Search This Blog

16.12.08

பார்ப்பனிய, மேல் ஜாதிகளின் சதியை முறியடிப்போம்


* பொருளாதார அளவுகோல் அரசியல் சட்டத்தில் கிடையாது

* "கிரீமிலேயர்" மறைமுகமான சமூக அநீதி

* மேல் அடுக்குக்கும் இல்லை; கீழ் அடுக்குக்கும் இல்லை; நடுவில் இருப்பவர்களுக்கு மட்டும் ஏன்?

பார்ப்பனிய, மேல் ஜாதிகளின் சதியை முறியடிப்போம்


சென்னையிலும், மாவட்டத் தலைநகர்களிலும்-மத்திய அரசு
அலுவலகங்கள் முன்பு டிசம்பர் 29 இல் மறியல் அறப்போர்

பிற்படுத்தப்பட்டவர்களே அணி திரண்டு வாரீர்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை


பொருளாதார அளவுகோல் அரசியல் சட்டத்தில் கிடையாது; கிரீமிலேயர் எனக் கூறி இட ஒதுக்கீடைத் தடுக்கும் பார்ப்பனிய - மேல் ஜாதிகளின் சதியை முறியடிக்க மாவட்டத் தலைநகர்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள்முன்பு டிசம்பர் 29 இல் மறியல் அறப்போர் நடத்தப்படும் என்றும், இவ்வறப்போராட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டவர்கள் அணி திரளவேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

பிற்படுத்தப்பட்ட (சமுதாயத்தவர்) ஜாதிகள் நாட்டில் உள்ள மக்கள் தொகையில் சுமார் 60 விழுக்காட்டினர் ஆவார்கள்; அதாவது 60 கோடி மக்கள். இவர்களுக்கு காலங்காலமாக மறுக்கப்பட்ட சமூகநீதி - இட ஒதுக்கீடு இந்திய அரசியல் சட்டத்தில் முதலில் வேலை வாய்ப்புகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடுக்கு வழிவகை செய்யப்பட்டது.

ரகசிய கூட்டு ஒப்பந்தம் காரணமாக...

பிறகு தந்தை பெரியார் அவர்களது போராட்டத்தின் விளைவாக 1951 இல் இந்திய அரசியல் சட்டம் முதல் முறையாக திருத்தப்பட்டு, கல்வியிலும் இட ஒதுக்கீடு 15(4) என்ற சட்டப் பிரிவு புகுத்தப்பட்டதன் விளைவாக, மத்தியக் கல்வி நிலையங்களிலும் இட ஒதுக்கீடு கிடைக்க சட்டம் வழிவகுத்தது; என்றாலும், கிராமங்களில் பாமர மக்கள் பழமொழியில் கூறுவதுபோல், சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுப்பதில்லை என்பதற்கொப்ப, 1951-லிருந்து 2008 வரை அது நடைமுறைப்படுத்தவில்லை. மத்தியக் கல்வி அமைச்சர் திரு. அர்ஜூன்சிங் முயற்சியாலும், தி.க., தி.மு.க. மற்றும் சமூகநீதி அமைப்புகளின் இடைவிடாத வற்புறுத்துதல்கள், போராட்டங்களாலும் தான் தனிச் சட்டம் வந்து, அதுவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் படலம் தாண்டி, 27 சதவிகித இட ஒதுக்கீடு - அதிலும்கூட 9, 9, 9 என்று மூன்று பகுதிகளாகத் தர வேண்டும் என்று ஒரு குழப்பத்தை, மத்திய அமைச்சரவையிலே இருந்த உயர்ஜாதி - முன்னேறிய வகுப்பினர் ஆதிக்கம் செலுத்திய மத்தியக் கல்வி நிறுவனத் தலைவர் - தலைமையாளர்களின் ரகசிய கூட்டு ஒப்பந்தம் காரணமாக நிறைவேறியது.

கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்தனர்

இதில் மிகப்பெரிய சமூக அநீதி என்னவென்றால், இந்திய அரசியல் சட்டத்தில் இல்லாத பொருளாதார அளவுகோலை, நேரிடையாகப் புகுத்தாமல் அரசியல் சட்ட விரோதமாக உச்சநீதிமன்றமே கிரீமிலேயர் என்ற ஒரு கொல்லைப்புற - மறைமுக ஏற்பாட்டின்படி பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காண பொருளாதார - வருமான உச்சவரம்பினை - தங்களது தீர்ப்பின்மூலம் புகுத்தி அதையே இப்போது வலியுறுத்தி, இந்த 27 சதவிகிதத்தில் அறிவிக்கப்பட்ட 9 சதவிகிதத்திலும்கூட உயர் ஜாதி ஆதிக்க கருநாகங்கள் - கறையான் புற்றெடுக்க கருநாகம் புகுந்ததுபோல, புகுந்து ஆதிக்கஞ் செலுத்த, உச்சநீதிமன்றத்தையே தங்களது போராட்ட களங்களாகக் கொண்டு, கிரீமிலேயர் என்ற சூழ்ச்சியின்மூலம், கைக்கெட்டிய இந்த இட ஒதுக்கீடினை பிற்படுத்தப்பட்டவர்களிடமிருந்து பறித்து வாய்க்கு எட்டாமல் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்!

ஒன்று திரளவேண்டும்!

உச்சநீதிமன்றம், மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடும் கோணல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து, நாடு தழுவிய பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகள், மாணவர்கள், பொதுமக்கள் கைகட்டி வாய் பொத்தி வேடிக்கைப் பார்க்கக் கூடாது! அறவழியில் தங்களது எதிர்ப்புகளைப் பதிய வைத்து, மீண்டும் ஒரு சமூகநீதிப் போரை - மூன்றாம் சமூகநீதிப் போராட்டமாக நடத்திட உடனடியாக ஒன்று திரளவேண்டும்!

தமிழ்நாட்டிலிருந்துதான் முயற்சிகள் எடுக்கப்பட்டன

கிரீமிலேயர் என்ற பொருளாதார உச்ச வரம்பினை நாம் கொள்கை அளவில் ஏற்காவிட்டாலும்கூட காலியாகி உள்ள இடங்களில் பிற்படுத்தப்பட்டோரை இப்போது நிரப்புவதில் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைக்கவேண்டிய இடங்கள் கைநழுவிப் போய்விடக்கூடாது என்பதால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்த 2.5 லட்ச ரூபாய் வருமானவரம்பு நாலரை லட்சம் ரூபாயாக உயர்த்தி - ஆணை பிறப்பித்தது!

அதுகூட தமிழ்நாட்டிலிருந்துதான் முயற்சிகள் எடுக்கப்பட்டன! முதல்வர் கலைஞர் அவர்கள் மத்திய அரசுக்கு எழுதி, பிறகு மத்திய சமூகநலத் துறையில் தூங்கிய கோப்புகளை எழுப்பி, கொள்கை முடிவாக - மத்திய அமைச்சரவை முடிவு செய்து, பிறகு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைந்துள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் நலக் கமிஷன் ஏற்றுக்கொண்ட நிலையில், ஆணையாக திருத்தப்பட்டபோது, அது தவறு அதை நீக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வாதாடுவது சட்ட விரோதம். அரசின் கொள்கை முடிவு (Policy Decision) அதில் நாங்கள் தலையிட முடியாது; 2.5 லட்சம் என்று முன்பு முடிவு செய்தது எப்படியோ அப் படித்தான் இப்போது முடிவு செய்யப்படும் உரிமையை அதே மத்திய அரசு ஏற்றுச் செயல்பட்டுள்ளது என்று மிகச் சுருக்கமாக விளக் கத்தை சுருக்கென்று கூறி, இவ்வாதங்களை உடனே தள்ளுபடி செய்யவேண்டிய பொறுப்பும், கடமையும் உச்சநீதிமன்றத்திற்கு உண்டு.

1. பிற்படுத்தப்பட்டோருக்கு என நிர்ணயித்த இந்த உச்ச (வருமான) வரம்பு மற்ற முன்னேறிய ஜாதியினருக்கு உண்டா?

2. தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் பிரிவினருக்கு (எஸ்.சி., எஸ்.டி.,) உண்டா?

3. பிற்படுத்தப்பட்டோர் பற்றிய கவலை முன்னேறிய ஜாதியினருக்கு - அதைத் தடுத்தால் எஞ்சியவை பொதுப் போட்டிக்கு (O.C.) என்ற சாக்கில் தாங்கள் அனுபவிக்கலாம் என்ற சூழ்ச்சி, சூதுத் திட்டம்தானேயொழிய வேறில்லை.


கூடாது என்பது நமது நிலைப்பாடு


மேல் அடுக்குக்கும் இல்லை; கீழ் அடுக்கு மக்களுக்கும் இல்லை. நடுவில் உள்ளவர்களுக்கு மட்டும் தேவையா? இது கீழே உள்ளவர்களுக்கும் கூடாது என்பது நமது நிலைப்பாடு.

வருமான வரம்பு என்பதை பண்டித ஜவகர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் அரசியல் சட்டம் செய்யும்போதே, அரசியல் நிர்ணய சபையில் நன்கு விவாதித்தே, பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காணுகையில், சமூக ரீதியாக (Socially), கல்வி ரீதியாக (Educationally) என்ற சொற்றொடர்களை மட்டும் போட்டனர்; பொருளாதார ரீதியாக (Economically) என்ற வார்த்தையை விவாதித்த பிறகே கைவிட்டனர்; காரணம், வருமானம் - ஆண்டுக்கு ஆண்டு மாறக்கூடியது; நிலையானதல்ல. அதை வைத்து பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காணுவது எளிதல்ல; குழப்பம்தான் ஏற்படும் என்று நடைமுறைச் சாத்தியப்படி யோசித்து தெளிந்து முடிவு எடுத்தனர்!

இப்போது பார்ப்பனிய, மேல்ஜாதி வர்க்கத்தின் சூது, சூழ்ச்சி - கிரீமிலேயர் (Creamy Layer) என்ற சொற்றொடர்மூலம் பிற்படுத்தப் பட்டோரின் உரிமை பறிப்புக்கு ஏற்பாடாகி அரங்கேறி வருகிறது!

நாடு தழுவிய அளவில் நடைபெறவேண்டும்


நாட்டில் உள்ள அத்துணைக் கட்சிகள், சமூகநீதி அமைப்புகளும் இதனை எதிர்த்து ஓரணியில் திரண்டு நின்று இதனை முறியடிக்க முன்வரவேண்டும்!

மாநாடுகள், கருத்தரங்குகள், கண்டன ஆர்ப்பாட்டங்கள், அறப்போராட்டங்கள் நாடு தழுவிய அளவில் நடைபெறவேண்டும்.

மாவட்டத் தலைநகர்களில்-டிசம்பர் 29 ஆம் தேதி

தமிழ்நாடு முழுக்க மறியல் போராட்டம் மத்திய அரசு மற்றும் நீதித் துறைகளின் இந்தப் போக்கினை மாற்றிட, மீண்டும் ஒரு அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வந்து அரசியல் சட்ட கர்த்தாக்களின் முழு நோக்கம் நிறைவேறிடச் செய்ய அனைத்து முயற்சிகளையும் செய்திட வேண்டும் என்பதற்காக, முதல் கட்டமாக - வரும் டிசம்பர் 29 ஆம் தேதி திங்கள்கிழமை யன்று, சென்னைத் தலைநகரிலும், மாவட்டத் தலைநகர்களிலும் தமிழ்நாடு முழுக்க மறியல் போராட்டம் மத்திய அரசு அலுவலகங்கள்முன் நடத்திடவேண்டும்; அரசு அனுமதி மறுத்திடக் கூடும்; கைதாகவேண்டும் - பல்லாயிரக்கணக்கில்! நாட்டிற்கு இவ்வெழுச்சி புரியவேண்டும்.

நாம் இதனை எதிர்த்து மிகப்பெரிய போராட்டத்தை அடுத்து நாடாளுமன்றத்திற்கு முன்பும்கூட நடத்திடவேண்டும்! நடத்து வோம்!!

ஆயத்தமாவீர்! ஆயத்தமாவீர்!!


------------------------- "விடுதலை" 16.12.2008

0 comments: