Search This Blog

29.12.08

மதம் படுத்தும்பாடு!




பாகிஸ்தான் பள்ளிகளில் மாணவர்களுக்கு இந்தியாவுக்கு எதிராகவும், இந்து மதத்துக்கு எதிராகவும் பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. பாகிஸ்தான் - இந்தியா சண்டையில் இந்தியா தோற்கடிக்கப்பட்டது என்பது போன்றவை தகவல்கள்போல பாகிஸ்தானில் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் (27.12.2008) ஒரு சிறப்புக் கட்டுரையே வெளிவந்து உள்ளது.

இதேபோல இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் ஏராளமான கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

14 ஆயிரம் பள்ளிகளையும், 60 கல்லூரிகளையும் நடத்தி வருகின்றனர். ஜெய்ப்பூர், அஹ்மத் நகர் ஆகிய இடங்களில் இந்துத்துவா ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கின்றனர். கிட்டத்தட்ட 18 லட்சம் மாணவர்கள் - இந்த இந்துத்துவா கூட்டம் நடத்தும் கல்வி நிறுவனங்களில் படித்து வருகின்றனர் என்றால், இவர்கள் எப்படியெல்லாம் பயிற்றுவிக்கப்படுகின்றனர் - தயாரிக்கப்படுகின்றனர் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

நவம்பர் 14 - நேருவின் பிறந்த நாள் - குழந்தைகள் நாள் என்பது இந்திய அரசின் ஆணை. ஆனால், இவர்கள் கோகுலாஷ்டமியைத்தான் (கடவுள் கிருஷ்ணன் பிறந்த நாளாம்!) குழந்தைகள் தினமாக அனுசரித்து வருகிறார்கள். டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரியர்கள் தினமாக நாட்டில் கொண்டாடவேண்டும் என்பது அரசின் ஆணை. ஆனால், சங் பரிவார் நடத்தும் கல்வி நிறுவனங்களில் நிலை என்ன தெரியுமா? மகாபாரதம் எழுதியவராகச் சொல்லப்படும் வேதவியாசரின் பிறந்த நாளைத்தான் (அதற்கு என்ன ஆதாரமோ?) ஆசிரியர் தினமாகக் கொண்டாடச் செய்கிறார்கள்.

உத்தரப்பிரதேசத்தில் இவர்களின் சரஸ்வதி மந்திர் பள்ளியில் ஏழாம் வகுப்பில் இடம்பெற்றவை - முலாயம்சிங் யாதவ் இக்கால இராவணன் என்று ஏன் அழைக்கப்படுகிறார்?

பாபர் மசூதியை இடிக்கும் முயற்சி நடந்தபோது முலாயம்சிங் யாதவைச் சேர்ந்த ஆட்களில் துப்பாக்கிச் சூட்டில் எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டனர்?

(அவுட்லுக், 10.5.1999)

யூதர்கள்மீது வெறுப்பை ஏற்படுத்துவதற்கு அடால்ப் ஹிட்லர் ஜெர்மனியில் எப்படி பாடத் திட்டங்களை உருவாக்கி வைத்திருந்தனரோ அதே பாணியைத்தான் இந்தியாவுக்குள், இந்துத்துவாவாதிகள் கல்விக்கூடங்களை உருவாக்குகிறார்கள்.

பாகிஸ்தானாக இருந்தாலும் சரி, இந்தியாவானாலும் சரி இப்படி ஒருவருக்கொருவர் பகைமையை, வெறுப்பை விளைவிக்கும் முறையில் மாணவர்களைத் தயாரித்தால் அதன் விளைவு என்ன?

இதனால் இரு நாட்டு மக்களின் வளர்ச்சிக்குக் காதொடிந்த ஊசி முனை அளவுக்காவது பயன் - பலன் உண்டா?

வறுமைக்கோட்டுக்கும் கீழே வாழும் மக்கள் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் கணிசமாக உள்ளனர்.

உலக நாடுகள் 180 இல் ஊழல் மலிந்த நாடுகள் வரிசையில் இந்தியா 74 ஆம் இடத்திலும், பாகிஸ்தான் 140 ஆம் இடத்திலும் இருக்கின்றன.

மதக் கல்வி மக்களுக்கு ஒழுக்கத்தை வளர்க்கும் திறன் இந்த வகையில்தான் உள்ளது.

அறிவு வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டுக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும் பயன்பட வேண்டிய கல்வி - வெறுப்புக்கும், பிளவுக்கும், வெறிக்கும் பயன்படுத்தப்படுமேயானால், அதன் நிகர விளைவு - மக்களின் அமைதியும், நிம்மதியும் அழிக்கப்பட்டு, அன்றாடம் ரத்தக் குளியல் நடத்தத்தானே பயன்படும்!

மதம் தனிப்பட்ட முறையில் அவரவர் வீட்டு எல்லைக்குள் தாராளமாக முடக்கப்பட்டுக் கிடக்கட்டும்! மதமேயற்ற உயர்நிலை எட்டப்படுவதன்மூலம்தான் சக வாழ்வும் சம வாழ்வும் எட்டப்படும் என்றாலும், அதுவரை ஓர் எல்லைக் குள், பூஜை அறை மட்டத்தில் நடமாடிக் கொண்டு இருக் கட்டும். அதனை வீதிக்கு இழுத்து வந்து வெறியாட்டுக் களத்தில் இறக்கிவிட்டு ஆடு - புலியாட்டம் நடத்துவது விபரீதமானது!

மனிதன் பகுத்தறிவு உள்ளவன் என்றால், இந்தக் கோணத்தில் சிந்திக்கட்டும் - செயல்படட்டும்!



--------------------"விடுதலை" தலையங்கம் - 29-12-2008

0 comments: