியார் சொன்னார்.

பொதுவுடைமைப் பூஞ்சோலை ரஷ்ய நாட்டைப் போய்ப் பார்த்துத் திரும்பியபின் குழந்தைக் கெல்லாம்
புதுமையுடன் பெயர்சூட்டி, ரஷ்யா என்றும்
புகழ் மாஸ்கோ என்றெல்லாம் அழைக்கச் சொன்னார்!
இதுவென்ன? மண்பெயரா மழலை கட்கே?
எப்படித்தான் ஏற்பதென்றார் சிலரோ! அய்யா,
சிதம்பரத்தைப் பழனியினை, மதுரை தன்னைத்
திருப்பதியை ஏற்பதுபோல் ஏற்பீர்! என்றார்!

கூட்டத்தை முடித்தபின்னர், கழகத் தோழர்
கொண்டுவந்த புலால் உணவைப் பெரியார் உண்ணக்
கேட்டார்ஓர் வீரசைவர், ஆட்டைக் கொல்லல்
கேடான பாவமன்றோ? என்றே! உங்கள்
வீட்டுணவும் என்ன? என்றார் பெரியார்; அன்னார்,
விளைத்திட்ட முளைக்கீரை மசியல் என்றார்;
ஆட்டின்உயிர் ஒன்றைத்தான் கொன்றோம்; நீங்கள்
அழித்தஉயிர் ஆயிரங்கள்! என்றார் அய்யா!- கவிவேந்தர் கா.வேழவேந்தன்

தமிழ் ஓவியா said...


பெரியாரின் அறிவுக் கூர்மை!


பெரியார்தான் திருக்குறளின் புகழ்ப ரப்பப்
பெரியதொரு மாநாட்டை முதலில் கூட்டி,
இருக்கின்ற இலக்கியத்துள் நான்ம திக்கும்
ஈடில்லா நூல்குறளே! என்று சொன்னார்!
ஒருநண்பர் அவரிடத்தில் கேட்டார்: நீங்கள்
ஒப்பாத இறைவாழ்த்தை ஏற்கின் றீரா?
திருக்குறளார் பலசரக்குக் கடைவைத் துள்ளார்;
தேவைகளை வாங்குகிறேன்! பெரியார் சொன்னார்.

பொதுவுடைமைப் பூஞ்சோலை ரஷ்ய நாட்டைப் போய்ப் பார்த்துத் திரும்பியபின் குழந்தைக் கெல்லாம்
புதுமையுடன் பெயர்சூட்டி, ரஷ்யா என்றும்
புகழ் மாஸ்கோ என்றெல்லாம் அழைக்கச் சொன்னார்!
இதுவென்ன? மண்பெயரா மழலை கட்கே?
எப்படித்தான் ஏற்பதென்றார் சிலரோ! அய்யா,
சிதம்பரத்தைப் பழனியினை, மதுரை தன்னைத்
திருப்பதியை ஏற்பதுபோல் ஏற்பீர்! என்றார்!

கூட்டத்தை முடித்தபின்னர், கழகத் தோழர்
கொண்டுவந்த புலால் உணவைப் பெரியார் உண்ணக்
கேட்டார்ஓர் வீரசைவர், ஆட்டைக் கொல்லல்
கேடான பாவமன்றோ? என்றே! உங்கள்
வீட்டுணவும் என்ன? என்றார் பெரியார்; அன்னார்,
விளைத்திட்ட முளைக்கீரை மசியல் என்றார்;
ஆட்டின்உயிர் ஒன்றைத்தான் கொன்றோம்; நீங்கள்
அழித்தஉயிர் ஆயிரங்கள்! என்றார் அய்யா!- கவிவேந்தர் கா.வேழவேந்தன்