Search This Blog

15.12.08

கடவுளுக்குக் கடிதம் எழுதும் பைத்தியங்கள்




கடவுளுக்குக் கடிதமாம்!

கடவுள் உண்டா? உண்டு என்று நம்பும் கருத்துக் குருடர்கள் நம் நாட்டில் மட்டும் அல்ல, உலகெங்கும் இருக்கிறார்கள்.

கடவுள் எங்கே இருக்கிறது? அதன் இருப்பிட முகவரி என்ன? யாருக்கும் தெரியாது. எங்கும் இருக்கிறது என்பார்கள்.

கடிதம் எழுதினால் எங்கே அனுப்புவது? சில கிறுக்கர்கள் கடவுளுக்குக் கடிதம் எழுதி கடவுள் - ஜெருசலேம் என முகவரி எழுதிக் கடிதம் அனுப்பி வருகின்றனர்.

ஜெருசலேம் யூத, கிறித்துவ, இசுலாமியர்களுக்குப் புனித நகரம். யூதர்களும் கிறித்துவர்களும் கடவுளுக்கு கடிதம் எழுதி அனுப்பி வருவது வழக்கம். இந்த ஆண்டு மொராக்கோ நாட்டிலிருந்து கூட ஒருவர் கடவுளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அரபு நாட்டு ஆளுக்கும் இந்தப் பைத்தியம் பிடித்துள்ளது தான் வேடிக்கை.

எல்லாரும் எழுதும் கடிதங்கள் என்ன ஆகின்றன? செத்த கடித அலுவலகம் (Dead Letter Office) இக்கடிதங்களைப் பெற்றுக் கொள்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை அதிலும் கிறித்துமஸ் நேரத்தில் ஜெருசலேம் நகரில் உள்ள புலம்பல் சுவரில் உள்ள இண்டு இடுக்குகளில் திணித்துவிடுகிறார்கள். இதற்கும் ஒரு நிபந்தனை உண்டு.

இந்தச்சுவர், யூத மதத்தினருக்கும் புனிதமானது. இசுரேல் நாட்டினர் (யூதர்கள்) இதை கோடல் (Kotel) என்கிறார்கள். தாவீது மன்னருக்கான கோயிலின் மிச்ச சொச்சம் அது.

கிறித்துவர்கள் இந்த சுவரில் தங்கள் முகத்தை அழுத்தித் தங்களுக்குள்ள மனக் குறைகளைச் சொல்லிப் புலம்புவதால் புலம்பல் சுவர் (Wailing Wall) என்ற பெயர் வந்துவிட்டது. கடவுளிடம் தாங்கள் முறையிடுவதாகச் செய்யப்படும் சடங்கு புலம்பல் என்று அவர்களாலேயே கிண்டல் செய்யப்படும் நிலை வந்தாலும் கூட புலம்புவதை கிறித்துவர்கள் நிறுத்தவில்லை. பக்தி வந்தால் தான் புத்தி போய்விடுமே!

பழைய ஏற்பாடுக்காரர்களும், புதிய ஏற்பாடுக்காரர்களும் இப்படி இருக்கையில் கடவுளாலேயே இறக்கி வைக்கப்பட்ட வார்த்தைகளை ஏற்றுக் கொள்பவர்களும் ஏன் இதில் நம்பிக்கை கொள்கிறார்கள்? துஆ செய்தாலே கோரிக்கை கவனிக்கப்படும் என்பதை மறந்துவிட்டு ஏன் கடிதம் எழுதுகிறார்கள்?

கடவுளுக்கான கடிதங்களை சுவரில் செருகுவதிலும் கட்டுப்பாடுகள் உள்ளன. கடவுளுக்கு என்று வந்தால்தான் செருகலாம். கிறித்து, கன்னி மேரி, தாவீது மன்னன் என்று முகவரி எழுதினால் சுவரின் சந்தில் இடம் இல்லை. இந்த விசயத்தில் தலைமை ரப்பி கடுமையாக இருக்கிறார்.

ரப்பி என்றால்... கத்தோலிக்க கிறித்துவர்களுக்கு போப் - புரொடஸ்டன்ட் கிறித்துவர்களுக்கு பிஷப் - இசுலாமியர்க்கு காஜி இமாம் போல - யூதர்களுக்கு ரப்பி (Rabbi). அவர் வைத்ததுதான் சட்டம்.

சரி, கடவுளுக்குக் கடிதம் எழுதுபவரின் வேண்டுகோள் என்ன? ஒருவன் லாட்டரி சீட்டு எண் எழுதி பரிசு விழவேண்டும் எனக் கேட்கிறான். பழைய கம்யூனிஸ்ட் நாடான ரசியாவிலிருந்து ஒருவன், ஒரு ஆலிவுட் நடிகையோடு தான் இன்பம் அனுபவிக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்கிறான். இறந்துபோன தன் மனைவியை மீட்டுத் தரக் கேட்கிறான் ஒருவன்.

பைத்தியங்கள் பலவிதம்! பக்திப் பைத்தியங்களும் பலநூறு விதம்!


---------------------நன்றி: "விடுதலை" 15-12-2008

0 comments: