Search This Blog

16.1.13

கும்பமேளா என்னும் குரூர விழா!


கும்பமேளா தொடங்கப்பட்டு விட்டது - 12 கோடி பக்தர்கள் நீராடப் போகிறார்களாம். இது 55 நாட்கள் நீடிக்குமாம். அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் இந்த அழுக்கு விழா அரங்கேற்றம்.

இதற்கு என்ன பின்னணியாம்? பாற்கடலைக் கடைந்தபோது அமுத கலசம் ஒன்று வெளிப்பட்டதாம். இதனைப் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் சண்டை போட்டுக் கொண்டார்களாம். இந்தச் சண்டையின் காரணமாக அமுதக் கும்பத்தில் இருந்த தேவாமிர்தத் துளிகள் சிந்தி விட்டனவாம். இந்தத் துளிகள் அலகாபாத், நாசிக், உஜ்ஜய்னி, அரித்துவார் ஆகிய இடங்களில் சிந்தினவாம். இப்படி கதை எழுதும் ஏடுகள் சர்வ விழிப்பாக - என்பது அய்தீகம் என்று நழுவிக் கொள்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கே தெரிகிறது இவை எல்லாம் அறிவுக்குப் பொருந்தாதவை - ஆனாலும் பாமர மக்களின் நம்பிக்கையோடு நாமும் அந்தச் சங்கமத்தில் சங்கமித்து விடுவோம் - பத்திரிகை விற்பனையும் கன ஜோராக நடக்கும் என்பது அவர்களின் திட்டம்.
கலசத்தில் இருந்து சிந்திய நான்கு ஊர்களும் புண்ணியதலங்களாம். இந்த நான்கு ஊர்களிலும் தான் கும்பமேளா நடக்கும்.

அலகாபாத்தில் (பிரயாகை என்றும் சொல்லுவர்) திரிவேணி சங்கமம் உள்ளது. இதில் கங்கையும், யமுனையும் சங்கமிக்கின்றன. எல்லோரும் நேரில் பார்க்கலாம். இதில் சரஸ்வதி நதியும் கலக்கிறது என்று பொய்க் கதையைக் கட்டி விடுகிறார்கள். அப்படி ஒரு நதியே கிடையாது என்பதுதான் புவியியல் உண்மையாகும். வரலாற்று ஆசிரியர்களும் சரஸ்வதி நதி என்றே கிடையாது என்று அறுதியிட்டு உறுதி செய்கிறார்கள்.  அரியானா பகுதியில் சரஸ்வதி நதி ஓடியது என்றும், அது ஆரிய நாகரிகத்திற்கானது என்றும் இட்டுக் கட்டி நிலைக்க வைப்பதற்காக ஆரியர் கட்டி விட்ட கதையாகும்.

கும்பமேளா என்றாலே நிர்வாண சாமியார்கள் தான் நினைவிற்கு  வருவார்கள். ஆண்களும், பெண்களும் புண்ணிய நீராடுகிறார்களாம் - நிர்வாண சாமியார்கள் சகிதமாக.

பக்தி என்று வந்து விட்டால் பெண்கள்கூட வழக்கமாக அவர்கள் அனுசரிக்கும் சுபாவக் கூறுகளைப் புறந்தள்ளி விடுவார்கள். பக்தி என்னும் போதை மூளையில் ஏறி அவர்களை கிறுகிறுக்க வைக்கிறது.

இவ்வளவுக்கும் இவர்கள் குளிக்கும் நதிகள் இருக்கின்றனவே -  அவை புண்ணிய நதிகளா, மரணக் குழிக்கு இழுத்துச் செல்லும் நோய்க் கிருமிகளின் ஒட்டு மொத்தமான கூடாரமா என்பதுதான் முக்கியமாகும்.
இந்தப் புண்ணிய நதியில்தான் நகரப் புறங்களின் சாக்கடைகள்  கலக்கின்றன. கங்கை நதியில் மட்டும் நாள் ஒன்றுக்கு 400 பிணங்கள் அரையும் குறையுமாக எரிக்கப்பட்டு  தூக்கி எறியப்படுகின்றன. அப்படி செய்வது  அவர் களுக்குப் புண்ணியமாம். கிழட்டுப் பசுக்களும் உயிரோடு இந்த நதியில் தள்ளப்படுகின்றன (இது பசுவதை இல்லையா? ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இதனை ஏன் எதிர்ப்பதில்லை? ஓ, பசுக்கள் எல்லாம் மோட்சத்துக்குப் போகின்றனவோ!)

1927, 1963, 1970 ஆகிய ஆண்டுகளில் காசி யிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் தொற்று நோய்ப் பற்றிக் கொண்டு பல்லாயிரக்கணக்கில் மக்கள் மாண்டு போனார்கள்.

இந்தியாவில் மற்ற மற்ற பகுதிகளில் எல்லாம் ஆயிரத்துக்கு  94 குழந்தைகள்  மரணிக்கின்றன என்றால் காசி வட்டாரத்தில் மட்டும் 13,394 குழந்தைகள் மரணம் அடைகின்றன என்பது எவ்வளவுப் பெரிய கொடுமை!

மக்கள் நல அரசு என்றால் இந்தக் கொடுமை யிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதே! மாறாக அரசும் மக்களின் மூடத்தனத்தோடு சங்கமிக் கிறார்களே! மக்களிடத்தில் விஞ்ஞான மனப் பான்மையைப் பரப்ப வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம்  சொல்லுகிறதே - அது வெறும் ஏட்டுச் சுரைக்காய் தானோ!
                 ------------------------"விடுதலை” தலையங்கம் 16-1-2013

10 comments:

தமிழ் ஓவியா said...


அழித்தாக வேண்டும்


மக்களைச் சுயமரியாதை இல்லாமல் செய்து மிருகங் களாக்கி நாய், பன்றிகளைவிட இழிவாய் நடத்த ஆதாரமாய் இருக்கும் மதம் எது வானாலும் அதை அழித்தாக வேண்டும்.
(குடிஅரசு, 18.12.1927)

தமிழ் ஓவியா said...


முயன்றால் முடியாததும் உண்டோ?


அண்மையில் படித்த ஒரு புத்தகத்தில் கூறப்பட்ட கருத்துக்கள் என்னைப் பெரிதும் ஈர்த்தது. அசை போட்டுச் சிந்திக்க வைத்தது. தமிழ்ப் புத்தாண்டாம் தை பிறந்துள்ளது; தை பிறந்தால் புது வழி பிறக்கும் என்ற நம்பிக்கை பிறக்கத்தானே செய்கிறது? அதையொட்டி நாம் எல்லோரும் புரிந்து கொண்டு பின்பற்ற வேண்டிய ஓர் அன்றாட வாழ்வியல் நடைமுறை ஒன்று உண்டு.

ஒவ்வொரு நாளும் அமைதி நேரம் என்று சில மணித்துளிகளை ஒதுக்கி, தனிமையில் எவ்வித சலனமும் இன்றி - தொலைக்காட்சித் தொடங்கி, கைத் தொலைபேசிகளின் அலறல், நண்பர் களின் தொணதொணப்பு, நாமே மற்றவரிடம் சென்று வம்பளத்தல், எதுவும் இன்றி - மிகவும் அமைதியாக ஓர் இடத்தில் ஒதுக்கமாக அமர்ந்து எந்தவித எண்ணத்தையும்பற்றி மனதை அலையவிடாமல் இருந்து அந்த அமைதியை அனுபவிக்க பழகிக் கொள்ளுங்கள்.

சிலர் 10 மணித்துளிகள் தனித்த நிலை (ஆநனவையவடி) அல்லது யோகா என்று கூறிய மூச்சுப் பயிற்சி, அல்லது இயற்கை பூங்காக்களான மரம், செடி, கொடிகளைப் பார்த்து அந்த மகிழ்ச் சியைத் தேக்கிக் கொளல், ஏதும் இல்லையா, குளிரின் அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டு ஓசையில்லாமல் அமைதியாக இருத்தல் போன்று தனிமையை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

(முன்பு எல்லாம் குளியல் அறை, கழிப்பறைகளிலாவது தனிமை வேறு ஓசை இல்லாமல் இருந்தது; அந்த சுதந்திரத்தையும் கைத் தொலைபேசி இப்போது பறித்து விட்டதே!) குளிப் பதில்கூட மகிழ்ச்சியாக குளிக்கவும், அந்த அமைதி நேரத்தைச் செலவிடுவது எல்லாம் நமக்கு புத்துணர்வைத் தருவதற்கும், மனக் குழப்பங்களிலிருந்து விடுபட்டு, எந்தப் பிரச்சினைக்கும் சரியான தீர்வைக் கண்டறிவதற்கும் உதவிடக் கூடும்.

மன அமைதி - உள்ளார்ந்த அமைதி ஒவ்வொரு மனிதருக்கும் பயன்படும் ஓர் அருமையான டானிக் ஆகும். இழந்த மின்சக்தியை ஏற்ற எப்படி ரீசார்ஜ் தேவைப்படுகிறதோ, அதுபோல களைப்பு, சோர்வு, சோம்பல், அசதி - இவற்றுக் கிடையே சிக்கி அவதியுறும் நாம் அதிலிருந்து விடுபட்டு சுறுசுறுப்புடன் செயல்பட இந்த அமைதி நேரம் ஒரு செலவில்லா மருந்தாகும்!

சில நண்பர்கள் வழமையாக சொல் லும் ஏற்க இயலா சமாதானங்கள் - பதில்களில் ஒன்று எனக்கு நேரமே இல்லீங்க என்பது!

என்னே கொடுமை? இப்படி நேரத் தின்மீது நாம் பழி போட்டு தப்பிக்க முயலலாமா?

உலகில் உள்ள எல்லோருக்கும் உள்ளது 24 மணி நேரம் தானே - ஒரு நாளில்! பின் இப்படி ஒரு மழுப்பல் பதில்?

வேலை நேரத்தில்கூட, அது முடிந்து உடனே யாருக்கும் தொந்தர வில்லாமல், அங்கேயே ஒரு மூலையில் அமர்ந்து அமைதி நேரத்தை உருவாக்கிக் கொள்ள முடியாதா?

காரில் திரும்பும் பணிபுரிவோர் வழியில் காரை ஓட்டுவதை நிறுத்தி அமைதியான இடத்தில் இறங்கி நின்றோ, உட்கார்ந்தோ இயற்கை எழிலை அமைதி - நிர்மலமான - நிசப்தமான இடத்தில் சிறிது நேரத்தைக் கழித்துத் திரும்பலாமே!

24 மணி நேரத்தில் 15 நிமிடம் உங் களால் ஒதுக்க முடியாதா? கண்ணை மூடிக் கொண்டு உள்மூச்சு இழுத்து, வெளி மூச்சை விட்டு ஒரு பயிற்சியில் ஈடுபடவா முடியாது? முடிவு எடுங்கள், முயலுங்கள்; முயன்றால் முடியாததும் உண்டோ?- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்கவேண்டும்: திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை


மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மீதான வழக்குகளை
மத்திய அரசின் உள்துறை விரைந்து நடத்தி குற்றம் புரிந்தோரைத் தண்டிக்க ஆவன செய்ய வேண்டும்
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

போக்குவரத்து நெரிசல் குறைந்து பத்திரமாகப் பயணம் செய்யலாம் வெளிநாடுகளில், வடமாநிலங்களிலும் இம்முறை பின்பற்றப்படுகிறதே!

மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மீதான வழக்குகளை மத்திய அரசின் உள்துறை விரைந்து நடத்தி குற்றம் புரிந்தோரைத் தண்டிக்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப் பட்ட இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ்.காரர்களான ஜோஷி, லோகேஷ் சர்மா முதலிய பார்ப் பனர்கள் அதில் மட்டுமல்லாமல், அய்தரா பாத்தின் மெக்கா மஜிஸ்த் ஆஜ்மீர்தர்கா குண்டுவெடிப்புகளிலும் சம்பந்தப்பட்டு, அதற்கு மேலும் குஜராத் கலவரத்தை திட்டமிட்டே அங்கே நிகழ்த்திவிட்டு, முஸ்லீம்கள்மீது பழியைப் போட்டு விட்டு செயலை மிகவும் பக்குவமாகச் செய்துள்ளார்கள்!

2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த சம்ஜுத்தா எக்ஸ்பிரஸ் கோத்ரா ரயில் எரிப்பில் 50 கரசேவகர்களைக் கொன்ற சதி நிகழ்விலும் இதே லோகேஷ் சர்மா, ஆர்.எஸ்.எஸ். முக்கியப் புள்ளியான ஜோஷியின் ஆணைப்படி அதிலும் கலந்து கொண்டு தனது பங்களிப்பைச் செலுத்திடத் தவறவில்லை என்ற திடுக்கிடும் தகவல் நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (NIA) மூலம் கிடைத்துள்ளதாக 13.1.2013 டைமஸ் ஆஃப் இந்தியா நாளேடு தெளிவாக வெளியிட்டுள்ளது.

டில்லி பாலியல் வன்கொடுமைக்கு உடன் தீர்ப்பு வர வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

மும்பை ஹோட்டலில் பாக். தீவிரவாதிகள் நடத்திய திட்டமிட்ட, உடனே தூக்கில் போட வேண்டும் என்பவர்கள், நாடாளுமன்றக் கட்டடம் தாக்கப்பட்ட வழக்கில் பிடிபட்டவர்கள் - கசாப்புகள் போன்றவர்கள் உடனே தண்டனையை நிறைவேற்றுங்கள் என்று துள்ளிக் குதிக்கும் பா.ஜ.க., மற்றும் வலது சாரி தீவிரவாதிகள் - இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ். படைகள் இந்த மாதிரி வழக்குகளில் சிக்கியவர்கள்மீது ஏன் நீதி விசாரணை - வழக்குகள் - நத்தை வேகத்தில் நகர வேண்டும்?

பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமான குற்றவாளிகளான பிரபல ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., முன்னணித் தலைவர்கள் குற்றப் பத்திரிக்கையில் இடம் பெற்று வழக்கு - விசாரணை ஜவ்வு மிட்டாய் மாதிரி ஏன் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆக வேண்டும்? வெள்ளி விழா வரட்டும் என்று மத்திய அரசு காத்திருக்கிறதோ என்ற கேள்வி பொதுநல ஆர்வலர்களிடமிருந்து நீண்ட காலமாகவே கிளம்பி நிலை கொண்டு, இன்னமும் விடை கிடைக்காதவைகளாக இருக்கிறது.

தீவிரவாதம் என்றாலே இஸ்லாமி யர்கள்தான் என்பது போன்ற ஒரு படத்தை நாடு முழுவதும் ஊடகங்களும், இத்தகைய மதவெறி அரசியல்வாதிகளும் வரைந்து காட்டுவதில் பெரு வெற்றி அடைந் துள்ளார்கள்.

மத்தியில் உள்ள அதிகார வர்க்கம் முழுக்க இதில் காவி உணர்வு கொண்ட உயர் ஜாதியினராகவே உள்ளதால், காவல்துறை, விசாரணைத் துறையில் முன்பிருந்த பா.ஜ.க. ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட தங்கள் ஆதரவு, அனுதாபங் கொண்ட பலரும், அதே போல நீதித்துறையில் அந்த ஆட்சி பருவத்தில் இடம் பெற்றவர்களும், தற்போதுள்ள ஆட்சியின் கீழ் பணிபுரியும் பல உயர் அதிகாரிகள் நீதித்துறையில் உள்ளோரும், ஒரு வேளை அடுத்து அவர்கள் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வது என்று மனதிற்குள் கணக்குப் போட்டு, செயலை மந்தப்படுத்துவதும் தான் இந்த மெத்தனத்திற்கு முக்கியக் காரணங் களாக இருக்க வேண்டும்!

நீதி வழங்குவதில், குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்தி தண்டனை வழங்குவதில் ஏன் இரட்டை மனப்பான்மையான ஜாதிய மனுதர்மப் பார்வை இருக்க வேண்டும்?

தாங்களே முன்னின்று கலவரங்கள், தீ வைப்புகள், மக்களை அழிக்க வெடிகுண்டு களை நட்டு வைத்து வெடிக்கச் செய்து, பழியை பிற மக்கள்மீது போட்டு, மதக் கலவரங்களைத் தூண்டுவதில் மிகப் பெரிய தேசியக் குற்றம் - சமூக விரோத நடவடிக்கை வேறு உண்டா?

எனவே மத்திய அரசின் உள்துறை இந்த வழக்குகளை விரைந்து நடத்தி குற்றம் புரிந்தோரைத் தண்டிக்க ஆவன செய்ய உடனே முன்வர வேண்டும்.


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 16.1.2013

தமிழ் ஓவியா said...

விஷம் கக்கும் வேதிய விரியன் பாம்பு


ஒன்று தமிழர்களின் தேசியத் திருநாளான பொங் கலன்று பொங்கிப் பிரவாகித்துள்ளது. அந்த நல்ல' பாம்பு வேறு யாருமல்லர். திருவாளர் சோ' இராமசாமிதான்.

(1) காங்கிரசில் ஊழல்வாதிகள் அதிகம்; ஆனால் பா.ஜ.க.வில் நேர்மைவாதிகள் அதிகமாம்.

எந்த அளவு மீட்டரை வைத்துச் சொல்லுகிறார். அவாளுக்கே வெளிச்சம். இராமாயண காலத்திலிருந்து - மனுவாதி காலத்திலிருந்து ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் குல்லூகப் பட்டர் கும்பலாயிற்றே!

(1) மகா யோக்கியர் அடல் பிஹாரி காலத்தில் என்ரான்' ஊழலில் ஆரம்பித்து பெங்களூரு எடியூரப்பா காலந்தொட்டு ஊழல் சாக்கடை யார் என்று தெரியாதா?

(2) அடுத்தவன் மனைவியை என் மனைவி என்று கூறி வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பிய கும்பல் எது?

(3) பெரிய முதலாளிகளிடத்தில் பெருந்தொகை பெற்றுக் கொண்டு, அவர்களுக்காகக் கேள்வி கேட்டதில் முதல் பரிசைத் தட்டிச் சென்றது பா.ஜ.க.வின் பார்ப்பனக் கும்பல்தானே!

(4) சவப்பெட்டியில் கூட ஊழல் செய்யக் கூடிய ஒண் ணாம் நம்பர் பேர்வழிகள் யார்? யார்? யானை லத்தியில் என்ன முதல் லத்தி, இரண்டாம் லத்தி? ஊழல் செய்வதில் காங்கிரஸ் அதிகம் - பிஜேபி கொஞ்சம் என்று சொல்லு வதன் மூலம் ஊழல் முத்திரையிலிருந்து சோவாலேயே' பிஜேபியைக் காப்பாற்ற முடியவில்லை என்றுதானே பொருள்?

(5) ஊழல் என்பது வெறும் பணப் பிரச்சினைதானா?

மதச்சார்பின்மை கூறும் இந்திய அரசமைப்புச் சட்டத் தின்மீது சத்தியம் கூறிப் பதவிப் பிரமாணம் எடுத்த பிஜேபி கும்பல் 450 ஆண்டு கால வரலாற்றுப் புகழ் பாபர் மசூதியை இடித்தது எந்த அடிப்படையில் சரி? தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த வழக்கிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள முயன்றாரே அத்வானி, அதற்கு என்ன பெயராம்?

உலக நாடுகளின் முன் வெட்கித் தலை குனியச் செய்ய வில்லையா? பாபர் மசூதி இடிப்பு வழக்கை நேர்மையான முறையில் சந்திக்கத் திராணியின்றி 20 ஆண்டுகாலமாக ஓடி ஒளிந்து திரியும் கேவலத்திற்கு என்ன பெயர்?

(1) குஜராத் முதல்வர் மோடிக்குப் பிரதமர் ஆகும் எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன என்கிறார், சோ.

ஆமாம். இந்தியாவுக்கு ஒருவர் பிரதமராகும் தகுதி என்ன தெரியுமா? இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறு பான்மை மக்களைக் கொன்று குவிக்க வேண்டும்.

(2) சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்களை வன்புணர்ச்சி செய்யத் தங்குதடையற்ற லைசென்சு கொடுக்கப்பட வேண்டும். கர்ப்பிணிப் பெண்களாக இருந்தால் அவர்களின் வயிற்றைக் கிழித்து, அந்தச் சிசுவைத் தீயில் பொசுக்கிக் குத்தாட்டம் போட வேண்டும்.

இப்படிப்பட்ட 'வீராதி வீரர்', 'சூராதி சூரர்' மோடியன்றி - இந்தியாவுக்குப் பிரதமர் ஆக வேறு தகுதியுள்ள ஒருவர் கிடைப்பது என்பது அரிதினும் அரிதாயிற்றே.

இன்னொன்று, அப்படிப் பிரதமர் ஆகக் கூடியவர் உச்ச நீதிமன்றத்தில் நீரோ மன்னன் என்று மகுடம் சூட்டப்பட வேண்டும். சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சக அமைச்சர் 28 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனை பெற்றிருக்க வேண்டும்.

வெளிநாட்டு அரசுகள் அப்படிப்பட்ட பேர்வழிக்கு விசா மறுக்கும்' அளவுக்கு அநாகரிக ஆட்சி புரிந்தவராக இருக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

(1) அதிமுக ஆட்சியில் ஆசிரியர்கள் நியமனம், அரசு ஊழியர் நியமனம், போலீஸ் தேர்வு ஆகியவற்றில் எந்த ஒரு புகாரும் நிகழவில்லை, தமிழ்நாடு தேர்வாணையத் தலைவராக நட்ராஜ் நியமிக்கப்பட்ட பின் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். இதுவும் சோ'வின் காண்டக்ட் சர்டிபிகேட்' - அதிமுக ஆட்சிக்கு.

(2) தனது ஆட்சி வந்தவுடன் அதற்கு முந்தைய ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டவர்களை ஆயிரக்கணக்கில் சீட்டுக் கிழித்து அனுப்பி ஆனந்தப்பட வேண்டும். பல்லாயிரக்கணக் கான மக்கள் நடுரோட்டில்' நிற்க வேண்டும். அல்லது பல குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.

இந்தப் பாதிப்புப் பட்டியலில் எந்த ஒரு பார்ப்பானும் இடம் பெறப் போவதில்லையே.

நட்ராஜ் தேர்வாணையத் தலைவராக வந்ததும் நிருவாகம் அவ்வளவு சுத்தமாம்!. தேர்வின்போது கேள்வித்தாள் அவுட்' என்ற சாதனையை விஞ்ச வேறு சாதனை உண்டோ சொல்வீர்!

உதயசந்திரன் அய்.ஏ.எஸ். என்ற நேர்மையான அதிகாரியை தேர்வாணையத்திலிருந்து வெளியேற்றிய மர்மம் என்ன? சோ' கும்பலுக்குத்தான் வெளிச்சம்.

இப்பொழுது கூட தமிழ்வழியில் படித்தவர்களுக்குப் பணியமர்த்தம் செய்வதில் ஏகப்பட்ட குளறுபடிகள். ஆயிரம் இருந்தாலும் நட்ராஜ் தோளில் பூணூல் தொங்குகிறதே - சோ'வின் பேனா புகழ்மாலை தொடுக்கத்தானே செய்யும்!

(1) அ.தி.மு.க. ஆட்சியில்தான் சட்டம் ஒழுங்கு சீரடைந்து இருக்கிறதாம் - பேசி இருக்கிறார் சோ.

இதைச் சொல்லாமல் இருந்திருந்தால் கூட ஓ, 'சோ' சொல்வதில் கொஞ்சம் உண்மை இருக்குமோ என்று சில அப்பாவிகள் நம்பக் கூடும்.

அதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு அழகைச் சிலாகித் துள்ளாரே - இது ஒன்று போதும் சோ' என்பவர் மிகப் பெரிய பொய்யர் என்று விளங்கிக் கொள்வதற்கு. பொழுது விடிந்து பொழுது போனால் கொலை, கொள்ளை, திருட்டு என்ற வைபவங்கள்' தானே ஏடுகளை ஆக்ரமித்துள்ளன?

டில்லியில் ஒரு மாணவியின் பாலியல் வன் கொடுமைக்குஆளான செய்தியால் நாடே கிடுகிடுத்ததே. அதிமுக ஆட்சியில் எத்தனை எத்தனைக் கொடூரங்கள் இந்த வரிசையில். பார்ப்பன ஊடகங்கள் அந்தச் செய்திகளைக் கழுத்தை நெரித்துக் குழியில் போட்டு மூடி விட்டனவே!

சோவும், அவரின் துணைவியாரும் அக்னிக் கரங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட அம்மையாரின் ஆட்சியாயிற்றே - காப்பாற்ற வேண்டாமா?

மத்திய அமைச்சரவையில் தி.மு.க. இடம் பெற்றிருந்தும் தமிழன் நலம் சார்ந்த காவிரி, முல்லைப்பெரியாறு, மத்தியத் தொகுப்பிலிருந்து மின்சாரம் ஆகியவற்றைப் பெற்றுத் தரவில்லையாம்.

(1) மத்திய ஆட்சியில் அதிமுக இருந்தபோது காவிரி நீர்ப் பிரச்சினையைத் தீர்த்ததா?

மத்தியில் அதிமுக ஆட்சி இருந்த காலத்தில் அந்தக் காலகட்டம் எனக்குப் பெரிதும் மன உளைச்சலை ஏற்படுத்திய காலகட்டம் என்ற பிரதமர் வாஜ்பேயிக்கு சோ'வின் பேச்சு சமர்ப்பணம் ஆவதாகுக.

தமிழர்களின் நீண்டகால கனவுத்திட்டமான தமிழர்கள் நலன் சார்ந்த சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை - ராமன் பாலம் என்று சொல்லி முடக்கும் கூட்டமா, தமிழ்நாட்டின் நலன் பற்றிப் பேசுவது?

(2) கருணாநிதி சங்கர மடத்தை அடிக்கடி இழுப்பார். அங்கு யாரும் வாரிசுகளை நியமிப்பது இல்லை. சிறுவனாக இருக்கும்போது வேதங்கள் அறிந்திருக்க வேண்டும். குடும்பத்தில் பாசம், ஆசை இல்லாதவராக இருக்க வேண்டும். பல கட்டுப்பாடுகள் இருக்கின்றனவாம் - இதுவும் சோ'வின் பேச்சுதான்.

(3) அப்படி எல்லாம் 'பொறுக்கி' எடுக்கப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார்கள் கதை கூவத்தை விட நாறவில்லையா?

காமகோடிகளின் காம விகாரத்தை பார்ப்பனப் பெண் எழுத்தாளரான அனுராதா ரமணனை அல்லவா கேட்க வேண்டும்!

ஜெயலலிதாவைப் பாராட்டும் திருவாளர் சோ' காஞ்சி சங்கராச்சாரியார்களை எதற்காக கைது செய்து ஜெயிலில் தள்ளினாராம்?

உப்புக்கண்டம் பறிகொடுத்த பழைய பாப்பாத்தி போல முழிக்கிறார் திருவாளர் சோ'.

மானமிகு கலைஞர் அவர்கள் காலத்தில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு, தமிழ் செம்மொழி அங்கீகாரம், சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதப் பார்ப்பனர்களின் சுரண்டலிலிருந்து மீட்பு, சிதம்பரம் கோயிலில் தேவாரம், திருவாசகம் பாடலாம் என்ற ஆணை - வடலூர் வள்ளலாரின் சத்ய ஞானசபையிலிருந்து பார்ப்பனரை வெளியேற்றியது - பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் - இவையெல்லாம் சூத்திரக்' கலைஞரின் சூத்திரர்' பண்பாட்டுக்கான - தந்தை பெரியார் கொள்கை வழிச் செயல்பாடுகள் அல்லவா? சோ' பாம்பு விஷம் கக்காமல் என்ன செய்யும்?

தமிழன் தன் தோலைக் கிள்ளிப் பார்த்தாவது சொரணை பெற வேண்டாமா?

தமிழா, இனவுணர்வு கொள்!

தமிழா, தமிழனாக இரு!!


- மின்சாரம் - 16-1-2013

தமிழ் ஓவியா said...


சென்னை புத்தகக் காட்சி: - ஒரு பார்வை


"புத்தகங்கள்தான் என் உண்மையான நண்பன் என்றும், புத்தகங்களுக்குச் செலவிடுவ தால் என்னை ஊதாரி என்றாலும் அதற்கு கவலைப்படமாட்டேன்" என்றார் ஓர் அறிஞர். இது உண்மை என்றுதான் தெரிகிறது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 36 ஆவது புத்தகக் காட்சி தொடங்கியிருக்கிறது. ஜனவரி 11 முதல் 23 வரை தினமும் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி, இரவு 9 மணிக்கும், விடுமுறை நாள்களில் காலை 11 மணிக்கும் தொடங்குகிறது.

பொங்கல் நிகழ்ச்சியும், புத்தகக் காட்சியும் சற்றொப்ப 750 புத்தகக் கடைகள் அறிவை விசாலமாக்குகின்றன. பொதுவாகத் தமிழர்கள் ஆண்டிற்கு நாற்பது, அய்ம்பது விழாக்களைக் கொண்டாடுகின்றனர். இதில் நம்முடையது என்றால் "பொங்கல்" மட்டுமே தங்கி நிற்கும்.

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் சென்னையில் வாழ்கிறார்கள். இவர்கள் மற்ற விழாக்களுக்குச் சொந்த ஊர் செல்கிறார்களோ இல்லையோ தமிழர் திருநாள் பொங்கலுக்குக் குடும்பம் குடும்பமாகச் செல்வர். அதுசமயம் சென்னையே பாதியாகிவிடும்.

இந்த நேரத்தில்தான் ஒவ்வோர் ஆண்டும் புத்தகக் காட்சி தொடங்குகிறது. ஆனாலும் மக்கள் கூட்டம் குறையவில்லை. புத்தகக் காட்சியின் இடத்தை அவ்வப்போது மாற்றி னாலும், தேடிப் பிடித்து அசர வைக்கின்றனர் நம் மக்கள். இரண்டொரு நாளில் விடுமுறைக் கழித்து வரும் மக்களும் திரள், திரளாகச் சென்று மேலும் மெருகூட்டுவர்.

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டிற்கே பெரியார் பாதை

புத்தகக் காட்சியை மக்கள் இப்படிக் கொண்டாடுவது, பிற மாநிலங்களில் இருக்குமா எனத் தெரியவில்லை ?

ஆனால் தமிழ்நாட்டில் கல்வியாளர்களும், குறைந்தபட்சம் படித்தவர்களும் மிகுதி. இந்த இடத்தில் பெரியாரையும், காமராசரையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கலாம்.

புத்தக அரங்குகளை விசாலமாக உருவாக்கி, நுழைவுக் கட்டணத்தை வெகுவாகக் குறைவாக் கிப் பார்வையாளர்களைக் குளிர்விக்கிறார்கள்.

தானியங்கி பணம் பெறும் வசதி, அரங்கம் குறித்தும், புத்தகங்கள் குறித்தும் முழுமையாக அறிந்து கொள்ள தொடு திரை கணினி வசதி, விற்பனையாளர்களுக்குத் தேவையான சில்லறை வசதி எனக் கூடுதல் சிறப்பைப் பெறுகிறது இப்புத்தகக் காட்சி .

மொத்தம் 15 வரிசைகள் அமைத்து, எண் ணற்ற விற்பனை நிலையங்கள் அரங்கை அழ குறச் செய்கின்றன. ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு தலைவரின் பெயரைச் சூட்டியுள்ளனர். அதாவது வரிசை எண் - 10, பெரியார் பாதை என எழுதியிருக்கிறார்கள். ஒரு உதாரணத்திற்காக நாம் பெரியார் பாதை என எழுதியிருக்கிறோம். ஆனால் அங்கு பெரும்பாலும் "நூலோர்" பெயர்தான் இருக்கிறது. தமிழ்நாட்டிற்கே பாதை அமைத்தவர் பெரியார்தான் என்பது அங்குள்ள மக்களுக்குத் தெரியாதா என்ன ?

புத்தகம் கேட்கும் குழந்தை

சற்றொப்ப 750 புத்தகக் கடைகளைத் துறை வாரியாகப் பிரித்தால் பொதுத் தன்மையுடையவை நிறைய இருக்கின்றன.

கல்வி, ஆங்கிலம் மற்றும் குழந்தை நூல்களும் அதிகம் காணப்படுகின்றன. ஆன்மிகம் சார்ந்த நூல்கள் ஆங்காங்கே இருந்தாலும், ஆன்மீகத்திற்கு என்றே அமைக்கப்பட்டுள்ள தனி நிலையங்கள் ஜனவரி குளிரில் மேலும் காற்று வாங்குகின்றன.

இப் புத்தகக் காட்சிக்கு மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து குவிகின்றனர்.பெரியார் புத்தக நிலையத்தைக் கடந்து சென்றது ஒரு குடும்பம். பத்து வயதுள்ள ஒரு சிறுமி, "அப்பா ! அப்பா ! எனக்கு ஒரு புத்தகம் வாங்கிக் கொடுப்பா!", எனக் கெஞ் சலாகக் கேட்டது. பொம் மைக் கேட்கும் வயதில், புத்தகம் கேட்கிறது குழந்தை. வாங்கிக் கொடுத் தால் அது வளர்ந்து கொள்ளும்!

நவீனமான பெரியார் புத்தக நிலையம் எண் - 227 இல் அமைந் திருக்கிறது பெரியார் புத்தக நிலையம். சீரு டையில் இருக்கிறார்கள் தோழர்கள்! இடாப்புகள் (பில்) "பார் கோடு" மூலம் பதிவு செய்யப்பட்டு, இயந்திரம் மூலம் வெளியாகிறது. அழகழகான வடிவமைப்பில், விதவிதமான விளம்பரங்கள் ஒரு தனித்தன்மையை ஏற்படுத்துகின்றன.

புத்தக நிலையத்திற்கு முன்பு அழகான பொங்கல் பானை வைத்து, அது பொங்குவது போல வைத்து, ஆறு கரும்புகளை அதனருகே வைத்துத் தமிழர் திருநாளை மேலும் செழு மைப்படுத்தியிருந்தது பெரியார் புத்தக நிலை யம். அதனருகே நின்று ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர் சிலர்.

பெரியார் பொங்கல்

பொங்கல் அன்று புத் தகக் காட்சியில் பலருக் கும் பொங்கல் கொடுக் கப்பட்டது. "டப்பாவில்" வைத்து, அது மூடப் பட்டு, சிறிய கரண்டியு டன் 750 கடைகளுக்கும் வழங்கப்பட்டது. அது தவிர பெரியார் புத்தக நிலையத்திற்கு வந்தோருக் கும், அவ்வழியே கடந்தோருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. "இது என்ன ?", என அவர்கள் கேட்ட போது தோழர்கள் சொன்னார்கள் இதுதான் "பெரியார் பொங்கல்!" இந்த இனிப்பில் கூட ஓர் கசப்பு! பொங்கலால் ஏற்பட்ட தங்கல்! பெரியார் புத்தக வரிசையில் ஒரு புத்தக நிலையம் இருக்கிறது.

அவை இந்து மதத்தை வலியுறுத்துகிற, பார்ப்பனீயப் புத்தகங்கள். அங்கு சென்று நம் தோழர்கள் பொங்கல் கொடுத்த போது, அங்கிருந்தவர் வாங்க மறுத்து, நான் சாப்பிட மாட்டேன் என்று சொன்னதோடு, மேலும் சில விமர்சனங்களும் செய்துள்ளார்.

நம் தோழர்கள் மறுபேச்சின்றி அமைதியோடு வந்துவிட்டார்கள். நம்முடைய தோழமையும், அவர்களின் வெறுப்பும் எப்படி இருக்கிறது என்பதற்கான சான்று இது.

எனக்கான புத்தகங்கள்

பெரியார் புத்தக நிலையத்தைக் கடந்து செல்வோருக்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு, அய்யா வாருங்கள்! உள்ளே வந்து பாருங்கள் !

தமிழ் ஓவியா said...


- என நம் தோழர்கள் அழைக்கும் போது, அந்த மரியாதையை ஆச்சரியத்தோடும், ஆவலோடும் ஏற்கிறார்கள்! நெற்றியில் நாமம் போட்டு ஒருவர் வந்தார். அவர் அய்யங்காராக இருக்கலாம்; அம்பாசிடர் காராக இருக்கலாம். கடவுள் ஒரு பொய் நம்பிக்கை என்ற நூலும், கீதையின் மறுபக்கமும் கொடுங்கள் என்றார். மகிழ்ச்சி யோடு எடுத்துக் கொடுக்கப்பட்டது.

ஒருவர் 10 புத்தகங்கள் எடுத்துக் கொண்டு "தொகை எவ்வளவு?" என்றார். ரூபாய் 190 என்றதும், "அட! இவ்வளவுதானா?" எனக் கேட்டுக்கொண்டே மேலும் 100 ரூபாய்க்கான புத்தகங்களை அள்ளி வந்தார். காவி வேட்டி அணிந்த சிலர், கை நிறையப் புத்தகம் வாங்கிச் சென்றனர்.

இவையெல்லாம் வழக்கமாக நம் நிலையத்தில் நடப்பவைதான். பெரியார் செய்து வைத்த அதிசயங்கள் இவை!

பெரியார் புத்தக நிலையத்தை நோக்கி ஒரு இணையர் வந்தனர். வந்ததும் அக்கணவர் வேறு இடத்திற்குப் போய்விட்டார்.

அப்பெண்மணி மட்டும் பெரியார் நூல்களை வாங்கிக் கொண்டார். சிறிது நேரத்தில் அப் பெண்ணின் கணவர் வேறு சில நூல்களோடு வந்தார். அதைப் பார்த்த அப்பெண்மணி சொன் னார்,"நீங்கள் உங்கள் துறைச் சார்ந்து வாங்கி யுள்ளீர்கள். நான் என் துறை சார்ந்து வாங்கி யுள்ளேன்", என்றார் சிரிப்போடு ! அதாவது நான் பகுத்தறிவுத் துறை என்கிறார் அப்பெண். இவை "எனக்கான புத்தகங்கள்" என அப்பெண்மணி கூறியபோது, அவரிடம் மகிழ்ச்சியையும், தோழர் களிடத்தில் பெருமையையும் காண முடிந்தது.

நவீனமான பெரியார் புத்தக நிலையம்

ஒற்றைக் கேள்விக்கே ஓடிப்போனவர்

பெரியார் புத்தக நிலையத்தைக் கடந்து எல்லோரும் செல்கிறார்கள். கூடவே பார்ப்பனர் களும் போகிறார்கள். போகட்டும், நமக்கொன்றும் அதில் சங்கடமில்லை. ஆனால் ஒரு பார்ப்பனர் நம் புத்தகங்களை மேலும், கீழும் பார்த்துக்கொண்டே சென்றார். சென்றுவிட்டார் என்று தான் நினைத்திருந்தோம், ஆனால் திரும்பி வந்துவிட்டார்.

நம் தோழர்களைப் பார்த்து, "ஏன் பொங்கல் பானை, கரும்பு எல்லாம் வைத்துள்ளீர்கள் ? உங்களுக்குத்தான் கடவுள்; இல்லையே ?",

- என்று கேட்டார். நம் தோழர்கள் சிரித்தார்களே தவிர, பதில் சொல்லவில்லை. காரணம் கேள்வியில் தகுதி இல்லை.

மீண்டும் அவர், "அது என்ன பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி? என எழுதியுள்ளீர்கள். பறையர் புரட்டுக்குப் பதிலடி என எழுத முடியுமா? எனக் கேட்டார். தோழர்கள் அமைதியாகச் சொன்னார்கள். "பறையர் என நீங்கள் சொல்லக் கூடியவர்கள் இந்த நாட்டிற்கு எந்தக் கெடுதலும் செய்யவில்லை. உங்களால் முடிந்தால் பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி எனும் நூலுக்கு மறுப்பு எழுதிப் பாருங்கள்" என்றனர். ஒன்றுமே சொல்லாமல் ஓடிப்போனார்.

வாசகர்களுடன் சந்திப்பு பெரியார் புத்தக நிலையத்தில் தினமும் விடுதலை நாளிதழ் அன்பிதழாக வழங்கப்படுகிறது. புத்தக நிலையம் தேடி வந்து விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு சந்தாக்களை வழங்கிச் செல்கின்றனர். அதுமட்டுமின்றி தினமும் மாலை வேளையில், பெரியார் புத்தக நிலையத்தில் வாசகர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங் குன்றன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை அமைப்பாளர் சுப.வீரபாண்டியன், சு.அறிவுக்கரசு, துரை.சந்திரசேகரன், அ.அருள்மொழி, மஞ்சை வசந்தன், டெய்சி மணியம்மை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

புத்தகங்களால் என்ன கிடைக்கும் ?

புத்தகங்களால் எல்லாம் கிடைக்கும்! புத்தகங் களைத் தொடர்ந்து படிக்கும்போது, உங்களுக்கே அது பிடிக்கும்!

புத்தகம் வாசிப்பதனால் அறிவு, ஆற்றல், சிந்தனை, உணர்ச்சி, மகிழ்ச்சி, கோபம், வேகம் என எல்லாமும் கிடைக்கும்.

தமிழர்கள் அனைத்தையும் பெற, புத்தகங் களைப் பெற வேண்டும்!

தொகுப்பு: வி.சி.வில்வம்

தமிழ் ஓவியா said...

கேள்வி - பதில் சித்திரபுத்திரன்

கடவுள்

கேள்வி: கடவுள் எங்கே இருக்கிறார்?

பதில்: முட்டாள்கள் உள்ளத்தில் இருக்கிறார்.

கேள்வி: கடவுள் எப்போது ஏற்படுத்தப்பட்டார்?

பதில்: மக்கள் காட்டுமிராண்டிகளாய், முட்டாள்களாய் இருந்த காலத்தில்.

கேள்வி: கடவுள் பக்தி எங்கே இருக்கிறது?

பதில்: சிறிது பாகம் மடையர்களிடத்திலும், பெரும் பாகம் அயோக்கியர்களிடத்திலும் இருந்து வருகிறது.

கேள்வி: கடவுளைப் பரப்புவதற்கும், பாதுகாப்பதற்கும் பாடுபடுபவர்கள் யார்?

பதில்: சிறு அளவு மூடர்களும், பெரும் அளவு பார்ப்பனர் களுமேதான்.

கேள்வி: நமது நாட்டில் கடவுள்களால் ஏற்பட்ட பலன் என்ன?

பதில்: ஜாதிப் பிரிவும், பார்ப்பனர் உயர்வும், அயோக்கியத்தன மான வாழ்வும்தான்.

மதம்

கேள்வி: மக்கள் யாவரும் ஒன்றாக இணைய வேண்டுமானால் என்ன ஆகவேண்டும்?

பதில்: மதங்கள் ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

இந்துமதம்

கேள்வி: மக்கள் பகுத்தறிவாளர்களாய், சமத்துவம் உள்ளவர்களாக, மனிதாபிமானம் உள்ளவர்களாக, ஒழுக்கம், நாணயம், நன்றி, விசுவாசம் உள்ளவர்களாக ஆக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

பதில்: இந்து மதம் என்னும் பார்ப்பன (ஆரிய) மதமும் அதன் சார்பு நூல்களும் தடை செய்யப்பட்டாக வேண்டும்.

தமிழ் ஓவியா said...


பாரத ஸ்டேட் பாங்கா - பஞ்சாங்கக் குப்பையா?


பாரத ஸ்டேட் பாங்கு என்பது நாட்டு டைமையாக்கப்பட்ட முக்கிய வங்கியாகும். எல்லா மதங்களைச் சார்ந்தவர்கள், சாராதவர்கள் அதன் வாடிக்கையாளர்களாக உள்ள நிலையில் இந்த வங்கி வெளியிட்டுள்ள மாதாந்திரக் காலாண்டரைப் பார்த்து அதிர்ச்சி அடைய நேரிட்டது.

மதச் சார்பற்ற ஓர் அரசின் நிறுவனம் வெளியிட்ட காலண்டராக அது தோற்றமளிக்கவில்லை.

மாறாக காஞ்சி மடத்தில் தயாரிக்கப்பட்டது போன்ற பஞ்சாங்கக் குப்பையாகவும், இந்துமத சம்பந்தப்பட்ட சமாச்சாரங்களின் அடங்கலுமாகவே இருக்கின்றன.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமை என்று குடிமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ள விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் (51A(h)
என்ற கோட்பாடு ஒன்று இருக்கிறது என்ற நினைப்புக் கொஞ்சம்கூட இல்லாத புராணக் குப்பைத் தொட்டியாக இந்தக் காலண்டர் வெளி யிடப்பட்டுள்ளது.

இராகு காலம், எம கண்டம், குளிகை என்பதோடு நிற்காமல் வாஸ்து நாள் வரை குறிப்பிடப்பட்டுள்ளது. அசல் கஞ்சனூர் பஞ்சாங்கமே தான்!

மாதம் ஒன்று வீதம் 12 தாள்கள் அடங்கியுள்ளன. அவற்றின் பின் பக்கங்களில் இடம் பெற்றுள்ள கிடைத்தற்கரிய சிறப்பான தகவல்கள் என்ன தெரியுமா?

1) யஷ்கானம் எனும் நாட்டியம்பற்றியது. அதைப் பற்றிய குறிப்புகள் என்னென்ன?

கதையில் நல்லவர்கள் கண்ணுக்கு இனிமையான வண்ணங்களிலும், தீயவர்கள் அல்லது ராட்சச வேடம் ஏற்பவர்கள் அதற்கேற்ற வண்ணங்களில் பயங்கரமாகத் தோற்றம் அளிக்கும் வகையில் ஒப்பனை செய்து கொள்கிறார்களாம்.

தீயவர்கள் அல்லது ராட்சசர்களாம் - இதன் பொருளைப் புரிந்துதான்வெளியிட்டு இருக் கிறார்களா? அல்லது அறியாமையின் அடிப்படையில் வெளியிட்டுள்ளார்களா?

புராணங்களில், இதிகாசங்களில் ராட்சசர்கள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டு இருக்க வில்லையா? தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டே அந்த நாட்டுக்குரிய மக்களைக் கேவலப்படுத்துவதை அனுமதிக்கலாமா?

இன்னொரு பக்கத்தில் குலசேகர ஆழ்வார் பற்றியதாகும். திருமாலைப் பற்றிப் புகழ்ந்து தள்ளும் பாடல்களும் - விளக்கமும் வெளியிடப்பட்டுள்ளன.

அடுத்த பக்கத்தில் இடம் பெற்றிருப்பது என்ன தெரியுமா? வாரணாசி என்னும் காசிபற்றி சிலாகித்துக் கூறப்பட்டுள்ளது.

கங்கைக்கு நிகரான நீருமில்லை. காசிக்கு நிகரான ஊருமில்லை என்ற பீடிகையுடன் இந்து மதத் தலப் புராணக் குப்பை கொட்டப்பட்டுள்ளது - பட விளக்கங்களுடன் அதோடு நிற்கவில்லை. முக்கியமாகக் குறிப்பிட்டு காட்டப்பட வேண்டியது ஒரு பக்கம் முழுவதும் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் பிரதாபங்கள் முழுக்க முழுக்க பல்வேறு தோற்றப் படங்களுடன்

தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறிய; சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டிய மகா குற்ற வாளிபற்றி அரசு வங்கி வெளியிட்ட காலண்டரில் சாங்கோ பாங்கோமாக வெளியிட்டது எந்த அடிப்படையில்?

இன்னும் உண்டு; அற்புதங்கள் ஆற்றிய திருஞானசம்பந்தர் பற்றி முழு பக்கத்தில் பல வகை படங்களுடன்;

சட்டப்படி நியாயப்படி இப்படி காலண்டர் வெளியிடப்பட்டதற்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இத்தகைய காலண்டர் அச்சிட்டதற்காக செலவு செய்யப்பட்ட பெருந் தொகையையும் சம்பந்தப்பட்டவர்களிட மிருந்து பறி முதல் செய்ய வேண்டும். இந்தியா முழுமைக்கும் என்றால் எத்தனைக் கோடி பிரதிகள் அச்சடிக்கப்பட்டு இருக்க வேண்டும்? அரசு செலவில் இந்துத்துவா பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. இதன் பின்னணியில் இந்துத்துவா சக்திகள் கண்டிப்பாக இருக்க வேண்டும் - நிதித்துறை இதுபற்றி முழு அளவில் விசாரணை நடத்திட ஏற்பாடு செய்ய வேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தில் கண்டுள்ள மதச் சார்பின்மை கொள்கைக்கு விரோதமாக நடந்து கொண்டதற்காக சட்டப்படியாக நடவடிக்கையையும் மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்; நடந்திருப்பது சாதாரண விஷயமல்ல!

ஸ்டேட் பாங்கு என்பது தனியாருடையதோ - குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவருடையதோ அல்ல - எல்லோருக்கும் பொதுவான அரசு சொத்து! அதனை முறை கேடாகப் பயன்படுத்தியுள்ளதால் சட்டப் படியான நடவடிக்கை அவசியம் தேவை! தேவை!!19-1-2013