Search This Blog

22.12.08

இந்தியாவிலே மனித உரிமைக்காக நடத்தப்பட்ட மாபெரும் முதல் மனித உரிமைப் போராட்டம்




சமுதாய மாற்றத்தை உருவாக்க நூல்களும், நூலாசிரியர்களும் பயன்படவேண்டும் என்று சென்னையில் 19.12.2008 அன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

நூல் வெளியீட்டு விழாவிற்கு தலைமை வகித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-

இன்றைக்கு மூன்று நூல்கள் வெளியீட்டு விழா இங்கே நடைபெற்றிருக்கின்றது.

சிலர் நூலகங்களுக்கு வாங்க எழுதுவார்கள்

பேராசிரியர் அய்யாசாமி அவர்களால் எழுதப்பட்ட தென்னகத்தின் எழுச்சி என்ற நூல் அதே போல அவரால் எழுதப்பட்ட வைக்கம் வரலாற்றுக் கவிதை நாடகம் என்ற நூல் அதேபோல மூன்றாவது நூலான ஆ.சந்திரபோஸ் அவர்களாலே எழுதப்பட்ட ஒரு அன்னையின் காணிக்கை என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி இங்கே சிறப்பாக நடைபெற்றிருக்கிறது.
இது ஏதோ ஒரு சாதாரணமான நூல் வெளியீட்டு விழாவாக நடைபெறவில்லை. சிலர் நூல்களை எழுதுவார்கள். அந்த நூல்கள் நூலகங்களுக்கு வாங்க வேண்டும் என்ற நூலகங்களுக்கே உரிய தகுதியோடு எழுதுவார்கள்.

சிலர் வியாபார நோக்கோடு இல்லாமல் மக்களுக்கு நல்ல கருத்துகளைச் சொல்ல வேண்டும் என்ற வகையிலே எழுதுவார்கள். அப்படிப்பட்ட எண்ணத்தோடுதான் இந்த மூன்று நூல்களும் எழுதப்பட்டிருக்கின்றன.

கலைஞர் அவர்கள் தனது சொந்தப் பணத்தில் ஒரு கோடி ரூபாயை ஒதுக்கி...

ஆனால் நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்களுடைய ஆட்சியின் சிறப்பு என்னவென்றால் நூல்களை நூலகங்களுக்கு அதிகம் வாங்குவதையும் அதிகப்படுத்தியிருக்கின்றார்கள். நல்ல எழுத்தாளர்களையும் உருவாக்குகின்றார்கள். அதற்காகத்தான் முதல்வர் கலைஞர் அவர்கள் தனது சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாயை ஒதுக்கி அதிலிருந்து வருகின்ற வட்டியின் மூலமாக நல்ல நூல்களையும், நல்ல நூலாசிரியர்களையும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு நல்ல திருப்பத்தை இலக்கியத்துறையில் உருவாக்கி அதற் குரிய வாய்ப்புகளை அவர்கள் ஏற்படுத்தித் தந்திருக்கின்றார்கள்.

நூல்களை எழுதி அச்சிட்டு வெளியிடுகின்ற கஷ்டத்தை உணர்ந்தவர்தான் முதல்வர் கலைஞர் அவர்கள். முரசொலி இதழை துண்டறிக்கையாகத் தொடங்கி அது இன்றைக்கு வேகமாக வளர்ந்திருக்கிறது. அதனுடைய கஷ்ட நட்டத்தை நேரடியாக அவர்கள் உணர்ந்து அறிந்தவர்கள்.

மக்கள் எதை விரும்புகிறார்களோ அப்படிப்பட்ட நூல்களை எழுதக்கூடியத் தலைவர்களும் உண்டு. தாம் விரும்பும் நல்ல கருத்துக்களை சமுதாயத்திற்குப் பயன்படக் கூடிய கருத்துக்களை எடுத்துச் சொல்லக் கூடிய தலைவர்களும் இருக்கிறார்கள்.

வள்ளுவர் சொன்னார்:

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு என்று.

நல்ல நூல்களைத் திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும்.

இந்தியாவில் நடைபெற்ற முதல் மனிதஉரிமைப் போர்

தந்தை பெரியார் அவர்கள் மாறுபட்ட புரட்சிகர சிந்தனையாளர். 80 ஆண்டுகளுக்கு முன்னாலே நாங்கள் எல்லாம் பிறக்காத காலத்திலே வைக்கம் போராட்டத்தை நடத்தியவர்கள். இந்தியாவிலே மனித உரிமைக்காக நடத்தப்பட்ட மாபெரும் முதல் மனித உரிமைப் போராட்டம்தான் வைக்கம் போராட்டமாகும்.

சமுதாய மாற்றத்தை உருவாக்கப் பாடுபட்ட தலைவர் பெரியார்

தந்தை பெரியார் அவர்கள் சமுதாயத்திலிருந்து நோயை அகற்ற வேண்டும் என்று போராடியவர். ஒரு பெரிய சமுதாய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று தனது வலிமையானப் பிரச்சாரத்தின் காரணமாகப் போராடி வெற்றி பெற்ற ஒரு மாபெரும் தலைவர்.
அதன் மூலமாக நிறைய நூல்களை எழுதி மக்களிடையே குறைந்த விலையில் பரப்பினார்கள். அதே வழியிலே நாங்களும் அந்தப் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டு வருகின்றோம்.

இங்கே வெளியிடப்பட்ட நூல்கள் இலாப நோக்கத்தோடு எழுதப்பட்ட நூல்கள் அல்ல. இதை ஒரு தொழிலாக அவர்கள் செய்யவில்லை. இந்த சமுதாயத்திற்கு ஒரு தொண்டாகவே அவர்கள் செய்திருக்கின்றார்கள்.

பேராசிரியர் அய்யாசாமி அவர்கள் வைக்கம் வரலாற்றை இது வரை யாருமே செய்திடாத வகையில் வைக்கம் வரலாற்றை நாடகமாக - அதையும் கவிதை மூலமாக உருவாக்கித் தந்திருக்கின்றார்.

கலைஞர் தந்திருக்கின்ற அணிந்துரையில்

இந்த நூலுக்கு தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அணிந்துரை தந்திருக்கின்றார். அந்த அணிந்துரையிலே அவர் சொல்லுகின்றார்.

போராட்டக் காலத்தில் வைக்கத்தில் பெரியார் உரையாற்றுவதாக அமைந்த இந்நாடகத்தின் 7-ஆவது காட்சியில் (பக்கம் 51) ஆதிக்கவாதிகளின் போக்கைக் கண்டித்து, தீண்டக்கூடாது - பார்க்கக் கூடாது - தெருவில் இறங்கி நடக்கக் கூடாது என்று மக்களை ஒதுக்கும் பழக்கம்

எந்த மதத்திலும் இல்லாத பழக்கம்-
இங்கே மட்டும் எப்படி வந்தது?
அப்பாவி மக்களை அடிமைப்படுத்தி
எப்போதும் அவர்கள் எழாமல் அடக்கி
உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் கூட்டத்தார்
பிழைப்பதற்கு இந்தச் சாத்திரம் செய்தனர்
சிந்தனைக்குத் தடைபோட்டுச் செயலிழக்க வைத்தனர்
வக்கீல் மாதவன் வழக்கு மன்றம் சென்றது
குற்றம் ஆகுமா? அதற்கும் தடையா?
படித்த படிப்பும் வகிக்கும் பதவியும்
பிறப்பின் இழிவைத் துடைக்காதென்னும்
கொடுமை இன்னும் தொடரத்தான் வேண்டுமா?
எத்தனை படிப்புப் படித்தவராயினும்
எத்தனை உயர்ந்த இடத்திலிருப்பினும்
எத்தனை பேரின் பாராட்டுப் பெற்றாலும்
எத்தனை பெரிய தொண்டு செய்தாலும்
அத்தனையும் சாதியால் அடிபட்டுப் போவதா?

என்று அன்றைய சாதி ஆதிக்க நிலையை எதிர்த்துப் பெரியார் எழுப்பிய முழக்கத்தை எழுதியுள்ளார். அதனைத் தொடர்ந்து, இந்நாடக நூலில் பெரியாரின் வைக்கம் போராட்ட நிகழ்வுகளும், பின்னர் அவர் பெற்ற வெற்றியும் எடுத்துரைக்கப்படுகிறது.


பெரியார் சிந்தனைகள் இந்திய துணைக்கண்டத்தைத் தாண்டி

பெரியாரின் சிந்தனைகள் தமிழகத்தைத் தாண்டி, இன்று இந்தியத் துணைக் கண்டம் முழுவதும், ஏன் அதனையும் கடந்து ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுக்கும் மனித நேயச் சிந்தனையாளர்கள் வாழுமிடங்களிலெல்லாம் எழுந்து பயன் விளைவிக்கத் தொடங்கியுள்ள வேளையில், வெளிவரும் இக் கவிதை நாடக நூல் தந்தை பெரியாரின் புகழ் பரப்பும் பணியில் அணி செய்திட என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக! என்று கலைஞர் அவர்கள் கையெழுத்திட்டுப் பாராட்டிச் சொல்லியிருக்கின்றார்கள்.

இன்னமும் சில கிராமப்புறங்களில் தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறை இருக்கிறது. தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்று அரசியல் சட்டத்தில் 17வது பிரிவில் மட்டும் எழுதப்பட்டுள்ளது.

தீண்டாமை பாபகரமானது என்று பாடப்புத்தகங்களில் இருக்கிறது. ஆண்டுதோறும் தலைமைச் செயலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியை எடுக்கிறார்கள்.

அண்ணா மேம்பாலத்தின் அருமை தெரியுமா?

ஆனால் 80 ஆண்டுகளுக்கு முன்னாலே ஜாதிக் கொடுமை எப்படி வைக்கத்திலே இருந்தது என்ற வரலாற்றுச் செய்திகள் இன்றைய சமுதாயத்தினருக்குத் தெரிந்திருக்குமா?
அண்ணா மேம்பாலம் கட்டி முடிப்பதற்கு முன்பு போக்குவரத்து எவ்வளவு கஷ்டமாக இருந்தது என்பதை அறிந்தவர் களுக்கும், இன்றைக்கு அதனால் எவ்வளவு பயன்பாடு ஏற்பட் டிருக்கிறது என்பதை இரண்டையும் தெரிந்தவர்கள்தான் அறிய முடியும்.

இன்றைக்குச் சுலபமாக வேகமாகப் போகிறவர்களுக்கு பழைய நிலை என்ன என்பது தெரியாது. எப்பொழுதும் இப் படித்தான் இருந்தது போலிருக்கிறது என்று தான் நினைப் பார்கள். இன்றைய இளைய தலைமுறையினர் இந்த இரண்டு நிலைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

நான் எழுதியிருக்கின்ற அணிந்துரையில்

வைக்கம் வரலாற்றுக் கவிதை நாடகம் என்ற நூலில் நான் கொடுத்திருக்கின்ற அணிந்துரையில் எழுதியிருக்கின்றேன். வைக்கம் போருக்குத் தலைமை தாங்க வரும் தந்தை பெரியார் அவர்களை அறிமுகப்படுத்தும் பாங்கு சிறப்பானது.

போர்க்களம் நோக்கிப் புறப்பட்டார் என்றால்
நால் வகைச் சேனையும் நாவில் நடமாடும்
கால் கை முளைத்த சூறாவளி அவர்.
கதர் விற்பனையில் சாதனை புரிந்தவர்
கள்ளுக்கடை மறியலில் சரித்திரம் படைத்தவர்
பல்லாயிரம் பேரைச் சொல்லால் விளிப்பார்
சொல்வதைத் தெளிவாய்த் திருத்தமாய்ச் சொல்வார்
அவர் வந்தால் நமக்கு வெற்றி நிச்சயம் என்று தந்தை பெரியார் அவர்கள் பற்றி ஒரு வரைபடத்தை வரைந்து காட்டியுள்ளார்.
எங்கு பார்த்தாலும் சுயநல நாட்டம்
எங்கு பார்த்தாலும் சுய நல நாட்டம்
எனக்கென்ன கிடைக்கும் என்பதே நோட்டம்
ஒருவருக்கொருவர் குழிபறிக்க முயற்சி
ஒருவரையும் நம்பாத தன்னலச் சுழற்றி
ஊருக் குழைக்கும் உணர்வே இல்லை
ஊரார் நலனை நினைப்பதே இல்லை
போட்டி பொறாமைகள் பொய் புரட்டுகள்
மாற்றான் ஆட்சிக்கு வழிகோலி விட்டன
உள்நாட்டு மன்னர்கள் கண்மூடித் துரைத்தனம்
வெள்ளையன் ஆட்சியை மேலோக்கி விட்டது
பேதங்கள் பிரிவுகள் ஏராளம் இருப்பதால்
நீயில்லா ஆட்சி நிலைத்து நிற்கின்றது
அனைவரும் ஒன்றுபட் டெழுந்தன ராயின்
அக்கணம் ஆட்சி அழிந்துவிடும் காலமாம்
இடக்கண் வலியால் இடர்ப்படுமாயின்
வலக்கண்ணு மல்லவா நீர் சொரிகின்றது
வலியால் நெஞ்சு துடிதுடிக்கின்றது
வயித்தியரைத் தேடிக்கால் நடக்கின்றது
வாயில் மருந்தை கை இடுகின்றது
வாயோ மருந்தை வயிற்றுக்குள் அனுப்ப
வயிறு அதைத் தின்று சீரணிக்கின்றது
உறுப்புகள் அனைத்தும் ஒத்துழைக்காவிடில்
உள்ள நோய் தீருமா? உடல் நலம் மீளுமா?
சமுதாய நோய்க்கும் அதுவே நியதி
ஒரு சார் மக்கள் துயருற்றாரெனில்
உலகம் முழுவதும் துடித் தெழ வேண்டும்
உலகவர் அனைவரும் ஒன்றாக நின்றால்
உலகப் பந்தையே புரட்டிப் போடலாம்.


உவமான - உருவகங்கள்

மிக அருமையான உவமானங்களும் உருவகங்களும் - காவியத்திற்குத் தேவையான தகுதிகளை வழங்குகின்றார் என்பது ஒரு புறமிருந்தாலும், போர்க்களத்தில் மக்களை ஒன்று திரட்ட ஒரு களநாயகர் ஊட்டும் உணர்ச்சிக் கொந்தளிப்பைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்திப் படிப்போரையும் உணர்ச்சி பெறச் செய்கின்றது. நான் எழுதிய அணிந்துரையில் இதைத் தெரியப்படுத்தி யுள்ளேன்.

இதுபோன்று சமுதாய மாற்றத்தை உருவாக்கக் கூடிய நல்ல நூல்கள் வெளிவர வேண்டும். எழுத்தாளர்களும் சமுதாய மாற்றத்திற்காக எழுத வேண்டும்.

சமுதாயத்திற்கு வெளிச்சம் தர எழுதுங்கள்

இந்த நூல்களை வெளியிட்ட விழிகள் பதிப்பகம் நல்ல விழிகளை, நல்ல வழிகளை காட்டியிருக்கிறது. சமுதாயத்திற்கு வெளிச்சம் தரக்கூடிய கலங்கரை விளக்கமாக நீங்கள் இதுபோன்று தொடர்ந்து எழுதுங்கள்.

இப்படிப்பட்ட நூல்கள் மக்கள் மத்தியிலே பரவவேண்டும். பலர் அரசியல் வரலாற்றை எழுதுகிறார்களே ஒழிய இதுபோன்ற சமுதாய வரலாற்றை எழுதுவதில்லை.
ஜாதிக் கொடுமை என்ன? அது எப்படிப்பட்டது என்பதை வெளிநாட்டவர்களிடம் கூட எடுத்துச் சொல்ல முடியவில்லை. அவர்களுக்கு இப்படிப்பட்ட கொடுமையை நம்மால் உணர வைக்க முடியவில்லை.

வெளிநாட்டில் நிற பேதம் இருக்கிறது. அவர்கள் ஒருவரை ஒருவர் தொடலாம். ஆனால் இது போன்ற ஜாதிக் கொடுமை அங்கு இல்லை. இந்த நாட்டில் மேல் ஜாதிக்காரன் கீழ் ஜாதிக் காரனை தொடக்கூடாது. தொட்டால் தீட்டு என்ற நிலை இருக்கிறது. தீட்டு என்றால் என்ன என்பதை மேலை நாட்டுக்காரரிடம் புரிய வைக்க நம்மால் முடியவில்லை.

அதனால்தான் ஜாதிக் கொடுமையை ஒழிக்க கருவறைக்குள் அனைத்து ஜாதியினரும் நுழைய வேண்டும் என்பதற்காகத்தான் இன்றுவரை நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.

மகத்தான புரட்சியாளர்கள்

மகத்தான புரட்சிகளை உருவாக்கிய ஜோதி பாஃபுலே, சாகுமகராஜ், அண்ணல் அம்பேத்கர், நாராயணகுரு போன்றவர்கள் பல நூறாண்டுகளுக்கு முன்னால் போராடிய வரலாறுகள் எல்லாம் சிதறிக் கிடக்கின்றன. அவைகளை எல்லாம் ஒன்றுபடுத்திக் கொண்டு வர வேண்டும்.
தந்தை பெரியார் அவர்கள் - ரத்தம் சிந்தாமல் அமைதிப் புரட்சியை, அறிவியல் புரட்சியை உருவாக்கினார்.

அந்த வகையிலே இதுபோன்று சமுதாய மாறுதலுக்காக, நூல்களை எழுதிய நீங்கள் அறிவுத் தூதுவர்களாக மாறுங்கள். ஏவுகணைகளைப் போல அறிவைப் பரப்புங்கள்.
இவ்வாறு பேசிய தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், பாபு ஜெகஜீவன்ராம் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தும் - பணம் பதவியில் இருந்தும் - மேனாள் உத்திரபிரதேச முதல்வர் சம்பூர்ணானந்த் அவர்களுடைய சிலையைத் திறக்க விடாமல் காசி பல்கலைக் கழகத்தைச் சார்ந்த உயர் ஜாதி மாணவர்கள் எப்படிப்பட்ட அட்டூழியத்தை செய்து பாதுகாப்பு அமைச்சராக இருந்த பாபு ஜெகஜீவன்ராம் அவர்களை அவமானப்படுத்தினார்கள் என்பதையும், வைக்கம் போராட்டத்தைப் பற்றியும், கீழ் ஜாதி மக்கள் எச்சில் துப்பக் கூட உரிமை இல்லை. கழுத்தில் குடுவையைக் கட்டி அந்தக் குடுவையில் எச்சில் துப்பக் கூடிய கொடுமையான சூழ்நிலை! மேல்ஜாதிக்காரனுக்கு எச்சில் சுரக்காதா? அவனுடைய கழுத்தில் ஏன் குடுவை இல்லை என்ற செய்திகள் எல்லாம் மண்டல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்ட வரலாற்றை விளக்கிய அவர், கேரளத்தைச் சார்ந்த டாக்டர் பி.பல்பு இங்கிலாந்தில் படித்து வந்தாலும் அவருக்கு வேலை தராமல் திருவிதாங்கூர் சமஸ்தான திவானாக இருந்த ராகவய்யா 5 தென்னம்பிள்ளைகளை கொடுத்து வளர்ப்பதுதான் உங்கள் வேலை என்று சொன்ன பழைய ஜாதியக் கொடுமைகளையும் வர்ணாசிரம ஆதிக்கத்தையும், பழைய நிலையில் நம்முடைய சமுதாயம் எப்படி இருந்தது, அது எப்படி மாற வேண்டும் என்பதைப் பற்றி மிகச் சிறப்பாக விளக்கினார்.


-----------------------நன்றி:"விடுதலை" 22-12-2008

0 comments: