Search This Blog

13.12.08

மகரஜோதி மோசடி தொடரலாமா?







அய்யப்பன் விரத சீசன் வந்துவிட்டது! வழக்கம் போல ஏடுகளும் தங்கள் பங்குக்குப் பல்வேறு செய்திகளை அவிழ்த்துக் கொட்ட ஆரம்பித்து விட்டன.

மாலை அணியும் போது செய்யப்பட வேண்டிய மந்திரம் என்ன? யாத்திரையில் விரதமுறைகள் யாவை? சுபிட்சம் தரும் மகரஜோதி என்றெல்லாம் தங்களின் கற்பனை வளத்துடன் கதையளக்க ஆரம்பித்து விட்டன. இதுபோன்ற பிரச்சினையில் ஏடுகள் தங்கள் அறிவைச் செலுத்துவதே கிடையாது. மக்கள் பக்தி உணர்ச்சிக்கு அது எதிரானது என்ற வியாபாரத் தந்திரத்தோடு ஏடுகளின் முதலாளிகள் நடந்து கொள்கின்றனர்.

மோசடி என்பது சட்டப்படி குற்றமான ஒரு செயலாகும். அந்தக் குற்றம் யார் செய்தாலும், எதன் பேரில் செய்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்.

மகரஜோதி என்பது உண்மையல்ல; செயற்கையாக கேரள மின்வாரியத்தைச் சேர்ந்த சிலர் பொன்னம்பல மேட்டில் செயற்கையாகக் காட்டும் வெளிச்சம் என்பது இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

1982-ஆம் ஆண்டிலேயே கேரளப் பகுத்தறிவாளர்கள் மகரஜோதி காட்டப்படும் பொன்னம்பல மேட்டுக்குப் பயணம் செய்து அந்த மகர ஜோதியைக் காட்டுபவர்கள் யார்? என்பதைக் கண்டுபிடித்தனர்.

கோபி என்ற கேரள மின்துறையில் ஓட்டுநராகப் பணிபுரியும் ஆசாமிதான் இந்த எத்து வேலையைச் செய்கிறார். அவர் ஒரு பானையில் சூடத்தைப் போட்டு அதைக் கொளுத்தி கொழுந்துவிட்டு எரியச் செய்து மகர ஜோதி என்று காட்டுகின்றார்.

பக்தியால் புத்தியை இழக்கும் மக்கள் அதனை உண்மையென்று நம்பி, தீப்பட்ட மெழுகுபோல் உருகுகின்றனர். ஒளி உமிழும் பட்டாசுகளையும் கொளுத்தி மக்களை நம்பச் செய்கின்றனர் என்று பிளிட்ஸ் ஏடு படங்களுடன் விரிவாக வெளிப்படுத்தி விட்டது.

கடந்த ஆண்டு தெகல்கா இதழும் இதுபற்றி விரிவாகவே எழுதியிருந்தது. மோசடியைக் கண்டு பிடித்த கேரளப் பகுத்தறிவாளர்கள்மீது வழக்குப் போடப்பட்டதாகவும், அது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது என்ற கூடுதல் தகவலையும் அது தெரிவித்திருந்தது.

1980-இல் - பொன்னம்பல மேட்டுக்கு எதிர்த்திசையில் திருச்சூரிலிருந்து எதிர்த் திசையில் விளக்கைக் கொளுத்திக் காட்டி அம்பலப்படுத்தினர் பகுத்தறிவாளர்கள் என்றும் தெகல்கா எழுதிற்று.

கடந்த ஆண்டு வெளிவந்த தகவல்கள் பக்தர்களை மிகவும் அதிர்ச்சிக்கு ஆளாக்கின.

சபரிமலைக் கோயிலின் காப்பாளர் பந்தளம் மகாராஜா குடும்பத்தைச் சேர்ந்த பி. ரவிவர்மா சொன்னதாவது: எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மூன்று தடவை கொளுத்த வேண்டும் என்று கூறி ஆள்களை அனுப்புவார்கள் என்று சொன்னார்.

அய்யப்பன் கோயிலின் தலைமைப் பூசாரி கண்டரேறு மகேஸ்வரரு, ஆமாம், ஆமாம் மகர விளக்கை மனிதன்தான் கொளுத்துகிறான் என்று ஒப்புக் கொண்டார். தேவஸ்வம் போர்டு தலைவர் கி.கே. குப்தனும் இதனை ஒப்புக் கொண்டார். எல்லா வற்றிற்கும் மேலாக கேரள மாநில அறநிலையத் துறை அமைச்சர் ஜி. சுதாகரனும் இதனை ஒப்புக் கொண்டுள்ளார்.


இந்தியப் பகுத்தறிவாளர் கழகத் தலைவராக விருந்த ஜோசப் எடமருகு அப்பொழுது கேரள மாநில முதல் அமைச்சராக விருந்த ஈ.கே. நாயனாரிடம் இந்த மோசடியை நேரில் விளக்கியபோது, எங்களுக்கு தெரியும்; ஆனால் இதில் நீங்கள் தலையிடாதீர்கள் என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி என்று கேரளாவில் மாறி மாறி வந்தாலும் இந்த மோசடியைக் காப்பாற்றுவதில்தான் கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றனர். மோசடி என்று தெரிந்திருந்தும் அதன் முகத்திரையைக் கிழிக்காமல் முகாரி பாடிக் கொண்டு இருக்கின்றனர்.

மக்கள் சுரண்டப்படுகிறார்கள் என்று நன்கு புரிந்திருந்தும், அந்தச் சூழ்ச்சி நடக்கட்டும் என்று நடைபாவாடை விரிக்கிறார்கள்.

இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பக்திப் போதையில் புத்தியைப் பறிகொடுத்த மக்கள் - காலத்தையும் பொருள்களையும் இந்த மோசடியை உண்மை என்று நம்பி கரியாக்குகிறார்களே என்ற கவலையும் பொறுப்பும் ஆள்வோரிடத்தில் காணப்பட வில்லை. மாறாக கேரளாவுக்கு இதன் மூலம் ஏராளமான வருவாய் கிடைக்கிறது; பணம் குவிகிறது - வியாபாரம் நன்கு நடக்கிறது என்ற சுயநல வெறியின் காரணமாக ஒரு மோசடிக்கு மகுடம் சூட்டப்படுகிறது.

1980-ஆம் ஆண்டு முதல் இந்த மோசடியின் முகமூடி கிழக்கப்பட்டாலும், கடந்த ஆண்டு கிடைத்த கூடுதல் தகவல்களும், உண்மைகளும், மிக மிக வெளிப்படையாக - மகரஜோதி பித்தலாட்டம் அம்ப லத்துக்கு வந்தது.

இதற்குப் பிறகு இந்த ஆண்டும் மகரஜோதி என்று விளம்பரம் செய்வதும் ஏடுகளும், இதழ்களும் பக்கம் பக்கமாக அய்யப்பன் மகிமை பற்றி மகர ஜோதியின் அருமை பற்றியும் அவை தொடர்பான சடங்குகள் குறித்தும் எழுதிக் குவிக்கிறார்கள் என்றால் இந்தக் கேவலத்தை என்னவென்று சொல்வது.

நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களில் பத்திரிகையும் ஒன்று என்று சொன்னாரே - பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். அந்தக் கூற்று நூற்றுக்கு கூறு உண்மை என்பது இப்பொழுது விளங்கிட வில்லையா?

இந்த மோசடி குறித்து நீதிமன்றத்திற்குச் செல்லக் கூடிய அவசியம்கூட ஏற்படலாம். ஆனாலும் நீதிபதிகள்கூட மூடநம்பிக்கையாளர்களாக அய்யப்ப பக்தர்களாக இருக்கும் பட்சத்தில் - நேர்மையான தீர்ப்பு கிடைக்குமா? என்பதும் அய்யப்பாடே!

மகரஜோதி விவகாரத்தின்மூலம் பகுத்தறிவாளர்களின் நேர்மையையும் வாய்மையையும் உணர்ந்து கொள்ளலாம்; அதே நேரத்தில் ஆன்மிகத்தின் அயோக்கியத்தனத்தின், பக்தியின் பரிதாபத்தையும், அரசியல்வாதிகளின் அடிமட்டமான போக்கையும் புரிந்து கொள்ளலாம் அல்லவா!

------------------ மின்சாரம் அவர்கள் 13-12-2008 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

2 comments:

அக்னி பார்வை said...

இப்பொழுது திருவண்னமலை தீபம் போல் தான் மகர ஜோதீயும், (ஒரு காலத்தில் திருவண்னமலை தீபமும் இப்படி மறைவாக ஏற்ற்ப்பட்டு பின்பு வெளிச்சத்திற்க்கு வந்ததுதான்)..அதனால் இந்த தீபம் விஷயம் தெரிந்தாலும் மக்கள் பக்த்தி சிறத்தியுடன் போய் த்ஹிபம் ஏற்றுவதை பார்பார்கள் (அது தானே திருவண்ணமலயிலும் நடக்கிறது)..எனவே சபரி மலை தீபத்தை விட சபரி மலையை பற்றிய முழு மூட நம்பிக்கையையே ஒழிக்க வேண்டும்.....போராடுவோம்...இப்பொழுது தான் சபரிமலை பற்றி ஒரு பதிவை போட்டேன்.....

தமிழ் ஓவியா said...

பொய்யப்பனைப் பற்றிய பதிவைப் படித்து கருத்தும் தெரிவித்துவிட்டேன் தோழர்.

மூடநம்பிக்கை எதுவானாலும் அதன் முதுகெலும்பை முறித்தெறிவோம்.

இப்பணியில் தங்களின் பங்கு கண்டு மகிழ்கிறேன்.

நன்றி தோழர்.