Search This Blog

12.1.13

பொங்கலோ பொங்கல் புரட்சிப் பொங்கல்!

புரட்சிப் பொங்கல்!

தமிழ்ப் பண்பாட்டுத் தோட்டத்தில்
தறுதலைக்  கள்ளிகளா?
தமிழினம் என்ன
ஆரியப் பண்பாட்டு
அடுப்பெரிக்கும் சுள்ளிகளா?
அவிழ்த்துவிட்ட நெல்லிகளா?
பயிரிடுதலைப் பாவமென்று
பாரினில் சொன்ன கூட்டம்
பார்ப்பனக் கும்பலின்றி
யாரேனும் உண்டா சொல்வீர்!

பயிரிடுதல் இல்லை யென்றால்
பச்சரிசி ஏது -
பார்ப்பனக் கூட்டமே!
அக்கார அடிசில் ஏது
அக்கிரகார ஆட்டமே!
சுரண்டுகின்ற தொழிலாலே
சுருக்கு மாட்டி
திராவிடத்தைத் தின்னவந்த
தீவட்டிக் கொள்ளைக்காரன்
தை முதல் நாள்
பொங்கல் என்றால்
தை தையென்று
குதிக்கின்றான்
தணல் முகத்தால்
தமிழனைத் தகிக்கின்றான்
சித்திரையென்று சொல்லி
சிறு புத்தி காட்டுகின்றான்
நாரதன் என்ற
தடியனுக்கும்
கிருஷ்ணன் என்ற - பெண்
கிறுக்கனுக்கும்
பிறந்த பிள்ளை அறுபதாம் - சுத்த
புராணப் பிதற்றல்!

தமிழ் வருடம் என்று - நம்
தலையில் கட்டுகிறான்
தன்மானம் உமக்கேதென்று
தலையிலும் குட்டுகிறான்
தமிழ் ஆண்டாம் - ஆனால்
மருந்துக்கும் ஒரு பெயர்
தமிழில் இல்லை,
தடிப் போத்தா தமிழனெல்லாம்?
நம்மைக் கிறுக்கன்
என்றா நினைத்தான்?
நாடு நமது
நாவின் தேரில் நடன மாடுவது - நமது
தேன் தமிழ் தென்றலன்றோ!

செத்துப்போன
சவமாம் சமஸ்கிருதத்தை
ஜிகினா தேரில் ஏற்றி
சித்து வேலை காட்டுகின்றான்
எட்டப்பன்களும்
எம்மினத்தில் பிறந்த
மட்டப்பன் களாம்
வீடணர்களும்
தோளினை இரவல் தந்து
தொழும்பனாய்க் கிடக்கின்றானே!

ஏடா, தமிழா!
எழு கதிர் நீ!
ஈரோட்டுச் சாணையில்
எழுந்த பெருந் தீ
போர்ச் சங்கு ஊது!
புரோகிதக் கூட்டம்
புற முதுகிட்டு ஓட
புதுநானூறு படைப்போம்!

தை முதல் நாள்
தமிழன் ஆண்டுக்கு
முதலெழுத்து!
உழவன் விழாவிற்கு
உயிர் எழுத்து!
தமிழர் வாழ்வுக்கோ
மெய்யெழுத்து!
புரட்சிப் போருக்கோ
ஆயுத எழுத்து!

பொங் கட்டும்
புது வெள்ளம்!
தங்கட்டும் நெஞ்சில்
தமிழ்வெல்லம்!
பொங்கலோ பொங்கல்
புரட்சிப் பொங்கல்!

-------------------- கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் 12-1-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய புரட்சிக்கவிதை

22 comments:

தமிழ் ஓவியா said...

வடநாட்டு அரசன் வடமொழிப் பெயர்கள்

இப்போது வழங்கும் 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்கனால் கி.பி.78இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையாதலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன. (தி இந்து 10.3.1940).

தமிழ் ஓவியா said...


தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் எனும் கருத்துக்கு ஒப்புரவளிக்கும் வள்ளலார்


தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் எனும் கருத்துக்கு ஒப்புரவளிக்கும் வள்ளலார்

ஓர் ஆண்டினை வடபுலம், தென்புலம் என இரண்டு மண்டலங் களாகப் பிரித்துள்ளனர்.

வடபுலம் (உத்தாரயணம்) - தை முதல் ஆறு மாதங்கள் பகற் பொழுது அதிகம்.

தென்புலம் (தட்சிணாயணம் - ஆடி முதல் ஆறு மாதங்கள் இராப் பொழுது அதிகம்.

இதனை ஒளிப்பக்கம், இருட்பக்கம் என்பர். ஒளி -_ அறிவுடைமை, ஞானம்; இருள் _ அறியாமை, அஞ்ஞானம் -ஒளி _ சுவர்க்கம்; இருள் _ நரகம்.

இருளினின்றும் நாம் ஒளிக்குச் செல்ல வேண்டும். அஞ்ஞானத் தினின்றும் ஞானத்திற்குச் செல்ல வேண்டும். அஞ்ஞானம் நீங்கி ஞானம் உதிக்க வேண்டும். அறியாமை அகன்று அறிவுடைமை வரவேண்டும். எனவே, அறிவுடைமைக்குச் சான்றாக விளங்கும் ஒளிப்பக்கத் தொடக்க நாள், தை மாதத் தொடக்க நாளே!

இதனை வலியுறுத்தியவர் வள்ளலார். புரட்சித் துறவி வள்ளலார் எனும் நூலில் இக்கருத்து விளக்கப்பட்டுள்ளது.

தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் உலகப் பரிந்துரை மாநாடு, கோலாலம்பூர் 6.1.2001

தமிழ் ஓவியா said...


பெண்கள் வீட்டு வேலைக்குத்தான் லாயக்கா?


ஆர்.எஸ்.எஸ். தலைவரை எதிர்த்து கழக மகளிர் அணியின் கிளர்ச்சி ஆர்ப்பாட்டம்!

திருச்சி, ஜன.12- ஆர்.எஸ். எஸ். தலைவர் மோகன் பகவத் பெண்கள் வீட்டு வேலைக்காரி என்று பெண்களை இழிவுப் படுத்தி பேசியதைக் கண்டித்து திராவிடர் கழகம் மகளிரணி சார் பில் தமிழகத்தில் பல் வேறு ஊர்களில் இன்று கண்டன ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன. திருச்சியில் ஜங்சன் காதிகிராப்ட் அருகில் மாநில மகளிரணி செய லாளர் அ.கலைச்செல்வி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மகளிரணி மண்டல செயலாளர் கிரேசி, தலைமை செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, மாவட்ட தி.க. தலைவர் மு.சேகர், மண்டல தலை வர் ஞா.ஆரோக்கிய ராஜ், மாவட்டச் செய லாளர் ச.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி கலைச் செல்வி பேசுகையில்: பெண்கள் எல்லா நிலை யிலும் முன்னேற வேண்டுமென்று தந்தை பெரியார் அவர்கள் போராடினார். அடுப் பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு? என்ற காலம் மாறி பெரியார் அவர்கள் உழைப்பால் முன்னேறியுள்ளனர். இந்நிலையில் பெண் களை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக வத், இழிவுப்படுத்தியும், தாழ்த்தியும் பேசியது கண்டனத்திற்குரியது என்று அவர் பேசினார்.

தோழர்கள் பங்கேற்பு

மேலும் இந்த ஆர்ப் பாட்டத்தில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தா, பொதுக்குழு உறுப்பினர் மகாலிங்கம், மாவட்ட துணைத் தலைவர் திருமால், மாவட்ட அமைப்பாளர் இளவரி, அமைப்புசார தொழிற்சங்கத் தலைவர் திராவிடன்கார்த்திக், மாநகரத் தலைவர் மு.நற்குணம், மாநகர அமைப்பாளர் விடுதலை செல்வம், திருவரங்கம் சண்முகம், சீராளன், காட்டூர் சங்கிலிமுத்து, காமராஜ், பொன்மலை பகுதி தலைவர் ராமச் சந்திரன், மாநகரத் தலை வர் ஆட்டோ பழனி, மாவட்ட இளைஞ ரணித் தலைவர் ரமேஷ், பெரியார் பெருந் தொண்டர்கள் ந.தமிழ் மணி, தியாகராஜன், லால்குடி மாவட்டச் செயலாளர் ப.ஆல்பர்ட்.

தஞ்சை மாவட் டத்தைச் சேர்ந்த ஜெய மணி குமார், ஜெய லட்சுமி, பாக்கியா, முருகம்மாள், ஈசுவரி, உமா, இந்துமதி, தாரணி, கனிமொழி, விடுதலை அரசி, தேவா, டேவிட், பெரியார்செல்வன், புதுக்கோட்டை மாவட் டத்தைச் சேர்ந்த தேன் மொழி, ஜெயலட்சுமி, எழிலரசன், மாவட்டத் தலைவர் அறிவொளி, மாவட்டச் செயலாளர் வீரப்பன், மாவட்ட அமைப்பாளர் சுப் பையா, கரூர் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ராஜசேகரன், மகளிரணி அமைப்பாளர் பாரத மணி உள்ளிட்ட கழக தோழர்களும், பொறுப் பாளர்களும் திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக மகளிர் பாசறை க.அம்பிகா நன்றி கூறினார்.

தமிழ் ஓவியா said...


திருப்பதி லட்டு தின்ன ஆசையோ


ஏடு கொண்டல வாடும், தொங்கபினாடும்!

- ஊசி மிளகாய்

இன்று காலை தொலைக்காட்சியில் ஒரு செய்தி.

திருப்பதி ஏழுமலையானிடமே கன்னம் வைத்து விட்டார் ஒரு வங்கியில் வேலை செய்த ஊழியர்.

திருப்பதி லட்டுக்கு டோக்கன் கொடுத்து விற்கும் முறை உண்டாம்; அதைப் பயன்படுத் திக் கொண்டு வங்கி ஊழியர் ஒருவர் அந்த டோக்கன்களில் நூறு நூறாக தேட்டை போட்டு விட்டாராம்! லட்டை வெளி மார்க்கெட் டிற்குக் கொண்டு போய் விற்று அதில் ஒரு உப தொழில் செய்துள்ளார் பக்த கேடி ஒருவர்.

பக்தகோடிகள் எல்லாம் அங்கே தரிசனத் திற்குக் கட்டணம் கட்டி விட்டு, கால் கடுக்க பல மணி நின்றும் க்யூ வரிசை எளிதில் நகராத நிலையில், கோவிந்தா கோவிந்தா கோவிந்தனைத் கோஷத்தைத் தோற்கடிக்கும் அளவுக்கு ஜருகண்டி, ஜருகண்டி என்ற சத்தம். (தெலுங்கில் நகருங்கோ, நகருங்கே? என்பதற்கான சொற்கள்!)

அப்படி பிரசாதம், லட்டும் வாங்கிடவும் க்யூவில் நின்று டோக்கன் வாங்கி, பிறகு அதைக் கொடுத்த பிறகே லட்டு கிடைக்குமாம்!

அந்த டோக்கன் வாங்குவதில் ஏழுமலை யானுக்கே சிலர் பட்டை நாமம் சாத்திவிட்டு, மொத்தமாக நூறு நூறாக, லட்டு டோக்கன் மூலம் லட்டுகளைத் தேட்டை போட்டு விட்ட நிகழ்வு பல ஆண்டுகளுக்காக நடைபெற்று வந்திருக்கக் கூடும் - யார் கண்டார்?

பகவான் ஏழுமலையானை தினம் தினம் சுப்ரபாதம் பாடித்தானே எழுப்பி விட வேண்டி யுள்ளது? இந்நிலையில் இந்த தொங்க பினாடுகளை (திருட்டுப் பிள்ளை என்பதற்கு தெலுங்கு வார்த்தைகளே இவை) எப்படி ஏழுமலையான் கவனிப்பான் விளைவு லட்டு கோவிந்தா! கோவிந்தா!!

அண்மைக் காலங்களில் திருநெல் வேலிக்கே அல்வாவா? என்று சிலர் சொல் வதைக் கேட்க முடிந்தது; அதுபோல திருப் பதிக்கே லட்டா? என்று இனி கேட்கலாம் போலிருக்கிறது!

இவ்வளவு காலம் பகவான் எத்தனை லட்டுகள் சாப்பிட்டிருப்பாரோ தெரியாது! அவர் சாப்பிடுவதாக இருந்தால் பக்தர் களுக்குக் கிடைக்குமோ!

இந்திய அரசின் புள்ளி விவர இலாகா இதைச் சேகரிக்க முன் வந்து நம் மதச் சார்பின்மையைக் காப்பாற்றுமாக!

தமிழ் ஓவியா said...


மார்கழி உச்சியில் மலர்ந்தது காண்பொங்கல்!


நாடெங்கும் நடக்கட்டும் தமிழ்ப் புத்தாண்டுப் பொங்கல் விழா!

திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் நடைபெற்ற தமிழர் விழாவில் தமிழர் தலைவர் வேண்டுகோள்!

திருச்சி, ஜன.12- திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் விழா நடைபெற்றது. இதில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று மாணவ, மாணவிகளுடன் பொங்கல் விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடி னார்.

தமிழர் தலைவர்

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நேற்று காலை 9 மணியளவில் தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசுகையில்: பொங்கல் விழா என்பது தமிழர்களுடைய தனிப்பெரும் விழாவாகும். தந்தை பெரியார் அவர்கள் கூறும்போது: தமிழனுக்கென்று அற்புதமான விழாவாக இருப்பது இந்த பொங்கல் விழாதான் என்று கூறினார்கள். பாவேந்தர் பாரதிதாசன் கூறும் போது: மார்கழி உச்சியில் மலர்ந்ததுதான் பொங்கல் நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை அல்ல உனக்கு தமிழ்ப்புத்தாண்டு! தை முதல்நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு என்று கூறினார்கள்.

இவ்வாண்டு மாணவ செல்வங்களாகிய உங்களோடு இந்த விழாவை கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாடெங்கும் இத்தமிழர் பண்பாட்டு விழா ந டைபெற வேண்டும்.

இந்தாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீரில்லாமல் பயிர்கள் காய்ந்து கிடக்கின்றன. பல போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. விவசாயிகள் பலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது வருத்தப்பட கூடியது, வேதனை தரக்கூடிய செய்தியாகும்.

இதற்கிடையில் மனிதர்கள் துன்பத்திலே துவண்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சியை மாணவர்கள் கலை நிகழ்ச்சி யோடு சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள். அவர்களை பாராட்டுகிறேன். நம்முடைய கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவ செல்வங்கள் உலகில் பல இடங்களில் இருக்கிறார்கள். எங்கும் சென்றாலும் நம்முடைய மாணவ செல்வங்கள் இருப் பதை போன்று நீங்கள் எல்லாம் சிறப்பாக வரவேண்டும். இந்த பொங்கலை மகிழ்ச் சியோடு கொண்டாடுங்கள். தேர்வை பற்றி கவலைப்படாதீர்கள். பொங்கல் சுவையை மட்டும் நினைத்துக் கொள்ளுங்கள்.

தேர்வு கசப்பாக இருக்காமல் இனிப்போடு இருக் கும். இவ்வாறு தமிழர் தலைவர் பேசினார்.

முன்னதாக பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக ஒருங்கிணைப்பாளர் பேரா.ப. சுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மருந்தியல் கல்லூரி தாளாளர் ஞான.செபஸ்தியான், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த மிஸ்ஜனா, மிஸ்-கெய்லி, மிஸ்ஜோன்ஸ், பெரியார் தொடக்கப்பள்ளி தாளாளர் தி. மகாலிங்கன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இந்திரஜித், கல்யாண சுந்தரம் மன்றம் தலைவர் மேகாபிச்சை மற்றும் பெற்றோர்கள், அனைத்து ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், ஊழியர்கள் உள் ளிட்ட ஏரளாமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியையொட்டி மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றன. கல்வி வளாகம் முழுவதும் பொங்கல் விழாவையொட்டி சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழ் ஓவியா said...


சு,சாமி


சு.சாமி, சு.சாமி என்ற ஓர் அரசியல் புரோக்கர் இருக்கிறார். அடுத்துத் தமிழ் நாட்டை நான்தான் ஆளப் போகிறேன் என் பார். எங்கள் கட்சிதான் மக்கள் செல்வாக்குள்ள கட்சி என்பார்.

செமியாகக் கருதி மக்கள் புறந் தள்ளி விடு வார்கள். ஆனாலும் அவர் ஒரு பேட்டி கொடுத்தால் இந்து உள்ளிட்ட ஏடுகள் முதல் பக்கத்தில் செய்தி வெளியிடும். நன்றாகக் கவர் பண்ணக் கூடியவர் இந்த ஆசாமி. அதனால் மற்ற மற்ற ஏடுகளும்கூட ஒன்றுக்கும் உதவாத அவரின் திமிரடி அரட்டை களை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும்.

ஜெயின் கமிஷன் என்ற வார்த்தையை எடுத்தால் போதும் டவுசர் கழன்று விடும். தனியார் தொலைக் காட்சி ஒன்றில் திரா விடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் மானமிகு சு.ப.வீ. அவர் கள் ராஜீவ்காந்தி படுகொலையில் ஜெயின் கமிஷன் உங்களையும், சந்திராசாமியும் குற்றப் படுத்தியுள்ளதே - இது வரை நீங்கள் விசாரிக்க படாதது ஏன் என்ற கேள் வியைக் கேட்டதுதான் தாமதம் - எனக்கு வேறு வேலை இருக்கிறது என்று கூறி துண்டைக் காணோம் வேட்டியைக் காணோம் என்று வெளி ரிப் போய் வெளியேறிய வெண்ணெய் வெட்டி சிப்பாய் அவர்.

டில்லியில் பெரியார் மய்யம் இடிக்கப்பட்டதற்கு நான் தான் காரணம் என்று பூணூலை உருவி மார் தட்டிக் கொண்ட இந்த ஆசாமியின் இன் றைய நிலை என்ன தெரியுமா?

டில்லியில் அகழ்வா ராய்ச்சித் துறையின் அனுமதி பெறாமல் சு.சாமி கட்டியுள்ள தளத்தை இடித்திட அத்துறை நோட்டீஸ் விட்டுள்ளது.

சுத்த சுயம் பிர காசமான யோக்கியப் புருஷன் தான் இப்படி அனுமதியின்றிக் கட்டி யுள்ளது.

பெரியார் மய்யத்தை இடிப்பதற்கு நான்தான் காரணம் என்று சவுடால் விட்டவரின் கதியைப் பார்த்தீர்களா?

தான் விதைத்த விதை தனக்கே வினையாக மாறிய போக்கை கவனித் தீர்களா? ஆனால் ஒன்று; அவாளுக்குள்ள செல் வாக்கு அனைத்தையும் கொண்டு வந்து ஓரி டத்தில் கொட்டி ஆன மட்டும் தடுக்கப் பார்ப் பா(ன்)ர்.

சட்டத்திற்குமுன் அனைவரும் சமம்தான். அக்கிரகார வாசி என் றால் நெய்யில் பொரிக்கப் பட்டவர் அல்ல.

நீதிமன்றத்தில் சென்று கூட அரட்டை அடிப்பார்; அடாவடித் தனமாகப் பேசுவார்தான். இதற்கெல்லாமா நீதி மன்றம் அஞ்சப் போகிறது எங்கே பார்ப்போம். - மயிலாடன்

தமிழ் ஓவியா said...


பார்ப்பனத் தந்திரத்தைப் பாரீர்!


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த குளமங்கலம் மாரியம்மன் கோவில் அருகே புத்தாண்டில் உலக நன்மைக்காக வேண்டி 48 மணி நேரம் தவமிருப்பதாகச் சொல்லி கடந்த 30ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு மூங்கில் மரத்தில் ஏறி அமர்ந்திருக்கும் சந்திரசேகரன்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு சாமியார் மூங்கில் மரத்தில் ஏறி இரண்டு நாட்கள் தவமிருப்பதாகக் கூறி பரபரப்பு ஏற்படுத்தியதோடு மேலும் தொடர்ந்து பல முட்டாள்தனமான செயல்களுக்கு அடித்தளமிட்டுச் சென்றிருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் கிராமத்துப் பூசாரியாகவும் குறிசொல்பவராகவும் விளங்கி வருகிறார். சுமார் பத்தாண்டு களுக்கு முன் நெடுவாசலில் உள்ள காட்டுக்கோயில் பகுதியில் இரண்டு மூங்கில் மரங்களை அருகருகே நட்டு வைத்து அதன் உச்சியில் நாற்காலி போன்று ஓர் இருக்கையைத் தயாரித்து இணைத்துக் கட்டி அதன்மீது அமர்ந்து கொண்டு தவமிருப்பதாகச் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அப்போது உண்மை இதழில் அது பற்றி விரிவான கட்டுரையும் வந்தது. நக்கீரன் போன்ற வார ஏடுகளும் எழுதியிருந்தன. அப்புறம் அதுபற்றி விசாரித்து அறிந்த அப்போதைய அந்தப் பகுதி எம்எல்ஏ அழைத்துக் கண்டித்ததோடு வடகாடு காவல் நிலையம் அந்த மூங்கில் மரத்தின்மீது இரண்டு நாட்கள் தேசியக் கொடியை இறக்காமல் ஏற்றி வைத்திருந்த குற்றத்திற்காக வழக்கும் பதிவு செய்தது. அப்புறம் அப்படியே அடங்கிக் கிடந்தார். அது வேறு. கடந்த வாரம் குளமங்கலம் தெற்கு என்னும் ஊரில் உள்ள மாரியம்மன் கோயில் வாசலில் அதே பாணியில் மூங்கில் மரங்களை நட்டு வைத்து உலக நன்மைக்காகவும் சமாதானத்திற்காகவும் தவமிருப் பதாகச் சொல்லிக் கொண்டு ஏறி அமர்ந்து விட்டார். அதையாரும் பெரி தாக எடுத்துக் கொள்ளவில்லை.

இவரது தகிடுதத்தம் அனைவரும் அறிந்திருந்ததால் சந்திரசேகரனுக்கு இந்த ஊரில்தானே பெண் கொடுத் தது. அவருக்கும் பிள்ளைகள் இல்லை. இவரைப்போய் யார் கண்டிப்பது என்று நினைத்துக் கொண்டு ஒதுங்கிப் போய் விட்ட வேளையில் அடுத்த நாள் இன்னொரு பூகம்பத்தை பார்ப்பனச் சமுதாயம் கிளப்பி விட்டது.

எப்படி என்றால் குளமங்கலம் என்பது ஒரு பெரிய ஊர் ஆகும். அதனை நிர்வாக வசதிக்காக குளமங் கலம் வடக்கு என்றும் குளமங்கலம் தெற்கு என்றும் பிரித்து இரண்டு வருவாய்க் கிராமங்களாகவும் இருக் கிறது. இரண்டு ஊர்களுக்கும் இரண்டு ஊராட்சி மன்றத் தலைவர்கள் இருக் கிறார்கள். கோயில்கள் எல்லாம் பொது வாகத்தான் இருந்து கொண்டிருக் கின்றன.

தமிழ் ஓவியா said...

இடையில் இரு ஊர்களுக்கும் என்ன வருத்தமோ வடக்கு கிராமத்தில் இருந்த மாரியம்மன் கோயிலுக்கு தெற்கு கிராமத்தில் உள்ளவர்கள் வருவதைக் குறைத்துக் கொண்டு தெற்கு கிராமத் திற்குள் புதிதாக ஒரு மாரியம்மன் கோயில் கட்டிவிட்டார்கள். இது நடந்து ஓராண்டு ஆகிறது.

இந்நிலையில் சந்திரசேகரன் மூங்கில் மரத்தில் ஏறி அமர்ந்ததை ரகசியமாகச் சில பார்ப் பனர்கள் வடக்கு ஊருக்குச் சொல்லி விட்டு புதிய மாரியம்மன் கோயிலில் சக்தி இல்லாமல் இருக் கிறது(!). ஏற்கெனவே வடக்கு குளமங் கலம் கிராமத்தில் உள்ள பழைய மாரியம்மன் கோயிலில் சக்தி படைத்த மாரியம்மனை சக்தியில்லாத அந்தக் கோயிலுக்கு அழைத்துக் கொள்வதற் காகத்தான் சந்திரசேகரன் தவமிருந் திருக்கிறார். இந்த மாரியம்மனும் சந்திரசேகரன் பேச்சைக் கேட்டுக் கொண்டு புதிய கோயிலுக்குச் சென்றா லும் சென்று விடும். அதனால் வடக்கு மாரியம்மனைப் பாதுகாக்க வேண்டும் என்றால் (சக்தி படைத்த மாரியம்மனைத் தான் அப்படிக் குறிப்பிடுகிறார்கள்) உடனடியாக ஒரு யாகம் செய்தாக வேண்டும் என்கிற செய்தியைப் பரப்பி விட்டார்கள்.

அதன் விளைவாக ஊர் முக்கியப் பிரமுகர்கள் மட்டும் ரகசியமாகக் கூடி சுமார் ஆறாயிரம் ரூபாய் செலவில் ஒரு யாகம் வளர்த்து மாரியம்மனைப் பாதுகாத்து இருக்கிறார்கள். கோயிலில் உள்ள மாரியம்மன் சிலையைக் கடத்தி விடுவார்கள் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால்கூட இரண்டு காவலர்களை நிறுத்தி வைத்துக் காவல் காத்து விடலாம். ஆனால் அழைத்தவர் பின்னால் எல்லாம் போய் விடுவாள் மாரியம்மன் என்று சொன்னால் அதற்குப் பெயர் என்ன? கடவுளை பகுத் தறிவாளர்கள் கிண்டல் செய்கிறார்கள் என்று வைத்துக கொண்டால்கூட அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் பக்தியை வளர்த்துக் கொண்டிருக்கும் ஒரு கூட்டமே இதுபோன்ற புளுகு மூட் டைகளை அவிழ்த்து விட்டுக் கொண் டிருக்கும் போது எப்படித்தான் நம்பிக் கொண்டு இருக்கிறார்களோ?

தமிழ் ஓவியா said...

சந்திரசேகரன் மூங்கில் மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு இருக்கிறார் என்றால் அவர் குறிசொல்லும் தொழி லுக்கு விளம்பரம் தேடியோ அல்லது இவ்வளவு நாளும் குறி சொல்லியும் எதுவும் பலிக்காமல் போனதால் யாரா வது வந்து விட மாட்டார்களா என்கிற ஏக்கத்தில் அமர்ந்திருந்திருக்கலாம். அதற்கும் அவர் வேறு யாரிடமும் கையேந்தாமல் அவரது பணத்தைச் செலவு செய்து அவர் ஏறி உட்கார்ந்து இருந்திருக்கிறார். கூடவோ குறை யவோ அவரது செயலை நியாயப் படுத்தவில்லை. நல்ல ஆரோக்கியமாக இருக்கும் ஒரு நபரால் அலுவலகத்தில் தொடர்ந்தாற்போல் இருந்து பணி செய்ய முடியவில்லை. உணவு என்றோ சிற் றுண்டி என்றோ எழுந்து போய் விடு கிறார்கள். வங்கியில் இருந்து பணத்தைப் பெற்று அடுக்கிக் கொண் டேயிருப்பவர்கூட சில நேரங்களில் பைல் எடுக்கவோ வைக்கவோ போகும் சாக்கில் எழுந்து கொஞ்சதூரம் நடந்து உடலை இலகுவாக்கிக் கொள்ள வேண் டியிருக்கிறது.

அவ்வாறு தொடர்ந்து அமர்ந்திருந்தால் கைகால்களை இழுத் துப் பிடித்துக் கொள்ளும். ஆனால் சந்திரசேகரன் ஒரு பைத்தியக் காரனைப் போல் எப்படியோ பல்லைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டு இறங்கிச் சென்று விட்டார். அதையும் யாரும் சட்டை செய்யவில்லை என்பது ஊருக்கே தெரிந்து விட்டது.
ஆனால் பார்ப்பனப் புத்தியைப் பாருங்கள். ரகசியமாகச் சொல்லி வைத்து அவனுக்குச் சில ஆயிரங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஊருக்குள் உள்ள பெரிய மனிதர்களைப் பிடித்து யாகம் என்கிற பெயரில் வசூலித்துக் கொண்டு விட்டார்கள். அதற்கு இந்த ஏமாளித் தமிழர்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டிருக் கிறார்கள்.

நல்லதோ கெட்டதோ அவர் பொரு ளாதாரம் கல்வி உட்பட அனைத்திலும் மிகவும் பின்தங்கியவராக இருந்தாலும் கூட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனை வரையும் மதிக்கிறோம். அவர்களாவது இதுபோன்ற முட்டாள்தனங்களைப் பற்றி அறிந்து உணர்ந்து ஊர் மக்களைக் காப்பாற்ற முன்வரவேண்டும். இல் லையேல் இதுபோன்ற மூடப் பழக்கங் களாலும் முடை நாற்றத்தாலும் அடுத்து வரும் இளைய சமூகம் ஏமாந்து அடிமை யாகி அழிந்து விடும். அவர்களுக்கு சுய சிந்தனையும் சுய மரியாதையும் கிடைக் கச் செய்ய பொறுப்பில் உள்ளவர்கள் பாடுபட வேண்டும்

- ம.மு.கண்ணன்

தமிழ் ஓவியா said...


விவேகானந்தர் - 150


விவேகானந்தரின் 150ஆம் ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்புரை செய்து வந்தவர் சுவாமி விவேகானந்தர் என்று பெருமையாகப் பேசுவார்கள்.

பல பேர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்காவில் நடத்தப்பட்ட விழாவுக்கு அங் கிருந்து இவருக்கு ஏதோ தனி அழைப்பு வந்த தென்று.. அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.

அமெரிக்கா உருவாகி 400ஆம் ஆண்டு விழா ஒன்று ஏற்பாடாகி இருந்தது. உலகில் பல நாடு களிலிருந்து பொருட்காட்சிகள் நடத்தினார்கள்; பல நாட்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நிகழ்ச்சி இடம் பெற்றது.

ஒரு நாள் உலக மதங்களில் பிரதிநிதிகளைக் கொண்ட மாநாடு 1893இல் சிகாகோவில் நடத்தப்பட்டது. இந்து மதத்திலிருந்து யாரையாவது ஒருவரை அழைக்க நினைத்தார்கள்.

பார்ப்பனர் ஒருவருக்குத் தான் அழைப்பு வந்தது. கடல் தாண்டி செல்லுவது தோஷம்! என்பதால் செல்ல மறுத்த நிலையில், பார்ப்பனர் அல்லாதாரான விவேகானந்தர் சிக்கினார். அதுதான் உண்மை.

வெள்ளைக்காரர்கள் லேடீஸ் அண்ட் ஜென்டில் மென் என்று அழைப்பார்கள். இந்தியாவிலிருந்து சென்ற விவேகானந்தரோ பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைத்து விட்டாராம். அடேயப்பா, இதுதான் இந்தியாவின் கலாச்சாரம்; இதுதான் இந்து மதத்தில் தகத்தகாய தத்துவம் என்று வானத்தை கிழித்து எழுதி வருகிறார்கள்.

உண்மையிலே இந்து மதம் மக்களை சகோதர சகோதரிகளாகக் கருதுகிறதா?

பிறப்பின் அடிப்படையில் பேதம் விளைவிக்கும் ஒரு வருணாசிரம மதத்தில் சகோதரத்துவம் என்பதற்கு எள் மூக்கு முனை அளவுக்கு இடம் உண்டா?

பிறப்பில் ஒரு குழந்தையின்மீது அத்துமீறித் திணிக்கப்பட்ட ஜாதி, அந்தக் குழந்தை பெரியவ ராகி செத்த பிறகு எரிக்கப்படும், அல்லது புதைக் கப்படும் இடுகாடு - சுடுகாட்டில் கூடத் தொடர்கிறதே.

மனிதன் சாகிறான்; ஆனால் பிறப்பின் போது அவன்மீது திணிக்கப்பட்ட ஜாதி சாவதில்லையே! இந்த யோக்கியதை உள்ள ஒரு மதத்தில் ஏதோ சகோதரத்துவம் இருப்பதாக விவேகானந்தர் சொன்னார் என்றால், அது உண்மைக்கு மாறாக பொய்யாக இன்னொரு நாட்டில் எடுத்துக்காட்டிச் சொல்லப்பட்ட பொய்யுரையாகும்.

விவேகானந்தரைப் பொறுத்தவரையில் பார்ப்பனர்பற்றி பல நேரங்களில் அம்பலப்படுத் தினார் என்பது என்னவோ உண்மை. ஆனால் அதனை எளிதில் வெளியில் சொல்ல மாட்டார்கள்.

அமெரிக்கா சென்று இந்து மதத் தத்துவத்தை உலகறியச் செய்தார் என்று மட்டும் திருப்பித் திருப்பிச் சொன்னால் பொய்யும் உண்மையாகும் என்ற தந்திரப்படி பிரச்சாரம் செய்கிறார்கள் என்பது மட்டுமே உண்மை.

இந்து மதத்திலிருந்து மற்ற மதத்திற்குச் செல்லுவதற்குக் காரணம் என்ன என்பது குறித்து விவேகானந்தர் கூறும் கருத்தினை இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பார்ப்பன அமைப்புகள் ஏற்றுக் கொள்கின்றனவா?

பூணூல் என்பது கோவணம் கட்டும் அரைஞாண் கயிறு என்று சொல்லி இருக்கிறாரே - அதைப்பற்றி எல்லாம் வெளியிடுவதுதானே!

ஆதி சங்கரர் ஆணவக்காரர் - இதயமில் லாதவர் - புத்தரோ கருணைக் கடல் என்று விவேகானந்தர் கருத்துத் தெரிவித்துள்ளாரே அதையும் எழுத வேண்டியதுதானே!

தந்தை பெரியாரைச் சந்தித்த அமெரிக்கர் ஒருவர் விவேகானந்தரின் நூற்றாண்டு விழா அமெரிக்காவிலேயே பிரமாதமாகக் கொண்டாடப் படுவது குறித்து சிலாகித்துச் சொன்ன பொழுது, முட்டாள்கள் என்ன இந்தியாவுக்கே சொந்தமா? என்று எதிர் கேள்வி போட்டு மடக்கிய நிகழ் வெல்லாம் உண்டு.

இந்து மதத்தை எந்த வகையில் எவர் ஏற்றுக் கொண்டு இருந்தாலும், அவரிடம் அளப்பரிய திறமைகள் குடி கொண்டிருந்தாலும் அதனை மதிக்கத் தேவையில்லை.

மதம் மிருகங்களுக்குப் பிடிக்கட்டும் - மனிதனுக்கு வேண்டாம்!12-1-2013

தமிழ் ஓவியா said...


பாடுபடுவான்


இந்த நாட்டில் மனிதன் மற்றொரு மனிதனால் எவ்வளவு இழிவாய்க் கருதப்படுகிறான் என்பதை ஒரு மனிதன் உணருவானானால், அவனுக்குக் கடுகளவு சுயமரியாதை யாவது இருக்குமானால், அவன் மனித இழிவைப் போக்கத்தான் முதலில் பாடுபடுவான். - (குடிஅரசு, 3.5.1936)

தமிழ் ஓவியா said...


சாதி ஒழிப்புக்கு அய்யாவின் திட்டங்கள்


1. சாதியைக் குறிக்கும் பெயர்களை (முதலியார், பிள்ளை, கவுண்டர்) சட்டத்தின் மூலம் தடை செய்ய வேண்டும்.

2. புதிதாகத் திருமணம் புரிந்துகொள் வோர் கலப்புமணம் செய்யுமாறு சட்டமியற்ற வேண்டும்.

3. ஒரே சாதியில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அரசாங்க உதவிகள் தரக்கூடாது.

4. சாதிகளைக் குறிக்கும் நெற்றிக்குறி போன்ற சின்னங்களைச் சட்டவடிவத்துடன் தடுக்க வேண்டும்.

5. உயர்ந்த பதவிகளை, காவல்துறைப் பதவிகளைத் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தரவேண்டும்.

6. தாழ்த்தப்பட்டவர்களை அக்கிரகாரத் தில் குடியிருக்க செய்ய வேண்டும்.

7. தீண்டாமையைப் பாராட்டாத சிறந்த கிராமங்களுக்குப் பரிசளிக்க வேண்டும்.

8. தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரி இருப்பதை ஒழிக்க வேண்டும்.

தந்தை பெரியார் (விடுதலை 10.1.1947

தமிழ் ஓவியா said...


பெரியாரின் இலட்சியங்கள்! -ஜி.டி.நாயுடு-


பெரியார் செய்யும் பணிகள் அநேகர் எண்ணுகின்றபடி அரசியலில் ஈடுபட்டதல்ல. மக்களுக்கு பகுத்தறிவை உபயோகிக்கக் கற்றுக் கொடுக்கும் அறிவுப்பிரச்சாரம் தான். எனக்கும் எந்த அரசியல் கட்சிகளில் சேர்ந்தாலும் அதிக நன்மை செய்யக் கூடும் என்ற நம்பிக்கையில்லை.

அதனாலே பெரியாரால் வகுக்கப்பட்ட அநேக கொள்கை களை வெகுகாலமாக ஆதரித்து சில கொள்கைகளை நடைமுறையில் அவரை விட அதிவேகத்தில் கடைப்பிடித்தும் வந்திருக்கின்றேன். இவருடைய லட்சியங்களில் அநேகம் நம்நாட்டிற்கு அவசியம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

வயதிலும், அறிவிலும் மிகப் பெரியவர். மிக்க இளவயதுள்ள முறுக்கமான வீரனைப்போல் தைரியத்தோடு தீவிரமாகச் செல்கின்றார். இவருடைய லட்சியங்களை எல்லோரும் ஒப்புக் கொள்ளுவார்கள் என்பதற்கு அறிகுறியாகவே இன்று அரசாங்கம் காங்கிரஸ் கட்சியிடம் இருந்தும் கூட பெரியாருக்கு எந்த எதிர்ப்பும் இன்றி அமோகமான வரவேற்போடு ஊராண்மைக் கழகம், நகராண்மைக் கழகங்கள் முதலிய பல கழகங்கள் அழைத்துக் கொண்டிருப்பதே சான்றாகும்.

(4.7.54-இல் வேலூர் நகரமன்றத்தில் தந்தை பெரியார் படத்தை திறந்து ஜி.டி.நாயுடு அவர்கள், விடுதலை 6.7.1954)

தமிழ் ஓவியா said...

தோழர் ஈ.வெ.ரா. ஸ்டேட்மெண்டு சமதர்மப் பிரச்சார உண்மை விளக்கம்


இ.பி.கோ. 124-ஹ செக்ஷன்படி தொடரப்பட்டுள்ள, பொதுவுடமை பிரசாரத்திற்காகவும், இராஜ நிந்தனை என்பதற்காக வுமுள்ள வழக்கு கோவையில் 12ஆம் தேதி ஆரம்பிக் கப்பட்டபோது தோழர் ஈ.வெ.இராமசாமி அவர்கள் கோவை ஜில்லா கலெக்டர் G.W.வெல்ஸ் I.C.S. அவர்கள் முன் தாக்கல் செய்த ஸ்டேட்மெண்ட்:-

என் பேரில் இப்போது கொண்டுவரப் பட்டிருக்கும் வழக்குக்கு ஆதாரமே கிடையாது.

2. வழக்குக்கு அஸ்திவாரமான 29.10.1933 தேதி குடிஅரசின் தலையங்கத்தை இப் போது பல தரம் படித்துப் பார்த்தேன். அதை நான் எழுதினேன் என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன்.

தமிழ் ஓவியா said...

3. அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களுக்காவது வாக்கியங்களுக்காவது ராஜத்துவேஷக் குற்றம் சாட்டப்படுமானால் இன்றைய அரசாங்க முறை, நிர்வாக முறை முதலியவைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்து குறைகளை எடுத்துச் சொல்லவோ, அவற்றால் மக்களுக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களை விலக்கப் பரிகாரம் தேட ஏற்பாடு செய்யவோ யாருக்கும் சுதந்திரம் கிடையாது என்றுதான் முடிவு செய்யப்பட்டதாகும்.

4. என்ன காரணத்தைக்கொண்டு என்மேல் ஆதாரமற்ற இந்தப் பிராது தொடரப் பட்டிருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் என்னுடைய சமதர்மப் பிரசாரத்தை நிறுத்திவிடச் செய்வதற்காக முதலாளி வர்க்கமோ அல்லது மத சம்பிரதாயக்காரர்களோ செய்த சூழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டி யிருக்கிறது. வியாசத்தின் விஷயத் திலாவது பதங்களிலாவது நோக்கத்திலாவது சாட்டப்பட்ட குற்றத்தின் அமைப்பே கிடையாது.

5. முக்கியமாய் அதில் சொல்லப்பட்ட விஷயம் எல்லாம் கல்வி இலாகாவின் சம்பளங்கள் அதிகமென்றும், பிள்ளைகளுக்கு கல்விச் செலவு அதிகமென்றும், அதற்கேற்ற பயன் விளை வதில்லை என்றும், ஏழைகளுக்கு கல்வி பரவ சவுகரியம் இல்லை என்றும், இப்படிப்பட்ட முறை யால் லாபம் பெறும் பணக்காரர்களும், அதிகார வர்க்கத்தாரும், உத்தியோகஸ்தர்களும் சொல்லு வதைக் கேட்டு ஏமாந்து போகாமல் வரப்போகும் (சீர்திருத்த) எலெக்ஷன்களில் ஜாக்கிரதையாய் நடந்து கொள்ளவேண்டும் என்று ஏழை பொது ஜனங்களுக்கு எடுத்துக் காட்டியதேயாகும்.

6. நான் 7, 8 வருஷ காலமாய் சுயமரியாதை இயக்க சமதர்ம பிரசாரம் செய்துவருகிறேன். சமூக வாழ்விலும் பொருளாதாரத்திலும் மக்கள் யாவரும் சமத்துவமாய் வாழ வேண்டுமென்பது அப்பிரசாரத் தின் முக்கிய தத்துவமாகும்.

7. நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை நாட்டு மக்கள் யாவரும் சமமாய் அனுபவிக்க வேண்டும் என்பதும் அவ்வுற்பத்திக் காக செய்யப்பட வேண்டிய தொழில்களில் நாட்டு மக்கள் எல்லோரும் சக்திக்குத் தக்கபடி பாடுபடவேண்டும் என்பதும் அத்தத்துவத்தின் கருத்தாகும்.

8. அவ்வியக்க லட்சியத்திலோ, வேலைத் திட்டத்திலோ பிரசாரத்திலோ அதற்காக நடைபெறும் குடிஅரசுப் பத்திரிகை யிலோ பலாத்காரம், துவேஷம், இம்சை, இடம் பெற்றிருக்கவில்லை. எந்த விதத்திலாவது அவை நமது நாட்டில் இடம் பெறுவது என்பதும் எனக்கு இஷ்டமான காரியம் அன்று.

தமிழ் ஓவியா said...

9. இதற்கு அத்தாட்சி வேண்டுமானால் பல வருஷங்களாக இரகசியப் போலீஸ் இலாகா சுருக்கெழுத்து அறிக்கைக்காரர்கள் எனது பிரசங்கத்தை விடாமல் குறித்துவைத்திருக்கும் அறிக்கைகளையும் சுமார் பத்து வருஷத்திய குடிஅரசு பத்திரிகையின் வியாசங்களை யும் சர்க்கார் கவனித்துவந்தும் என்மேல் இத்தயை வழக்கு இதற்குமுன் ஏற்படுத்தியதில்லை என்பதே போதும்.

10. அரசாங்கமானது முதலாளித்தன்மை கொண்டதாய் இருப்பதால் அது இத்தகைய சமதர்மப் பிரசாரம் செய்யும் என்னையும் எப்படியாவது அடக்கவேண்டுமென்று முயற்சி எடுத்துக்கொண்டிருப் பதில் அதிசயமில்லை. தற்கால அரசாங்க ஆட்சியில் பங்குபெற்றுப் போகபோக்கியமும், பதவியும், அதிகாரமும் அடைந்துவரும் பணக்காரர்களும் மற்றும் மதம், ஜாதி, படிப்பு என்கிற சலுகைகளைக் கொண்டு முதலாளிகளைப் போலவே வாழ்க்கை நடத்துகின்றவர் களும் இப்படிப்பட்ட அரசாங்கத்திற்கு நேர்முகமாகவும், மறைமுகமாக வும் உதவிசெய்து தீரவேண்டியவர்களாய் இருப்பதால் அவர்களும் இம்முயற்சிக்கு அனுகூலமாய் இருப்பதிலும் அதிசயமில்லை.

11. பல நூற்றாண்டுகளாக உலக வாழ்க்கையில் கடவுள் செயல் என்றும் இயற்கை என்றும் கருதும்படியாகச் செய்து நிலைநிறுத்தப் பட்டு நடைபெற்று வரும் சமூக அமைப்பையும் பொருளாதார முறையையும் மாற்றுவது என்பது சிலருக்கு இஷ்டப்படாத காரியமாய் இருந்தாலும் அவற்றை மாற்றி அமைத்தாலொழிய மக்கள் வாழ்க்கையில் உள்ள அனேக கஷ்டங்களும் குறைகளும் நிவர்த்தி யாகி சவுக்கியமாகவும் திருப்தியாகவும் வாழ முடியாது என்பது எனது உறுதி.

12. இப்படிப்பட்ட ஒரு மாறுதல் உண்டாக ஆசைப்படுவதும் அதற்காக பலாத்காரம், துவேஷம், இம்சை ஆகியவைகள் இல்லாமல் பிரசாரம் செய்வதும் குற்றமாகாது.

13. ஏதாவது ஒரு கொள்கைக்கு பிரசாரம் பரவ வேண்டுமானால் அக்கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் அக்கொள்கைக்கு இடையூறு செய்பவர்களால் அடக்குமுறைக்கு ஆளாக வேண்டியதும் அவசியமேயாகும். அதற்காக நாமே வலுவில்போய் கஷ்டத்தைக் கோரி எடுத்துக்கொள்ளக்கூடாது; என்றாலும் தானாகவே ஏற்பட்ட ஒரு நல்ல சந்தர்ப்பத்தை யாரும் இழந்துவிடக்கூடாது.

இந்தப் பிரசாரத்தை தடுக்க வேண்டுமென்று கருதி இந்த வழக்கைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆதலால் அவர்கள் எப்படியாவது எனது வியாசத்தில் துவேஷம், வெறுப்பு, பலாத்காரம் முதலியவைகள் இருப்பதாக கற்பனை செய்து தீரவேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள். அந்தப்படி செய்யப்படும் கற்பனைகளால் நான் தண்டிக்கப்பட்டாலும் பொதுவாக என்மீது நம்பிக்கையும் நல்ல எண்ணமும் உடையவர் களும் சிறப்பாக எனது கூட்டுவேலைக்காரத் தோழர்களும் தப்பான அபிப்பிராயம் கொள்ளக்கூடுமாதலால் அப்படிப்பட்ட கற்பனைகளை மறுத்து உண்மையை விளக்கிவிட வேண்டுமென்றே இந்த ஸ்டேட்மெண்டைக் கொடுக்கக் கடமைப்பட்டவனானேன்.

14. இதனால் பொதுஜனங்களுடைய கவனிப்பு இன்னும் அதிகமா வதோடு அவர்களது ஆதரவும் பெற நேர்ந்து கிளர்ச்சிக்குப் பலமேற்படக் கூடுமாதலால் என்மீது சுமத்தப்பட்ட இந்த வழக்கில் ஒரு ஸ்டேட்மெண்டை மாத்திரம் கொடுத்துவிட்டு எதிர் வழக்காடாமல் இப்போது கிடைக்கப்போகும் தண்டனையை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன்.

15. இந்நிலையில் சர்க்கார் என்னைத் தண்டித்தாலும் சரி அல்லது இந்தப் பிராதுக்கு போதிய ஆதாரமில்லை என்று நியாயத்தையும் சட்டத்தையும் லட்சியம் செய்து, வழக்கைத் தள்ளி விட்டாலும் சரி இப்படிப்பட்ட அடக்குமுறையை வரவேற்குமாறு எனது தோழர் களுக்கு வழிகாட்ட எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தைப்பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்.

- புரட்சி, 21.01.1934

தமிழ் ஓவியா said...


திருவள்ளுவர் ஆண்டு


- மறைமலையடிகளார்

வள்ளுவனார் இற்றைக்குக் குறைந்தது 1900 ஆண்டுகட்கு முன் பிறந்தவர் என்பது பற்றி யான் விரி வான ஆராய்ச்சி செய்து, திருக் குறளாராய்ச்சி என்று முன்னர் எழு திய முற்பகுதியிலும், மாணிக்க வாசகர் காலமும் வரலாறும் என்ற நூலிலும் எழுதியுள்ளேன். அவற்றிற் குறித்துள்ள சான்றுகளை எல்லாம் ஈண்டெடுத்துக் கூறி விளக்கக் காலம் போதாது. ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகிய சிலப்பதி கார ஆசிரியராகிய இளங்கோவடிகள் காலத்திலேயே எழுதப்பட்ட நூலாகும் என்பது சிலப்பதிகாரத்தின் இறுதியில் ஆசிரியர் மணிமேகலை மேலுரைப் பொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும் என்பதனால் அறியப்படும் நூலொன்றை இயற்ற எண்ணங் கொண்டவராய் ஆசிரியர் கோவலன் கதையைக்கூறி, அரசியல் பிழைத்தோர்க் கறங்கூற்றாவதும் உரைசால் பத்தினிக் குயர்ந்தோரேத்தலும், ஊழ் வினை யுருத்துவந்தூட்டு மென்பதூஉஞ், சூழ் வினைச் சிலம்பு காரண மாகச் சிலப்பதிகாரமென் னும் பெயரானாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுளென, முடிகெழு வேந்தர் மூவர்க்குமுரிய தடி கணீரே யருளுக என உரைசால் அடிகள் அருள மதுரைக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன், என் பது உற்று நோக்கற்பாலது.

சாத்தனார் பாண்டியன் அவைக் களப் புலவர்; அவர் சிலப்பதிகாரம் இயற்றப்புகுவராயின் பாண்டியனைக் குறைத்துப் பேச நேருமாதலால் அதற்கு உளமிசையாராய், இளங் கோவடிகளைப் பாடச் சொன்னார் என்பதும், துறவிக்கு வேந்தன் துரும் பாதலின், துறவியாகிய அடிகட்கு அஃது எளிதாம் என்பதும் உய்த் துணரற் பாலனவாம். வேந்தர் மூவர்க்குமுரிய தடிகணீரே யருளு கென்றாற்கு என்பதற்குரை கூற வந்த உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் தான் பாடக் கருதி வினாவின் சாத்தற்கு அங்ஙனங் கூறாது இங்ஙனக் கூறினாரென்க என் சொல்லியவாறோவெனின் இச்செய் கின்ற காப்பியம் மூவேந்தர்க்குமுரிய தென்பதனால் ஏனையோரை இவர் புகழ்ந்துரையாராகலின், யாம் காப்பியஞ் செய்யக் கடவேமென்பது கருதி, நீரே, அருளுகென ஏகார வினாப் பொருண்மை தோன்ற இது கருதி இது சொன்னாற்கு அவர் கருதிய பொருளிற்கு உடம்படாது சொல்லிற்கு உடம்பட்டாரென் பதாயிற்று என ஊரை எழுதிப் போந்தமையுங் குறிப்பிடற்பாற்று.

இளங்கோவடிகள் சேர நாட்டில் வஞ்சி நகரத்திலிருந்து அரசு புரிந்த சேரலாதனென்னும் அரசனுடைய இளைய மகனார்; சேரன் செங்குட் டுவனின் இளவல் ஒரு நாள் அரச வையில் இவர் தம் தந்தையுடனும் தமையனுடனும் வீற்றிருந்த காலை ஒரு நிமித்தகன் வந்து இவரை அடி முதல் முடி வ ரை நெடிது நோக்கி, அரசு வீற்றிருக்கும் இலக்கணம் இவர்க்குண்டென, அதுகேட்ட தமையன் செங்குட்டுவன் அழுக்காறு மிகுந்த கண்ணெரி தவழ அண்ணலை, நோக்குவதைக் கண்ட இவர். உடனே தமையனுக்குத் துன்பம் வராதபடி அரசு துறந்ததைக் கூறிக் குணவாயிலிற் சென்று துறவு பூண்டு.

சிந்தை செல்லாச் சேணெடுந் தூரத் தந்தமி லின்பத்தரைசார் வேந்த ராயினார். இத்தகைய பெரியாராகிய இளங்கோவடிகளும் கூலவாணிகள் சாத்தனாரும் சிலப்பதிகாரக் கதைத் தலைவியாகிய கண்ணகிக்குக் கல் நாட்டு விழா நடைபெறுங் காலை இலங்கைக் கயவாகு முதலாவன் வந்திருந்தான் என்று குறிப்பிடப்பட் டுள்ளது.

அவனுடைய காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று இலங்கை மகா வமிசத்தினாலும் பிற ஆராய்ச்சியினாலும் கணிக்கப் பட்டுள்ளது. எனவே, சிலப் பதிகார காலம் இரண்டாம் நூற்றாண்டே என்பது பெறப்படும்.

அக்காலத்தே சாத்தனார் பாத்திரமாகிய மணிமேகலை யுமாகும். அம்மணி மேக லையில், தெய்வம் தொழா அள் கொழுநற் றொழுதெழு வாள். பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றப் பொய்யில் புலவன் பொருளுரை என்று திருவள்ளுவரையும் அவர் நூலாகிய திருக்குறளையும் ஆசிரியர் சுட்டிக் கூறியுள்ளார்.

எனவே, திருவள்ளுவனார் காலம் 2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தென்பது எளிதிற் பெறப்படும். கிறித்துப் பிறப்பதற்கு 31ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்.

தமிழ் ஓவியா said...


சிந்துவெளி மக்கள்


சிந்துவெளி மக்கள் தம் ஆண்டுத் தொடக்கம் தை மாதம் முதல் நாள் என்று வழங்கினர். பிற்காலத்தில் இதுவே திருவள்ளுவர் ஆண்டு பிறப்பும்ஆயிற்று.
- விஞ்ஞானி நெல்லை சு. முத்து

தை முதல் மார்கழி வரை உள்ள பன்னிரண்டு மாதங்களும் தமிழ்ப் பெயர்களே. இவை தொல்காப்பியர் காலத்திலேயே ஆட்சியிலிருந்தன.
- முனைவர் சி. இலக்குவனார்

தமிழ் ஓவியா said...


இல்லாததைத் தேடும் இந்துத்துவவாதிகள்


இல்லாத ஒரு வரலாற்றை உரு வாக்கிக் கொள்ளுவதில் இந்துத் துவாவாதிகள் காட்டிய ஆர்வத்தில் ஒரு பகுதியைகூட தமிழகத் தலை வர்கள் காட்டவில்லை. இன்றைய ஹரியானா பகுதிதான் ஆரியர்களின் பூர்வீகத்தாயகம் என்றும், அங்கு ஒரு காலத்தில் ஓடிக் காய்ந்துபோன ஆற்றின் சுவடு செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்ட படத்தில் தெரி கிறது என்றும் அதுவே சரஸ்வதி ஆறு என்றும் அதன் கரையிலே சரஸ்வதி ஆற்று நாகரிகம் எனப் படும் ஆரிய நாகரிகம் செழித்தது என்றும் புனைவுகளை ஏற்படுத்திக் கொண்டு, ஆரியர்களின் பூர்வீகத்தை இந்தியாவுக்குள் இந்துத்துவாவாதிகள் தேடினார்கள்.

ஆதி பத்ரி என்ற மூலத்திலிருந்து தொடங்கிய ஆறு இராஜஸ்தான் ஓரமாக ஓடி கட்ச் பகுதியில் கடலில் கலந்தது என்றும் கூறிக் கொண்டு, அதை மீண்டும் உருவாக்கிட வேண்டும் என்று பா.ஜ.க. அரசு 2002இல் முனைந்தது. தொல்பொருள் ஆய்வாளர்கள், புவியியலாளர்கள், வான் அறிவியலாளர்கள், நீர் அறிவியலாளர்கள் ஆகியவர்கள் துணையோடு, பணத்தை வாரியி றைத்து ஆரியர்கள் பூர்வீகத்தை பா.ஜ.க. அரசு தேடியது. சரஸ்வதி ஆற்றுக்கு மறுவாழ்வு தரும் முயற்சி என்ற பெயரில், ஆற்று மணல் படுகையில் நிலத்தடி நீரை இறைத்து நிரப்பி மக்கள் அந்த நீர்ப்பெருக்கில் இறங்கிப் புண்ணிய மடையத் திட்ட மிடப்பட்டது. பணம் வாரி விடப் பட்டது. சட்லெட்ஜ் ஆறு தனது பழைய வழியில் செல்லாமல், தனது போக்கில் மாறி ஓடியிருக்க வேண்டும். அதன் பழைய வழித்தடத்தை சரஸ் வதி ஆறு ஓடிய தடம் என்றார்கள். சரஸ்வதி ஆ று பனியில்லாத சிவா லிக் மலைகளில் ஆதிபத்ரி என்ற இடத்தில் உற்பத்தி ஆனதாக அடை யாளம் காட்டினார்கள். இதை இமயமலையில் பனிப்பாறைகளுடன் இணைத்து வற்றாத ஜீவநதியாக ஆக் கவும் திட்டமிட்டார்கள். இதற்காகவே இமாசலப் பிரதேசப் பல்கலைக் கழகத்தில் பனிப்பாறையியல் துறையைத் திறந்தார்கள்.

இவ்வாறு, ஆரிய இனத்துக்கு ஒரு தாயகத்தை இந்தியாவுக்குள் கண்டு பிடித்துவிட இந்துத்துவாவாதிகள் புரட்டல் வேலைகளையெல்லாம் செய்தார்கள்.

- _ பேராசிரியர் செயராமன்

தமிழ் ஓவியா said...


தமிழர் பண்பாடு


தமிழர் பண்பாடு கால அமை வில் மாற்றங்கள் அடைந்துள்ளதா எனும் வினாவிற்கும், மாற்றம் அத்துணை அடைந்துவிட வில்லை; ஆனால் வளர்ச்சி அடைந்துள்ளது என்றே கூறுதல் வேண்டும். வட ஆரியர் தமிழ் நாட்டிற்கு வந்த காலத்திலும், சமணர், ஐரோப்பியர் ஆகிய பிற நாட்டார் செல்வாக்கடைந்த காலத்திலும் தமிழர் பண்பாடு அடிப்படைக் கொள்கைகளில் அவ்வளவு மாற்றம் அடைய வில்லை. பிற சமயங்களைப் போதித்த பார்ப்பனரும், சமணரும், புத்தரும், ஐரோப்பியக் கிறிஸ் தவரும், மகமதியரும் தமிழர் பண்பாட்டைத் தழுவ முயன்றனர். இந்து சமயத்தின் வழிபாட்டு முறையும், இலக்கியங்களும் தென்னாட்டுத் தத்துவங்களால் வளம் பெற்றன. வடமொழியில் உள்ள சமய இலக்கியங்கள் பல, சங்கரர், இராமாநுசர், மாதவர் போன்ற தென்னாட்டவரின் மூல மாகத் தென்னாட்டுத் தத்துவங்கள் வடமொழியில் இடம் பெற்றன. சுநீதிகுமார் சட்டர்ஜி, இந்தியப் பண்பாட்டின் எழுபத்தைந்து விழுக்காடு - _ திராவிடப் பண்பாடு என்று குறிப்பிட்டுள்ளார். சாத் தனாரியற்றிய மணிமேகலையை யும், வீரமாமுனவரியற்றிய தேம் பாவணியையும், உமறுப்புலவர் இயற்றிய சீறாப் புராணத்தையும் ஆராயும் காலை, இவர்கள் தம் சமயங்களின் கோட்பாடுகளைக் கூறினாலும், தமிழர் பண்பாட்டை எங்ஙனம் விளக்கியுளாரென்பதும் புலனா கின்றது.

- மறைத்திரு தனிநாயகர் அடிகளார்

தமிழ் ஓவியா said...


திருவள்ளுவர் ஆண்டு


இந்த 60 ஆண்டு சுழல் முறை யால் தமிழ்மொழி, மரபு, மாண்பு, பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும், இழிவும் எண்ணிப் பார்த்து, சிந்தித்து, உணர்ந்து, தெளிந்த தமிழ் அறி ஞர்கள், புலவர்கள், சான்றோர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச் சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலைஅடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது, அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது; திருவள்ளுவர் காலம் கி.மு. 31 தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்தார்கள்.

இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன என்று முத்தமிழ்க் காவலர் முனைவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களை வினவினேன். மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, அனுபவம் ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும் என்று விளக்கம் தந்தார்.

இந்த முடிவு செய்தவர்கள் தலைமையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க்கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார், தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், பேராசிரியர் கா. நமச்சிவாயர், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.

1921ஆம் ஆண்டில் நடந்த மாநாட்டில் எடுத்த முடிவை 18.1.1935ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை தாங்கிய தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் உறுதி செய்து அறிவித்தார். திருவள் ளுவர் ஆண்டு கணக்கிட கிறித்துவ ஆண்டுடன் 31அய்க் கூட்டல் வேண்டும் என்று கூறி, திருவள்ளுவர் ஆண் டைத் தொடங்கி வைத்தார். 1935+31 = 1966. அதை அறிஞர் அவை ஏற்றுக் கொண்டது. அன்று தொட்டு அறி ஞர்களால் அவ்வாண்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. (பக்கம் 117 திருவள்ளுவர் நினைவு மலர் 1935)

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். ஏழு கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ். புதன் - அறிவன்; சனி - காரி. ஆங்கில ஆண்டுடன் 31 கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு 2006+31=2037. தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழி லும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல கங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டுமுதல்
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று
பல்லாயிரத் தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தைம் முதல் நாள் பொங்கல் நன்னாள்.
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டு
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு

- புரட்சி கவிஞர் பாரதிதாசன்

தமிழ் ஓவியா said...


தைத் திங்கள் முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம்!


- தமிழ் நம்பி

1921ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் தலைமையில் தமிழறிஞர்கள் கூடி ஒரு மனதாக வரையறை செய்து வெளியிட்ட வரலாற்று சாசனம்தான் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பது.

கிருஷ்ணன் - நார தருக்குப் பிறந்ததாகக் கூறும் 60 ஆபாச ஆண்டுகளை அப்புறப் படுத்தவே இம்முடிவு எடுக்கப்பட்டது. எனவே, சித்திரை முதல் நாளில் தொடங் கும் புத்தாண்டு என்பது இந்துத்துவாவாதிகள் தமிழர்கள்மீது நடத் திய திணிப்பே ஆகும்.

திருவள்ளுவர் பெய ரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது; அதையே தமிழ் ஆண்டு எனக் கொள் வது; திருவள்ளுவர் காலம் கி.மு.31; தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் தை முதல் நாள் என்று மறைமலையடிகளார் 18.1.1935இல் உறுதி செய்துள்ளார்.

1971 முதல் தமிழ் நாடு அரசு நாட்குறிப் பிலும், 1972 முதல் தமிழ்நாடு அரசிதழி லும், 1981 முதல் தமிழ் நாடு அரசின் அனைத்து அலுவல கங்களிலும் நடை முறைப்படுத்தி வருகிறது.

ஆனால், சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்து, தமிழக அரசு தொடர்ந்து விடுமுறையும் அளித்து வருகிறது.

தமிழக அரசு அதி காரபூர்வமாக, தை முதல் நாளைத் தமி ழாண்டுத் தொடக்க மாக அறிவித்து, அந் நாளில் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி - பம்மல் நாகல்கேணித் தமிழ்ச் சங்கம், தலைநகர்த் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து சென்னை பல்லாவரத்தில் 16.12.2000 அன்று ஒரு நாள் அடையாளப் பட்டினிப் போராட்டத்தை நடத்தியது.

அவ்வண்ணமே, மலேசியாவின் தலைநகராம் கோலாலம்பூரில் 6.1.2001 அன்று உலகப் பரிந்துரை மாநாட்டினை மலேசியா திராவிடர் கழகம், மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், மலேசியத் தமிழ் நெறிக் கழகம் போன்ற இயக்கங்கள் முகாமையாக இருந்து மேலும் தமிழின உணர்வடைய 15 இயக்கங்களும் சேர்ந்து இக்கருத்தை வலியுறுத்தியுள்ளது.

அய்ந்தாம் முறை யாக அரியணை ஏறி யுள்ள கலைஞர் அவர்கள் தை முதல் நாளை தமிழ்ப் புத் தாண்டு என அறி வித்தது தமிழை அரியணை ஏற்ற மறுத்தே வந்துள்ளார். 2007ஆம் ஆண்டு விடுமுறை நாள்களை அறிவித்த தமிழக அரசு சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்து அந்நாளில் விடுமுறையும் அளித் துள்ளது.

கடந்த 15.12.2006 அன்று மதுரை காம ராசர் பல்கலைக் கழகம், கலைஞருக்கு வழங்கிய முனைவர் பட்டத்தில் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் தமிழில் கையொப்ப மிட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் இதன் மூலம் கலை ஞருக்கு உணர்த்து வதுதான் என்ன?

நான் தமிழராக வாழத் தொடங்கி விட்டேன், தமிழக முதல்வராகிய தாங்கள் இனியேனும் தமிழை வாழச் செய்யும் தமிழ ராக, முதல்வராக மாற வேண்டும் என்பதுதான், சரிதானே, தமிழர்களே!

- மறைமலையடிகளார்
யாதும் ஊரே மார்கழி 2036 - சனவரி 2007