Search This Blog

6.12.11

மூடக் கொள்கைகளை ஒழித்தாலே முன்னேற முடியும்! இந்த நாட்டுக்கே உரிமையானவர்கள் நாம் !!

மூடக் கொள்கைகளை ஒழித்தாலே முன்னேற முடியும் இந்த நாட்டுக்கே உரிமையானவர்கள் நாம்

இந்த நாட்டு செல்வங்கள் எல்லாம் நம்முடையன; இந்த நாட்டிலுள்ள சிற்பங்கள், சித்திரங்கள் எல்லாம் நாம் செய்தவை. ஆகவே, இந்த நாடு நம்முடையது என்பதற்குப் பல ஆதாரங்கள் இருந்தும்கூட பிழைக்க வந்த பார்ப்பனர்களுக்கு நாம் நம் நாட்டைக் கொடுத்துவிட்டு அவர்களின் கூலிகளாக வாழுகிறோம் என்றால் அதற்குக் காரணம் நாம் நம்முடைய புத்தியைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்லை. நம்முடைய புத்தியில் பாதியை பக்கவாதமாக்கிக் கொள்கிறோம். சாமி, சாஸ்திரம், புராணம், பார்ப்பனர்களின் கொள்கை என்றால் அதில் ஆராய்ந்து பார்ப்பது கிடையாது. அவர்கள் எதைச் சொல்லுகிறார்களோ, அதை அப்படியே நம்பி விடுகிறோம். மேலும், அவர்களுடைய வாக்கே தேவ வாக்கு எனக் கூட நினைத்துக் கொண்டு இருந்து விட்டனர்.

ஆகையால், நம்மையெல்லாம் முட்டாள்களாக்கி நம்மை அடிமை கொண்டார்களே அன்றி, அவர்களின் ஆயுதங்களான, வருணாசிரம தர்மம், சாஸ்திரம் முதலியவற்றை கொண்டு நம்மை அடிமை கொண்டார்களேயன்றி, வெள்ளைக்காரர்களைப் போல், முஸ்லிம்களைப் போல் நம்மை அடிமைப்படுத்த வில்லை. ஆகவே, இவர்களுடைய பிடியிலிருந்து - அடிமைத்தனத்திலிருந்து - பஞ்சாங்கத் தன்மையிலிருந்து விலக வேண்டுமானால், ஜாதி, மதம், சாஸ்திரம் இவற்றையெல்லாம் கண்டிப்பாக ஒழித்தாக வேண்டும். ஜாதி ஒழிய வேண்டுமானால் அது இருப்பதாக நாலாவது, அய்ந்தாவது எனப் பிரித்துக் காட்டுவதாக - காலிலே, முகத்திலே பிறந்தவன் என எடுத்துக்காட்டுவதாக, சூத்திரர்கள் - பஞ்சமர்கள் என பாகுபடுத்திக் காட்டுவதாக - அடிமை - கூலி, வேசி மகன் என்று கூசாமல் கூறி இருக்கிற சாஸ்திரம் முதலாவதாக ஒழிய வேண்டும். இந்த சாஸ்திரம் ஒழிய வேண்டுமானால் மதமும், இந்த சாஸ்திரத்திற்கு அடிகோலியாக இருக்கும் கடவுள்கள் - குழவிக் கற்கள் எல்லாம் ஒழிய வேண்டும். ஆகவே, இவற்றை எல்லாம் ஒழித்தால்தான் நேர்மையான சமூகத்தைக் காண முடியும்.

இல்லையேல் மக்கள் நேர்மையாக வாழ முடியாததோடு அல்லாமல் ஒவ்வொருவரும் தங்கள் தங்களுடைய நெற்றியிலே சூத்திரன் என்றும், பஞ்சமன் என்றும், பச்சைக் குத்தவும், தாய்மார்கள் சூத்திரச்சி என்று பச்சைக் குத்திக் கொள்ளவும் நேரிடும். அதுவுமல்லாமல் ரோடுகளிலே இருக்கும் மைல் கற்களிலும், ஃபர்லாங் கற்களில் ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு பார்ப்பானாக உட்கார்ந்து கொண்டு மந்திரம் சொல்லி வழியிலே போகும் ஆள்களிடம் இருந்து காசு வாங்க நேரிடும். மைலீஸ்வரர் என்ற பெயரையும், ஃபர்லாங்கீஸ்வரர் என்கிற பெயரையும் அவற்றுக்குச் சூட்டிக் கொண்டு கடவுளாக நினைத்து (தண்டம்) நம்மைக் கும்பிடும்படி செய்வார்கள்.

ஆகவே, நாம் இப்படியே இருந்து கொண்டே இருப்போமானால் அந்தக் கதி கண்டிப்பாக வந்து சேரத்தான் செய்யும். அதற்கில்லாமல் செய்வதற்காகத்தான் திராவிடர் கழகம் 30 வருடக் காலமாக உழைத்துக் கொண்டு வருகிறது. இந்த 30 ஆண்டுகளும் இந்த முறையிலே இது வேலை செய்யாமல் இருந்திருக்கு மானால் கண்டிப்பாக அந்த கதி நேர்ந்துதான் இருக்கும். ஆகையால்தான், நாங்கள் செய்யும் வேலைக்கு எவரும் முன்வர மாட்டார்கள். வந்திருக்கவும் மாட்டார்கள். எங்களைத் தவிர, முன்வருகிறவர்களும் வேறு எவரும் இல்லை என்று சவால் விட்டு கூறுகிறேன்.

யாராவது இந்த ஜாதி பேதம் ஒழிய வேண்டுமென்று இதற்கு முன்னால் பாடுபட்டதாகக் கூற முடியுமானால் பவுத்தத்தையும், (புத்தரையும்) வள்ளுவரையும், இராவணன், இரணியன் போன்றவர்களைத் தவிர, யார்தான் இருக்க முடியும். இவர்களையும் தந்திரமாக சூழ்ச்சி செய்து ஒழித்து இருக்கிறார்கள். ஆகவே, இந்த பெரியோர்களுக்கு இந்த நிலை நேரிட்டது என்றால் மற்றவர்களுக்குத் தான் ஏன் பயம் வராமல் இருக்க முடியும்? ஆனால், நாங்கள் ஒன்றுக்கும் பயந்தவர்கள் அல்ல. எங்களுக்கு இதையொன்றும் பற்றிய கவலை கிடையாது. நாங்கள் எதையும் லட்சியம் செய்வதில்லை. ஆகவே, இந்தத் துறையிலே நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம்.

இன்றைய தினம் எத்தனையோ கட்சிகள் மழை காலத்தில் கிளம்பும் ஈசல்கள் போல தேர்தல் காலத்திலே கிளம்பியிருக்கும் பத்துப் பதினெட்டுக் கட்சிகள் இருக்கின்றனவே, இவற்றில் ஒன்றாவது இந்த துறையில் ஈடுபட்டதுண்டா, வாயில் ஒரு வார்த்தையாவது வந்ததுண்டா? எல்லோரும், நாட்டுக்காக - நாட்டு மக்களுக்காக - நல்வாழ்வுக்காகப் பாடுபடுவதாக மேடைகளிலும், பத்திரிகைகளிலும் சரமாரியாகப் பேசி தள்ளுகிறார்களே தவிர, ஒருவராவது ஏன் நான் பறையன் - நான் ஏன் சூத்திரன் - நான் ஏன் பஞ்சமன் - நான் ஏன் அடிமை - கூலி - வேசி மகன் - அவன் ஏன் பார்ப்பனன் - அவன் ஏன் உயர்ந்த ஜாதி - அவனுக்கு ஏன் வயிறு டன்லப் டயர் போல் உப்ப வேண்டும் - இவன் ஏன் சோம்பேறியாக உட்கார்ந்து கொண்டு சாப்பிட வேண்டும். அவன் ஏன் உல்லாசமாக மாட, மாளிகையிலே மஞ்சத்தின் மேலே உட்கார்ந்திருக்க வேண்டும் என்று கேட்பார்களா? அவர்களின் பக்கத்தில்கூட போக மாட்டார்களே. ஆகவே, இந்தக் கொடுமைகளை எல்லாம் பார்த்திருந்து விட்டு இந்த நாட்டுப் பூர்வீகக் குடிகள் வயிற்றுக்குக் கஞ்சி இன்றி வாடி வதங்கி தேய்பிறை போல் தேய்ந்து போய்க் கொண்டிருக்க - உழைத்து உழைத்து உருக்குலைந்து ஓட்டாண்டியாக ஒண்டக் குடிசைக்கும் வழியின்றி கட்டத் துணியின்றி, ரோடுகளிலும், வீதிகளிலும், கிணற்றிலும், ஆற்றிலும், விழுந்து இறந்து கிடப்பது கண்ணுக்குத் தெரிய வராது. இவர்களைப் பற்றிய கவலை இந்த ஏழைப் பாட்டாளி மக்களைப் பற்றிய கவலை சிறிதேனும் எடுத்துக் கொள்ளாமல், இத்தனை தொல்லைகளும் எதனால் வருகிறது? இதற்கு யார் பொறுப்பாளி என்பதை உணராமல் இருந்து விட்டு, கூறுகிறார்கள் கம்பீரமாக, கௌரவ மாக, வீரமாக எதற்கு?

(29.10.1951 அன்று திருச்சியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை - விடுதலை 2.11.1951.)

0 comments: