Search This Blog

26.12.11

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! -24

ராஜாஜியைத் தோலுரித்த கலைஞர்


எந்தவித ஆதாரமும் இன்றி எழுதுவதற்கு அறிவு தேவையில்லை; பொறுப்புணர்ச்சியும் கூடத் தேவை யில்லை - அது ஒரு வகையில் சிலருக்கு வசதியும்கூட! அந்த வசதியில் எழுது கோல் பிடித்துள்ளார் திருவாளர் கே.சி. லட்சுமிநாராயண அய்யர்வாள்.

காமராசைப் பச்சைத் தமிழன் என்று வர்ணித்துப் பேசியவர், காமராச எனது வாரிசு என்று கூடப் பேசியவர் என்று குறிப்பிட்டுள்ளாரே - காமராசர் எனது வாரிசு என்று பெரியார் குறிப்பிட்டதற்கு ஆதாரம் உண்டா? எங்கே பேசினார்? எப்பொழுது பேசினார்? எந்த ஏட்டில், அல்லது இதழில் வெளிவந்தது? எடுத்துக் கூறட்டும் பார்க்கலாம்.

பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலில் ஒளிந்தான் ராட்சசன் என்று புராணம் எழுதி வைத்திருக்கும் கூட்டம் அல்லவா - எதைத் தான் துணிந்து எழுதாது?

என்னை ஆதரியுங்கள் என்றோ, காங்கிரசை ஆதரியுங்கள் என்றோ ஈ.வெ.ரா.வை காமராசர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒருமுறை கூட அணுகியது இல்லை. இதை எல்லோரும் அறிவார்கள் என்று எல்லாவற்றையும் அறிந்தவர் போல எழுதுகிறாரே - தந்தை பெரியார் அவர்களின் அணுகுமுறைகளை ஓரளவுக்கு அறிந்திருந்தால்கூட இப்படி எவரும் எழுத மாட்டார்கள்.

திராவிடர் கழகம் ஒன்றும் அரசியல் கட்சியல்ல _ ஓட்டு வாங்கி பதவிக்குப் போகும் கட்சியும் அல்ல. இது ஒரு சமூகப் புரட்சி இயக்கம்.

தன் கொள்கைக்கு ஆதரவாக, இணக்கமாக ஓர் ஆட்சி நடைபெறும் என்றால், திட்டங்கள் தீட்டப்படும், சட்டங்கள் இயற்றப்படும் என்றால், சமூக நலன் கருதி அதனை ஓடோடிச் சென்று ஆதரிப்பவர்தான் பெரியார்.

என்னை அழைத்தார்களா? என்னைக் கேட்டார்களா? என் பெயரை பெரிய எழுத்தில் போட்டார்களா? என்று மலிவான உணர்வின் அடிப் படையில் முடிவு செய்பவரும் அல்லர்.

தன் கொள்கை அளவுகோல் கொண்டு மதிப்பீடு செய்பவர்தான் தந்தை பெரியார்.

எனது சமுதாய மக்களுக்கு நன்மை செய்கிற கட்சி எதுவாக இருந்தாலும் அதனை ஆதரித்தும், என் சமுதாய மக்களுக்குக் கேடாகக் காரியம் செய்யும் கட்சிகளை எதிர்த்துமே வந்திருக் கிறேன். ஆட்சியில் இருந்தது என்பதற் காக எந்தக் கட்சியையும் நான் ஆதரித் தது கிடையாது (விடுதலை 4.3.1968). என்று ஓர் ஆட்சியை ஆதரிப்பதற்கும் எதிர்ப்பதற்குமான அளவுகோலையும் இலக்கணத்தையும் கொடுத்த தலை வரைப் பற்றிச் சரியான புரிதல் இருந் தால் இப்படியெல்லாம் தத்துப்பித்து என்று எழுதித் தொலைக்க மாட் டார்கள்.

என்னைப் பொறுத்த வரையில் நான் என்றும் கட்சிக்காரனாக இல்லவே இல்லை. எப்பொழுதும் நான் கொள் கைக்காரனாகவே இருந்தேன்? என்றும் (விடுதலை 1.6.1954) தெளிவுபடுத்தி விட்டாரே!

திமுகவை ஆதரிப்பது என்ற முடிவு எடுத்த நேரத்திலேகூட - அதுபற்றித் தெளிவுபடுத்தினாரே!

இன்றைய தி.மு.க. ஆட்சிக்கு நான் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டேன் என்றால் வம்புச் சண்டைக்குப் போக மாட்டேன் என்பதுதான் பொருளே தவிர, அவர்கள் செய்யும் எதையுமே எதிர்க்க மாட்டேன் என்று பொருளல்ல என்றும், தம் கொள்கைக்குப் பங்கம் ஏற்கும்படி தி.மு.க. அரசு நடந்து கொண்டால் உடனே நடவடிக்கை எடுப்பேன் என்றும் விடுதலையில் (6.3.1967) என் ஆதரவு எனும் தலைப்பில் தந்தை பெரியார் அறிக்கை வெளியிட்டாரே!

இதில் மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஒரு வரலாற்று உண்மை உண்டு; என்னை ஆதரியுங்கள் என்று காமராசர் கேட்டதில்லை என்கிறாரே - அவருக்கு ஒரு சேதி தெரியுமா?

குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த ராஜகோபாலாச்சாரியாரைப் பதவியிலிருந்து தந்தை பெரியார் விரட்டியடித்த தருணத்தில் அடுத்த முதல் அமைச்சர் யார் என்ற பிரச்சினை எழுந்தபோது காமராசர் அவர்களுக்குத் தைரியம் கொடுத்து முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்கும்படி வற்புறுத்தியவரே தந்தை பெரியார் தானே!

சென்னை அரசினர் தோட்டத்தில் டாக்டர் வரதராசுலு அவர்களின் வீட்டில், தந்தை பெரியார், டாக்டர் வரதராசலு நாயுடு, காமராசர் ஆகியோர் அமர்ந்து விவாதித்து முடிவு எடுக்கப்பட்ட வரலாற்றையெல்லாம் தெரியாத நிலையில் எழுத்தாணி பிடிக்கலாமோ!

ராஜாஜி பதவி விலகிச் சென்ற இடத்தில் நான் முதல் அமைச்சராகப் பதவியேற்றால், பார்ப்பனர்களும் அவர்களின் ஊடகங்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள், தொல்லை கொடுப்பார்கள் என்று காமராசர் அவர்கள் சொன்ன நேரத்தில் அதுபற்றி நீங்கள் கலவைப் பட வேண்டாம்; அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எதிர்க்க வேண்டும் என்றால் நான்தானே எதிர்க்கவேண்டியவன்; அப்படிப்பட்ட நானே உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்கிறபோது உங்களுக்குத் தயக்கம் ஏன்? என்று தந்தை பெரியார் கொடுத்த தைரியத்தினால் அல்லவா காமராசர் முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்?

காமராசரும் எப்படி நடந்து கொண்டார்? எப்படி ஆட்சி செய்தார்? இதோ தந்தை பெரியார் கூறுகிறாரே!

நான் எனது இலட்சியத்தில் மனக் குறை அடைய வேண்டிய நிலை இல்லாதவனாக இருக்கிறேன். இதை நான்கு அய்ந்து மாதங்களுக்குமுன் காமராசர் மகிழ்ச்சியோடு வெளியிட் டார். அதாவது பெரியாருக்கு இன்று என்ன குறை? அவர் போட்ட பாதை யில்தான் இன்று காங்கிரஸ் போய்க் கொண்டிருக்கிறது. அவர் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை என்பதாகப் பேசினார்.

இனி எனக்குள் ஏதாவது குறை, கவலை இருக்குமானால், அது மக்கள் இடையில் காணப்படும் கவலையற்ற தன்மையும், எதிரிகளின் சூழ்ச்சிக்கு ஆளாகும் தன்மையும் பற்றித்தான் என்று தந்தை பெரியார் எழுதிட வில்லையா? (தந்தை பெரியார் 88ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர் (17.9.1966).

தந்தை பெரியார் காமராசர் உறவு எந்த அடிப்படையில் இருந்தது என்பதைப் பார்ப்பன இன உணர்வுக் கண் கொண்டு பார்த்தால் தப்புத் தப்பாகத்தான் தோன்றும்.

இதோ காமராசர் பேசியிருப் பதையும் தெரிந்து கொள்ளட்டும்!

பெரியகுளம் நகரசபை சார்பிலும் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் திராவிடர் கழகம் சார்பிலும் முதன் அமைச்சர் காமராசருக்கு வரவேற்புப் பத்திரங்கள் வாசித்தளிக்கப்பட்டன.

திரு காமராசர் பதிலளிக்கையில் திராவிடர் கழகத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் திரு. இராமசாமி நாயக்கர் அதற்கு நல்ல முறையில் தலைமை வகிப்பதாகச் சொன்னார். பிற கட்சிகளைப் போல எல்லாவற்றையும் கண்டபடி தாக்காமல், கெட்டதெனப் புலப்படுவதைக் குறை கூறவும், நல்லதென நினைப்பதைப் பாராட்ட வும் அவர் தயங்குவதில்லை. மற்ற கட்சிகளைப்போல் தேர்தலில் கலந்து கொள்ளாததால் இவ்வாறு நடந்து கொள்ள அவரால் முடிகிறது என்று அவர் கூறினார்.
(தினமணி 13.2.1955)

உண்மையிலேயே தமிழ்நாட்டில் இன்றைக்குள்ள அரசியல் சமுதாய விழிப்புக்கு முக்கியக் காரணம் பெரியார் அவர்களின் தொண்டாகும். அவருடைய சேவையை அடிப்படையாகக் கொண்டதுதான் இன்றைய தினம் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுதந்திர நாட்டின் வாழ்க்கையாகும்

(27.11.1955 அன்று நடைபெற்ற டாக்டர் பி. வரதராசலு நாயுடு 68ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் காமராசர் உரையிலிருந்து விடுதலை 29.11.1955).

பெரியார் தேவை!

சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகளைத் தகர்த்தெறிந்து தன்மானத்துடன் சரிசமமாக வாழும் மறுமலர்ச்சி வேண்டுமென்று சோஷ்யலிச லட்சி யத்தை உருவாக்கித் தந்தவர் பெரியாரே. அவரது லட்சியம் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவெங்கும் பரவி யது. அவர் சேவையால்தான் மக்களி டையே விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. அவர் விதைத்ததை நாம் அறுவடை செய்து அனுபவிக்கிறோம். சமத்துவ சமுதாயம் விரைவில் அமைய வேண்டும் என்ற அவரது லட்சியம் முற்றிலும் நிறைவேற வேண்டும். எவ்வளவு விரைவாக நம்முடைய சமுதாயத்தில் மனிதன் சமமாக வாழக்கூடிய சமுதாயம் உருவாக்க முடியுமோ அதை உருவாக்க வேண்டும். அதற்குத் தந்தை பெரியார் அவர்கள் பாடுபட்டிருக்கிறார்கள். எல்லா வேலைகளையும் செய்து விதைத்திருக்கிறார்கள்; களையெடுத் திருக்கிறார்கள். நாம் செய்ய வேண்டியது அறுவடைதான். அதைக்கூட நாம் செய்ய மாட்டோம் என்று சொல்ல முடியுமா என்ன? அதை எப்படிச் செய்யப் போகிறோம்? என்பதே பிரச் சினை. அவர்களுக்கு 89 வயது ஆகிறது. இன்னும் பல ஆண்டுகள் இருக்க வேண்டும். அவர்களுடைய வழி காட் டுதல் நமக்குத் தேவை என்பதற்குக் காரணம் மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லக்கூடிய துணிவு எனக் குத் தெரிந்த வரையில் அவர் ஒருவ ருக்குத்தான் உண்டு. என்னுடைய மனதில் நினைத்ததைச் சொல்வதற்குள் யார் என்ன நினைப்பார்களோ என்று பார்த்துப் பார்த்து அவற்றை நினைத் தும், அவை நல்லவையாக இருந்தாலும் சொல்லாமல் இருந்து விடுகிறேன். அவர்களிடத்தில் அது கிடையாது. யாருடைய தயவு தாட்சண்யத்தைப் பற்றியும் அவருக்குக் கவலை இல்லை. தனக்கு நியாயமாகப்படும்போது அதனால் யாருடைய வருத்தத்திற்கும் கவலைப்பட மாட்டேன் என்று சொல்கிறார்கள். அப்படி வாழ்ந்து நல்ல முறையில் சொல்லக்கூடிய தலைவர் நீண்ட நாள் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்(விடுதலை 22.9.1967)

அண்ணா அவர்களைப் பல இடங் களில் கேவலமாக எழுதிவிட்டு வேறு சில இடங்களில் அண்ணாவைப் பாராட்டுவது போல சொட்டு வைக்கிறது துக்ளக்

திமுகவினர் அரசுப் பணிகளில் சட்ட விரோதமாகத் தலையிட்டனர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆச்சாரியார்கூட தலைமைச் செயலகத்தில் கரை வேட்டி கட்டிய வர்களை அனுமதிக்கக் கூடாது என்று கூட சொன்னதுண்டு. அதன் நோக்கத்தைப்பற்றி தந்தை பெரியார் தம் கருத்தை வெளியிட்டதுண்டு.

நிருவாகத்தில் தலையிடக் கூடாது என்று கூறும் அதே ராஜாஜியின் நிலைப்பாடு என்ன? அவர் எப்படி யெல்லாம் நிருவாகத்தில் தலையிட்டார் என்ற குட்டை முதல் அமைச்சர் கலைஞர் உடைத்து விட்டார்.

இதோ முதல் அமைச்சர் கலைஞர் பேசுகிறார்:

நிருவாகத்தில் தலையீடு இருக்கிறது என்கிறார் ராஜாஜி; யாருடைய தலையீடு? மாவட்ட, வட்டச் செயலாளர் களுடைய தலையீடா? ஒரு தலையீடு இருந்தது; தலையிடாதீர் என்று சொன் னதும் அவருக்குக் கோபம் வந்தது. அவர்தான் ராஜாஜி, அவர்தான் அண்ணா காலத்தில் தலையிட்டுப் பார்த்தார் இடம் தரவில்லை.

அண்ணா மறைந்த பிறகு இவன் சிறியவன்தானே என்று என் நிருவாகத்தில் தலையிட்டுப் பார்த்தார்; நான் அதற்கு இணங்கவில்லை. உதாரணம் சொல்ல வேண்டுமென்றால்,

வலதுசாரி கம்யூனிஸ்டுகள் நிலப்பறி இயக்கத்தில் ஈடுபட்ட நேரத்தில் ராஜாஜி என்னை அழைத்து, ஆள் தூக்கிச் சட்டத்தின்படி கம்யூனிஸ் டுகளை சிறையில் அடைக்கச் சொன் னார்; அந்தச் சட்டத்தைவிட அடக்கு முறை எதுவுமில்லை; மேலும் அந்தச் சட்டத்தின்படி சிறையில் இருப்பவர் களின் குடும்பத்திற்கு மாதாமாதம் அரசு பணம் தர வேண்டும். ஏறத்தாழ பத்தா யிரம் பேருக்கு மேல் சிறையிடப்பட்ட நேரத்தில் ராஜாஜியின் யோசனையைக் கேட்டிருந்தால் சிறையிலிருந்த கம்யூ னிஸ்டுகளின் குடும்பங்களுக்கு சட்டப் படி பணம் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே செலவு வைக்கும் ராஜாஜியின் யோசனையை இந்த அரசு ஏற்கவில்லை.

பின்னர் அமைச்சர் மாதவனைக் கூப்பிட்டுப் பேசியிருக்கிறார்; அவரும் முடியாது என்று கூறிவிட்டார். அது வரையில் மாதவனைப்பற்றி அபாரமான புத்திசாலி, ரொம்ப நல்லபிள்ளை சிறந்த வழக்கறிஞர் என்று சொல்லி வந்த ராஜாஜி தன் பேச்சைக் கேட்க வில்லையென்றதும் சுயராஜ்யா பத் திரிகையில் மாதவன் வக்கீல் தொழி லுக்கே லாயக்கில்லை, மந்திரியாக இருக்க லாயக்கில்லை என்று எழுதினார்.

அவர் கூறியதைக் கேட்கா விட் டாலும் நாங்கள் அந்த இயக்கத்தைச் சந்திக்காமல் விட்டு விடவில்லை. கம்யூனிஸ்டுகள் செய்தது நியாயப்படி சரியென்றாலும் சட்டப்படி குற்ற மென்பதால் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துப் பிறகு 10 நாட்களுக்குப் பிறகு அத்தனைப் பேரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

ஆகவே நிருவாகத்தில் ராஜாஜிதான் தலையிட்டாரே தவிர வேறு யாரு மில்லை. (விடுதலை 27.2.1971)

முதல்வர் கலைஞர் அவர்களின் இந்தக் கூற்றுக்குப் பதில் என்ன?

----------------- சந்திப்போம் .....- கலி.பூங்குன்றன் வர்கள் 24-12-2011 “விடுதலை”ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

0 comments: