Search This Blog

24.12.08

ஆரியர் திராவிடர் போராட்டம் ராமாயணக் கதையில் உள்ளது


இராமாயணத்தை ஒற்றைக்
கலாச்சார ஆதிக்கத்திற்குப் பயன்படுத்துகிறார்கள்

ஆரியர் திராவிடர் போராட்டம் ராமாயணக் கதையில் உள்ளது

யெச்சூரியின் எச்சரிக்கை இஃது

கலைஞர் கடிதம்


இராமாயணத்தை ஒற்றைக் கலாச்சார ஆதிக்கத்திற்கு பயன்படுத்துகின்றனர் என்றும், ஆரியர் - திராவிடர் போராட்டம் ராமாயணக் கதையில் உள்ளது என்றும் யெச்சூரி தெரிவித்துள்ளது பற்றி யெச்சூரியின் எச்சரிக்கை இது என்ற தலைப்பில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் முரசொலி நாளிதழில் இன்று எழுதியுள்ள கடிதத்தில் இருந்து சில பகுதிகள் இங்கே அளிக்கப்படுகிறது.

"அரசியல் புயல் தாறுமாறாக வீசிக் கொண்டிருக்கும் இந்தக் காகலகட்டத்தில் வயோதிக - மற்றும் வாலிப கம்யூனிஸ்டு தலைவர்கள் பற்றிய சிந்தனை உமக்கு உதயமானது ஏன் என்று உடன் பிறப்பே, நீ கேள்வி எழுப்பலாம் - இந்த இருவரில் மூத்தவரான ஹர்கிஷன்சிங் சுர்ஜித் அவர்கள் இப்போது உயிரோடு இருந்திருப்பாரேயானால், அவரின் அனுபவ அறிவின் அழுத்தம் நிலைமையைச் சீர்படுத்தப் பயன்பட்டிருக்கும் என்ற கருத்து எனக்கு உண்டு. நண்பர் சீத்தாராம் யெச்சூரியைப் பொறுத்த வரையில் சிலவற்றை இயற்கைக்கே விட்டுவிட்டு, மனத்தில் உள்ள இலட்சியத்தை தானாகவே வெற்றி அடையட்டும் என்று காந்திருப்பவர் என்பதை நான் நன்குணர்வேன். அதற்காக, தான் கொண்ட கொள்கை, குறிக்கோள் நிறைவேறிடத் தொண்டு புரியாமல் இருந்து விடுபவரும் அல்ல.

இந்திய அரசியல் அரங்கில் இன்றைய ஆளுங் கட்சியான காங்கிரசுக்கும், இடதுசாரித் தலைவர்களுக்கும் அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் குறித்த பிரச்சினையில் மனவேறுபாடு ஏற்பட்டு, நடுநிலையில் நானிருந்து அரும்பாடுபட்டும், இயலாமல், அணிமாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அந்தத் தாக்கம் தமிழகம் வரையில் வேரோடிவிட்டதால், நமது இயக்கமும், கழக ஆட்சியும் அவர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, தோழமைக்கும் ஆழக் குழி தோண்டப்பட்டாகி விட்டது.

ஒரு காலத்தில் கம்யூனிஸ்டுகளைப் பொறுத்த வரையில், மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்ட தேர்தல் உடன்பாடுகள், தேர்தல் கூட்டணிகள் என்று அமைந்த நிலை மாறி, இன்று அகில இந்திய அளவில் ஒரே கூட்டணிதான் என்று திட்டவட்டமாக முடிவெடுத்து விட்டதாகச் சொல்லி, மதவாதிகளுக்கு எமது கூட்டணியில் இடமில்லை என்று கூறிக் கொண்டே, மத வெறியாளர்களுக்காக கரசேவைக்கு- அயோத்திக்கு ஆதரவளித்த ஜெயலலிதாவை அணித் தலைவியாக ஏற்றுக் கொண்டிருக்கின்ற நிலையல்லவா இன்று!

சேதுசமுத்திரத் திட்டம் அண்ணாவின் கனவு - அதை அதிமுக அரசு நிறைவேற்றியே தீரும் - தமிழகத்தை வாணிப ரீதியிலும், பொருளாதார நிலையிலும் வளப்படுத்துவதோடு - இலங் கையைச் சுற்றிக் கொண்டு போகவேண்டிய கடல் பயணத்தை பலகல் தூரம் குறைக்கக்கூடிய - அந்த அருமையான திட்டத்தை நிறைவேற்றாமல் விடமாட்டேன் -என்று அதிமுக தேர்தல் அறிக்கைகளிலும் - தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் சூளுரைத்தவர், அதிமுக தலைவி ஜெயலலிதா. ஆனால், இப்போழுது அவரே, இராமர் கட்டிய பாலத்தை இடிப்பதை எதிர்க்கிறேன் என்று வழக்காடுகிறார் உச்ச நீதிமன்றம் வரையில். ஆம், இல்லாத பாலத்துக்காக இப்படி ஒரு போர் முழக்கம் ! இடி முழக்கமாக!

இணையற்ற எத்தனையோ பொறியாளர்கள், விஞ்ஞானிகள், மேதைகள் எடுத்துச் சொல்லியுங்கூட, சேது சமுத்திரத் திட்டத்துக்கு எதிராக இன்றைக்கு இராமனையும், இராமாயணத்தையும் காட்டுகிற மதவாதத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறார்.
இந்த நேரத்தில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளின் நாளேடான தீக்கதிர் - நான் தினந்தோறும் படிக்கிற ஏடுகளில் ஒன்றான அந்த ஏட்டில்,

சீத்தாராம் யெச்சூரி அழைப்பு என்ற தலைப்பில் 22-12-2008 அன்று வெளிவந்துள்ள கருத்தோவியம் :

'மூடநம்பிக்கைகள், மதவெறி போன்றவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு ஊடகமாக கலாச்சாரம் திகழ வேண்டும். இலக்கிய நயத்தை ரசித்துப் போற்றுகிற அதே நேரத்தில், புராணக் கற்பனையையும் வரலாற்று உண்மையையும் பாகுபடுத்திப் பார்க்க வேண்டும். இன் றைய இலங்கை, இந்தியா உள்பட ஒரே நிலப்பகுதியாக இருந்த காலகட்டம் உண்டு. கடல் மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்துதான் இலங்கை தனித் தீவாகியது. அதற்கு இடையே ஒரு பாலம் இருந்ததாகச் சொல்வது இனிய புராணக் கற்பனை. அதையே வரலாற்று உண் மையாகக் கூறி சேது சமுத்திரத் திட்டம் போன்றவற்றை முடக்க முயல்வார்களானால் அதை எதிர்த்துப் போராட வேண்டும்.

தசாவதாரம் புராணத்தில் உள்ள விலங்கு வடிவங்களை அறிவியல் உண்மைகளோடு இணைத்து நாம் பேசினால் மதவாதிகள் அதை விமர்சிக்கிறார்கள். ஆனால் நாம் கற்பனை எது, அறிவியல் எது என்று பகுத்தறிவோடு இதையும் பார்க்க முடியும். அதே போல் ராமாயணம் என்பது ஒரே கதையல்ல. ஒவ்வொரு வட்டாரத்திலும் அந்தந்தப் பகுதியின் சமூக, அரசியல், பொருளாதார சூழல்களுக்கு ஏற்ப மாறுபட்ட ராமாயணக்கதைகள் உருவாகி உள்ளன. அதில் ராமன் போன்றவர்களை மனித உருவிலும், ஜாம்பவான், வாலி போன்றவர்களை விலங்கு உருவத்திலும் படைத்ததிலும் கூட, ஆரியர் - திராவிடர் போராட்டம் இருக்கிறது. ஆரியர் மேன்மையை நிலைநாட்ட திராவிடர்களைத் தாழ்வான வர்களாக சித்திரிக்க இது கையாளப்பட்டது. இன்று ராமாயணத்தை ஒரே கதையாக்குகிற முயற்சி நடக்கிறது. ஒற்றைக் கலாச்சார ஆதிக்கத்திற்காகவே இவ்வாறு செய்யப்படுகிறது. புராணத்தை வரலாற்றோடும் - இறையியலை தத்துவத்தோடும் கலப்பது என்பது மதவெறிச் சக்திகளின் வேலை. ஆளும் வர்க்கங்களின் சுரண்டல் வேட்டைக்கு இது சாதகமாக இருக்கிறது. இதன் செல்வாக்கைத் தடுத்து நிறுத்த, மக்களின் உண்மையான பிரச் சினைகளை மய்யப்படுத்தும் படைப்புகள் நிறைய வரவேண்டும்.'


உடன்பிறப்பே, யெச்சூரி எழுப்பியுள்ள இந்த மூல முழக்கத்தில் நமது இயக்கத்தின் ஓலியும் கலந்து இணை முழக்கமாக இருக்கின்றதல்லவா! யெச்சூரி அவர்கள் அணி சேர்ந்துள்ள ஜெயா கட்சியில் இது இணை முழக்கமாகக் கூட வேண்டாம்; துணை முழக்கமாகவாவது அமைந்துள்ளதா?

அமைந்திருந்தால் அண்ணா கண்ட கனவான சேது சமுத்திரத் திட்டத்துக்கு எதிரான வரிசையில் நின்று, நீதிமன்றத் தடை பெறுவதற்கும் கூட நெடிய பயணம் நடத்துவார்களா? யெச்சூரியின் பேச்சைப் படிக்கும் நமக்கு என்ன தோன்றுகிறது? இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் இணையும் நிலைமையினை உள்ளடக்கிய இலட்சியத்தைக் காண முடிகிறது. ஆனால், இன்று அணி சேர்ந்து ஆர்ப்பரிப்போர் எதிர்காலத்தில் யெச்சூரி கருத் துக்கு எதிர்க்கருத்து கூறும் அணியில் அன்றோ இருக்கப் போகின்றார்!

---------------------நன்றி: "விடுதலை" 23-12-2008

2 comments:

அக்னி பார்வை said...

என்னுடைய சின்ன கருத்து....சேது சமுதிர திட்டம் உருவானபோது இருந்த சூழியல் நிலை வேறு(100 ஆண்டுகளுக்கு முன் ) இப்பொழுதுள்ள சூழியல் நிலை வேறு..செது சமுதிர திட்டத்தால் அரி கடல் வாழ் உயிரனங்கள் பாதிக்கக்கப்படும்..அப்படியில்லாமல் வேறு வழியிருந்தால் பரவயில்லை.மற்றபடி அந்த திட்டம் மததின் பெயராலோ அல்லது அமெரிக்கவின் சதியாலோ நிறைவேற்ற படவில்லை என்றால் நகைப்புக்குறியதே...கண்டிபத்ற்க்குறியதும்..

தமிழ் ஓவியா said...

தங்களின் கருத்துக்கும்
வருகைக்கும் நன்றி தோழர்.

சூற்றுசூழலுக்கும் எந்தப் பாதிப்பில்லை என்று வல்லுநர் குழு அறிக்கை அளித்திருக்கிறது.

தமிழ்நாடு முன்னேற கண்டிப்பாக சேது சமுத்திர திட்டம் அவசியம் நிறைவேற்றப்பட வேண்டும்.