Search This Blog

3.1.13

சிவன் நடராஜன் ஆனது இப்படித்தான்

ஆருத்ரா தரிசனம்!
மாதங்களில் மார்கழி என்று பெருமையாகப் பாடுவார்கள். சைவர்கள் திருவெம்பாவை  பாடுவதும், வைணவர்கள்  திருப்பாவை பாடுவதும் உண்டு.
அதே நேரத்தில் இந்த மார்கழியைப் பீடை மாதம் என்று சொல்பவர்களும் இந்த ஆன்மிக சிரோன்மணி கள்தாம்.
வைணவர்கள் திருமாலைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள் என்றால் அதற்குப் போட்டிக் கடையாக சைவர்கள் சிவனை சிரசில் வைத்துக் கூத்தாடுவார்கள்.
மாதங்களில் நான் மார்கழியாகவும், நாள்களில் திருவாதிரையாகவும் விளங்குகிறேன் என்று பகவான் கண்ணன் கீதையிலே சொல்லியிருக்கிறாராம்.
விடுவார்களா சைவ மெய்யன்பர்கள்? ஆருத்ரா தரிசனம் என்று நடராசனின் நடனப் பொழிவைப் பெரிதுபடுத்தியுள்ளனர்.
சிவ பெருமானுக்குரிய நட்சத்திரம் திருவாதிரையாம். இந்நாளில் சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் தடபுடலாக நடத்துவர்.
மக்கள் பணத்தை எதையாவது சொல்லிச் சுரண்டுவதும், கடவுள் நம்பிக்கையை ஏதாவது சொல்லிப் புதுப்பிப்பதும் - அதிலும் இவற்றின் மூலம் பார்ப்பனர்கள் தாங்கள்தான் கடவுளுக்கு அருகில் இருக்கக் கூடியவர்கள் என்பதை நிலை நிறுத்து வதும்தான் இத்தகு நிகழ்ச்சிகளுக்கான உள்நோக் கமாகும். பக்திப் போதை ஏறிக் கிடக்கும் மக்கள் இது பற்றி எல்லாம் சிந்திக்க மாட்டார்கள் என்பதுதான் பார்ப்பனர்களுக்கு மிகப் பெரிய பலமாகும்.
தாருகாவனத்து முனிவர்களின் கர்வத்தை அடக்கிட சிவன் நடனம்  ஆடினானாம்!
கர்வத்தை அடக்க நடனம்தான் உபாயமா? எப்படி அடக்கினானாம்? அந்தத் தாருகாவனத்து ரிஷிகளின் மனைவிமார்களை சிவன் கற்பழித்தானாம் - இதுதான் ரிஷிகளின் ஆணவத்தை அடக்க சிவன் மேற்கொண்ட வழி.
ரிஷிகள் சும்மா விடுவார்களா? எங்கள் மனைவி மார்களின் கற்பை அழிப்பதற்குக் காரணமாக இருந்த சிவனின் சிசுனம் (ஆண் உறுப்பு) அறுந்து விழுவது என்று சாபமிட்டார்களாம். அப்படி அறுந்து விழுந்த உறுப்பை பார்வதி தேவியார் தன் உறுப்பால் தாங்கிப் பிடித்தாளாம். அதுதான் கோயில்களில் இருக்கக் கூடிய சிவலிங்க வடிவம் என்பது.

காட்டு விலங்காண்டிக் காலத்தில் இப்படி எல்லாம் கற்பிக்கப்பட்ட ஆபாசத்தைத்தான் ஆன்மிகம் என்றும், பக்தி என்றும் மக்களின் புத்தியையும் ஒழுக்கத்தையும் பாழ்படுத்தி வந்துள்ளனர்.
தாருகாவனத்தில் ஆடிய அந்த சிவ நடனத்தை தில்லையில் (சிதம்பரத்தில்) திருவாதிரை நாளில் ஆடுமாறு பதஞ்சலி முனிவர் கேட்டுக் கொண்ட தற்காக சிவன் நடனம் ஆடிய நாள்தான் இந்நாள். சிவன் நடராஜன் ஆனது இப்படித்தான்.
சித் என்றால் அறிவு - அம்பலம் என்றால் ஆகாயம் அறிவு வெளியில் இறைவன் நடனம் ஆடியதால் இத்தலம் சிற்றம்பலம் சிதம்பரம் ஆனதாம்.
இந்த நடராஜ பெருமான் தன்னை மறந்து ஆடிக் கொண்டு இருந்தபோது, அவரது உடுக்கிலிருந்து ஹயவரடு-ஹல் முதலிய 14 வேறு வேறான சப்தங்கள் வெளிவந்தன. அவற்றை முறைப்படுத்தி பாணினி ரிஷி சமஸ்கிருதத்தை உண்டாக்கினானாம் (கல்கி 25.6.1972).
எப்படி எல்லாம் பித்தலாட்டம் செய்து வைத்துள்ளனர் பார்ப்பனர்கள்! ஒரு கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.
அப்படி சிவன் உடுக்கிலிருந்து பிறந்த அந்தத் தெய்வ மொழி இன்று ஏன் செத்த மொழியாக - பேச்சு வழக்கிலிருந்து ஒழிந்த மொழியாக (Dead Language) ஆயிற்றாம்? கடவுளைக் காப்பாற்றப் போகிறார்களா? அல்லது சமஸ்கிருதத்தைக் காப்பாற்றப் போகிறார்களா?
இவ்வளவு ஆற்றல் சிதம்பரம் நடராசனுக்கு உண்டு என உதார் விடுகிறார்களே, அந்த சிதம்பரம் நடராஜன் சிலை  முப்பத்தேழாண்டு பத்து மாதம் இருபது நாட்கள் (24.12.1648 முதல் 14.11.1686 வரை) இந்தச் சிதம்பரத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு காப்பாற்றப் பட்டது ஏன் தெரியுமா?
பிஜப்பூர் சுல்தானின் படை எடுப்புக்கு அஞ்சியே இது நடைபெற்றுள்ளது. (தஞ்சை - தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியீடு)
சிறீரங்கம், மதுரை கோயில் கடவுள்களுக்கும் இந்தக் கதி ஏற்பட்டுள்ளது. இவர்கள் கூறும் கடவுள் சக்தியெல்லாம் எங்கே போனது?
ஆருத்ரா தரிசனம் நடைபெறும் இந்தக் கால கட்டத்தில் பக்தர்கள் இவற்றையும் கவனத்தில் கொண்டு கருத்து வெளிச்சம் பெறுவார்களா?

 -----------------------"விடுதலை” தலையங்கம்  28-12-2012

5 comments:

தமிழ் ஓவியா said...


இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

1942இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்த திருவாங்கூர் மகாராணி சமஸ்கிருத வளர்ச்சிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை தந்த போது - தந்தை பெரியார் அதை எதிர்த்து போராடி _ அந்தப் பணத்தை மாணவர் விடுதி வளர்ச்சிக்குச் செலவிட ஏற்பாடு செய்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

####

நீதிக்கட்சி ஆட்சிக்கு முன்புவரை மருத்துவக் கல்லூரிப் பட்டப் படிப்பிற்கு சமஸ்கிருதம் தெரிய வேண்டும் என்று இருந்த நிலைபற்றி உங்களுக்குத் தெரியுமா?

####

1938இல் ஆச்சாரியார் கட்டாயமாக இந்தியைப் புகுத்தியதோடு _ இந்தியோடு _ சமஸ்கிருதத்தையும் சேர்த்துப் புகுத்த வேண்டும் என்று ஆனந்த விகடன் பார்ப்பன ஏடு தலையங்கம் தீட்டியது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

####

15.10.1927இல் பாலக்கோட்டில் காந்தியார் காஞ்சி சீனியர் சங்கராச்சாரியை சந்திக்கச் சென்றபோது தாழ்த்தப்பட்டோர் கோயில் பிரவேசம் சாஸ்திரங்களுக்கு எதிரானது என்று சமஸ்கிருதத்திலேயே காந்தியிடம் அவர் சொன்னார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

####

பார்ப்பனப் பெருச்சாளிகளிடமிருந்து கோயில் சொத்துக்களைக் காப்பாற்ற 1920இல் பனகல் அரசர் இந்துஅறநிலையத்துறை மசோதாவைக் கொண்டு வந்தபோது சத்தியமூர்த்தி அய்யர் சட்டசபையிலே காட்டுக் கூச்சல் போட்டு எதிர்த்து இந்துக் கோயில்கள் தங்கள் சமூகத்துக்காக உரியது என்று சமஸ்கிருதத்திலேயே பேசினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

####

1927இல் திருச்சி தேசிய கல்லூரிக்கு வருகை தந்த காந்தியாருக்குப் பார்ப்பனர்கள் சமஸ்கிருதத்திலே வரவேற்பு தந்தார்கள் என்பதும் அதைக் காந்தியார் எதிர்த்தார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


1935 ஆம் ஆண்டில் கும்பகோணம் நகராட்சியில் அக்கிரஹாரத்துக்கு மலம் எடுக்க தாழ்த்தப்பட்டவர்களை நியமிக்கக்கூடாது-அதற்குப் பதிலாக சூத்திரர்களை ஏற்பாடு செய்யவேண்டும் என்று பார்ப்பனர்கள் வலியுறுத்தினார்கள்.

இதன்மூலம் மலம் எடுக்கக்கூட அக்கிரஹாரத்திற்குள் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்ககூடாது என்கிற அளவிற்கு தீண்டாமையைக் கடைப்பிடித்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இதில் புதைந்திருக்கும் இன்னொரு உண்மை என்ன? தாழ்த்தப்பட்டவர்களையும்,சூத்திரர்களையும் பார்ப்பனர் ஒரே கீழ் நிலையிலேயே வைத்திருந்தனர் என்பதுதானே?

தமிழ் ஓவியா said...

வாக்கு வங்கி அரசியல் ஓட்டுப்பயிற்சியாளர்களை ஓரங்கட்டுங்கள்!


கடும் நோய்க்கான கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்த மருந்துகளில்கூட அளவான அளவே பயன்படுத்தப்பட வேண்டிய ஜாதி என்ற விஷத்தை, மருந்தை மறந்து விட்டு விஷத்தை மட்டுமே குடித்தால் நீங்கள் என்னாவீர்கள்?

தந்தை பெரியாரும், அம்பேத்கரும் கூறியபடி, பிற்படுத்தப்பட்ட ஜாதி சூத்திரர்களும், அடுக்கின் வெளியே தள்ளப்பட்டு அவதிக்குள்ளாகும் பஞ்சமர்கள் என்ற இரு சகோதரர்களும் கைகோர்த்துப் போராட வேண்டிய சகோதரர்கள் அல்லவா? அதைவிட்டு உட்ஜாதி - அரசியல் லாபத்திற்காக - தேர்தல் அரசியலில் வாக்கு வங்கிகளைத் தேடி சந்தர்ப்பவாத சதிக்குப் பலியானால் இதுவரை நீங்கள் பெற்றுள்ள - இனி பெற வேண்டிய சமூக நீதி உரிமைகள் - இடஒதுக்கீடு கல்வி, வேலை வாய்ப்புகள் திடீரென்று காணாமற்போகும் என்பதை நினைத்து, வீடு எரிவதைப் பார்த்து, புரியாத சிறுபிள்ளைகள் கூத்தும் கும்மாளமும் கொள்வதுபோல ஆடாதீர்!

பார்ப்பனர்கள் - ஊடகங்கள் - உங்களில் சிலரை கொம்பு சீவி விட்டு மோத விட்டு, ரத்தம் குடிக்கக் காத்திருக்கும் நரிகளாகி உசுப்பேற்றுகின்றனர்! ஏமாறலாமா?

மண்டல் கமிஷனின் பரிந்துரைகள் முழுவதும் அமுலாகி விட்டவனவா? யோசித்துப் பார்த்தீர்களா?

இளைய பெருமாள் கமிட்டி (மத்திய அரசு கமிட்டி) செயல் வடிவம் கண்டு விட்டதா?

உச்சநீதிமன்றத்திலும், பல மாநில உயர்நீதிமன்றங்களிலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட நீதியரசர்கள் போதிய அளவுக்கு Adequate Representation அடைந்து விட்டார்களா?

பொதுத்துறை நிறுவனங்களாக இருந்தால் இவர்கள் இடஒதுக்கீடு கேட்பார்கள்; பார் பார் இதோ இவற்றை தனியார் மயமாக்கி இடஒதுக்கீட்டிற்கு - சமூக நீதிக்குச் சமாதி கட்டுகிறோம் என்று ஓசைபடாமல் திட்டமிட்டு வெற்றி பெறுகிறதே ஆரியமும் அதில் நுழைந்த அதிகார வர்க்க ஆட்சியும்! புரிந்து கொண்டீர்களா?

மத்திய அரசுப் பதவிகளில் செயலாளர்கள் என்ற சக்தி வாய்ந்த பதவிகளில் 132ல் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பூஜ்யம்தான் ராஜ்யம் என்பது போல ஒருவர்கூட இல்லை என்று துறை சார்ந்த அமைச்சரே 6.12.2012இல் நாடாளுமன்றத்தில் கூறியது கேட்டு, உங்களைத் தவறான வழிக்கு அழைத்துச் செல்ல முயலும் சிலர் அவர்கள் திருவாசகங்களில் கூறுவதானால் ஓட்டுப் பொறுக்கிகள் அந்தத் தலைவர் விரிக்கும் வலையில் வீழ்ந்து வாழ்வுரிமையை -வளர்ச்சியை - முன்னேற்றத்தை இழக்கத் துடிக்கலாமா?

மண்டல் குழுப் பரிந்துரைகளுக்காகவும், இளைய பெருமாள் கமிட்டி பரிந்துரைக்காகவும் திராவிடர் இயக்கம் போராடியபோது இவர்கள் எங்கே போய் இருந்தனர்? வீட்டின் கதவைச் சாத்திக் கொண்டு வீணைக் கச்சேரி அல்லவா கேட்டுக் கொண்டிருந்தனர்; இப்போது இப்படி வீண் கச்சேரி நடத்தி, மாயையை உருவாக்கி, உங்களுக்கு ஜாதிப் போதையை ஏற்றும் மயக்கப் பானங்களை அல்லவா தரத் துடிக்கிறார்கள்?

நியாயந்தானா? சிந்தியுங்கள்! 18 வயது வந்த பெண்ணுக்குத் தனது வாழ்விணையரைத் தேர்வு செய்யத் தகுதி இல்லை என்பது உங்கள் வாதமானால், 18 வயதில் வாக்குரிமையை - ஓட்டுப் போடும் வாய்ப்பை - மாற்றிட நாடு தழுவிய அளவில் பிரச்சாரம், போராட்டம் செய்ய முன் வருவீர்களா? சட்டத்தை மாற்றிடப் போராடுவீர்களா?

21 வயது பெண் மாற்று ஜாதியில் காதல் செய்தால் அதை ஏற்பீர்களா?

பெற்றோர்களைக் கேட்டுத்தான் காதல் திருமணம் வயது வந்தபெண் முடிவு செய்ய வேண்டும் என்றால், இது மகளிரை மறுபடியும் அடிமையாக்கும் சமூக அநீதி அல்லவா?

பெற்றோர்கள் கூறுகிறபடி 18 வயது வந்த ஆண் இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் பெற்றோர்கள் ஆணைப்படி- சம்மதம் பெற்ற பிறகே அவர்கள் கூறும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறுவீர்களா?

அப்படிக் கூறுவது எப்படி நியாய விரோதம், சட்ட விரோதம், மனித உரிமைப் பறிப்புக் குற்றமோ, அது போன்றது தானே மகளிர் உரிமையைப் பறிப்பதும்?

தமிழ்ப் பாங்கு, தமிழன், தமிழினம் என்று கூறும் இவர்களால் காதல் இல்லாமல், குறுந் தொகைப் பாடல்கள் இல்லாத தமிழ் இலக்கியங்கள் உண்டா? குறளின் காமத்துப் பாடல் எழுதி, கண்ணொடு கண் நோக்கொக்கின் குறளும் குற்றமானதா?

வாக்குவங்கி அரசியலில் நடத்தும் ஒட்டுப் பசியாளர்களை ஓரங்கட்டுவீர்!

உண்மையான உரிமைகளை வென்றெடுக்க, திராவிடர் கழகத்தின் - திராவிடர் இயக்கத்தின் பெரியார் தத்துவங்களின் கொள்கையை ஏற்பீர்! வலங்கை, இடங்கைகளைப் பிரிக்காதீர்!

பல்வேறு ஒடுக்கப்பட்ட மக்களையும் மோதவிட்டு அரசியல் பதவிப் பசியைத் தீர்க்க எண்ணாதீர்!

இணைப்பீர்!
இணைப்பீர்!

இன்றேல் வீழுவது நாமே!

வாழ்வது ஆரியமே, அவாளே! புரிந்து கொள்வீர்.

சிந்திப்பீர், செயல்படுவீர் தனியார் துறை இடஒதுக்கீட்டுப் போர்க் குரல் கொடுக்க ஆயத்தமாவீர்!

பெரியார் நினைவு நாள் சூளுரை இதுவே!கி.வீரமணி
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

திலகர் சொல்கிறார் . . .

சென்னை மாநிலத்தில் பார்ப்பனர் அல்லாதார் உணர்வு தோன்ற அதன் எதிரொலியாக மகாராட்டிரத்திலும் அந்த உணர்வு தலை தூக்கியது. அப்பொழுது (1918) இந்தத் திலகர் என்ன பேசினார் தெரியுமா?

"இப்பொழுது எல்லோரும் சட்ட சபைக்குச் செல்லல வேண்டுமென்று முயற்சி செய்கிறார்கள். செருப்புத் தைக்கிறவனும், எண்ணெய் செக்கு ஆட்டுகிறவனும், வெற்றிலைப் பாக்குக் கடை வைத்திருப்பவனும் () சட்டசபைக்குப் போக வேண்டுமென்று ஏன் முயற்சி செய்கிறார்கள்? யார் யார் எது எதற்குப் போக வேண்டுமென்று ஒரு வரைமுறை கிடையாதா?" என்று பேசினார்.

ஆதாரம்: டாக்டர் அம்பேத்கர் அவர்களின் ''காந்தியாரும் காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன?'' என்ற நூல்.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனரின் இனப்பற்று

வட இந்திய நகர் ஒன்றில் சாலை விபத்தில் ஒருவன் இறந்து விட்டான். இறந்தவன் ஒரு நிறுவனத்தில் சுருக்கெழுத்துத் தட்டச்சராக இருந்தவன் என்பது அவனுடைய சட்டைப் பைக்குள் கிடந்த அடையாளச் சீட்டிலிருந்து தெரிய வந்தது. அதைப் பார்த்து அந்தக் கணத்திலேயே மற்றொரு பிராமணன் சைக்கிளில் அஞ்சல் நிலையத்துக்குப் பஞ்சாய்ப் பறந்தான் ""................ அலுவலகத்தில் சுருக்கெழுத்துத் தெரிந்த தட்டச்சர் வேலை காலியாக உள்ளது. உடனே புறப்பட்டு வா"" என்று திருவரங்கத்தில் உள்ள தன் தம்பிக்குத் தந்தி அடித்தானாம். இது கதை அன்று. நகைச்சுவைத் துணுக்கும் அன்று. இடையிடையே நிகழும் உண்மைச் சம்பவம்.

(ஆதாரம்: ""வட மாநிலங்களில் தமிழர்"" . - ஆசிரியர் சோமலே. பக்கம் 2)