Search This Blog

31.12.08

"அக்னி பார்வை"யில் "தமிழ் ஓவியா"தோழர் அக்னி அவர்கள் தனது மின்னஞ்சல் முகவரிக்கு எனது கைபேசி எண்ணையும், மின்னஞ்சல் முகவரியும் அனுப்பி வைக்க கோரினார். அதன்படி அனுப்பி வைத்தேன். உடனே கைபேசியில் தொடர்பு கொண்டு உங்களிடம் ஒரு பேட்டி எடுக்க வேண்டும் என்றார். எனக்கு தூக்கிவாரிப் போட்டுவிட்டது. நாம் என்ன அப்படி பெரிதாகச் செய்து விட்டோம் என்ற மன நிலையில் பேட்டி கொடுக்கும் அளவுக்கு நான் ஒன்றும் சாதித்துவிடவில்லை, அந்த அளவுக்கு பெரிய ஆளுமல்ல என்று கூறினேன். அதற்கு தோழர் அக்னி என்னிடமிருந்து எப்படியாவது பதில் பெற்றுவிடவேண்டும் என்ற அக்கரையில் பேசினார். நானும் பேட்டியாக இல்லாமல் ஒரு பதிவாக பதிவு செய்வோம் என்று கூறியதை அடுத்து அவர் மின்னஞ்சலில் அனுப்பிய கேள்விகளுக்கு எனது பதிலை அளித்தேன். அதை "அக்னிபார்வை" தனது (http://agnipaarvai.blogspot.com/)வலைப் பூவில் வெளியிட்டிருந்தார். அதன் மீள்பதிவு இங்கு வெளியிடப்படுகிறது.

நன்றி

----------------------------------------------------------------------------------------

அக்னியின் கேள்விகள்:பதிவர் தமிழ் ஓவியாவின் பதில்கள்

நான் ’திருவிளையாடல் தருமி’ மாதிரிதான். எனக்கு சின்ன வயதில் இருந்தே ஒருவரை கேள்வி கேட்பது என்றால் ’அல்வா’ சாப்பிடுவது மாதிரி.

தமிழ்மணத்தின் வாயிலாகவோ, தமிலிஷ் வாயிலாகவோ ஒரு நாளைக்கு சுமார் 50 வெவ்வேறு பதிவுகள் படிக்கும் பொழுது, மனதில் கேள்விகள் ஊற்றெடுக்க துவங்கிவிடும். சில நேரம் பின்னுட்டதில் கேட்பேன். பல நேரம் கேள்விகள் மனதில் தங்கிவிடும்.பதிவர் சந்திப்புகளிள் சில நேரம் பதில்களை பெற்றுவிடுவேன்.

ஒரு நாள் திடிரென்று இந்த யோசனை தோன்றியது ‘அஞியின் கேல்விகள்’.. இனி நிறைய பதிவர்களிடம் என் கேள்விகளுக்கான பதிலகளை பெற்று பதிவிடுவேன்..அந்த வரிசையில், முதலில் பதிவர் ’தமிழ் ஓவியா’.. என்னயும் மதித்து, பதிலளித்த அவருக்கு என் நன்றிகள்.அக்னியின் கேள்விகள்..

1. கேள்வி: - உங்களைப் பற்றி?

தமிழ் ஓவியா பதில்: -

என்னைப்பற்றி பெரிதாகச் சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை.

ஒருநாளைக்கு இருமுறை மட்டுமே பேருந்து அதுவும் கடந்த 15 ஆண்டுகளாகத்தான் வந்து செல்கிறது. அப்படிப்பட்ட குக்கிராமத்தில் சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தேன். எனது பெற்றோர் கடினமான உழைப்பின் மூலம் எனக்கு கல்வியைத் தந்தனர். கிராமத்தில் வளர்ந்த சூழல் காரணமாக அனைத்துவிதமான அடக்குமுறைகளும் அறிந்து கொள்ள முடிந்தது. படிப்படியாக படித்து முடித்து பணிக்கு வந்து ஒரு கட்டத்தில் பணியை இழந்து மீண்டும்

பணி ஏற்று, ஏற்றுக் கொண்ட கொள்கையின்படி ஜாதி மறுப்புத்திருமணம் புரிந்து ஒரு பெண்குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். என்னைப்பற்றி இதுவே அதிகம் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.


2.கேள்வி:- ஒரு மாதத்தில், சில சமயம் 100 பதிவுகள் வரை போட்டிருக்கிறீர்கள்.இதற்கான நேரமும் தகவலும் உங்களுக்கு எப்படிக்கிடைக்கிறது?

தமிழ் ஓவியா பதில்: -

கிராமத்தில் வளர்ந்ததால் அருகில் உள்ள நகரமான பழனிக்கு வருவதற்கு கூட முடியாத சூழல், எங்கள் ஊருக்கு அருகில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்புப் படிக்கும் போது எனக்கு பெரியார் பற்றிய நூல்கள் அறிமுகமானது. ஆனால் அப்போது பெரியாரைப் படித்து புரிந்து கொள்ள இயலாத வயது அதைவிட அப்போது பள்ளிப் பாடத்தையே படிக்க நேரம் கிடைக்காது. இருந்தாலும் எங்கள் ஊரில் கடை வைத்திருந்த நாகராஜ், அவருடைய உறவினர் திருநாவுக்கரசு( அப்போது அவர் கல்லூரில் படித்து வந்தார்) போன்றவர்கள் பெரியார் பற்றிய நூல்களை கொடுத்து படிக்க வலியுறுத்தி வந்தனர். அதன் விளைவாக பெரியாரை கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கினேன். பின்பு நான் பழனிக்கு கல்லூரிப் படிப்புக்கு போக ஆரம்பித்தபிறகு பெரியாரின் நூல்களை நானே வாங்கிப் படிக்கும் அளவுக்கு தேறி விட்டேன். அந்த நூல்கலைப் படிக்கும் போது சமுதயாம் அரசியல் போன்றவைகள் நன்கு புரிய ஆரம்பித்து விட்டது. அதோடு கிராமத்தில் நடக்கும் அடக்கு முறைகளுக்கான அடிப்படைக்காரணமும் தெரிந்து விட்டது. இந்தக் கொடுமைகளை ஒழிக்க வேண்டும் என்ற அடைப்படையில் பெரியார் மற்ற முற்போக்கு சிந்தனையாளர்களின் நூல்களையும் படிக்கலானேன். படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட அய்யங்கள் தோழர்களுடன் விவாதிக்கும் போது அவர்கள் என்னிடம் கேட்ட அய்யங்கள் அத்தனையும் குறித்து வைத்துக் கொண்டு அதற்கான விடைகளைத் தேடினேன். அந்த அய்யங்களுக்கு பெரியார் கருத்துக்களில் விடை கிடைத்தது அப்போதிருந்தே குறிப்பு எடுப்பதும் அதை ஒரு நல்ல தரமான நோட்டில் எழுதி வைக்கும் பழக்கம் வந்துவிட்டது.


நான் கல்லூரியில் படிப்பதால் “விடுதலை” இதழை பழனியில் இருந்து எங்கள் ஊருக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தனர் பழனி பெரியார் இயக்கத்தினர். அப்படி கொண்டு போகும்போது பேருந்துலேயே

“விடுதலை” (4 பக்கம்) இதழைப் படித்து விடுவேன். படிக்க படிக்க பல உண்மைகள் புரிய ஆரம்பித்து அந்த இதழ்களைச் சேகரித்துவைக்கும் பழக்கமும் வந்துவிட்டது. தமிழர்களின் ஆயுதம் “விடுதலை” என்று பெரியார் சொன்னார். நானும் அந்த ஆயுதத்தை பலமாகப் பற்றிக் கொண்டேன்

இப்போது கூட நான் ஒரு மாதத்தில் நூறு பதிவு போடுவதற்கு செய்திகள் முழுவதும் “விடுதலை” “உண்மை” இதழ்களிலிருந்தே எடுக்கிறேன்.

பணி முடித்ததும் என்னுடன் பணியாற்றுபவர்கள் வேறு பணி செய்து பணத்தை தேடி ஓடுவார்கள். நான் செய்தியைத் தேடி ஓடுவேன்.

எனது துணைவியார் மாலையில் பள்ளி மாணவர்களுக்கு தனிப்பயிற்சி (டூயுசன்) வகுப்பு எடுப்பார். மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு எங்கள் வீட்டில் உள்ள ஒரு அறையை ஒதுக்கிவிட்டு இன்னொரு அறையில் உள்ள கணனி நான் அமர்ந்து விடுவேன். இரவு 9 மணி வரை நான் எடுத்த குறிப்புகளிலிருந்தும், “விடுதலை” இதழில் இருந்தும் செய்திகளை வலைப்பூ வில் பதிவு செய்து விடுவேன். இணையத்திலிருந்தும் பல செய்திகள் கிடைப்பதால் இது சாத்தியமாகிறது.


3.கேள்வி:- பெரியர் பற்றி அதிகம் எழுதுகிறீர்கள்,உங்களுக்கு பெரியார், அவரின் கொள்கைகள் அறிமுகமாகிய விதம் பற்றி?


தமிழ் ஓவியா பதில்: -

இரண்டாவது கேள்விக்கான பதிலைப் படிக்கவும்.

கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே திராவிடர் கழகத்தில் இணைந்து என்னாலான பணியைச் செய்து வந்து கொண்டிருக்கிறேன். படிக்கும் போது நான் படித்தவைகளிலிருந்து தொகுத்துவைத்திருந்த செய்திகளை “விடுதலை” “உண்மை” இதழ்களுக்கு அனுப்பிவைப்பேன். அந்தச் செய்திகளும் பதிவாகும். தேடலும் தேடிய செய்திகளை பகிர்ந்து கொள்வதின் மூலம் பெரியார் அறிமுகமாகி, இன்று எங்களது வாழ்வியலாகி விட்டது.4. கேள்வி:- உங்கள் வீட்டில் பெரியரின் கொள்கைகள் நடைமுறையில் உள்ளதா?

(வீட்டில் நடக்கும் திருமணம், இறப்பு நிகழ்சிகள் மூலம் கொள்கைக்காரனா இல்லையா என்பதை வெகு எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம் .

அதனடிப்படையில் நான் திருமணம் செய்தால் ஜாதி மறுப்புத்திருமணம் தான் செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்து வேறு ஜாதியில் திருமணம் செய்து கொண்டேன். அது போல் என் தந்தை இறப்பின்போதும், தாய் இறப்பின் போதும். எந்த வித சடங்குகளுமின்றி இறுதி நிகழ்ச்சி நடந்தது.

திருமணத்தைப் பொறுத்தவரை எனது தனிப்பட்ட உரிமை. அதில் எனது சகோதரகள் சகோதரிகள் தலையிட முடியாது. எனது பெற்றோர் இறப்பு என்பது எங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் பொதுவானது. ஆனாலும் எனது முடிவுக்கு கட்டுப்பட்டு எந்தச் சடங்கும் இன்றி எங்களது பேற்றோரின் இறுதி நிகழ்ச்சி நடைபெற ஒத்துழைத்த எனது அண்ணன் மற்றும் அக்கா இருவருக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது நான், என் துணைவியார், எனது மகள் மூவரும் பெரியாரியலை வாழ்வியலாக ஏற்று சற்றும் பிசகாமல் நடந்து வருகிறோம்.

5.கேள்வி:- தமிழ் ஈழம் பற்றி, உங்களின் கருத்து.

தமிழ் ஓவியா பதில்: -இலங்கையில் தமிழன் இரண்டாந்தரக் குடிமகனாக நடத்தப்பட்டதால் தந்தை செல்வா பொன்றவர்களால் அறப்போரட்டமாக ஆரம்பித்து, அடக்குமுறை அதிகமானதால் இன்று ஆயுதப் போரட்டமாக உருவெடுத்திருக்கிறது.

அடக்குமுறை எங்கிருந்தாலும் அது கண்டிக்கதக்கது. அந்த வகையில் ஈழத்தமிழர்களுக்கு தமிழன் என்ற முறையில் தார்மீகமான ஆதரவு எப்போதும் உண்டு.

6. கேள்வி:- இப்பொழுதும் பெரியாரின் கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல ஆட்கள் இருக்கிறார்கள?

தமிழ் ஓவியா பதில்: -

பெரியாரின் கொள்கைகள் என்பது ஒரு வாழ்க்கை நெறி, அது மனித நேயத்தை மலரச் செய்வதில் முதலிடம் வகிக்கிறது. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் மூலம் பல நூல்களை திராவிடர்கழகம் வெளியிட்டு பெரியாரின் கருத்தை மக்களிடம் கொண்டு செல்கிரது. அதேபோல் மகளிரணி, இளைஞரணி மூலம் தற்போதைக்கு ஏற்ற முறையில் புதிய அணுகுமுறையில் பிரச்சாரப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அது போல் பெரியார் தொண்டர்கள் அவரவர்கள் சக்திக்கேற்றவாறு தனது சொந்தக் காசை செலவு செய்து பெரியாரைப் பரப்பி வருகின்றனர். கடைசி மூட நம்பிக்கைக்காரன் இருக்கும் வரையில் பெரியாரின் பணி தேவைப்படும். இப்போது கொஞ்சம் அதிகமாகவே தேவைப் படுகிறார் பெரியார். இது குறித்து ஒரு சான்றை மட்டும் கீழே தருகிறேன்.

“தீர்மானம் 6 (அ):

இயக்க நாளேடான விடுதலை மாதம் இருமுறை இதழான உண்மை, குழந்தைகள் இதழான பெரியார் பிஞ்சு, ஆங்கில மாத இதழான தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஆகியவற்றிற்கு அதிக அளவில் சந்தா சேர்ப்பதையும், இயக்க வெளியீடுகளை, நூல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதையும், புதிய வெளியீடுகளை திட்டமிட்ட வகையில் கொண்டு வருவதையும் முதன்மையான பணியாகக் கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.

விடுதலை ஏட்டிற்கு இது பவளவிழா ஆண்டு (75 ஆம் ஆண்டு) என்பதால், அதன் முக்கியத்துவத்தை நாடு முழுவதும் எடுத்துச் சொல்லி வாசகர்களின் எண்ணிக்கையை பெருமளவில் அதிகப்படுத்து வதற்கான முயற்சியை திட்டமிட்ட வகையில் மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 6 (ஆ):

வீதி நாடகம், பகுத்தறிவுக் கண்காட்சி, கிராமப் பிரச்சாரம், நடமாடும் புத்தகச் சந்தைப் பயணம் இவற்றை ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு திட்டத்தின்மூலம் தீவிரமாகச் செயல்படுத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

வீதி நாடகம், மந்திரமா? தந்திரமா? ஆகியவைகளுக்கான பயிற்சி முகாம்களை நடத்தி இதில் இன்னும் ஏராளமான அளவில் இளைஞர்களை உருவாக்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 6 (இ):

பெரியாரியல் பயிற்சி முகாம் - பெண்களுக்கான முகாம், களப்பணி முகாம், பேச்சாளர் முகாம், தலைமைத்துவ முகாம்களை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.”

-----------2009 ஆம் ஆண்டுக்கான திராவிடர் கழகச் செயல் திட்டங்கள் உள்பட திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலிருந்து . “விடுதலை” 23-12-20087. கேள்வி:- இன்றய இந்தியாவில் நிலவும் அரசியல் பற்றி உங்கள் கருத்து.


தமிழ் ஓவியா பதில்: -

இன்று இந்தியாவில் நிலவும் அரசியல் தன்மையை நினைக்கும் போது வேதனையும் வெட்கமும் படத்தக்க சூழல்தான் நிலவுகிறது. ஒருபக்கம் இந்து தீவிரவாதிகளால் மாலேகன் குண்டு வெடிப்பு, இன்னொரு பக்கம் இஸ்லாம் தீவிரவாதிகளால் மும்பையில் பல இடங்களில் குண்டு வெடிப்பு மனிதத்துடன் வாழமறந்து விட்டு மதத்தை கட்டிக் கொண்டு வாழும் மதவெறியே இன்றைய அரசியல் நிலையாகிவிட்டது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது அரசியல் சாக்கடையை யாராலும் சுத்தம் செய்ய முடியாது. லஞ்சம், ஊழல், கற்பழிப்பு, கொலை, கொள்ளை , ஜாதி மதம், என எல்லாமும் நிறைந்த இந்தியாவை அரசியல் காப்பாற்றிக் கொண்டு(மேற்கண்டவைகளை ஒழிக்காமல்) இருக்கிறது. சட்டரீதியாக மடுமல்லாமல் மனரீதியாகவும் மூலகாரணத்தை அறிந்து அதைப் போக்கினால் நிலமை மாறலாம்.


8.கேள்வி:- தமிழ்நாட்டில் மெல்ல RSS பரவி வருகிறதே அதை பற்றி?

தமிழ் ஓவியா பதில்: -இந்தியாவில் தமிழ்நாடு எப்போதும் தனித்தன்மையாக ஒவ்வொரு செயலிலும் இருக்கும். அந்த வகையில் மதவெறிக்கு இடம் கொடுக்காமல் மண்ணின் பெருமையை நிலைநாட்டியே வந்துள்ளது.உதாரணமாக இந்துமத வெறியர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது இந்தியா முழுவதும் கலவரம் ஏற்பட்டது. ஆனால் தமிழ்நாடு மதவெறிக்கு இடம் கொடுக்காமல் (ஒருசில தவிர) அமைதி காத்தது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் பற்றி தமிழக மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் மிக அதிகமாக வளர்ந்தனர். அப்போதே அதை சுட்டிக் காட்டி எச்சரிக்கை செய்தது திராவிடர் கழகம். தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் பரப்புரையில் ஈடுபட்டு அதன் முகமூடியை கிழிதெறிந்து அம்பலப்படுத்தினர் பெரியார் இயக்கத்தினர் மற்றும் முற்போக்கு அமைப்பினர்.

ஆர்.எஸ்.எஸ். இந்திய அரசால் சுமார் நான்கு முறை தடை செய்யப்பட்ட வன்முறை அமைப்பு. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பி.ஜே.பி.க்கு முட்டு கொடுத்ததனால் ஆர்.எஸ்.எஸ். பரவி வருவது போல் ஒரு தோற்றம் நிலவுகிறது. அதில் உண்மை இல்லை. அப்படியே இருந்தாலும் அதன் பருப்பு தமிழகத்தில் வேகாது.

9. பழனியின் பிரபலமே பக்தி, அந்த ஊரில் ஒரு பெரியரிஸ்ட்டாக எப்படி உணருகிறீர்கள்?

தமிழ் ஓவியா பதில்: -

எங்கள் ஊரான பழனியில் ஒரே “பொழுதுபோக்கும்” இடம் பழனிமலைதான். பெரியார் தொண்டர்கள் என்றாலே ஒரு தனிமரியாதை உண்டு. பழனியில் மட்டுமல்ல எல்லா ஊர்களிலும். நான் அடிக்கடி சொல்லுவதுபோல் உலகத்தில் உள்ள எல்லாப் பதவிகளையும் விட “பெரியார் தொண்டன்” என்ற பதவி உயர்வானது. பக்தி என்பது யாரும் விரும்பி செய்வது போல் தெரியவில்லை. பயத்தினால் பக்தியாக இருப்பது போல் நடிக்கிறார்கள். அல்லது எனக்கு இதைசெய்து கொடு நான் உனக்கு மொட்டைஅடிக்கிறேன், விரதம் இருக்கிறேன் போன்ற ஒப்பந்தங்கள் நடக்கிற இடமாகத்தான் இருக்கிறது. லஞ்ச ஊழலின் பிறப்பிடம் கோவில் என்று சொன்னால்கூட தவறில்லை.

பக்தர்கள் எதையாவது எதிர்பார்த்து எதையும் செய்கிறார்கள். ஆனால் பெரியார் தொண்ர்கள் எதையும் எதிர்பார்க்காமல் மக்களுக்காக உழைக்கிறார்கள். உதாரணம் வேண்டுமானால் பக்தர்கள் இறந்தபின்கூட சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். ஆனால் பெரியார் தொண்டர்கள் எதையும் பொருட்படுத்தாமல்“தொண்டறம்” நோக்கில் செயல்படுவார்கள். ஆக

பெரியாரின் தொண்டனாக இருப்பதில் பெருமையும், மகிழ்ச்சியும் கிடைக்கிறது.


10. கேள்வி:- பழனியில் நிறைய, பக்தி என்ற பெயரில் மோசடிகள் நடக்கிறதாமே உண்மையா?


தமிழ் ஓவியா பதில்: -

பக்தியின் பெயரால் நடக்கும் அட்டூழியம் கொஞ்சநஞ்சமல்ல. பழனியில் மட்டுமல்ல கோவில் நகரங்கள் அனைத்திலும் மோசடிகள் நடந்துதான் வருகிறது.

பழனிக்கு வருபவர்கள் தலையில் மட்டும் மொட்டை போட்டுக் கொள்வதில்லை, தங்களுடைய வருமானம் தன்மானத்தையும் சேர்த்து மொட்டை போட்டுக் கொள்கிறார்கள்.

பூசை சாமான்கள் வாங்குவதிலிருந்து மொட்டை போட்டுக் கொள்வதிலிருந்து மோசடிகள் தாராளமாக நடந்து வருகிறது. இதில் என்ன வேடிக்கை என்றால் மோசடி செய்பவர்கள் அனைவரும் பக்தர்கள். ஏமாறுபவர்களும் பக்தர்கள்.

11. கேள்வி:- உங்களின் ஆன்மீக நிலை பற்றி?

தமிழ் ஓவியா பதில்: -

நான் 9ஆம் வகுப்பு படிக்கும் வரை எனது குடும்பத்தாருடன் கோவிலுக்கு சென்று “கடவுளை” வணங்கியுள்ளேன். அதன் பின் பலமுறை கோவிலுக்கு சென்றுள்ளேன். ஆனால் கடவுளை வணங்குவதற்கல்ல. அங்கே நடக்கும் அட்டுழியங்களையும், ஆய்வு நோக்கில் அந்தக் கோவிலின் தலபுராணங்களை அறிந்து கொள்ள. என்னைப் பொருத்தவரைஆன்மீகம் என்பதே மோசடி. தானும் ஏமாந்து மற்றவர்களையும் ஏமாற்றுவது.


13.கேள்வி:- உங்களின் பொழுதுபோக்கு?

தமிழ் ஓவியா பதில்: -பொழுது போக்கு என்பதே இல்லை என்று சொல்லலாம். பணி முடித்தபின், படிப்பது ,எழுதுவது போன்றவைகளுக்கே நேரம் போதவில்லை.இரவு உணவின் போது குறிப்பாக 9- 10 எனது குடும்பத்தாருடன் பேசி மகிழ்வதுதான் இப்போதைய பொழுது போக்கு. விடுமுறை நாள்களில் பழனி முழுவதும் குடும்பத்துடன் நடந்து சென்று பல் வேறுபட்ட மக்களைச் சந்திப்போம். எனது துணைவியாரின் சொந்த ஊருக்கு போகும்போது மட்டும் பகலில் தூங்குவேன். இதைத்தவிர வேறு இல்லை.


14. கேள்வி:- உங்களுக்கு பிடித்த புத்தகங்கள் பற்றி ஒரு சிறு அறிமுகம்.

தமிழ் ஓவியா பதில்: -

நான் ஆரம்பித்திலேயே சொன்னது போல் பெரியார் நூல்களை விரும்பிப் படிப்பேன். அதேஅளவு ஈடுபாட்டுடன் அம்பேத்கர் நூல்களையும் விரும்பிப் படிப்பேன். மற்றபடி எந்த நூல் கையில் கிடைத்தாலும் வாசித்துவிடுவேன். வீடு முழுவதும் நூல்கள், இதழ்கள் என்று சிதறிக் கிடக்கும். எனது துணைவியாரோ நூலை எடுத்த இடத்தில் வைக்கச் சொல்லிக் கொண்டே இருப்பார். ஆனால் அதை மட்டும் என்னால் செய்யவே முடியவில்லை. என்னை திட்டிக் கொண்டே அதைப் பொறுப்பாக அடுக்கி வைத்து உதவுவார் எனது துணைவியார்.

தி.க. தலைவர் கி.வீரமணி அவர்களின் எழுத்துக்களும், தி.க.பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களின் எழுத்துக்களும்தான் என்னையும் எழுதத் தூண்டியது.

15. கேள்வி:- பதிவராக இன்றய தொழில்நுட்ப வளர்ச்சியை எப்படி பார்கிறீர்கள்?

தமிழ் ஓவியா பதில்: -தொழிநுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனாலும் இன்னொரு பக்கம் மூடநம்பிக்கையை வளர்க்க இந்த அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்துபவர்களைக் கண்டால் எரிச்சலாக இருக்கிறது.

இந்த வளர்ச்சியை நாம் ஆக்க சக்திக்கு பயன்படுத்தினால் மற்ற நாட்டுக்காரன் போல் நாமும் வேகமாக முன்னேற்றமடையலாம்.

தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி எழுதும்போது பெரியாரின் “இனி வரும் உலகம்” என்ற நூல்தான் நினைவுக்கு வருகிறது. அதில் 1943 ஆம் ஆண்டிலேயே இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி பேசியுள்ளார். மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் ஏராளம் (கடவுள் என்ற கற்பனை உட்பட). இன்னும் மனிதனால் கண்டுபிடிக்க வேண்டியவைகளும் ஏராளம் இருக்கிறது. அதற்கு இந்த அறிவியல் வளர்ச்சி உதவும்.

]இதுகுறித்து பெரியார் கருத்து ஒன்றை தருகிறேன்.

“இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் எப்படி இருக்கும் என்ற சிந்தனையும், கண்ணும் கொள்ள எனக்கு விருப்பமேயொழிய, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் பற்றி அக்கறை கிடையாது”

---------------- பெரியார் 11-12-1944 இல் ஈரோட்டில் பேசியது.

இன்னும் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து அதை நாம் ஆக்க சக்தியாக பயன்படுத்த வேண்டும்.

தாங்கள் அனுப்பிய 15 கேள்விகளுக்கும் என்னால் முடிந்த அளவு விடை அளித்துள்ளேன். கேள்விகள் அனைத்தும் மிகவும் கூர்மையானவை,பொருள் பொதிந்தவை. இந்த வாய்ப்பைக் கொடுத்த தங்களுக்கு மிக்க நன்றி.

6 comments:

சிந்திக்க உண்மைகள். said...

வாழ்த்துக்கள். வாழ்க ! வளர்க !

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி, சிந்திக்க உண்மைகள்.

தங்களின் மின்னஞ்சல் அல்லது கை பேசி எண்ணை தெரிவிக்கவும்.

சிந்திக்க உண்மைகள். said...

எனது மின்னஞ்சல் முகவரியை எவ்வாறு தங்களுக்கு தெரிவிப்பது?

Unknown said...

யதார்த்தமான பதில்கள். பெரியார் கொள்கைகள் பற்றி விபரமாக அறிந்து கொள்ள முடிந்தது.

தமிழ் ஓவியா said...

oviyathamizh@gmail.com என்ற முகவரிக்கு தங்களின் மின்னஞ்சல் மற்றும் கை பேசி எண்ணை தெரிவிக்கவும்.
நன்றி.

தமிழ் ஓவியா said...

oviyathamizh@gmail.com என்ற முகவரிக்கு தங்களின் மின்னஞ்சல் மற்றும் கை பேசி எண்ணை தெரிவிக்கவும்.
நன்றி.