Search This Blog

6.12.08

ஒடுக்கும் சக்திகளை எதிர்த்து ஒடுக்கப்பட்டோர் போராடும் போது மார்க்ஸிஸ்ட்டுகள் யார் பக்கம்?


ஜெ.வி.பி.யின் கிளையா சி.பி.எம்?தீக்கதிர் நாள் ஏட்டில் (19.11.2008) "இலங்கைத் தமிழர் பிரச்சினையின் இன்னொரு பக்கம்" என்ற தலைப்பில் தோழர் வே. மீனாட்சிசுந்தரம் அவர்கள் கட்டுரை ஒன்றினை எழுதினார்.

அதற்கு மறுப்பு அளிக்கும் வகையில் "விடுதலை" ஞாயிறு மலரில் (22.11.2008) "தீக்கதிரா" - துக்ளக்கா? என்ற தலைப் பில் கட்டுரை தீட்டப்பட்டது.

ஒன்பது நாள்கள் கழித்து "தீக்கதிரில்" "இலங்கையும் இனப்பிரச்சினையும்" என்ற தலைப்பில் தோழர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் பதில் அளிக்க முயற்சி செய்துள்ளார்.

"விடுதலை" எழுப்பிய வினாக்களுக்கோ, குற்றச்சாற்றுகளுக்கோ பதில் அளிக்கப்படவில்லை! மாறாக தன்மீது அனுதாபத்தை ஈர்த்துக் கொள்ள பரிதாப மான ஒரு முயற்சியை மேற்கொண்டி ருப்பது பரிதாபமே!

"தொட்டதற்கெல்லாம் அமெரிக்காவை விமர்சிக்கும் காம்ரேட் விடுதலைப் புலிகள் விஷயத்தில் மட்டும் அமெரிக்காவின் உளவுத்துறையின் அறிக்கையைத் தனக்குச் சாதகமாக அமைத்துக் கொள்வதுதான் வேடிக்கை என்று "விடுதலை" எழுதியிருந்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் கூறியதை வாந்தி எடுக்கலாமா என்று "விடுதலை" எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. "விடுதலை" பயன்படுத்தாத வார்த்தையை ("விடுதலை" பயன்படுத்திய சொல் "வேடிக்கை" என்பதே) "தீக்கதிர்" குறிப்பிடுவதன் பொருள் என்ன?"

"விடுதலை" தரமற்று எழுதியுள்ளது என்று பொய்யாகக் காட்டி தன் மீது அனுதாபப் பார்வை வாசகர்கள் மத்தியிலிருந்து கிடைக்க வேண்டும் என்ற மலிவான யுக்தியைக் கையாண்டிருப்பது பரிதாபமே!

"துக்ளக்" சொன்னாலும் அமெரிக்கா சொன்னாலும் உண்மையைச் சொன்னால் எடுத்துக் கொள்ளக் கூடாதா என்ற பாணியில் பதில் சொல்லப்பட்டு இருக்கிறது.

ஈழத் தமிழர் பிரச்சினையில் "துக்ளக்" கின் பார்வை என்ன? தொடர்ந்து எப்படிப்பட்ட நஞ்சை கக்கிக் கொண்டிருக்கிறது என்பதைச் சரிவர உணரும் பட்சத்தில் சாதகமாக இருப்பதுபோல காட்டிக் கொள்ளும் இடங்களில் போதிய விழிப்புணர்வும், கவனமும் தேவைப்படுமே!

அதேபோல அமெரிக்கா ஒன்று கூறுகிறது என்றால் அது எந்தப் பின்புலத்தில் கூறுகிறது என்பதைக் கவனிக்க வேண்டாமா?

இலங்கையில் சண்டை நீடிக்கட்டும் அல்லது அந்த நாடு துண்டாகப் போகட்டும் என்று காத்திருக்கும் பட்டியலில் உள்ள சக்திகளில் ஒன்றான அமெரிக்க அரசின் உளவுத்துறை என்ற பீடிகை போட்டு தானே "தீக்கதிர்" எழுதுகிறது!! அந்தப் பீடிகையிலேயே அமெரிக்காவின் நோக்கம் என்னவென்று புரிகிறபோது அதன் உளவுத்துறை அறிக்கையை எப்படி தனக்கு சாதகமாக தீக்கதிர் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது?

விடுதலைப்புலிகளின்மீது கோபத்தால் அமெரிக்கா நண்பனாகிவிட முடியுமா? "விடுதலை" இதழில் வந்த கட்டுரையில் மார்க்ஸிஸ்ட் எதிர்ப்பு நெடி அடிக்கிறது. சுதந்திரத்திற்கு முன்பிருந்தே கடல்சார் ஆய்வுக் கழகம் வங்கத்தில் இருக்கிறது. அதனைப் பல்கலைக் கழக மாக உயர்த்த நிதி ஒதுக்கீடும் அனுமதியும் மேற்கு வங்க உறுப்பினர்கள் கோரினர். சென்னையில் புதிதாக துவங்குவதை தடுக்கவில்லை. இதுதான் உண்மை."

"மாநிலத்திற்கு அதிக நிதியும், அதிகாரமும் கோரும் உரிமை மேற்கு வங்கத்திற்கு இல்லை என்பதா? மாநில சுயாட்சி ஆதரவாளர்களிடமிருந்து இத்தகைய கருத்து முன் வைக்கப்படுவது வியப்பளிக் கிறது" என்று "விடுதலை" ஞாயிறு மலர் குற்றஞ்சாட்டிய ஒரு முக்கிய பகுதியை மறைத்து எழுதுவது சரியல்ல.

மாநில உரிமையைத் தாராளமாகக் கேட்கட்டும். அதைக் குற்றங் கூறவில்லை.

கடல்சார் பல்கலைக் கழகம் கொல்கத்தாவிற்குக் கிடைக்காமல் சென்னைக்குக் கிடைக்கிறது என்றவுடன் ஒரு மத்திய அமைச்சரின் மசோதாவை வன்முறையில் பிடுங்கிய மாநிலப் பற்றாளர்கள் என்ற "விடுதலை"யின் வரியை மறைத்தது ஏன்?

வன்முறையில் பிடுங்குவதுதான் மாநிலத்திற்கு அதிக நிதியும் அதிகாரமும் கோரும் மார்க்ஸிய முறை என்று புதிய அகராதியைத் தயாரித்துள்ளார்களா என்று நமக்குத் தெரிய நியாயம் இல்லை.
"புலிகளைத் தவிர மற்ற தமிழ் அமைப்புகள் உலக அனுபவத்தைப் பார்த்து ஒன்றுபட்ட இலங்கையில் சுயாட்சி அமைப்பு என்ற கோட்பாட்டை ஏற்கிறபோது இங்குள்ளவர்கள் தனிஈழம் தான் தீர்வு என்று முழங்குவது சரிதானா?"

இப்படி ஒரு கேள்வியையும் காம்ரேட் மீனாட்சி சுந்தரம் எழுப்பியுள்ளார்.

இதைப் படித்தவுடன் உண்மையிலேயே ஆச்சரியமாகத் தானிருந்தது. எந்தக் காலச் சரித்திரத்தை இவர் எழுதிக் கொண்டிருக்கிறார்? என்று நினைக்கும் போது பரிதாபமாகவும் இருந்தது.

ஒரு கால கட்டத்தில் ஈழத் தந்தை செல்வா அவர்கள் கூட அவ்வாறு கேட்டது உண்மைதான் மறுக்கவில்லை. காந்தியவாதியாக நின்று போராடிப் பார்த்து - பன்றிகள் முன் முத்துகளைக் கொட்டிப் பயனில்லை என்பதை அனுபவத்தில் உணர்ந்து தனிஈழம் தான் தமிழர்களின் வாழ்வுக்கு உத்தரவாதம் என்ற முடிவுக்கு வந்த வரலாறெல்லாம் தீக்கதிர் வட்டாரத்துக்குத் தெரியாதா?

தனிஈழத்தை முன்வைத்து நாடாளு மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்திலே தனிஈழத் தீர்மா னத்தைமுன் வைத்தாரா இல்லையா?

ஒருவர் முன் வைத்தால் போதுமா என்று ஆணவத்தோடு ஆளும் தரப்பில் கேலி செய்யப்பட்டது - வினாவும் எழுப்பப்பட்டது.

அடுத்த தேர்தலில் தந்தை செல்வா என்ன செய்தார்? அதே தனிஈழத்தை முன்வைத்து தேர்தலில் நின்று 74.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்று தேர்தலில் நின்ற 18 பேரும் அமோக வெற்றி பெற்று கம்பீரமாக நாடாளுமன்ற அவைக்குள் நுழைந்தனரே - அந்த வரலாறெல்லாம் தெரியாமல் எழுத லாமா?

16.11.2008 நாளிட்ட "கல்கி" இதழில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செய லாளரும் இலங்கை நாடாளுமன்ற உறுப் பினருமான சேனாதிராஜா அவர்கள் அளித்த பேட்டி தீக்கதிரில் எழுப்பப் பட்ட அநேக வினாக்களுக்கும், புரியா மைக்கும் பரந்த வெளிச்சமாக விடை யளிக்கக் கூடியதாகும்.

"கல்கி" இதழுக்கு (16.11.2008) சேனாதி ராஜா எம்.பி., அளித்த பேட்டியிலிருந்து....

1949-இல் தமிழரசுக் கட்சியைத் துவக்கிய தந்தை செல்வா 2 கோடி மக்கள் தொகையில் 30 சதவீதம் தமிழர்கள் ஆவர். 1956-இல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று அரசால் அறிவிக்கப்பட்டது. 1960-இல் நீதிமன்ற மொழியாக சிங்களம் மட்டுமே என்று அறிவிக்கப்பட்டது.

தமிழ் மாணவர்கள் உயர்கல்வி பெற வேண்டும் என்றால் சிங்கள மாணவர்களை விட, அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று ஆணை (1970). தமிழர் கள் பகுதியில் சிங்களவர் குடியேற்றம் செய்யப்பட்டது. 10 லட்சம் தமிழர்களுக்கு வாக்குரிமைப் பறிக்கப்பட்டது.

அனைத்துத் தமிழ் அமைப்புகளும் ஒன்றுகூடி வட்டுக்கோட்டை என்னும் இடத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் செய்யப்பட்டது. இனி சிங்கள இனவாத அரசின்கீழ் செயல்பட முடியாது என்று முடிவு செய்யப்பட்டது. தமிழர்கள் வடக்கு, கிழக்குப் பகுதிகள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கும் போராட வும் முடிவு செய்யப்பட்டது. சாத்மிக போராட்டம் தொடங்கப்பட்டது (1976) 1981 யாழ்ப்பாண நூலகம் சிங்களவர்களால் எரிக்கப்பட்டது. 1983 இல் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. புலிகள் ஆயுதம் ஏந்தும் நிலை உருவாக்கப்பட்டது. அமிர்தலிங்கம் உட்பட மிதவாதத் தலைவர்கள் எடுத்த முடிவுகள் அடிப்படையில் தனிஈழப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது (1976).

இலங்கைப் பரப்பில் 29 சதவீதம் தமிழ்ப் பகுதிகள்; கிழக்கில் பெரும் பான்மைப் பகுதிகளிலும் வடக்கில் 30 சதவீதம் பகுதிகளிலும் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். இராணுவத்தில் 100 சதவீதம் சிங்களவர்கள், காவல்துறையில் தமிழர்கள் இரண்டு சதவீதமும் ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம், அரசியல் சட்டம் திருத்தப்பட்டது. சிங்களமும், தமிழும் ஆட்சி மொழியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் வரவில்லை.

சர்வக் கட்சிக் குழு போட்டு இருப்ப தாக ராஜபக்சே அறிவித்துள்ளார்.ஆனால் 22 தமிழ்ப் பகுதி எம்.பி.க்கள் இருந்தும், அவர் களில் ஒருவரைக்கூட அந்தக் குழு வில் அமர்த்தம் செய்யவில்லை. உலக அளவில் 1990-க்குப் பிறகு 23 தேசிய இனங்கள் தனி நாடுகளாகியுள்ளன.

(16.11.2008 நாளிட்ட கல்கி இதழில் சேனாதிராஜா தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் பேட்டியில் கூறப்பட்டதன் சுருக்கம் இது பக்கம் 8,9)

சின்னஞ்சிறு நாடுகள் எல்லாம் இணைப்புகளை விரும்புகின்றன என்ற ஓர் நீண்ட பட் டியலைத் தந்து அச்சுறுத்தப் பார்க்கும் பகுதிகளுக்கும் சேர்த்து தோழர் சேனாதி ராஜா கல்கியில் பதில் அளித்துள்ளார். தனி ஈழத்தை விடுதலைப்புலிகள் எழுப்புவதற்கு முன்பிருந்தே அதற்கான பிறப்பு நிகழ்ந்து விட்டது என்பதை உறுதியாகத் தீக்கதிர் இப்பொழுதாவது உணர வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

ஜியார்ஜியா மீது ருசியா போர் தொடுத்தது - குண்டு மாரி பொழிந்தது. இத்தாக்குதலை உலக நாடுகள் கண்டித்தன. அய். நா.வும் எச்சரித்தது; அவ்வாறே படைகள் திரும்பப் பெறப்பட் டன. இது நம் கண்முன் இப்பொழுது நடந்த ஒன்றுதான். இது போதிக்கும் பாடத்தைப் பயில வேண்டாமா?

விடுதலை ஏடு எதையோ மறைக்கப் பார்ப்பதாக ஒரு புதிரைப் போட்டுள்ளது தீக்கதிர் கட்டுரை. அந்தப் பகுதி இதோ: இலங்கையில் தமிழ் மக்கள் சம உரிமை பெற வேண்டும். அனைத்து வகையில் சம அந்தஸ்து பெற வேண்டும் என்பதில் மார்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அழுத்தமாக தனது கோரிக் கையை முன் வைக்கிறது. ஆனால் அதே நேரத்தில் இலங்கைத் தமிழ் மக்களுக்கான ஆதரவு என்பது விடுதலைப்புலிகளுக்கான ஆதரவாகத் தானிருக்க வேண்டும் என்ற விவாதத்தை நிராகரிக் கிறது. இலங்கைத் தமிழ் மக்களில் கூட ஏராளமானோர் விடு தலைப்புலிகளுக்கு எதிராக கடும் அதிருப்தியில் உள்ளனர் என் பதை விடுதலை மறைக்க முடியாது என்பது தீக்கதிர் குறிப்பிடும் பகுதியாகும்.

இந்தக் குற்றச் சாற்றுக்கு நாம் பதில் சொல்வதைவிட இலங்கை கம்யூனிஸ்டுக் கட்சியின் பொதுச் செயலாளரைவிட்டே பதில் சொல்ல வைத்தால் சிறப்பானதாக இருக்கும் அல்லவா? அதிலும் அந்தப் பேட்டி இதே தீக்கதிரில் வெளிவந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டினால் எவ்வளவு சிறப்பாக இருக்கும். அதே நேரத்திலே தீக்கதிர் வட்டாரத்திலே அதிர்ச்சியாகக்கூட இருக்கும்.

தேசாபிமானியிலிருந்து தோழர் வீரா அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு தீக்கதிரில் (28.3.2002 பக்கம் 6) வெளிவந்த பேட்டி அது!

ஆந்திர மாநிலம் அய்தராபாத்தில் மார்க்சிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்திய மாநாட்டுக்கு - வந்த அக்கட்சியின் இலங்கைத் தீவின் பொதுச் செயலாளர் ஜே. குணசேகரா பேட்டியிலிருந்து சில தகவல்கள் இதோ:

கேள்வி: இலங்கையில் தமிழ் மக்களுக்கு நீதி மறுப்பு என்பது எந்தெந்த வடிவில் ஏற்பட்டது?

பதில்: முக்கியமானது மொழி விஷயத்தில்தான். ஏகாதிபத்திய ஆதிக்க காலத்தில் ஆங்கிலம்தான் அதிகாரப் பூர்வ மொழியாக இருந்தது. சுதந்திரத்திற்குப் பின் அதிகாரத்திற்கு வந்த அய்க்கிய தேசியக் கட்சி சிங்களத்தை அதி காரப்பூர்வ மொழியாக்கியது. அக்காலத்திலேயே சிங்களத் துடன் தமிழையும் தேசிய மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று இடதுசாரி வலியுறுத்தியது.

பண்டார நாயகா அதிகாரத்திற்கு வந்தபின் பிரதேச மொழியை அங்கீகரிப்பதாகக் கூறினார். ஆனால், சிங்கள தீவிர வாதிகள் அனுமதிக்கவில்லை. 1987-இல் ராஜீவ்காந்தி தலை யீட்டு மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தினார். அதுவும் வெற்றி பெறவில்லை. தமிழை அங்கீ கரிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறினாலும், அது அமல்படுத்தப்படவில்லை. அன்று நாடாளுமன்றத்தில் தமி ழுக்கு ஆதரவாக வாக்களித்தவன் நான். சிங்களரிடமிருந்து இதற் காக பெரும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது.

மொழிப்பிரச்சினையைப் போலவே முக்கியப் பிரச்சினையாக இருப்பது, வேலை வாய்ப்புகள் சம்பந்தப்பட்ட பிரச்சி னையாகும். வேலை வழங்குவதில் தமிழருக்கு பாரபட்சம் காட்டப் படுவதுண்டு. 1977-ல் ஆட்சிக்கு வந்த அய்க்கிய தேசிய கட்சி எம்.பி.க்களுக்கு வேலை வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது. இந்தியாவில் எம்.பி.க்கள் நிதி என்று இருப்பதுபோல எம்.பி.க் களில் மிகப் பெரும்பாலானவர் களும் சிங்களர் ஆவர். அதனால் வேலை வாய்ப்பும் சிங்களருக்கே சென்றது.

இந்த பாரபட்சத்தை சகித்துக் கொள்ள முடியாமல் தான் 1983-ல் எல்டிடிஇ உருவானது. பயங்கரவாதத்தை துவக்கியது. எல்டிடிஇயை கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. ஆனால், எல்டிடிஇயும் அதன் தீவிரவாதமும் உருவானதற்கு காரணம் சிங்கள வகுப்புவாதமே ஆகும்.
- இலங்கைக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பொதுச் செயலாளர் இலங்கைத் தீவில் நிகழும் யதார்த்தத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

விடுதலைக்குப் பதில் சொல்ல கோதாவுக்குள் குதிப்பது அப்புறம் இருக்கட்டும் இலங்கைக் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளருக்கு அல்லவா முதலில் பதில் சொல்ல வேண்டிய நெருக்கடி தீக்கதிருக்கு ஏற்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் உருவான தற்கும், ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியம் ஏற்பட்டதற்கும் காரணங்கள் காலத்தின் கட்டாயமே! வரலாறு தரும் இந்தப் பாடத்தை மார்க்ஸியத்திலிருந்து தெரிந்து கொள்ள வேண்டாமா? சமுதாய விஞ்ஞானம் பற்றியெல்லாம் வானத்தை வளைத்துப் பேசக் கூடியவர்களுக்கு இந்த உண்மை தெரியாமல் போனது ஏன்? காம்ரேட் குணசேகராவின் விளக்கத்திற்கு பிறகாவது நம் காம்ரேடுகள் தெளிவு பெறுவார்களாக!

விடுதலைப்புலிகள் தனிமைப் படுத்தப்பட்டு விட்டனர். அவர்களுக்கு மக்கள் ஆதரவு கிடை யாது என்ற குற்றச்சாற்றும் வைக்கப்பட்டுள்ளது.

அதற்கும் தோழர் குணசேக ராவே பதில் சொல்லியிருக்கிறார். அதுவும் அதேதீக்கதிர் ஏட்டில் தான் இடம் பெற்று இருக்கிறது.

கேள்வி: தமிழ் மக்கள் எல்.டி.டி.இ -யைத் தான் ஆதரிக்கிறார்களா?

பதில்: அதில் என்ன சந்தேகம்? மற்ற தமிழ்க் குழுக்கள் பலவும் பெயரளவுக்குத் தான் உள்ளன
என்றும் பதில் சொல்லியிருக்கிறார்.

ஒரு இனம் தெரியாத வெறுப்பு ஒரு இனத்தைப் பாது காத்திட ஆயுதம் ஏந்திய போராளிகள் தோழர்கள்மீது புரிதல் இல்லாமையைத் தோற்றுவித்து விட்டது - பரிதாபமே!

இலங்கைக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பொதுச் செயலாளர் பேட்டியில் - தமிழ்த்தேசிய இனப் பிரச்சனை என்பதை மிகவும் சரியாகச் சுட்டிக் காட்டியுள்ளார். தோழர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் இரண்டு கட்டுரைகளிலும் மிகவும் விழிப்பாக அந்தச் சொல்லாடலை கவனமாகத் தவிர்த்திருப்பதைக் கவனிக்க வேண்டும். அந்தச் சொல்லைப் பயன்படுத்தினால் லெனின் பார்வையில் சிக்கிக் கொள்ள நேரிடும் என்ற அச்சம் ஒரு வகையில் காரணமாக இருக்கக் கூடும்.

கேள்வி: ஒரு நாட்டில் தேசிய இனங்களிடையே சமத்துவம் இல்லாதபோது அங்கு மார்க்ஸியவாதிகளின் பார்வை என்ன?

லெனின்: தேசிய இனங்களின், மொழிகளில் சமத்துவத்தை அங்கீகரிக்காத, எதிர்த்துப் போரா டாத எவரும் எல்லாவிதமான சமத்துவமின்மையையும் எதிர்த்துப் போராடாத எவரும் மார்க் ஸியவாதியல்ல ஜனநாயகவாதியும்கூட அல்ல. அது சந்தேகத்துக்கு இடமில்லாதது என்கிறார் லெனின்.

இதற்கு ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் காம்ரேடுகள் முரண்டு பிடிப்பார்களேயானால் இந்தக் கால கட்டத்தில் அவர்கள் செய்யும் மற்றொரு மகத்தான தவறாகவே இருக்க முடியும். லெனின் பார்வையில் மார்க்ஸிய வாதிகளே அல்ல என்ற நிலை தான் ஏற்படும்.

மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரியவில்லையா? என விடுதலை கட்டுரை கேட்கிறது. அவர் கள் இனவெறியைத் தூண்டி சண்டைபோட்டு மக்களைக் கொன்று பொருளாதாரத்தைச் சீரழித்து பிரியவில்லை என்பது தான் உண்மை. சிங்கப்பூர் அனுபவம் இங்கு பொருந்தாது என் பதையே இலங்கையின் கடந்த 60 ஆண்டு கால அனுபவம் உணர்த்துகிறது என்கிறது தீக்கதிர் கட்டுரை.

சண்டை போட்டுக் கொள்ளாமல் இணக்கமாக இருந்தவர்களே பிரிந்து தனித்தனியே செல் லும்போது தீக்கதிர் ஒப்புக் கொண்டபடியே கடந்த 60 ஆண்டு காலம் ஒத்துப் போக முடியாமல் சதா சண்டை போட்டுக் கொண்டு பொருளாதார இழப்பு உட்பட பல தொல்லை களுக்கு ஆளாகி வரும் இலங்கை யிலே இன, மொழி, பண்பாட்டு அடிப்படையிலே ஈழம் பிரிவது தானே நியாயம்?

பொத்தாம் பொதுவாக இன வெறியைத் தூண்டி என்ற சொல்லை தீக்கதிர் பயன்படுத் துகிறது. தாக்குகிறவனையும் தாக்கப்படுபவனையும் சம தட்டில், சமப் பார்வையில் பார்ப்பதுதான் மார்க்ஸியமா? சிங்கள இனவாதம் தான் எதிர்ப்புக்குக் காரணம் விடுதலைப் புலிகள் தோன்றிடக் காரணம் என்று பிரச்சினையை அன்றாடம் நேரில் பார்க்கின்ற இலங்கைக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பொதுச்செயலாளர் கூறுகிறார். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள மார்க்ஸிஸ்டுகளோ சிங்கள இனவாதத்தையும், அந்த இன வாதத்தால் மொழி, கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் முதலிய வற்றில் பாதிப்புக்கு ஆளாகிய தமிழர்களையும், அவர்களின் உரிமைக்காகப் போராடுகிற வர்களையும் ஒரே பார்வையிலும் பார்க்கலாமா? அவர்களுக்குப் புரியும்படி சொல்ல வேண்டுமா னால் டாட்டாவையும் டாட்டா நகரில் உழைப்பை விற்று அன் றாட வாழ்க்கைக்காகப் போராடும் கூலித் தொழிலாளியையும் சமதட்டில் வைத்துப் பார்ப்பதற்குச் சமம் இது.

தமிழன் மாமிசம் கிடைக்கும் என்று போர்டு போடுபவனையும், மாமிசமாகத் தொங்குகிற மனிதனையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பதைவிட குரூரம் வேறு ஒன்று இருக்க முடியுமா? ஒடுக்கும் சக்திகளை எதிர்த்து ஒடுக்கப்பட்டோர் போராடும் போது மார்க்ஸிஸ்ட்டுகள் யார் பக்கம்?

நவீன காலத்தில் ஒரு இனத்திற்கு ஒரு நாடு என்ற கோட்பாடு மறைந்து வருகிறது என்று போதனை செய்திகள் ....

15 மாநிலங்களைக் கொண்ட சோவியத் யூனியன் என்னாயிற்று என்பதை மார்க்ஸிட்டுகளுக்கு நினைவூட்ட வேண்டுமா? கம்யூனிஸ்டு நாடான செக்கோஸ் லோவேகியா இருகூறாகப் பிரிய வேண்டிய அவசியம் என்ன?

இந்த எடுத்துக்காட்டுகளே கிடைக்காமல் போனால்கூட, தனிஈழம் பிரிவதற்கான நியாயங் களும் நிர்ப்பந்தங்களும் ஆயிரம் ஆயிரம் உண்டே!

அந்த முடிவை தமிழ்நாட்டிலிருந்து யாரும் அவர்கள்மீது திணிக்கவில்லை என்பதை முதலாவதாக மார்க்ஸிஸ்டுகள் உணர வேண்டும். சுய நிர்ணய உரிமை என்று கோரிக்கையை முன் வைத்துத் தொடங்கிய செல்வா முதற்கொண்டு புலிகள் வரை தனிஈழம் கேட்கிறார்கள் என்றால் அதற்கான காரணத்தை உணர வேண்டாமா?

சிங்களம்தான் ஆட்சி மொழி என்று சட்டமே இயற்றியாகி விட்டது. சிங்களவர்தான் பவுத்த மதத்தைச் சார்ந்தவர்தான் ஜனாதி பதியாக வர முடியும் என்ற நிலை யும் சட்டரீதியாக ஆக்கப்பட்டு விட்டது. இந்தநாடு சிங்களவர்களின் நாடுதான் என்று அந்நாட்டின் இராணுவத்தின் தலைவர் சரத் பொன்சேகா பேட்டி கொடுக்கிறார். (ஈழச்சுதந்திரன் நவ.2008)

இதற்குப் பின்பும் இணைந்து வாழ எங்கே இடம் இருக்கிறது? இவற்றையெல்லாம் இழந்து கொத்தடிமையாக தமிழர்கள் இருந்துவிட்டுப் போக வேண்டியதுதானே என்று உபதேசம் செய்கிறதா சி.பி.எம்?

சிறுபான்மை மக்களைப் பார்த்து சங்பரிவார்க் கூறும் வழி முறைதானே இது?

விடுதலை எழுப்பிய இந்த முக்கியமான வினாவுக்கு தீக்கதிரில் எழுதப்பட்ட பதில் கட்டுரையில் பதிலே இல்லையே!

பகுத்தறிவை விசுவாசத்தோடு பரப்பும் விடுதலை இனவெறி அரசியலையும், மூடநம்பிக்கை யாகக் கருத வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம் என்கிறது தீக்கதிர்.

பகுத்தறிவை விசுவாசத்தோடு விடுதலை பரப்புகிறது என்று கூறியதற்கு நன்றி! தீபாவளி மலரை தீக்கதிர் வெளியிட்டு வருவதால் பகுத்தறிவை விசுவாசத்தோடு பரப்புவதாக தீக்கதிர் உரிமை கொண்டாட முடியாதல்லவா!


இனவெறி அரசியலையும் மூடநம்பிக்கையாகக் கருத வேண்டும் என்கிறது தீக்கதிர்.

ஈழத் தமிழர் தங்களின் மொழி, பண்பாடு, மனித உரிமை சுயமரியாதை இவற்றை ஒரு பேரினவாத அரசிடமிருந்தும், பவுத்த சிங்களவாத மூர்க்கத்தனத் திலிருந்தும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடுவது - ஆயுதம் தாங்குவது என்பது இன வெறியும் அல்ல - மூடநம்பிக்கையும் அல்ல என்கிற பால பாடத்தை தீக்கதிர் படித்துக் கொள்வது நல்லது.

இனவெறி பிடித்த பாசிஸ்டு ஜெ.வி.பி - இலங்கையிலே மார்க்ஸியம் - லெனினியம் பேசுகிறது. அந்த ஜெ.வி.பி.யை தம் மாநாடுகளுக்கெல்லாம் சிறப்பு விருந்தினராக அழைத்துப் பொன்னாடை போர்த்திப் பாராட்டி, சீராட்டுகிறது. இந்திய மார்க்ஸிஸ்ட்டுக் கட்சி. இந்த நிலையில், ஈழத் தமிழர் பிரச்சினையில் இங்குள்ள மார்க்ஸிஸ்ட்டுக் கட்சியின் பார்வை புரட்சிகரமாகயிருக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?


--------------------- 6-12-2008 - "விடுதலை" ஞாயிறுமலரில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

0 comments: