Search This Blog

28.12.08

ராவணன் நல்ல மனிதனா? கெட்டவனா?




திருப்பித் தாக்கும் திராவிடர்

இங்கிலாந்துக்காரரான மார்ட்டின் பக்லி என்பார் எழுதியுள்ள An Indian Odyssey எனும் பெரிய நூலில் 16 ஆம் தலைப்பு The Dravidians Strike Back என்பதாகும்.

தந்தை பெரியார் அவர்களைப் பற்றியும் ராமாயணம் பற்றிய அவரது கருத்துகளைப் பற்றியும், தமிழர் தலைவரை நேரில் கண்டு, பேசி அவரின் கருத்துகள் பற்றியும் எழுதியுள்ள கட்டுரை இது:-

சென்னையில் - இந்தியாவின் தென்கிழக்குக் கடலோரத்தில் - நினைவுப் பூங்கா ஒன்றில் சுமார் 20 அடி உயரத்தில் எரியும் சுடரைத் தூக்கிப் பிடிக்கும் முஷ்டி நிற்கிறது. அவை, சாதாரணமாக சுதந்திரச் சுடராகவோ, சத்திய ஜோதியாகவோதான் இருக்கும். இது ஏன் கருப்பாக? இந்தச் சுடரை ஏந்திப் பிடிக்கும் இயக்கம் - சுயமரியாதை இயக்கம் - கருப்பின் பெருமை - அந்த இயக்கத்தவர் அணியும் சட்டையின் நிறம் கருப்புதான்.

இந்தச் சுடருக்குச் செல்லும் வழியில், இரு மருங்கும் கருப்பு கிரானைட் பலகைகள் - இராமாயணத்தின் பெருமையைப் பீற்றிக்கொள்ளும் இந்தியாவில், அதனைச் சிதைத்த மனிதரின் அறிவுரைகள் அவற்றில் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றில் திராவிட மக்களை ஆரிய வலையில் வீழச் செய்து அவர்களைத் தன்மானம் - பகுத்தறிவு அற்றவர்களாகச் செய்வதே ராமாயணமும் மகாபாரதமும்


மற்றொன்று,

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
என்று முழங்குகிறது.


மூன்றாவது ஒன்று.

பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? பார்ப்பனர்களால், பார்ப்பனர் அல்லாதாதாருக்குச் சமத்துவம் கிடைக்குமா? ஒருக்கால் கிடைத்தாலும் ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது.

சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் இந்தச் சொற்களுக்குரியவர், ஈ.வெ. ராமசாமி என்று அழைக்கப்பட்ட தென் இந்தியத் தமிழர். வேதநூல் போல் போற்றப்பட்ட ராமாயணத்தைத் திராவிடர்களுக்கு எதிரான மெய்ன் காம்ப் (இட்லர் எழுதிய நூல்) போல மாற்றிக் காட்டியவர். இக்காலத்தில் தென்னகத்தில் நிலவும் அரசியல் நிலைகளுக்குக் காரணமானவர்.

இங்கே, திராவிட அரசியல்வாதிகள், இந்தியாவுக்கு வந்தேறிய அன்னியர், ஆரியப் படையெடுப்பு போன்றவற்றை ஏற்கும் தனித்த குழுவினராக இருக்கிறார்கள். வெள்ளைத் தோல் பார்ப்பனர்கள் இந்நாட்டின் பூர்வகுடிமக்கள் மீது தாக்குதல் தொடுத்த வரலாற்றின் சின்னமாகத்தான் ராமாயணத்தைக் கருதுகிறார்கள். இந்நாட்டில் பூர்வ மக்கள் வாழ்ந்து வந்ததாக அவர்கள் நம்புகிறார்கள். (சில ஆசிரியர்கள் வேறுவிதமாக நினைக்கிறார்கள்). தென் இந்திய மொழிகளைக் குறிக்கும் திராவிட எனும் சொல் சரியாகவே இவர்களைக் குறிப்பதாகிறது. ஆனால் கருநிறமும், கரிய தலைமயிரும், சப்பையான மூக்கு வடிவமும் கொண்ட ஆதி மக்களைக் குறிப்பதாக திராவிட எனும் சொல் அமைந்துள்ளது.

இராமனை ஒழித்த ஈ.வெ.ராமசாமி நாய்க்கர் (ராமக் கடவுள் என்பதுதான் ராமசாமி என்பதற்கு அர்த்தம் என்பது வேடிக்கையானதுதான்). 1879 இல் பார்ப்பனர் அல்லாத, வசதியான வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். மத ஆச்சாரப்படி தடுக்கப்பட்டிருந்தாலும், முசுலிம் நண்பர்களின் வீடுகளில் தண்ணீர் குடித்ததன் மூலம் அந்த நம்பிக்கையை எதிர்த்துக் காட்டியவர். 19 வயதில் திருமணம் செய்து கொண்டு சிறந்த வணிகராக விளங்கினார். ஆனாலும் அவரது கட்டுப்பாடற்ற போக்கு அவரின் குடும்பத்தாரைச் சங்கடப்படுத்தியது. 25 வயதில் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறிச் சில ஆண்டுகள் சன்னியாச வாழ்க்கை வாழ்ந்தார். காசிக்குப் போயிருந்தபோது, பார்ப்பனர்களுக்கு மட்டும் உணவு அளிக்கும் இடத்தில் இவரை உள்ளே விட மறுத்தார்கள்; அங்கேதான் ஜாதி அமைப்பின் கொடுமையை அறியும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது. மற்றவர் சாப்பிட்டு மிச்சம் வைத்ததைச் சாப்பிடும் நிலை இவருக்கு ஏற்பட்டது. புரோகித வர்க்கம், பெரும்பான்மை மக்களை நசுக்கி ஆதிக்கம் செலுத்திடப் பயன்படுத்தும் மதத்தை எதிர்ப்பதைத் தன் குறிக்கோளாகக் கொள்ளும் மாற்றத்தை இந்நிகழ்ச்சி ஏற்படுத்தி விட்டது.
வடக்கே இருப்பவர்களைக் காட்டிலும் அதிக அளவில் தெற்கே மக்கள் சூத்திரர்களாகக் கருதப்பட்டுள்ளனர். மிகச் சிறுபான்மைக் கூட்டமான பார்ப்பனர்கள் பெரும் நாசம் விளைவிப்பவர்களாகியிருப்பதற்குக் கூட இது காரணம்.

ஈ.வெ. ராமசாமி 1925 இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி அரசியல்வாதியாகவும் சமூக சீர்திருத்த வாதியாகவும் செயல்படத் தொடங்கினார். அவர் மிகச் சிறந்த பத்திரிகையாளர், புகழ் பெற்ற பேச்சாளர்! சுட்டெரிக்கும் அவரது சொற்பொழிவுகள் மிகுந்த செல்வாக்கைப் பெற்றன - அவற்றை அவரது கருத்தை எதிர்ப்பவர்களும் போற்றினர். பெரும் மனிதர் எனப் பொருள்படும் பெரியார் எனும் அடைமொழி அவருக்கு அளிக்கப்பட்டது. பெரிய ஆத்மா எனப் பொருள்படும் மகாத்மாப் பட்டம் காந்திக்கு உரித்தாக்கியது போல இப்பட்டம் இவருடைய தொண்டர்களால் பயன்படுத்தப்பட்டு வந்ததை அவரும் ஏற்றுக் கொண்டார். மகா ஆத்மா ஏற்றுக் கொண்ட ஜாதிமுறையை பெரும் மனிதர் ஒழிக்க உறுதி கொண்டார். திராவிட இயக்கம் இன்றைக்கும் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதற்கான தளம் அமைத்தார்; வட இந்தியச் சார்பான அரசியல் மேல் தட்டுக்காரர்களின் குரலிலிருந்து மாறுபட்டு ஒலித்த குரல் அவருடையது!
அவருடைய அரசியல் கோட்பாடுகள் அவரின் தளபதிகளால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது; அவரோ சமூக சீர்திருத்தத்தை முதன்மையாகக் கொண்டு பாடுபட்டு, பார்ப்பனர்கள் உயர்த்திப் பிடிக்கும் ராமனைத் தாக்கினார். தென்னிந்தியாவின் லட்சோப லட்சம் மக்கள் ஆரியப் பார்ப்பனர்களால் அடிமைப் படுத்தப்பட்ட விதம் குறித்துப் பல்வேறு கட்டுரைகளால் விளக்கினார். அந்நூல்கள் ஏராளமாக விற்பனையாகின்றன, தொடர்ந்து பல பதிப்புகள் வெளியாகி வருகின்றன. ராமன் கெட்டவன், ராவணன் பெரிய வீரன்; அவனைப் பற்றிக் கெடுதலாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது என்பதுதான் பெரியாரின் கருத்தாகும்.

பெரியாரின் இயக்க அலுவலகம் அமைந்துள்ள இடம், கால்பந்து மைதானம் அளவு இருக்கிறது. அதன் கடைகோடியில் அவரது கூர்த்த கருத்துகள் கருப்புக் கற்களில் பொறிக்கப்பட்டு வைக்கப்பட்ட பூங்கா உள்ளது. அதன் அருகே நவீன பாணி அலுவலகக் கட்டடம் உள்ளது. இரண்டு பக்கமும் பழங்காலக் கட்டடங்கள் எதிரெதிரிலே அமைந்து உள்ளன. ஏராளமான பகுத்தறிவு நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகக் கடை ஒன்று உள்ளது. பழைய பங்களா ஒன்றில் பெரியார் அருங்காட்சியகம் எனும் பலகை உள்ளது.
அவர் தமது 95 ஆம் வயதில் (1973 இல்) இறந்தார். திராவிட நாட்டின் விடுதலையை அவர் காணவில்லை. ஆனால் கல்வியும் சுதந்திரமும் மறுக்கப்பட்ட நிலையில் கீழ் ஜாதியினரை ஆக்கி வைத்திருந்த ஜாதி முறையை அழிக்கும் பணியை அவர் நிறையவே செய்தார்.
அவருடைய இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் தற்போது இருப்பவர் கி. வீரமணி (கி. என்பது கிருஷ்ணசாமியைக் குறிக்கும் - இந்தியாவின் பகுத்தறிவு இயக்கத்தைச் சார்ந்த தலைவர்களின் பெயர்களிலெல்லாம் இரண்டு இந்து மதக் கடவுள்களின் பெயர்கள் உள்ளன) தம் பத்து வயதில் இயக்கத்தில் திரு. வீரமணி சேர்ந்தார் என்பது வரலாறு. அப்பொழுதே, மேசைமேல் ஏறி நின்று கொண்டு அவர் ஆற்றிய சொற்பொழிவு வயதில் மூத்தவர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. அவரைச் சந்திக்க நான் காத்துக் கொண்டிருந்தபோது, நாற்பதுக்கும் மேற்பட்ட பெரியார் கல்வி நிறுவனங்கள் பற்றியும் - அவற்றில் சாதாரண கல்வி நிலையம் முதல் மருத்துவக் கல்வி வரையிலும் இருக்கின்றன, சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைக் கற்றுத் தரும் பெரியாரியல் கல்லூரி - ஆகியவை பற்றியெல்லாம் விவரிக்கும் வெளியீடு ஒன்றையும் படித்தேன்.


நேர்காணலுக்கு முன், பெரியார் அருங்காட்சியகத்தைப் பார்த்தேன். அந்தப் பெரும் மனிதரின் உடைமைகள், படுக்கை, சிறப்பாக அவர் பயன்படுத்திய சக்கர நாற்காலி முதலியவை அங்கே உள்ளன. பெரியாரின் மூக்குக் கண்ணாடி, ஊற்றுப் பேனா, பழைய நூல்கள் முதலியவை வைக்கப்பட்டுள்ளன அந்த அறை அண்மையில் புதிய தரை அமைக்கப்பட்டு சுத்தமான செராமிக் ஓடுகள் பதிக்கப்பட்டுச் சுகாதாரமாக அமைக்கப்பட்டுள்ளது.

அவரைப் பார்ப்பதற்கு அறையினுள் நுழைந்தேன். நாற்காலியில் அமர்ந்திருந்த திரு வீரமணி என்னைக் கண்டதும் எழுந்து வரவேற்றார். தூய, வெண்ணிறத் தலைமயிர், அவருடைய தோற்றம் அவரை எழுபது வயதுக்கு மேற்பட்டவராகக் காட்டின. அவர் இயக்கத்தின் சீருடையான கருஞ்சட்டை அணிந்திருந்தார்; இடுப்பில் வெள்ளை வெளேர் வேட்டி, இடது தோளில் அணிந்திருந்த மடிக்கப்பட்ட துண்டு ஆகியவை அவரைத் தலைவர் என அடையாளங்காட்டின. என்னை அமரச் சொல்லி விட்டு என்னைப் பார்த்துக் கேட்டார். வெளியே காத்திருந்ததால் சங்கடம் ஏற்பட்டதா? அன்றைய வார ஏட்டுக்குத் தலையங்கம் எழுதிக் கொண்டிருந்ததால் தாமதம் ஏற்பட்டது எனக் கூறினார். மாதந் தோறும் வெளிவரும் மூன்று ஏடுகளுடன், நாளிதழ் விடுதலை ஏட்டுக்கும் அவர் ஆசிரியர். உலகிலேயே ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலைதான். பெரியார் நூல்களைப் பதிப்பகத்தின் தற்போதைய உலக அடையாளமே ரிச்சர்ட் டாக்கின்ஸ்தான்.

வேகமாக ஊற்றெடுக்கும் எண்ணத் தொடர்களை மிக விரைவாக ஆசிரிய உரையாக எழுதி 15 மணித்துளிகளுக்குள் முடித்துவிட்டார். தன் கைக் கடிகாரத்தைப் பார்த்து, மகிழ்வின் அடையாளமாக விரிந்த உதடுகளைத் திறந்து என்னைக் கேட்டார், என்ன தெரியவேண்டும்?

ராமாயணம் பற்றித் தற்காலப் பெரியாரிஸ்ட்கள் என்ன கருத்தினைக் கொண்டு இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினேன். ஆரியர்களால் தங்கள் முன்னோர்களாகிய திராவிடர்கள் தாக்கி அழிக்கப் பட்டார்கள் எனும் கருத்தின் அடிப்படையில் அந்த இதிகாசத்தை இன்னமும் வெறுக்கிறீர்களா?

தன் கருத்தை அவர் கூறத் தொடங்கினார். நிச்சயமாக ஒரு படையெடுப்பு நடந்துள்ளது, தென்னாட்டின் கலாச்சாரம் வடநாட்டுக் கலாச்சாரத்திற்கு மிகவும் மாறுபட்டே இருந்துள்ளது; இருக்கிறது!
அப்படியானால், இனவேறுபாடு ஏதும் இல்லையா?
இருக்கிறது. தென் இந்தியர் கருப்பு. ஆரியர்கள் சிறிது மஞ்சள் நிறமானவர்கள். அவர்களின் தோல் மாறுபட்டது.
திரு. வீரமணியே ஓரளவு தங்க நிறம் கொண்டவர் என்பதை என்னால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. அவர் தொடர்ந்து திராவிடர் என்று ஒரு இனம் இருக்கிறதோ இல்லையோ, படையெடுப்பு நடந்ததை மறுப்பதற்கில்லை என்றார்.

அப்படியானால், அந்த அளவில் ராமாயணம் ஒரு வரலாற்று உண்மையை எதிரொலிக்கிறது
இந்தக் கதை உண்மையா, கற்பனையா என்பதை அறிய இயலாது. உண்மை மனிதர்களை, உண்மை நிகழ்வுகளின் அடிப்படையிலே புனையப் பட்ட கற்பனைக் கதையாக இருக்கலாம். இருவேறு கலாச்சாரங்களின் மோதலை, தென்னாட்டு மக்கள் மீது தொடுக்கப்பட்ட வன்முறை கெடுபிடித் தாக்குதலை அந்தக் கதை உருவகப்படுத்துகிறது. கதையில் குறிக்கப்பட்ட குரங்குகள் மனிதர்கள் தாம், எங்கள் மனிதர்கள்தாம், தென்னாட்டவர்தாம். தென்னாட்டுக்கும் வடநாட்டுக்கும் நடந்த போரின் அடிப்படையில்தான் ராமாயணம் எழுதப்பட்டது என்கிற கருத்தை ஜவகர்லால் நேரு தம் மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்களில் தெரிவித்திருக்கிறார்.

பெரும்பாலும் ஆங்கிலேய சரித்திர ஆசிரியர்களின் கருத்தையே நேரு ஏற்றுக்கொண்டார் என நான் நினைக்கிறேன். எனவே, ராவணன் பற்றிப் பேசலாம் என நினைத்தேன்.

ராவணன் நல்ல மனிதனா? கெட்டவனா?

ராவணன் சிறந்தவன். அவன் நாட்டு மக்கள் அவனைக் குற்றம் கூறவில்லை, குறை காணவில்லை; புகழ்ந்து பேசப்பட்டுள்ளவன். அவனது கட்டுப் பாட்டில் சீதை பலகாலம் இருந்தும் கூட, அவளை ராவணன் வன்கலவி செய்யவில்லை. அவன் அதிகாரங்கள் மிக்கவன், ஆனாலும் அவளைத் தொடவே இல்லை. ஏன் அவள் மானபங்கப்படுத்தப் படவில்லை? ராவணன் செய்த தவறே, சீதாவுடன் சேர்ந்து ஓடிப்போனதுதான்.
பிற்காலத்தில் எழுதப்பட்ட சில ராமாயணக் கதைகளில், ராவணனுடன் சேர்ந்து சீதா ஓடிப் போனாள் என்றே எழுதப்பட்டுள்ளது. ஆனால், மூல நூலான வால்மீகி ராமாயணம் தெளிவாகக் கூறுகிறது, அவள் கடத்தப்பட்டாள், அடிக்கப்பட்டாள், மனத்தளவில் துன்புறுத்தப்பட்டாள் என்கிறது. எதிர் ராமாயணங்களைப் போலவே, வீரமணியும் ஒரு ராமாயணம் எழுதுகிறார். வால்மீகியின் மூல நூலில் அவ்வளவு பரிச்சயம் அவருக்கு இல்லையோ? வால்மீகியின் ராமாயணத்தை மொழி மாற்றம் செய்துதான் கம்பனும் துளசிதாசும் தத்தம் ராமாயணங்களை எழுதினார்கள் என்று வடக்கிலும் தெற்கிலும் மக்கள் நினைக்கிறார்கள். உண்மையில் வால்மீகி ராமாயணத்தின் தாக்கத்தில்,இருவரும் எழுதியவையே அவை! தங்கள் காலத்திய கருத்தோட்டத்திற்குச் சரிப்பட்டு வராதவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு தங்கள் விருப்பப்படி கதைப் பாத்திரங்களை உருவாக்கிக் கொண்டார்கள்.
தன் தலைவரைப் போலவே திரு. வீரமணியும் ராமாயணத்தை மெய் என்றே நினைக்கிறார் போல் எனக்குத் தோன்றுகிறது. எதிர்ப்புக்கு அது ஒரு கருவி. ஆனாலும் மக்களின் மனதில் அந்த இலக்கியக் கதா பாத்திரங்களின் தாக்கம் - ஏற்றாலும் சரி, எதிர்த்தாலும் சரி, அவை மக்களின் மனதில் பதிந்துள்ள பாங்கினை மறுக்க முடியாது.

பெரியார் கூட, பலரையும் போலவே, அந்த இதிகாசக் கதா பாத்திரங்களைப் பார்த்திருக்கிறார். இப்போதோ, ராமாயணத்தைக் கண்டனம் செய்வதில் குழுவாகப் பிரித்துக் கொண்டுள்ளார்கள் ராவணனை ஆதரிப்பவர்கள் ஆரியப் படைத் தலைவனான ராமனை எதிர்ப்பதும், மறு பிரிவினர் அதற்கு எதிர்மாறாகக் கூறுவதும் நடக்கிறது. அண்மையில் பெரியார் இயக்கத்தால் ஒரு நூல் வெளியிடப் பட்டுள்ளது. தமிழ் வரலாற்று ஆய்வாளர் என். சுப்ரமணியம் என்பவர் எழுதிய இதிகாசக் குறிப்புகள் என்பதில் ராமன் அவனைச் சுற்றியுள்ள பாத்திரப் படைப்பில் உள்ள குறைபாடுகள் மிகமிக கோபமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ராமனிடமிருந்து சீதாவைப் பிரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ராவணன் கவர்ந்தானே தவிர, அவளை அடைய வேண்டும் என்பதற்காக அல்ல என்று சுப்ரமணியம் குறிப்பிட்டுள்ளார்.

சீதையின் மார்பகங்களை வால்மீகி வருணித்திருக்கும் விதத்தைப் படிக்கும் எவரும் ராமாயணத்தின் மெய்ப்போக்கை உணர்ந்து ராவணன் தான் இந்தக் கதையின் நாயகன் என்பதைப் புரிந்து கொள்ளாமல் கருத்துக் குருடர்களாக்கப்பட்டுள்ளனர் என்கிற முடிவுக்குத்தான் வருவர். வால்மீகியின் வெளிப்படையான ஆபாச வருணனைகளைப் பற்றிப் பெரியார் கூறி அவை பார்ப்பனரின் இழி நிலையைக் குறிக்கிறது என்பார். கொச்சையாகத் தம் கருத்தையும் கூறுவார். அனுமனைத் திட்டித் தீர்ப்பார்; காரணம் என்னவென்றால், அனுமான் சீதையிடம் அசிங்கமாகவும் ஆபாசமாகவும் பேசியுள்ளான். ஆண் குறியைப் பற்றியும் பெண்களிடம் கூறப்படாத விசயங்களைப் பற்றியும் பேசியிருக்கிறான்.
வடக்கே சிறு பகுதியில் எழுதப்பட்ட கற்பனைக் கதைதான் ராமாயணம் என்று கூறும் கல்வியாளர்கள் . . .

இடைமறித்து திரு. வீரமணி, அவர்கள் சொல்வது திரிக்கப்பட்ட கருத்து என்றார்.

ஆனால், என்னுடைய எண்ணம், ஒரு பிளவுபட்ட அடிப்படையே அக்கதைக்குக் காரணம். கொரில்லாப்போர் முறை போன்ற ஒன்று நடந்திருக்கலாம் என்று ஓரளவு சரியாக இருக்கும். நீண்ட நாளாக இருந்த பிளவு மனப்பான்மை இதற்கு அற்புதத் தன்மையைத் தந்திருக்கலாம். அல்லது எழுதுவதற்கு முன்பே வழக்கத்தில் இருந்த புனைவுகளாக இருக்கலாம். ராமன் கூட அற்புதக் கற்பனை கற்பிக்கப்பட்ட வீரனாக, ராபின் ஹூட் போல இருந்திருக்கலாம். ஆனால் அதிலே முக்கியமான, முதுகெலும்பு போன்றதான வரலாற்று உண்மை இருக்கிறது - வெற்றி பெற்றவர்கள் எழுதி வைத்தது என்பதுதான் அது!

திரு வீரமணி சொன்னார் - அது ஒரு கொரில்லாப் போர் என்கிற உங்கள் கருத்தோடு நான் ஒத்து வருகிறேன். படையெடுப்பு நடந்தது என்பதற்கு தடயம் உள்ளது. ஓர் எடுத்துக்காட்டைக் கூறலாம் - வெற்றி பெற்ற ஆரிய மன்னர்கள் தென்னாட்டுக்கு யாகங்களைக் கொண்டு வந்தனர். தமிழ்க் கலாச்சாரம் யாகங்களை ஒரு போதும் ஏற்றது கிடையாது. அது கலாச்சார ஊடுருவல் (யாகம் என்பது வேதச் சடங்கு. அக்னியில் பல பொருள்களையும் ஊற்றும் சடங்கு - வழிபாடு எனக் கூறுவதை விட, தந்திரம் (மாஜிக்) எனலாம்.)
நான் சொன்னேன் - சங்கடம் என்ன என்றால் இந்தக் கல்வியாளர்கள் எனப்படுவோர் திராவிடர் கலாச்சாரம் என்பதே எப்போதும் இருந்ததில்லை. திராவிட எனும் சொல் இனத்துக்குக் குறிப்பிடலாம் என்கிற மாதிரியான கருத்து கொண்டுள்ளனரே!
திரு. வீரமணி இம்முறையும் ஆவேசப்பட்டார், கல்வியாளர்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்றார்.

கல்வியாளர்கள் கருத்து விற்பனைக்காக உள்ளன என்று உள்ளபடியே நீங்கள் கருதுகிறீர்களா?
மேற்கத்தியக் கருத்துகளை இந்தியாவில் திணிக்க திட்டமிடப்பட்ட ஒரு முயற்சி நடக்கிறது. அவர்களின் விவாதம் நடுநிலையானது அல்ல என்பதைத்தான் நான் கூறுகிறேன்.
இது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஆரியப் படையெடுப்பு எனும் கருத்தை மேற்கு நாடுகள் திணித்தன என்று பல இந்தியர்கள் நினைக்கின்றனர். இங்கே திரு. வீரமணி, படையெடுக்கவில்லை எனும் மேல்நாட்டுக் கருத்தை கெட்ட நோக்கம் கொண்ட முயற்சி என்கிறார்.

உங்கள் இயக்கம் திராவிட நாட்டுக்காக இன்னமும் முயல்கிறதா? எனக் கேட்டேன்.

நாங்கள் விரும்புவது ஜாதியற்ற ஒரு சமூகம், சமவாய்ப்புள்ள சமூகம். இப்போது சமூக நீதிக்கான முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. ஒரு முசுலிம் குடியரசுத்தலைவர், சீக்கியப் பிரதமர், ஆளுங்கட்சித் தலைவராக ஓர் இத்தாலியப் பெண்மணி என இப்போது உள்ளனர். அடுத்து, நாங்கள் உண்மையான கூட்டாட்சியை விரும்புகிறோம். மத்திய அரசிடமிருந்து இந்தி பேசும் வட இந்திய இந்து மக்களிடமிருந்து கூடுதல் அதிகாரங்களைப் பெற விரும்புகிறோம். நல்வாய்ப்பாக, 1924 இல் பெரியார் வடித்த சொற்றொடர் பிராமினோக்ரசி (பார்ப்பன ஆதிபத்யம்) பார்ப்பனர்களால், பார்ப்பனர்களுக்கு நடத்தப்பட்ட ஆட்சி முறை ஒழிந்து விட்டது.

பல வழிகளில் பெரியார் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இருந்தார் என்பது சுவாரசியமாக இருக்கிறது . . .

பிரிட்டிஷ் படையெடுப்பு இருந்திருக்கா விட்டால், பார்ப்பனக் காட்டுமிராண்டித்தனம் இன்றளவும் நீடித்து நிலை பெற்றிருக்குமே! ராமாயணம் முழுக்க முழுக்கப் பார்ப்பன ஆதரவுதானே! துளசிதாசனே பார்ப்பனருக்கான ஆள்தானே!

ஈ.வெ. ராமசாமியாரின் பார்ப்பன எதிர்ப்பின் தீவிரம் 1956 இல் தெரிந்தது! அவரின் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பொது இடத்தில் கடவுள் ராமனின் படத்தைக் கொளுத்தப் போவதாக அறிவித்தனர். எந்தக் கடவுளின் நம்பிக்கையைக் காட்டி மகாத்மா காந்தி இந்திய நாட்டுக்கு விடுதலை பெற்றாரோ, அந்தக் கடவுளை அவமானப்படுத்துவதைத் தவிர்க்குமாறு பல அரசியல் தலைவர்களும் கேட்டுக் கொண்டனர். பின்னாள்களில் அய்ந்து கொடுமைகளில் ஒன்றாகக் காந்தியத்தைச் சேர்த்த ராமசாமியார், அவர்களை உதாசீனப்படுத்தி விட்டு, கடவுளைக் கொளுத்தத் தீப்பெட்டியை எடுத்துக் கொண்டு, சிறைவாசத்திற்குத் தயாராக படுக்கையையும் தூக்கிக் கொண்டு போராட்டத்திற்குத் தயாரானார்.

ஒரு கருத்தை வலியுறுத்துவதற்காகப் பிறரின் உணர்வுகளை அவமானப்படுத்துவது எந்த வகையில் ஏற்றுக் கொள்ளக்கூடிய செயல் என நான் திரு. வீரமணியைக் கேட்டேன். சில பார்ப்பனர்களின் செயல்களுக்காக எல்லா இந்துக்களும் அவமானப்படுத்தப் வேண்டுமா? ஒரு மதத்தைச் சேர்ந்த சிலர் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்பதற்காக, அம்மதத்தையே அழிக்க முயல்வது சரியா? எனவும் கேட்டேன்.

இதோ பாருங்கள்! மதமே பொய்களால் ஆனது. பொய்களிலிருந்து என்னைத் தற்காத்துக் கொள்ள, சில நேரங்களில் நான் ஆத்திரமூட்ட வேண்டியுள்ளது. அந்தக் கோபத்தை ஊட்டாமலிருந்தால் (என்னைத்தேடி) நீங்கள் இங்கே வந்திருக்க மாட்டீர்கள்!
நான் சிரித்துவிட்டேன். அதுதான் உண்மை என்றேன்.

இது ஒரு நியாயமான பிரச்சாரம். அடிமைத் தன்மையை வளர்க்கும் மூடநம்பிக்கையைத் தோலுரித்துக் காட்ட வேண்டும் என்று பெரியார் விரும்பினார். ஒழுக்கம் என்று நீங்கள் சொன்னால், ஒழுக்கம் என்பதற்காக நீங்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்பது அல்லவே!


கடைசியாக ஒரு கேள்வி. தனிநபர் வழிபாடு தன்னைச் சுற்றி இருந்ததை ஏன் பெரியார் அனுமதித்தார்?

வழிபாடா? அந்த சினிமா சுவரொட்டி! அதிலே பெரிய சாமியார் போல இருக்கிறாரே!
பெரியாரின் கொள்கைகளால் பலனும் வாழ்வும் அடைந்த பார்ப்பனரல்லாத மக்களுக்கு அவர் கடவுள் போலவே! சிலர் அவரை மகான் ஆக்க விரும்பினர். ஆனால் அவருடைய இயக்கத் தொண்டர்களாகிய நாங்கள், அவரை ஒரு போதும் மகானாக்கியது கிடையாது. ஆனால் அவர் எங்களின் வழிகாட்டும் தலைவர். தலைமையைப் போற்றுவது துதிபாடுவது அல்ல! நான் சர்ச்சிலை விரும்புகிறேன். ஆனால் அது அவரை மகான் ஆக்குவதாகாது!



--------------------நன்றி: "விடுதலை" 28-12-2008

0 comments: