Search This Blog

31.12.08

பெண்ணுரிமைக் களத்தில் திராவிடர் கழகம்


புதிய அணுகுமுறைகளுடன் கழக மகளிரணிப் பட்டறை

2009 ஆம் ஆண்டுக்கான புதிய செயல்திட்டங்கள் 23.12.2008 அன்று நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் அறிவிக்கப்பட்டன. இதில் கழக மகளிரணியினர் முந்திக்கொண்டு செயல்படத் தொடங்கியுள்ளனர்.

தந்தை பெரியார் காலம் தொட்டு பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் இயக்கச் சித்தாந்தங்கள், செயல்பாடுகள், வரலாற்று நிகழ்ச்சிகள் தொகுத்துத் தரப்பட்டு வந்தன.

திராவிடர் கழகம் என்றாலே பிரச்சாரம், போராட்டம் என்கிற தண்டவாளங்களில் பயணிக்கக் கூடியதாகும். பிரச்சார முறை என்பது கால மாறுபாட்டுக்கு ஏற்ப மாறக் கூடியதாகும்; அதற்கான யுக்திகள் வகுக்கப்பட்டு பிரச்சாரம் செய்தால்தான் மக்களிடம் சென்றடைய முடியும்.


மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பகுதியினரான பெண்கள் மத்தியில்தான் அதிகமான அளவுக்கு மூடநம்பிக்கை இருள் கவ்விப் பிடித்திருக்கிறது! காரணம் நீண்ட காலமாக அவர்கள் வெளியுலக வெளிச்சத்திற்கு வராத அளவுக்கு வீட்டுக்குள் சிறை பிடிக்கப்பட்டதுதான்.

பெண்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம் - புகுந்த வீட்டில் அடிமையாக இருப்பது எப்படி? மாடன், காடன் குல தெய்வங் களுக்குச் செய்யப்பட வேண்டிய சடங்குகள் செய்வது எப்படி என்பன போன்றவைகள்தானே தவிர, சுயமாகச் சிந்திப்பது - செயல்படுவது என்பது அவர்களுக்கு இல்லாத ஒன்றே!

இந்த நிலையில், தந்தை பெரியார் அவர்களின் தன்மான இயக்கந்தான் அன்றுதொட்டு இன்றுவரை பெண்ணுரிமைக் களத்தில் தன் பணிகளை அழுத்தமாகச் செய்து வருகிறது.

பெண்களே - பெண்கள் மத்தியில் சென்றால்தான், பெண்களிடம் காலகாலமாகக் குடிகொண்டிருக்கும் கொழுத்த மூடத்தனங்களைக் கெல்லி எறிய முடியும்.

திருமணத்தின்போது கட்டப்பட்ட தாலி நீக்கம், விதவைக்குப் பூச்சூடுதல் போன்ற செய்முறைகளும் திராவிடர் கழக மேடைகளில் செயல்படுத்தப்பட்டன! தொடக்கத்தில் இவையெல்லாம் அதிர்ச்சியாக உணரப்பட்டாலும், இப்பொழுது அது ஒரு சாதாரண நிகழ்ச்சி என்னும் அளவுக்கு திராவிடர் கழகம் மக்கள் மத்தியிலே தக்க செயல்கள்மூலம் பதிவு செய்துள்ளது.

பெண்களே பெண்களிடம் சென்று பிரச்சாரம் செய்வது என்ற தன்மையில், பெண் பிரச்சாரகர்களைத் தயார் செய்யும் ஒரு யுக்தி திராவிடர் கழகத் தலைவரின் வழிகாட்டுதலில் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழியின் முயற்சியால் திருச்சியில் இம்மாதம் 28,29, 30 நாள்களில் காலத்துக்கேற்றதான ஒரு பட்டறை நடத்தப்பட்டது. திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் பிறைநுதல் செல்வியும், முகாமில் முக்கியமாக பங்கு கொண்டார்.

பெண்களின் உடல்நலம், உள நலம், பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள், மக்களிடம் மேற்கொள்ளப்படவேண்டிய அணுகுமுறைகள் - இவை தொடர்பான வகுப்புகளும், செய்முறைகளும் இடம்பெற்றன.

டாக்டர் சாலினி போன்றவர்கள் முகாமில் இருந்து மிகவும் திறம்பட, முகாமுக்கு வந்திருந்த தெரிந்தெடுக்கப்பட்ட மகளிர் மத்தியில் தெளிவாகப் பதிவு செய்தனர். அது மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகப் பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

உடற்பயிற்சி, யோகா போன்றவைகளும் கற்றுக் கொடுக்கப்பட்டன. வீதி நாடகம், தப்பாட்டம் ஆகிய கலைகளிலும் அதற்குரிய தக்கார் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மூன்று நாள்களில் இவ்வளவு என்றால், பொதுவாக நம்ப முடியாதது தான் - ஆனாலும், கழக மகளிர் காட்டிய ஆர்வம், ஊக்கம் இவற்றின் காரணமாக அவை சாத்தியமாயின.

இந்தப் பட்டறையின் நோக்கம் - இதில் பயிற்சி பெற்றவர்கள் மற்ற மற்ற இடங்களுக்குச் சென்று பயிற்சி தந்து, நாடெங்கும் பிரச்சாரத்திற்கான மகளிரை உருவாக்கவேண்டும் என்பது தான்.

பிற்போக்குத்தனமானவற்றை மக்களிடம் நிலை நிறுத்த அறிவியல் ஊடகங்கள் பயன்படுத்தப்படுவது வெட்கக் கேடானதும், அறிவு நாணயமற்ற தன்மையுமாகும்.

இந்த நிலையில், பகுத்தறிவுவாதிகள், அறிவியல் வாதிகளின் கடமையும், செயல் ஊக்கமும் அதிகம் தேவைப்படுகின்றன. இவற்றை உணர்ந்துதான் இத்தகு பட்டறைகளை திராவிடர் கழகம் உருவாக்குகிறது.

இதற்கான பயிற்சிகள் மேலும் மேலும் கூர்மைப்படுத்தப்பட்டு புதிய அணுகுமுறைகளுடன், நாடெங்கும் மக்கள் மத்தியில் குறிப்பாகப் பெண்கள் மத்தியில் பேரெழுச்சியாக உருவாக்கு வோம்.

2009 ஆம் ஆண்டு இந்த வகையில் புதிய எழுச்சி உடைய காலகட்டமாக ஆக்கிக் காட்டிட கழகம் சூளுரை பூண்டுள்ளது! அதன் தொடக்கமே இந்த முகாம்.


-------------------நன்றி: "விடுதலை" 31-12-2008

0 comments: