Search This Blog

5.12.08

திருவள்ளுவர் சிலையும் கலைஞரின் குரலும்!





புதுடில்லியில் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் (4.12.2008) தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள், கருநாடக மாநிலத் தலைநகரமான பெங்களூரில் 1991 ஆம் ஆண்டுமுதல் கோணிப் பைக்குள் திணிக்கப்பட்டு, மூடப்பட்டு இருக்கும் உலகுக்கே புதுநெறி தந்த திருவள்ளுவர் சிலையினை உடனடியாகத் திறக்கவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தார். உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கிற மாண்புமிகு ப. சிதம்பரம் அவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே இந்த வேண்டுகோளை வைத்துள்ளார்.

கருநாடக மாநிலத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தம்மை பலமுறை தோழர்கள் அழைத்திருந்தும்கூட, திருவள்ளுவர் சிலையை அங்கு திறக்காதவரை, கருநாடக மாநிலத்தில் நடக்கும் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை என்ற முடிவை எடுத்திருப்பதாகவும் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் டில்லி விழாவிலே குறிப்பிட்டார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ருசியா போன்ற நாடுகளில் எல்லாம் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும், டில்லி, மும்பை போன்ற பெரு நகரங்களிலும் திருவள்ளுவர் சிலை இருக்கும் நிலையில், பெங்களூரில் மட்டும் அவர் சிலை திறக்கப்படக்கூடாது என்று கூறப்படுகிறது என்றால், இதைவிட பொதுப்பண்புக்கும், இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும் ஊறுவிளைவிப்பது வேறு எதுவாக இருக்க முடியும்?

பைபிள் என்ற மத நூலுக்கு அடுத்தபடியாக, அதிக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு இருப்பது திருக்குறளே! மதம் சாராத நூல் என்ற மதிப்பும், அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு இருப்பது வள்ளுவன் தந்த திருக்குறளே!

இப்படி உலகிற்கே அறிவுக்கண் திறந்த ஒருவரின் சிலையை திறக்கக்கூடாது என்று கண்மூடித்தனமாக கருநாடகக்காரர்கள் எதிர்ப்புக் கொடியைத் தூக்கிப் பிடிக்கிறார்கள் என்றால், இதைவிட அவமானம், வெட்கம் வேறு எதுவாகத்தானிருக்க முடியும்?

பெங்களூர் தண்டூர்ப் பகுதியில் திருவள்ளுவரின் சிலையைத் திறக்க பெங்களூர் மாநகராட்சி அனுமதியையும் தந்துவிட்டது (25.4.1991). அதன் அடிப்படையில் உட்கார்ந்த நிலையில் அய்ந்தடி உயர திருவள்ளுவர் சிலை பெங்களூர் தமிழ்ச்சங்கம் நிறுவியது (30.8.1991).

விழா ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டு விட்டன. கருநாடக மாநில முதலமைச்சர் பங்காரப்பா, பெங்களூர் மேயர், மத்திய இரயில்வே அமைச்சர் ஜாபர்ஷெரீப் முதலியோர் பங்குகொள்ளும் விழாவுக்கான அழைப்பிதழும் அச்சிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், புலிகேசி கன்னட சங்கத்தார் கருநாடக மாநில உயர்நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுவிட்டனர் (30.8.1991).

திரைப்பட நடிகர் ராஜக்குமாரை வீரப்பன் கடத்திய கால கட்டத்தில், கருநாடக மாநில முதலமைச்சரும், தமிழ்நாடு முதலமைச்சரும் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் - 2001 ஜனவரியில் பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறந்திட ஒப்புக் கொள்ளப்பட்டது. அந்த உறுதியும் இதுவரை காப்பாற்றப்படவில்லை என்பது வருந்தத்தக்கதாகும்.

24 காரட் தேசியவாதிகள் எல்லாம் கருநாடக மாநிலத்தின் ஆட்சிக்கு வந்ததுண்டு. எல்லாத் தேசியக்கட்சிகளும் அம் மாநிலத்தில் இருக்கத்தான் செய்கின்றன. தேசிய ஒருமைப் பாட்டினை ஆவேசத்துடன் பேசும் ஆட்சியாளர்களும், கட்சிக் காரர்களும் இந்தியாவில் தேசிய மதிப்புமிக்க குறள்நெறி தந்த ஒப்பற்ற சிந்தனையாளரின் சிலையை பெங்களூரில் திறந்திட எவ்வித உருப்படியான முயற்சியையும் மேற்கொள்ளாதது ஏன்?

தேச ஒற்றுமை என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா? அது உள்ளத்திலிருந்து ஊற்றெடுத்து இருக்குமேயானால், இந்நேரம் திருவள்ளுவர் சிலை பெங்களூரிலே கம்பீரமாகக் காட்சி அளித்திருக்குமே! கருநாடக மாநிலத்திற்கும் பெருமையைச் சேர்த்திருக்குமே!

திருவள்ளுவர் சிலையானாலும், காவேரி நீர்ப் பிரச்சினை யானாலும், ஒகேனக்கல் பிரச்சினையானாலும் கருநாடக மாநிலத்தில் வெறும் வெறி என்ற ஒன்றே தனது அசிங்கமான தலையைத் தூக்கித் தாண்டவமாடுகிறது. இந்த வன்முறைக்குப் பயந்து ஆட்சிகளே பல முக்கிய முடிவுகளில் பின்வாங்குகின்றன என்றால், ஆட்சி அதிகாரம் என்பது கேள்விக்குறியாகிவிட வில்லையா? தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற நிலைமை - ஆபத்து! பேராபத்து!!

இந்தியாவில் வன்முறை கொடிகட்டிப் பறப்பதற்கு ஊக்கம் கொடுப்பது இதுபோன்ற செயல்பாடுகளால்தான்.

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மிக முக்கியமான பிரச்சினையை முக்கியமான காலகட்டத்தில் முக்கியமாக தலைநகரில் எழுப்பியிருக்கிறார். மத்திய அரசு தலையிடுமா? நல்லது நடக்குமா?


----------------------- "விடுதலை" தலையங்கம் 5-12-2008

4 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

நூற்றுக்கு நூறு உண்மை..கன்னடர்கள் வெறித்தன்மையை பூண்டோடு ஒழிக்கும் நாள் எந்நாளோ

தமிழ் ஓவியா said...

தங்கலின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டி.வி.ஆர்.

அன்பு said...

இங்க பார்றா ஒருத்தரை, பத்தி பத்தியா கலைஞரை பத்தி படிச்சுட்டு பின்னூட்டத்துல் ஒரு வரி கூட அத பத்தி சொல்லாம போறாரு

தமிழ் ஓவியா said...

தங்கள் வருகைக்கு
நன்றி புலிகேசி