Search This Blog

8.12.08

ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் உரிமைப் போரை தீவிரவாதத்திற்கு எதிரானது என்று கூறுவது சரியா?


ஈழத்தில் போர் நிறுத்தம் உடனடித் தேவை!

நமது அண்டை நாடான இலங்கையில், ஈழத் தமிழர்கள்மீது சிங்கள இராணுவத்தின் வெறித் தாக்குதல் நாளும் மூர்த்தண்யமான முறையில் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

சுமார் 3 லட்சம் அப்பாவி தமிழ் மக்கள், வீடு, வாசல் இழந்து, குண்டுமழையிலிருந்து தங்களின் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள, அங்குள்ள காடு, வனாந்தரங்களில் சென்று உண்ண உணவு, குடிக்க நீர், குழந்தைகள் அருந்த பால் எதுவும் கிடைக்காத நிலையில், கொடுமையின் உச்சத்தில் அவதியுறும் அனாதைகளாக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் ஏற்பட்டு, நிரந்தர அமைதி அங்கே திரும்பிடவேண்டும் என்பதற்காக தமிழ்நாடு, தமிழக முதல்வர் கலைஞர் தலைமையில், எழுச்சியுடன் குரல் கொடுக்கிறது!

பிரதான எதிர்க்கட்சியாகிய அண்ணா தி.மு.க., அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தொடக்கமுதலே, இங்குள்ள பார்ப்பன ஊடகங்களும், அதன் ஆசிரியர்களான ஆரியக் கும்பலும் எப்படி இதை திசை திருப்பி, சிங்கள அரசுக்கு ஆதரவு காட்டும் தன்மையில், விடுதலைப்புலிகள் என்ற தீவிரவாதத்திற்கு எதிராக அந்நாட்டு அரசு எடுக்கும் நடவடிக்கை என்று கூறி, உலக மக்கள் முதல் உள்ளூர்த் தமிழர்கள் வரை கண்களில் மிளகாய்ப் பொடி தூவிடலாம் என நினைப்பதுபோல முயற்சிக்கின்றார்.

முதல்வர் கலைஞர் அந்தரங்க சுத்தியுடன் அனைத்துக்கட்சிக் கூட்டம், அதற்கடுத்து கொட்டும் மழையிலும் வரலாறு காணாத மனிதச் சங்கிலி அறப்போராட்டம், ஈழத்தில் அவதியுறும் மக்களுக்கு மருந்து உதவிகள் போய்ச் சேரும் வகையில், வெளியுறவுத் துறை அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்தி அனுமதி பெற்று, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கப்பல்களில், பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம், அய்.நா. மேற்பார்வை அமைப்பாளர்கள், அதிகாரிகளுடன் விநியோகம் (வன்னி பகுதியில் விநியோகம் செய்திடும் படங்கள் ஏடுகளில் வந்துள்ளன) சட்டமன்றத்தில் 12.11.2008 அன்று அனைத்துக்கட்சி ஒருங்கிணைந்த தீர்மானம், கடந்த 2.12.2008 அன்று தமிழ்நாட்டின் எம்.பி.,க்கள், தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க.விலிருந்து பிரிந்த எம்.பி.,க் களுடன் பிரதமருடன் சந்திப்பு, பிறகு தமிழ்நாடு முதல்வர் தலைமையில், அனைத்துக்கட்சித் தலைவர்கள் 22 பேர் கொண்ட குழு பிரதமரை டில்லி சென்று சந்தித்த நிகழ்வு, அதன் விளைவாக, முதலமைச்சர் தூதுக்குழுவினர் போர் நிறுத்த வற்புறுத்தலை நேரில் இந்திய அரசு சார்பில் எடுத்துரைத்து ஆக்க ரீதியாக அரசியல் தீர்வுகளை ஏற்படுத்த, வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. பிரணாப் முகர்ஜி அவர்களை அனுப்பிட இசைவு தந்து அறிவித்ததன் மூலம், டில்லி சென்ற அனைத்துக்கட்சி குழுவினர் வெறுங்கையோடோ, ஏமாற்றத்துடனோ திரும்பவில்லை என்பதை நடுநிலையாளர்களும், பிரச்சினையை வெறும் கூட்டணி அரசியல் கண்ணாடி போட்டு பார்க்காதவர்களும் ஒப்புக்கொள்வர்!

ஈழத் தமிழர்களுக்கு எதிராக அங்கே நடைபெறும் உரிமைப் போரை தீவிரவாதத்திற்கு எதிரானது என்று கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்கள் என்பதற்கு அடையாளம்தான், காடு, வனாந்தரங்களில் குடியேறி அவதியுறும் 3 லட்சம் தமிழர்கள் என்பதும், பள்ளியிலிருந்து திரும்பும் தமிழ்ப் பிஞ்சுகளும்கூட குண்டுவீச்சால் கொல்லப்பட்டு கிடக்கும் கோரத் தாண்டவமுமே சரியான சான்றுகளாகும்!

எனவே, சிங்கள இராஜபக்சே அரசின் பித்தலாட்ட இராணுவப் பிரச்சாரம் உண்மைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று என்பதை, புலிகளின் இராணுவத் தலைமை இடமான கிளிநொச்சியைப் பிடித்துவிடுவோம் என்று கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் நாளும் ஊடகங்களைக் கட்டுப்படுத்தி, தணிக்கை செய்து, செய்திகளை விடுவது உண்மை அல்ல என்பதை கடுகளவு அறிவுள்ளவர்கள்கூட அனுமானித்துப் புரிந்துகொள்ள முடியும்!

இலங்கைப் போரின் உண்மை நிலைபற்றி தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் அளித்துள்ள விளக்கத்தில் சில முக்கிய உண்மைகள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

இங்குள்ள சிங்கள அரசின் ஏவுகணையாகச் செயல்படும் ஏடுகள், மறைத்து - குறைத்துத்தான் செய்திகளை அவர்களுக்குச் சாதகமாகத் தருகின்றன.

1. சிறீலங்கா படையினர் என்றுமில்லாத அளவுக்குப் பலவீனமாக உள்ளனர். எங்களது 30 வருட போராட்ட வரலாற்றில் சிங்கள இராணுவம் தற்போதுள்ள அளவிற்குப் பலவீனமான நிலைக்கு ஒருபோதும் செல்லவில்லை.

2. உலக நாடுகள் எல்லாம் சிறீலங்கா அரசுக்கு நிறைய இராணுவ உதவி செய்கிறார்கள். நவீன போர் ஆயுதங்களை அள்ளிக் கொடுக்கின்றன. எமது இயக்கம்பற்றிய உளவுத் தகவல்களையும், இராணுவப் பயிற்சிகளை யும், ஆலோசனைகளையும் வழங்குகிறார்கள்; இவ்வாறான உதவிகளையும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ஆளணியையும் வைத்துக்கொண்டும்கூட சிங்களப் படையால் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட பகுதிகளைக் கைப்பற்ற முடியாமல் இருக்கின்றது.


இந்நிலையில், குண்டு மழையாலும், எறிகணைகளாலும் கொன்று குவித்துவரும் சிங்கள இராணுவம் உண்மையிலேயே தீவிரவாதிகளை மட்டும் அல்லவா அழிக்க முனையவேண்டும்?

உலகில் தீவிரவாதம் பரவலாக இருந்தும், எந்த ஒரு நாட்டிலாவது சொந்த நாட்டு மக்கள்மீதே குண்டுமழை பொழிந்து, அதுவும் பச்சிளம் குழந்தைகளைக்கூட கொல்லும் வெறித்தனம்பற்றிக் கேள்விப்பட்டதுண்டா?

எனவேதான், தமிழகத்தின் குரல் மட்டுமல்ல; உலகத் தமிழர்களின் மற்றும் மனிதநேயர்களின் எண்ணமும், விழைவும் உடனடியாகப் போர் நிறுத்தம் தேவை; அதற்காக நமது வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணம் நல்ல கனிந்த விளைவுகளை ஏற்படுத்தி, நிரந்தரத் தீர்வு - அரசியல் தீர்வு காண முன்னுரையாக அமையவேண்டு மென ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

அதற்கு ஏற்பாடு செய்திட்ட இந்தியப் பிரதமர், தமிழ்நாடு முதல்வர் கலைஞர் ஆகியவர்களுக்கு தமிழ்கூறும் நல்லுலகம் நன்றி தெரிவிக்கிறது.

----------------------- கி. வீரமணி, தலைவர், திராவிடர் கழகம். "விடுதலை" தலையங்கம் 8-12-2008

2 comments:

Thamizhan said...

தமிழகத் தலைவர்களின் குரல்களுக்கு இந்திய அரசும்,அதன் பார்ப்பனீய அதிகாரிகளும் ஏமாற்றுப் பதில்களையே அளித்து வருகின்றனர்.
தமிழகக் கடலோரங்களில் வீணடிக்கும் பாது காப்புச் செலவை மும்பையில் செய்திருந்தால் இந்நேரம் பேரிழப்பு தவிர்க்கப் பட்டிருக்கும்.
தமிழக்க கரையோரங்களில் எந்த வெளிநாட்டுப் படை வந்து இந்தியாவைத் தாக்கப் போகிறது.
ஏதிலிப் படகுகள் இந்தியாவைத் தாக்கப் போகின்றனவா?
இந்திய அரசின் புலி வருகிறது,புலி வருகிறது என்ற சின்னப் பிள்ளை விளையாட்டால் தமிழினமே அழிந்து கொண்டிருப்பது இந்தியாவிற்குப் பெரிய அவமானமாகவும்,கடைசியில் சிங்களப் பேரினவாதம் இந்தியாவின் மூஞ்சியில் கரியைப் பூசப் போகின்றது என்று தான் முடியப் போகிறது.
தமிழ்நாட்டுக் காங்கிரசும்,புதிய அமைச்சர் மான்புமிகு சிதம்பரம் அவர்களும் புரிந்து கொண்டால் அவர்களுக்கும்,இந்தியாவிற்கும் நல்லதாக அமையும்.

தமிழ் ஓவியா said...

தங்களின்
வருகைக்கும்
கருத்துக்கும் நன்றி.