Search This Blog

31.12.08

முட்டாளும் - அறிவாளியும்!





"முட்டாள்தனம் என்றாலே சுலபத்தில் தீப்பிடித்துக்கொள்ளும் வஸ்து என்று சொல்லலாம். அறிவு என்றால், சீக்கிரத்தில் நெருப்புப் பிடிக்க முடியாத வஸ்து என்பது பொருள்."

----------தந்தை பெரியார்- "விடுதலை", 17.5.1961

பெண்ணுரிமைக் களத்தில் திராவிடர் கழகம்


புதிய அணுகுமுறைகளுடன் கழக மகளிரணிப் பட்டறை

2009 ஆம் ஆண்டுக்கான புதிய செயல்திட்டங்கள் 23.12.2008 அன்று நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் அறிவிக்கப்பட்டன. இதில் கழக மகளிரணியினர் முந்திக்கொண்டு செயல்படத் தொடங்கியுள்ளனர்.

தந்தை பெரியார் காலம் தொட்டு பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் இயக்கச் சித்தாந்தங்கள், செயல்பாடுகள், வரலாற்று நிகழ்ச்சிகள் தொகுத்துத் தரப்பட்டு வந்தன.

திராவிடர் கழகம் என்றாலே பிரச்சாரம், போராட்டம் என்கிற தண்டவாளங்களில் பயணிக்கக் கூடியதாகும். பிரச்சார முறை என்பது கால மாறுபாட்டுக்கு ஏற்ப மாறக் கூடியதாகும்; அதற்கான யுக்திகள் வகுக்கப்பட்டு பிரச்சாரம் செய்தால்தான் மக்களிடம் சென்றடைய முடியும்.


மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பகுதியினரான பெண்கள் மத்தியில்தான் அதிகமான அளவுக்கு மூடநம்பிக்கை இருள் கவ்விப் பிடித்திருக்கிறது! காரணம் நீண்ட காலமாக அவர்கள் வெளியுலக வெளிச்சத்திற்கு வராத அளவுக்கு வீட்டுக்குள் சிறை பிடிக்கப்பட்டதுதான்.

பெண்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம் - புகுந்த வீட்டில் அடிமையாக இருப்பது எப்படி? மாடன், காடன் குல தெய்வங் களுக்குச் செய்யப்பட வேண்டிய சடங்குகள் செய்வது எப்படி என்பன போன்றவைகள்தானே தவிர, சுயமாகச் சிந்திப்பது - செயல்படுவது என்பது அவர்களுக்கு இல்லாத ஒன்றே!

இந்த நிலையில், தந்தை பெரியார் அவர்களின் தன்மான இயக்கந்தான் அன்றுதொட்டு இன்றுவரை பெண்ணுரிமைக் களத்தில் தன் பணிகளை அழுத்தமாகச் செய்து வருகிறது.

பெண்களே - பெண்கள் மத்தியில் சென்றால்தான், பெண்களிடம் காலகாலமாகக் குடிகொண்டிருக்கும் கொழுத்த மூடத்தனங்களைக் கெல்லி எறிய முடியும்.

திருமணத்தின்போது கட்டப்பட்ட தாலி நீக்கம், விதவைக்குப் பூச்சூடுதல் போன்ற செய்முறைகளும் திராவிடர் கழக மேடைகளில் செயல்படுத்தப்பட்டன! தொடக்கத்தில் இவையெல்லாம் அதிர்ச்சியாக உணரப்பட்டாலும், இப்பொழுது அது ஒரு சாதாரண நிகழ்ச்சி என்னும் அளவுக்கு திராவிடர் கழகம் மக்கள் மத்தியிலே தக்க செயல்கள்மூலம் பதிவு செய்துள்ளது.

பெண்களே பெண்களிடம் சென்று பிரச்சாரம் செய்வது என்ற தன்மையில், பெண் பிரச்சாரகர்களைத் தயார் செய்யும் ஒரு யுக்தி திராவிடர் கழகத் தலைவரின் வழிகாட்டுதலில் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழியின் முயற்சியால் திருச்சியில் இம்மாதம் 28,29, 30 நாள்களில் காலத்துக்கேற்றதான ஒரு பட்டறை நடத்தப்பட்டது. திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் பிறைநுதல் செல்வியும், முகாமில் முக்கியமாக பங்கு கொண்டார்.

பெண்களின் உடல்நலம், உள நலம், பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள், மக்களிடம் மேற்கொள்ளப்படவேண்டிய அணுகுமுறைகள் - இவை தொடர்பான வகுப்புகளும், செய்முறைகளும் இடம்பெற்றன.

டாக்டர் சாலினி போன்றவர்கள் முகாமில் இருந்து மிகவும் திறம்பட, முகாமுக்கு வந்திருந்த தெரிந்தெடுக்கப்பட்ட மகளிர் மத்தியில் தெளிவாகப் பதிவு செய்தனர். அது மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகப் பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

உடற்பயிற்சி, யோகா போன்றவைகளும் கற்றுக் கொடுக்கப்பட்டன. வீதி நாடகம், தப்பாட்டம் ஆகிய கலைகளிலும் அதற்குரிய தக்கார் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மூன்று நாள்களில் இவ்வளவு என்றால், பொதுவாக நம்ப முடியாதது தான் - ஆனாலும், கழக மகளிர் காட்டிய ஆர்வம், ஊக்கம் இவற்றின் காரணமாக அவை சாத்தியமாயின.

இந்தப் பட்டறையின் நோக்கம் - இதில் பயிற்சி பெற்றவர்கள் மற்ற மற்ற இடங்களுக்குச் சென்று பயிற்சி தந்து, நாடெங்கும் பிரச்சாரத்திற்கான மகளிரை உருவாக்கவேண்டும் என்பது தான்.

பிற்போக்குத்தனமானவற்றை மக்களிடம் நிலை நிறுத்த அறிவியல் ஊடகங்கள் பயன்படுத்தப்படுவது வெட்கக் கேடானதும், அறிவு நாணயமற்ற தன்மையுமாகும்.

இந்த நிலையில், பகுத்தறிவுவாதிகள், அறிவியல் வாதிகளின் கடமையும், செயல் ஊக்கமும் அதிகம் தேவைப்படுகின்றன. இவற்றை உணர்ந்துதான் இத்தகு பட்டறைகளை திராவிடர் கழகம் உருவாக்குகிறது.

இதற்கான பயிற்சிகள் மேலும் மேலும் கூர்மைப்படுத்தப்பட்டு புதிய அணுகுமுறைகளுடன், நாடெங்கும் மக்கள் மத்தியில் குறிப்பாகப் பெண்கள் மத்தியில் பேரெழுச்சியாக உருவாக்கு வோம்.

2009 ஆம் ஆண்டு இந்த வகையில் புதிய எழுச்சி உடைய காலகட்டமாக ஆக்கிக் காட்டிட கழகம் சூளுரை பூண்டுள்ளது! அதன் தொடக்கமே இந்த முகாம்.


-------------------நன்றி: "விடுதலை" 31-12-2008

பார்ப்பனர் சங்கப் பார்வைக்கு




தாங்கள் தமிழ்நாட்டில் 7 விழுக்காடு இருப்பதாகவும் 50க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் தங்கள் ஜாதியினர் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் அடிக்கடி வாய்ச்சவடால் அடிப்பார்கள், தாம்பிராஸ் தலைவர்கள்.

பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் 3 விழுக்காட்டினர் எனும் வகையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் விகிதாச்சாரப்படி 7 இடங்களைப் பெறலாம். ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மட்டுமே பார்ப்பனர்களை நிறுத்திய நிலையில் 2 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். மீதி 5 இடங்களுக்கு ஆள்களும் கிடையாது; அவாளை நிறுத்தும் யோசனை உள்ள கட்சியும் தமிழ்நாட்டில் கிடையாது.

இது ஒருபுறம் இருக்க, நடந்து முடிந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத் தேர்தல் முடிவுகள் புதிய படிப்பினையைப் பார்ப்பனர்களுக்குக் கற்றுத் தருகிறது. காஷ்மீர் பண்டிட்டுகள் என்று அங்கே பார்ப்பனர்களுக்குப் பெயர். இந்தப் பார்ப்பனர் களில் 47 பேர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். காங்கிரசு, பாஜக, சமாஜ்வாடி கட்சி, லோக்ஜன சக்திக் கட்சி, ஜம்மு காஷ்மீர் தேசிய மக்கள் கட்சி, ஜம்மு காஷ்மீர் தேசிய ஜனநாயகக் கட்சி என்று 6 கட்சிகளிலுமாகச் சேர்த்து போட் டியிட்ட 47 பார்ப்பனர்களுமே மண்ணைக் கவ்வியுள்ளனர். மந்திரியாக இருந்த ராமன் மாட்டூ என்பவரும் தோற்றுப் போனார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தேர்தல் வரலாற்றில் - சட்ட மன்ற வரலாற்றில் - பார்ப்பனர் ஒருவர்கூட உறுப்பினராக இல்லாமல் போனது இதுதான் முதல் தடவை!

சபாஷ், ஜம்மு காஷ்மீர்!

----------------------------நன்றி; "விடுதலை" 31-12-2008

கி. வீரமணி அவர்களின் பெயர் தொடர்பாக ஒரு விளக்கம்


கழகத் தோழர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்!

தமிழர் தலைவர் பெயரை
கி. வீரமணி என்றே விளம்பரம் செய்யவும்


திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் பெயரை கழகத் தோழர்கள் விளம்பரம் செய்யும் பொழுது பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் வகையில் அவர் பெயருக்கு முன் உள்ள முன்னெழுத்தை (Initial) பலவாறாக வெளியிட்டு வருகின்றனர்.

சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழக மகளிரணி மாநாட்டில் (6.9.2008) பெயருக்குமுன் தந்தை பெயரோடு தாயாரின் பெயரும் இடம்பெறவேண்டும் என்ற ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில், நானே முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன் என்று சொல்லித் தான் தாயாரின் பெயரான மீனாட்சி அம்மாள் என்பதில் உள்ள மீ யையும் இணைக்க விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

மகளிர் மாநாட்டுத் தீர்மானத்தில் உள்ள பெண்களுக்கான உரிமைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அதனை அறிவித்தார்.


அதேநேரத்தில், பல்வேறு ஆவணங்கள், அலுவலக முறைகளில் ஏற்கெனவே பதிவாகியுள்ள கி. வீரமணி என்பதை மாற்றி அமைப்பதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாலும், திட்டமிட்டே ஊடகங்கள் குழப்ப முயலுவதாலும், கழகத் தோழர்கள் ஒரே மாதிரியாக இல்லாமல் பலவாறாக விளம்பரம் செய்வதாலும் இவற்றைத் தவிர்க்க மானமிகு கி. வீரமணி என்று மட்டும் தமிழர் தலைவர் அவர்களின் பெயரைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கழகத் தோழர்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாயார் பெயர் - அடுத்து தந்தையார் பெயரில் உள்ள முன்னெழுத்துகளை (Initial)இணைத்து வரும் காலத்தில் பதிவு செய்வதைக் கட்டாயமாகக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.



-------------- கலி. பூங்குன்றன் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம் -"விடுதலை" 31.12.2008

"அக்னி பார்வை"யில் "தமிழ் ஓவியா"



தோழர் அக்னி அவர்கள் தனது மின்னஞ்சல் முகவரிக்கு எனது கைபேசி எண்ணையும், மின்னஞ்சல் முகவரியும் அனுப்பி வைக்க கோரினார். அதன்படி அனுப்பி வைத்தேன். உடனே கைபேசியில் தொடர்பு கொண்டு உங்களிடம் ஒரு பேட்டி எடுக்க வேண்டும் என்றார். எனக்கு தூக்கிவாரிப் போட்டுவிட்டது. நாம் என்ன அப்படி பெரிதாகச் செய்து விட்டோம் என்ற மன நிலையில் பேட்டி கொடுக்கும் அளவுக்கு நான் ஒன்றும் சாதித்துவிடவில்லை, அந்த அளவுக்கு பெரிய ஆளுமல்ல என்று கூறினேன். அதற்கு தோழர் அக்னி என்னிடமிருந்து எப்படியாவது பதில் பெற்றுவிடவேண்டும் என்ற அக்கரையில் பேசினார். நானும் பேட்டியாக இல்லாமல் ஒரு பதிவாக பதிவு செய்வோம் என்று கூறியதை அடுத்து அவர் மின்னஞ்சலில் அனுப்பிய கேள்விகளுக்கு எனது பதிலை அளித்தேன். அதை "அக்னிபார்வை" தனது (http://agnipaarvai.blogspot.com/)வலைப் பூவில் வெளியிட்டிருந்தார். அதன் மீள்பதிவு இங்கு வெளியிடப்படுகிறது.

நன்றி

----------------------------------------------------------------------------------------

அக்னியின் கேள்விகள்:பதிவர் தமிழ் ஓவியாவின் பதில்கள்

நான் ’திருவிளையாடல் தருமி’ மாதிரிதான். எனக்கு சின்ன வயதில் இருந்தே ஒருவரை கேள்வி கேட்பது என்றால் ’அல்வா’ சாப்பிடுவது மாதிரி.

தமிழ்மணத்தின் வாயிலாகவோ, தமிலிஷ் வாயிலாகவோ ஒரு நாளைக்கு சுமார் 50 வெவ்வேறு பதிவுகள் படிக்கும் பொழுது, மனதில் கேள்விகள் ஊற்றெடுக்க துவங்கிவிடும். சில நேரம் பின்னுட்டதில் கேட்பேன். பல நேரம் கேள்விகள் மனதில் தங்கிவிடும்.பதிவர் சந்திப்புகளிள் சில நேரம் பதில்களை பெற்றுவிடுவேன்.

ஒரு நாள் திடிரென்று இந்த யோசனை தோன்றியது ‘அஞியின் கேல்விகள்’.. இனி நிறைய பதிவர்களிடம் என் கேள்விகளுக்கான பதிலகளை பெற்று பதிவிடுவேன்..அந்த வரிசையில், முதலில் பதிவர் ’தமிழ் ஓவியா’.. என்னயும் மதித்து, பதிலளித்த அவருக்கு என் நன்றிகள்.



அக்னியின் கேள்விகள்..

1. கேள்வி: - உங்களைப் பற்றி?

தமிழ் ஓவியா பதில்: -

என்னைப்பற்றி பெரிதாகச் சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை.

ஒருநாளைக்கு இருமுறை மட்டுமே பேருந்து அதுவும் கடந்த 15 ஆண்டுகளாகத்தான் வந்து செல்கிறது. அப்படிப்பட்ட குக்கிராமத்தில் சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தேன். எனது பெற்றோர் கடினமான உழைப்பின் மூலம் எனக்கு கல்வியைத் தந்தனர். கிராமத்தில் வளர்ந்த சூழல் காரணமாக அனைத்துவிதமான அடக்குமுறைகளும் அறிந்து கொள்ள முடிந்தது. படிப்படியாக படித்து முடித்து பணிக்கு வந்து ஒரு கட்டத்தில் பணியை இழந்து மீண்டும்

பணி ஏற்று, ஏற்றுக் கொண்ட கொள்கையின்படி ஜாதி மறுப்புத்திருமணம் புரிந்து ஒரு பெண்குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். என்னைப்பற்றி இதுவே அதிகம் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.


2.கேள்வி:- ஒரு மாதத்தில், சில சமயம் 100 பதிவுகள் வரை போட்டிருக்கிறீர்கள்.இதற்கான நேரமும் தகவலும் உங்களுக்கு எப்படிக்கிடைக்கிறது?

தமிழ் ஓவியா பதில்: -

கிராமத்தில் வளர்ந்ததால் அருகில் உள்ள நகரமான பழனிக்கு வருவதற்கு கூட முடியாத சூழல், எங்கள் ஊருக்கு அருகில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்புப் படிக்கும் போது எனக்கு பெரியார் பற்றிய நூல்கள் அறிமுகமானது. ஆனால் அப்போது பெரியாரைப் படித்து புரிந்து கொள்ள இயலாத வயது அதைவிட அப்போது பள்ளிப் பாடத்தையே படிக்க நேரம் கிடைக்காது. இருந்தாலும் எங்கள் ஊரில் கடை வைத்திருந்த நாகராஜ், அவருடைய உறவினர் திருநாவுக்கரசு( அப்போது அவர் கல்லூரில் படித்து வந்தார்) போன்றவர்கள் பெரியார் பற்றிய நூல்களை கொடுத்து படிக்க வலியுறுத்தி வந்தனர். அதன் விளைவாக பெரியாரை கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கினேன். பின்பு நான் பழனிக்கு கல்லூரிப் படிப்புக்கு போக ஆரம்பித்தபிறகு பெரியாரின் நூல்களை நானே வாங்கிப் படிக்கும் அளவுக்கு தேறி விட்டேன். அந்த நூல்கலைப் படிக்கும் போது சமுதயாம் அரசியல் போன்றவைகள் நன்கு புரிய ஆரம்பித்து விட்டது. அதோடு கிராமத்தில் நடக்கும் அடக்கு முறைகளுக்கான அடிப்படைக்காரணமும் தெரிந்து விட்டது. இந்தக் கொடுமைகளை ஒழிக்க வேண்டும் என்ற அடைப்படையில் பெரியார் மற்ற முற்போக்கு சிந்தனையாளர்களின் நூல்களையும் படிக்கலானேன். படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட அய்யங்கள் தோழர்களுடன் விவாதிக்கும் போது அவர்கள் என்னிடம் கேட்ட அய்யங்கள் அத்தனையும் குறித்து வைத்துக் கொண்டு அதற்கான விடைகளைத் தேடினேன். அந்த அய்யங்களுக்கு பெரியார் கருத்துக்களில் விடை கிடைத்தது அப்போதிருந்தே குறிப்பு எடுப்பதும் அதை ஒரு நல்ல தரமான நோட்டில் எழுதி வைக்கும் பழக்கம் வந்துவிட்டது.


நான் கல்லூரியில் படிப்பதால் “விடுதலை” இதழை பழனியில் இருந்து எங்கள் ஊருக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தனர் பழனி பெரியார் இயக்கத்தினர். அப்படி கொண்டு போகும்போது பேருந்துலேயே

“விடுதலை” (4 பக்கம்) இதழைப் படித்து விடுவேன். படிக்க படிக்க பல உண்மைகள் புரிய ஆரம்பித்து அந்த இதழ்களைச் சேகரித்துவைக்கும் பழக்கமும் வந்துவிட்டது. தமிழர்களின் ஆயுதம் “விடுதலை” என்று பெரியார் சொன்னார். நானும் அந்த ஆயுதத்தை பலமாகப் பற்றிக் கொண்டேன்

இப்போது கூட நான் ஒரு மாதத்தில் நூறு பதிவு போடுவதற்கு செய்திகள் முழுவதும் “விடுதலை” “உண்மை” இதழ்களிலிருந்தே எடுக்கிறேன்.

பணி முடித்ததும் என்னுடன் பணியாற்றுபவர்கள் வேறு பணி செய்து பணத்தை தேடி ஓடுவார்கள். நான் செய்தியைத் தேடி ஓடுவேன்.

எனது துணைவியார் மாலையில் பள்ளி மாணவர்களுக்கு தனிப்பயிற்சி (டூயுசன்) வகுப்பு எடுப்பார். மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு எங்கள் வீட்டில் உள்ள ஒரு அறையை ஒதுக்கிவிட்டு இன்னொரு அறையில் உள்ள கணனி நான் அமர்ந்து விடுவேன். இரவு 9 மணி வரை நான் எடுத்த குறிப்புகளிலிருந்தும், “விடுதலை” இதழில் இருந்தும் செய்திகளை வலைப்பூ வில் பதிவு செய்து விடுவேன். இணையத்திலிருந்தும் பல செய்திகள் கிடைப்பதால் இது சாத்தியமாகிறது.


3.கேள்வி:- பெரியர் பற்றி அதிகம் எழுதுகிறீர்கள்,உங்களுக்கு பெரியார், அவரின் கொள்கைகள் அறிமுகமாகிய விதம் பற்றி?


தமிழ் ஓவியா பதில்: -

இரண்டாவது கேள்விக்கான பதிலைப் படிக்கவும்.

கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே திராவிடர் கழகத்தில் இணைந்து என்னாலான பணியைச் செய்து வந்து கொண்டிருக்கிறேன். படிக்கும் போது நான் படித்தவைகளிலிருந்து தொகுத்துவைத்திருந்த செய்திகளை “விடுதலை” “உண்மை” இதழ்களுக்கு அனுப்பிவைப்பேன். அந்தச் செய்திகளும் பதிவாகும். தேடலும் தேடிய செய்திகளை பகிர்ந்து கொள்வதின் மூலம் பெரியார் அறிமுகமாகி, இன்று எங்களது வாழ்வியலாகி விட்டது.



4. கேள்வி:- உங்கள் வீட்டில் பெரியரின் கொள்கைகள் நடைமுறையில் உள்ளதா?

(வீட்டில் நடக்கும் திருமணம், இறப்பு நிகழ்சிகள் மூலம் கொள்கைக்காரனா இல்லையா என்பதை வெகு எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம் .

அதனடிப்படையில் நான் திருமணம் செய்தால் ஜாதி மறுப்புத்திருமணம் தான் செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்து வேறு ஜாதியில் திருமணம் செய்து கொண்டேன். அது போல் என் தந்தை இறப்பின்போதும், தாய் இறப்பின் போதும். எந்த வித சடங்குகளுமின்றி இறுதி நிகழ்ச்சி நடந்தது.

திருமணத்தைப் பொறுத்தவரை எனது தனிப்பட்ட உரிமை. அதில் எனது சகோதரகள் சகோதரிகள் தலையிட முடியாது. எனது பெற்றோர் இறப்பு என்பது எங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் பொதுவானது. ஆனாலும் எனது முடிவுக்கு கட்டுப்பட்டு எந்தச் சடங்கும் இன்றி எங்களது பேற்றோரின் இறுதி நிகழ்ச்சி நடைபெற ஒத்துழைத்த எனது அண்ணன் மற்றும் அக்கா இருவருக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது நான், என் துணைவியார், எனது மகள் மூவரும் பெரியாரியலை வாழ்வியலாக ஏற்று சற்றும் பிசகாமல் நடந்து வருகிறோம்.

5.கேள்வி:- தமிழ் ஈழம் பற்றி, உங்களின் கருத்து.

தமிழ் ஓவியா பதில்: -



இலங்கையில் தமிழன் இரண்டாந்தரக் குடிமகனாக நடத்தப்பட்டதால் தந்தை செல்வா பொன்றவர்களால் அறப்போரட்டமாக ஆரம்பித்து, அடக்குமுறை அதிகமானதால் இன்று ஆயுதப் போரட்டமாக உருவெடுத்திருக்கிறது.

அடக்குமுறை எங்கிருந்தாலும் அது கண்டிக்கதக்கது. அந்த வகையில் ஈழத்தமிழர்களுக்கு தமிழன் என்ற முறையில் தார்மீகமான ஆதரவு எப்போதும் உண்டு.

6. கேள்வி:- இப்பொழுதும் பெரியாரின் கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல ஆட்கள் இருக்கிறார்கள?

தமிழ் ஓவியா பதில்: -

பெரியாரின் கொள்கைகள் என்பது ஒரு வாழ்க்கை நெறி, அது மனித நேயத்தை மலரச் செய்வதில் முதலிடம் வகிக்கிறது. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் மூலம் பல நூல்களை திராவிடர்கழகம் வெளியிட்டு பெரியாரின் கருத்தை மக்களிடம் கொண்டு செல்கிரது. அதேபோல் மகளிரணி, இளைஞரணி மூலம் தற்போதைக்கு ஏற்ற முறையில் புதிய அணுகுமுறையில் பிரச்சாரப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அது போல் பெரியார் தொண்டர்கள் அவரவர்கள் சக்திக்கேற்றவாறு தனது சொந்தக் காசை செலவு செய்து பெரியாரைப் பரப்பி வருகின்றனர். கடைசி மூட நம்பிக்கைக்காரன் இருக்கும் வரையில் பெரியாரின் பணி தேவைப்படும். இப்போது கொஞ்சம் அதிகமாகவே தேவைப் படுகிறார் பெரியார். இது குறித்து ஒரு சான்றை மட்டும் கீழே தருகிறேன்.

“தீர்மானம் 6 (அ):

இயக்க நாளேடான விடுதலை மாதம் இருமுறை இதழான உண்மை, குழந்தைகள் இதழான பெரியார் பிஞ்சு, ஆங்கில மாத இதழான தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஆகியவற்றிற்கு அதிக அளவில் சந்தா சேர்ப்பதையும், இயக்க வெளியீடுகளை, நூல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதையும், புதிய வெளியீடுகளை திட்டமிட்ட வகையில் கொண்டு வருவதையும் முதன்மையான பணியாகக் கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.

விடுதலை ஏட்டிற்கு இது பவளவிழா ஆண்டு (75 ஆம் ஆண்டு) என்பதால், அதன் முக்கியத்துவத்தை நாடு முழுவதும் எடுத்துச் சொல்லி வாசகர்களின் எண்ணிக்கையை பெருமளவில் அதிகப்படுத்து வதற்கான முயற்சியை திட்டமிட்ட வகையில் மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 6 (ஆ):

வீதி நாடகம், பகுத்தறிவுக் கண்காட்சி, கிராமப் பிரச்சாரம், நடமாடும் புத்தகச் சந்தைப் பயணம் இவற்றை ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு திட்டத்தின்மூலம் தீவிரமாகச் செயல்படுத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

வீதி நாடகம், மந்திரமா? தந்திரமா? ஆகியவைகளுக்கான பயிற்சி முகாம்களை நடத்தி இதில் இன்னும் ஏராளமான அளவில் இளைஞர்களை உருவாக்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 6 (இ):

பெரியாரியல் பயிற்சி முகாம் - பெண்களுக்கான முகாம், களப்பணி முகாம், பேச்சாளர் முகாம், தலைமைத்துவ முகாம்களை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.”

-----------2009 ஆம் ஆண்டுக்கான திராவிடர் கழகச் செயல் திட்டங்கள் உள்பட திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலிருந்து . “விடுதலை” 23-12-2008



7. கேள்வி:- இன்றய இந்தியாவில் நிலவும் அரசியல் பற்றி உங்கள் கருத்து.


தமிழ் ஓவியா பதில்: -

இன்று இந்தியாவில் நிலவும் அரசியல் தன்மையை நினைக்கும் போது வேதனையும் வெட்கமும் படத்தக்க சூழல்தான் நிலவுகிறது. ஒருபக்கம் இந்து தீவிரவாதிகளால் மாலேகன் குண்டு வெடிப்பு, இன்னொரு பக்கம் இஸ்லாம் தீவிரவாதிகளால் மும்பையில் பல இடங்களில் குண்டு வெடிப்பு மனிதத்துடன் வாழமறந்து விட்டு மதத்தை கட்டிக் கொண்டு வாழும் மதவெறியே இன்றைய அரசியல் நிலையாகிவிட்டது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது அரசியல் சாக்கடையை யாராலும் சுத்தம் செய்ய முடியாது. லஞ்சம், ஊழல், கற்பழிப்பு, கொலை, கொள்ளை , ஜாதி மதம், என எல்லாமும் நிறைந்த இந்தியாவை அரசியல் காப்பாற்றிக் கொண்டு(மேற்கண்டவைகளை ஒழிக்காமல்) இருக்கிறது. சட்டரீதியாக மடுமல்லாமல் மனரீதியாகவும் மூலகாரணத்தை அறிந்து அதைப் போக்கினால் நிலமை மாறலாம்.


8.கேள்வி:- தமிழ்நாட்டில் மெல்ல RSS பரவி வருகிறதே அதை பற்றி?

தமிழ் ஓவியா பதில்: -



இந்தியாவில் தமிழ்நாடு எப்போதும் தனித்தன்மையாக ஒவ்வொரு செயலிலும் இருக்கும். அந்த வகையில் மதவெறிக்கு இடம் கொடுக்காமல் மண்ணின் பெருமையை நிலைநாட்டியே வந்துள்ளது.உதாரணமாக இந்துமத வெறியர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது இந்தியா முழுவதும் கலவரம் ஏற்பட்டது. ஆனால் தமிழ்நாடு மதவெறிக்கு இடம் கொடுக்காமல் (ஒருசில தவிர) அமைதி காத்தது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் பற்றி தமிழக மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் மிக அதிகமாக வளர்ந்தனர். அப்போதே அதை சுட்டிக் காட்டி எச்சரிக்கை செய்தது திராவிடர் கழகம். தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் பரப்புரையில் ஈடுபட்டு அதன் முகமூடியை கிழிதெறிந்து அம்பலப்படுத்தினர் பெரியார் இயக்கத்தினர் மற்றும் முற்போக்கு அமைப்பினர்.

ஆர்.எஸ்.எஸ். இந்திய அரசால் சுமார் நான்கு முறை தடை செய்யப்பட்ட வன்முறை அமைப்பு. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பி.ஜே.பி.க்கு முட்டு கொடுத்ததனால் ஆர்.எஸ்.எஸ். பரவி வருவது போல் ஒரு தோற்றம் நிலவுகிறது. அதில் உண்மை இல்லை. அப்படியே இருந்தாலும் அதன் பருப்பு தமிழகத்தில் வேகாது.

9. பழனியின் பிரபலமே பக்தி, அந்த ஊரில் ஒரு பெரியரிஸ்ட்டாக எப்படி உணருகிறீர்கள்?

தமிழ் ஓவியா பதில்: -

எங்கள் ஊரான பழனியில் ஒரே “பொழுதுபோக்கும்” இடம் பழனிமலைதான். பெரியார் தொண்டர்கள் என்றாலே ஒரு தனிமரியாதை உண்டு. பழனியில் மட்டுமல்ல எல்லா ஊர்களிலும். நான் அடிக்கடி சொல்லுவதுபோல் உலகத்தில் உள்ள எல்லாப் பதவிகளையும் விட “பெரியார் தொண்டன்” என்ற பதவி உயர்வானது. பக்தி என்பது யாரும் விரும்பி செய்வது போல் தெரியவில்லை. பயத்தினால் பக்தியாக இருப்பது போல் நடிக்கிறார்கள். அல்லது எனக்கு இதைசெய்து கொடு நான் உனக்கு மொட்டைஅடிக்கிறேன், விரதம் இருக்கிறேன் போன்ற ஒப்பந்தங்கள் நடக்கிற இடமாகத்தான் இருக்கிறது. லஞ்ச ஊழலின் பிறப்பிடம் கோவில் என்று சொன்னால்கூட தவறில்லை.

பக்தர்கள் எதையாவது எதிர்பார்த்து எதையும் செய்கிறார்கள். ஆனால் பெரியார் தொண்ர்கள் எதையும் எதிர்பார்க்காமல் மக்களுக்காக உழைக்கிறார்கள். உதாரணம் வேண்டுமானால் பக்தர்கள் இறந்தபின்கூட சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். ஆனால் பெரியார் தொண்டர்கள் எதையும் பொருட்படுத்தாமல்“தொண்டறம்” நோக்கில் செயல்படுவார்கள். ஆக

பெரியாரின் தொண்டனாக இருப்பதில் பெருமையும், மகிழ்ச்சியும் கிடைக்கிறது.


10. கேள்வி:- பழனியில் நிறைய, பக்தி என்ற பெயரில் மோசடிகள் நடக்கிறதாமே உண்மையா?


தமிழ் ஓவியா பதில்: -

பக்தியின் பெயரால் நடக்கும் அட்டூழியம் கொஞ்சநஞ்சமல்ல. பழனியில் மட்டுமல்ல கோவில் நகரங்கள் அனைத்திலும் மோசடிகள் நடந்துதான் வருகிறது.

பழனிக்கு வருபவர்கள் தலையில் மட்டும் மொட்டை போட்டுக் கொள்வதில்லை, தங்களுடைய வருமானம் தன்மானத்தையும் சேர்த்து மொட்டை போட்டுக் கொள்கிறார்கள்.

பூசை சாமான்கள் வாங்குவதிலிருந்து மொட்டை போட்டுக் கொள்வதிலிருந்து மோசடிகள் தாராளமாக நடந்து வருகிறது. இதில் என்ன வேடிக்கை என்றால் மோசடி செய்பவர்கள் அனைவரும் பக்தர்கள். ஏமாறுபவர்களும் பக்தர்கள்.

11. கேள்வி:- உங்களின் ஆன்மீக நிலை பற்றி?

தமிழ் ஓவியா பதில்: -

நான் 9ஆம் வகுப்பு படிக்கும் வரை எனது குடும்பத்தாருடன் கோவிலுக்கு சென்று “கடவுளை” வணங்கியுள்ளேன். அதன் பின் பலமுறை கோவிலுக்கு சென்றுள்ளேன். ஆனால் கடவுளை வணங்குவதற்கல்ல. அங்கே நடக்கும் அட்டுழியங்களையும், ஆய்வு நோக்கில் அந்தக் கோவிலின் தலபுராணங்களை அறிந்து கொள்ள. என்னைப் பொருத்தவரைஆன்மீகம் என்பதே மோசடி. தானும் ஏமாந்து மற்றவர்களையும் ஏமாற்றுவது.


13.கேள்வி:- உங்களின் பொழுதுபோக்கு?

தமிழ் ஓவியா பதில்: -



பொழுது போக்கு என்பதே இல்லை என்று சொல்லலாம். பணி முடித்தபின், படிப்பது ,எழுதுவது போன்றவைகளுக்கே நேரம் போதவில்லை.இரவு உணவின் போது குறிப்பாக 9- 10 எனது குடும்பத்தாருடன் பேசி மகிழ்வதுதான் இப்போதைய பொழுது போக்கு. விடுமுறை நாள்களில் பழனி முழுவதும் குடும்பத்துடன் நடந்து சென்று பல் வேறுபட்ட மக்களைச் சந்திப்போம். எனது துணைவியாரின் சொந்த ஊருக்கு போகும்போது மட்டும் பகலில் தூங்குவேன். இதைத்தவிர வேறு இல்லை.


14. கேள்வி:- உங்களுக்கு பிடித்த புத்தகங்கள் பற்றி ஒரு சிறு அறிமுகம்.

தமிழ் ஓவியா பதில்: -

நான் ஆரம்பித்திலேயே சொன்னது போல் பெரியார் நூல்களை விரும்பிப் படிப்பேன். அதேஅளவு ஈடுபாட்டுடன் அம்பேத்கர் நூல்களையும் விரும்பிப் படிப்பேன். மற்றபடி எந்த நூல் கையில் கிடைத்தாலும் வாசித்துவிடுவேன். வீடு முழுவதும் நூல்கள், இதழ்கள் என்று சிதறிக் கிடக்கும். எனது துணைவியாரோ நூலை எடுத்த இடத்தில் வைக்கச் சொல்லிக் கொண்டே இருப்பார். ஆனால் அதை மட்டும் என்னால் செய்யவே முடியவில்லை. என்னை திட்டிக் கொண்டே அதைப் பொறுப்பாக அடுக்கி வைத்து உதவுவார் எனது துணைவியார்.

தி.க. தலைவர் கி.வீரமணி அவர்களின் எழுத்துக்களும், தி.க.பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களின் எழுத்துக்களும்தான் என்னையும் எழுதத் தூண்டியது.

15. கேள்வி:- பதிவராக இன்றய தொழில்நுட்ப வளர்ச்சியை எப்படி பார்கிறீர்கள்?

தமிழ் ஓவியா பதில்: -



தொழிநுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனாலும் இன்னொரு பக்கம் மூடநம்பிக்கையை வளர்க்க இந்த அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்துபவர்களைக் கண்டால் எரிச்சலாக இருக்கிறது.

இந்த வளர்ச்சியை நாம் ஆக்க சக்திக்கு பயன்படுத்தினால் மற்ற நாட்டுக்காரன் போல் நாமும் வேகமாக முன்னேற்றமடையலாம்.

தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி எழுதும்போது பெரியாரின் “இனி வரும் உலகம்” என்ற நூல்தான் நினைவுக்கு வருகிறது. அதில் 1943 ஆம் ஆண்டிலேயே இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி பேசியுள்ளார். மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் ஏராளம் (கடவுள் என்ற கற்பனை உட்பட). இன்னும் மனிதனால் கண்டுபிடிக்க வேண்டியவைகளும் ஏராளம் இருக்கிறது. அதற்கு இந்த அறிவியல் வளர்ச்சி உதவும்.

]இதுகுறித்து பெரியார் கருத்து ஒன்றை தருகிறேன்.

“இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் எப்படி இருக்கும் என்ற சிந்தனையும், கண்ணும் கொள்ள எனக்கு விருப்பமேயொழிய, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் பற்றி அக்கறை கிடையாது”

---------------- பெரியார் 11-12-1944 இல் ஈரோட்டில் பேசியது.

இன்னும் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து அதை நாம் ஆக்க சக்தியாக பயன்படுத்த வேண்டும்.

தாங்கள் அனுப்பிய 15 கேள்விகளுக்கும் என்னால் முடிந்த அளவு விடை அளித்துள்ளேன். கேள்விகள் அனைத்தும் மிகவும் கூர்மையானவை,பொருள் பொதிந்தவை. இந்த வாய்ப்பைக் கொடுத்த தங்களுக்கு மிக்க நன்றி.

30.12.08

தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்


கிரீமிலேயரும் - அடுத்தகட்டப் போராட்டமும்!

திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் நேற்றைய தினம் (29.12.2008) மத்திய அரசு அலுவலகங்கள்முன் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு, கழகத் தோழர்கள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் நடைபெற்ற மறியலுக்குத் தலைமை தாங்கிய தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள், அடுத்தகட்டமாக திராவிடர்கழகம் மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகள் குறித்து அறிவிப்புச் செய்தார்.

டில்லியில் இதுகுறித்து மாநாடு - போராட்டம் நடக்கும் என்ற ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். தென் மாநிலம் அளவுக்கு அவ்வாறு நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

மக்கள் தொகையில் 52 விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரச்சினை இது. இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த இந்த 58 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு துறைகளில், கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு என்பது இப்பொழுதுதான் முதன்முதலாக அமலுக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த வகையில் இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்பது வெளிப்படையாகும். இத்தகையதோர் சூழ்நிலையில், தடுக்கி விழுந்தவன் அரிவாள் மனையில் விழுந்ததுபோல முதன்முதலாக இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை வாய்ப்பில் மத்திய அரசுத்துறை களிலோ, கல்வியில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலோ நுழையும் முதல் கட்டத்திலேயே, பொருளாதார அளவுகோல் என்ற ஒன்றை - இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இல்லாத ஒன்றைத் திணித்து பிற்படுத்தப்பட்டோரில் இவற்றில் நுழைய ஓரளவு தகுதி வாய்ந்தவர்களை உள்ளே நுழைய விடாமல் வெளியில் தள்ளுவது அநீதி அல்லவா? நேர்மையற்ற தன்மையல்லவா? என்பதுதான் சமூகநீதியாளர்கள் எழுப்பும் அடிப்படை வினாவாகும்.

கிரீமிலேயர் என்னும் அளவுகோலை திணிப்பதால் தகுதி வாய்ந்த பிற்படுத்தப்பட்டோர் கிடைக்காமல் போகும் என்று நன்கு தெரிந்த நிலையில்தான் காலியாகும் பிற்படுத்தப்பட் டோர்களின் இடங்கள் பொதுப்பட்டியலுக்குப் போகும் என்று உச்சநீதிமன்றம் தெரிவிக்கிறது.

நீதிமன்றங்கள் நாட்டில் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்கா? அல்லது அவர்களைப் பழிவாங்குவதற்கா? என்பதுதான் நம்முன் நிற்கும் கேள்வி.

நீதிமன்றங்களின் தற்காலப்போக்கு எந்தத் திசையில் பயணம் செய்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள இந்தப் பிரச்சினையில் அது தெரிவித்திருக்கும் இத்தகு கருத்து மூலம் திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.

நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்பது இதன் மூலமும் உணரப்படுகிறது.

கிரீமிலேயர் என்கிற பொருளாதார அளவுகோல் தாழ்த்தப் பட்டோருக்கும் தேவை - அத்தகு காலம் வந்துவிட்டது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே கருத்தாகக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் பொதுவான எதிரியாக - முட்டுக்கட்டையாக இருக்கக் கூடிய இந்தக் கிரீமிலேயர் முறையை அகற்றிட ஒருங் கிணைந்து போராடக்கூடிய காலகட்டமாக இதனைக் கருதவேண்டும்.


நாடாளுமன்றத்தில் இருக்கக் கூடிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) ஒன்றிணைந்து செயல் படுவார்களேயானால், அடுத்த நொடியே இந்தக் கிரீமிலேயர் என்கிற சமூகநீதியின் குறுக்கே படுத்துக்கிடக்கும் முட்டுக்கட்டை இருந்த இடம் தெரியாமல் அப்புறப்படுத்தப்பட்டு விடும்.

மக்கள் பிரச்சினையை நேரடியாகச் சந்திக்கக் கூடியவை மாநில அரசுகளே - மத்திய அரசுக்கென்று நேரிடையாக மக்கள் கிடையாது. எனவே, இதுபோன்ற பிரச்சினைகளில் முடி வெடுக்கும் உரிமை மாநில அரசுகளுக்கே உண்டு என்று சட்டத்திருத்தம் அவசிய உடனடித் தேவையாகும்.

அதனால்தான் மறியல் போராட்டத்துக்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள், கிரீமிலேயரால் ஏற்படும் அநீதி குறித்து மத்திய அரசுக்கு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கடிதம் எழுதவேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார்.

எல்லா முனைகளிலும் அழுத்தம் கொடுத்து, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதியைக் காக்க திராவிடர் கழகம் தொடர்ந்து பாடுபடும் - கட்சிகளை மறந்து அனைத்துத் தரப்பினரும் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.


--------------------நன்றி:"விடுதலை" தலையங்கம் 30-12-2008

திராவிடர் கழகம் - திராவிட முன்னேற்றக் கழகம் - ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்


பெரியார் - அண்ணா கண்ட அறிவியக்கம்;
கடுகளவும் தடம் மாறாமல் நடந்தாகவேண்டும்
திராவிடர் கழகம் - திராவிட முன்னேற்றக் கழகம் -
ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

இதனைச் செயலால் நிரூபித்த கலைஞருக்கு ஆயிரம் வாழ்த்துகள்!

தமிழர் தலைவரின் நெகிழ்ச்சியான பாராட்டுரை


பெரியார், அண்ணா கண்ட இயக்கத்தின் தடம் மாறாமல் நடந்தாகவேண்டும் என்கிற உறுதியை மேற்கொண்டிட, தி.மு. கழகத்தினர்க்கு அறிவுறுத்திய கலைஞர் அவர்களைப் பாராட்டி தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

கடந்த 27.12.2008 (மூன்று நாள்களுக்குமுன்) தி.மு. கழகப் பொதுக்குழு சென்னை அறிவாலயத்தில் நடைபெற்று, தலைவராக 10 ஆவது முறையாக தேர்வு செய்யப்பட்ட பின்பு, அதன் தலைவரும், திராவிடர் இனத் தலைவரும், திராவிடப் பேரியக்கக் குடும்பத்தின் தலைவருமாக விளங்கிடும் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை தி.மு. கழகத்தின் உடன்பிறப்புகளுக்கு - நிகழ்காலத்தில் மட்டுமல்ல வருங்காலத்திற்கும் வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடுகளைப் பிரகடனம் செய்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவுரை - இடித்துரை எல்லாம் அடங்கிய பேருரையாகும்!

கலைஞரின் அறிவுரை

இது அரசியல் இயக்கமாக மாத்திரமல்லாமல், இந்த இயக்கம் சமுதாயப் பேரியக்கமாகவும், இருந்த இயக்கமும், இருக்க வேண்டிய இயக்கமும் - என்று இரண்டு சொற்றொடர்களை நான் இங்கே பயன்படுத்துகிறேன். சமுதாயப் பேரியக்கமாக இருந்த இயக்கம்; இருக்கவேண்டிய இயக்கம் என்று இரண்டு சொற்றொடர்கள். இப்படிச் சொல்வதால், இப்பொழுது சமுதாயப் பேரியக்கமாக இருக்கிற இயக்கமா? என்ற அந்தக் கேள்விக்கு முழுமையாக விடையளிக்க முடியாத நிலை நமக்கிருக்கிறது. ஏனென்றால், இன்னமும் சில பேர், நம்முடைய இயக்கத்திலே உள்ளவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கிளையிலோ அல்லது ஒன்றியத்திலோ அல்லது மாவட்டத்திலோ அல்லது சட்டப் பேரவையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ இருப்பவர்கள் சுத்த சுயம்பிரகாச சுயமரியாதைக்காரர்களாக, மூட நம்பிக்கையை எதிர்த்து சமுதாயத்திலே புரட்சி செய்யக் கூடியவர்களாக இருக்கிறோமா? என்றால் இல்லை. நாம் அதை வேதனையோடு அல்லது வெட்கத்தோடு ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். அதனால்தான், இன்றைக்குச் சில பேருக்கு நம்முடைய இயக்கத்தைப் பற்றி இளக்காரம் தோன்றியிருக்கிறது.

தினமலரின் கணிப்பு

இன்றைக்குக் காலையிலே தினமலர் பத்திரிகையைப் பார்த்தேன். அதிலே, மிகவும் நல்ல நாளில் இன்று தி.மு.க. பொதுக் குழு கூடுகிறது என்று தலைப்பு. 27ஆம் தேதி பல்வேறு வகையில் மிகவும் நல்ல நாள் என ஜோதிடர்கள் கணித்துள்ளார்கள். நாள் முழுவதும் மூல நட்சத்திரம் உள்ளது; சிறப்பு வாய்ந்த அமாவாசை; அனுமான் ஜெயந்தி நாளான இன்று காலை 9.00 மணி முதல் 9.45 மணி வரையில் மகர லக்னம் உள்ளது. இந்த நேரத்திற்குள் எந்தக் காரியத்தைத் துவக்கினாலும் வெற்றி நிச்சயம் என்றிருக்கிறது. நானோ, பேராசிரியரோ, வீராசாமியோ, யாரும் உட்கார்ந்து, எந்த நாளிலே இந்தப் பொதுக் குழுவை வைத்துக் கொள்ளலாம்; இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தை, தேர்தலை நடத்தலாம் என்று பஞ்சாங்கம் பார்த்து இந்தத் தேதியைக் குறிப்பிடவில்லை. எது வசதியான தேதியோ, எந்தத் தேதியிலே இதை நடத்தினால் எல்லோருக்கும் வசதியாக இருக்குமோ அந்தத் தேதியை மட்டும்தான் பார்த்தோம். வேண்டும் என்றே நல்ல நேரம் கடந்து...

ஆனால், தினமலர் பத்திரிகைக்கு இது நல்ல நாள் என்று தோன்றியிருக்கிறது; ஜோதிடர்கள் கணித்துள்ள தேதி என்று தோன்றியிருக்கிறது. நாள் முழுவதும் மூல நட்சத்திரம் என்று தோன்றியிருக்கிறது. சிறப்பு வாய்ந்த அமாவாசை, அனுமார் ஜெயந்தி நாள் இன்று காலை 9.45 மணி வரை மகர லக்னம், இந்த நேரத்திலே எந்தக் காரியத்தைத் துவக்கினாலும் வெற்றி நிச்சயம். நான் வழக்கமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு அய்ந்து நிமிடங்களுக்கு முன்னால் வந்துவிடுவது வழக்கம். இதைக் காலையிலே படித்துப் பார்த்துவிட்டு, வேண்டுமென்றே 10.15 மணிக்கு வந்தேன். (கைதட்டல்). 9.45 மணி வரையிலே நல்ல நாள். அதிலே நீங்கள் ஒரு காரியத்தைச் செய்தால்தான் நல்லது நடக்கும் என்று ஜோதிடர்கள் சொல்லியிருக்கிற காரணத்தால், அதற்கு மாறாக இன்று 10.15 மணிக்குப் போய்ப் பார்ப்போம் என்று வந்து சேர்ந்தோம். நான் சொல்வதற்குக்காரணம், நான் மாத்திரம் கடைப்பிடிக்கவேண்டும் என்பதற்காக அல்ல, நீங்களும் இதைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று உங்களுக்கெல்லாம் சொல்வதற்காகத்தான். இன்னமும் நாம் சமுதாயத்துறையிலே முன்னேறவேண்டிய அளவிற்கு முன்னேறவில்லை.

காற்றிலே விட்டுவிட்டதால்...

இந்த இயக்கம், திராவிட இயக்கம், தமிழ் இயக்கம், சுயமரியாதை இயக்கம் தோன்றிய அந்தக் காலத்திலேயே நாம் சில விஷயங்களை எவ்வளவு அழுத்தந்திருத்தமாக, பிடிவாதமாக அந்தக் கொள்கைகளைப் பின்பற்றினோம் என்பதையும், நாளாவட்டத்தில் அவைகளையெல்லாம் எப்படி மெல்ல காற்றிலே பறக்க விட்டுவிட்டோம் என்பதையும் நம்மைவிட நன்றாக தினமலர் போன்ற பத்திரிகைகள் அறிந்திருக்கிற காரணத்தால்தான், இப்போது கேலி செய்கின்ற அளவிற்கு நல்ல நாள் பார்த்து இந்தப் பொதுக்குழுத் தேர்தலை தி.மு.கழகம் வைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள். இதற்கு நாம் இடம் தராமல், பகுத்தறிவு இயக்கமாக நாம் பரிமளித்தவர்கள்; சுயமரியாதை இயக்க மாகச் சுடர் விட்டவர்கள். தந்தை பெரியார் வழியில், அறிஞர் அண்ணா அவர்களுடைய அறிவியக்க வழியில் நடைபோட்டவர்கள். அதிலிருந்து ஓர் அங்குலம்கூட, ஒரு துளிகூட, ஒரு கடுகளவு கூட நாம் தடம் மாறாமல், நடந்தாக வேண்டும் என்ற உறுதியை மேற்கொள்ள வேண்டுமென்று உங்கள் அனைவரையும் இந்த நேரத்திலே நான் கேட்டுக் கொள்கின்றேன்.

பத்தோடு பதினொன்று அல்ல!

திராவிட முன்னேற்றக்கழகம் அரசியல் கட்சி என்றாலும்கூட, அது பத்தோடு பதினொன்று; அத்தோடு இது ஒன்று என்று கூறப்படும் கட்சி அல்ல. திராவிடர் கழகம் என்ற சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும் இணைந்து உருவான இயக்கத்தின் கருவில் வளர்ந்து, திராவிடர் கழகத்தின் நிறுவனரான தந்தை பெரியார் என்ற தாயின் மடியில் வளர்ந்த இயக்கம் என்பதால்தான், இடையில் மனக்கசப்புகள் இருந்ததற்குப் பின்னரும், குடும்ப உறவுகள், பாசப்பிணைப்புகள் காரணமாக மீண்டும் ஒருமனதாகி இரட்டைக்குழல்களாக, ஒரு நாணயத் தின் இரண்டு பக்கங்களாக தத்தம் தொண்டினைத் தொய்வின்றித் தொடர முடிகிறது!

அரசியல் பதவிகளைக் குறி வைத்து, கொள்கைகள்பற்றிக் கவலைப்படாமல், இந்த இயக்கத்தில் இருக்க முடியாது - இருக்கக் கூடாது என்பதைத்தான் கலைஞர் அவர்கள் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்!

பார்ப்பன ஏடுகளின் எழுத்துகளைப் புறந்தள்ளி...

ஜாதி உணர்வுக்கு ஆளாவதோ, நெற்றிக்குறிகளைப் போட்டு, பார்ப்பனியப் பண்பாட்டு அடிமைத்தளைகளை விரும்பிப் பூட்டிக்கொண்டு வீதிவலம் வரக்கூடாது என்பதை எடுத்துக்காட்டி, இது பகுத்தறிவுக் கொள்கை உள்ள பெரியார் - அண்ணா கண்ட இயக்கம் ஆகும் என்பதை மிக அருமையாகச் சுட்டியுள்ளார்.

பார்ப்பன ஊடகங்கள், ஏடுகள் பிழைக்க, வயிறு கழுவ ஏதாவது எழுதினால் அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று செயலால் நிரூபித்த நமது கலைஞருக்கு ஆயிரம் வாழ்த்துகளை அள்ளித் தெளித்து மகிழ்கிறோம்.


-------------- நன்றி: "விடுதலை" 30.12.2008

பார்ப்பனராவது பார்ப்பனப் பெண்ணாவது மொட்டை அடித்துக் கொள்ளவோ, தெருவில் குதிக்கவோ வருகிறார்களா?"




எந்தப் பார்ப்பனராவது...

"ஆண்களும், பெண்களும் கோயில்களுக்குச் சென்று தலை மொட்டை அடித்துக் கொள்வதும், காவடிக் கட்டையைத் தூக்கிக் கொண்டு தெருவில் குதிப்பதும், புண்ணியக் காரியம் என்கிறார்கள். எந்தப் பார்ப்பனராவது பார்ப்பனப் பெண்ணாவது மொட்டை அடித்துக் கொள்ளவோ, தெருவில் குதிக்கவோ வருகிறார்களா?"

------------------தந்தை பெரியார் - "விடுதலை", 29.8.1950

29.12.08

பெரியார், அண்ணா அறிவியக்க வழி நடந்திட வேண்டும்!




பெரியார், அண்ணா அறிவியக்க வழியிலிருந்து
கடுகளவு கூட தடம் மாறாமல் நடந்திட வேண்டும்

தி.மு.க. பொதுக்குழுவில் கலைஞர் உரை


தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அவர்களுடைய அறிவியக்க வழியில் நடைபோட்டவர்கள் அதிலிருந்து ஓர் அங்குலம் கூட, ஒரு துளி கூட, ஒரு கடுகளவு கூட நாம் தடம் மாறாமல் நடந்தாக வேண்டும் என்று தமிழக முதலமைச்சர், தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

27.12.2008 அன்று சென்னையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு நிறைவில் தி.மு.க. தலைவர் கலைஞர் ஆற்றிய உரையின் முக்கியப் பகுதி வருமாறு:-

இது அரசியல் இயக்கமாக மாத்திரமல்லாமல், இந்த இயக்கம் சமுதாயப் பேரியக்கமாகவும், இருந்த இயக்கமும், இருக்க வேண்டிய இயக்கமும் - என்று இரண்டு சொற்றொடர்களை நான் இங்கே பயன்படுத்துகிறேன். சமுதாயப் பேரியக்கமாக இருந்த இயக்கம்; இருக்க வேண்டிய இயக்கம் என்று இரண்டு சொற்றொடர்கள். இப்படிச் சொல்வதால், இப்பொழுது சமுதாயப் பேரியக்கமாக இருக்கிற இயக்கமா? என்ற அந்தக் கேள்விக்கு முழுமையாக விடையளிக்க முடியாத நிலை நமக்கிருக்கிறது. ஏனென்றால், இன்னமும் சில பேர், நம்முடைய இயக்கத்திலே உள்ளவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கிளையிலோ அல்லது ஒன்றியத்திலோ அல்லது மாவட்டத் திலோ அல்லது சட்டப் பேரவையிலோ அல்லது நாடாளு மன்றத்திலோ இருப்பவர்கள் சுத்த சுயம்பிரகாச சுயமரியாதைக் காரர்களாக, மூட நம்பிக்கையை எதிர்த்து சமுதாயத்திலே புரட்சி செய்யக் கூடியவர்களாக இருக்கிறோமா? என்றால் இல்லை. நாம் அதை வேதனையோடு அல்லது வெட்கத்தோடு ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். அதனால்தான், இன்றைக்குச் சில பேருக்கு நம்முடைய இயக்கத்தைப் பற்றி இளக்காரம் தோன்றியிருக்கிறது.

இன்றைக்குக் காலையிலே தினமலர் பத்திரிகையைப் பார்த்தேன். அதிலே, மிகவும் நல்ல நாளில் இன்று தி.மு.க. பொதுக் குழு கூடுகிறது என்று தலைப்பு. 27ஆம் தேதி பல்வேறு வகையில் மிகவும் நல்ல நாள் என ஜோதிடர்கள் கணித்துள்ளார்கள். நாள் முழுவதும் மூல நட்சத்திரம் உள்ளது; சிறப்பு வாய்ந்த அமா வாசை; அனுமான் ஜெயந்தி நாளான இன்று காலை 9.00 மணி முதல் 9.45 மணி வரையில் மகர லக்னம் உள்ளது. இந்த நேரத் திற்குள் எந்தக் காரியத்தைத் துவக்கினாலும் வெற்றி நிச்சயம் என்றிருக்கிறது. நானோ, பேராசிரியரோ, வீராசாமியோ, யாரும் உட்கார்ந்து, எந்த நாளிலே இந்தப் பொதுக் குழுவை வைத்துக் கொள்ளலாம்; இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தை, தேர்தலை நடத்தலாம் என்று பஞ்சாங்கம் பார்த்து இந்தத் தேதியைக் குறிப்பிடவில்லை. எது வசதியான தேதியோ, எந்தத் தேதியிலே இதை நடத்தினால் எல்லோருக்கும் வசதியாக இருக்குமோ அந்தத் தேதியை மட்டும்தான் பார்த்தோம். ஆனால், தினமலர் பத்திரிகைக்கு இது நல்ல நாள் என்று தோன்றியிருக்கிறது; ஜோதிடர்கள் கணித்துள்ள தேதி என்று தோன்றியிருக்கிறது. நாள் முழுவதும் மூல நட்சத்திரம் என்று தோன்றியிருக்கிறது. சிறப்பு வாய்ந்த அமாவாசை, அனுமார் ஜெயந்தி நாள் இன்று காலை 9.45 மணி வரை மகர லக்னம், இந்த நேரத்திலே எந்தக் காரியத்தைத் துவக்கினாலும் வெற்றி நிச்சயம். நான் வழக்கமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு அய்ந்து நிமிடங் களுக்கு முன்னால் வந்துவிடுவது வழக்கம். இதைக் காலையிலே படித்துப் பார்த்துவிட்டு, வேண்டுமென்றே 10.15 மணிக்கு வந்தேன். (கைதட்டல்). 9.45 மணி வரையிலே நல்ல நாள். அதிலே நீங்கள் ஒரு காரியத்தைச் செய்தால்தான் நல்லது நடக்கும் என்று ஜோதிடர்கள் சொல்லியிருக்கிற காரணத்தால், அதற்கு மாறாக இன்று 10.15 மணிக்குப் போய்ப் பார்ப்போம் என்று வந்து சேர்ந்தோம். நான் சொல்வதற்குக் காரணம், நான் மாத்திரம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக அல்ல, நீங்களும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உங்களுக்கெல்லாம் சொல்வதற்காகத்தான். இன்னமும் நாம் சமுதாயத்துறையிலே முன்னேற வேண்டிய அளவிற்கு முன்னேறவில்லை.

அறிஞர் அண்ணாவின் அறிவியக்க வழியிலிருந்து தடம் மாறாமல் நடந்தாக வேண்டும்

இந்த இயக்கம், திராவிட இயக்கம், தமிழ் இயக்கம், சுயமரியாதை இயக்கம் தோன்றிய அந்தக் காலத்திலேயே நாம் சில விஷயங்களை எவ்வளவு அழுத்தந்திருத்தமாக, பிடிவாதமாக அந்தக் கொள்கைகளைப் பின்பற்றினோம் என்பதையும், நாளாவட்டத்தில் அவைகளையெல்லாம் எப்படி மெல்ல காற்றிலே பறக்க விட்டுவிட்டோம் என்பதையும் நம்மைவிட நன்றாக தினமலர் போன்ற பத்திரிகைகள் அறிந்திருக்கிற காரணத்தால்தான், இப்போது கேலி செய்கின்ற அளவிற்கு நல்ல நாள் பார்த்து இந்தப் பொதுக்குழுத் தேர்தலை தி.மு.கழகம் வைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள். இதற்கு நாம் இடம் தராமல், பகுத்தறிவு இயக்கமாக நாம் பரிமளித்தவர்கள்; சுயமரியாதை இயக்கமாகச் சுடர் விட்டவர்கள். தந்தை பெரியார் வழியில், அறிஞர் அண்ணா அவர்களுடைய அறிவியக்க வழியில் நடைபோட்டவர்கள். அதிலிருந்து ஓர் அங்குலம்கூட, ஒரு துளிகூட, ஒரு கடுகளவு கூட நாம் தடம் மாறாமல், நடந்தாக வேண்டும் என்ற உறுதியை மேற்கொள்ள வேண்டுமென்று உங்கள் அனைவரையும் இந்த நேரத்திலே நான் கேட்டுக் கொள்கின்றேன்.

பேராசிரியர் அவர்கள் சில வேண்டுகோள்களை உங்களுக்கு வைத்தார்கள். இந்தக் கழகத்தை எப்படியெல்லாம் கட்டிக்காக்க வேண்டும். நம்முடைய செய்திகளை, நம்முடைய சாதனைகளை எப்படியெல்லாம் மக்களுக்குப் பரப்ப வேண்டும் என்றெல்லாம் உங்களுக்குச் சொன்னார்கள்.

ஒன்றைச் சொல்லிக் கொள்ளவிரும்புகின்றேன். இதைப் போன்ற நிகழ்ச்சிகளில் பொன்னாடைகளைப் போர்த்துகிறீர்களே, அதைக் கொஞ்சம் நிறுத்துங்கள். நான் பலமுறை சொல்லியும்கூட, அதை நிறுத்துவதாக இல்லை. பொன்னாடை போர்த்துவதிலே சிலருக்கு லாபம். நீங்கள் எனக்குப் போர்த்துகிற பொன்னாடையை, நான் இன்னொருவருக்கு ஒரு நாள் போர்த்தி விடலாம்; அதுதான் லாபம். என் வீட்டிலே 10 பொன்னாடைகள் இருந்தால், அதிலே ஒரு 8 பொன்னாடைகளை, 8 விழாக்களுக்குச் சென்று, 8 பேர்களுக்குப் போர்த்தப் பயன்படும். அதனால்தான், கைத்தறி நெசவாளருக்குப் பயன்படவேண்டும்; அவருக்கும் வாணிபம் நடைபெறவேண்டும்; அவருடைய கைத்தறித்துணிகள் விற்பனை ஆகவேண்டும் என்பதற்காகத்தான், அறிஞர் அண்ணா காலத்திலேயிருந்து கைத்தறி ஆடைகளை நாம் அணிவது மாத்திரமல்ல; இதுபோன்ற விழாக்களில் கைத்தறி ஆடைகளைத்தான், அதிலே கலந்து கொள்கின்ற தலைவர் களுக்கு நாம் அணிவிப்பது என்கின்ற ஒரு முறையைக் கையாண்டோம்.

இனி கைத்தறி ஆடைகளை - புத்தகங்களை அளிப்பீர்!

அதற்குப்பிறகு புத்தகங்கள் தரவேண்டும் என்றோம்; அப்படித் தருவதால் புத்தகங்கள் பரவி, அறிவு பரவுவதற்கு இடம் ஏற்படும் என்று. ஆனால், இன்றைய தினம் பளபளப்பான, பகட்டான பொன்னாடைகளை அணிவித்து, அது மறுநாளே பல்லிளிக்கின்ற அளவிற்கு வெளுத்துப்போய், அந்தப் பொன்னாடையை வைத்துக் கொண்டு, பெரியவர்கள் யாராவது வரமாட்டார்களா, வந்தால் அவர்களுக்குப் போர்த்தலாம் என்று அவர்களுக்குப் போர்த்தி, அதிலே எங்கேயாவது கிழிசல் இருந்தால், அதை ஜாக்கிரதையாக மறைத்து, அவர்களுக்குப் போர்த்தி விட்டு விடுகிறோம். தயவு செய்து இனி என்னுடைய விழாக்களில், நான் கலந்துகொள்கின்ற எந்த விழாவாக இருந்தாலும், அந்த விழாக்களில், அதிலே கலந்து கொள்கின்றவர்களுக்கு, நாம் யாருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று கருதுகின்றோமோ, அவர்களுக்கெல்லாம் கூடுமான வரையில் கைத்தறி ஆடைகளை அணிவியுங்கள்; கைத்தறித் துண்டுகளை அணிவியுங்கள். நாமும் கைத்தறி ஆடைகளை அணிவது என்று கங்கணம் கட்டிக் கொள்ளுங்கள்.

புத்தகங்கள் வாங்கித் தருவது, அதைப் பரிசாக வழங்குவது என்றால், அறிவு பரவும். அதைச் செய்யுங்கள். அதைவிட்டுவிட்டு, ஆடம்பரமான துணிமணிகளை, பட்டாடைகளை வாங்கி பரிசாக வழங்குவது தேவையில்லை. அதை திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுக்குழுவிலே சொல்வதற்குக் காரணம், பொதுக்குழுவிலே சொன்னால்தான், அது நம்முடைய கிளைக் கழகங்கள் வரையிலே சென்று, நம்முடைய கிளைக்கழக உறுப்பினர்கள் வரையிலே கடைப்பிடிக்கமுடியும் என்பதற்காக அதை நான் பொதுக்குழுவிலே சொல்லவேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது.

கண்கலங்க பிரதமருக்கு வேண்டுகோள்

மத்திய அரசு நாம் விரும்புகின்ற அவசரத்திற்கு, நாம் படுகின்ற வேதனையைத் துடைக்கின்ற அளவிற்கு, வேகமான முடிவெடுக் காமல், இன்னும், இன்னும், இன்னும் தாமதிக்கின்ற காரணத் தால், தாமதிக்கின்ற ஒவ்வொரு வினாடியும் ஒரு தமிழனுடைய பிணம் இலங்கை வீதியிலே விழுந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் மறந்து விடக்கூடாது என்பதை மாத்திரம் நான் இந்தப் பொதுக் குழுவிலே, என்னை நீங்கள் தலைவராக ஆக்கி மகிழ் கின்ற இந்த நேரத்திலே கண் கலங்க, வேண்டுகோளாக டெல்லிப் பட்டணத்திற்கு விடுக்க விரும்புகின்றேன். நானும், நம்முடைய தமிழகத்தினுடைய அனைத்துக் கட்சித் தலைவர்களும் சென்று பிரதமர் மன்மோகன்சிங் அவர்களிடம் முறையிட்ட போது, அவர்கள் எங்களுக்குத் தந்த வாக்குறுதி விரைவில் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி, ஒரு வழி காண முயற்சிக்கிறோம் என்றார்கள். இன்னமும் காத்திருக்கிறோம்; நம்பியிருக்கிறோம்; செய்வார் என்று கருதியிருக்கின்றோம்; செய்யவேண்டுமென்று இந்தப் பொதுக் குழுவிலும் தீர்மானம் போட்டிருக்கின்றோம். இந்தப் பொதுக் குழுவிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலே எங்களைக் கண் கலங்க வைத்த தீர்மானம் அது. ஆகவே, அந்தத் தீர்மானத்திற்கு மதிப்பளியுங்கள்; அதை நிறைவேற்றி முடியுங்கள் என்று இந்தப் பொதுக் குழுவின் சார்பாக நம் முடைய மத்திய சர்க்காரை மீண்டும், மீண்டும், மீண்டும், மீண்டும் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.


---------------------நன்றி; "விடுதலை" 29-12-2008

கர்நாடக அரசு ,மைசூரை தமிழ்நாட்டிடம் ஒப்படைப்பார்களா?




ஒகேனக்கல் திட்டத்தைத்
தடுக்க கருநாடகாவுக்கு உரிமை இல்லை

தருமபுரி கூட்டுக் குடிநீர்த் திட்ட மீட்புரிமை மாநாட்டில் திராவிடர்
கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் தொடக்கவுரை




25.12.2008 அன்று ஒகேனக்கல்லில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் உரிமை மீட்பு மாநாடு தந்தை பெரியார், எம்.என். நஞ்சையா சிலை திறப்பு, பெரியார் படிப்பகம் திறப்பு விழாவில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் ஆற்றிய தொடக்கவுரை:

முப்பெரும் விழாக்கள் தலைவர் தமிழர் தலைவர் அவர்களே பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரம் நிறுவனத்தின் தலைவர் மானமிகு பொத்தனூர் சண்முகம் அவர்களே கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் பெருமக்களே, தோழர்களே, தாய்மார்களே!

உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர்களின் விழிகளைத் திறந்தவர், மானுட சமுதாயத்துக்கே புத்தொளி பாய்ச்சியவரான தந்தை பெரியார் சிலையையும், உலகில் எங்கும் காணக் கிடைக்காத ஒரு இயக்கத்தின் ஒப்பரும் கருஞ்சட்டைத் தொண்டர்களை அடையாளப்படுத்தும் வகையில் இந்தப்பகுதியில் சுயமரியாதை வீரராக உலா வந்த பெரியார் பெருந்தொண்டர் மானமிகு எம்.என். நஞ்சையா அவர்களின் சிலையையும் மூட நம்பிக்கையைச் சாய்த்து பகுத்தறிவு ஒளிபரப்பிட பெரியார் படிப்பகத்தையும், தமிழர் தலைவர் அவர்கள் திறந்துள்ளார்.

இவற்றோடு தமிழர்களின் உரிமைப் போராட்டமாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட மீட்பு மாநாடும் இணைக்கப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் சிலை திறப்பு என்றாலே அதில் தமிழர்களின் மீட்பு இருக்கிறது என்பது சொல்லாமலேயே விளங்கும்.


ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களின் அரசு திட்டமிட்டுச் செயலாற்றும் ஒரு கால கட்டத்தில் கருநாடக மாநிலம் தேவையில்லாமல், விதண்டாவாதத் தன்மையில், சட்ட விரோதமான, நியாய விரோதமான ஒரு செயலில் ஈடுபட்டு வருகிறது.

மறுவரையறையா?

1956 ஆம் ஆண்டிலேயே மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, மாநில எல்லைகளும் வரையறை செய்யப்பட்டுவிட்டன. அதன்படி ஒகேனக்கல் பகுதி என்பது தமிழ்நாட்டைச் சேர்ந்தது என்பது ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

இந்த நிலையில் எல்லையை மறுவரையறை செய்யவேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தால், அது எங்கு போய் முடியும் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் எல்லாம் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரப்படவேண்டும் என்றெல்லாம் நமக்குக் குரல் கொடுக்கத் தெரியாதா? என்ற வினா எழக் கூடிய நிலை ஏற்பட்டு விடாதா?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சட்டப்படியும், நியாயப்படியும் நமக்குச் சொந்தமான பிரச்சினைகளுக்காக போராட வேண்டிய நிலை இருப்பது மிகவும் பரிதாபமாகும்.

தற்காப்பு நடவடிக்கைகளில் மட்டுமே நாம் தொடர்ந்து ஈடுபடுவதும் மற்றவர்களோ தாக்குதல் தொடுக்கும் நிலையிலும் ஈடுபடுவது தொடர் கதையாக உள்ளது.

காவிரி நீர்ப் பிரச்சினையாகவிருந்தாலும், முல்லை பெரியாறு அணை பிரச்சினையாகவிருந்தாலும், பாலாறு பிரச்சினையாகவிருந்தாலும், நமக்குச் சட்டப்படியாக உள்ள உரிமைகளுக்காகப் போராடுவது என்பது வழமையாகி விட்டது.

கருநாடகமானாலும், கேரளாவாக ஆனாலும், அவர்கள் சட்டத்தைத் தூக்கியெறிந்து, நீதிமன்ற தீர்ப்புகளையும் புறந்தள்ளி தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிப்பதில் மூர்க்கத்தனமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒகேனக்கல்லை கூட்டுக்குடி நீர்த் திட்டத்தைப் பொறுத்தவரை - இது பல ஆண்டுகளுக்குமுன்பே திட்டமிடப்பட்ட ஒன்றாகும்.

அய்ந்தாவது முறையாக தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று, தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை மூன்றாண்டுகளுக் குள்ளாகவே 75 விழுக்காட்டினை நிறைவேற்றிய சாதனை முதல்வர் கலைஞர் அவர்களையே சாரும்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைப் பொறுத்தவரை மக்களின் தாகத்தைத் தீர்க்க நதிகள் என்பவை கிடையாது - அணைகளும் கிடையாது. இந்த நிலையில்தான் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

ரூ.1334 கோடி

1334 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிட்டு, ஜப்பான் 85 சதவிகிதத் தொகையை கடனாக அளிக்க முன்வந்துள்ளது.

உள்ளாட்சியை நல்லாட்சியாக நடத்திவரும் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் ஜப்பான் சென்று ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு வெற்றிகரமாகத் திரும்பி வந்தார்.

இதில் குறிப்பிடத்தக்க ஒன்று என்னவென்றால், 1998 ஆம் ஆண்டிலேயே கருநாடக - தமிழக அரசுகள் பெங்களூர் குடிநீர்த் திட் டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது. பெங்களூர் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது. ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்திற்கு நிதி உதவி வழங்க முன்வந்த ஜப்பான் அரசு, மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தபோது பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தியதைக் காரணம் காட்டி, நிதி வழங்குவதில் தடை ஏற்பட்டது என்பதும் குறிப்பிட்டுக் காட்டப்படவேண்டிய ஒன்றாகும்.

திட்டத்திற்கான தொடக்க விழா இவ்வாண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்களும் அவ்விழாவில் கலந்துகொண்டார்.

30 லட்சம் மக்களுக்குக் குடிநீர்

இந்தத் திட்டத்தினால் 30 லட்சம் மக்கள் பயனடைவார்கள். மக்களின் குடிநீருக்காகத் திட்டம் தீட்டப்படும்பொழுது அதில் குறுக்கிடுவது மனிதாபிமானம் அல்ல. ஒகேனக்கல் என்பது கூத்தப்பாடி ஊராட்சியைச் சேர்ந்த ஒரு பகுதியாகும். தமிழ்நாட்டின் பகுதியில் விழும் நீரைத்தான் நாம் பயன்படுத்தப் போகிறோமே தவிர, கருநாடக எல்லைக்குள் சென்று நீரை எடுக்கவில்லை. இந்தச் சாதாரண நியாயத்தைக்கூட - பொது அறிவைக்கூடப் பயன்படுத்தாமல், வெறும் வெறியை மட்டுமே மூலதனமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.

கருநாடக மாநிலத்தைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு எதிரான ஒரு வெறித்தனத்தை வளர்த்து வைத்துள்ளார்கள். அந்த வெறித்தனத்தில் யார் அதிகம் டிகிரி என்பதுதான் அங்குள்ள கட்சிகளிடையே போட்டி!

தேசியக் கட்சிகள் என்றும், அகில இந்தியக் கட்சிகள் என்றும் முத்திரை குத்திக்கொண்டு அலைபவர்கள்தான் - தேசியவாதிகள்தான் தேசியத்துக்கு விரோதமான வேலைகளில் இறங்கியுள்ளனர்.

பா.ஜ.க.வின் இரட்டை வேடம்

இன்றைக்கு கருநாடக மாநிலத்தை ஆண்டுகொண்டு இருக்கும் பா.ஜ.க. - அதன் முதலமைச்சர் எடியூரப்பா - பதவிக்கு வருவதற்கு முன்பே இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டு, தமிழ் நாட்டின் எல்லைக்குள்ளேயே வந்து அத்துமீறி அடாவடித்தனமாக ஆர்ப் பாட்டம் நடத்தினார் என்பதையும் இந்த நேரத்தில் நினைவூட்டவேண்டும்.

ஆனால், தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா தலைவர் திருவாளர் இல. கணேசன் என்ன சொல்கிறார்?

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் தமிழக எல்லைக்குள் நிறைவேற்றப்படுகிறது. ஒகேனக்கல் குடிநீர்த் திட்ட இடத்தில் கருநாடகாவுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே, அவர்களின் அனுமதி நமக்குத் தேவையில்லை. கருநாடக தேர்தல் முடிந்துவிட்டதால், திட் டத்தை நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் (தினகரன், 29.5.2008, பக்கம் 18) என்று கூறுகிறார்.

கருநாடக பா.ஜ.க. எதிர்க்கிறது; தமிழக பா.ஜ.க. ஆதரிக்கிறது. ஏன் இந்த இரட்டை வேடம்? கருநாடகத்தில் எதிர்த்தால்தான் ஓட்டு - தமிழ்நாட்டில் ஆதரித்தால்தான் தாக்குப் பிடிக்க முடியும் தேசியக் கட்சிகளின் இந்த இரட்டை வேடத்தை தமிழர்கள் அடையாளம் காண வேண்டும்.

மைசூரை தமிழ்நாட்டிடம் ஒப்படைக்கத் தயாரா?


இன்னொரு காரணத்தை முன்வைக்கிறார் - ஒகேனக்கல் என்ற வார்த்தையே கன்னட மொழியில் உள்ளதுதான் என்று கூறுகிறார்கள்.

தமிழ் மொழியில் பார்ப்பன சமஸ்கிருத ஊடுருவலால் தோன்றியது தான் கன்னட மொழி என்பது வரலாற்று உண்மை.

சமஸ்கிருத ஊடுருவல் மொழியை மட்டும் பிளவுபடுத்தவில்லை; திராவிட இன மக்களைக்கூட ஒருவருக்கொருவர் பகைவர்களாக ஆக்கிவிட்டது என்பதுதான் கசப்பான - வேதனையான உண்மையாகும்
.

அப்படிப் பார்க்கப் போனால், மைசூர் என்பதன் உண்மையான பெயர் எருமையூர் என்பதே! சமஸ்கிருதத்தில் எருமை என்பதற்கு மகிஷி என்று பெயர். மகிஷி என்பது மகிஷாசூர் ஆகி அதன்பின் மைசூர் என்று ஆகி விட்டது. அந்த அடிப்படையில், மைசூரை தமிழ்நாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று நாம் கூறினால், அவர்கள் மைசூரை தமிழ்நாட்டுக்கு ஒப்படைப்பார்களா?

பழைய வரலாற்றை ஆய்வு செய்தால், அது தமிழர்களுக்கு இலாபமாகவேதான் முடியும்.

தமிழர்கள் தங்கள் உரிமைகளை நிலை நாட்டவேண்டும் என்றால், தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை ஏற்கவேண்டும் - திராவிடர் கழகத்தைப் பலப்படுத்த வேண்டும். அதன்மூலம்தான் தமிழன் தமிழனாகவும், தமிழ்நாடு தமிழ்நாடாகவும் இருக்க முடியும் என்று கூறி, இம்மாநாட்டை தொடங்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன் என்று உரையாற்றினார் .


--------------நன்றி: "விடுதலை" 29-12-2008

பெரியார் ஒரு மாபெரும் புரட்சியாளர். அடிப்படையில் அவர் ஒரு போராளி.




அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம்,
பகுத்தறிவு கருத்துகள் பெரியார் 1927-இல் சொன்னவை
- 1976-இல் அரசியல் சட்டத்தில் இடம் பெற்றது

குப்பம் திராவிடப் பல்கலைக் கழகத்தில் தமிழர் தலைவர் பெருமிதம்


அறிவியல் மனப்பான்மை மனித நேயம் பகுத்தறிவு கருத்துகளை 1927-ஆம் ஆண்டே தந்தை பெரியார் அவர்கள் மக்களிடம் பரப்பினார். பெரியார் வலியுறுத்திய அந்த அடிப்படைக் கடமைகள் கருத்து 1976-ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டத்தில் இடம் பெற்றது என்று தந்தை பெரியாரின் கொள்கைகளை எடுத்துக்கூறி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கமளித்தார்.

குப்பம் (ஆந்திரா) திராவிடப் பல்கலைக் கழகத்தில் 26-12-2008 அன்று நடைபெற்ற பெரியார் சிந்தனைகள் கருத்தரங்கில் கலந்துகொண்டு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

தெலுங்கு மொழியில் தமிழர் தலைவர் வணக்கம்

திராவிடப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கடப்பா ரமணய்யா அவர்களே! தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் விவேகானந்த கோபால் அவர்களே! பல்கலைக்கழகத்தின் டீன் பொறுப்பில் இருக்கும் முனைவர் இராஜேந்திர பிரசாத் அவர்களே! இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து வழங்கி நன்றியுரை ஆற்ற இருக்கும் முனைவர் பூலோகரம்பை அவர்களே! வருகை தந்துள்ள சகோதரர்களே, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் எங்களது அன்பான வணக்கங்கள் - வாழ்த்துகள் (அந்தரிக்கு வந்தனம் என தெலுங்கு மொழியிலும் வணக்கத்தினை தெரிவித்தார் தமிழர் தலைவர்).

திராவிட இனத்தில் பல சகோதார மொழிகள் இருந்தாலும், திராவிடர் பண்பாடு மற்றும் இலக்கியங்களைப் போற்றிக் காத்து வருவதில் ஆந்திர மாநிலம் - குறிப்பாக திராவிடப் பல்கலைக் கழகம் அக்கறை காட்டிவரும் நிலை மிகுந்த பாராட்டுக்குரியது.

முதலாவதாக, குப்பத்தில், அமைதியான கிராமச் சூழலில் இந்த திராவிடப் பல்கலைக் கழகம் அமைப்பதற்கு உழைத்திட்ட தமிழறிஞர் முனைவர் வி.அய். சுப்பிரமணியம் அவர்களை நன்றிப் பெருக்குடன் பாராட்டுகிறோம். இங்கு பணியாற்றும் ஆசிரியர் பெரு மக்களையும், இதர பணியாளர்களையும் போற்றிப் பெருமைப்படுத்துறோம். கிராமத்து மாணவர்களுக்கு அவர்களுடைய ஏழ்மை நிலையில், குறைந்த கல்விக் கட்டணத்தில், அவர்களுக்கு கல்வி அளித்து வரும் திராவிடப் பல்கலைக் கழகத்தினைப் பாராட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

பெரியாரின் மாணவன்

பெரியார் சிந்தனைகள் பற்றிய இந்த கருத்தரங்கில் சிறப்புரை ஆற்ற அழைக்கப்பட்டிருக்கும் என்னை பெரியாரின் சீடர் என்று கூறினர். பெரியாரின் மாணவனாகவே என்னை நான் கருதுகிறேன். பெரியார் தனித்துவமானவர். பெரியாரை மக்கள் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. பெரியாரை, அவருடைய லட்சிய நோக்கம் என்னவென்று கேட்ட பொழுது, மற்ற இனங்களைப் போல திராவிட இனமும் மானமும் அறிவும் மிக்கதாக விளங்கவேண்டும் - என்றார்.

பெரியார் சிந்தனைகள் இரட்டை அடிப்படைக் கட்டமைப்பில் அமைந்துள்ளது. ஒன்று சுயமரியாதை; மற்றது பகுத்தறிவு. பகுத்தறிவுச் சிந்தனையினைப் பயன்படுத்தி ஒவ்வொரு மனிதரும் சுயமரியதையுடன் வாழ வேண்டும். அனைத்து மாந்தருக்கும் இந்த அடிப்படை பொருந்த வேண்டும்.

சிந்தனைகள் வெறும் சிந்தனைகளாக இருந்து விடக்கூடாது. எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் அவரது அறிவு ஜீவித்தனம் மக்களுக்குப் பயன்படும் விதத்தில் அமையவில்லை என்றால் - அந்த அறிவுஜீவித்தனம் வீணானதே. அந்த வகையில் பெரியார் முழுமையான பயன்பாட்டு வாதியாக (Utilitarian) தனது சிந்தனைகள் முழுவதும் சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் வாழ்ந்தார். ஒரு மனிதருக்கு வயதும் வாழ்நாளும் பெரிதல்ல. அவர் வாழ்நாளில் எப்படி இருந்தார் - சமுதாயத்தின் அடித்தள மக்களை மேம்படுத்த எப்படி பாடுபட்டார் என்பதைப் பொறுத்தே அவரது வாழ்ந்தநாள் மதிப்பீடு அமையும்.

சுயமரியாதை என்றால் என்ன? சுயமரியாதையின் அவசியம், தேவை ஏன்? சுயமரியாதை இல்லாத மனிதன் அடிமை என்றே அழைக்கப்படவேண்டும். ஒரு நாடு அரசியல் விடுதலை பெற்ற நாடு என்றாலே அதன் குடிமக்கள் அனைவரும் சமூக விடுதலை அடைந்த மக்களாக கருதப்பட முடியாது. ஒரு நாட்டின் விடுதலை என்பது அந்நாட்டு மக்களின் விடுதலை என்ற நிலையிலிருந்து மாறுபட்டது. பெரியார் இந்த நோக்கில் சிந்தித்தார்.

சமூக நீதியை காப்பதற்காகவே 1926 ஆம் ஆண்டு காங்கிரசு பேரியக்கத்தினை விட்டு பெரியார் வெளியேறினார். சமூக நீதிக்காகவே வாழ்ந்தார். தான் வாழ்ந்த 95 ஆண்டுகளில் மீண்டும் அவர் எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் சமூக நீதிக்காகவே உழைத்தார். சமுதாயத்திற்காகவே உழைத்தார்;. அடித்தள மக்களின் மேம்பாட்டுக்காகவே பாடுபட்டார். தனக்கு அளிக்கப் பட்ட எந்த அரசியல் அதிகாரப் பதவிகளையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. முதலமைச்சர் பதவியினை அவருக்கு அளிக்க அந்நாளில் முன்வந்த பொழுது அதனையும் மறுத்துவிட்டார். தன்னலம் கருதாமல் சமுதாயப் பணியில் ஈடுபட்டு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

பெரியார் முழுமையாக முறை சார்ந்த கல்வியைப் பெற்றவர் இல்லை. கல்லூரி வாயிலுக்கு கல்வி கற்க அவர் சென்றது கிடையாது. முறையான கல்வியைக் கற்றிருந்தால் அவரது சிந்தனைகள் ஒரே நிலையில் வரன்முறைப்பட்டிருக்கும். ஆனால் அதற்கு மாறாக பெரியாரது சிந்தனைகள் பரந்து பட்டு, அனைத்து நிலைகளிலும் சென்றடைந்து தாக்கத்தினை இன்று ஏற்படுத்தி உள்ளது.

பெரியார் ஒரு மாபெரும் புரட்சியாளர். அடிப்படையில் அவர் ஒரு போராளி. சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராடியதால்தான் பின்னாளில் சமூகப் புரட்சியாளராக அவர் மாற நேர்ந்தது. பெரியாரது புரட்சியாளர் நிலைக்கு அவரது போராட்டக் குணமே அடிப்படையாக அமைந்தது.

இந்தியாவின் குடிமக்கள் பலர் இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் பொழுது, நீதி மன்றத்திற்குச் சென்று முறையீடு செய்து, தங்களது உரிமைகளை நிலைநாட்டலாம். அந்த அரசமைப்புச் சட்டத்தில் குடிமக்களின் அடிப்படைக் கடமைகளும் வலியுறுத்தப் பட்டுள்ளன. 1976 ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டம் திருத்தப் பட்டு, குடி மக்களின் அடிப்படைக் கடமைகள் அதில் சேர்க்கப் பட்டன. ஒரு நாட்டின் குடிமக்களின் உரிமைகளும் கடமைகளும் நெருங்கிய தொடர்புடையன. இரண்டும் நடைமுறைப்படுத்தப் பட்டால்தான் நாடு நலம் பெற முடியும்.

குடிமக்களின் அடிப்படைக் கடமைகளைப் பற்றி நீண்ட காலத்திற்கு முன்பே - அரசமைப்புச் சட்டம் திருத்தப்படுவதற்கு முன்பே - தொலை நோக்குடன் சிந்தித்துச் செயல்படுத்தியவர் தந்தை பெரியார். எதையும் கேள்வி கேட்டு, அதன் அடிப் படையில் சிந்தித்து ஏற்றுக் கொள்ள வேண்டியவற்றை ஏற்று, புறந்தள்ள வேண்டியதை மறுத்து சுயமரியாதை உள்ள மக்களாக வாழ வேண்டும் என பெரியார் கருதி உழைத்தார். சுயமரியாதையும், பகுத்தறிவுமே அறிவியல் வளர்ச்சிக்கு ஆதாரமாகும். அதுவே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் என பெரியார் கருதினார். அதனைப் பரப்ப அரும்பாடுபட்டார்.

அவரது சிந்தனைகள் குடிமக்களின் அடிப்படைக் கடமைகளாக - அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல் (Developing Scientific Temper), மனிதநேயம் (Humanism) - எதையும் ஆராய்ந்து அறியும் மனப்பக்குவம் மற்றும் சீர்திருத்தம் (Spirit of enquiry and reform) என அரசமைப்புச் சட்டத்தில் விதி 51-A(H) என்பதாக அரசியலமைப்புச் சட்டத்தில் பின்னாளில் இடம் பெற்றன. 1927ஆம் ஆண்டிலேயே பெரியார் வலியுறுத்திய அடிப்படைக் கடமைகள் 1976 ஆம் ஆண்டில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றன. பொதுமக்கள் கருத்து முன்னோக்கிச் செல்லும், சட்டவடிவம் பின்தொடர்ந்தே வரும” (Public opinion marches ahead; Legal enactment limbs behind) என்னும் புரட்சிகர மொழிக்கு ஏற்ப பெரியாரின் சிந்தனைகள் செயல்வடிவம் பெற்றன. பெரியார் எத்தகைய முற்போக்கு - தொலைநோக்குச் சிந்தனையாளர் - செயல் வித்தகர் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

உலகில் மனிதர்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் மனிதநேயம் பெருகவேண்டும். அதற்கு பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுக் கருத்துகள் பரவிட வேண்டும்.

மனிதநேயம்

மனிதநேயம் தழைக்க அறிவியல் மனப்பான்மை வளர வேண்டும். எதையும் ஆராய்ந்து, கேள்வி கேட்டு ஏற்றுக் கொள்ளும் நிலை உருவாக வேண்டும். கடவுள் பெயரால் செய்யப்படும் செயல்களையும் ஆராயும் மனப்பான்மை, அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகவேண்டும். நமது நிலைக்கு உடன்பாடு இல்லை என்றால் தயக்கமின்றி ஒதுக்கித் தள்ளவேண்டும். கடவுள் சொன்னதான செயல்களை மறுத்தால் நரகம்தான் கிடைக்கும் என்பதை நம்பத் தேவையில்லை. காரணம் - நரகம் என்பதே இல்லை. அறிவியல் மனப்பான்மை கொண்டு சிந்தித்தால் இது விளங்கும். பெரியாரின் சிந்தனைகள் இந்த நிலையினைத்தான் வலியுறுத்துகின்றன. பெரியார் ஒரு சுயசிந்தனையாளர், சுயமாக சிந்தித்து மனிதனை, உண்மையான மனிதனாக மாற்ற - மானமும் அறிவும் உள்ள மனிதனாக மாற்றப் பாடுபட்டார். பள்ளிப் படிப்பை முழுவதுமாக முடிக்காத, கல்லூரியில் படிக்க அதன் வாயிலில்கூட நுழையாத பெரியார் சுயசிந்தனையாளராக பரிணமித்தார். முறையான கல்வி கல்லாமை அவருக்கு ஒரு முடக்கமாக அமையவில்லை. அதுவே அவரை ஒரு சுய சிந்தனையாளராக, பரந்து பட்ட சிந்தனையாளர் என்ற நிலைக்கு மாற்றி - முடங்கிக் கிடந்த மக்களை முன்னேற்று வதில் பயன்பட்டது.

உலகளாவுக்கு சகோதரத்துவம் பேணப் பட வேண்டிய 21 ஆம் நூற்றாண்டுச் சூழலில், பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் நிலை எப்படி தொடரமுடியும்? பிறப்பின் அடிப் படையில் தீண்டாமையைக் கடைப்பிடிப்பது எப்படி நியாய மாக இருக்க முடியும்? எத்தனையோ சட்ட வடிவங்கள், எத்தனையோ சட்டத் திருத்தங்கள் தீண்டாமை ஒழிப்பிற்குக் கொண்டுவரப்பட்ட பின்னும், இன்றும் கிராமங்களில் - தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை பயன்படுத்துவது நடை முறையில் இருந்தே வருகிறது. ஒரு குவளை- பொதுவானது. மற்ற குவளை ஒதுக்கீட்டிற்கு உள்ளது. இதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?

மனிதன்தான் வளர்க்கும் நாயை, பூனையை தொட்டுப் பழகலாம்; ஆனால் உடன் இருக்கும் மனிதனை தொட்டால் தீட்டு, பாவம் என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? பெரியார் இந்த வழியில்தான் சிந்தித்தார். இந்த சமுதாய பேதங்களைக் கண்டு எப்படி ஊமைகளாக இருக்கமுடியும் என போராடினார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த அண்ணல் அம்பேத்கர், தான் நடத்திய இதழுக்கு முக் நாயக் ஊமையர்கள் எனும் பொருள்பட பெயர் வைத்தது, சமுதாய நிலையைப் படம் பிடித்துக் காட்டத்தான்.

இந்நிலையினை மாற்றிட, சிந்தனை விடுதலையடைந்து சகோதரத்துவம் பெருக வேண்டும் என்றார் பெரியார். இப்படிப் பட்ட அவரது சிந்தனை சுயமரியாதைக் கொள்கைகளாக மலர்ந்தன. இன்று உலகலாவிய தத்துவங்களாக பரவியுள்ளன. பெரியாரின் சிந்தனைகள் வெகுவாக பரவியுள்ள நிலையின் அடிப்படையில் சென்ற ஆண்டாயிரத்தின் (Millenium) தலை சிறந்த தலைவர்களில் ஒருவர் என பெரியார் அடையாளப்படுத்தப் பட்டுள்ளார். ஒத்த கருத்து உள்ளவர்களால் பாராட்டப்படுவது இயல்பு. ஆனால் மாறுபட்ட கருத்து உள்ள முகாமிலிருந்து அவர் பாராட்டப்பட்டுள்ளார். பெரியார் சமூகப் புரட்சியாளர் என்பதை எற்றுக் கொள்ளாத அணியினர் அவரை அடையாளம் கண்டு சிறந்த தலைவர் என பாராட்டியுள்ளது சிறப்பிற்குரியது.

இந்தியா 2000 (India 2000 Millenium) எனும் தலைப்பில் (1001-2000) பற்றிய செய்திகளை உள்ளடக்கி இந்தியன் எக்ஸ்பிரஸ் பதிப்பகத்தார் புத்தகம் வெளியிட்டுள்ளனர். கடந்த ஆண்டாயி ரத்தின் தலை சிறந்த 100 இந்தியத் தலைவர்கள் - ஆண்டாயிரம் கண்டவர்கள் (Makers of Millenium) எனும் தலைப்பில் சமூகக் களத்தில், வெற்றி பெற்ற இரண்டு தலைவர்களைக் குறிப்பிட்டுள்ளனர். ஒருவர் பாபாசாகிப் அண்ணல் அம்பேத்கர். மற்றவர் தந்தை பெரியார். சமுதாயத்தில் சவுகரியங்களையும், சலுகைகளையும் பார்ப்பனர்கள் அனுபவித்த நிலை - அதைபற்றி கேள்வி கேட்பாரற்ற நிலை - சூறாவளிக் காற்றாப் புறப்பட்ட -கடவுள் சிலை உடைப்பாளர் ஈ.வெ.ராமசாமி நாயக்கரால் (1879-1973) மாற்றப்பட்டது என அப்புத்தகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

கடந்த காலங்களிலும், தற்பொழுதும் நிலவும் தீவிரவாதத் திற்கும், மதவெறிக்கும் அடிப்படைக் காரணங்கள் கடவுள் தத்துவமும், மதங்களும்தான். அண்மையில் மும்பையில் நடந்த தீவிரவாதக் கொடுமை, மனித உயிர்கள் இழப்பினை மனிதநேயம் போற்றும் யாருமே ஏற்றுக் கொள்ளமுடியாது. அனைத்துக் கொடுமைகளும் மதம், கடவுள் அடிப்படையில் உருவானவை. மதவெறி, தீவிரவாதம் அடிப்படையில் மனிதனைப் பிரிக்கின்றன. கடவுள் மனிதனைப் பிரிக்கின்றார். மனிதர்களை ஒற்றுமைப் படுத்த, இணைக்க உலகலாவிய சகோதரத்துவமே தீர்வு. தீவிரவாதத்தை, மதவெறியை உருவாக்கும் கடவுள் தத்துவம் ஒழிக்கப்பட வேண்டும் என பெரியார் விரும்பினார் - செயல்பட்டார். பெரியார் பேணிய சகோதரத்துவம், மனிதநேயம் மதிக்கப்பட வேண்டும். மனிதரிடம் காட்டப்படவேண்டிய பரிவு (Empathetic approach) மாண்படையவேண்டும்.

தேசியம் என்பதைப் பற்றிய பெரியாரது கருத்து சற்று வேறுபாடானது. வெறும் புவியியல் எல்லைகள் சார்ந்தது அல்ல தேசியம். தேசியம் என்பது மனித நேயம் சார்ந்தது. மனிதன் உலகளாவியவன். மனிதநேயம் உலகலாவியது. உலகளாவிய மனித நேயப் பண்பை ஏன் புவியியல் எல்லைகளுக்குள் வரைமுறைப் படுத்த வேண்டும்? அன்னியன் என்ற சொற்றொடர் பெரியாரது சிந்தனையில் புதுவிதமான பொருள் தரும். அன்னியன் என்பது தேசியத்தின் எல்லைகளின் அடிப்படையில் அமைந்தது அல்ல; எல்லையற்ற புரட்சிகரமான சிந்தனைகள் அவை!

மக்களைச் சந்திக்கக்கூடிய - மக்களிடம் நேரடியாகப் பேசக்கூடிய தலைவராக பெரியார் திகழ்ந்தார். நூற்றாண்டு விழா நாயகரான பேரறிஞர் அண்ணா அவர்கள் பெரியார் மக்களைச் சந்தித்து கலந்துறவாடுவதைப் போற்றுகின்ற வகையில், தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார்தான் என அழகாகக் குறிப்பிட்டார். அந்த பெரியாரின் வகுப்புகள் மாலை நேரங்களில்தான் மக்களிடம் தொடங்கும்; கிராமங்கள், நகரங்கள் என பலதரப்பட்ட இடங்களிலும் தொடங்கும் என அண்ணா குறிப்பிடுவார். எளிமையாகப் பேசுவார் பெரியார் - மக்களிடம் பேசுபவர் - மக்களின் மனங்களிடம் பேசுவதை விட மக்களின் இதயங்களுடன் உறவாடுபவர்.

அன்னியன் என்பவன் யார்? பெரியார் விளக்க மளிக்கிறார். எனது பக்கத்து வீட்டில் ஒருவன் குடி இருக்கிறான். அவனது தோளைத் தொட்டு நான் பேசியவுடன், உடனே தனது வீட்டிற்குள் சென்று முழுமையாக குளித்துவிட்டு வந்து, நான் தொட்டதால் ஏற்பட்ட தீட்டைக் கழித்துவிட்டதாக் கூறுகிறான். ஆனால் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால், பிரிட்டன், அமெரிக்க நாட்டிலிருந்து வரும் வெளிநாட்டவர் என்னைப் பார்த்து, என்னுடன் கைகுலுக்கி நலம் விசாரிக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் வெளிநாட்டவரை விட எனது பக்கத்து வீட்டுக்காரரைத்தான் நான் அன்னியன் என கருத வேண்டியுள்ளது. (அன்னியன் பற்றி பெரியார் கூறியதை சுவைபட தமிழர் தலைவர் எடுத்துக் கூறியவுடன் அதை ஆமோதிக்கும் விதமாக பெரும் மகிழ்ச்சியில் அரங்கத்தினர் கரவொலி எழுப்பினர்.)


மனிதரின் சுயமரியாதை மதிக்கப்படவேண்டும். பிறப்பால் பேதம் கற்பிக்கும் மனுதர்மம் எதிர்க்கப்பட வேண்டும், அழிக் கப்பட வேண்டும், பெண்ணடிமையை வலியுறுத்தும் மனுதர்ம அநீதிகள் நீக்கப்படவேண்டும். சமுதாயத்தில் பெண்கள் ஆரம்பம் முதல் கடைசி வரை ஆண்களைச் சார்ந்தே இருக்கின்றனர். குழந்தை நிலையில் தந்தையைச் சார்ந்து வளர்கின்றனர். திருமணம் ஆனபின்பு கணவரைச் சார்ந்து வாழ்கின்றனர். வயதான நிலையில் புத்திரனைச் சார்ந்து இருக்கின்றனர். ஒரு மனித உயிர் பெண்ணாகப் பிறப்பதற்குக் கூட இச் சமுதாயத்தில் இடமில்லை. பெண் குழந்தை பிறந்துவிட்டால் தாய்ப்பாலுக்குப் பதில் கள்ளிப்பால் கொடுத்து அதனை சாகடிக்கும் வழக்கம் இன்றும் சில பகுதிகளில் நடைமுறையில் இருப்பது பெரிதும் வருத்தத்திற்குரியது. பெண் மக்களை விட ஆண்மக்கள் மேலான வர்கள் எனும் கருத்திலேயே மகனை புத்திரன் என அழைக்கும் நிலை. புத் என்றால் நரகம். தந்தையை நரகத்திற்குச் செல்லாமல் காப்பவன் புத்திரன் என்று ஆண்மகன் அழக்கப்படுகிறான்.

பெரியார் சாதியற்ற சமுத்துவ சமுதாயத்தை அமைக்கப் பாடுபட்டார். இந்த சமுதாயத்தில் நிலவும் சாதிவேறுபாடு சற்று விநோதமானது. ஜாதிகளுக்குள் உயர்ந்தது - தாழ்ந்தது என வேறுபாடுகள் போல் இல்லாமல் வேறுபாடுகளும் பல அடுக்குகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. ஒரு ஜாதியை விட இன்னொரு ஜாதி உயர்ந்தது என தரம் பிரிக்கப்பட்ட - சமத்துவமின்மை (Graded inequality) நிலவுகிறது. ஏணிப்படியை ஒத்த சமத்துவமின்மை என அண்ணல் அம்பேத்கர் எளிமையாக எடுத்துரைப்பார். சமுதாயத்தில் நிலவும் ஜாதியக் கொடுமைகளைக் காக்கும் கட்டமைப்பைத் தகர்க்க கடுமையாக உழைத்தவர் பெரியார். அனைவருக்கும் சம வாய்ப்புள்ள சமுதாயத்தை அமைக்கப்பாடுபட்டார்.

கடவுள் கற்பனை

வெளிநாட்டு பகுத்தறிவாளர் சார்லஸ் டாக்கின்ஸ் எழுதிய கடவுள் ஒரு பொய் நம்பிக்கை (God Delusion) எனும் புத்தகம் அது. புத்தக உலகில் ஒரு புதிய பரிணாமத்தை உருவாக்கியது. மனித மனங்களில் புரட்சியை ஏற்படுத்திய புத்தகம். அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள் தந்தை பெரியாரின் சிந்தனைகளை பிரதிபலிப்பவையாக உள்ளன.

பேராசிரியர் பெருமக்களில் பலர் படித்திருப்பீர்கள் - ஜான் வீவன் எழுதிய கற்பனை செய்து பாருங்கள் - மதங்கள் இல்லா உலகை (Imagin- A world without religon) எனும் புத்தகம், மதங்கள் இல்லாவிட்டால் உலகம் எவ்வளவு அமைதியாக மகிழ்ச்சியாக இருக்கும் என எடுத்துரைக்கிறது.

அறிவு என்பது வெறும் அறிவு நிலையில் மட்டுமே அமைந்திடக் கூடாது; அது செயலாக மாற்றம் பெற வேண்டும். பெரியாரின் அறிவு செயல்வடிவம் கண்டது. அதன் காரணமாக ஒடுக்கப் பட்ட மக்கள் உரிமை பெற்று வருகின்றனர். நாடு விடுதலை அடைந்து 60 ஆண்டுகள் கழித்து, உயர்கல்வி அமைப்புகளான அய்.அய்.டி., அய்.அய்.எம். நிறுவனங்களில் அடித்தளத்தட்டு மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. மண்டல் குழு பரிந்துரையின்படி நடைமுறையில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான இந்திரா சகானி வழக்கில், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான நீதியரசர் இரத்தினவேல் பாண்டியன், தனது தனித் தீர்ப்புக் குறிப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தந்தை பெரியார் எடுத்த முயற்சிகள் பற்றி பதிவு செய்துள்ளார்.

மண்டல் குழு பரிந்துரையினை நடைமுறைக்குக் கொண்டு வந்த மறைந்த முன்னாள் பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் பாராளுமன்றத்தில் பேசும் போது பாரத் ரத்னா அண்ணல் அம்பேத்கர், பெரியார் ராமசாமி ஆகியோரின் கனவுகள் நனவாகின்றன என பாராளுமன்றக் குறிப்பாக பதிவு செய்தார். ஜனநாயகத்தின் தூண்களாக விளங்குகின்ற சட்ட மன்றம், நீதித்துறை, நிர்வாகத் துறை என பல தலங்களிலும் பெரியாரின் பணி பதிவு செய்யப்பட்ட விதம் பெரியாரின் சிந்தனைகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

பெண்ணை அடிமைப்படுத்தும் சின்னமான தாலியை நீக்கி திருமணம் செய்து கொள்ளும் சுயமரியாதைத் திருமணம் பெரியார் அவர்களின் முழு உழைப்பில் நடைமுறை வடிவம் கண்டது. நானும் எனது துணைவியாரும் தாலி நீக்கிய சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டோம். ராகு காலத்தில் திருமணம் நடைபெற்றது. இன்றுவரை பிள்ளைகளுடன் இன்பமாக, மகிழ்ச்சியாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம். அப்பொழுது சுயமரியாதைத் திருமணம் சட்ட அங்கீகாரம் பெற்றிருக்கவில்லை. சட்டத்திற்குப் புறம்பான திருமணம் என்று எங்களது திருமணத்தை விமர்சனம் செய்தனர். பின்னாளில் சட்ட அங்கீகாரம் கிடைத்தது. பொது மக்கள் கருத்து முன்னோக்கிச் செல்லும் - சட்ட வடிவம் தத்தி தத்தித்தான் வரும் எனும் ஆங்கிலப் பழமொழிக்கு ஏற்ப அனைத்து சுயமரியாதைத் திரு மணங்களுக்கும் - நடந்தவை - நடக்க இருப்பவை அனைத்துக்கும் சட்ட அங்கீகாரம் கிடைத்தது.

இவ்வாறு ஜனநாயகத்தின் பல்வேறு துறைகளிலும், நீதி, சட்டமன்றம், நிர்வாகம், பத்திரிகை என அனைத்துத் துறை களிலும் கொள்கையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவராக ஆகிவிட்டார் பெரியார். 21 ஆம் நூற்றாண்டின் மாபெரும் தலைவராக விளங்குகின்றார். வாழ்க பெரியார்!

இவ்வாறு பேசினார்.

---------------------நன்றி: "விடுதலை" 29-12-2008

மதம் படுத்தும்பாடு!




பாகிஸ்தான் பள்ளிகளில் மாணவர்களுக்கு இந்தியாவுக்கு எதிராகவும், இந்து மதத்துக்கு எதிராகவும் பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. பாகிஸ்தான் - இந்தியா சண்டையில் இந்தியா தோற்கடிக்கப்பட்டது என்பது போன்றவை தகவல்கள்போல பாகிஸ்தானில் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் (27.12.2008) ஒரு சிறப்புக் கட்டுரையே வெளிவந்து உள்ளது.

இதேபோல இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் ஏராளமான கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

14 ஆயிரம் பள்ளிகளையும், 60 கல்லூரிகளையும் நடத்தி வருகின்றனர். ஜெய்ப்பூர், அஹ்மத் நகர் ஆகிய இடங்களில் இந்துத்துவா ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கின்றனர். கிட்டத்தட்ட 18 லட்சம் மாணவர்கள் - இந்த இந்துத்துவா கூட்டம் நடத்தும் கல்வி நிறுவனங்களில் படித்து வருகின்றனர் என்றால், இவர்கள் எப்படியெல்லாம் பயிற்றுவிக்கப்படுகின்றனர் - தயாரிக்கப்படுகின்றனர் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

நவம்பர் 14 - நேருவின் பிறந்த நாள் - குழந்தைகள் நாள் என்பது இந்திய அரசின் ஆணை. ஆனால், இவர்கள் கோகுலாஷ்டமியைத்தான் (கடவுள் கிருஷ்ணன் பிறந்த நாளாம்!) குழந்தைகள் தினமாக அனுசரித்து வருகிறார்கள். டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரியர்கள் தினமாக நாட்டில் கொண்டாடவேண்டும் என்பது அரசின் ஆணை. ஆனால், சங் பரிவார் நடத்தும் கல்வி நிறுவனங்களில் நிலை என்ன தெரியுமா? மகாபாரதம் எழுதியவராகச் சொல்லப்படும் வேதவியாசரின் பிறந்த நாளைத்தான் (அதற்கு என்ன ஆதாரமோ?) ஆசிரியர் தினமாகக் கொண்டாடச் செய்கிறார்கள்.

உத்தரப்பிரதேசத்தில் இவர்களின் சரஸ்வதி மந்திர் பள்ளியில் ஏழாம் வகுப்பில் இடம்பெற்றவை - முலாயம்சிங் யாதவ் இக்கால இராவணன் என்று ஏன் அழைக்கப்படுகிறார்?

பாபர் மசூதியை இடிக்கும் முயற்சி நடந்தபோது முலாயம்சிங் யாதவைச் சேர்ந்த ஆட்களில் துப்பாக்கிச் சூட்டில் எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டனர்?

(அவுட்லுக், 10.5.1999)

யூதர்கள்மீது வெறுப்பை ஏற்படுத்துவதற்கு அடால்ப் ஹிட்லர் ஜெர்மனியில் எப்படி பாடத் திட்டங்களை உருவாக்கி வைத்திருந்தனரோ அதே பாணியைத்தான் இந்தியாவுக்குள், இந்துத்துவாவாதிகள் கல்விக்கூடங்களை உருவாக்குகிறார்கள்.

பாகிஸ்தானாக இருந்தாலும் சரி, இந்தியாவானாலும் சரி இப்படி ஒருவருக்கொருவர் பகைமையை, வெறுப்பை விளைவிக்கும் முறையில் மாணவர்களைத் தயாரித்தால் அதன் விளைவு என்ன?

இதனால் இரு நாட்டு மக்களின் வளர்ச்சிக்குக் காதொடிந்த ஊசி முனை அளவுக்காவது பயன் - பலன் உண்டா?

வறுமைக்கோட்டுக்கும் கீழே வாழும் மக்கள் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் கணிசமாக உள்ளனர்.

உலக நாடுகள் 180 இல் ஊழல் மலிந்த நாடுகள் வரிசையில் இந்தியா 74 ஆம் இடத்திலும், பாகிஸ்தான் 140 ஆம் இடத்திலும் இருக்கின்றன.

மதக் கல்வி மக்களுக்கு ஒழுக்கத்தை வளர்க்கும் திறன் இந்த வகையில்தான் உள்ளது.

அறிவு வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டுக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும் பயன்பட வேண்டிய கல்வி - வெறுப்புக்கும், பிளவுக்கும், வெறிக்கும் பயன்படுத்தப்படுமேயானால், அதன் நிகர விளைவு - மக்களின் அமைதியும், நிம்மதியும் அழிக்கப்பட்டு, அன்றாடம் ரத்தக் குளியல் நடத்தத்தானே பயன்படும்!

மதம் தனிப்பட்ட முறையில் அவரவர் வீட்டு எல்லைக்குள் தாராளமாக முடக்கப்பட்டுக் கிடக்கட்டும்! மதமேயற்ற உயர்நிலை எட்டப்படுவதன்மூலம்தான் சக வாழ்வும் சம வாழ்வும் எட்டப்படும் என்றாலும், அதுவரை ஓர் எல்லைக் குள், பூஜை அறை மட்டத்தில் நடமாடிக் கொண்டு இருக் கட்டும். அதனை வீதிக்கு இழுத்து வந்து வெறியாட்டுக் களத்தில் இறக்கிவிட்டு ஆடு - புலியாட்டம் நடத்துவது விபரீதமானது!

மனிதன் பகுத்தறிவு உள்ளவன் என்றால், இந்தக் கோணத்தில் சிந்திக்கட்டும் - செயல்படட்டும்!



--------------------"விடுதலை" தலையங்கம் - 29-12-2008

உண்மையில் இந்து மதம் என்பதாக ஒன்று இல்லை !


இந்து மதம்

திராவிடர்கள் இந்துக்கள் அல்ல என்பது எமது கருத்தாகும்.இந்தக் கருத்தை ஆதாரமாக வைத்தே திருவாரூரில் கூடிய ஜஸ்டிஸ்கட்சி மாகாண மகாநாட்டில் “திராவிடர் ஆகிய நாம் இந்துக்கள் அல்ல” என்றும், மக்கள் எண்ணிக்கையைக் கணக்கு எடுக்கும் சென்சஸ் ரிபோர்ட்டில் நாம் ஒவ்வொருவரும் திராவிடர் என்று பெயர் கொடுக்க
வேண்டுமே ஒழிய இந்துக்கள் என்று பெயர் கொடுக்கக் கூடாது
என்றும்
தீர்மானம் செய்திருக்கிறோம்.


ஆனால் இத்தீர்மானத்தை அனேக ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தினர்கள் லட்சியம் செய்ததாகவே தெரியவில்லை. அரசியல் பதவிகளில் இருக்கிற லட்சியத்தில் பதினாறில் ஒரு பாகத்தைக் கூட நம்மவர்களில் அனேகர் சமுதாயத்தில் தங்களுக்கு இருக்க வேண்டிய
பதவிகளைப் பற்றியோ தங்களது இழிநிலையைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. இந்தக் காரணமே திராவிடர்களின் இழிநிலைக்கு முதன்மையானதாக இருந்து வருகிறது. எவ்வளவோ பெரும் படிப்பும், ஆராய்ச்சி அறிவும், மேல்நாட்டு நாகரிகமும்
தாராளமாய்க் கொண்ட மக்கள் கூடத் தாங்கள் அனுபவித்து வரும் சமுதாய இழிவு விஷயத்தில் போதிய கவலைப்படாமலே இருந்து வருகிறார்கள். இவர்கள் சிறிது கவலை எடுத்துக் கொண்டிருந்தாலும் மாபெரும் மாறுதல் ஏற்பட்டிருக்கும் என்பதோடு திராவிட நாட்டில்
சிறப்பாகத் தமிழ்நாட்டில் இருந்து “ இந்து மதம்” பறந்து ஓடி இருக்கும்.


இந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்பது, கடுகளவு அறிவு
உள்ளவர்களும் உணரக்கூடிய காரியமேயாகும். இந்து மதம் என்பது திராவிடர்களை இழிவுபடுத்தி, கீழ்மைப்படுத்தி அவர்கள் முன்னேறுவதற்கு இல்லாமல் ஒடுக்கி வைத்திருக்கிறதற்கே ஏற்படுத்தப்பட்டது என்பதல்லாமல் அதற்காகவே இந்துமதம் என்பதாக
ஒரு போலிவார்த்தை உச்சரிக்கப்படுகிறது என்பதல்லாமல், மற்றபடி வேறு கொள்கையுடனோ குறிப்புகளுடனோ இந்து மதம் இருக்கவில்லை.


உண்மையில் இந்து மதம் என்பதாக ஒன்று இல்லை என்பதற்கு ஆரியர்கள் சொல்லும் சொற்களே போதிய சான்றாகும்.

1940-ஆம் ஆம்டு டிசம்பர் மாதம் 8-ஆம் தேதியில் சென்னைத்
திருவல்லிக்கேணி மணி அய்யர் மண்டபத்தில் நடந்த “தமிழ்நாடு
ஆரியர் மகாநாடு” என்பதில் தலைமை வகித்த திவான் பகதூர்
வி.பாஷியம் அய்யங்கார் அவர்கள் தமது தலைமைப் பிரசங்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:-

“நாம் அனைவரும் ஆரிய மதத்தைச் சேர்ந்தவர்களாவோம்,இந்து மதம் என்பதாக ஒரு மதம் கிடையாது. இந்து என்கிற பெயர் நமக்கு அந்நியர் கொடுத்ததேயாகும். நாம் ஆரியர்கள்; ஆரியப் பழக்க வழக்கத்தை அனுசரிக்கிறவர்கள் ஆரியர்களேயாவார்கள்” .

“கண்டவர்களையெல்லாம் ஆரியமதத்தில் சேர்த்துக் கொண்ட தானது ஆரிய மதத்தின் பலவீனமேயாகும்” . என்பதாகப் பேசி”இருக்கிறார். இந்தப் பேச்சு 10-12-40 இல் இந்து, மெயில், சுதேச மித்திரன், தினமணி, விடுதலை ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்து இருப்பதோடு “விடுதலையில்” இதைப்பற்றி அதே தேதியில் தலையங்கமும் எழுதப்பட்டிருக்கிறது.


மற்றும் திவான் பகதூர் பாஷியம் அய்யங்கார் அவர்கள் அதே பேச்சில் “இந்து மதத்திற்கு ஆதாரம் வேதங்களேயாகும்” “வேதத்தை ஒப்புக்கொள்ளாதவர் இந்துவல்ல” என்றும் பேசி இருக்கிறார். எனவே இந்து மதம் என்பதோ அல்லது ஆரியமதம் என்பதோ ஆரியர்களுடைய ஆரியர்களின் நன்மைக்கேற்ற கொள்கைகளைக் கொண்ட மதம் என்பதும், அது வேதமதம் என்பதும் இப்போதாவது திராவிடர்களுக்கு விளங்குகிறதா என்று கேட்கிறேன்.

அதோடு கூடவே சைவர்களையும், சைவப் பண்டிதர்களையும், தங்களைத் திராவிடர் (தமிழர்) என்று சொல்லிக் கொள்ளுபவர்களையும், “திராவிடர்கள் வேறு ஆரியர்கள்வேறு” , “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” என்பவர்களையும், தென்னாடுடைய சிவனே போற்றி என்பவர்களையும், “அய்யா நீங்கள் இனியும் இந்து மதத்தையும், வேதத்தையும், வேத சாரங்களான புராண இதிகாசங்களையும், வேதக்கடவுள்களையும், வேத ஆகமங்களையும் ஒப்புக் கொள்ளுகிறீர்களா?” என்று கேட்கின்றேன்.


பொதுவாகத் தமிழ் மக்களையும், சிறப்பாகத் தங்களைப் பார்ப்பனரல்லாதார் என்றும், ஆரியரல்லாதார் என்றும், சொல்லிக் கொள்கிறவர்களையும் இனியும் தங்களை இந்துக்கள் என்றும் இந்து மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு ஆரிய வேஷம் போட்டுக் கொண்டு நடிக்கலாமா என்றும் கேட்கின்றேன்.

ஒருவன் தனக்கு இந்து மதத்தைக் கைவிடத் தைரிய மில்லையானால், தன்னை சூத்திரன் அல்ல என்றும், ஆரியன் அல்ல என்றும் எப்படிச் சொல்லிக் கொள்ள முடியும்?

மதத்தினாலும், இனத்தினாலும், நாட்டினாலும் ஆரியரில் இருந்து பிரிந்து இருக்கிற தமிழர்கள் தங்கள் நாட்டில் 100க்கு 90 பேர்களாக அவ்வளவு கூடுதல் எண்ணிக்கை உள்ளவர்களாக இருந்து கொண்டு சகல துறைகளிலும் ஆரியர்கள்மேலாகவும், தமிழர்கள் தாழ்வாகவும், இழி மக்களாகவும் இருப்பது உலகத்தில் 8-வது அதிசயமல்லாவா என்று கேட்கிறேன். இதற்குத் தமிழ்ப் பெரியார்கள், பண்டிதர்கள், கலைவாணர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. முடிவாக நான் ஒன்று சொல்லுகிறேன். தமிழன் எவ்வளவு தூரம் இந்து மதத்தையும் இந்துமதக் கலை, ஆச்சாரம், கடவுள்,கோவில், பண்டிகை, சடங்கு, வேஷம், குறி, உடை, நடை முதலியவைகளை வெறுத்துத் தள்ளுகிறானோ அவ்வளவு தூரம் தான் அவன் மனிதத்தன்மையும் வரப்போகிறது என்றும் அவ்வளவு தூரம் தான் அவன் உண்மையான தமிழனாய் இருக்க முடியும் என்றும் வலிமையாய்க் கூறுகிறேன்.

------------------ தந்தைபெரியார் - 30.10.1943 தேதியிட்டு வெளியான “குடி அரசு” இதழில் வெளியான கட்டுரை

தோழர் தமிழச்சி அவர்களுக்கு மீண்டும் ஒரு திறந்த மடல்




25-12-2008 அன்று தமிழச்சி.காம் தளத்தில் “பெரியாரின் நினைவு தினமும்,போலிப் பாசாங்குகளும்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் பல கருத்துக்கள் சொல்லியிருந்தாலும்,பெரியாரியலை ஏற்றுக் கொண்டிருக்கும் தோழர்களை உளறிக் கொடிக்கொண்டிருக்கின்றனர் என்பது போன்ற தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். அது குறித்த பதிவு இது.

பார்ப்பனர்களும் பார்ப்பன அடிவருடிகளும்தான் தங்களின் ஆதிக்கம் பறிபோகிறேதே என்ற ஆத்திரத்தில் அப்படி விமசிப்பார்கள். ஆனால் தன்னை பெரியாரிஸ்டாக சொல்லிவரும் ஒருவரிடமிருந்து வரும் விமர்சனம் கூட இப்படி இருக்கிறதே என்று வருத்தமாக இருக்கிறது. அதற்காக விமர்சிக்கக்கூடாது என்பது பொருளல்ல.யாரும் யாரையும் விமர்சிக்கலாம். விதிவிலக்கெல்லாம் விமர்சனத்துக்கு இல்லை . ஆனால் விமர்சிக்கும் போது நாகரிகமாக சான்றுகளுடன் இருக்கும் போது தான் அந்த விமர்சனதிற்கு மதிப்பு இருக்கும். அதுவும் ஒத்த கொள்கையுடையவர்களை விமர்சிக்கும் போது இன்னும் சற்றுக் கூடுதல் கவனத்துடன் விமர்சிக்க வேண்டும்.

ஏனென்றால் நம்முடைய எதிரிகள் என்பது கண்ணுக்கு தெரியக்கூடியவர்கள் மட்டுமல்ல, கண்ணுக்குத்தெரியாத ஜாதி,மதம், கடவுள் போன்றவைகளும் அடக்கம். மக்களை மனரீதியாக அடிமைப்படுத்திவைத்துள்ள இவைகளை வைத்து ஆதாயம் தேடி ஆதிக்கம் செய்து கொண்டிருப்பவர்கள் நம்முடைய எதிரிகள். இப்படிப்பட்ட சூழலில் ஒத்த கருத்துடையவர்களை விமர்சிக்கும் போது எடுத்தேன், கவிழ்த்தேன் என்பதில்லாமல் மிகவும் நாகரிகமாக இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

தோழர் தமிழச்சி அவர்கள் அந்தக்கட்டுரையில் எழுதியுள்ளதை அப்படியே தருகிறேன். அது இதோ:

“தி.க.விலேயே ஏகப்பட்ட குளறுபடிகள். பெரியாரை பணம் பண்ணும் காட்சிப் பொருளாக ஆக்கிவிட்டார்கள். என்னய்யா, பெரியார் மறைந்து இத்தனை காலமாகிவிட்டது. அவருடைய கொள்கைகள் இன்னும் அச்சுக்குள் வராமல் புழுத்துக் கொண்டிருக்கிறதே; நாங்களாவது ஏதாவது செய்கிறோம் என்றால், ஆயுள் காப்புரிமை எனக்கு மட்டும் தான் சொந்தம் என்பதும், சரி நீங்களாவது ஏதாவது செய்யுங்களேன் என்றால், எப்போ, என்ன, எப்படி செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியுமென வக்கனையாக பேசுவதுமாக இருந்து கொண்டு, பெரியார் வாழ்கிறார், விழிக்கிறார், முழிக்கிறார் என்றால் உண்மைக் கருஞ்சட்டைகளுக்கு ஆவேசம் வருமா வராதா? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே உளறிக் கொண்டிருப்பது.”

“பெரியாரின் எழுத்துக்கள் அச்சில் வராமல் புழுத்துக் கோண்டிருக்கிறதாம்.” இந்த எழுத்து நடையை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாம் இதை விட்டு விட்டு பெரியாரின் எழுத்துக்கள் அச்சில் வரவில்லையா? என்ற தமிழச்சியின் குற்றச்சாட்டை மட்டும் பார்ப்போம்.

எத்தனை நூல்கள் திராவிடர்கழகம் வெளியிட்டுள்ளது என்பது பற்றி திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தரும் தகவல் இதோ:

“விடுதலை பத்திரிகை - நண்பர் வீரமணி அவர்கள் ஏகபோக நிர்வாகத்தின் கீழ் நல்ல நிலையில் நஷ்டமில்லாத நிலையில் வாழ்ந்து வர வேண்டுமானால், இப்போது இருப்பதைவிட இன்னும் குறைந்தது 2500 சந்தாதாரர்கள் இரண்டு மாதத்தில் சேர்க்கப்பட்டாகவேண்டும் (விடுதலை, 6.6.1964) என்று தந்தை பெரியார் அவர்கள் கையெழுத்திட்டு விடுதலை தலையங்கமாகவே எழுதினார்களே - அதனை இந்த நேரத்தில் நினைவு கூர வேண்டியது மிகவும் அவசியமாகும்.
எந்த நம்பிக்கையில் தந்தை பெரியார் அவர்கள், ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்களிடம் விடுதலையை ஏக போக நிர்வாகத்தில் ஒப்படைத்தார்களோ, அந்த நம்பிக்கை பொய்த்துப் போய் விடாமல், கம்பீரமாக வெற்றிகரமாக வீறுநடை போடச் செய்துவிட்டாரே - மனதில் மாசில்லாத மக்கள் அனைவரும் மனமொப்பி அதற்காக நன்றி பாராட்டுவார்கள்.தந்தை பெரியார் அவர்கள் தம் அறிக்கையில் சுட்டிக் காட்டியதுபோல, இந்த இயக்கத்தால் மனிதர்கள்ஆனவர்கள் இயக்கத்துக்கும், இயக்கத் தலைமைக்கும் எதிராகக் கத்தி தீட்டத்தான் செய்வார்கள்.ஆனால், நமக்கு தந்தை பெரியார் அவர்களின் அளவுகோல்தான் முக்கியம்.
தம்மிடம் ஏகபோகமாக தந்தை பெரியாரால் ஒப்படைக்கப்பட்ட அந்த விடுதலையை எந்த இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்? நவீன அச்சுக்கூடம் உருவாக்கப்பட்டு, பல வண்ணத்தில் ஆறு பக்கங்களுடன் (முன்பு நான்கு பக்கங்களே!) திருச்சியில் இரண்டாம் பதிப்பு என்ற சாதனை மகுடத்துடன் உலகத் தமிழர்கள் மத்தியிலே ஜொலிக்கச் செய்துவிட்டாரே!உலகம் முழுவதும் உள்ள தமிழ் தெரிந்த அனைவரும் அடுத்த சில மணிநேரங்களிலேயே (நாம் படிப்பதற்கு முன்பே) இணைய தளத்தின் மூலம் படிக்கச் செய்யும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துவிட்டாரே! இந்த வகையில், தமிழ்நாட்டில் முதன் முதலாக வெளிவந்த ஏடு விடுதலைதான் என்பது வைர வரிகளால் பொறிக்கத் தகுந்ததாகும்.
விடுதலையைப் படிப்பதற்கே ஒரு தனிப் பயிற்சி வேண்டும் என்ற நிலை மாறி, பல நாளேடுகளை நாம் அச்சிட்டுக் கொடுக்கிறோம் என்கிற அளவுக்குக் கொண்டு சென்றுள்ளது வளர்ச்சியா? - தேய்மானமா?உண்மை மாதமிருமுறை, பெரியார் பிஞ்சு (குழந்தைகள் இதழ்), தி மாடர்ன் ரேசனலிஸ்ட் என்பவை எல்லாம் எந்தத் தரத்தில் - காலத் துக்கேற்ற பொலிவோடு, வலிவோடு பூத்து மணம் கமழ்விக்கிறது என்பதை புலன்கள் கெட்டுப் போகாத அனைவரும் அறிவர் - பாராட்டுவர்!

தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் அடங்கிய நூல்கள் பகுத்தறிவு நூல்கள் அச்சிடும் பணி என்பது போர்க்கால வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே!

அதனை ஒரு தனி நிறுவனமாக்கி, ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அதிகாரியை நிர்வாகப் பொறுப்பாளராக்கி, நூல்கள் அச்சிடும் பணி எந்த நிலையிலும் தடங்கலில்லாமல் நடைபெறுவதற்கு எல்லா வசதிகளும் செய்யப்பட்டு, ஓய்வு ஒழிச்சலில்லாமல் அப்பணி நடந்துகொண்டு இருக்கிறதே!

338 நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன.

தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் பொருள் வாரியாகத் தொகுக்கப்பட்டு பெரியார் களஞ்சியம் என்ற தலைப்பின்கீழ் சராசரி 300 பக்கங்கள் என்ற அளவில் மக்கள் பதிப்பாக மலிவாக நன்கொடை அடிப்படையில் வெளியிடப்பட்டு வருகின்றன.கடவுள்-2 தொகுதிகள், மதம்-7 தொகுதிகள், பெண்ணுரிமை - 5 தொகுதிகள், ஜாதி - தீண்டாமை 17 தொகுதிகள் இதுவரை வெளிவந்திருக்கின்றன.
தலைப்பு வாரியாக வெளிவந்து கொண்டேயிருக்கும்.

ஆயிரம் ஆயிரம் பக்கங்களாக தொகுதிகளை வெளியிடுவதால் யாருக்குப் பயன்? பணம் கொடுத்து வாங்கும் சக்தி உள்ளவர்களின் அலமாரிகளில் அழகு செய்யும் - சாதாரண மக்களுக்குச் சென்றடையாது!மகாபாரத ஆராய்ச்சி - கீதையின் மறுபக்கம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) சந்திரசேகர பாவலரின் இராமாயண ஆராய்ச்சி (தொகுப்பு) இவையெல்லாம் வெளியிடப்பட்டுள்ளதே - பெரியார் கொள்கையைப் பரப்பும் பணியில் இவை மிக முக்கியத்துவம் பெறவில்லையா? உலகம் பூராவும் பார்ப்பனர்கள் கீதையைத்தானே அறக்கட்டளை வைத்துப் பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்? தமிழர் தலைவர் எழுதிய கீதையின் மறுபக்கம் நூலைத் தடை செய்யவேண்டும் என்று ராமகோபாலன்கள் முதலமைச்சரிடம் முறையிட்டனரே - அதற்குப் பிறகாவது நமது ஆசிரியரின் அரும்பணியைப் புரிந்துகொண்டிருக்க வேண்டாமா?ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையென்றால் அதற்காகவே பெரியார் நூலகம், ஆய்வகம் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட் டுள்ளதே! பழம்பெரும் இதழ்களும், ஏடுகளும் நவீன முறையில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளனவே! ஆய்வாளர்கள் பயன்படுத்திக் கொண்டுதானே இருக்கிறார்கள். 46267 நூல்கள் இடம் பெற்றிருக்கின்றன. மாணவப் பருவந்தொட்டு அரிதிற் சேர்த்த தமது சொந்த 10,227 நூல்களை பெரியார் நூலகம் - ஆய்வகத்திற்குத் தந்துள்ளார் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.அய்யாவின் உரைகள் மட்டுமல்ல - குடிஅரசு இதழ்களும்கூட குறுந்தகடுகளாக வெளியிடப்பட்டுள்ளன (Digitalisation).’’


---------------- நன்றி: - http://files.periyar.org.in/viduthalai/20080824/news03.html

தற்போதுகூட திக.தலைவர் மீ.கி.வீரமணி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பகுத்தறிவு ஏன்?எதற்காக ? என்ற நூலை தி.க. இஞைரணித் தோழர்கள் மூலம் 10000 பிரதிகளுக்குமேல் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் புத்தச் சந்தை மூலம் பல ஆயிரம் ரூபாய்களுக்கு நூல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெரியாரின் எழுத்துக்கள் அச்சில் வராமல் இல்லை மக்களிடம் பெரியாரின் கருத்தை கொண்டு சேர்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என்பதை தி.க. பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார். மேலும் தகவல் வேண்டுவோர் கீழ்காணும் இணப்பைப் பயன்படுத்தி விவரமாகத் தெரிந்து கொள்ளலாம்.
1. http://files.periyar.org.in/viduthalai/20080825/news21.html
2. http://files.periyar.org.in/viduthalai/20080827/news39.html.

அடுத்ததாக தமிழச்சி அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு இதோ:

“பெரியாரை பணம் பண்ணும் காட்சிப் பொருளாக ஆக்கிவிட்டார்கள்.” என்கிறார் தமிழச்சி.இந்தக் குற்றச்சாட்டு புதிதல்ல, இதற்கு முன்னும் இதே போல் பலரும் குற்றம் சுமத்தியுள்ளனர். பெரியார் மீதே இப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் வந்ததுண்டு. இந்த்க்குற்றச்சாட்டைப் பற்றிய உண்மை என்ன?


" நீங்கள் சொல்லுகிற வாதப்படியே வைத்துக் கொண்டாலும், வீரமணி பெரியார் விட்டுச் சென்ற சொத்துகளை ஆயிரம் மடங்கு வளர்த்திருக்கிறார் என்பதை இதன் மூலம் ஒப்புக் கொள்கிறீர்களா இல்லையா?
நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள்கூட அவர் கழுத்தில் சூட்டப்படும் புகழ் மாலையாக அல்லவா மாறுகிறது! வீரமணி - அவருக்குள்ள தனித் தன்மையான ஆற்றலே அதுதான்! “என்கிறார் தி.க.பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் அவர்கள்.

பணம் பண்ணி வீரமணி அவர்களோ மற்ற தி.க. தோழர்களோ அந்தப் பணத்தை வீட்டுக்கு எடுத்துக் கொண்டா செல்கிறார்? இயக்கத்திற்காக, இயக்க வளர்ச்சிக்காகத்தானே அதை பயன் படுத்துகிறார்.

தமிழச்சி அடுத்து வைக்கும் குற்றச்சாட்டு இருக்கிறதே அதை நினைத்து என்ன சொல்வதன்றே தெரியவில்லை.

அந்தக் குற்றச்சாட்டு இதோ:

“சென்ற மாதம் நவம்பர் 14- ஆம் தேதி பெரியார் நூல்கள் தேசியவுடமையாக்க வேண்டும் என்ற வழக்கு விசாரணை நடந்துக் கொண்டிருந்த போது, நீதிபதி சிவக்குமார் ஏன் பெரியார் எழுத்துக்களை தேசிய மயமாக்கப்படக் கூடாது என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு, "பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. நீதிமன்றத்தில் வெளிப்படையாக எதுவும் கூறமுடியாது" என்கிறார் பணம் பண்ணும் கூட்டத்திற்கு ஆதரவாக ஆஜரான வக்கீல் துரைசாமி சொல்லி இருக்கிறார் என்றால், எப்பேர்ப்பட்ட கள்ளத்தனமாக இருக்கும். இவையெல்லாம் பொறுப்பான பேச்சுக்களா?”

ஏற்கனவே நாம் பணம் பண்ணும் குற்றச்சாட்டுப் பற்றி பார்த்துவிட்டோம். மேற்கண்ட குற்றச்சாட்டில் பணம் பண்ணும் கூட்டத்திற்கு ஆஜராகும் வக்கீல் துரைச்சாமி என்றும் அவர் சொல்வது “கள்ளத்தனம்” என்றும் “இவையெல்லாம் பொறுப்பான பேச்சுக்களா?” என்றும் ஏசியுள்ளார் தமிழச்சி.

அய்யோ அம்மா தமிழச்சி உங்களின் இந்தக் குற்றச்சாட்டை நினைத்து சிரிப்பதா? அழுவதா? என்றே தெரியவில்லை. அனைத்து பெரியார் தொண்டர்களையும் சகட்டுமேனிக்கு கண்டபடி எழுதுவதைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது.

நம்மிடையே கொள்கை வேறுபாடு இல்லை.பெரியாரின் கொள்கைகளை எடுத்துச் செல்வதில் கருத்து வேறுபாடு, அணுகுமுறை காரணமாக அவரவர்கள் அமைப்பு ரீதியாக நாம் பிரிந்து செயல்படலாம் அதில் ஒன்றும் தவறும் இல்லை. உள்ளுக்குள் முரண்பட்டுக் கொண்டிருக்காமல் தனித்தனியாக செயல்படுகிறோம். அவ்வளவே.அப்படிசெயல்படும்போது தவிர்க்க இயலாமல் சிலசிக்கல் தோன்றும் அதை நாகரிகத்துடன் போக்கிக் கொள்ளவேண்டும் அதை விடுத்து , ஒத்த கருத்துடைய பெரியாரியல் தோழர்களை விமர்சிக்கும் உங்கள் எழுத்தை பாருங்கள். “பொறுப்பான பேச்சுக்களா” என்று கவலைப்படும் நீங்கள் எழுதியுள்ள சொல்லாட்ச்சியைப் பாருங்கள்:-

ஜால்ராக்கள்
வஞ்சத்தை மறைத்து பணம் பண்ணும் வேலை
புழுத்துக் கொண்டிருக்கிறதே
வக்கனையாக பேசுவது
எப்பேர்ப்பட்ட கள்ளத்தனமாக இருக்கும்
பம்பாத்து பேச்சு
உளறிக் கொண்டிருப்பது.

பார்ப்பனர்களைக்கூட நாகரிகமாக விமர்சிக்க வேண்டும் என்பதே எனது கருத்து. நம்முடைய தோழர்களை இப்படி மரியாதைக்குறைவாக விமர்சிப்பது சரியா? விருப்பு வெறுப்பின்றி சிந்திக்க வேண்டுகிறேன்.

பிரச்சனைக்கு வருவோம்.

வழக்குரைஞர் துரைச்சாமி அவர்கள் திராவிடர்கழகத்தில் சட்டத்துறைச் செயலாளராக இருந்தவர். நம் கொள்கைத் தோழர்களுக்காக பல வழக்குகளில் ஆஜாராகி வெற்றி தேடித்தந்தவர். மூத்த பெரியார் தொண்டர். தற்போது பெரியார் திரவிடர் கழகத்தில் ஆட்சிமன்றக் குழுவில் ஒரு பொறுப்பாளராக இருக்கிறார். அவர் ஆஜரானதோ பெரியார் திராவிடர்கழகத்துக்காக ஆனால் நீங்கள் அவரையும் பணம் பண்னும் கூட்டதிற்காக ஆஜரன வக்கீல் என்கிறீர்கள்.

தி.க. தோழர்களையும் பணம் பண்னும் கூட்டம் என்கிறீகள். பெரியார் தி.க. வுக்காக ஆஜரான வழக்குரைஞரையும் ,பணம் பண்ணும் கூட்டத்திற்கு ஆஜரான வக்கீல் என்கிறீர்கள்.

25 ஆண்டுகளாக பெரியார் இயக்கத்தினர்களை ஊண்றிக் கவனித்து வருகிறேன்.என் அறிவுக்கு எட்டிய வரை பணம் பண்ணுவதற்காக யாரும் பெரியார் கொள்கைகள ஏற்றுக் கொள்ளவில்லை. அவரவர் சொந்தக் காசை செலவு செய்துதான் பிரச்சாரம் செய்துவருகிறோம். ஒரு கூட்டம் நடத்துவதற்கு ஒவ்வொரு பெரியார் தொண்டனும் எவ்வளவு சிரமப்படுகிறான் என்பதை நேரில் பார்த்திருக்கிறேன். அந்த கஸ்டத்தை நானும் அனுபவித்திருக்கிறேன். ஒருகூட்டம் நடத்தி முடிப்பது என்பது ஒரு பெண்பிரசவத்திற்காக எவ்வளவு கஸ்டப்படுகிறாரோ ( இந்த உவமை மிகைபடுத்துவது போல் தெரியும் ,ஆனால் மிகையில்லை) அது போல் பெரியார் தொண்டர்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை குறைந்தபட்சம் நாகரிகமாக விமர்சிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த பதிவு பதிவு செய்யப்படுகிறது. தனிப்பட்ட முறையில் தமிழச்சி உட்பட யாரையும் காயப்படுத்துவதற்காக அல்ல.

28.12.08

தடை செய்யப்பட்ட எந்த இயக்கத்தைப்பற்றியும் பேசுவது சட்டப்படி குற்றமல்ல.




மத்திய அமைச்சர் அந்துலே பதவி விலகக் கூடாது
காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேச்சு கண்டனத்திற்குரியது
தஞ்சை செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் பேட்டி


காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு பேச்சு கண்டனத்திற்குரியது. மத்திய அமைச்சர் ஏ.ஆர். அந்துலே - பதவியை ராஜினாமா செய்யத் தேவையில்லை என்று பேட்டியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

தஞ்சையில் (22-12-2008) செய்தியாளர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:

மும்பையில் நடைபெற்ற சம்பவம்


மும்பையில் நடைபெற்ற 60 மணிநேர தீவிரவாதப் போராட்டம் என்பது நம்முடைய நாட்டிலுள்ள அனைவரும் அதிரக் கூடிய, உலுக்கிய மிகப்பெரிய மனித நேயத்திற்கு மாறான ஒரு செயல். அதில் உயிர் நீத்த அனைவருக்கும் மரியாதை காட்டு வதிலிருந்து, வீர வணக்கம் செலுத்துவதிலிருந்து அதிலே கட்சி, மதம், ஜாதி வேறுபாடு இல்லாமல் நம்முடைய நாடே ஒன்று பட்டது என்கிற அளவுக்கு - அப்படிப்பட்ட ஒரு பிரச்சினையிலே முக்கியமாக கருதவேண்டியது என்னவென்று சொன்னால், அதிலே பல கருத்துகள் சொல்லப்பட்டிருக்கிறது. விசாரணை நடைபெற்றிருக்கிறது.

பாகிஸ்தான்மீது உலகப் பொருளாதாரத் தடை

பாகிஸ்தான்காரர்கள் அதில் இன்னும் சரியாக இல்லை. உடனடியாக போர் என்று சொல்லக்கூடிய எல்லைக்குப் போகாமல் அவர்கள்மீது உலக ரீதியாகப் பொருளாதாரத் தடை அமெரிக்கா போன்ற உலகநாடுகள் செய்து வந்தாலே பாகிஸ்தான் வழிக்கு வரக்கூடிய வாய்ப்புக்கு வரலாம்.

அண்டை நாட்டோடு என்னதான் நாம் சுமூகமாக இருந்தாலும் அது ஒரு வழிப் பாதையாக இருக்கமுடியாது. இரு தரப்பாக இருந்தால்தான் சரியாக இருக்கும் என்று சொல்கின்ற இந்த நேரத்திலே காங்கிரஸ் கட்சியினுடைய மிக முக்கியமான அமைச்சராக இருக்கக்கூடிய மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அந்துலே அவர்கள் ஒரு நல்ல கருத்தைச் சொன்னார்.


பல குண்டு வெடிப்பு சம்பவங்கள்

ஆர்.எஸ்.எஸ். குண்டுவெடிப்பு மாலேவ்கான் என்று சொல்லக்கூடிய அந்த இடத்திலும் மற்ற இடத்திலும் நடந்ததற்கு ராணுவ ஊடுருவல் இருந்தது. இராணுவத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல் இருந்தது. புரோகித், சாத்வி பிரக்யாசிங் தாக்கூர் என்ற அந்த அம்மையார் சாமியார். அதேபோல மகந்து தாயானந்த பாண்டே சங்கராச்சாரியார் ஆனது. இதுமாதிரி வழக்குகள் வந்தபொழுது ஒரு 500 பேருக்கு பாசறையில் பயிற்சி கொடுத்தது போன்ற அத்தனை செய்திகளையும் வெளியே கொண்டு வந்தவர் கார்கரேதான்.


கார்கரே ஏன் சுடப்பட்டார்?


இறந்துபோன கார்கரே அவர்கள் சம்பவம் நடந்தபொழுது கார்கரே அவர்கள் மருத்துவமனைக்குப் போயிருக்கிறார். அங்கே தான் அவர் சுடப்பட்டிருக்கின்றார். அவரை அங்கே யார் சுட்டது? எதற்காக அவர் போனார்? அவரை அங்கே போகச் சொன்னதென்ன?
பல செய்திகளை கொண்டுவந்த காலகட்டத்திலே கார்கரே குறிவைக்கப்பட்டிருக்கின்றார். அவரை குறிவைத்தவர்கள் யார்? அவர் அங்கே செல்லவேண்டிய அவசியம் என்ன? மும்பையில் தாஜ் ஓட்டல் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்த பகுதிக்கு வராமல் தலைமை அதிகாரியான அவர் ஏன் மருத்துவமனைக்குச் சென்றார்?

யார் அவரை திசை திருப்பியது?


யார் அவரை அங்கே அனுப்பியது என்ற விவரங்களை ஆராய வேண்டும் என்ற ஒரு கருத்தை மத்திய அமைச்சர் அந்துலே அவர்கள் சொன்னார்கள்.

இதைப்பற்றியும் விசாரணையில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று சொன்னார். இந்தக் கருத்து நியாயமான கருத்து. வரவேற்கவேண்டிய ஒரு கருத்து. அவர் ஒரு முஸ்லிம். அதைவிட்டுவிட்டு அவர் ஏதோ பாகிஸ்தானுக்கு ஆதரவாகவோ அல்லது அங்கிருந்து வந்த தீவிரவாதிக்கு ஆதரவாகவோ கருத்து சொன்னார் என்று வேண்டுமென்றே இந்த பிரச்சினையில் பாரதீய ஜனதா அவரைப்பற்றி நாடாளுமன்றத்திலே ஏகப்பட்ட கூச்சலை போட்டு அவர் இப்படிச் சொல்லலாமா? அதெல்லாம் சரியா? என்பதுபோன்ற ஒரு நிலையை அவர்கள் உருவாக்கினார்கள்.

அந்துலே கருத்து சரியானது


திடீரென்று அதிர்ச்சியான காங்கிரஸ் தலைமைகூட அவர்களிடத்திலே கூட ராஜினாமா வாங்கியிருக்கிறார்கள் என்பது போன்ற ஒரு செய்தி. அவர் கருத்து எங்கள் கருத்தல்ல என்றெல்லாம் திடீரென்று அவசரப்பட்டு சொல்லவேண்டிய அவசியமே இல்லை.
அவர் கருத்தை சொல்லுகிறார். அவர் சிறுபான்மை சமுதாயத்திற்கு ஒரு அமைச்சராகவும் இருக்கின்றார். இந்தக் கருத்து தவறு என்று சொல்லுவதற்கு யாரும் தயாராக இல்லை. அந்த கருத்தை காங்கிரசிலே இருக்கக்கூடிய திக் விஜய் சிங் ஆதரிக்கிறார்.
காங்கிரசார் பலர் ஆதரிக்கிறார்கள். அந்துலே இப்பொழுதும் சொல்லுகிறார். என்னுடைய கருத்து சரியாக இருந்தது. நான் யாருக்காகவும் அதைப் பின் வாங்கிக் கொள்ள மாட்டேன் என்று சொல்லியிருக்கின்றார்.

அவர் சிறுபான்மை சமுதாயத்திற்காக இருக்கக்கூடிய ஒரு அமைச்சர். எனவே சிறுபான்மை சமுதாயத்தையே காங்கிரஸ் விரோதித்துக் கொள்ளக்கூடிய ஒரு ராஜதந்திரமற்ற போக்கு அதனாலே ஏற்படக்கூடும்.

வீரமணியையும் சேர்த்து கைது பண்ணு

செய்தியாளர்: தொல்திருமாவளவனை கைது செய்யவேண்டும் என்று சொல்லுகிறார்களே?

தமிழர் தலைவர்: தொல் திருமாவளவனை மட்டுமல்ல, வீரமணியையும் சேர்த்து கைது பண்ண வேண்டும் என்றுதான் சொல்கின்றார்கள். அதாவது கைது பண்ணுகிற அதிகாரம் காங்கிரசிற்கு முழுக்க வந்து விட்டால் எப்படியிருக்கும் என்பதற்கு இதுதான் அடையாளம்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வரவில்லை. ஆனால், காங்கிரஸ் ஆட்சியே தங்கள் கையில் வந்துவிட்டதாக கருதுகிறார்கள். அவரை கைது பண்ணுங்கள், இவரை கைது பண்ணுங்கள் என்று சொல்கிறார்கள். கைது பண்ண வேண்டிய பொறுப்பு முதல்வரைச் சார்ந்ததே தவிர, வேறு யாருக்கும் கிடையாது.

நானோ அல்லது இன்னொருவரோ அவரை கைது பண்ணுங்கள். இவரை கைது பண்ணுங்கள் என்று சொல்லி நாட்டையே சிறைச்சாலையாக்குவது அவசியமா என்ன? எந்த அடிப் படையிலே அவர்கள் சொல்லுகின்றார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

யாரும் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது


நேற்றுகூட, நான் செய்தியாளர்களிடம் சொன்னேன். யாரும் சட்டத்தை அவர்களுடைய கையிலே எடுத்துக்கொள்ளக் கூடாது. திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையிலே எந்தப் போராட்டமாக இருந்தாலும், அறிவித்து விட்டுத்தான் செய்வோம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினுடைய தலைவராக இருக்கக்கூடிய பொறுப்புள்ள ஒருவர் - தங்கபாலு அவர்களே, திராவிடர் கழகம் செய்தது, திராவிடர் கழகம் செய்தது என்று சொல்லுகின்றார்.

தமிழ்நாட்டிலே எத்தனை கட்சி இருக்கிறது?
இதுகூட தெரியாத காங்கிரஸ் தலைவர்


திராவிடர் கழகம் வேறு. பெரியார் திராவிடர் கழகம் வேறு என்றுகூட தெரிந்து கொள்ளக்கூட தயாராக இல்லாதவர் எப்படி அதை சொல்லுகிறார் என்று எனக்கு விளங்கவில்லை. ரொம்ப வேதனைக்குரியது. கண்டிக்கத்தகுந்தது. திராவிடர் கழகத்திற்கும், அதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? ஆகவே திராவிடர் கழகம் என்ற சொல்லை தோழர் தங்கபாலு பயன்படுத்தலாமா? அது எவ்வளவு பெரிய விபரீதமாகும்.

தலைவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும்

அதற்காக நாங்களும் எதிர்த்துக் கொண்டு உடனே தங்கபாலு கொடும்பாவியை எரிப்போம் என்று இறங்கமாட்டோம். உணர்ச்சிவசப்படக்கூடாது. தலைவர்களாக இருக்கக் கூடிய வர்கள் மற்றவர்களுக்கு வழி காட்டியாக இருக்கவேண்டும்.

முதல்வருடன் பேசியிருக்கலாம்

இவர் தோழமைக் கட்சியினுடைய மிக முக்கியமான ஒரு தலைவர்.
இவருக்கு அப்படியே அசம்பாவிதம் நடந்தது என்று ஒரு செய்தி வந்தால் உடனடியாக முதல்வர் அவர்களோடு தொடர்பு கொண்டு பேசியிருக்கலாம். அதுதான் அவர் செய்திருக்க வேண்டிய வேலை.

முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு இதுவரை எப்பொழுதும் தயங்கியதே இல்லை. அவருக்கு சரி என்று பட்டால் அவருக்கு எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் அவர்கள் நடவடிக்கை எடுக்கிறார்.

நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வன்முறை, கலவரம் தூண்டுதல் பேச்சு கைது செய்யுங்கள் என்று சொல்லுவது இவைகள் எல்லாம் ஒருவழிப்பாதை அல்ல.
அதை முடிவு செய்யவேண்டிய பொறுப்பு கடமை அரசுக்கு உண்டே தவிர, நான் போய் அவரை கைது பண்ணுங்கள், இவரை கைது பண்ணாதீர்கள் என்று சொல்லுவதற்கு உரிமை இல்லை.

தி.மு.க. - காங்கிரஸ் உறவைப் பிரிக்க

இப்படி சொல்லுவதினுடைய நோக்கம் இரண்டேதான். காங்கிரஸ் - தி.மு.க. உறவு குலையவேண்டும். அது எப்படியாவது மாற வேண்டும் என்பதற்காக இதுவரையிலே சென்று சிலர் படை எடுத்தார்கள்.

அதிலே அவர்களாலே வெற்றிபெற முடியவில்லை. ஆகவே காங்கிரசினுடைய தொண்டர்கள், தோழர்களைக் குழப்பலாம் என்ற பல் குழுவும் வைத்திருக்கக்கூடிய இந்த நிலைக்கு ஈடுபடுகிறார்கள்.

இது விரும்பத்தக்கதல்ல. இந்த போக்குக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

நடுநிலையாளர்களின் வேண்டுகோள்

காங்கிரசினுடைய நலன் கருதியும் சொல்லுகின்றோம். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு எங்களைப்போன்றவர்களுடைய நடுநிலை வேண்டுகோளாகும்.

தடை செய்யப்பட்ட இயக்கத்தைப்பற்றி பேசுவது...

செய்தியாளர்: கைது செய்யப்பட்டவர்கள்பற்றி...

தமிழர் தலைவர்
: நீதிமன்றத்தீர்ப்பு என்ன என்பது தெரியாததினால் வந்த விளைவு. நீதிமன்றத்தினுடைய தீர்ப்பு தெளிவாகவே என்னுடைய கையிலே இருக்கிறது.
தடை செய்யப்பட்ட எந்த இயக்கத்தைப்பற்றியும் பேசுவது சட்டப்படி குற்றமல்ல.

உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு.

அந்தப் பேச்சின் மூலமாகத் தீய விளைவுகள் ஏற்பட்டிருந்தாலொழிய யாரையும் கைது செய்யவேண்டிய அவசியம் இல்லை. சென்னை - உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்திலே பழைய வழக்குகள் நெடுமாறன் அவர்கள்மீது, சுப வீரபாண்டியன் அவர்கள் மீது, வைகோ அவர்கள்மீது போடப்பட்ட வழக்குகள்மீது கொடுக்கப்பட்ட தீர்ப்பு. எனவே, நீதிமன்றத் தீர்ப்புகளை சரியாகப் படிக்காததினுடைய விளைவு இந்த ஆபத்து.

யாருடைய பேச்சு தூண்டுதலாக...

இரண்டாவது அரசாங்கத்திற்குத் தெரியாத விளைவுகள் அல்ல. அவர்களுக்கு யாருடைய பேச்சு தூண்டுதலாக இருக்கிறது. விளைவுகள் என்ன? என்பதைப்பற்றி ஆய்வு செய்ய வேண்டியது அரசாங்கத்தினுடைய சட்ட இலாகா; உள்துறை இலாகா. தெருவிலே போகக்கூடியவர்கள் அல்ல.
சும்மா யாரை வேண்டுமானாலும் சொல்லலாம் என்பதற்கு உதாரணம்தான் வீரமணியையும் சேர்த்துக் கைது பண்ணுங்கள் என்று சொல்கின்றார்கள். திராவிடர் கழகம் என்று சொல்கின்றார்கள்.
கைதுக்குப் பயப்படக் கூடியவர்கள் அல்லவே நாங்கள்!
எந்த நேரத்திலும் நாங்கள் அதற்குத் தயாராகத்தான் இருக்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்கள் - கைதானவர்கள் வழக்கு நடத்தினால், அரசாங்கம் அதிலே வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை இருக்குமே தவிர, நீதிமன்றத்திலே தோற்றுப் போகக்கூடிய நிலை இருந்தால் என்ன ஆகும்?

அதை அரசாங்கத்தினுடைய சட்ட இலாகா ஆய்வு செய்துதானே - யாரை கைது செய்ய வேண்டும்? எந்த செக்சன் மீது போடவேண்டும் என்பதை செய்வார்கள்.

ஆகவே, நான் வழக்கறிஞன் என்ற முறையிலும் சொல்கின்றேன். சட்டம் தெரிந்தவன் என்ற முறையிலும் சொல்கிறேன்.

விடுதலைப்புலிகளை ராஜபக்சே அரசே
தடை செய்யவில்லையே!


விடுதலைப்புலிகள் இயக்கத்தை ராஜபக்சே அரசு இன்னும் தடை செய்யவில்லை. அது எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியாது.
தடை செய்யலாமா? என்று இப்பொழுது யோசிக்கிறார்கள். ஏனென்றால், தடை செய்துவிட்டால், பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று கருதுகிறார்கள்.
எங்கே விடுதலைப்புலிகள் அமைப்பு இல்லையோ, அங்கே எல்லாம் தடை செய்யப்பட்டிருக்கிறது.

இது ஒரு விசித்திரம்

இது ஒரு விசித்திரம். எங்கே விடுதலைப்புலிகள் போராடிக் கொண்டிருக்கின்றார்களோ - எங்கே இராணுவத்தை திக்கு முக்காட வைக்கிறார்களோ - அங்கே இன்னமும் கிளி நொச்சியைப் பிடிப்பது அவ்வளவு சுலபமல்ல.

இதே இடத்திலே ஒரு மாதத்திற்கு முன்னால் உங்களை சந்திக்கும்பொழுது சொன்னோம்.
அதன் உண்மை என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

கிளிநொச்சியைப் பிடித்துவிடுவோம் என்று...


கிளிநொச்சியைப் பிடித்து விடுவோம், பிடித்துவிடுவோம் என்று சொல்கின்றார்கள். இப்பொழுதுகூட ஏழு, எட்டு நாடுகளை கலந்து கிளிநொச்சியைப் பிடிப்போம் என்று அவர்கள் சொல்வதிலிருந்தே, அதிலிருந்தே அவர்களுடைய தெளிவு என்ன என்பது தெரிந்திருக்கும்.
இப்படி சில பிரச்சினைகளை கிளப்புவதே தமிழ்நாட்டிலே ஈழத் தமிழர்களுக்குப் பெருகி வருகின்ற திசை திருப்பவேண்டும் என்ற சில சக்திகள் - அவர்களுடைய திட்டமிட்ட சில செயல்கள்.

கைது தேவையா? இல்லையா?

செய்தியாளர்: கைது தேவையா?

தமிழர் தலைவர்: கைது தேவையா?

தேவையில்லையா? என்று முடிவு செய்யவேண்டிய பொறுப்பு ஒரு அரசுக்கு உண்டு. எனக்கோ அல்லது இன்னொரு கட்சிக்காரருக்கோ அல்ல. அவரை கைது செய்யுங்கள். இவரை கைது செய்யுங்கள் என்பது வேண்டுமானால் - கருத்தை கருத்தால் மதியுங்கள். மறுத்து சொல்லுங்கள். அதே மாதிரி வன்முறையை யாரும் எந்தக் கட்சியும் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது. அதே மாதிரி சில தலைவர்களுடைய உருவப்பொம்மை எரிப்பு என்பதிருக்கிறதே அது தேவையற்றது. ஏனென்றால், தலைவர்களுடைய உருவப்பொம்மையை எரித்தால் எந்தத் தொண்டர்களும் சும்மா இருக்கமாட்டார்கள். ஆத்திரம் வரலாம்.

தலைவர்களுக்கு அந்தப் பொறுப்பு

அப்படி ஆத்திரம் வரும்பொழுதுகூட - அதைத் தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பு அந்தந்த கட்சித் தலைவர்களுக்கு உண்டே தவிர, எரிவதை அணைப்பதற்கு, தண்ணீரை ஊற்ற வேண்டும். மணலைக் கொட்டவேண்டுமே தவிர, பெட்ரோல் ஊற்றி அணைப்போம் என்று சொல்வதா? தலைவர்களுக்கு பொறுப்பு உண்டு.

பொதுவாக தி.மு.க. அரசுக்கு இக்கட்டான ஒரு சூழ்நிலையை உண்டாக்க சிலர் திட்டமிட்டு செய்கிறார்கள். இதன் விளைவுகள் தெரியாமலேயே செய்கிறார்கள். எப்படி செய்தாலும் விளைவு ஒன்றுதான். அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

------------ இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி பேட்டி அளித்தார்.

------------------------நன்றி: "விடுதலை" 28-12-2008