Search This Blog

18.1.13

பெரியார் இராமசாமி 5544ம் நம்பர் கைதி

“இன்பத் திராவிடமே என் இலட்சியம்!”

“கோர்ட்டாரவர்கள் தாங்கள் திருப்தியடயும் வண்ணம் எவ்வளவு அதிக தண்டனையைக் கொடுக்க முடியுமோ அவைகளையும் பழிவாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வரைக்கும் எவ்வளவு தாழ்ந்தவகுப்பு கொடுக்க உண்டோ அதையும் கொடுத்து இவ்வழக்கு விசாரணை நாடக்தை முடித்துவிடும்படி வணக்கமாகக் கேட்டுக் கொள்கிறேன். எவ்வளவு நியாயமான லட்சியத்தை அடைய வேண்டுமனாம் அதற்காகக் கஷ்ஙட நஷ்டங்களடைதல் என்னும் விலைகொடுக்க வேண்டுமாதலால் அவ்வாறு வேண்டிக் கொள்கிறேன்.

காளையல்ல, பேசினது, கிழவர்! எனவேதான், காளைகள் ஆயிரமாயிரம், அவருடைய குரல்கேட்டுக் குதூகலிக்கின்றன.

ஒரு மாலை - மூன்றரை மணி இருக்கும் - முகத்தில் ஈஆடாது உட்கார்ந்திருக்கிறார். மாஜிஸ்ட்ரேட், பசி தெரியாமல், பார்த்த கண்களை நீக்க முடியாமல் தமிழர்கள், குடும்பங் குடும்பமாக உள்ளனர் கோர்ட்டுக்கு, உள்ளேயும் வெளியேயும், சட்டம், ஒருபுறம் - சமர் மற்றோர்புறம் ஆச்சாரியார் ஓர் புறம் - பெரியார் இராமசாமி ஓர்புறம் - கட்டாய இந்தி முறைத்துப் பார்க்கிறது, கன்னித் தமிழ் எழிலுடன் எதிர்நோக்குச் செலுத்துகிறது. தண்டனை தரும் அதிகாரம் அவர்கட்கு, தமிழைக் காக்கும் உரிமையைத் தாங்கிக் கொண்டிருக்கிறார் பெரியார். நடப்பது காங்கிரசாட்சி சம்பவமோ, சிறைக்கு, மக்கட் தலைவனை அனுப்புவதாக இருந்தது. பெரியார் பேசினார், விடுதலை வீரர்களின் மொழியிலே, விலை கொடுப்பேன், உரிமைக்காக என்றார். எடு சட்டத்தை, கொடு தண்டனை, முடி இந்த நாடகத்தை என்று முழக்கமிட்டார். வயது என்ன? அறுபதாம் கலியாணப்பருவம்! பேச்சிலேயோ, தீ போக்கோ, முறுக்கேறின படைத்தலைவருடையது! ஏன்? தமிழகம், அவர் பக்கம் நின்றது.

மாஜிஸ்ட்ரேட் என்ன சொல்லப் போகிறார்? எமது தலைவரின் நிலை என்ன ஆகும்? கூண்டிலே சிங்கம்! கும்பலாகத் தமிழர் நின்று பார்க்கின்றனர்! அரியணை மீதோ ஆச்சாரியார், என்று வருந்தினர் மக்கள் வாய்திறந்தார் மாஜிஸ்ட்ரேட்.

இரண்டாண்டுகளா? எமது தலைவருக்கா? இந்தி வேண்டாம் என்பதற்கா! இரும்பிலே இருதயம் செய்து அமைத்துக் கொண்டனரோ ஆட்சியாளர்கள். கரும்பினும் இனிக்கும் எமது தமிழைக் காத்திடக் கிளம்பினதற்கா, இத்துணைக் கடுந்தண்டனை என்று எண்ணித் திகைத்தனர் தமிழர் திகைப்புண்ட தமிழரின் செவியில், மாஜிஸ்ட்ரேட் மேலும் சில சொல் கூறியது வீழ்ந்தது.

2 வருஷம் தண்டனை, அத்துடன் அபாரதம் 2000 ரூபாய் - கட்டத் தவறினால் மேற்கொண்டு ஒரு வருஷம்.

1938ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 6-ந் தேதி மாலை 3-25க்கு தலைவர் பெரியாருக்கு 3 வருடத் தண்டனை விதிக்கப்பட்டது - வெடி குண்டு வீசியதற்கு அல்ல, தமிழ் வேண்டும் தமிழருக்கு - இந்தியைக் கட்டாய பாடமாக்கக் கூடாது என்று சொன்னதற்கு.

திகைத்த தமிழரை, ஒரு முறை நோக்கினார், திக்விஜயம் செய்யும் மாவீரன் முறையில், கண்ணீர் திவலைகளைக் கண்டார். சால்வயை இழுத்துப் போட்டுக் கொண்டார், ஒரு புன்சிரிப்புடன் பேசினார் பக்கம் சென்றவரிடம் நான் இப்போது ஓர் கைதி என்று.

ஆம்! தமிழர் தலைவரைக் கைதி கோலத்திலே கண்டனர் அன்று. அவருக்கு அது எட்டாவது முறை, தமிழர் அந்தக் கைதிக்காகக் கண்ணீர் விட்டனர். குழந்தைகள் முதியவர் போலாயினர், முதியவர் குழந்தைகளெனக் கோவெனக் கதறினர்.

பெரியார் இராமசாமி 5544ம் நம்பர் கைதியானார், சென்னைச் சிறை புகுந்தார். வெளியே தமிழர் தம் தலைவனுக்காக உருகினர், சிறையோ புதிய கௌரவம் பெற்றது, செந்தமிழ் நாட்டுச் சிங்கம் - எங்கள் ஈ.வெ.ரா தங்கம் வந்தார் - வந்தார் என்று சிறையிலே கீதம் கிளம்பிற்று. ஆம்! சிறைக்கு வெளியே மட்டுமா, உள்ளேயும் இருந்தது, பெரியார் பெரும்படை!

வழக்கு மன்றத்திலே, அவர் ஆற்றிய வீரஉரை, அவர் வாழ்க்கையின் திறவுகோல் எதுவென்பதைக் காட்டுவதாகும்.

லட்சியத்தை அடைய கஷ்ட நஷ்டம் அடைதல் எனும் விலை கொடுத்தாக வேண்டும் - என்றார். ஆம் கொடுத்திருக்கிறார் ஓட்டுமுறை சிறை சென்றது மட்டுமல்ல, விலை.

எந்த மக்களின் சார்பாகப் பேசுகிறாரோ, எந்தத் தமிழ் இனத்துக்காகத் தளராது உழைக்கிறாரோ, அதே ஈன மக்களின் கேலி கண்டனம் சந்தேகப் பார்வை இழிமொழி இவைகளைப் பல்லாண்டுகளாகப் பெற்று இருக்கிறார் - ஆனால் பாதையிலிருந்து வழுவியதில்லை.

விலை கொடுத்தார் ஓர் சிறந்த இலட்சியத்துக்காக என்ன அந்த இலட்சியம் அதனைத் தமிழர் அறிதல் வேண்டும், அவருடைய விழா கொண்டாடப்படும இந்நாள் அவரே பேசுகிறார், கேளுங்கள், அவருடைய இலட்சியம் என்னவென்று தெரியும் - அது உங்கள் இலட்சியம் என்பதை உணருவீர்கள்.

திராவிடர்களின், தமிழர்களின் நிலைமையைத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள், முதலாவது திராவிடநாடு தனி நாடு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

திராவிட நாட்டின் எல்லைகளைக் குறிப்பது கஷ்டமில்லை. இயற்கை திராவிட நாட்டைச் சுற்றி மூன்று பக்கங்களில் சமுத்திரத்தையும் ஒருபுறம் விந்திய மலையையும் அமைத்து வைத்திருக்கிறது.

திராவிட நாடு, தெளிவாக ஒரு தனிப்பட்ட சமூகத்தையுடையது, திராவிட மொழியான தமிழ்மொழி எத்தனை பிரிவாய்ப் பிரிந்திருந்தும், ஆரியரோடு சம்பந்தப்படாமல் ஒருதனிப்பட்ட இனமாக இருப்பதற்குத் தமிழ் மொழியின் தன்மைக்கு நான் வந்தனம் செலுத்துகிறேன்.

திராவிட நாடு தன்னுடைய சுதந்திரத்தை விடடுக் கொடுக்க மறுப்பதே தொன்றுதொட்டு வடநாட்டிற்கும் திராவிட நாட்டிற்கும் நடந்த சண்டைக்குக் காரணம்.

சூதாட்டத்தில் காய்களை உருட்டுவதுபோல் சில மனிதர்களை உருட்டிவிட்டு திராவிட நாட்டுப் பிரிவினையை அடையமுடியாது. திராவிட இனத்திலுள்ள ஒவ்வொருவனும் விடுதலை பெறவேண்டுமென்று முழுமனதுடன் தீர்மானித்தலே திராவிடநாடு இலகுவில் பெற முடியும்.

ஒருவனுடைய நாட்டில் வேறு ஒருவன் வந்து ஆதிக்கம் செய்யும்படியாகவும் நாட்டுக்குடையவனைச் சூத்திரமனாகவும் கீழ் ஜாதியாகவும் செய்திருக்கும், செய்து வரும் ஆட்சி, எப்படிப்பட்டதானாலும் அது கொடுங்கோன்மை ஆட்சியேயாகும்.

இன்று நமக்குத் திராவிடர் என்கின்ற பெயரே இல்லை. தமிழர் என்கிற பெயரே இல்லை. சூத்திரர், தீண்டப்படாதவர், நாலாம் ஜாதி, ஐந்தாம் ஜாதி என்கிற பெயர்கள்தான் இருக்கின்றன. இதுசரியா? இது உங்களுக்குச் சம்மதமா? இதுமாற்றப்பட வேண்டாமா? அதற்காவன செய்ய வேண்டாமா?
இதைச் செய்வதைவிடவா, மந்திரிப் பதவி, வைசிராய் மெம்பர் பதவி, இலோசனையாளர் பதவி, கவர்னர் பதவி ஆகியவை பெரிதும் அவசரமும் அவசியமுமானவை என்று கேட்கிறேன்.

முதலில் சமுதாயத்தில் பிறவியின் பேரால் உள்ள பேதங்களை ஒழித்தாக வேண்டும். அதுவே, இந்நாட்டு சமதர்மத்திற்கு முதல் படியாகும். அதனாலேயே, பொருளாதார சமதர்மமே மனித சமூக சாந்திக்கு மருந்து என்று கருதியிருக்கும் நான் சமுதாயத்தில், வாழ்க்கையில், சமதர்மத்தை முக்கியமாய் வலியுறுத்தி வருகிறேன்.

நம்நாட்டில் இன்று ஜாதிபேதங்கள் ஒழிந்து மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டியதாய் இருக்கிறது.

சமூகத்தில் மேல்ஜாதி கீழ்ஜாதி அடிமை ஜாதி என்பவைகள் இருப்பதோடு, இண் பெண் தன்மைகளில் உயர்வு தாழ்வு இருந்து வருகிறது. இவைதவிர ஏழை பணக்காரன், முதலாளி, தொழிலாளி, தன்மையும் இருந்து வருகிறது. இவற்றுள் சில இயற்கையாக ஏற்பட்டதாகவும் சில முயற்சியால் செய்கையால் ஏற்பட்டதாகவும், இவ்வளவுக்கும் காரணம் மனிதன் அல்லவென்றும் சொல்லப்படுகிறது. இவற்றையே மேல் நிலையில் உள்ளவனும், கீழ்நிலையில் உள்ளவனும், நம்பிக் கொண்டிருக்கிறான். இந்த மூடநம்பிக்கைதான் வெகுகாலமாக மனித சமூகத்தில் எவ்வித மாறுதல்களும் ஏற்படுவதற்கில்லாமல் தடுத்துக் கொண்டு வருகிறது.

இந்த மாபெரும் சனியனான ஜாதிமத பேதத்தொல்லைகள் மனித சமூகத்தை விட்டுத் தொலைய வேண்டுமானால் மனிதனுக்கு விஞ்ஞான அறிவும் நாட்டில் விஞ்ஞான வளர்ச்சியும் தேவை.

கஷ்டமானதும் இழிவானதும் இனவேலை செய்பவர்கள் எல்லாம் கீழ் ஜாதியாகவும், சுகமாகவும் மேன்மையாகவும் உள்ள வேலை செய்பவர்கள் மேல் ஜாதியாகவும், ஒரு வேலையும் செய்யாமல் ஊரார் உழைப்பில் வயிறு வளர்த்துக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு வஞ்சித்துக் திரிகிறவர்கள் மகாமகா மேல்ஜாதியாகவும் ஏற்பட்டதற்குக் காரணம் விஞ்ஞான அறிவில்லாததே.

மேனாட்டிலே ஈம்மாதிரியான தொல்லை அனேகமாகத் தீர்ந்து விட்டது.

விஞ்ஞான வளர்ச்சி காரணமாக சமத்துவம் அந்தச் சமூகத்திலே உண்டாக மார்க்கம் ஏற்பட்டுவிட்டது. நாம் என்ன கூறினாலும் இனிமேல் நமது பின்சந்ததியார் பழைய தொழில்முறை, ஜாதிமுறைத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பது உறுதி.

எனக்குத் தொழிலாளர்களிடம் உண்மையில் அன்பும் பக்தியும் கவலையும் வேறெதையும் விட அதிகம் என்பதை உண்மைத் தொழிலாளர்கள் 15, 16 வருடமாகத் தொழிலாளருடன் பழகுபவர் அறிவர்.

காதினிக்கப் பேசுபவர்களைக் கண்டு தொழிலாளர் மயங்குவது அறிந்து பெரிதும் வருந்திணன்ன 15 ஆண்டுகட்கு முன்பு நாகையில், ரயில்வே வேலைநிறுத்தம் நடந்தபோது அதிலே கலந்த கொண்டு பாடுபட்டு, அதற்காக நான் சிறை சென்றதை அக்காலத் தலைவர்கள் உணர்வார்கள்.

தொழிலாளர்களின் விடுதலையே தமிழர்களின் விடுதலை - பார்ப்பனரல்லாதாரின் விடுதலையாகும்.

ஒருகாலத்தில் இங்கிலாந்தில் அன்னிய நாட்டுத் துணி கட்டினால் 30 பவுன் அபராதம் விதிக்கச் சட்டம் இயற்றினார்களாம். அவர்களுடைய நெசுவத் தொழிலை விருத்தி செய்ய இச்சட்டத்தை ஏற்படுத்தி இருந்தனர். இன்று நம்மில் 100க்கு 60, 70பேர் ஆமதாபாத் போன்ற வெளி மாகாணத் துணிகளை அணிந்திருப்பதைப் பார்க்கிறோம். பெண்களும் ஆமதாபாத் சீலைகளைக் கட்டுகிறார்கள்.

ஆமதாபாத் முதலிய வெளிநாடடு, அதாவது திராவிட நாடு அல்லாத நாட்டுத்துணிகளை நாம் தடுத்துவிட்டால் நமது கைத்தொழில் வளர்ச்சி அடையும் கைத்தறி நெசவாளர்களின் துன்பம், வறுமை, கஷ்டம் ஒழிந்து போய்விடும்.

எந்த மனிதனும் மற்றொரு மனிதனுக்கு உபகாரியாகவும் கடைசீபட்சமாக, தன்னால் மற்றவனுக்குத் துன்பம் தராதவனாகவும் இருப்பதே பெரிய ஒழுக்கம், மதம் என்று சுயமரியாதை இயக்கத்தார் கருதி இருக்கிறார்கள். இந்தச் சமயத்தில் ஒழுக்கத்தை பற்றி ரஷ்ய புரட்சி வீரர் லெனின் பொதுவுடைமைச் சிறுவர்கள் கூட்டத்தில் பேசிய பேச்சை உங்களுக்கு எடுத்துச் சொல்ல இசைப்படுகிறேன்.

அதாவது பொதுவுடைமைக்காரர்களுக்கு ஒழுக்கம் இல்லை என்று நம் எதிரிகள் சொல்கிறார்கள். அது தவறு. நாம் தான் சமூகத்தின் உண்மையான ஒழுக்கங்களைக் கையாள்வதோடு மற்றவர்களையும் ஒழுக்கமாக நடவுங்கள் என்று கட்டாயப்படுத்துகிறோம். அதற்குப் பொதுவுடைமை ஒழுக்கம் என்று பெயர். நம்முடைய ஒழுக்கத்திற்கும் மதவாதிகள், பணக்காரர்கள், ஒழுக்கத்திற்கும் வித்யாசமுண்டு, அவர்களது ஒழுக்கங்கள் ஏழை மக்களளுடையவும் பாமர மக்களுடையவும் கண்களில் மண்ணைப்போட்டு பலன் அனுபவிப்பதற்கு ஆக ஏமாற்றச் செய்கிற சூழ்ச்சிகளாகும். நமது ஒழுக்கமெல்லாம் ஒருவனால் ஒருவன் ஏமாற்றப்படாமலும், ஒருவனாலொருவன் வருத்தப்படாமலும் இருகும்படியானவைகளாகும். பாட்டாளி, ஏழை மக்களுடைய நன்மையையே பிரதானமாகக் கருதுவதுதான் நமது ஒழுக்கம் என்று லெனின் சொன்னார். சுயமரியாதைக்காரர்களாகிய நாமும் தனிப்பட்ட எந்த வகுப்பாருடையவும் சுயநலத்துக்கு மாத்திரம் பயன்படும் எந்த ஒழுக்கத்தையும் தனிப்பட்ட மதாவதிகளுக்கு மட்டும் பயன்படும் எந்த ஒழுக்கத்தையும் ஒப்புக் கொள்ளாமல், எல்லா மக்களுக்கும் எந்த வகுப்பாரானாலும் எந்த நிலையிலுள்ளவர் களாலும், எந்த மதக்காரரானாலும் யாவருக்கும் ஒன்றுபோல் பயன்படும்படியான காரியங்களையே நாம் ஒழுக்கம் என்கிறோம். இதனால் சுயநலத்தையே பிரதானமாய்க் கருதிக் கற்பித்துக் கொண்ட ஒழுக்கங்களை உடைத்தெறிவது சுயமரியாதைக் காரர்கள் கடமை என்பது விளங்கும்.

வயது சென்ற பெரியார்கள், மானமற்ற செல்வப் பித்தர்கள், பதவிப் பித்தர்கள் நிலை எப்படியோ இருக்கட்டடும். வாலிபர்களாகிய நீங்கள் உறுதியுடனும் துணிவுடனும் நம்பிக்கையுடனும் முன் வாருங்கள் ஒரு பத்து வருடத்திற்குள் பெரியலதோரு சமுதாயப் புரட்சி நடத்தி மானமும் விடுதலையும் பெற்று விடலாம்.

நான் ஒரு எதிர் நீச்சுக்காரன் என்ன காரணத்தாலோ நம் நாட்டு மக்களின் பெரும்பான்மையான அபிப்பிராயத்துக்கு நான் மாறுபட்டவனாக இருந்து வருகிறேன். பழைமையைப் பாராட்டுவது நமது மக்களுக்கு ஒரு பெருமையாய் காணப்படுகிறது, நானோ பழைமைப் பித்தை வெறுக்கிறவனாயிருக்கிறேன். அதனா லேயே நான் வெகுபேர்களால் வெறுக்கப்படுகிறேன். இனாலும் அறிவாளிகள் சீக்கிரம் என் பக்கம் திரும்பி விடுவார்கள் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை! அறிஞர் உலகு இன்று அவர் ஊரையை மறுப்பதில்லை! வீரர் உலகு அவர் செயலைப் பாராட்டவோ துணை செய்யவோ தயங்கவில்லை. வாலிப உலகு சமஉரிமைப் போர்ப்படையை அமைக்கத் தவறிவில்லை. வீணர் என்ன கருதிடினும், அவருடைய நம்பிக்கை வீண்போக வில்லை என்பது தெளிவாகக் காட்டும் பல அறிகுறிகள் தோன்றிவிட்டன.

அவர் எதிர் நீச்சுக்காரர்தான்! ஆனால், அதிலே அவர், வெற்றி பெற்றுவிட்டார்.

மகாபாபி! புராதன கால ஏற்பாட்டைக் குறை கூறுகிறானே! வாய்ப்புழுக்காதோ! ரௌரவாதி நரகமன்றோ கிடைக்கும்.

கர்ஜிக்கட்டும், கண்டிக்கட்டும்! கவலையே வேண்டாம், எத்தனையோபேர், இதுபோல் முன்பெல்லாம் கத்தினர். கண்டது என்ன? அபஜெயம் அதேதான் இவனுக்கும் என்னதான் அசகாய சூரனாக இருக்கட்டும், நமது பழையகால ஏற்பாட்டோடு மோதிக் கொண்டால், அபஜெயம் நிச்சயமன்றோ!

ஏன் இந்த வீண்வேலை! இப்போது பழையகால ஏற்பாடுகள், என்ன உள்ளன. லோகம் மாறிண்டிருக்கு. இ;சசார அனுஷ்டானாதிகள் காலவேகத்தாலே, அடியோடு மாறிவிட்டன. செத்த பாம்பை அடிக்கிற மாதிரி, எதற்காக இவர், ஜாதிகுலம் ஆச்சார் சாஸ்திரம்னு கண்டித்துக் கொண்டு இருக்கணும்? அனாவசியம்!

அவர் சொல்வது, உண்மை, நிச்சயமாகப் பேதம் ஒழிந்துபோகத்தான் வேணும். எல்லாரும் சகோதர பாவத்தோடு வாழத்தான் வேண்டும. அதுதான் சிலாக்கியம் இனா, அவசரப்படக் கூடாது. மெள்ள மெள்ள நடக்க வேண்டிய காரியம்.

யார் இப்போது, பலஜாதி பலகுலம் இருக்க வேணும்னு வாதாடுவா! அதெல்லாம் ஒழியத்தான் வேணும். அதற்காகத்தான் சுயராஜ்யம் வரவேணும்னு சொல்கிறா பெரியவா, அதுக்காத்தான் தற்சமயம் பாடுபட வேணும். சுயராஜ்யம் வந்தானதும் ஜாதிபேதம் முதலிய சனியன்களைத் தொலைக்கிற காரியந்தான் செய்தாக வேணும். நடக்காமலா போகும். நிச்சயமாக நடக்கும்.

சாபம், கோபம், கேலி, சமாதானம், சமரசம், என்று படிப்படியாகப் பழைமையின் காவலர், பேசியவந்த விதத்தை மேலே பொறித்திருக்கிறோம். இந்த மாறுதல், பெரியாரின் வெற்றி. அதற்கான விலையைக் கொடுத்து அந்த வெற்றியை அவர் பெற்றார்.

அவருடைய இலட்சிய பூமியில், இல்லாமை, போதாமை, அறியாமை, இருக்காது.

திராவிட நாடு திராவிடருக்கே!

என்ற ஒரு வாக்கியத்துக்குள் அடங்கி இருக்கும், கருத்துக்களை அவருடைய மொழியின் மூலம், ஓரளவு விளக்கி உள்ளோம். அந்த இலட்சிய பூமியை அடைய அவர், பட்ட, பட்டுவரும் பாடும் கொடுத்த விலையும் சாமான்யமல்ல.

துன்புறும் எளியோர் துயரது தீர்ந்து
இன்புறும் வண்ணம் உண்மை இயம்ப
அஞ்சுவோன், வீரன் இகான், மற்றும்
உற்ற துரைத்தலால் எறும் பழியும்
மற்றும் பல்லின்னல் வந்திடு மென்ற
மெய்மமையைக் காக்கும் விரதம் விடுத்து
பொய்யுரைப் போரைப் புவிதனி லென்றும்
அடிமை யென்றே அறைந்திடு வோமே.

அஞ்சாநெஞ்சுடன் அறிவுக்காகப் போராடும் ஆற்றல் மிக்க பெரியார் வாழ்க! என்று, இன்று தமிழகம் வாழ்த்துகிறது

        ------------- பேரறிஞர் அண்ணா - “திராவிட நாடு” - 29-9-46

11 comments:

தமிழ் ஓவியா said...


இனி ஒரு யுத்தமா? தாங்காது பூமி!


இனி ஒரு யுத்தம் என்றால் இந்தப் பூமி தாங் காது. அப்படி ஒரு போர் நடந்தால் அது அணு ஆயுதப் போராகத்தான் இருக்கும். அதன் கொடிய விளைவிலிருந்து மனிதப் பூண்டுகள் முளைக்க எத்தனை ஆயிரம் ஆண்டு காலம் தேவைப்படுமோ தெரியாது.

இந்தியாவின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பிரச்சினைகள் எழுந்து வருகின்றன. 117 முறை பாகிஸ்தான் மீறியுள்ளதாக குற்றச்சாற்று எழுந்துள்ளது.

இந்தியப் படை வீரர்கள் ஹேம்ராஜ், சுதாகர்சிங் ஆகிய இருவர் பாகிஸ்தான் இராணுவத்தினரால் தலையை வெட்டி மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்! இது இந்தி யாவை அதிர்ச்சிப் பனியில் உறையச் செய்து விட்டது. உலக நாடுகள் மத்தியிலும் பேரதிர்ச்சி தான்!

ஆயிரம் காரணங்கள், சமாதானங்கள் சொல்லப்படலாம். அந்தக் காரணங்களுக்கான தீர்வு இது போன்ற குரூரக் கொலைகள் அல்ல. இந்தியாவும் - பாகிஸ்தானும் நவமி, அஷ்டமி பார்த்து கிட்டத்தட்ட ஒரே நாளில் (1947 ஆகஸ்டு) தனி சுதந்திர நாடுகளாகப் பிரகடனம் செய்யப் பட்டன.

இந்த இரு நாடுகளும் பொருளாதாரத்தில் மேலும் பெரிய அளவில் முன்னேற வேண்டிய கட்டத்தில் தான் உள்ளன. அதுவும் பாகிஸ்தானில் ஜனநாயக அமைப்பு என்பது பலகீனப்பட்டுப் போய் விட்டது. இராணுவ ஆட்சிதான் பெரும்பாலும்.

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றுக்கொன்று ஒத்துழைத்தால் இரு நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி என்பது குறிப்பிடத் தகுந்த அளவில் இருக்கும். அதை விட்டு விட்டு உரசிப் பார்க்க ஆரம்பித்தால் இரு நாட்டு மக்களுக்கும் பெரும் கேடுதான்!

ஏற்கெனவே இந்தியாவிடம் பாகிஸ்தான் பலத்த அடி வாங்கியுள்ளது. பாகிஸ்தானிலிருந்து வங்காள தேசம் பிரிவதற்கு அந்த யுத்தம் பயன்பட்டது என்பது உலகுக்கே தெரிந்த மாபெரும் உண்மையாகும்.

இந்திய இராணுவ வீரர்களின் தலைகள் அறுக் கப்பட்டதற்கு இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

பாகிஸ்தான் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லையெனில் பாகிஸ்தானுடன் இணக்கமான நல்லுறவு கெட்டுப் போய் விடும். இந்தியா சமாதானத்தைத்தான் விரும்புகிறது.

அதே நேரத்தில் இந்தியாவின் நலனுக்குக் குந்தகம் விளைவித்தால் பதிலடி கொடுக்க இந்தியா தயங்காது என்று மிகத் திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.

பாகிஸ்தானுக்கும் அரசியல் உள் குழப்பம் உச்சக் கட்டத்தில் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் நிதானிக்கக் கடமைப்பட்டுள்ளது.

அதைத் திசை திருப்பும் வகையில் இப்படி ஓர் அணுகுமுறையைப் பாகிஸ்தான் மேற் கொள்கிறதோ என்றுகூட நினைக்கப்படலாம்.

எனவே, பாகிஸ்தான் மிகுந்த பொறுமையுடனும், பொறுப்புணர்ச்சியுடனும் நடந்து கொள்ள வேண்டிய கால கட்டம் இது.

இந்தியாவுக்கு இன்னொரு பக்கத்தில் சீனப் பெரும் நாட்டின் சீண்டல் இருக்கவே செய்கிறது. அதுவும் வளர்ந்துவரும் ஒருநாடுதான்; உலகி லேயே அதிக மக்கள் வாழக் கூடிய பகுதியைச் சேர்ந்ததுதான்.

இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய மூன்று நாட்டு ஆட்சியாளர்களும் மேசைமுன் அமர்ந்து திறந்த மனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமுகத் தீர்வினை எட்ட வேண்டும். இந்த மூன்று நாடுகளும் சம காலத்தில் சுதந்திரம் பெற்றவை - முன்னேற வேண்டியவையும்கூட!

நியாயப்படி இந்த மூன்று நாடுகளும் இணைந்து செயல்பட்டால் இலங்கைத் தீவில் ஈழத் தமிழர் களுக்கு இப்படிப்பட்ட கொடுமை நடந்திருக்காது- ஈழத் தமிழர்களுக்குத் தனி நாடே கூடக் கிடைத்திருக்கும். அதன் மூலம் மனித உரிமை - நேயம் காப்பாற்றப்பட்டும் இருக்கும்.

யார் பலசாலி என்பதெல்லாம் அணுயுகத்தில் கிடையாது. ஒரு நாட்டை அழிக்கப் பெரிய முயற்சிகள் தேவைப்படாது - அந்த அளவுக்கு அழிவு செய்யும் இரசாயனக் கருவிகள் சின்னஞ் சிறு நாடுகளில் கூடக் கைவசம் உள்ளது

- எச்சரிக்கை! எச்சரிக்கை!! 18-1-2013

தமிழ் ஓவியா said...


கிடைக்காது!உலகில் எந்தத் தொண்டு செய்கிறவர்களுக்கும் மரியாதை கிடைக்கும். ஆனால், சமுதாயத் தொண்டுக்காரர்களுக்கு மட்டும் மரியாதை கிடைக்காது.
(விடுதலை, 26.12.1964)

தமிழ் ஓவியா said...


நாமம் சாத்தியவர்கள் யார்?


திருப்பதி கோவில் உண்டியல் சாவி திடீர் மாயமாம்!

திருமலை, ஜன.18- திருப்பதி கோவில் உண்டியல் சாவி திடீரென்று மாயமானது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க தேவஸ்தான அதிகாரி உத்தரவிட்டுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவில் எதிரே பேடி ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் காணிக்கைகள் செலுத்துவதற்காக சீல் வைக்கப் பட்ட பூட்டுடன் கூடிய உண்டியல் வைக்கப் பட்டுள்ளது. ஏழுமலையான் கோவிலில் காணிக்கை செலுத்த முடியாத பக்தர்கள் இந்த உண்டியலில் காணிக்கைகளை செலுத்தலாம். அந்த உண்டியல் காணிக்கைகள் தேவஸ் தானத்தில் சேர்க்கப்படும்.

அந்த உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் தினமும் முற்பகல் 11 மணி, பிற்பகல் 4 மணி, இரவு 8 மணி ஆகிய நேரங்களில் தேவஸ்தான காணிக்கை பிரிவு ஊழியர்கள் திறந்து காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள். உண்டியலை திறக்க வரும் சம்பந்தப்பட்ட ஊழியரிடம் அதற்கான சாவி ஒப்படைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் சுமார் 3 மணியளவில் கோவில் உண்டியல் சாவியை காணவில்லை. எங்கேயோ மாயமாகி விட்டது. உண்டியல் காணிக்கை பிரிவு அதிகாரிகள் பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் கிடைக்கவில்லை.

கண்காணிப்பு கேமராவில் காட்சிகளை பரிசோதித்தனர். அதிலும், உண்டியல் சாவியை பற்றிய காட்சிகள் எதும் பதிவாகவில்லை. இதையடுத்து, உண்டியல் பூட்டுக்கு புதிய சாவி ஏற்பாடு செய்யப்பட்டது.

உண்டியல் பூட்டின் சாவியை தவற விட்ட சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு உத்தரவிட்டுள்ளார். பகவான் எங்கே போனான்?

தமிழ் ஓவியா said...


திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைப்புலி நடமாட்டம் - பக்தர்கள் அதிர்ச்சி!


திருமலை, ஜன.18- திருப்பதி மலைப் பாதையில் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளது. இதனால், அலிபிரி மலைப்பாதையில் பாத யாத்திரையாக நடந்து செல்லும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பதிஅலிபிரி மலைப்பாதையில் ஏழுமலையான் கோவில் போல மாதிரி கோவில் உள்ளது. ஏழுமலையான் கோவிலில் நடப்பது போல் அந்த கோவிலிலும் நிகழ்ச்சிகள் நடத்தப் படுவது உண்டு. யாத்திரையாக வரும் திவ்ய தரிசன பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்வது வழக்கம். மாதிரி கோவிலில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் அர்ச்சகர் ஒருவர் இருந் தார். அவருடன் சில கோவில் ஊழியர்களும் இருந் தனர். கோவில் காம்பவுண்டு சுவர் அருகில் உறுமல் சத்தம் கேட்டது. அர்ச்சகர் காம்பவுண்டு சுவர் கதவை திறந்து பார்த்தார். அப்போது, மரங்களுக்கு நடுவே ஒரு சிறுத்தைப்புலி நின் றதை அறிந்த அவர் அலறியடித்து கோவிலுக்குள் ஓடினார்.

கோவிலில் இருந்த சக ஊழியர்களிடம் சிறுத்தைப்புலியை பார்த்ததாக கூறினார். அப்போது கோவிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த பக்தர்கள் இத்தகவலை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, கோவில் ஊழியர்களும், பக்தர்களும் விரைந்து சென்றுபார்த்தனர். அதற்குள் சிறுத்தைப்புலி நகர்ந்து காட்டுக்குள் சென்று விட்டது.

கால் தடம் கண்டுபிடிப்பு

இதையடுத்து அர்ச்சகரும், ஊழியர்களும் கோவிலை பூட்டி விட்டு, இதுபற்றி திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு தகவல் தெரி வித்தனர். தேவஸ்தான அதிகாரிகள் திருப்பதி வனத்துறை, அலிபிரி போலீஸ் நிலையம் ஆகியவற்றுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும், திருப்பதி வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து சிறுத்தைப்புலியை தேடி பார்த்தனர். ஆனால், சிறுத்தைப்புலியை கண்டு பிடிக்க முடியவில்லை. காட்டில் சிறுத்தைப்புலி நடமாடியதற்கான கால் தடம் மண்ணில் பதிந்திருந்தன. விரைவில் பிடித்து விடுவோம் என்றார்.

தமிழ் ஓவியா said...


மெட்டீரியலிஸம் - ஆத்மா


ஆத்மா என்னும் விஷயத்தைப் பற்றி இங்கு எழுதப்பட்டிருப்பதை பார்க்கும் போது நண்பர்கள் பலர் இது ஒரு தத்துவ விசா ரணை;

இதைப்பற்றி எழுதவோ, பேசவோ வேண்டிய அவசியம் சமுதாய சீர்திருத்தக் காரருக்கு எதற்கு? சுயமரியாதைக் காரர்கள் அனாவசியமாய்க் கண்ட கண்ட விஷயங்களிலெல்லாம் தலையிட்டுச் சீர் திருத்தத்துறையைப் பாழாக்கிக் கொள்ளு வானேன்? என்று கூசாமல் பேசுவார்கள்.

ஆனால் இப்படிப்பட்ட நண்பர்கள் சமுதாயச் சீர்திருத்தம் என்பது என்ன? என்பதைச் சரிவர உணராதவர்கள் என்று நினைத்துவிட்டு, நம் நோக்கப்படியே, நாம் மேலே சொல்லக் கூடிய நிலையிலேயே இருக்கின்றோம்.

ஏனெனில் சமுதாயச் சீர்திருத்தம் என்றால், ஏதோ அங்கும் இங்கும் இடிந்து போன - துவண்டுபோன, ஆடிப்போன பாகங்களுக்குச் சுரண்டி, கூறுகுத்தி, மண்ணைக் குழைத்து, சந்து பொந்துகளை அடைத்து பூசி மெழுகுவது என்றுதான் அநேகர் கருதி இருக்கிறார்கள்.

ஆனால், நம்மைப் பொறுத்தவரை நாம் அம்மாதிரி துறையில் உழைக்கும் ஒரு சமுதாயச் சீர்திருத்தக்காரரல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

நாம் யார் என்றால், மக்கள் சமுதாயம் (மக்கள் சமுதாயம் என்றால் உலக மக்கள் சமுதாயம்) என்ன காரணத்தினால் - ஏன் சீர்திருத்தப்பட வேண்டிய நிலைமைக்கு வந்தது என்பதை உணர்ந்து, உணர்ந்தபடி மறுபடியும் அந்நிலை ஏற்படாமலிருப்பதற்கு நம்மால் இயன்றதைச் செய்யும் முறையில் அடியோடு பேர்த்து அஸ்திவாரத்தையே புதுப்பிப்பது என்கின்றதான தொண்டை மேற்கொண்டிருக்கின்றபடியால் சமுதாயச் சீர்திருத்தம் என்பதைப் பற்றி, மற்ற மக்கள் அநேகர் நினைத்திருந்ததற்கு, நாம் மாறுபட்ட கொள்கையையும், திட்டத்தையும், செய்கையையும் உடையவராய்க் காணப்பட வேண்டிய நிலைமையில் இருக் கின்றோம்.

இதனாலேயேதான் நாம், உலக மக்கள் உண்டு என்பதை தப்பு என்றும், கெட்டது என்பதை நல்லதென்றும், நல்லது என்பதை கெட்டது என்றும், காப்பற்றப்பட வேண்டு மென்பதை ஒழிக்க வேண்டும் என்றும், மற்றும் பலவாறாக மாறுபட்ட அபிப்பிராயத்தைக் கூறுவோராக - செய்வோராகக் காணப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

ஆனால் நம் போன்ற இப்படிப்பட்டவர்கள் உலகில் நல்ல பெயர் சம்பாதிப்பதும், மதிக்கப்படுவதும், பழிக்கப்படாமல் - குற்றம் சொல்லப்படாமல் - இருப்பதும் அருமை என்பது மாத்திரம் நமக்கு நன்றாய்த் தெரியும்.

- தந்தை பெரியார் (குடிஅரசு, தொகுதி -4, பக்கம்-27)

தகவல்: க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி(கி.அ.) கன்னிவாடி (து.அ.) திண்டுக்கல் கோட்டகை.

தமிழ் ஓவியா said...


நூல் - சிகை -யறுத்தல் நன்றே!

குடுமி வைத்துப் பூணூல் மாட்டிக் கொண்டதனால் மட்டும் ஒருவன் பிராமணனாகான்.
நூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ?

நூலது வேதாந்தம்:

நுண்சிகை ஞானமாம்

குடுமி, மயிர்; பூணூல், பருத்தி மயிரும் பருத்தியுமே இறையறிவிற்கு இலக்கணமாகுமா? ஆகா. ஒழுக்கமில்லா வேடம் போலித்தனமாகும். வாழும் வேதாந்தத்தால் அவாவறுத்தலே பூணூலாகும். கடவுளறிவே சிகையாகும்.

நெஞ்சில் மடைமையிருள் குடி கொண்டு சிறை வைத்துப் பூணூலும் போட்டு நான் பிராமணன் என்று பொய்வேடம் பூணூவோரால் நாடு கெடும், புவிவளம் குறையும். பெரு வாழ்வும், அரசும் பெருமையிழக்கும். ஆதலால் அந்த ஆடம்பரப் போலிகளின் பூணூலையும், சிகையையும் அரசன் அறுத்தெறிதல் நன்றாகும்; ஞான நூல் பூண்டு அந்தன் ஞானிகள் எனவும் நடித்து உலகை ஏமாற்றுவர்.

அரசன் மெய்ஞ்ஞானிகளைக் கொண்டு அவர்களை சோதித்து; ஞானமுண்டாக்கி நல்வழிப்படுத்த வேண்டும். அதுவே நாட்டிற்கு நல்லதாகும். (பக்கம் 100)

ஞான மிலாதார் சடை சிகை நூல் நண்ணி

ஞானிகள் போல நடிக்கின்றவர் தம்மை

ஞானிகளாலே நரபதி சோதித்து

ஞான முண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே

- யோகி தவத்திரு. சுத்தானந்த பாரதியார், நூல்: திருமந்திர விளக்கம்,. (முதற்பாகம்), கழக வெளியீடு, தகவல்: குன்றவாணன்

தமிழ் ஓவியா said...


இல்லாதவனுக்கு இவைகள் கிட்டுமா? ஏழைக்கு இவைகள் எட்டுமா?


திருச்சி உறையூர் பஞ்சவர்ணசாமி கோவிலில் காந்தி மதியம்மை சன்னதியில் வடபுறம் மாட்டியுள்ள அறிவிப்பு பலகை தரும் செய்திகள்:- அங்குள்ள அம்மனை கீழ்காண்பவற்றால் அபிசேகம் செய்தால் ஏற்படும் நன்மைகள்:

இவற்றால் - இவைகள்

1. பழவகைகள் - ஜன வசீகரம் 2. பஞ்சாமிர்தம் - தீர்க்காயுசு 3. பால் - சாந்தகுணம் 4. தயிர் - திடகாத்திரம் 5. தேன் - சங்கீத வன்மை 6. க.சர்க்கரை - சாஸ்திர தேர்ச்சி 7. நெய் - சுகவாழ்வு 8. இளநீர் - நன்மக்கட்பேறு 9. விபூதி - ஞானம் 10. சந்தனம் - சுவர்க்க போகம் 11. பன்னீர் - புகழ் 12. வஸ்திரம் - சம்பாவனை 13. புஸ்பம் - சந்தோசம் 14. கற்பூரம் - அத்வைத முத்தி 15. குங்குமம் - மங்களம்

இவைகளால் பார்ப்பானுக்குத் தான் பயனே தவிர திராவிடனுக்கு தமிழனுக்கு சூத்திரனாகிய நம்மவனுக்கு பொருள் மானம் காலம் காசு நட்டமே தவிர வேறு எள்ளமுனையளவு ஏதாவது நமக்கு இருக்கிறதா? இவற்றை எந்த பார்ப்பானாவது செய்ததாக வரலாறு உண்டா? பைத்தியம் பிடித்த பார்ப்பான் கூட இதைச் செய்ய மாட்டாடன்; செய்யத் தூண்டுவான் மற்றவர்களை.

- திண்டுக்கல் வீரராசன்

தமிழ் ஓவியா said...


புரட்சிக்கவிஞரின் சிந்தனை!


ஆதி சைவர்கள் என்று தம்மைச் சொல்லிக் கொள்பவர்கள் - ஆதிக் குப்பின் யார் என்றால் காதில் வாங்காதவர் போல் சென்று விடு வார்கள் என்பதை-
ஆதி சைவர்கள் என்பார்

ஆதிக்குப்பின் யார்? என்றால்

காதினில் வாங்காரடி - சகியே

காதினில் வாங்காரடி

- எனக் கவிஞர் குலத்தால் தம்மை உயர்ந் தவர் என்று சொல்லிக் கொண்டிருப்பவரை எள்ளி நகையாடுகிறார்.

தமிழ் ஓவியா said...


பண்ருட்டி அருகே ஜாதீய வன்கொடுமை!

தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!

சென்னை, ஜன.18- கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மேலிருப்பு என்னும் கிராமத்தில் காணும் பொங்கல் நாளன்று (16-1-2013) தலித் மக்களின் மீது சாதிவெறிபிடித்த ஒரு வன்முறைக் கும்பல் திடீரெனக் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. தருமபுரியில் நடத்தியதைப் போலவே தலித் மக்களின் குடியிருப்புகளைத் தாக்கி, சொத்துக்களைச் சூறையாடி, கொள்ளையடித்த பின்னர், அக்கும்பல் குடிசைகளுக்குத் தீ வைத் துள்ளது. இதனால் பத்துக்கும் மேற்பட்ட குடி சைகள் முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளன. ஏராளமான ஓடு வேய்ந்த வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டதால் முற்றிலும் சிதைந்துள்ளன. சாதிவெறியர்களின் இத்தாக்குதலில் 2 பெண்கள் உள்பட 5 பேர் படுகாயமுற்று பண்ருட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 500க்கும் மேற்பட்ட சாதிவெறியர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஊருக்குச் செல்லும் பாதையில் சாதிவெறியர்கள் சிலர் குடிபோதையில் போவோர் வருவோரிடம் வம்பிழுத்துள்ளனர். அவ்வழியே தமது குடி யிருப்புக்கு இரு சக்கர வண்டியில் சென்றுகொண் டிருந்த தலித் இளைஞர்கள் சிலர் 'போவதற்கு வழிவிடுங்கள்' என்று அவர்களிடம் கேட்டுள்ளனர். அவர்கள் தலித் இளைஞர்கள் என்று அறிந்து கொண்டதனால் ஆத்திரமடைந்த அந்த வன்முறைக் கும்பல், தலித் இளைஞர்களை சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசியதுடன் அவர்களைத் தாக்கியுமுள்ளனர். அத்துடன் நில்லாமல், தலித் இளைஞர்கள் எதிர்த்துப் பேசினார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக ஒட்டுமொத்த சாதிவெறியர் களையும் திரட்டிக்கொண்டு தலித் மக்களின் குடியிருப்புக்குள் நுழைந்து கொடூரமான முறையில் சாதி வெறியாட்டத்தை நடத்தியுள்ளனர். இரு தரப்பிலும் இளைஞர்கள் சிலரிடையே ஏற்பட்ட ஒரு பிரச்சினைக்காக நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களைத் தாக்குவது, வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடுவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. காரணம் யார்?

இதற்கு சாதி சங்கத்தைப் பின்னணியாகக் கொண்ட அரசியல் கட்சி ஒன்றே காரணம் என்று தெரியவருகிறது. இந்தத் தாக்குதலும் தருமபுரியைப் போலவே திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இவ்வாறான சாதிய வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். சாதியவாதி களின் இந்தச் சமூக விரோதப் போக்கை தமிழக அரசு தொடர்ந்து வேடிக்கை பார்த்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. இந்தத் தாக்குதல் நடக்கும்போது காவல்துறை யினரும் அங்கே இருந்திருக்கிறார்கள் என்பதும் இதனைத் தடுப் பதற்கு காவல்துறை யினர் எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்பதும் தரும புரித் தாக்குதலை மீண்டும் நினைவுபடுத்துவதாகவே அமைந்துள்ளது.

இந்த சாதிவெறியாட்டத்தின் பின்னணியில் உள்ள அனைவரின் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென்றும், அப்பாவி தலித் மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் வடமாவட்டங்களில் மேலும் பரவாமல் தடுப்பதற்கு தமிழக அரசு விரைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது. அத்துடன், தலித் மக்களின் குடியிருப்பை யொட்டி அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித் தரவும், உரிய இழப் பீடுகளை வழங்கவும் ஆவன செய்ய வேண்டு மெனவும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
- இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

கேள்வி - பதில் சித்திரபுத்திரன்

கடவுள்

கேள்வி: கடவுள் எங்கே இருக்கிறார்?

பதில்: முட்டாள்கள் உள்ளத்தில் இருக்கிறார்.

கேள்வி: கடவுள் எப்போது ஏற்படுத்தப்பட்டார்?

பதில்: மக்கள் காட்டுமிராண்டிகளாய், முட்டாள்களாய் இருந்த காலத்தில்.

கேள்வி: கடவுள் பக்தி எங்கே இருக்கிறது?

பதில்: சிறிது பாகம் மடையர்களிடத்திலும், பெரும் பாகம் அயோக்கியர்களிடத்திலும் இருந்து வருகிறது.

கேள்வி: கடவுளைப் பரப்புவதற்கும், பாதுகாப்பதற்கும் பாடுபடுபவர்கள் யார்?

பதில்: சிறு அளவு மூடர்களும், பெரும் அளவு பார்ப்பனர் களுமேதான்.

கேள்வி: நமது நாட்டில் கடவுள்களால் ஏற்பட்ட பலன் என்ன?

பதில்: ஜாதிப் பிரிவும், பார்ப்பனர் உயர்வும், அயோக்கியத்தன மான வாழ்வும்தான்.

மதம்

கேள்வி: மக்கள் யாவரும் ஒன்றாக இணைய வேண்டுமானால் என்ன ஆகவேண்டும்?

பதில்: மதங்கள் ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

இந்துமதம்

கேள்வி: மக்கள் பகுத்தறிவாளர்களாய், சமத்துவம் உள்ளவர்களாக, மனிதாபிமானம் உள்ளவர்களாக, ஒழுக்கம், நாணயம், நன்றி, விசுவாசம் உள்ளவர்களாக ஆக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

பதில்: இந்து மதம் என்னும் பார்ப்பன (ஆரிய) மதமும் அதன் சார்பு நூல்களும் தடை செய்யப்பட்டாக வேண்டும்.

தமிழ் ஓவியா said...


பாரத ஸ்டேட் பாங்கா - பஞ்சாங்கக் குப்பையா?


பாரத ஸ்டேட் பாங்கு என்பது நாட்டு டைமையாக்கப்பட்ட முக்கிய வங்கியாகும். எல்லா மதங்களைச் சார்ந்தவர்கள், சாராதவர்கள் அதன் வாடிக்கையாளர்களாக உள்ள நிலையில் இந்த வங்கி வெளியிட்டுள்ள மாதாந்திரக் காலாண்டரைப் பார்த்து அதிர்ச்சி அடைய நேரிட்டது.

மதச் சார்பற்ற ஓர் அரசின் நிறுவனம் வெளியிட்ட காலண்டராக அது தோற்றமளிக்கவில்லை.

மாறாக காஞ்சி மடத்தில் தயாரிக்கப்பட்டது போன்ற பஞ்சாங்கக் குப்பையாகவும், இந்துமத சம்பந்தப்பட்ட சமாச்சாரங்களின் அடங்கலுமாகவே இருக்கின்றன.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமை என்று குடிமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ள விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் (51A(h)
என்ற கோட்பாடு ஒன்று இருக்கிறது என்ற நினைப்புக் கொஞ்சம்கூட இல்லாத புராணக் குப்பைத் தொட்டியாக இந்தக் காலண்டர் வெளி யிடப்பட்டுள்ளது.

இராகு காலம், எம கண்டம், குளிகை என்பதோடு நிற்காமல் வாஸ்து நாள் வரை குறிப்பிடப்பட்டுள்ளது. அசல் கஞ்சனூர் பஞ்சாங்கமே தான்!

மாதம் ஒன்று வீதம் 12 தாள்கள் அடங்கியுள்ளன. அவற்றின் பின் பக்கங்களில் இடம் பெற்றுள்ள கிடைத்தற்கரிய சிறப்பான தகவல்கள் என்ன தெரியுமா?

1) யஷ்கானம் எனும் நாட்டியம்பற்றியது. அதைப் பற்றிய குறிப்புகள் என்னென்ன?

கதையில் நல்லவர்கள் கண்ணுக்கு இனிமையான வண்ணங்களிலும், தீயவர்கள் அல்லது ராட்சச வேடம் ஏற்பவர்கள் அதற்கேற்ற வண்ணங்களில் பயங்கரமாகத் தோற்றம் அளிக்கும் வகையில் ஒப்பனை செய்து கொள்கிறார்களாம்.

தீயவர்கள் அல்லது ராட்சசர்களாம் - இதன் பொருளைப் புரிந்துதான்வெளியிட்டு இருக் கிறார்களா? அல்லது அறியாமையின் அடிப்படையில் வெளியிட்டுள்ளார்களா?

புராணங்களில், இதிகாசங்களில் ராட்சசர்கள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டு இருக்க வில்லையா? தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டே அந்த நாட்டுக்குரிய மக்களைக் கேவலப்படுத்துவதை அனுமதிக்கலாமா?

இன்னொரு பக்கத்தில் குலசேகர ஆழ்வார் பற்றியதாகும். திருமாலைப் பற்றிப் புகழ்ந்து தள்ளும் பாடல்களும் - விளக்கமும் வெளியிடப்பட்டுள்ளன.

அடுத்த பக்கத்தில் இடம் பெற்றிருப்பது என்ன தெரியுமா? வாரணாசி என்னும் காசிபற்றி சிலாகித்துக் கூறப்பட்டுள்ளது.

கங்கைக்கு நிகரான நீருமில்லை. காசிக்கு நிகரான ஊருமில்லை என்ற பீடிகையுடன் இந்து மதத் தலப் புராணக் குப்பை கொட்டப்பட்டுள்ளது - பட விளக்கங்களுடன் அதோடு நிற்கவில்லை. முக்கியமாகக் குறிப்பிட்டு காட்டப்பட வேண்டியது ஒரு பக்கம் முழுவதும் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் பிரதாபங்கள் முழுக்க முழுக்க பல்வேறு தோற்றப் படங்களுடன்

தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறிய; சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டிய மகா குற்ற வாளிபற்றி அரசு வங்கி வெளியிட்ட காலண்டரில் சாங்கோ பாங்கோமாக வெளியிட்டது எந்த அடிப்படையில்?

இன்னும் உண்டு; அற்புதங்கள் ஆற்றிய திருஞானசம்பந்தர் பற்றி முழு பக்கத்தில் பல வகை படங்களுடன்;

சட்டப்படி நியாயப்படி இப்படி காலண்டர் வெளியிடப்பட்டதற்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இத்தகைய காலண்டர் அச்சிட்டதற்காக செலவு செய்யப்பட்ட பெருந் தொகையையும் சம்பந்தப்பட்டவர்களிட மிருந்து பறி முதல் செய்ய வேண்டும். இந்தியா முழுமைக்கும் என்றால் எத்தனைக் கோடி பிரதிகள் அச்சடிக்கப்பட்டு இருக்க வேண்டும்? அரசு செலவில் இந்துத்துவா பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. இதன் பின்னணியில் இந்துத்துவா சக்திகள் கண்டிப்பாக இருக்க வேண்டும் - நிதித்துறை இதுபற்றி முழு அளவில் விசாரணை நடத்திட ஏற்பாடு செய்ய வேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தில் கண்டுள்ள மதச் சார்பின்மை கொள்கைக்கு விரோதமாக நடந்து கொண்டதற்காக சட்டப்படியாக நடவடிக்கையையும் மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்; நடந்திருப்பது சாதாரண விஷயமல்ல!

ஸ்டேட் பாங்கு என்பது தனியாருடையதோ - குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவருடையதோ அல்ல - எல்லோருக்கும் பொதுவான அரசு சொத்து! அதனை முறை கேடாகப் பயன்படுத்தியுள்ளதால் சட்டப் படியான நடவடிக்கை அவசியம் தேவை! தேவை!!19-1-2013