Search This Blog
22.12.08
அறிவித்துவிட்டு தான் நாங்கள் எப்பொழுதும் போராட்டத்திற்கே செல்லக் கூடியவர்கள்.
முதலமைச்சர் கலைஞருக்கு சங்கடத்தை உருவாக்கிட
திமுக காங்கிரஸ் உறவை பிளவுபடுத்திட
ஈழப் பிரச்சினையை திசை திருப்பிட
சில சக்திகள் முயல்கின்றனவோ என்று சந்தேகம்
செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் பேட்டி
திமுக - காங்கிரஸ் இடையே ஒரு பிளவை உருவாக்க, ஈழப் பிரச் சினையை திசை திருப்ப, கலை ஞர் அரசுக்கு இக்கட்டான ஒரு சூழ் நிலையை சிலர் உருவாக்கு கிறார்கள் என்ற சந்தேகம் எழுந் துள்ளது என்று கும்ப கோணத்தை அடுத்துள்ள அம்மா சத்திரம் ஊரில் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறியுள்ளார்.
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள அம்மாசத்திரம் என்ற ஊரில் செய்தியாளர் களிடம் திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:
அண்மைக் காலமாக சில வன்முறை போக்குகள்
அண்மைக்கால தமிழ் நாட்டிலே சில இடங்களிலே வன்முறைப் போக்குகள் திட்ட மிட்டுநடைபெற்று வருகின்றன. அதைப்பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது. சட்டம் ஒழுங்கு போன்ற எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், எந்தக் கட்சிக்காரராக இருந்தாலும், அல்லது எந்த அமைப்பைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், உரிய முறையில் அதை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வரும் பொழுது அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
மற்றவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது
மற்றவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வது என்பது விரும்பத்தகாத போக்கு. உதாரணத்திற்கு இப்பொழுது ஈழப் பிரச்சினையிலேயே ஏற்பட்டிருக்கக் கூடிய உணர்வுகள் என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதிலும் ஈழத் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியமாகும்.
கிளிநொச்சியை இதோ பிடித்து விடுகிறோம், அதோ பிடித்து விடுகிறோம் என்று சொல்லி சிங்கள இராணுவம் தவறான ஒரு பொய்ப் பிரச்சாரத்தை செய்து வருகிறது. கடந்த இரண்டு மாதமாக சிங்கள அரசு இப்படி ஒரு பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
திட்டமிட்டு திசை திருப்பல்
இப்படிப்பட்ட நேரத்தில் தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் கொள்கை மாறுபாடாக இருந்தாலும், ஒருங்கிணைந்து இருக்கக் கூடிய ஒரு கால கட்டத்திலே, இப்போது சிலர் குறிப்பாக இவைகள் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான ஒன்று என்று காங்கிரஸ் நண்பர்களும், அதை யொட்டி சில ஊடகங்களும் சில பத்திரிகைகளும் திசைதிருப்புவது திட்டமிட்ட ஒன்றாகும்.
இப்பொழுது தமிழகத்தில் எழுந்துள்ள உணர்ச்சி அநாதைகளாக ஆக்கப்பட்டிருக்கிறது. ஈழத் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே வாழ முடியாத அகதிகளாக ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். அங்குள்ள தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும். மூன்று லட்சம் தமிழர்களுக்கு மேலாக காடுகளிலே வனாந்தரங்களிலே விலங்குகளோடு வாழுகின்ற ஒரு கொடுமையான நிலையில் இருக்கின்றார்கள்.
கலைஞர் எடுத்த முயற்சி
அப்படிப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு உரிய மருந்து, உணவுப் பொருட்களை அனுப்ப வேண்டும் என்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பேசி, முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எடுத்த முயற்சி அனைத்துக் கட்சியினரும் சேர்ந்த முயற்சி காங்கிரஸ் கட்சி உட்பட சேர்ந்து ஈடுபட்டு எடுத்த முயற்சி அனைவரும் டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். பிரதமர் அவர்கள் வெளி யுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு நேரடியாக அனுப்புகிறோம் என்று சொல்லியிருக்கின்றார்.
இன்னும் இரண்டொரு நாளில் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு செல்லவிருக்கிறார்கள் என்ற செய்திகள் எல்லாம் வந்துகொண்டிருக்கின்றன.
தி.மு.க. ஆட்சிக்கு விரோதமான செயல்
இந்த நேரத்தில் சிலர் தி..மு.க. ஆட்சிக்கு விரோதமான செயலை செய்யவேண்டும்; தி.மு.க. ஆட்சிக்கு ஒரு இக்கட்டான நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக, திட்ட மிட்டு ஆங்காங்கே விடுதலைப்புலிகளைப்பற்றி கொச்சைப்படுத்தி பேசுகிறார்கள். ராஜீவ்காந்தி கொல்லப் பட்டது பற்றி பேசுகிறார்கள். ஈழத் தமிழர் உணர்ச்சியை திசை திருப்ப, நீர்த்துப்போக இப்படி சிலர் செய்கிறார்கள்.
முற்றாக திசை திருப்புவது
எங்கோ, யாரோ ஒரு சிலர் பேசிய ஒரு செய்தியை வைத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் நண்பர்கள் சிலர் ஆரம்பித்தார்கள். ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல் கைது நடவடிக்கை இருக்கும்போது சீமான் அவர்களின் காரை எரிப்பது போன்ற செயல்கள் மற்றவர்களிடம் வம்புக்குச் செல்வது போன்ற நிலைகள் எல்லாம் வருவது விரும்பத் தக்கதல்ல.
குறிப்பாக நேற்று நடந்த சம்பவங்கள் யாராக இருந்தாலும் சரி, சம்பந்தம் இல்லாமல் பிறருடைய அலுவலகங்களுக்குச் செல்வது, தலைவர்களுடைய உருவப் பொம்மைகளை எரிப்பது போன்ற பிரச்சினைகள் நடைபெற்று வருவது, ஈழத் தமிழர் பிரச்சினையை முற்றாக திசை திருப்புவதாகும்.
இதிலே இரண்டு நோக்கம் இருக்கிறது. ஒன்று ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஏற்பட்ட உணர்ச்சியை திசைதிருப்ப - இது ஏதோ விடுதலைப் புலிகளினுடைய தூண்டுதல் என் பதுபோல திசை திருப்ப வேண்டும் என்பது. மற்றொன்று தி.மு.க.விற்கும், காங்கிரசிற்கும் இடையே இருக்கக் கூடிய உறவை எப்படியாவது பிரித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு பல மாதங்களாக உள்ளார்ந்த முறையிலே சில முயற்சிகள் நடந்தன. டெல்லிக்காரர்களிடம் சென்று பார்த்தார்கள் - நடக்கவில்லை. அவர்களுடைய தலைமை அவைகளை ஏற்கவில்லை.
தி.மு.க. - காங்கிரஸ் உறவை பிரிக்க
இங்கே காங்கிரஸ் கட்சிக்குள்ளே இருக்கக் கூடிய கோஷ்டிகள் அமைப்புகள் சேர்ந்து ஒரு குழப்பத்தை உருவாக்க வேண்டும் என்று சொல்லக் கூடிய நிலையிலே தி.மு.க. - காங்கிரஸ் உறவை எப்படியாவது பாதிக்கச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு சில பின்னணிகள், நேற்று நடைபெற்ற சம்பவங்கள் இவைகளையெல்லாம் பார்க்கும்பொழுது சில சந்தேகங்கள் எங்களைப் போன்றவர்களுக்கு ஆழமாக இருக்கின்றன.
சம்பந்தமே இல்லாமல் என்னை கைது செய்யவேண்டுமென்று
இல்லாவிட்டால், சம்பந்தமே இல்லாமல், என்னைப் போன்றவர்களையெல்லாம் கைது செய்யவேண்டும் என்று கோஷம் இடவேண்டிய அவசியம் என்ன? அதை அவர்கள் தெளிவாகவே செய்திருக்கின்றார்கள்.
என்னையோ அல்லது யாரையோ கைது செய்வது அரசாங்கத்தைப் பொறுத்தது. கைது என்பவைகளுக்கு நாங்கள் பயப்படக்கூடியவர்கள் அல்ல. நான் ஏற்கெனவே நாற்பது முறைகளுக்கு மேல் சிறை சென்றிருக்கின்றேன்.
திராவிடர் கழகம் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளாது
என்றைக்கும் திராவிடர் கழகம் - சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளாது. எந்தக் கொள்கையாக இருந்தாலும் முன்னால் அறிவித்துவிட்டு தான் நாங்கள் எப்பொழுதும் போராட்டத்திற்கே செல்லக் கூடியவர்கள். அதே நேரத்திலே பொறுப்பான பதவியை வகிக் கக்கூடிய காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் தோழர் தங்கபாலு, அவர் மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கின்றார்.
இப்படி சில செய்திகள் வருகிறது என்றவுடனே தோழமை கட்சியிலே இருக்கக் கூடிய அவர் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டிருக்கின்றார். சட்டம் தன் கடமையை செய்த நிலையிலும் கூட காலையில் கைது செய்யப்பட்டு மாலையில் விடு தலையாகியிருக்கின்றார்.
ஒரு கட்சியின் தலைவரே சாலை மறியலில் ஈடுபடுவது என்ன நியாயம்?
ஒரு கட்சியினுடைய தலைவர் கைது என்றவுடன் உடனே அந்த கட்சியினுடைய தொண்டர்கள் உணர்ச்சி வயப்படுவது என்பது இயல்பாக ஏற்படக் கூடிய ஒரு நிலை.
கலைஞர் ஆட்சிக்கு சங்கடத்தை உருவாக்கக் கூடிய
அமைதிப் பூங்காவாக இருக்கக் கூடிய தமிழ்நாட்டை அமளிக் காடாக்க வேண்டும், அதன் மூலம் கலைஞர் தலைமையில் இருக்கக் கூடிய அரசுக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்க வேண்டும், திமுக காங்கிரஸ் உறவைப் பிளவுபடுத்த வேண்டும் என்று திட்டமிட்டு இந்தக் காரியங்கள் நடைபெற்றிருக்கின்றன.
டெல்லி தலைமை ஆராய வேண்டும்
இதற்குரிய பின்னணியை டெல்லி தலைமை ஆராய வேண்டும். இப்பொழுது இருக்கக் கூடிய நிலையில் யார் தவறு செய்தாலும் அவர்கள் எந்தக் கட்சியினர் என்றுகூட பார்க்காமல் முதல்வர் கலைஞர் அவர்கள் உடனடியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவர்களைக் கைதும் செய்து வருகிறார். உடனடியாக அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துகிறார். இந்தப் பிரச்சனையை சில ஊர்களில் உருவாக்கி தொண்டர்கள் மத்தியிலே தேவையற்ற ஒரு கசப்புணர்வை ஏற்படுத்தி - தொண்டர்கள் மத்தியிலே ஒரு பிளவை ஏற்படுத்தி - அதன் மூலம் தாங்கள் நினைக்கக் கூடிய எண்ணத்தை நிறை வேற்றிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்களோ என்கின்ற சந்தேகம் ஏற்படுகிறது.
இதற்கு டெல்லியில் உள்ள தலைமை முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்குத் தேவையான நடவடிக்கைகளை இன்னும் தீவிரமாக எடுக்க வேண்டும்.
ஏற்கெனவே பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் அளித்த வாக்குறுதிபடி பிரணாப் முகர்ஜி அவர்கள் இலங்கைக்குச் சென்று அங்கே போர் நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
தேவையில்லாமல் பேச வேண்டிய அவசியமில்லை
செய்தியாளர்: சீமானை மறுபடியும் கைது செய்திருக்கிறார்களே.
தமிழர் தலைவர்: தேவை இல்லாமல் பேச வேண்டிய அவசியத்தை யாரும் உருவாக்க வேண்டியதில்லை. இந்தப் பிரச்சினை நீதிமன்றத்தில் இருப்பதால் அதைப்பற்றி தேவையில்லாமல் நான் பதில் சொல்ல வேண்டிய தேவையும் இல்லை.
இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பேட்டி அளித்தார்.
--------------------------நன்றி:"விடுதலை" 21-12-2008
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment