Search This Blog

14.12.08

நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கு வாய்ப்பு?




திமுக - காங்கிரசு கூட்டணிதான் வெற்றி பெறும்

இடதுசாரிகள் கூறுவது இரண்டாவது மூன்றாவது அணி
முந்தைய மூன்றாம் அணி பட்டபாட்டை நாடு அறியும்

திமுக கூட்டணி தருமத்திற்கும் -
அதிமுக கூட்டணி தருமத்திற்கும் உள்ள வேறுபாடு பாரீர்

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

காஞ்சிபுரத்தில் நேற்று 13.12.2008 அன்று செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:

கேள்வி:

இலங்கைப் பிரச்சினையில் போர் நிறுத்தம் செய்ய முதல்வர் தலைமையில் வலியுறுத்தி அப்பொழுதும் போர் நிறுத்தம் நடைபெறவில்லையே?

பதில்:

இந்தப் பிரச்சினையில் ஒத்த கருத்துள்ள அனைத்துக் கட்சியினரும் டெல்லிக்குச் சென்று பிரதமரை சந்தித்து வலியுறுத்தியதினுடைய விளைவுதான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி, போர் நிறுத்தத்திற்கு நேரடியாக நம்முடைய கருத்தை வலியுறுத்திச் சொல்ல வேண்டும் என்று அன்றைக்கே நம்முடைய முதல்வர் கலைஞரிடம் தெரிவித்து, அதை முதல்வர் அவர்கள் தெளிவாக அறிவித்திருக்கின்றார்கள். எனவே ஒன்றுமே நடக்கவில்லை என்று சொல்வது இருக்கிறதே அது வெறும் அரசியல் பார்வை. கூட்டணிகளுக்கான பார்வையே தவிர, நாம் எந்த இலட்சியத்திற்காக சொன்னோமோ அது நடக்காமல் இல்லை.

ஏற்கெனவே வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் முதல்வர் கலைஞர் அவர்களை அவருடைய இல்லத்தில் சந்தித்த பிற்பாடுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்து இவைகள் எல்லாம் போய்ச் சேர வேண்டுமென்று இலங்கையில் உள்ள வன்னிப் பகுதிகளுக்கு அனுப்பியது. பொருள்களை அங்குள்ள மக்கள் வாங்கிச் சென்ற செய்தி படங்களோடு வந்திருக்கிறது. மறுபடியும்கூட அதிலே சின்னப் பிரச்சினை இருக்கிறது என்று இன்றைக்கு முதல்வர் பிரதமரிடமும், வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் சொன்னபொழுது கூட இல்லை, இல்லை அய்.நா. சபை பார்வையாளர்கள், அனைத்துலகச் செஞ்சிலுவைச் (International Red Cross) சங்கம் அமைப்பின் மூலமாகத்தான் நடந்திருக்கிறது என்பதை தெளிவாகவே சொல்லி அவர்கள் அதை ஒப்புக் கொண்டிருக்கின்றார்கள்.

இடையிலே ஏற்பட்ட புதிய சிக்கலான மும்பை தீவிரவாதிகள் தாக்குதல் பிரச்சினை, நாடாளுமன்றத்தில் பிரச்சினை இவைகள் எல்லாம் இருக்கிற நேரத்திலே அவர்களுக்கு பல்வேறு பொறுப்புகள் அதிகம் இருக்கின்ற நிலைமை. ஆகையால் இந்த முயற்சி நிச்சயமாக வெற்றி பெறும். ஈழத்திலே போர் நிறுத்தம் - அங்கே நிரந்தர அமைதி வர வேண்டும், ஈழ மக்கள் வாழ்வுரிமை இம்மூன்றும் சுமுகமாக நடைபெறும்.

கேள்வி:

திருமங்கலம் இடைத் தேர்தல் பற்றி உங்கள் கருத்து?

பதில்:

கூட்டணி தர்மம் என்பது எந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் இறந்தாலும் அதே கட்சி வேட்பாளரைத் தான் அந்த இடத்திலே நிறுத்தி வெற்றி பெறச் செய்வது கூட்டணி தர்மம். அந்த வகையிலே காங்கிரஸ் சட்டமன்ற வேட்பாளர் மதுரையில் மறைந்தபோது அந்த தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளரையே நிறுத்தி 30,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தது திமுகவின் கூட்டணி தர்மம். ஆனால் அதிமுக கூட்டணி தர்மம் என்பது மறைந்த - மதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமங்கலத்தில் அதிமுக போட்டியிடுவது அவர்களுடைய கூட்டணி தர்மம் - கூட்டணி தர்மத்தை மதிக்காதவர் அந்த அம்மையார் பாவம், வைகோவிற்காக பரிதாபப்படுகிறோம்.


கேள்வி:

கம்யூனிஸ்டு கட்சிகள் அதிமுகவுடன் சேர்ந்துள்ள மூன்றாவது அணிபற்றி...

பதில்:

இடதுசாரிகள் இங்கே அங்கே என்று இப்போது அதிமுகவுடன் இணைந்து மூன்றாவது அணி அமைப்பதாக சொல்கிறார்கள். ஏற்கெனவே இருந்த மூன்றாம் அணி என்னவாயிற்று என்று தெரியவில்லை.

கம்யூனிஸ்ட்காரர்கள் அமைக்கும் இந்த மூன்றாம் அணி விசித்திர கூட்டணி எந்த காரணத்திற்காக அதிமுக அம்மையாருடன் இணைந்து உருவாக்குகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஏற்கெனவே இருந்த மூன்றாவது அணியில் சந்திரபாபு நாயுடு, முலாயம்சிங் போன்றோர் இருந்து என்ன பாடுபட்டார்கள் என்பது யாரும் மறக்க முடியாத அனுபவம். மூன்றாவது அணி எப்போதும் வெற்றி பெறாது. இது இரண்டாவதாக கூட்டியிருக்கிற மூன்றாவது அணி. வெற்றி பெறாது.


கேள்வி:

நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கு வாய்ப்பு என்று நினைக்கிறீர்கள்?

பதில்:

திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி. மீண்டும் வெற்றி பெறும். மகளிர் மேம்பாடு, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உயர் கல்வியில் 27 சதவீதம் - ஒதுக்கீடு, மற்றும் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ள காங்கிரஸ் வெற்றி பெறும். எங்களுடைய ஆதரவு திமுக அங்கம் வசிக்கும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக்குத்தான் - அதுதான் வெற்றி பெறும்.மதவாத கூட்டணி, மூன்றாம் அணி ஒருபோதும் வெற்றி பெறாது.


(கடந்த முறை குடியரசுத் தலைவர் தேர்தலில் முலாயம்சிங், சந்திரபாபு நாயுடு எல்லாருமாகச் சேர்ந்து செல்வி ஜெயலலிதாவை அழைத்து மூன்றாவது அணி அமைத்து விருந்து உண்டார்கள். குடியரசுத் தலைவர் தேர்தலில் மூன்றாவது அணியின் முடிவுக்கு மாறாக பா.ஜ.கட்சிக்காரரான பைரோன் சிங் ஷெகாவத்துக்குத் தங்கள் கட்சிச் சட்டமன்ற உறுப்பினர்களை வாக்களிக்க ரகசியமாக ஏற்பாடு செய்து துரோகம் இழைத்தவர் என்பதை புதிய மூன்றாவது அணி அமைத்து விருந்து உண்டவர்களின் நினைவுக்குத் தருகிறோம்)


------------------நன்றி: "விடுதலை" 14-12-2008

0 comments: