Search This Blog

23.12.08

இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் கூடாது- பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமா கிரீமிலேயர்?


பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமா கிரீமிலேயர்?
பொருளாதாரம் எந்த ரூபத்திலும் வரக்கூடாது தடுக்க
தனி அரசியல் சட்ட திருத்தம் கொண்டுவரவேண்டும்

மத்திய அரசு அலுவலகம்முன்பு ஏராளமானோர் கைதாகிறார்கள்

தஞ்சை செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் பேட்டி


பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கிரீமிலேயர் கொண்டு வரக்கூடாது. பொருளாதார அளவுகோல் கூடாது என்று அரசியல் சட்டத்தில் ஏற்கெனவே தெளிவாகச் சொல்லப் பட்டுவிட்டது. கிரீமிலேயர் - பொருளாதார அளவுகோல் இட ஒதுக்கீட்டில் கொண்டுவரக் கூடாது என்று தனி அரசியல் சட்டம் கொண்டு வருவதுதான் இதைத் தடுக்க ஒரே வழி என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

தஞ்சையில் நேற்று 22.12.2008 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

29-ஆம் தேதி தலைநகரில் மறியல்

வருகின்ற இருபத்தி ஒன்பதாம் தேதி தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களில் அல்லது முக்கிய நகரங்களில் கிரீமிலேயர் என்று சொல்லக்கூடிய பிற்படுத்தப் பட்ட சமுதாய மக்களை பொருளாதார அடிப்படையிலே பிரிக்கக் கூடிய ஒரு கொடுமையை அரசியல் சட்டத்தில் இல்லாத ஒன்றை நீதிமன்றங்கள் வலியுறுத்தியதனுடைய விளைவாக பொருளாதார வரம்பை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் வைத்திருக்கிறார்கள். அதற்குத் தான் கிரீமிலேயர் என்று அவர்கள் பெயரிட்டார்கள்.

1992இல் இருந்து தான் கிரீமிலேயர்

இந்த வார்த்தை 1992ஆம் ஆண்டிலிருந்துதான் வெளியே வந்திருக்கிறது. அதாவது இந்திராசகானி என்ற மண்டல் கமிஷன் வழக்கிலே இதைப்பற்றி வலிய வந்து பொருளாதார வரம்பு இருக்க வேண்டுமென்று கொண்டு வந்திருக்கிறார்கள்.

உங்களுக்கெல்லாம் தெரியும். எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச் சராக இருந்த நேரத்திலே அ.தி.மு.க. ஆட்சி நடந்த பொழுது 1978-79-லே பெரியார் நூற்றாண்டு நடந்து கொண்டிருக்கின்ற காலகட்டத்திலே பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காணுவதற்குத் தமிழ்நாட்டிலே ஒன்பதாயிரம் ரூபாய் வருமான வரம்பு என்று கொண்டு வந்தபொழுது அதைக் கடுமையாக எதிர்த்தது திராவிடர் கழகம். திராவிட முன்னேற்றக்கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - அதே போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - கட்சிபூர்வமாக இவைகள் எல்லாம் பங்கேற்றன. அதே போல காங்கிரசிலே இருந்த சில நண்பர்கள் திண்டிவனம் ராம மூர்த்தி போல சில நண்பர்கள், டி.என்.அனந்த நாயகி அவர்கள், அதேபோல ஜனதா தளத்திலே அன்றைக்கு இருந்த திருமதி ரமணி பாய் போன்றவர்கள், கலைஞர் அவர்கள், நாங்கள், தா.பாண்டியன் போன்றவர்கள் மற்ற கட்சி நண்பர்கள் மற்றும் திராவிடர் கழக, திராவிட முன்னேற்றக் கழக முக்கிய பேராளர் கள் எல்லாம் சேர்ந்து ஒரு போராட்டமே நடத்தினோம்.

எம்.ஜி.ஆர். போட்ட உத்தரவைக் கொளுத்தி

இதே தஞ்சையில்தான் ஒரு பெரிய முடிவெடுத்து அந்த ஒன்பதாயிரம் ரூபாய் ஆணையைக் கொளுத்தி சாம்பலை எம்.ஜி.ஆர். அரசின் கோட்டைக்கு அனுப்பினோம்.

எம்.ஜி.ஆர். கொண்டு வந்த ஒன்பதாயிரம் ரூபாய் வருமான வரம்பாணையால் பல பேருக்குப் பிரச்சினை ஏற்பட்டது. ஓராண்டு அமலில் இருந்தது. எம்.ஜி.ஆர் அதில் பிடிவாதமாக இருந்தார். அதற்கு - ஆதரவு திரட்டுவதற்காக எம்.ஜி.ஆர். அவர்கள் பல ஊர்களிலே பல மாநாடுகளைக் கூட நடத்தினார்கள்.

புதுக்கோட்டையில் நண்பர் செல்லையா அவர்களை வைத்துக் கொண்டு ஒரு பெரிய மாநாட்டை நடத்தினார்கள். அதிலே அவர் பேசினார். அப்படி எல்லாம் இருந்தும்கூட அந்த 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்புக்கு ஏற்பட்ட நிலை என்ன?

எம்.ஜி.ஆர். படுதோல்வி அடைந்தார்

அதற்கடுத்து நாடாளுமன்ற தேர்தல் வந்தது 1980இல் வந்தது. அதிலே இரண்டே இரண்டு இடங்களைத் தான் எம்.ஜி.ஆர். கட்சி பெற்றது. சிவகாசி, கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் மட்டும் தான் எம்.ஜி.ஆர். கட்சி வெற்றி பெற்றது. மற்ற அனைத்து இடங்களிலும் எம்.ஜி.ஆர். கட்சி தோல்வி அடைந்தது.

உடனடியாக எம்.ஜி.ஆர். அமைச்சரவையைக் கூட்டி - ஏன் நாம் தோல்வியுற்றோம்? என்று அவர்கள் சிந்தித்து கேட்டார்கள்.

வெளிப்படையாக கருத்துக்களை சொல்லுங்கள் என்று சொன்னபொழுது - எஸ்.டி.எஸ். போன்றவர்கள் மற்றவர்கள் எல்லோருமே வெளிப்படையாக கருத்துக்களைச் சொன்னார்கள்.

காலம் காலமாக இருந்து வந்தது வகுப்புரிமை - பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பு வைத்த கார ணத்தினாலே, அந்த வரம்பாணையை எதிர்த்து தி.க., தி.மு.க., கம்யூனிஸ்ட், இந்திய தேசிய முஸ்லிம் லீக் அப்துல் சமது, காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த இவர்கள் எல்லோருமே பிரச்சாரம் செய் தார்கள். அதிலும் திராவிடர் கழகத்தின் கடுமையான எதிர்ப்பு மக்களைச் சென்றடைந்தது.

எம்.ஜி.ஆர். கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம்

அதனால்தான் நமக்கு தோல்வி ஏற்பட்டது என்று அ.தி.மு.க. முன்னணியினர் சொன்னவுடனே எம்.ஜி.ஆர். உடனடியாக ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏற்பாடு செய்து அழைத்தார்கள்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் சார்பிலே நான் கலந்து கொண்டேன். என்னென்ன காரணங்ளினாலே இந்த 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பு உத்தரவு இருக்கக் கூடாது.

அரசியல் சட்டத்தில் இல்லாத ஒன்று

அரசியல் சட்டத்தில் இல்லாத ஒன்றை வலிந்து புகுத்தியிருக்கின்றார்கள் என்ற விபரத்தை எல்லாம் விளக்கமாக எம்.ஜி.ஆர். அவர்களுக்கே புரியும்படியாக அவருக்குத் தெளிவாக விளக்கப் பட்டது.

நான் - எம்.ஜி.ஆர். அவர்கள் கேட்டிருந்த கேள்வி, மற்றும் 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பு பற்றி வருகின்ற சந்தேகங்களுக்கெல்லாம் பதில் அளிக்கின்ற வகையிலே அச்சடித்தே காப்பிகளை கொண்டு போயிருந்தேன்.

திராவிடர் கழகம் சார்பிலே கேள்வி-பதில் வடிவத்திலே எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் மற்றும் அங்கு வந்திருந்த அனைத்துக் கட்சியினருக்கும் கொடுத்தோம்.

எம்.ஜி.ஆர். வருமான வரம்பு ஆணையை ரத்து செய்தார்

எம்.ஜி.ஆர். அவர்கள் நான் சொன்ன மற்றும் எழுதிக் கொடுத்த கருத்துக்களைப் பார்த்து விட்டு 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பை ரத்து செய்து விட்டார். திடீரென்று தனக்கு ஏற்பட்ட சங்கடத்தை மாற்றிக் காட்ட வேண்டும் என்பதற்காக அவர்கள் அதைச் செய்தார்கள்.

அதுவரையிலே பிற்படுத்தப்பட்டோருக்கு 31 சதவிகிதமாக இருந்த இடஒதுக்கீட்டை, 50 சதவிகிதமாக ஆக்கினார்கள். அப்படித்தான் மொத்தம் 68 சதவிகித இட ஒதுக்கீடு என்று ஆகியது. பிறகு பழங்குடி மக்களுக்கு ஒரு சதவிகிதம் என்று 69 சதவிகிதமாக மாறியது.

69 சதவிகிதத்தினுடைய வரலாறு

69 சதவிகிதத்தினுடைய வரலாறு இது. ஆகவே இட ஒதுக்கீடு என்று சொல்லுகிறபொழுது அரசியல் சட்டத்திலே இந்திய அரசியல் சட்டத்திலே பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளப் படுத்துகிற பொழுது பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற வார்த்தை மட்டும் தான் வேலைவாய்ப்பிலே இருக்கிறது 16(4) என்ற பிரிவிலே.

தந்தை பெரியார் நடத்திய போராட்டம்

தந்தை பெரியார் நடத்திய போராட்டத்தின் விளைவாக முதல் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. அம்பேத்கர் அவர்கள் சட்ட அமைச்சராக இருந்தார். நேரு பிரதமராக இருந்தார். அந்த காலகட்டத்தில் 15(4) என்ற பிரிவை உள்ளடக்கினார்கள்.

15(3) வரையில் தான் அதுவரையில் இருந்தது. பிறகு தான் 15(4) என்ற பிரிவை உருவாக்கினார்கள். 15(4) என்ற பிரிவிலே சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்.Socially and Educationally என்றுதான் அரசியல் சட்டத்திலே இருந்தது.

"பொருளாதாரம்" என்ற வார்த்தையே கிடையாது

Economically - "பொருளாதாரம்" என்ற வார்த்தை அரசியல் சட்டத்திலே கிடையாது. இன்றும் அரசியல் சட்டத்திலே பொருளாதாரம் என்ற வார்த்தை கிடையாது. நேரு காலத்தில் அரசியல் நிர்ணய சபையில் விவாதங்கள் நடந்த பொழுது Socially and Educationally என்ற வார்த்தையை அரசியல் சட்டத்தில் பயன்படுத்தனார்கள்.

நேரு காலத்தில் விவாதம்

நேரு காலத்தில் இதுபற்றி விவாதம் நடந்த பொழுது Economically பொருளாதாரம் என்ற வார்த்தையைப் போட வேண்டும் என்று சிலர் சொன்னார்கள்.

அப்பொழுது பிரதமர் நேரு அவர்கள், சட்ட அமைச்சர் அம்பேத்கர் அவர்களைக் கலந்து கொண்டு பதில் சொன்னார். நேரு அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னார்.

மற்ற இரண்டும் (Socially and Educationally) நிலையானது. பொருளாதார ரீதியாக Economically என்று போட்டால் என்ன ஆகும்?

விவசாயிக்கு இந்த வருடம் இவ்வளவு வருமானம் வரும். அடுத்த வருடம் பார்ப்பீர்களேயானால் மழை இல்லை என்றால் வருமானம் போய்விடும். அப்பொழுது வருமானம் மாறும். நல்ல விளைச்சல் வரும்போது வருமானம் கூடுதலாக வரும் அதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன.

அதேபோல Fixed income குரூப்பைத் தவிர, மற்றவர்களுக்கு இந்த சங்கடங்கள் வரும்.

வருமானம் நிலையானதல்ல

எனவே வருமான அடிப்படை என்பது நிலையானதல்ல. அது எலாசிட்டி மாதிரி. அது ரப்பர் மாதிரி. வருமானம் என்பது கூடும், குறையும். ஆகவே பொருளாதார அளவுகோல் என்பது நிலையானதல்ல என்பதை விளக்கிச் சொன்னார்கள்.

எனவே, பொருளாதார அடிப்படையிலே பின்தங்கியவர்களுக்கு பத்து சதவிகிதம் என்று நரசிம்மராவ் அவர்கள் பிரதமராக இருந்த பொழுது ஏழைகளுக்கு ஒதுக்குகிறோம் என்று சொன்னபொழுது ரொம்பத் தெளிவாகவே அதை அடித்து விட்டார்கள். யார்? இந்திரா சகானி வழக்கிலே ஒன்பது பேர் கொண்ட நீதிபதிகள் அரசியல் சட்டத்தில் பொருளாதார அளவுகோலைப் புகுத்த இடமில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

ஆனால் இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், அப்படி சொன்னவர்களை எதை வாசற்படிவழியாக கொண்டு வர முடியாதோ அதைக் கொல்லைப்புற வழியாகக் கொண்டு வருவதற்காக புகுத்தப்பட்டது தான் இந்த கிரீமிலேயர் என்பது.

இந்த கிரீமிலேயருக்கு வருமானம் இரண்டு லட்ச ரூபாய் என்று வைத்திருந்தார்கள். இப்பொழுது 6-வது பே-கமிஷன் வந்துவிட்ட ஒரு நிலையிலே எல்லோருக்கும் சம்பளம் எவ்வளவு என்றால் 10 ஆயிரம் ரூபாய் இருந்த பிரசிடெண்டிற்கு 10 லட்ச ரூபாய் என்று வரக்கூடிய அளவிற்கு ஆகிவிட்டது. ஒவ்வொரு தொழிலிலும் இருக்கக் கூடியவர்களுக்கு சம்பளம் அதிகம்.

27 சதவிகிதம் 3 ஆண்டுகளில் பிரித்து

உதாரணத்திற்கு 9 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு - அடுத்த ஆண்டு ஒரு 9 சதவிகிதம் - அதற்கடுத்து மூன்றாவது ஆண்டு இன்னொரு 9 சதவிகிதம் என்று 27 சதவிகிதத்தை மூன்றாகப் பிரித்தார்கள்.

அய்.அய்.டி.யில், ஏ.அய்.எம்.எஸ்சி.இல், அதே மாதிரி வரக்கூடிய மத்திய கல்வி நிறுவனங்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதற்காக அறிவித்தார்கள். அப்படி இருப்பதிலேயே அந்த 9 சதவிகிதத் திற்குக் கூட ஆள் வரவில்லை.

காரணம் என்னவென்றால், வருமான வரம்பு இரண்டரை லட்சம் என்று சொல்லி, அந்த காலி இடத்தை எல்லாம் முன்னேறிய ஜாதிக்காரர்களுக்குக் கொடுப்பதற்கு வசதியாக Open
Competition-னில் சேருங்கள் என்று ரொம்பத் தந்திரமாக செய்தார்கள்.

இந்த ஆபத்து வரும் என்று நாங்கள்தான் முதலில் சொன்னோம். அதே மாதிரி வந்தது. கிரீமிலேயரை எதிர்த்தாலும் பரவாயில்லை - வருமானம் குறைச்சலாக இருப்பதால் வருமானத்தை அதிகமாக ஆக்குங்கள் என்று சொல்லி தமிழக முதல்வருக்கு நாங்கள் விண்ணப்பித்தோம்.

தமிழக முதல்வர் கலைஞரும் பிரதமருக்குக் கடிதம் எழுதினார்கள். நேஷனல் பேக்வார்டு கமிசன் தலைவர் இரத்தினவேல் பாண்டியன் அவர்களுக்கு எழுதி அது பிறகு ஒப்புக் கொள் ளப்பட்டு வருமானம் நான்கரை லட்சமாக ஆக்கப்பட்டது.

கிரீமிலேயர் ஏன் கூடாது?

அது எத்தனை லட்சமாக இருந்தாலும் பொருளாதார வரம்பு என்பது கூடாது என்று நாம் சொல்லுகின்றோம். கிரீமிலேயர் ஏன் கூடாது என்பதற்கு முதல் காரணம் - அரசியல் சட்டத்திலே சட்டக்கர்த்தாக்கள் ஆராய்ந்து பார்த்தபின்பு பொருளாதார அளவு நிலையானதல்ல சரியானதல்ல என்று கை விட்டார்கள்.

அப்படி கை விட்டதை மீண்டும் புகுத்த வேண்டும் என்பதிருக்கிறதே - அது பெரும்பாலான பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும்.

அய்.அய்.டி. விசயத்தில் கண்கூடாகத் தெரிகிறது. இது இரண்டாவது காரணம். மூன்றாவது காரணம், அதாவது பொருளாதார அளவுகோலைக் கொண்டு வந்து இவர்கள் புகுத் துவதினுடைய நோக்கமே எப்படியாவது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய வாய்ப்பு மாற்றப்பட்டு மேல் ஜாதிக்காரர்களுக்கு வரவேண்டும்.

இந்த வருடம் காலியாக உள்ள இடங்களுக்கு Carry forward - அடுத்த வருடம் பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்கிற முறை இல்லை.

உயர்ஜாதிக்காரர்


அதைக் கொண்டு வந்து O.C.-யில் சேர்க்க வேண்டும் Open Competition திறந்த போட்டியில் உள்ளவர்களுக்கு அதைக் கொடுக்க வேண்டும் என்றால், யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? வெளிநாட்டுக்காரர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும். முன்னேறிய ஜாதியார்கள் மூன்று சதவிகிதமாக இருந்தாலும் அவர்களுடைய சதவிகிதத்திற்கு அதிகமாக பத்து சதவிகிதத்திற்கு மேல் அதிகமான அளவுக்குக் கொடுக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதைவிட இன்னொரு கொடுமை.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் என்ன கிரீமிலேயர்?


நான்காவதாக ஒரு காரணத்தைச் சொல்கின்றேன்.Backward class என்கிற செக்சன். 3 டயரில் - மூன்று அடுக்குகளில் நடுவில் உள்ள பகுதிக்கு நடு அடுக்கில் உள்ளவர்களுக்கு மட்டும் கிரீமிலேயரைப் புகுத்தியிருக்கிறார்கள்.

முதல் அடுக்கான முன்னேறிய ஜாதிக்காரர்களுக்கு கிரீமிலேயர் கொடுக்கவில்லை. அது அப்ளை ஆகவில்லை. அவர்களுக்கு கிரீமிலேயர் கிடையாது.

செட்யூல்டு காஸ்ட், செட்யூல்டு டிரைப்புக்கு அதாவது மூன் றாவது அடுக்கில் உள்ளவர்களுக்கு கிரீமிலேயர் கிடையாது.

நடுவிலே இருக்கின்ற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் கிரீமிலேயர் இருக்க வேண்டும் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? இப்படி சொல்வதினாலே தாழ்த்தப்பட்ட வர்களுக்கும் கிரீமிலேயர் கொண்டு வர வேண்டும் என்பது அர்த்தமாகாது. இந்தக் கருத்து அது அல்ல.

மாறாக யாருக்குமே கிரீமிலேயர் இருக்கக் கூடாது. பொருளா தார உதவி செய்வது என்பது வேறு. ரொம்ப பேர் ஏழைகளுக்கு உதவ வேண்டாமா? என்று கேட்டார்கள்.

ஏழைகளுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்கிறார்கள். ஏழைகளுக்கு கடன் கொடுக்கிறார்கள். அது மாதிரி என்ன உதவி வேண்டுமானாலும் தாராளமாகக் கொடுக்கட்டும்.

எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அந்த இட ஒதுக்கீடு என்பது காலம் காலமாக இழைக்கப்பட்ட சமூக நீதியிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்காக.

கடைசியாக, அய்ந்தாவது காரணம் பிற்படுத்தப்பட்ட மக்களில் - வருமான வசதி படைத்த மக்களே அடித்துக் கொண்டு போய்விடுகிறார்கள் அடித்தட்டிலே இருக்கிறவர்களுக்கு கிடைக்கவில்லை என்று கவலைப்பட்டுத்தான் சொல்கிறோம் என்று நீதிபதிகளும், மற்றவர்களும் சொல்லுகின்றார்கள்.

இதை எப்பொழுது சொல்ல வேண்டும். இன்னும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கே மத்திய அரசாங்கத்தில் முதல் முறையாக கதவு திறக்கவில்லை. இது இன்னும் முன்னோட்டத்திற்கே வரவில்லை.

நாங்கள் அடிக்கடி சொல்கின்ற உதாரணம் தான். விருந்தில் இன்னும் சாப்பிடவே எங்களை உள்ளே விடவில்லை. அதற்கு முன்னாலே எல்லோரும் சாப்பிட்டு முடித்துவிட்டார்கள். காரணம் இப்பொழுதுதான் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முதன் முறையாக கல்வி நிறுவனங்களில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்த டிரையல் 10 வருடம் நடந்து அதற்குப் பிறகு சொன்னால் கூட அர்த்தம் இருக்கிறது. அப்படியே சொன்னால் கூட - யார் சொல்ல வேண்டும்?

சொல்ல வேண்டியவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள்

முன்னேறிய ஜாதிக்காரர்கள் சொல்லக்கூடாது. முன்னேறிய ஜாதிக்காரர்கள் நடத்தக்கூடிய ஊடகங்கள், பத்திரிகைகள் சொல்லக்கூடாது. அதை சொல்ல வேண்டியவர்கள் பாதிக்கப் பட்ட பிற்படுத்தப்பட்டவர்கள். இப்படி சொல்லுகிறவர்கள் பூராவும் முன்னேறிய ஜாதிக்காரர்கள் தான் - கிரீமிலேயர் வேண்டும் என்று சொல்லுகின்றார்கள். அப்படியானால் அது உள்நோக்கம் கொண்டது. பிற்படுத்தப்பட்டவர்களில் ஆள் கிடைக்க மாட்டான். அதில் காலி இடம் இருக்கிறது. அந்த காலி இடம் முன்னேறிய ஜாதியினரான எங்களுக்கு வருவதற்கு வசதியாகப் போய்விட்டது என்று நினைக்கிறார்கள் - சொல்லுகிறார்கள்.

கிரீமிலேயர் உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது

எதை முன்வாசல் வழியாகக் கொண்டு வரமுடியவில்லையோ அதைப் பின் வாசல் வழியாகக் கொண்டு வருகின்றார்கள். ஆகவே தான் கிரீமிலேயர் என்பதை உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டதே என்று சொல்லாமல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு 1950இல் கம்யூனல் ஜி.ஓ.விற்கு எப்படி ஒரு அரசியல் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்து அந்தத் திருத்தத்தில் தெளிவாக 15(4) என்பதைப் புகுத்தினார்களோ அதே போல இப்போது நடக்கக் கூடிய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கூட - இந்த நடப்புத் தொடரிலே கூட ரொம்ப சீக்கிரமாக என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால், ஒரு தனி அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்.

அரசியல் சட்டத்திருத்தம்தான் ஒரே வழி

பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காணும் பொழுது, பொருளாதார அளவுகோலைப் புகுத்தக் கூடாது என்ற அரசியல் சட்டத்தை மீண்டும் வலியுறுத்தி ஏற்கெனவே உச்சநீதிமன்றம் இந்தத் தீர்மானத்தைக் கொடுத்திருப்பதினாலே அதைத் தாண்டிச் செல்வதற்கு அரசியல் கூட்டத் திருத்தம் தான் ஒரே வழி.

ஆகவே கிரீமிலேயர் என்ற பொருளாதார அடிப்படை இருக்கக் கூடாது. ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று சொன்னால் தனியே நிதி ஏற்படுத்தி வைத்து உதவி செய்யலாம்.

29-ந் தேதி மறியல்

சும்மா வாக்கு வங்கி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக வாக்கு வங்கி அரசியலுக்காக இதைப் பயன்படுத் துவதினாலே எந்தப் பயனும் ஏற்படாது. அதை வலியுறுத்தி மத்திய அரசாங்கத்தினுடைய கவனத்தை ஈர்ப்பதற்காக வருகின்ற 29ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் - முக்கிய நகரங்களிலே மத்திய அரசாங்க அலு வலகங்களுக்கு முன்னாலே மறியல் போராட்டம் நடைபெறும். வெறும் ஆர்ப்பாட்டம் என்றால் பல நேரங்களில் பயனில்லை.

மறியல் கைதாவார்கள்


மறியல் என்றால் கைதாவார்கள். எவ்வளவு பேர் வந்தார்கள். எவ்வளவு பேர் கைதானார்கள்? எவ்வளவு பேர் அக்கறையோடு இருந்தார்கள் என்கிற செய்தி போக வேண்டுமே தவிர, நாங்கள் எந்த அரசாங்கத்திற்கும் தொல்லை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் அல்ல. இந்தக் கருத்துகளை சொல்வதற்கு மறியல் ஒரு வழி முறையாக அறப் போராட்டமாக இது நடக்கும். உங்களுக்குத் தெரியும் திராவிடர் கழகப் போராட்டத்தில் ஒரு சிறு பிரச்சினை கூட இருக்காது. ஆகவே இது ரொம்ப மிக முக்கியமான பிரச்சினை.

இவ்வாறு தமிழர் தலைவர் பேட்டி அளித்தார்.

---------------நன்றி: "விடுதலை" 23-12-2008

3 comments:

Thamizhan said...

இதைவிட விளக்கமாக என்ன சொல்ல வேண்டியிருக்கிறது?
இன்றைய ஏழை நாளைய பணக்காரன்.
இன்றைய பணக்காரன் நாளையே ஏழையாகலாம்.
இன்றைய பிற்படுத்தப் பட்டவர் என்றென்றும் பிற்படுத்தப் பட்டவர் தான்.
அரசியல் சட்டத்தில் இல்லாததை உச்ச நீதி மன்றம் நுழைத்துள்ளதே பெரிய தவறு.
பொருளாதார அடிப்படையில் ஆயிரம் திட்டங்கள் கொண்டு வந்து உதவலாம்,யாரும் தடை சொல்லப் போவது இல்லை.
துணிச்சலுடன் ஜாதி சட்ட விரோதமானது,ஜாதி பார்ப்பது யாராக இருந்தாலும் எந்த விதத்தில் இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப் படும் என்று சட்டம் இயற்றுங்களேன்.
அது என்ன தீண்டாமை சட்ட விரோதம் ஆனால் ஜாதி மட்டும் இருக்க வேண்டும்.

Thamizhan said...

திருட்டுத்தனமாகப் பதவியை வாங்கி வகிக்கும் சென்னை ஐ.ஐ.டி ஆனந்த்
நியமனம் செல்லாது என்ற உயர் நீதி மன்றத் தீர்ப்பு அறிவிக்கப் பட்டுள்ளது.
இட ஒதுக்கீட்டாளர்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி இது.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா