Search This Blog

13.12.11

ஈரோடு மாநகராட்சியில் பெரியார் படம் அகற்றப்படுவதா?

ஈரோடு மாநகராட்சியில் நடைபெற்றுள்ள ஒரு நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் ஈரோடு மாநகராட் சியின் மேயராக பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்த பெண் மேயர் இவர். எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பெண் ஒருவர் பெரியார் பிறந்த மண்ணில் வந்திருப்பது பாராட்டுதலுக்கும், மகிழ்ச்சிக்கும் உரியதாகும். ஆனால் என்ன நடந்திருக்கிறது?
மேயரின் ஆசனத்துக்கு மேல் மாட்டப்பட்டு இருந்த தந்தை பெரியார் உருவப்படம் அவசர அவசரமாக எடுக்கப் பட்டுள்ளது. வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மன்னிக்கப்பட முடியாத செயலாகும்.

அதுவும் 1917இல் அதே ஈரோடு நகராட்சியின் தலைவராக வீற்றிருந்தவர் தந்தை பெரியார். அவர் ஈரோடு நகராட்சியின் தலைவராக இருந்து ஆற்றிய பணி - சாதனைகள் இன்றளவும் சிறப்பாகப் பேசப்பட்டுள்ளன. குழாய் மூலம் குடி தண்ணீர் என்பது அந்தக் காலத்தில் நினைத்தே பார்க்க முடியாத மாபெரும் சாதனையாகப் பேசப்பட்டது. ஈரோடு நகராட்சி தலைவராக இருந்த பெரியார் ஆற்றிய பணிக்காக அவருக்கு ராவ்பகதூர் பட்டம் அளித்து கவுரவிக்க ஸ்தலஸ்தாபன உறுப்பினராக விருந்த பி. இராசகோபாலாச்சாரியார் சிபாரிசு செய் திருந்தார் என்றால் அதன் பெருமையை விளக்கத் தேவையில்லை. ஈரோடு நகராட்சியை மாநகராட்சியாக்க வேண்டும் என்ற தீர்மானமும் அப்பொழுது நிறைவேற்றப்பட்டது. மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் ஈரோடு நகராட்சியை மாநகராட்சியாக உயர்த்தி சிறப்பு செய்தார் (2008). இன்றைக்கு ஈரோடு என்கிற ஊர்ப் பெயர் உலகமெலாம் அறியப்பட்டுள்ளது என்றால், அதற்கு முழு முதற் காரணம் தந்தை பெரியார் அவர்களே!

ஈரோடு மாநகராட்சி முதல் கூட்டத்தில் தி.மு.க. உறுப்பினரான திருமதி இராதாமணி பாரதி அவர்கள் இந்தப் பிரச்சினையை எழுப்பியுள்ளார். பெண் ஒருவர் மேயராக இருக்கும் நிலையில், பெண்ணுரிமைக்காகப் பாடுபட்ட தந்தை பெரியார் அவர்களின் உருவப் படத்தை முக்கிய இடத்திலிருந்து அகற்றியது ஏன்? என்ற வினாவை எழுப்பியதுடன், உடனடியாக முன்பு இருந்த இடத்திலேயே தந்தை பெரியார் படம் அணி செய்யப்பட வேண்டும் என்றும் பேசியிருக்கிறார். இதற்காக இவரைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். இப்படி சுட்டிக்காட்டிய பிறகும், தந்தை பெரியார் உருவப்படம் உரிய இடத்தில் வைக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. பெரியார், அண்ணா பெயரை உச்சரிக்கும் ஓர் ஆட்சியின்கீழ் இத்தலைவர்களின் கொள்கைகளுக் கும், மதிப்புக்கும் தொடர்ந்து ஊறுவிளைவிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு மாநகராட்சி மேயருக்குப் பெரியார் படத்தை அகற்றும் துணிவு எப்படி வந்தது என்று தெரியவில்லை. செல்வி ஜெயலலிதா அவர்களின் தலைமையில் இயங்கும் ஆட்சி பெரியார் கொள்கைக்கு எதிரானது என்ற எண்ணம் ஏற்பட்டதுதான் காரணமா? அப்படி ஓர் எண்ணம் உதிக்கும் அளவுக்குத் தமிழக அரசின் எண்ணமும், செயல்பாடுகளும் இருக்கின்றன. தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள்கூட ஒட்டு மொத்தமான அவரின் தொண்டுக்கு முதல் மரியாதை செலுத்து கின்றனர் என்பது வெளிப்படை!

சமச்சீர் கல்வியில் தொடங்கி, தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற நிலையை ரத்து செய்த சட்டம் உட்பட தந்தை பெரியார், அறிஞர் அண்ணா கொள்கைகளுக்கு விரோதமாக இவ்வரசு செயல்பட்டு வருவதன் தாக்கம்தான் ஈரோடு மாநகராட்சியில் பெரியார் உருவப்படம் அகற்றப்பட்டதற்குக் காரணமா? எது எப்படியாக இருந்தாலும், ஈரோடு மாநக ராட்சியில் தந்தை பெரியாரை அவமதிக்கும் ஒரு செயல் நடைபெற்றுள்ளது; இதனைத் தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள். உடனடியாக, கால தாமதமின்றி, தந்தை பெரியார் படம் ஏற்கெனவே இருந்த இடத்தில் இடம் பெற வேண்டும், இல்லையெனில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தவிர்க்க முடியாதது ஆகி விடும்
---------- ------------------"விடுதலை” 13-12-2011

3 comments:

raja said...

மானங்கெட்ட தமிழர்களிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்கிரீர்கள். இன்னமும் பல நடக்கும். நல்ல வேளை பெரியார் இல்லை இப்பொழுது. நிச்சயம் தற்கொலை செய்து கொண்டிருப்பார்.மானங்கெட்ட தமிழர்களிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்கிரீர்கள். இன்னமும் பல நடக்கும். நல்ல வேளை பெரியார் இல்லை இப்பொழுது. நிச்சயம் தற்கொலை செய்து கொண்டிருப்பார்.

தமிழ் ஓவியா said...

விடுதலை செய்தி, தலையங்கத்தின் எதிரொலி! ஈரோடு மாநகராட்சியில் மீண்டும் பெரியார் படம்!


மேயர் மல்லிகா பரமசிவம், மாமன்ற உறுப்பினர் (சுயேட்சை) ராதாமணிபாரதி.ஈரோடு டிச.15- ஈரோடு மாநகராட்சி மன்றத்தில் மேயர் ஆசனத்துக்கு அருகில் இடம் பெற்றிருந்த தந்தை பெரியார் படம் அகற்றப்பட்டது குறித்து விடுதலை வெளியிட்ட செய்தி மற்றும் தலையங்கத்தின் எதிரொலி யாக உடனடியாக முன்பு இருந்த அதே இடத்தில் (மேயர் ஆசனத்துக்கு அருகில்) மீண்டும் அணி செய்யப்பட்டது. கழகப் பொறுப்பாளர்கள் முயற்சிக்கும் வெற்றி கிட்டியுள்ளது.

ஈரோடு மாநகராட்சி கூட்ட அரங்கில் தந்தை பெரியார் படம் அகற்றப்பட்டதாக வந்த தகவலின் பேரில் 14.12.2011

புதன் மாலை 6 மணியளவில் மாநகர மேயர் மல்லிகாபரமசிவம் அவர்களை மண்டல தி.க.செய லாளர் சண்முகம்,மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பா.வைரம், பொதுக்குழு உறுப்பினர் கோ.பாலகிருட்டிணன், ஜெபராஜ்,ராயல்ராமசாமி ஆகியோர் அலுவலகத்தில் சந்தித்து மீண்டும் பெரியார் படம் இருந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று கேட்டபோது தந்தை பெரியார் பெண்ணுரிமைக்காகப் பெரிதும் பாடுபட்டவர், இந்த நாற்காலியில் அமர்ந்து பெருமை சேர்த்தவர், அவரது படத்தை இப்பொழுதே வைக்கிறோம் என்று அலுவலகப் பணியாளர்களுக்கு உத்தரவிட்டு 10 மணித்துளியில் படம் வைக்கப்பட்டது. எமது அன்பான வேண்டுகோளை எற்று தந்தை பெரியார் படத்தின் அருகில் நின்று ஒளிப்படம் எடுக்க இசைவு தந்தார்.
-------------"விடுதலை”15-12-2011

தமிழ் ஓவியா said...

படத்தின் சுட்டி
மேயர் மல்லிகா பரமசிவம், மாமன்ற உறுப்பினர் (சுயேட்சை) ராதாமணிபாரதி.

http://viduthalai.in/new/e-paper/23470.html