Search This Blog

31.12.11

தடை செய் ஜோதிடத்தை!


பல்வேறு துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், உலகில் பல பகுதிகளில் ஜோதிடத்தை ஏற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை பெருகி வருவதைப் பற்றி கவலை அடைந்துள்ளனர். விண்வெளி அறிஞர்கள், வான்கோள் இயல்பியலாளர்கள் இதரத் துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளாகிய கீழே கையொப்பமிட்டுள்ள நாங்கள் ஜோதிடர் களால் தனிப்பட்ட முறையிலும், பொதுவாகவும் அளிக்கப்படும் ஆலோசனை மற்றும் கணிப்புகளை கேள்வி கேட்காமல், ஏற்றுக் கொள்ளாமல் எச்சரிக்கையுடனிருக்க பொது மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

ஜோதிடத்தில் நம்பிக்கை கொள்ள விரும்புவோர், அதன் கொள்கைகளுக்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை என்பதை உணர வேண்டும்.

ஜோதிடம் பழங்கால மனிதர்களில் உலகம் பற்றிய மாயமான கண்ணோட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தபடியால், ஜோதிடர்களின் கணிப்புகளையும், ஆலோசனைகளையும் அவர்கள் நம்பி வந்தனர் - விண்ணில் உள்ள கோள்களைக் கடவுள்களின் இல்லங்கள் என்றோ, சகுனங்கள் என்றோ கண்டு வந்தபடியால் இங்கு பூமியில் நடைபெறும் நிகழ்ச்சிகளுடன் நெருக்கமாக தொடர்புபடுத்திக் கண்டனர். பூமிக்கும் கோள்களுக்கும், நட்சத்திரங்களுக்கும் இடையே உள்ள மிக நீண்ட தூரத்தைப்பற்றி அவர்கள் எந்தக் கோட்பாடும் கொண்டிருக்கவில்லை.

ஒருவர் பிறக்கும் நேரத்தில் இந்தக் கோள்களோ நட்சத்திரங்களோ பிரயோகிக்கும் ஆற்றல் நமது எதிர் காலத்தை எந்த வழியிலாவது வடிவமைக்கும் என்று கற்பனை செய்து கொள்வதே தவறாகும் என்று நோபல் பரிசு பெற்ற 19 அறிவியலாளர்கள் 1975ஆம் ஆண்டில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்கள்.

நோபல் பரிசு பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த - லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கட்டுமான ஆய்வுப் பிரிவு இணைத் தலைவராகப் பணியற்றிக் கொண்டிருக்கும் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் சென்னையில் பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது சோதனைகள், நிரூபணங்கள் முன் நிற்காத ஜோதிடம் முதலியவை மூடநம்பிக்கைகளைச் சார்ந்தவையே என்று மண்டையில் அடித்தது போல கூறியுள்ளார்.

ஜோதிடம் போன்ற மூடநம்பிக்கையினை அடிப்படையாகக் கொண்ட கலாச்சாரங்கள் மிகுந்த கேட்டினை விளைவிக்கும் என்றும் எச்சரித்தார்.

சோதனைகளில் தோல்வி அடைந்த பிறகும் கூட சில மூடநம்பிக்கைகள் பரவி வருகின்றன.

தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் அறிவியல் பண்புதான் நமக்குத் தேவை என்று மிக அழகாக ஓர் அறிவியல் பாடத்தினை நடத்தி இருக்கிறார்.

நம் நாட்டிலோ அறிவியல் சாதனைகளான தொலைக்காட்சிகளும், ஊடகங்களும் இந்த மூடத்தன ஜோதிடத்துக்கு முன்னுரிமை கொடுப்பது வெட்கக் கேடானதும், அறிவு நாணயமற்ற தன்மையும் கொண்டவையல்லவா!

இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அவர்கள்கூட இந்த ஊடகங்களின் மூடநம்பிக் கைப் பிரச்சாரங்களை வெகுவாகக் கண்டித்து வருகிறார்.

இந்த நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் பத்திரிகையும் ஒன்று என்று தந்தை பெரியார் கூறியதன் அருமை - நமது ஊடகங்கள் நடந்து கொள்ளும் போக்கின் மூலம் பளிச்சென்று தெரிகிறது.

நாய் விற்ற காசு குரைக்காது என்ற எண்ணத்தில் ஊடகங்கள் நடந்து கொள்வது வெட்கக் கேடானதாகும்.

காலத்தையும், பொருளையும், அறிவையும், தன்னம்பிக்கையையும் பலி வாங்கும் ஜோதிடத்தை ஒரு மக்கள் நல அரசு தடை செய்ய வேண்டாமா?

அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று வெறும் ஏட்டில் (அரசமைப்புச் சட்டத்தில்) எழுதி வைத்து விட்டால் மட்டும் போதுமா? அதனைச் செயல்படுத்த வேண்டாமா? அறிவியலுக்கு விரோதமானவற்றை வேரோடு வெட்டி எறிய வேண்டாமா?

ஆட்சியில் இருப்பவர்களே மூடநம்பிக்கைவாதிகளாகவும், மண்சோறு தின்பவர்களாகவும், யாகம் நடத்துபவர்களாகவும் இருந்தால் இவற்றை எதிர்பார்க்க முடியாதுதான்
------------------------------ "விடுதலை” தலையங்கம் 31-12-2011

30.12.11

பூணூல் - என்பது இடுப்புக் கோவணம்


கேள்வி: கர்மம் (யாகம்) செய்யும்போது மார்பில் குறுக்காக ஒரு வஸ்திரத்தைக் கட்டிக் கொள்வது சம்பிரதாயம் என்றும், பின்பு அது சில அசௌகரியங்களைக் கருதி நூலாகப் போட்டுக் கொண்டனர் என்றும், பூணூல் குறித்த வரலாறாக ஒரு நூலில் படித்தேன். இது சரியா?


பதில்: பூஜைகள் செய்யும் போது, முகத்தில் வியர்வை வழிந்தால், அது கண்களில் விழாமல் தடுத்து உறிஞ்சி விடுவதற்காக, நெற்றியில் பூசப்பட்ட சாம்பல்தான், பிற்காலத்தில் விபூதி என்று ஆகிவிட்டது

- இப்படி நான் ஒரு கயிறு திரித்து, விபூதிக்கு ஒரு டுபாக்கூர் பகுத்தறிவு விளக்கம் கொடுத்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது, நீங்கள் கூறியிருப்பது.

-------------------------(துக்ளக் - 28.12.2011)

எப்பொழுதுமே சோ ராமசாமியின் தர்க்கம் என்பது இப்படித்தான் இருக்கும். கேட்ட கேள்வி என்ன? பதிலென்ன? கேள்வியில் தவறு இருந்தால்.. அதனைச் சுட்டிக்காட்டி, இதுதான் உண்மை விவரம் என்று கூற வேண்டியது தானே? அப்படி சொல்ல வக்கில்லாமல் வீணாகப் பகுத்தறிவுவாதிகளைச் சீண்டு வானேன்?

பகுத்தறிவுவாதிகளைச் சீண்டுவது ஒருபுறம் இருக்கட்டும்.

இவர்களின் இந்து மத அதிகப் பிரசங்கி - அமெரிக்கா வரை சென்று முழங்கு முழங்கு என்று முழங்கி வந்தாரே வீரத் துறவி என்ற அடை மொழிக்காரர்.

அந்த விவேகானந்தர் தன் சிஷ்யரிடம் பூணூலைப் பற்றி என்ன சொல்லு கிறார்? இதோ:

சுவாமிஜி மேலும் சொல்கிறார்: முடிவில்லாத பிறப்பாகிய மாயையைக் கடக்கும் பொருட்டு ஜீவனுடைய சோகங்களையும், துன்பங்களையும் கருணையினால் அழித்து விடுகின்றவரே உண்மைக் குரு. பழைய காலத்திலே சிஷ்யனானவன் கையில் சமித்துகளை எடுத்துக் கொண்டு குருவினுடைய குடிலுக்குப் போவான். குருவும் அவனுடைய தகுதியை அறிந்து, உளம், சொல், செயல் ஆகிய மூன்றையும் அவன் அடக்கி வைத்திருப்பதற்கு அடையாளமாக முப்புரியாகிய முஞ்சா என்னும் புல்லினை அவனுடைய இடுப்பிலே கட்டி அவனுக்கு தீக்ஷை செய்து வேதங்களைப் போதிப்பார். அரையிலே கட்டிய முப்புரியாகிய அப்புல்லிலே சிஷ்யன் கோவணத்தைக் கட்டிக் கொள்ளுவான். முஞ்சா என்னும் அப்புல்லினால் ஆக்கப்பட்ட கயிற்றுக்குப் பதிலாக முப்புரி நூலை அணிந்து கொள்ளும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டது.

--------------------(ஆதாரம்: சுவாமிவிவேகானந்தர் சம்பாஷணைகள்)

இதே சோ ராமசாமி தான் விவேகானந்தர் இல்லத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதை எதிர்த்து சண்டப் பிரசண்டம் செய்தார். அந்த விவேகானந்தர்தான் பூணூல் - என்பது இடுப்புக் கோவணம் என்றுகூறி விட்டார். சோ நாக்கைப் பிடுங்கிக் கொள் வாரா?

----------------- மயிலாடன் அவர்கள் 30-12-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

எங்களுக்குப் பார்ப்பனர் மீதோ, கடவுள்கள் மீதோ கோபமா?

இழிவை ஒழிக்க வழி

இன்று நமக்குள்ள தராசுக் கொடியானது இந்நாட்டில் எங்கும் காணப்படுகின்ற கொடுமைகளையும், அநீதிகளையும், பேத முறைகளையும் ஒழித்து, ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வு இல்லை என்னும் சமநீதியைக் காட்டுவதற்கு அறிகுறியாக விளங்கு கிறது எனலாம். இந்தக் கொடியில்கூட மாறுதல் ஏற்படலாம்.

ஏனெனில், இதுவரையில் நமக்குப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டிருந்த தென்னிந் திய நல உரிமைச் சங்கமானது பழைய காங்கிரசைப் போல எங்கள் உரிமை களை எங்களுக்கு வழங்குங்கள், எங்களுக்குப் பட்டம், பதவிகள் அளியுங்கள் என்று வேண்டுகிற முறையில் அமைந்திருந்தது. இப்பொ ழுதோ அதே சங்கத்தின் பேரால் அந்த நிலைமாறி பிறருக்கு அவரவர் களுடைய உரிமைகளை வழங்குகின்ற முறையில் நாம் திட்டம் வகுத்துக் கொண்டோம்.

நம்மையும், நம் இனத்தையும், நம் நாட்டையும் உணர்ந்து கொண்டோம். அதன் பலன்தான் இன்றைய தினம் தென் இந்திய நல உரிமைச் சங்கத்தை திராவிடர் கழகம் என்று சொல்லுகிறோம். திராவிடர் கழகம் தொடங்கிய தானது நம்நாட்டு முழுப் பங்கையும் அடைந்து, மற்றவர்களுக்கு அவரவர் பங்கை தகுதிப்படி வழங்குவதற்குப் போராட்டம் தொடங்கியது என்றே கூறலாம். போராட்டம் என்றதும் சிலர் அஞ்சலாம். ஆனால், போராட்டம் நமக்குப் புதியதல்ல - யாராவது கூறட்டும் - இந்த நாடு எக்காலத் திலாவது போராட்டமின்றி சமாதான மாய் இருந்ததா என்பதை ஆதிமுதல் இன்றுவரை எதிலும் போராட்டந்தான்.

முதலில் உண்டானதாகக் கூறப்படும் ஆரியருடைய நாலு வேதங்கள் என்ன? ஆரிய - திராவிடர் போராட் டம், தேவர் - அசுரர் போராட்டம் தானே! இதிகாசங்களில் கூறுகிற விஷ்ணுவின் பத்து அவதாரக் காரணங்கள் தான் என்ன? அவையும் ஆரிய - அரக்கர் போராட்டம் தானே! கந்த புராண கந்தன் - சூரன் போராட்டமும் அதுபோல்தானே? அவை போகட்டும், இந்த நாட்டுச் சரித்திரத்தின் நிலைதான் என்ன? அதுவும் அப்படியேதான்; அதாவது ஆரியமதம் - புத்த மதம்; பிறகு இந்து - முஸ்லிம்தான். ஆகவே, மதத்தின் பேராலும் கடவுளின் பேராலும், நிகழ்ந்து வந்த போராட்டங்கள் எத்தனையோ உண்டு. இன்று காண்பது புதிதல்ல என்கிறோம். இந்தத் தொல்லைகளை ஒழிப்பதற்குப் பழைய முறைகள் அல்லாமல் நாகரிகமான முறையிலே சிந்தனை செய்ததன் பலன்தான் திராவிடர் கழகமாகும்.

சென்ற காலங்களில் இந்தத் தொல்லைகளைத் தொலைத்து உரிமைகளைப் பெறுவதற்காக நம்மவர் கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எத்தனையோ! இன்று மட்டும் அல்ல; எவ்வளவோ காலமாய் நமது முன் னோர்கள் அரும்பாடுபட்டார்கள். காங்கிரசு சபை உண்டாக்கி சத்தி யாக்கிரகமும் நடத்தினார்கள். வேளை தவறாது கோவிலுக்குச் சென்று முறைப்படி கும்பிட்டு வந்தார்கள். கவர்ன்மெண்டோ, கடவுளோ இன்று வரை கவனித்ததாகத் தெரியவில்லை.

நாம் பாடுபடும் மக்கள்; நாம் உழைப்பாளிகள்; நம் கையினால் செய்த பொருள்களே இன்று உலகத்தில் உள்ளன. நம்பாடுகளே இன்று உலகமாக இருக்கின்றன. இது மாத்திரமா! நம்மைப் படைத்ததாகக் கருதப்படும் கடவுளைக்கூட நாமே செய்தோம்; செய்கிறோம்; அவை களைக் காப்பாற்றியும் வருகிறோம். அப்படியிருந்தும் நம்முடைய நிலைமை என்ன? நம்முடைய உரிமைகள் எங்கே? இன்று நமக்குள்ள இழிவுகள் எவ்வளவு? கொஞ்சமா? இத்தனை காலமாகப் பிறர் நமக்குச் செய்வார்கள் என்று நம்பியிருந்தோம். ஏமாந் தோம்.

ஆகவே இனி நாமே வழங்குவோம் என்று கிளம்புகிறோம் இந்த நாட்டு கடவுள்களைப் போலவே. காங்கிரசும் பாமர மக்களிடையே செல்வாக்கும், மதிப்பும், பெருமையும், நம்பிக்கையும் பெற்றது. ஆயினும், இன்றைய வரையிலே இந்த இரு கூட்டத்தாரும் செய்தவை என்ன என்பதை யோசிக்கும் பொழுதுதான் இந்த நிலையிலே ஒரு மாறுபாடு வேண்டும், ஒரு புரட்சி தேவை என்கிறோம். எதற்காகப் புரட்சி? இன்றுள்ள இழிவுகள், குற்றங்கள், அக்கிரமங்கள் ஒழிவதற்காக. இவைகளுக்கு இருப்பிடங்கள் யாவை? காரணகர்த்தர் யார் என்பதை உணர வேண்டும். உணர்ந்து அவற்றை அழிப்பதற்கு ஆவன செய்யவேண்டும். இவைகளைக் கூறினால் நம் பெரியவர்களுக்குக் கோபம் வந்து நமக்கு நாத்திகர், வகுப்புத்துவேஷி என்கிற பட்டமளிக்கின்றனர். நாளைய வரையில் காப்பி ஓட்டலில் உள்ள பேதம் ஒழியவில்லை. உள்ளதைக் கூறினால் இவர்களுக்குக் கோபம் வருகிறது. இவர்களைச் சூத்திரன் என்றும், பார்ப்பன தாசர் என்றும் வைப்பாட்டி மக்கள் என்றும், அவர்கள் கூப்பிடுவதுகூட இவர்களுடைய விஷ யத்தில் சரிதான் என்றே படுகின்றது.

எங்களுக்குப் பார்ப்பனர் மீதோ, கடவுள்கள் மீதோ கோபமா? அல்லது கொடுமையா? உலகம் எவ்வளவு விரைவாக முன்னேறி வருகிறது! மணிக்கு நாலு மைல் நடந்தவன் ஆகாயத்தில் நானூறு மைல் வேகத் தில் பறக்கிறான், மணிக்கு 4 மைல் போன சேதி, மணிக்கு 4000 மைல் பேசுகிறது, மற்றும் பேசும்படம், ரேடியோ முதலிய அதிசயங்கள், அற்புதங்கள் எத்தனை இருக்கின்றன! நாம் மட்டும் நாளடைவில் கண்ணை மூடிக்கொண்டே காட்டுமிராண்டி வாழ்க்கைக்குப் போய்க் கொண்டிருக் கிறோம். இன்னும் சூத்திரனாகவே பறையனாகவே இருக்கிறோம். இதற்குச் சாதகமானவை எதாயிருந் தாலும் ஒழித்தால்தானே முன்னேற முடியும்? இவ்வளவு அறிவும், ஆராய்ச் சியும் நிரம்பிய காலத்தில்கூட தோலைக்கட்டிக் கொண்டு, சாம் பலைப் பூசி, எலும்பை அணிந்து, கையில் அரிவாளுடன் காலின்கீழ் மனிதனை மிதித்துக்கொண்டிருக்கும் ஒரு காட்டுமிராண்டி காலத்துக் கடவுளைக் கும்பிடலாமா? இன்றைய நிலைமைக்கு 6000 மைலுக்கு அப்பாலுள்ள லண்டன், நியூயார்க், பெர்லின், பாரிஸ், டோக்கியோ முதலிய எந்த ஊரையும் ஒரு சிறு பொத்தானைத் திருகுவதன் மூலம் நேரில் கேட்கவைக்கின்ற ரேடியோ வையல்லவா - அதைச் செய்வதனையல்லவா கடவுளாகக் கும்பிட வேண்டும்? அந்த அறிவைப் பெற வல்லவா முயல வேண்டும்.

காலத் திற்கேற்ப நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டாமா? இதைக் கூறினால் தவறா? இந்த விஷயத்தில் மாத்திரம் சமயத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளக் கூடாது; பெரிய புராணம், ராமாயணம், கீதை படிப்பதில் மட்டும் சமயத்திற்கும் இடத்துக்கும் தக்கபடி அர்த்தம் மாற்றிக் கொள்ளலாம் என்றால் என்ன நியாயம்? இதிகாச புராணங்களைக் குறைகூறியவுடன் இன்றைக்கு நாட்டில் இராமா யணம், கீதை படிப்பது அதிகமாகி வருகிறது. டாக்டர் அம்பேத்கர் கூறிய படி, கீதையை ஒரு மதநூல் என்பதை விட, ஒரு ஜாதியின் ஆதிக்கத் தந்திர நூல் என்று சொல்லலாம். ஒரு பக்கத் தில் நானே எல்லா ஜீவனுக்குள்ளும் பேதமின்றி நிறைந்திருப்பவன் என்றும், மற்றொரு பக்கத்தில், நானே பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரரென்ற நால் வருணங்களை உண்டாக்கி, சூத்திரரைப் பிறருக்கு அடிமையாக்கினேன். ஆகையால் அவன் அடிமையாகவே இருக்க வேண்டும் என்றும் கூறுவதுதானே கீதை? இதைப் படிப்பது பக்தியா என்று எடுத்துக் கூறிவிட்டால், அதை தவறு, பாவம் என்று சொன்னால் அது என்ன நீதி என்று கேட்கிறோம்.

இந்த நாட்டு அறிவாளிகள், பக்தர் கள், புலவர்கள் நாளையவரையில் எது கடவுள்? என்பதற்கு என்ன கூறினார்கள்? இவர்களால் என்ன கூற முடியும்? கடவுளைப் பற்றி எல்லாம் அறிந்தவர் போலவும், அவருக்கு நேரான வாரிசுக்காரர் போலவும், பேச வருகின்றனரே, கடவுளையே கேட்டுப் பார்த்திருப் பார்களா? இன்றைய தினம் வரையில், உனது வருஷ வருமானம் எவ்வளவு, செலவு எவ்வளவு, எந்த வகையிலே செலவழித்தாய் என்று யாராவது கேட்கிறார்களா? தமிழ்நாட்டில் சுமார் 3000 கோவில்களின் வருஷ வரு மானம் 2ஙூ கோடி ரூபாய். அதாவது, ஆண்டு ஒன்றுக்கு 250 முதல் 20 லட்சம் ரூபாய் வரையில் வரும்படி வருகின்ற கோவில்கள் நம் நாட்டில் சுமார் 3000 என்றால், அவ்வளவு பொருளும் அநாவசியமான முறையில் செலவாகிறது என்றால், இதைப் போன்ற அக்கிரமம் இந்த உலகத்தில் வேறெங்காவது காணமுடியுமா? இதைச் சொன்னால் பொல்லா தவனா? கடவுள் என்றால் நமக்குப் புரியாத, ஆனால் மிகவும் நம்பிக்கை யான இடமாக இருக்கின்றது. கடவுள் இல்லை என்று இதுவரையில் நாங்கள் சொன்னதில்லை. எது கடவுள் என்கின்றோம். கடவுள் பெயரால் நடக்கின்ற தீமைகள், அநியாயமான காரியங்கள், இவைகளைச் சரியா என்றும், இந்த அக்கிரமங்களை கடவுள் அனுமதிக்கலாமா என்றும் கேட்கிறோம். இதுதான் நாத்திகமா? நாத்திகம் என்றால் முதலில் உங்க ளுக்கே புரியுமா என்று கேட்கிறோம்.

உழைப்பாளி மக்கள் உணவு உடை இல்லாமல் கஷ்டப்படுகின்ற நிலையில் புரோகிதர் பூணூலைக் கை முதலாகக் கொண்டு எவ்வளவு சுலபமாக மேன்மையான வாழ்வு வாழ்கின்றனர். பிறர் தயவினால் ஒரு சிறிய ஓட்டலை தொடங்குகிறான் ஒரு பார்ப்பனன். நாளடைவில் சாமியாகவும், ஒரு முதலாளியாகவும் ஆகி விடுகிறார். காப்பிக் கடையில் கணேசர் முதல் காந்தி, சாயிபாபா வரையில் படங்கள் தொங்குகின்றன. பிராமணாளுக்கு மாத்திரம் என்று பலகையும் தொங்கு கிறது. பின்னர் அங்கே இரண்டு, மூன்று பார்ப்பனப் பத்திரிகைகள், ஆகவே அது ஒரு சிறந்த ஆஸ்திக காங்கிரஸ் பிரசார நிலையமாகவும், ஜாதி பிரித்துக் காட்டும் ஸ்தாபன மாகவும் ஆகி விடுகிறது. இப்படித் தானே இருக்கிறது இவர்கள் (ஆஸ்திகர்கள்) முன்னேற்றம்! இவர் களுக்குத் துணையாக உள்ளவை தானே இந்த நாட்டில் உள்ள தேசியப் பார்ப்பனப் பத்திரிகைகளும், எப்படியாவது நம் மீது கெட்ட அபிப்பிராயத்தை உண்டாக்கி ஒழிக்கப்பார்ப்பது தானே, இவர்கள் வேலையாகி விட்டது.

ஆதலால், இம்மாதிரியான எதிர்ப் பிரசாரங்களாலும், போலிச் செய்தி களாலும் மக்கள் ஏமாந்து போகாமல் நாட்டினுடைய உண்மையான நிலை, நாட்டு முன்னேற்றத்துக்குச் சரியான வழி ஆகியவற்றை உணர்ந்து அதற்கு ஏற்ற வழியிலே முயற்சியுடன் நடந்து வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். மேலும், நான் அடிக்கடி கூறி வருவது போல நமது சமுகத்துக்கு நீங்காத மலேரியாக் காய்ச்சல் கண்டிருக்கிறது. இதற்குக் காரணம் கொசுவென்று அறிந்தவுடன், கொசுவலை போட்டுக் கொண்டால் மட்டும் போதாது.

கொசு உண்டாவ தற்கு மூலகாரணமான சாக்கடைகள், அழுக்குக் குட்டைகள், குப்பை கூளங் கள் ஆகியவற்றை அடியோடு ஒழித்துச் சுத்தமாக்கினால்தான் கொசுக் கள் ஒழியும். மலேரியாக் காய்ச்சலும் நீங்கும். அந்த அசுத்த அழுக்குக் குட்டைதான் புராணம், கீதை, புரோ கிதம், கோவில்களாய் இருக்கின்றன. அங்கு இருந்துதான் இந்த கொசு பிறக்கிறது. அவைகளை அகற்றுங்கள்.

----------------17.12.1944 அன்று சேலம் பொத்தனூரில் திராவிடர் கழகத் திறப்பு விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு - ”குடிஅரசு” - சொற்பொழிவு - 23.12.1944

29.12.11

கடவுள் சக்தி - தந்தை பெரியார்

குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்து, குடும்பம் பெருத்துவிட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணத்தில் சொல்லுகிறது. குசேலர் பெண்ஜாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும் கைக் குழந்தைக்கு ஒரு வருஷமாயிருக்குமானால் மூத்த பிள்ளைக்கு 27 வருஷமாவது ஆகியிருக்க வேண்டும். ஆகவே 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்களா? இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசு கூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப்பார்கள்? 20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருந்திருக்காதா? அல்லது இந்தப் பிள்ளைகளுக்காவது மான அவமானமிருந்திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக்காவது, என்ன? பெரிய பெரிய வயது வந்த பிள்ளைகளைத் தடிப்பயல்களாட்டமாய் வைத்துக் கொண்டு பிச்சைக்கு வந்தாயே வெட்கமில்லையா? என்று கேட்கக் கூடிய புத்தி இருந்திருக்காதா?

கேள்வி:- என்னடா உனக்கு கடவுள் இல்லையென்று சொல்லுகின்ற அளவு தைரியம் வந்து விட்டதா?

பதில்:- அவர்தான் மனோ வாக்குக் காயங்களுக்கு எட்டாதவரென்று சொன்னாயே! அவரை நான் உண்டு என்று சொன்னால் நீயே உனக்கு எப்படித் தெரியும்? என்று கேட்பாயே. அதனால்தான் என் புத்திக்கு எட்டாததையும், தெரியாததையும் நான் ஒப்புக் கொள்வதில்லை என்று சொல்லிவிட்டேன். இதில் என்ன தப்பு?

கேள்வி:- கடவுள் கருணாநிதி அல்லவா?

பதில்:- கடவுளே நமது மனதுக்கும், காயத்துக்கும் எட்டாதவராயிருக்கும்போது அவர் கருணாநிதி என்பது உனக்கு எப்படித் தெரிந்தது?

-------------------- "பகுத்தறிவு", ஜூலை - 1935.

நமது கடவுள்கள் சக்தி மிகவும் அதிசயமானதாகும். அதாவது நமது கடவுள்கள் உலகில் மக்களை அக்கிரமங்கள் செய்யவொட்டாமல் தடுக்க முடியாதாம்.

*****

ஆனால், மக்கள் சந்து பொந்துகளிலும், மூலை முடுக்குகளிலும் யாருக்கும் தெரியாமல் செய்த குற்றங்களையும் மனதினால் நினைத்த அக்கிரமங்களைப் பார்த்தும் ஒன்று கூட விடாமல் பதிய வைத்தும், அதற்குத் தகுந்தபடி தீர்ப்புக் கூறி, தண்டனை கிண்டனை கொடுக்கவும், அதற்காக நரகத்தில் ஆழ்த்தி வைக்கவும், மற்றும் பல ஜன்மங்கள் கொடுத்து, அவற்றில் கஷ்டப்படுத்தி வைக்கவும் முடியுமாம்.

*****

நமது கடவுள்கள் சக்தி எவ்வளவு அதிசயமானது!

*****

அதிலும் மகமதியர்களுடைய கடவுளும், கிறித்தவர்களுடைய கடவுளும் மனிதன் செத்த பிறகு எல்லோர் குற்றம் குறைகளையும் ஒன்றாய் பதிய வைத்திருந்து, ஏதோ அதற்கு இஷ்டப்பட்ட நாளில் அதாவது, ஒரு குறிப்பிட்ட நாளில் எல்லா மக்களையும் அவர்கள் புதைக்கப்பட்ட புதை குழியிலிருந்து எழுப்பி கணக்குப் பார்த்து ஒரே அடியாய் தீர்ப்புச் சொல்லிவிடுமாம்.

*****

இந்துக்களுடைய கடவுள்கள் அதாவது, சைவர்கள் கடவுள்களும், வைணவர்களுடைய கடவுள்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியாகவே அவ்வப்போது அவனைச் சுட்டு எரித்த பின் கண்களுக்குத் தெரியாத அவனுடைய ஆத்மாவைப் பிடித்து வைத்து, அதற்கு ஒரு சூட்சம சரீரமும் கொடுத்து, அந்தச் சரீரத்திற்கு அதற்குத்தக்க தண்டனை கொடுக்குமாம். அது பெரிதும் அடுத்த ஜென்மத்தில் இன்னின்ன ஜந்துவாய் பிறந்து, இன்னின்ன பலன் அனுபவிக்க வேண்டும் என்று கட்டளையிடுமாம்.

*****

கிறித்து சமயத்தில் உள்ள கடவுள் சக்திப்படி எல்லா மனிதனும் பாவம் செய்தேதான் தீருவானாம்.

*****

அந்தப் பாவம் ஏசுகிறித்து மூலம்தான் மன்னிக்கப்படுமாம்.

*****

மகம்மதிய மார்க்கப்படி மகம்மது நபிகள் மூலமாகத்தான் மன்னிக்கப்படுமாம்.

*****

சைவ சமயப்படி சிவன் மூலமாகத்தான் மன்னிக்கப்படுமாம். அவருக்குத்தான் பரத்துவம் உண்டாம்.

*****

வைணவ சமயப்படி விஷ்ணு மூலமாகத்தான் முடியுமாம். விஷ்ணுவுக்குத்தான் பரத்துவம் உண்டாம்.

*****

ஆனால் சைவ, வைணவ சமயங்கள்படி மக்கள் பாவமே செய்வது மாத்திரமல்லாமல் புண்ணியமும் செய்யக்கூடுமாம்.

*****

அதற்காக சொர்க்கம், வைகுண்டம், கைலாசம் என்கின்ற பதவிகள் உண்டாம்.

*****

அப்புறம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஜன்மங்களும் உண்டாம்.

*****

இந்த அபிப்பிராயங்கள் எவ்வளவு குழப்பமானதாய் இருந்தாலும், பார்ப்பானுக்கு அழுதால் மேல் கண்ட மோட்சங்களோ அல்லது நல்ல ஜன்மமோ எது வேண்டுமோ அது கிடைத்துவிடுமாம்.

*****

ஆகவே, பொதுவாகக் கடவுளுடைய சக்திகள் அளவிட முடியாது என்பதோடு, அறிந்து கொள்ள முடியாது என்பது மாத்திரமல்லாமல் அதைப் பற்றியெல்லாம் நாம் சிந்திப்பதோ, சிந்திக்க முயற்சிப்பதோ மகாமகா பெரிய பெரிய பாவமாம்.
அதாவது, எந்தப் பாவத்தைச் செய்தாலும், எவ்வளவு பாவத்தைச் செய்தாலும், அவற்றுக்கெல்லாம் பிராயச்சித்தமும், மன்னிப்புமுண்டாம்.

*****

ஆனால், கடவுளைப் பற்றியோ, அவரது சக்தியைப் பற்றியோ ஏதாவது எவனாவது சந்தேகப்பட்டு விட்டானோ பிடித்தது மீளாத சனியன்.

*****

அவனுக்கு மன்னிப்பே கிடையாது. கிறித்துநாதரைப் பிடித்தாலும் சரி, மகம்மது நபி பெருமானைப் பிடித்தாலும் சரி அல்லது இவன் விஷ்ணு, மகேசன் ஆகிய எவரைப் பிடித்தாலும் சரி, ஒரு நாளும் அந்தக் குற்றம் (எந்தக் குற்றம்) கடவுளைச் சந்தேகிக்கப்பட்ட குற்றமா? மன்னிக்கப்படவே மாட்டாது.

*****

ஆனால், இந்த எல்லாக் கடவுள்களுக்கும் அவர்களால் அனுப்பப்பட்ட பெரியார்களுக்கும், அவர்களுடைய அவதாரங்களுக்கும், கடவுளைப் பற்றியும், அவர்களுடைய சக்தியின் பெருமைகளைப் பற்றியும் மக்கள் சந்தேகப்படாமல் இருக்கும்படிக்கோ அல்லது அவநம்பிக்கைப்படாமல் இருக்கும்படிக்கோ செய்விக்க முடியாதாம்.

*****

ஏனென்றால், அவ்வளவு நல்ல சாதுவான சாந்தமான கருணையுள்ள சர்வ சக்தி பொருந்திய சர்வ வியாபகமுள்ள கடவுள்களாம்.

*****

பாவம் நாம் ஏன் அவற்றைத் தொந்தரவு செய்ய வேண்டும்.

*****

எல்லாம் கடவுள் செயல் என்று சும்மா இருந்து விடுவோம்.


--------------------- தந்தைபெரியார் - “பகுத்தறிவு”, செப்டம்பர் - 1935

28.12.11

அன்னா ஹசாரே குழுவினரை நோக்கி சில வினாக்கள்!


ஊழல் ஒழிப்பு அவதாரங்களை நோக்கி சில வினாக்கள்!

காந்தியார் குல்லாய் அணிந்து நாட்டையே ஊழல் புயலில் இருந்து காப்பாற்றிட ஒரு பரிசுத்த யோவான் புறப்பட்டுள்ளார். அவர் பெயர் அன்னா ஹசாரே.

நாட்டில் ஊழல்கள் புழுத்துவிட்டன; உண்மைதான், அவை ஒழிக்கப்பட வேண்டியதுதான், தேவைதான்.

அதை ஒழித்துக்கட்டுவதற்கு முன்வந்துள்ளாரே - இவர் யார்? வைத்தியரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்! என்று சொல்வதுண்டு.

ஊழலை ஒழிக்கப் புறப்பட்டதாக அவதாரம் எடுத்துள்ளவர்களையும், அவர்களின் பக்க வாத்திய ஊடகங்களையும் நோக்கி சில வினாக்கள்:

1. அன்னா ஹசாரே மற்றும் அவர் குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களா? இவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாற்றுகளுக்கு இது வரை முறையான பதில்கள் கிடைக்கப் பெற் றனவா?

2. பிரதமர் உள்பட இந்த லோக்பாலுக்குள் கொண்டு வரவேண்டும் என்று சொல்கிறார் களே - அப்படியென்றால் இவர்கள் பிரதமர் பதவிக்கும் மேலான அதிகாரம் படைத்தவர்களா?

3. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் பின் தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் எப்படி ஒரு குழுவின் முன் கைகட்டி நிற்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்?

4. அன்னா ஹசாரேவைச் சுற்றி இருப்பவர்கள் - அந்தக் குழுவினர் எந்த அடிப்படை யில் தகுதியில் சேர்க்கப்பட்டுள்ளனர்?

5. ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர்கள் லோக்பால் குழுவில் இடம்பெறுவர் என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எதற்கு? பூனைக்குப் பேன் பார்க்கவா?

6. சகல அதிகாரம் படைத்ததாகக் கருதப் படும் நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் எதற்கு? உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்குமேல் தீர்ப்புக் கூறும் அதிகாரம் படைத்தவர்களா இவர்கள்?

7. சரி, இந்த லோக்பால் குழுவைச் சேர்ந்தவர்கள் தவறு செய்தால் - இவர்களை விசாரிக்கும் அமைப்பு எது?

8. அன்னா ஹசாரேயை சுற்றி பி.ஜே.பி.யும், சங்பரிவாரைச் சேர்ந்தவர்களும் சூழ்ந்து காணப்படுகின்றனரே - இந்த நிலையில், இவர்கள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கிறார்களா?

9. நாங்கள் சொன்ன ஆலோசனையின் பெயரில்தான் அன்னா ஹசாரே இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார் என்று ஆர்.எஸ்.எஸின் தலைவர் விஷ்ணு பகவத் போட்டு உடைத்தாரே - இதுவரை இதற்கு மறுப்புக் கூறப்பட்டதா?

10. லோக்பால் குழுவில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் அங்கம் வகிக்கவேண்டும் என்ற கருத்து உருவாக்கத் தில் சிறுபான்மையினரை இடம்பெறச் செய்யக் கூடாது என்று பி.ஜே.பி.யினர் கூறுவது இந்துத்துவா மனப்பான்மைதானே?

அப்படிப் பார்க்கப் போனால், தாழ்த்தப்பட் டோர், பிற்படுத்தப்பட்டோர் இடம்பெறுகிறார் களே - அவர்கள் இந்துக்கள் இல்லையா? இது மட்டும் மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆகமாட் டார்களா? சமூகநீதியைப் புறந்தள்ளுவதுகூட மதவாதம் அல்லவா?

11. அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு தழுவிய அளவில் பட்டினிப் போராட்டம் இருக் கிறார்களே - இவர்கள் எல்லாம் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களா?

12. சினிமாக்காரர்கள்கூட இதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்களே - இவர்கள் கறுப்புப் பணம் வாங்குவதில்லையா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நாணயமான முறையில் விடையைத் தெரிவித்துவிட்டு, ஊழலைப்பற்றிப் பேசினால், அதற்குப் பெயர் தான் அறிவு நாணயம் என்பது!

-------------------"விடுதலை” தலையங்கம் 26-12-2011

27.12.11

கூடங்குளம் பிரச்சினை பற்றி - கி.வீரமணி

சைக்கிள்கள் மீண்டும் தொடக்கம் முல்லைப் பெரியாறு, கூடங்குளம் தீர்வென்ன? செய்தியாளர்கள் கேள்விக்கு தமிழர் தலைவர் பதில்

பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி அவர்கள் சைக்கிள் பயணத்தை துவக்கிவைத்தார் (25.12.2011).

எரிபொருள் சிக்கனத்திற்காகவும், உடல் நலம் பேணுவதற்காகவும் சைக்கிள் பேரணியைத் தொடங்கி வைத்ததோடு அல்லாமல் அடுத்து முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக் கும், கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்சினைக்கும் தீர்வு என்ன என்பதை தமிழர் தலை வர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் விளக் கினார்.

தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இரு சக்கர எரிபொருள் வாகனத்திற்குப் பதிலாக சைக்கிளை வளாகத்திற்குள்ளே அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி சைக்கிள் பயணத்தை 25.12.2011 அன்று வல்லத்தில் துவக்கி வைத்தபொழுது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

சமீபத்தில் தைவான் சீனாவிற்குச் சென்றிருந்தோம். சீனம் எவ்வளவு பெரிய புரட்சிக்கு ஆளாகியிருக்கிறது என்பதை பார்க்கக்கூடியவகையில் மிகப் பெரிய பாடங்களைக் கற்க வேண்டிய, தெரிந்துகொள்ள வேண் டிய மாணவர்களாக நாங்களும் ஆக்கப் பட்டோம்.

அதிலே மிக முக்கியமான ஒன்று பல்கலைக் கழக வளாகம். இதுபோன்று நூறு ஏக்கராவிற்கு மேலே இருக்கின்ற பீஜிங் பல்கலைக் கழகம் அந்த பல்கலைக் கழகத்தில்தான் புரட்சியாளர் மாசேதுங் அவர்கள் நூலகத்தின் உதவியாளராக இருந்திருக்கின்றார் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பாகும்.

அந்தப் பல்கலைக் கழகத்தினுடைய நிகழ்ச்சியில் பார்த்தபொழுது அந்த வளாகம் முழுவதும் இளம் மாணவர்கள், பேராசிரியர்கள் எல்லாம் அங்கே யாரும் கார்களையோ அல்லது நம்முடைய நாட்டிலே ஊரிலே இருப்பதைப் போல வேகமாகப் புகையைக் கிளப்பக்கூடிய இருசக்கர வாகனங்களையோ பயன்படுத்தவில்லை.

மாறாக சைக்கிள்களையே அதாவது ஈருருளை என்றழைக்கக்கூடிய அந்த மிதிவண்டிகளையே அதிகமாக அவர்கள் பயன்படுத்துகின்றார்கள்.

அதை ஒரு திட்டமாகவே வேலை முறையாகவே கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி விசாரித்த பொழுது இதை எங்களுக்கு ஆசிரியர்கள் வற்புறுத்தியிருக்கிறார்கள் எங்களுக்கும் மகிழ்ச்சி யாக இருக்கிறது.

சைக்கிள் வீட்டுக்கும் - நாட்டுக்கும் நல்லது

ஒன்று எங்கள் உடல் நலத்திற்கு இது நல்ல பயிற்சியாக அமைகிறது. இரண்டாவது சுற்றுச் சூழல் மாசுபடாமல் காப்பாற்றப்படுகிறது.

மூன்றாவதாக ஒரு தனித்துவமான தன்னம்பிக்கை அதிலே உருவாகிறது. எரிபொருள் சிக்கனமும் அதில் இருக்கிறது. இத்தனையும் நாட்டுக்கும், சமுதாயத்திற்கும், தனி நபருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று சொன்னார்கள். அதைப் பற்றி நாங்கள் விவாதித்தோம்.

எந்தப் பணியாக இருந்தாலும் நாம் சிறிய அளவிலே தொடங்கினால் அது பெரிய அளவிலே மக்களுக்குப் பயன்படும் என்ற அளவிலே இன்றைக்கு இந்தப் பல்கலைக் கழகத்திலே சைக்கிள்களைப் பயன்படுத்த முன்வந்துள்ளோம். அண்மைக் காலத்திலே எப்படி டைப் ரைட்டர்கள் மறைந்து வருகின்றனவோ அதுபோல சைக்கிள்கள் மறைந்து வருகின்றன.

அதற்குப் பதிலாக ஏராளமாக எளிதில் கடன் கொடுக்கிறார்கள் என்பதற்காக மிகப் பெரிய அளவிற்கு தும்பு - தூசியை உருவாக்கக்கூடிய, எரிபொருளை வீணாக்கக்கூடிய மோட்டார் சைக்கிளை வாங்குகிறார்கள்.

ஆகவே அதற்குப் பதிலாக சைக்கிள்களைப் பயன்படுத்துவது எல்லா வகையிலும் நல்லது என்று நினைத்தோம். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் உடற் பயிற்சிக்குப் பதிலாக ஒரு அரைமணி நேரம் கேம்பஸ்சுக்குள் அவர்கள் சைக்கிளில் சுற்றினாலே எல்லோருக்கும் நல்லது. மருத்துவர்களிடம் செல்லுகின்ற பணியை குறைக்கும். நல்ல உடல் நலத்துடன் இருக்கக்கூடிய வாய்ப்புகள் அவர் களுக்குக் கிடைக்கும். வெளியில் இருக்கக்கூடிய திராவிடர் கழக இளைஞரணியினருக்கு இதை நாங்கள் ஒரு இயக்கமாக நடத்தி சைக்கிள்கள் மீண்டும் என்று சொல்லக்கூடிய அளவிலே வந்திருக்கிறது.

அரசாங்கம் கூட உயர்நிலைப் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கியிருப்பது நல்ல திட்டம். அதை எல்லா இடங்களிலும் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் இதைப் பயன்படுத்துவதற்கு இதை ஒரு ஊக்கமுறையாக தூண்டுகோலாக அமையும் என்று கருதி இந்தப் பணியை செய்கின்றோம். இது வளர வேண்டும்.

வல்லம் வழிகாட்டுகிறது!

சிறு அளவில் இன்றைக்குத் துவக்கப்பட்டா லும், தஞ்சை வல்லத்தில் துவக்கப்பட்டாலும் வல்லம் வழிகாட்டுகிறது என்று சொல்லக்கூடிய அளவிலே அமையும் என்று சொல்லி இந்த முறையை அமல்படுத்துகிறோம்.

மாணவர்களும், மற்றவர்களும் இதில் சிறப்பாகப் பயன்பெற வேண்டும். உடல் நலத்தில் அக்கறை உள்ளவர்களும், சுற்றுச்சூழலை பாது காக்கக் கூடிய ஆர்வலர்களும் கரியமிலவாயுவைத் தடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்தப் பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

இதை ஊடகங்களிலே இருக்கக்கூடிய செய்தியாளர்களான நீங்களேகூட வலியுறுத்தி மிகப்பெரிய அளவிலே ஒரு பிரச்சார இயக்கமாக ஆக்கிச் செய்தால் நல்லது. ஊடகத்தினுடைய வலிமை இன்றைக்குக் குறிப்பிடத்தக்கது. எனவே உங்க ளுடைய ஒத்துழைப்பையும் நாடுகின்றோம்.

முல்லைப் பெரியாறு பற்றி

செய்தியாளர்:முல்லைப்பெரியாறு விசயமாக நேற்று நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தார்கள். அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

தமிழர் தலைவர்: முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை உச்சநீதிமன்றத்திலே வழக்காகப் போடப்பட்டிருக்கிறது. 142 அடி உயரம் உயர்த்தலாம் என்று தெளிவாகவே ஏற்கெனவே நிபுணர்கள் குழு சொல்லிவிட்டது. எத்தனை நிபுணர்குழு போடுவது? நிபுணர் குழுவுக்கு மேல் நிபுணர் குழு போட்டுக் கொண்டிருப்பதிருக் கிறதே அது தேவையற்றது.

மத்தியஅரசைப் பொறுத்தவரையிலே அவர்கள் உடனடியாக இதில் தலையிட்டு உச்ச நீதிமன்றத்தினுடைய தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்கு மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையை அனுப்ப வேண்டும். தமிழர்கள் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். அதுபோலவே மத்திய அரசு உடனடியாக செயல்படுவதற்கு மாநில அரசுகளுக்குத் தாக்கீது கொடுக்க வேண்டும்.

அதுவும் குறிப்பாக இந்தப் பிரச்சினை ஏன் திடீரென்று முளைத்தது?

நிபுணர்குழுஆனந்த்அவர்களுடைய தலைமையிலே போடப்பட்டுள்ளது. அதற்கு மேலே தேசிய பேரிடர் நிபுணர் குழு என்று போடுவதிருக்கிறதே அது யாரைத் திருப்தி செய்ய போட்டது என்பதே புரியவில்லை. ஆகவே அது தவிர்க்கப்பட வேண்டும். இதுபோன்று குழுக் களுக்கு மேல் குழுக்கள் போட்டு பிரச்சினையை மேலும் சிக்கலாக்கிக் கொள்ளக் கூடாது.

கேரள அரசு உச்சநீதிமன்றத்திற்குக் கட்டுப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசே விரைவுபடுத்திச் சொல்லுங்கள் என்று ஒரு நிலைப்பாட்டை எடுத்துச் சொல்வதும், அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்று சொல்வதும் மிக, மிக முக்கியமான ஒன்று. இன்னும் கேட்டால் இந்திய அரசியல் சட்டத்தில் 365, தயவு செய்து யாரும் 356ரை பழக்கத்தில் நினைத்துக் கொண்டு போட்டு விடாதீர்கள். 356 என்பது ஆட்சிகளை கலைப்பது. 365 என்பது வேறு.

இந்த 365ஆவது விதிப்படி பார்த்தால் தாக்கீது மீது பயன்படாத அரசுகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்பது தெளிவாக இருக்கிறது. அதைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் தயங்கமாட்டோம் என்று மத்திய அரசு சொல்ல வேண்டும். இந்தக் கருத்தை உங்கள் மூலமாக மத்திய அரசுக்குக் குறிப்பாக பிரதமருக்கும், மற்ற வர்களுக்கும் மிகப்பெரிய அளவிலே தெளிவாகத் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழர்கள் அமைதி யாக இருக்கிற காரணத்தால் அடி வாங்குவதற் காகப் பிறந்தவர்கள் என்ற எண்ணம் கேரள அரசுக்கும் வரக்கூடாது. அரசியல் கட்சிகளுக்கும் வரக்கூடாது. மத்திய அரசும் இதை வேடிக்கைப் பார்க்கக் கூடாது.

கூடங்குளம் பிரச்சினை

செய்தியாளர்: கூடங்குளம் பிரச்சினை பற்றி உங்கள் கருத்தென்ன?

தமிழர் தலைவர்: கூடங்குளம் பிரச்சினையைப் பொறுத்த வரையிலே அணுசக்தி இல்லாமல் இனிமேல் மின்சாரம் இயங்க முடியாது. நீர்விசை முடிந்துவிட்டது. அதுபோல காற்றாலை மூலம் மின்சாரம் நிரந்தரமாகக் கிடைக்காது. அனல் மின்சாரத்திற்கு சில தடைகள் இருக் கின்றன. நிலக்கரியை வரவழைக்க முடியாது. ஆறுகளும் வற்றிவிட்டன.

கடைசியாக, அறிவியல் பூர்வமாக இருப்பது அணுசக்தி. எனவே அதை அறவே நாம் மூடிவிட வேண்டும் என்று சொல்வதிருக்கிறது பாருங்கள் அது பகுத்தறிவு அடிப்படையிலோ, நடைமுறைக்கு ஒத்ததோ அல்ல. பாதுகாப்பு வேண்டும் என்று மக்கள் கேட்கிறபொழுது அந்த பாதுகாப்புக்கு அச்சத்தை நீக்க வேண்டிய கடமை குறிப்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.

அவர்கள்அதை செய்ய வேண்டும். இன்னும் கேட்டால்அப்துல்கலாம்போன்றவர்கள் தெளிவாகச் சொல்லும் பொழுது நாம் அவரையே எதிர்த்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

இன்னும் கேட்டால் சுற்றுச் சூழலிலே வாழக் கூடிய கிராம மக்கள் அவர்களுக்கெல்லாம் பாதுகாப்பு உண்டு. இதுவரையிலே சுனாமி வந்தால் கூட ஆபத்து வராது என்ற நிலையிலே இருக்கிறார்கள். அதைப்பற்றி நிபுணர்கள் சொல்லியிருக்கின்றார்கள். எனவே அந்த மக்களைப் பொறுத்த வரையிலே தவறான கருத்துகள் இருப்பதை எல்லாம் நீக்க வேண்டும். இன்னும் ஒருபடி மேலே போய் சுற்று வட்டாரத்திலே இருக்கக் கூடிய பல கிராமங்கள் இந்த மக்களுக்கெல்லாம் வாழ்வாதாரமாக மத்திய அரசே இலவசமாக ஆயுள் காப்பீட்டைச் செய்யும் என்ற ஒரு திட்டத்தை அவர்கள் கொண்டு வந்து நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். ஏதாவது மீறி விபத்துகள் மற்றது நடந்தால் எல்லா இடத்திலும் வரும். இன்னொரு கருத்து என்னவென்றால் விமானத்தில் போகிறோம். விபத்து நடக்கிறது அதற்காக விமானத்தையே நிறுத்திவிட வேண்டும் என்று நாம் சொல்ல முடியாது. கார்களில் போகிறோம் விபத்து நடக்கிறது. எனவே உயிர்களை அலட்சியப்படுத்துகிறோம் என்பதல்ல. அதே நேரத்தில் இன்றைக்கு மின்சாரம் இல்லாமல் வாழ்க்கை கிடையாது. கடவுள் இல்லாமல் வாழலாம். இதுதான் உண்மை.

செய்தியாளர்:கூடங்குளம் - சிலபேர் எதிர்த்துக் கொண்டிருக்கிறார்களே!

தமிழர் தலைவர்:அவர்களுக்கு அச்சம் இருக்கலாம். அந்த கருத்திலே நான் உள்ளே நுழைய விரும்பவில்லை. மக்களுக்கு நியாயமான அச்சம் இருக்கும் பொழுது அதைப்போக்க வேண்டியது அரசாங்கத்தினுடைய கடமை.

ஆகவே இதில் இவர் தவறு பண்ணுகிறார். அவர் தவறு பண்ணுகிறார் என்று மக்களிடையே ஒரு எரிச்சலை உண்டு பண்ணக் கூடாது.

இப்பொழுது எரிகிற நெருப்புக்கு நீங்கள் அணைக்க உதவி பண்ண வேண்டுமே தவிர, அணைக்கிறோம் என்று சொல்லி பெட்ரோலை ஊற்றக் கூடாது (சிரிப்பு).
- இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி கூறினார்.

---------------------"விடுதலை” 27-12-2011

அயோக்கியதனம் எது? யோசித்துப் பாருங்கள் -பெரியார்

அயோக்கியதனம் எது? நன்றாய்க் கொழுக்கட்டை போலும், மணலில் பிடுங்கிய கிழங்கு போலும் இருந்து கொண்டு ஐயா மூன்று நாளாகக் கஞ்சியே காணவில்லை. காலணா தருமம் கொடுங்கோ என்று கேட்பது அயோக்கியத்தனம். ஆனால், அதுபோலவே இருந்து கொண்டு யாதொருவிதமான பாடும் படாமல் தன் பெரியோர்கள் சம்பாதித்து வைத்து விட்டுப்போனார்கள் என்றோ, பரம்பரை சொத்து பாத்தியத்தில் கிடைத்தது என்றோ பெரும் செல்வத்தை வைத்துக் கொண்டு சுகபோகமாய் இருப்பதாகக் கருதிக் கொண்டு சோம்பேறியாய் இருந்து வாழ்ந்து கொண்டு இருப்பது அதைவிட அயோக்கியத்தனம். பிந்தியவன் பாடுபடாமல் ஏராளமான சொத்தை வைத்துக் கொண்டு அனுபவித்துக் கொண்டு இருக்கும்போது முந்தியவன் பாடுபடாமல் பிச்சை கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?

தொல்லை எது? பிச்சைக்காரன் பிச்சை கேட்பது பெரும் தொல்லையாகவும் மனதிற்குச் சங்கடமாகவும் இருக்கிறது. அது போலவேதான் பணக்காரன் (தனது தேவைக்கு மேல் வைத்திருப்பவன்) பணத்தை வைத்துக் கொண்டு கோவில், மடம் கட்டிக் கொண்டு கும்பாபிஷேகம், உற்சவம், பிராமண சமாராதனை முதலியன செய்துகொண்டு இருப்பதும் பெரும் தொல்லையாகவும் மனதிற்குச் சங்கடமாகவும் நாட்டுக்குக் கேடாகவும் இருக்கிறது.

கடவுள் எது? பணக்காரனுக்குப் பணம் கடவுள் கொடுத்தார்: ஏழைக்குத் தரித்திரம் கடவுள் கொடுத்தார். அப்படி இருக்க இது இரண்டையும் சமமாக்க வேண்டும் என்று சொல்லுகிறவன் நாஸ்தினாகத்தானே இருக்க முடியும்? அல்லது அவன் நாஸ்திகனாக இருந்தால்தானே கடவுள் செயலுக்கு விரோதமாக சமமாக்க முடியும்! ஆதலால் மக்களை எல்லாம் நாஸ்திகர்களாக ஆக்கி விட்டால் பணக்காரனும், தரித்திரனும் தானாகவே மறைந்துபோவார்களா மாட்டார்களா?

---------------------- தந்தை பெரியார், "குடிஅரசு" 28.10.1944


யோசித்துப் பாருங்கள்


னிதன் தனது சமூகத்தை வஞ்சித்துப் பொருள் சேர்த்துப் `பகுத்தறிவுள்ள தனது பெண்டு பிள்ளைக்குப் பணம் சேர்த்து வைக்கவேண்டுமென்று சொல்கிறான். ஆனால், மிருகம், பட்சி ஆகியவை பகுத்தறிவு இல்லாத தமது பெண்டு, பிள்ளைகளுக்குச் சொத்துச் சேர்த்து வைக்கக் கருதுவதில்லை. தன் குட்டிகளையும், குஞ்சுகளையும் அவை தாமாக ஓடியாடும் பருவம் வந்தவுடன் தனித்து வாழ்ந்து கொள்ளும்படி கடித்தும், கொத்தியும் துரத்தி விடுகின்றன.

அவற்றைப்பற்றிய கவலையோ, ஞாபகமோ கூட அவற்றுக்குக் கிடையாது.

மனிதனின் பிறப்பு கடவுளால் என்கிறோம்; இறப்பு கடவுளால் என்கிறோம். இவ்விரண்டுக்கும் காரணமாய்க் காணப்படுவது மனிதன் நடப்பாய் இருப்பதால், அந்த நடப்பும் கடவுளால்தான் என்று சொல்ல வேண்டியதாகின்றது.

ஆகவே, மனிதனின் நடப்பையும், கடவுளால்தான் நடைபெறுகின்றது என்று சொல்கிறார்கள். மனிதனுடைய நடப்போ பெரிதும் நான் மேலே சொல்லியதுபோலவே தான் கவலையும், கொடுமையும் நிறைந்ததாய் இருந்து வருகின்றது. இப்படிப்பட்ட நடப்புக்குக் கடவுளைக் காரணமாக்குகின்றவர்கள் இதன் பயனாகிய பிறப்பு, இறப்புக்குக் காரணமாக்குகின்றவர்கள் கடவுளை மேன்மைப்படுத்தினவர்களா? அல்லது கீழ்மைப்படுத்தினவர்களா? என்று யோசித்துப் பாருங்கள்.

செல்வவான் (சோம்பேறியாய் இருந்து வாழ உரிமை உடையவன்) என்கின்ற ஒரு நிலைமை உலகில் இல்லையானால், கடவுளுக்கும், மதத்திற்கும், ஜாதிக்கும், அரசனுக்கும் உலகில் இடம் இருக்குமா? என்று யோசித்துப் பாருங்கள்.

----------------------தந்தை பெரியார் "உண்மை", 14.8.1971