Search This Blog

6.12.08

இந்து தீவிரவாதிகள் மீது என்ன நடவடிக்கை?




16 ஆண்டுகள் ஆகியும் பாபர் மசூதி இடிப்பு

அத்வானி மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

மத்திய அரசுக்கு தமிழர் தலைவர் கேள்வி


மும்பையில் அண்மையில் 60 மணி நேரத்திற்கு மேல் போராடி தீவிரவாதிகளை அழித்துள்ளனர். இந்த செயலுக்கு உளவுத் துறையின் செயல்பாடு தோல்வி அடைந்து விட்டது என்பதைத்தான் காட்டுகிறது. அதற்காக உள்துறை சார்பில் வருத்தத்தை மன்னிப்பைக் கோருகிறேன் என்று தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தீவிரவாதத்தினுடைய ஆணிவேர் கண்டு பிடிக்கப்பட்டு அழிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அது வரவேற்கக்கூடிய செய்தியாகும். மத்திய அரசிற்கு ஒரு வேண்டுகோளை இந்த நேரத்திலே வைக்கிறேன். இன்றைக்கு பாபர் மசூதி இடித்த நாள் (டிச. 6) பாபர் மசூதி இடிக்கப்பட்டு பதினாறு ஆண்டுகள் ஆகின்றன.

பாபர் மசூதி முதல் குற்றவாளி அத்வானி

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் முதல் குற்றவாளி எல்.கே.அத்வானிதானே. அவர் உள்துறை அமைச்சராக இருந்தார். பிறகு துணைப் பிரதமராக ஆனார்.

இன்றைக்கு பிரதமர் பதவி வேட்பாளர் நான் தான் என்று அறிவித்துக் கொண்டிருக்கின்றார். பதினாறு ஆண்டுகாலமாக இந்த வழக்கு ஏன் மத்திய அரசால் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது?

லிபரான் கமிஷன் 40 முறை நீட்டிப்பு

பாபர் மசூதி இடிப்பு வழக்கிற்காக நியமிக்கப்பட்ட லிபரான் கமிசன் இன்னமும் இருந்து கொண்டிருக்கின்றது. நாற்பது முறை லிபரான் கமிஷன் காலம் நீட்டிக்கப்பட்டே வந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகள் 16 ஆண்டுகள் ஆகியும் ஏன் இன்னமும் தண்டிக்கப்படவில்லை! என்பதை இந்திய அரசுக்கு கேள்வியாக வைக்கின்றோம்.

தீவிரவாதி கொடுத்த வாக்குமூலத்தில் மோடி

மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பிடிபட்ட ஒரு தீவிரவாதி என்ன வாக்குமூலம் கொடுத்திருக்கின்றான்? அவன் இந்த முறையில் ஈடுபடுவதற்கு எது தூண்டுதலாக இருந்தது என்பதை பிடிபட்ட அந்தத் தீவிரவாதியே சொல்லியிருக்கின்றான்.

எனக்கு, இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம், மோடி பேசிய பேச்சு, பிரவின் தொகாடியா போன்றவர்கள் பேசிய பேச்சு போட்டுக் காட்டப்பட்டது. அதுதான் எனக்கு ஊக்கமாக இருந்தது என்று அவன் வாக்குமூலத்திலே சொல்லியிருக்கின்றான்.

ப.சிதம்பரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமோ தீவிரவாதத்தை வேரிலிருந்து அழிக்கும் நடவடிக்கையை எடுப்போம் என்று சொல்லியிருக்கின்றார். ஆனால், பாபர் மசூதியை தாக்கிய தீவிரவாதிகள் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒரு செய்தியாகும்.

இதிலே ஆர்.எஸ்.எஸ்சா, பி.ஜே.பியா, அந்த மதமா? இந்த மதமா? இந்துத்துவாவா? முஸ்லிமா? அந்த ஜாதியா? இந்த ஜாதியா? என்று பார்க்காமல் தீவிரமான நடவடிக்கை எடுத்து மக்களை காப்பற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோளாகும்.

இந்து தீவிரவாதிகள் மீது என்ன நடவடிக்கை?

அதே போல மாலேகாவ்ன் குண்டு வெடிப்பு சம்பவம், பிரக்யாசிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் சிறீகாந்த் பிரசாத் புரோகித், தயாயனந்த் பான்டே (சங்கராச்சாரி) ஆகிய இந்துத் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்புகள், தீவிரவாதச் செயல்கள் செய்த இவர்கள் மீதும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் தப்பிவிடக் கூடாது என்பதையும் இந்த நேரத்திலே வேண்டுகோளாக வைக்கின்றோம்.

--------------சென்னை பெரியார் திடலில் (6.12.2008) தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியிலிருந்து

0 comments: