Search This Blog

5.12.08

பெரியாரிடம் கற்றுக்கொண்ட பாடம்!அய்யாவிடம் கற்றுக்கொண்ட பாடம்!சென்னைக் கடற்கரையில் இந்த 1960-இல் அய்க்கோர்ட் நீதிப்போக்குக் கண்டன நாள் பொதுக்கூட்டம். அய்யா அவர்கள் கலந்துகொள்ளும் திருவல்லிக்கேணி கடற்கரையில் பொதுக்கூட்டம் என்றால், அதனைக் கேட்க பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரள்வர் என்பதோடு, அமைச்சர்கள், அய்க்கோர்ட் நீதிபதிகள், பெரிய அதிகாரிகள், பல கட்சித் தலைவர்கள், பல்வேறு பிரமுகர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் காரிலேயே வந்து அமர்ந்துகொண்டு அடையாளம் காட்டாமலேயே கூட்டத்தைக் கேட்டு ரசித்துத் திரும்புவர்.

அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிப் போக்கினை கண்டிக்கும் மிகவும் துணிச்சலான பொதுக்கூட்டம் என்றவுடன் மக்கள் கடல் திரண்டது.

ஏற்கெனவே, நான் அப்போது ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் வழக்கறிஞர் ஆக பார் கவுன்சிலில் பதிவு செய்துகொண்டு, தொழிலைத் தொடங்க ஆயத்தமான காலகட்டம். என்னை இயக்கத்தின் இரண்டு செயலாளர்களில் ஒருவராகவும், சில வாரங்களுக்கு முன் அய்யா அவர்கள் திருச்சி மத்திய நிர்வாகக் கமிட்டியில் அறிவித்துப் பொறுப்பேற்றுள்ளேன்.

செயலாளர் ஆனைமலை ஏ.என். நரசிம்மன் பி.ஏ., அவர்கள் தலைமை தாங்கவும், நான் (கி. வீரமணி) உரை; நிறைவுரை தந்தை பெரியார் அவர்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்டது.

தந்தை பெரியார் அவர்களது இல்லத்தில் கடலூரிலிருந்து சென்று தங்கிருந்த நிலையில், கூட்டத்திற்குப் புறப்படு முன்பே நான் அய்யாவிடம் முக்கியமான சட்டப்பிரச்சினை - சிக்கலான வழக்குப் போடக்கூடிய பிரச்சினை ஆனபடியால், கலந்து பேசியபோது, அய்யா எனக்கு முன் நீங்கள் சட்டப் பிரச்சினைகளை, ஆதாரங்களோடு, பத்திரிகை குறிப்புகளோடு எடுத்து நன்கு விளக்கி விடுங்கள். பிறகு நான் பொதுவாகச் சொல்லவேண்டிய கருத்துகளை விளக்கிப் பேசுவேன் என்று குறிப்பாகக் கூறிவிட்டார்கள்.

நான் சட்ட விளைவுகள்பற்றிச் சிந்திக்கவே இல்லை. சமூகநீதிக்கு விரோதமான அளவில் அந்த பார்ப்பன நீதிபதிகள், பார்ப்பன ஏடுகள் எப்படி நடந்து கொண்டுள்ளன என்பதை ஆணித்தரமாக விளக்கி அய்யா அவர்களுக்கு பேச்சுக்கு முன்னோட்டமாக ஒரு பாதை அமைத்து பல்வேறு தகவல்களையும் கூறி முடித்தேன்.

அதுபற்றி தந்தை பெரியார் அவர்கள் பேசியது நீதி கெட்டது யாரால்? இரண்டாம் பாகம் நூலில் அப்படியே உள்ளதைத் தருகிறேன்:

சென்னை உயர்நீதிமன்ற நீதிப்போக்கிற்குக் கண்டனம் தெரிவிக்க 30.10.1960 மாலை திருவல்லிக்கேணி கடற்கரையில், மத்திய தி.க. பொதுச் செயலாளர் ஆனைமலை திரு.ஏ.என்.நரசிம்மன் பி.ஏ., அவர்கள் தலைமையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்களது பெரு முழக்கத்தின் சாரம்:-

பேரன்புமிக்கத் தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே!

அநேக மாலைகளை கழுத்தில் 3-4 மணிநேரம் போட்டுக் கொண்டு வந்ததால் சீதளம் ஏறி தொண்டை கெட்டுவிட்டது. அதனாலேயே நண்பர் வீரமணியை நான் சொல்லவேண்டிய விஷயத்தின் முகவுரையை விளக்கும்படியாகக் கேட்டுக்கொண்டேன். அதோடு கூடவே நண்பர் குருசாமி அவர்களும், ஓர் அளவுக்கு விளக்கி இருக்கிறார்கள். தலைவர் அவர்களும் சில வார்த்தைகள் சொன்னார்கள். ஆகவே தோழர் வீரமணிக்குப்பின் நானும் சில வார்த்தைகள் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்.

சிறையேக வேண்டிருக்கும்

நான் பேச வந்திருப்பது மிகவும் கடினமான விஷயம். இந்த விஷயம் நான் பேசியதற்கு ஆக, கண்டிப்பாக நான் ஜெயிலுக்குப் போகவேண்டி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஜெயிலுக்குப் போக எனக்கு இஷ்டமில்லை. ஜெயிலுக்குப் போவது கொஞ்சம் கஷ்டம் நஷ்டமும்கூடத்தான். ஆனால் போகாமல் தீரவில்லையே, என்ன செய்வது? தங்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறது என்பதற்கு ஆகவே பலர் மிகமிக நேர்மைக்கேடாய், அக்கிரமமாக நடந்து கொண்டு வந்தால், அதை எதிர்த்து ஒழிக்க நம்மால் கையாலாகாவிட்டாலும் அந்த நேர்மைக்கேட்டை அக்கிரமம் என்று சொல்லக்கூடவா நமக்கு யோக்கியதை இல்லை? யோக்கியதை என்பது அதனால் வரும் கஷ்ட நஷ்டத்தை அனுபவிக்கத் தயாராயிருப்பது தான். அதனால்தான் முன்பு ஒரு தடவை எடுத்துக் கூறி தண்டனை அடைந்த அதே காரியத்தை இரண்டாவது தடவையாகச் செய்து தண்டனை அடைந்து ஜெயிலுக்குப் போகவேண்டிய அவசியம் உள்ளவனாக இருக்கிறேன்.

வேறு மார்க்கம் இல்லை

முதல் தடவை என்னை மரியாதையாக விட்டார்கள். தீர்ப்பு எழுதும்போது இந்த மனிதன் கிழவன்; ஆதலால் இவனை ஜெயிலுக்கு அனுப்ப நான் விரும்பவில்லை. அவனுக்கு நூறு ரூபாய் அபராதம் போட்டால் போதும் என்று கருதி ஜெயிலுக்கு அனுப்பாமல் விட்டுவிட்-டார்கள். அதேபோலவே அதைப் பிரசுரம் செய்த எனது துணைவியார் மணியம்மையை அவர் ஒரு பெண் ஆனதால் இனிமேல் இந்த மாதிரிச் செய்யமாட்டார் என்று நினைக்கிறேன். அப்படிச் செய்தால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எச்சரிக்கை செய்து விட்டுவிட்டார்கள். எனக்கு வயதை உத்தேசம் பண்ணி அபராதம் போட்டார்கள். ஆனால் நாளைக்கு, அந்த அபராதம் போட்டும் எச்சரிக்கை செய்தும்விட்ட ஜட்ஜ் அவர்கள் இப்படிச் சொல்ல முடியாது. கேட்பார்களே நாலு பேர்! இவன் நாளையோ நாளை மறுதினமோ செத்துவிடுவான் என்றாலும், நாளைக்கு விட்டு வைத்தால் இப்படித்தானே பேசுவான்? ஆகையால் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றுதானே கருதி தண்டிப்பார்.

கடுந்தண்டனை கிடைக்கும்

ஆகையால் முன்னையைவிட இப்போது கொஞ்சம் கடுமையான தண்டனை அனுபவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்துக்கொண்டு பேசுகிறேன். எனக்குத் தண்டனை அனுபவிக்க ஆசை இல்லை. எனக்கு இனிமேல் தண்டனையினால் பெருமையோ, பதவியோ, பெருந்தன்மையோ வேண்டியதில்லை.

ஆனால், இந்த அக்கிரமத்தைத் தடுக்க வேறு மார்க்கம் இல்லையே! ஆகையால் இந்தக் காரியத்தில் மனவேதனையோடு பிரவேசிக்கிறேன். எப்படியோ வாய்ப்பு வாய்க்கட்டும்.

கடமையைச் செய்வோம்

நண்பர் வீரமணி விஷயங்கூட கொஞ்சம் சந்தேகப்பட வேண்டியதுதான். ஏனென்றால் அவர் மற்றவர்களைப் போல ஜாக்கிரதையாய்ப் பேசாமல் சற்று தாராளமாகவே பேசினார். அவர் வெறும் ஆள் அல்லர். நம் தலைவர் போல, குருசாமியைப்போல அவர் பேசவில்லை சற்று துணிவாய்ப் பேசிவிட்டார். திரு.வீரமணி நம்மைப் போன்றவர் அல்லர், அவர் ஒரு வக்கீல். எவ்வளவோ நல்ல வாய்ப்பு அவரை அணுகக் காத்திருக்கிறது. அவைகளுக்குத் தடை ஏற்படலாம். என்னைப் பொறுத்தவரை அவருக்கு அப்படி ஏற்பட்டால் நமக்கு நல்லதாகிவிட்டது என்றுதான் கருதுவேன். ஏன் நம் இயக்கத்திற்கு முழு நேரத் தொண்டன் இப்போது அவர் தொண்டு அரைநேரம். இனி அது முழு நேரமாகிவிடலாம். ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால் நம் யோக்கியதை அப்படியிருக்கிறது. - இவ்வாறு அய்யா அவர்கள் குறிப்பிட்டார்கள்.

எந்த ஒரு கொள்கையை, கொள்கை நிலைப்பாட்டை நாம் பேசும்போதும், எழுதும்போது, அதுபற்றிய தெளிவு இருந்தால் மட்டும் போதாது; அதனால் எந்த விளைவு ஏற்பட்டாலும் துணிவுடன் நாம் கூறிவிடவேண்டும் என்பதுதான் நான் அய்யாவிடம் கற்றுக்கொண்ட பாடம்!

துப்பாக்கியைத் தூக்கி எதிரியைச் சுட்டு வீழ்த்த நினைக்கும் இராணுவ வீரன் துப்பாக்கியைத் தூக்கும்போது கை நடுங்கலாமா? எதிரியிடம் சிக்கிக் கொண்டால் நம் நிலை என்னவாகும் என்று அஞ்சலாமா? பிடி உறுதியோடு இருக்கவேண்டும். விளைவுகள் எதுவானாலும் ஏற்று போரிடும் மனத்திண்மையோடு தானே போர்க்களத்தில் நுழையவேண்டும்?

அதுபோலத்தான், சமுதாயப் புரட்சியை இலக்காகக் கொண்ட எந்த ஒரு இயக்கத்தினரும் பல்வேறு இலக்குகளை லாப நஷ்டக்கணக்கினை நோக்கிக் கொண்டிருக்கக் கூடாது.

வீரன் ஒருமுறைதான் சாகிறான்; கோழையோ பலமுறை சாகின்றான் என்பதுதானே உண்மை? ஆகவே, அப்படிப்பட்ட துணிவுதான் இந்த இயக்கத்தை இனி வருங்காலத்தில் நடத்துகிறவர்களும் கடைபிடிக்கவேண்டிய அணுகுமுறையாகும்! காரைக்குடியில் பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவராக இருந்த நண்பர் ஆர். சுப்ரமணியம், பிறகு மாவட்டக் கழகப் பொருளாளராகவும் ஆனவர். அவரும் காரைக்குடியின் கழகத்தின் தூணான முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் என்.ஆர். சாமி அவர்களும், தோழர்களும் நடித்த, பெரியார் நாடக கலா மன்றத்தினர் அளித்த சந்தனதேவி என்ற நாடகத்திற்கு 22.8.1971 இரவு காந்தி திடலில் தலைமை வகித்தேன்.

கொள்கைப் பிரச்சாரத்திற்குப் பெரிதும் உதவிடவே இந்தக் கொள்கை நாடகம்!

காரைக்குடி பேராசிரியர் பாலசுப்பிரமணியம் துணைத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம் இயக்கிய அந்நாடகத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு அந்நகரில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

திராவிடர் இயக்கப் பிரச்சாரத்தில் நாடகங்கள்மூலம் பிரச்சாரம் என்பதும் நீண்ட காலமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒன்றாகும்.

அறிஞர் அண்ணா காஞ்சி திராவிட நடிகர் கழகம் என்று உருவாக்கி அவருடைய தோழர்களை வைத்து எழுதி இயக்கி கொள்கைப் பிரச்சாரத்தை செய்தார்கள் - சந்திரோதயம் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நீதிதேவன் மயக்கம், ஓர் இரவு, வேலைக்காரி அவர் எழுதி நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி நடத்தியவை.

நடிகவேள் எம்.ஆர். ராதாவின் நாடகப் புரட்சி எதிர்நீச்சல் புரட்சி முழுக்க கொள்கைப் பிரச்சார நிகழ்ச்சியாக இவ்வாண்டு நூற்றாண்டு (2008) விழா நாயகரான நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்கள், திராவிடர் கழக உறுப்பினர் அல்ல. ஆனால், பெரியார் பற்றாளர் பெரியார் தொண்டர் எவ்வித கைம்மாறும் கருதாத தந்தை பெரியார் கொள்கை பிரச்சாரகர் ஆவார்!

அவர் நடத்திய சி.பி. சிற்றரசு எழுதிய போர்வாள் கலைஞர் எழுதிய (அவருடன் கலைஞர் தஞ்சையில் சில காலம் நடிக்கவும் செய்தார்). தூக்குமேடை திருவாரூர் கே. தங்கராசு எழுதிய ரத்தக்கண்ணீர், தந்தை பெரியார் அவர்களது இராமாயண ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு திருவாரூர் கே. தங்கராசு எழுதிய இராமாயணம் நாடகம் ஆகியவைகளை நாடு முழுவதும் நடத்தி, வைதிக வெறியர்களின் மூர்த்தண்யமான எதிர்ப்பை முறியடித்து வெற்றி பெற்றார்.

எத்தனையோ முறை அவரது நாடகங்கள் தடை செய்யப்பட்டன; உடனே பெயரை மாற்றி அதே ஊரில் அடுத்த நாள் அதே நாடகத்தை நடத்தி சாதனை செய்தவர்.

தூக்குமேடைக்குத் தடை என்றால், பேப்பர் நியூஸ் என்று தலைப்பு போடுவார். போர்வாளுக்குத் தடை என்றால், மலாயா கணபதி என்று தலைப்பை மாற்றி போடுவார்; இரவோடு இரவாக சென்னை உயர்நீதிமன்றத்திற்குச் சென்று, பிரபல வழக்கறிஞர் எம்.கே. நம்பியார் (தற்போது உச்சநீதிமன்ற பிரபல வழக்கறிஞர் திரு. கே.கே. வேணுகோபாலின் தந்தை அவர்) அவர்களை அணுகுவார். அனுமதி வாங்கி அதே இடத்தில் வைராக்கியத்துடன் நடத்திச் சாதித்துக் காட்டுவார்!


அவர் நடத்திய இராமாயணத்தினை அவர் இராமர் வேடம் அணிந்து நடித்த நடிப்பு அற்புதமானது, ஆதாரபூர்வமானது என்ற அறிவிப்புடன் நாடகம் தொடங்கும்.

அதை தினத்தந்தி நாளேடு தவறாக கீமாயணம் என்று குறிப்பிட்டது! வால்மீகி இராமாயணம் மற்றும் இராமாயணம்பற்றி பல்வேறு அறிஞர்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்ட அந்த நாடகத்திற்கு இடையூறு செய்யவே, நாடகத் தடைச் சட்டம் என்ற ஒரு தனிச்சட்டம் தமிழக அரசால் காமராசர் முதல்வராக இருந்தபோது, உள்துறை அமைச்சர் எம். பக்தவச்சலம், சட்ட அமைச்சர் சி. சுப்பிரமணியம் இவர்களால் கொண்டு வரப்பட்டது.

கலைத்துறையில் கழகம் செய்த புரட்சியைப்பற்றி பல பேர் ஆய்வு செய்து முனைவர் பட்டங்களையே (டாக்டர் பட்டங்களையே) பெறலாமே!

நினைவுகள் நீளும்...

------------------ - கி.வீரமணி அவர்கள் எழுதும் அய்யாவின் அடிச்சுவட்டில்... இரண்டாம் பாகம் (9) - "உண்மை" டிசம்பர் 1-15 2008

0 comments: